10 Jun 2019

ஆகாத சம்பந்தங்கள்!



செய்யு - 111
            ஒகையூர் வயலைப் பார்ப்பதற்காக வடவாதி பஸ் ஸ்டேண்டைக் கடந்து டிவியெஸ் பிப்டியில் போய்க் கொண்டிருந்தார் சுப்பு வாத்தியார். வீட்டு வேலை நின்று கிடப்பது ஒரு வருத்தமாக இருந்தாலும், வயலைப் போய் பார்ப்பது அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். மனிதனுக்கு கஷ்ட, நஷ்டம் வருகிறது என்பதற்காகத்தான் ஆண்டவன் ஆடு, மாடு, வயல்களைப் படைத்ததாக அவரது கருத்து. எப்போது கஷ்டம் வந்தாலும் வீட்டில் வளர்க்கின்ற ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொண்டு வயலைப் பார்த்து விட்டு வந்தால் கஷ்டமெல்லாம் போய் விடும் என்பது அவரது நம்பிக்கை.
            "என்ன வாத்தியாரே! இந்தப் பக்கமே பாக்கிறதில்லே!" என்ற சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தினார். அந்தச் சத்தம் சேசம்மாவிடமிருந்து வந்தது. வண்டியை நிறுத்துவோமா? நிறுத்தாமல் போய் விடுவோமா? என்ற குழப்பத்தில் வண்டியை நிறுத்தி பின் இயக்கி பின் நிறுத்தினார் வாத்தியார். சேசம்மா கருவாட்டு வியாபாரத்தைப் போட்டு விட்டு ஓடி வந்தது.
            "என்ன வாத்தியாரே! வண்டியை நிறுத்துறீங்க! அப்பொறம் போறீங்க! கருவாட்டுக்காரிக்கிட்டல்லாம் என்ன பேச்சுன்னு நினைக்குறீங்க போலருக்கு!" என்றது சேசம்மா.
            சுப்பு வாத்தியார் சமாளிக்க வேண்டிய நிலை, "யாரோ கூப்புட்ட மாரியும் இருந்தது. கூப்புடாத மாரியும் இருந்தது. அதாங்!" என்றார் சுப்பு வாத்தியார்.
            "நமக்குத் தெரியும் வாத்தியாரே! பரவால்ல. நீங்களாவும் வந்து கேட்க மாட்டீங்க! அதுவும் நமக்குத் தெரியும். ஒங்க மச்சினன் வீயெம்மு இருக்குல்ல. சீக்கிரம் ஒரு பொண்ணப் பாத்து கட்டி வெச்சிடுங்க. நீங்க செஞ்சதெல்லாம் தெரியும். ன்னா பண்றது? அது நேரம். அப்புடி இருக்குது. அந்த மாரில்லாம் நடந்தா யாரா இருந்தாலும் மனசு ஒடஞ்சிப் போயிடும்!"
            "நீங்க சொல்றது சரிதாங்! இப்போ கல்யாணம் பண்ணி வெக்கிற மாரியா அது நடந்துகிட்டு இருக்குது?"
            "ஏண்டி நீ இப்படிப் பண்ணிட்டு, அவனுக்குக் கல்யாணம் பண்ணி வெக்க சொல்றீயாடின்னு நேரடியா கேக்க வேண்டித்தானே, வாத்தியாரே!"
            "நமக்கு நேரடியாலாம் எதும் தெரியாது. எல்லாம் சொல் கேள்விங்கத்தாம்!"
            "வேற யார்ட்டேயும் வுட்டா புள்ள வீணாப் போயிடுவாம். தப்புதாம். சரின்னு சொல்ல முடியாது. ஆனா வாத்தியாரே! நாம்ம கண்ட கண்டவங்கிட்டேல்லாம் பழகுற ஆளு கெடயாது. ன்னமோ ஒரு நாளு வூட்டுக்கு வந்துச்சு. ஒரே அழுகாச்சி. எப்பூடி இருக்கும் சொல்லுங்க? வூட்டுல கல்யாணம் கட்டி வெக்க மாட்டேங்றாங்களாம். நீங்க பொண்ணு பாத்தாலும் அமய மாட்டேங்குதாம். நாம்ம அன்னிக்கு வுட்டுருந்தாலும் ஒங்க மச்சினன் எங்காவது போவத்தாம் செய்யும். அதாங் நம்ம பிடிக்குள்ள வெச்சி திருத்திப்புடலாம்னு தோணுச்சி. வேற வழியில்ல பாத்துக்குங்க. சிலதுல அப்புடித்தான் போவணும். ஒங்களுக்கு இது ஒத்து வராதுன்னு தெரியும். ஒங்களால இத ஏத்துக்க முடியாதுன்னு தெரியும். பேசிட்டு இருக்குறப்ப ஒங்களுக்கு தாங்க முடியாத கோவம் வரும்ணும் தெரியும். நம்மாள வாத்தியாரே எந்தப் பெரச்சனையும் இருக்காது. இது மாரி வேற யாரப் பத்தியும் நாம்ம இது வரிக்கும் நெனச்சுக் கவலப்பட்டதில்ல. என்னமோ இது நல்லா இருக்கணும்னு தோணுது. எதாவது பாத்துப் பண்ணுங்க. நம்மகிட்ட வந்ததுல இது மாரி எளந்தாரி செட்டுங்க எதுவும் கெடயாது. இதுதாம் மொதலு பாருங்க!"
            "நாம்ம பண்றது இருக்கட்டும்! இனுமே அந்தப் பக்கம் வந்தா... வராதேன்னு ஒங்களால சொல்ல முடியுமா? இல்லே அப்படி வாராமத்தான் அந்தம்பியால இருக்க முடியுமா?"
            "செரியான எடம் பாத்துப் புடிச்சீங்க பாத்தீங்களா! செய்யுறேம். ஆனா இப்போ இல்லே. நேரம் பாத்துச் செய்வேம். நம்மாள யாரும் கெட்டதில்ல வாத்தியாரே. மீனு செத்தாலும் சேசம்மாகிட்ட வந்தா கருவாடா வித்து காசாயிடும். மனுஷன் கெட்டாலும் சேசம்மாகிட்ட வந்தா உருப்படியாக்கி விட்டுடுவேம். யாரயும் கெடுத்ததில்ல. பொண்டாட்டிப் புள்ளியோட இருக்குறவங்களோடெல்லாம் நமக்குப் பழக்கம் கெடயாது. ஆனா, பாக்க கெடுக்குற மாரித்தாம் அப்படித்தாம் தெரியும். யாரயும் ரொம்ப காலத்துக்குப் பழக்கம் வெச்சிக்க மாட்டேம்.  சரி பண்ணி அனுப்பிடுவேம்! கெட்டுப் போற நாயி எங்கே போனாலும் கெட்டுப் போயிடும். ஊருல சேசம்மான்னு ஒருத்தி இருக்குறதாலதாம் இந்த நாயிங்க கெட்டுப் போறதா நெனச்சுக்காதீங்க. ஒங்களுக்கே தெரியும் சேசம்மான்னா எப்புடின்னு. கண்ட கண்ட நாயெல்லாம் கிட்ட வந்துட முடியாது. நாமளா பாத்து வுட்டத்தாம், நாயிங்க கிட்ட வரதும், எட்டப் போறதும்."
            "எப்படியோ ஒங்க புண்ணியத்துல வழிக்கு வந்தா செரித்தாம்!"
            "ச்சும்மா புண்ணியம் அது இதுன்னு பேசி நக்கல் பண்ண வாண்டாம் வாத்தியாரே! வழிக்கு வராம எங்கப் போறது? வழிக்கு வரலன்னா இதே பஸ் ஸ்டேண்டுல நிப்பாட்டிச் செருப்பக் கழட்டி அடிப்பேம்! வயசு அப்படி! காலா காலத்துல கல்யாணம் முடிஞ்சிருந்தா இப்படிலாம் ஆயிருக்குமா? செரி அத வுடுங்க. அது நம்ம பெரச்சன. நாம்ம சரி பண்ணி வுட்டுடுவேம். நீங்க நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க. எல்லாம் சரியா போயிடும் பாத்துக்குங்க! செரி நீங்க அவசரமா எங்கோ போயிட்டு இருந்தீங்க. ஒங்கள நிப்பாட்டி ரொம்ப நேரம் பேசிட்டேம். பாருங்க நம்ம யேவாரம் அப்டியே கெடக்குது! ஒங்கள மாரியா மாசம் வந்தா காசி வரதுக்கு? அன்னனிக்கு யேவாரத்தப் பாத்துதான காசி. கெளம்புங்க. கெளம்புங்க." என்றது சேசம்மா.
            சுப்பு வாத்தியார் வண்டியைக் கிளப்பிக் கொண்டு ஓகையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். வீயெம் மாமாவுக்கு குயிலியைப் பேசுவதற்கு முன்னே அவர் கருக்கங்குடியில் ஒரு பெண்ணையும், பூந்தாழங்குடியில் ஒரு பெண்ணையும் வீயெம்முக்காக விசாரித்து வைத்திருந்தார் அவர்.
            கருக்கங்குடியில் பார்த்திருந்த பெண்ணை கருப்பாகவும், குண்டாகவும் இருப்பதாகப் போட்டாவை மட்டும் பார்த்தே நிராகரித்தது வீயெம் மாமா. சுப்பு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இருந்தது. வீயெம் மாமா அப்படியொன்றும் நிறம் கிடையாது. அதுவே சற்றேறக்குறைய கருப்பு என்று அந்த அளவுக்குத் தெரியாத கருப்புதான். வீயெம் மாமா சொன்னபடி அந்தப் பெண்ணும் அந்த அளவுக்குக் குண்டு கிடையாது. சற்றே பூசினாற்‍ போன்ற உடம்பு. அதை சுப்பு வாத்தியார் எடுத்துச் சொன்ன போது, "இப்பவே இன்ன கதிக்கு இருக்குன்னா... கல்யாணம் ஆனப் பெறவு என்ன கதிக்குப் போகும்னு பாத்துக்குங்க அத்தாம்! இது நமக்குச் சரிபெட்டு வராது!" என்று சொல்லி விட்டது வீயெம் மாமா. அதற்கு மேல் சுப்பு வாத்தியாருக்கு வீயெம்மை வலியுறுத்த முடியாமல் போய் விட்டது. அந்தச் சம்பந்தம் முடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது சுப்பு வாத்தியாரின் நினைப்பு. பெண் வீட்டில் சுமாரான வசதிதான் என்றாலும் அவ்வளவு நல்ல குடும்பத்திலிருந்து அப்படி ஒரு பெண் கிடைப்பது அபூர்வம் என்றும் நினைத்தார் சுப்பு வாத்தியார். அந்த அபூர்வம் நிகழாமல் போய் விட்டது.
            பூந்தாழங்குடியில் பார்த்தப் பெண் வீயெம் சொன்ன அத்தனை லட்சணங்கள் பொருந்தியதாகவும் இருந்தது. ஆனாலும் வீயெம்முக்குப் பிடிக்கவில்லை. குடும்பத்தில் அந்த பெண் மூத்தப் பெண்ணாக இருந்தது. அந்தப் பெண்ணுக்குப் பிறகு இரண்டு பெண்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தன. தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போனால் மற்ற ரெண்டு பெண்களைக் கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தன் தலையில் விழுந்து விடும் என்று சொல்லி அந்தச் சம்பந்தத்தையும் தட்டிக் கழித்தது வீயெம் மாமா. இதிலும் சுப்பு வாத்தியாருக்குத் தாங்க முடியாத எரிச்சல். அவர் நேரடியாகவே வீயெம்மைக் கேட்டார், "ஏம்பி இவ்ளோ கணக்குப் பாக்குறீங்களே! ஒங்க அக்காக்களையெல்லாம் இது மாரி யாராது பாத்திருந்தா ஒருத்தருக்காவது கல்யாணம் ஆகியிருக்குமா? அதுவுங் வாழ்க்கப்பட்டுக்காரர் ஒங்க அக்காவக் கல்யாணம் பண்ணப்ப அஞ்சு பொண்ணுங்க. அப்போ நீங்கலாம் டவுசர் போட்டுட்டு திரிஞ்சீங்க!"
            "அதல்லாம் ஒரு காலம் அத்தாம்! ஏதோ பொண்ண கொடுத்தாப் போதும்னு கல்யாணம் பண்ணிட்டுப் போன காலம்! இப்போலாம் அப்படியா? ஏதோ அந்த காலங்கறதால நீங்கப் பண்ணீங்க! இந்தக் காலத்துலன்னா நீங்க பண்ணுவீங்களா?" என்றது வீயெம்.
            "அப்பிடிலாம் பேசாதீங்கம்பி! நாங்க ன்னா நூறு வருஷத்துக்கு முன்னாடியா கல்யாணம் பண்ணுனோம்? இதுவும் ஒங்க காலம்தான். அப்போறம், எல்லா காலத்திலயும் அது கஷ்டந்தாம். எங்களுக்கு குடும்பம் நல்ல குடும்பமா, பொண்ணு குணமா இருந்தா போதும்னு தொணிச்சி. அவ்வளவுதாம்."
            "ஒங்கக் காலத்துக் கதயெல்லாம் இப்போ பேசாதீங்கத்தாம்! காலம் எவ்ளோ மாறிட்டுப் போகுது. இந்த நிமிஷங்றது ஒரு காலம். அடுத்த நிமிஷங்றதே வேற காலம்தான் பாத்துக்கோங்க. இந்தக் காலத்துல போயி மூணு பொண்ண பெத்து வெச்சிருக்கானுவோளே! அறிவிருக்கா முட்டாப் பயலுங்க! அந்த வூட்டுல போயி பொண்ணு பாத்துட்டு வந்து இவ்ளோ பிலாக்கணம் பாடுறீங்களே அத்தாம்!" என்று சொன்னதும் சுப்பு வாத்தியாருக்கு வருத்தமாகப் போய் விட்டது.
            ஒருவேளை பெண் பார்க்க அழைத்துப் போயிருந்தால் வீயெம் மனது மாறியிருக்குமா என்று கூட சுப்பு வாத்தியார் யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் வேண்டாம் இந்த சம்பந்தம் என்று கட்டிக் கொள்ளப் போகிற வீயெம்மே சொன்ன பிறகு மேற்கொண்டு அதில் என்ன முயற்சி செய்ய முடியும் என்று அப்போது தேடி வந்த அந்த சம்பந்தங்களை அப்படியே விட்டு விட்டார் சுப்பு வாத்தியார்.
            பின்னர் லாலு மாமாவின் மகள் குயிலியைப் பேசி அது நடந்து முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நிச்சயத்தின் போது ஓடிய குயிலியின் திருமணமும், நல்ல குடும்பத்திலிருந்து வந்த இரண்டு சம்பந்தங்களை விட்ட வீயெம்மின் திருமணமும் பிற்காலத்தில் நடந்த போது வேடிக்கையாகத்தான் இருந்தன. 
*****

இதனால சகலருக்கும் சொல்ல வர்றது என்னான்னா...



            ஆயிரம்தான் மனுஷன் உருவாக்கி இருந்தால் என்ன? அதெல்லாம் இயற்கை உருவாக்கி வைத்த மாதிரி ஆகுமா?
            என்னமோ சிமெண்டையும், காங்கிரீட்டையும் போட்டு பஸ் ஸ்டாண்டைக் கட்டி வெச்சிருக்கான். இந்தக் கோடையில அங்க நிக்க முடியுதா?
            நம்ம ஊரு பஸ் ஸ்டாப்பு ரொம்ப காலத்துக்கு ஒரு அரச மரத்தடியாகத்தான் இருந்தது. பஸ் ஸ்டாப்புக்காக அரச மரத்த யாரும் கொண்டாந்து நடல. அது அங்கே இருந்தது. அங்க பஸ் நின்னுப் போனது. அது ஆலமரத்தடி பஸ் ஸ்டாப்பா ஆகிப் போச்சு.
            பஸ்ஸை விட்டு இறங்கினா அங்க கொஞ்சம் நின்றுட்டு வந்தாத்தான் மனசுக்கு இதமா இருக்கும். எவ்ளோ வெக்கையா இருந்தாலும் ஒரு நாளும் அந்த அரச மரம் சூட்டைக் கக்குனதில்லை. சூட்டைக் கெளப்புனதும் இல்லை.
            என்னிக்கோ விழுந்த ஒரு சின்ன விதை மரமாகி பஸ் ஸ்டாப்பா ஆகிப் போச்சு. இந்த பஸ் ஸ்டாப்பா கட்ட பைசா காசு செலவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியும் தேவையில்லை. அதுக்கு கான்ட்ராக்ட், கமிஷன்னு எதுவும் தேவையில்லை பாருங்க.
            எங்கேயாவது ஒரு பஸ் ஸ்டேண்டுல ஒரு சின்ன செடிய பாக்க முடியுதா? 'மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!'னு அரசாங்கம் சொல்லுதே! ஒரு மரத்தை அங்க நட்டு வைக்கக் கூடாதா? கொஞ்ச நஞ்சம் எடம் கூட பாக்கி இருக்கக் கூடாதுன்னு பூரா இடத்தையும் காங்கிரீட்டைப் போட்டு மொழுவி அதுல கால வைக்க முடியுதா? சூடு காலப் பொசுக்குது.
            அரசமரத்தடிங்ற பேரு இருக்குறப்பவே அதுக்கு எதுத்தாப்புல ஒரு பயணியர் நிழற்குடைங்ற பேர்ல ஒரு சின்ன கட்டடத்தைக் கட்டுனாங்க பாருங்க! ஒரு சனம் அதுல நிற்குறதில்ல. ஒரு நாயி கூட அங்கப் போயி படுத்துக்க மாட்டேங்குது. எல்லாம் ஆலமரத்தடியிலதான் வந்துப் படுத்துக்குதுங்க.
            நாங்க படிச்ச அந்தக் காலத்துல அசோகரு சாலை ஓரங்களில் மரங்களை நட்டாருன்னு பாடப் புத்தகத்துல வரும். இது என்னய்யா பெரிய சாதனை மாதிரி புத்தகத்துல போட்டு இருக்காங்கன்னு அப்போ நெனச்சது. சாலையோரத்துல விதை கெடந்தா அது பாட்டுக்கு முளைச்சி அது பாட்டுக்கு மரமா வளந்துட்டுப் போவுது. இதயெல்லாம் நட்டாருன்னு வரலாறு பாடத்துல எழுதுவாங்கன்னு நெனச்சது. ஆனா நெலைமைப் பாருங்க! ரோட்டோரம் வரிசையா அதுவா வளர்ந்திருந்த அத்தனை மரங்களையும் பொலி போட்டுட்டு ரோட்டை விரிவாக்கம் பண்ணாங்க பாருங்க! அப்போதாம் புரிஞ்சது அசோகரு நிஜமாத்தான் வரலாற்றை உருவாக்கியிருக்காருன்னு. இப்போ அசோகரு பத்தின அந்த மாதிரி பாடங்களெல்லாம் புத்தகத்துல இருக்குதோ என்னமோ! ஒருவேள அப்படி பாடங்கள் இருந்து மக்கள் மரங்களுக்காக போராட ஆரம்பிச்சிட்டாங்கன்னா அது வேற புதுத் தலவலியால்ல போயிடும் பாருங்க!
            மனுஷன் உருவாக்கிக்கிட்டே இருக்கான். ரோட்டை உருவாக்குறான். காங்கிரீட் கட்டங்களை உருவாக்குறான். இப்படில்லாம் பண்றது வெக்கைய உருவாக்குதேன்னு அதுக்கு ஏ.சி.ய உருவாக்கி வெச்சிருக்கான். மரம் என்னத்துக்கு மசுருன்னு போட்டு தள்ளிட்டே இருக்கான். அவனுக்கு எதையாவது அழிச்சி எதையாவது உருவாக்கிக்கிட்டே இருக்கணும். நல்ல வெளயாட்டுதாம் போங்க. அப்புறம் ஏன் இயற்கை மனுஷனை அழிச்சி விளையாடக் கூடாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்! அதுவும் விளையாட ஆரம்பிச்சிடுச்சி. கேட்டா பருவநிலை மாற்றம்பாங்க, பனிக்கட்டி உருகுதும்பாங்க, என்னமோ பசுமை இல்ல வாயு விளைவும்பாங்க! அதுக்கும் சேத்து எதையாவது கண்டுபிடிச்சிடலாம்பாங்க. அடே மனுஷா! நீ கண்டுபிடிக்கிறத வுடுடா! கொஞ்சம் இயற்கையோடு இயற்கையா சொகுசு இல்லாம இயற்கை தர்ற சுகத்தோடு வாழுடான்னு கத்தணும் போலருக்கு!
            ஊருல கத்துனா ஒரு மாதிரி பார்ப்பானுங்கோ! அதாங் இப்படி ப்ளாக்குல கத்திட்டு இருக்கேன்!
*****

9 Jun 2019

அதது சுழி!



செய்யு - 110
            மஞ்சள் பூசிய முகத்தோடு, தாவாங்கட்டையில் ஒரு சில முடிகளோடு கருவாடு விற்கும் சேசம்மாவுக்கு வயது எப்படியும் அறுபது இருக்கும். பார்த்தால் அறுபது என்று சொல்ல முடியாத தோற்றம் சேசம்மாவுக்கு. வயது என்னவோ நாற்பதோ, நாற்பத்தைந்தோ இருக்கலாம் எனும்படியான சுறுசுறுப்பு. சுற்றுப்பட்டு பகுதிக்கு வடவாதி முக்கியக் கடைத்தெரு. ஒரு டவுனுக்கு நிகரான அத்தனை கடைகளும் அப்போது வடவாதியில் இருந்தன. அப்படிப்பட்ட வடவாதிக்கு கருவாட்டு வியாபாரத்தின் மூலம் கிடைத்த பெருமை சேசம்மாவுக்கு உரியது. வடவாதி சேசம்மாவின் கருவாடு என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிக் கொண்டுப் போக சனங்கள் போட்டிப் போட்டது.
            வடவாதி சர்க்கரை ஆலை வடவாதியை இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கச் செய்தது. ஆலை எந்நேரமும் ஒவ்வொரு நாளும் மூன்று ஷிப்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆலைக்கு வேலைக்குப் போவோரையும், வருவோரையும் வடவாதிச் சாலையில் பார்த்துக் கொண்டிருக்கலாம். வடவாதி கடைத்தெருவில் ஒரு டீக்கடையோ, பெட்டிக்கடையோ வைத்தாலே போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல பகுதிகளில் இருந்தும் வடவாதியில் வந்து குடியேறிய மக்கள் ஏராளம். அந்த ஏராளத்தில் கருவாடு விற்கும் சேசம்மாவும் ஒருவர். பிழைப்புக்காக வந்தாலும் சேசம்மா வடவாதியில் ஒருத்தியாகி விட்டிருந்தார்.
            வடவாதிக்குக் கிழக்கே சேசம்மாவுக்கு திங்கட்கிழமக்காரி என்ற பெயர் உண்டு. வடவாதிக்கு மேற்கே வியாழக்கிழமக்காரி என்ற பெயருண்டு. வாரத்தின் திங்கள், வியாழன் தவிர்த்த ஐந்து நாட்களில் வடவாதி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் சாயுங்கால நேரத்தில் கருவாடுகளைப் பரப்பி விற்கும் சேசம்மா திங்கட் கிழமை வந்து விட்டால் வடவாதிக்குக் கிழக்கே உள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலையில் கருவாட்டுக் கூடையை வைத்துக் கொண்டு சென்றதென்றால் பத்து மைல் சுற்றளவுக்கு சுற்றி கருவாடுகளை விற்று வந்து விடும்.  இப்படித்தான் வடவாதிக்குக் கிழக்கே திங்கட்கிழமை வருவதால் திங்கட்கிழமக்காரி என்ற பெயர் சேசம்மாவுக்கு உண்டானது. அதே போல வியாழக்கிழமை என்றால் வடவாதிக்கே மேற்கே உள்ள கிராமங்களுக்கு கருவாட்டு வியாபாரத்துக்கு தெரு தெருவாக கூடையைத் தலையில் சுமந்து கொண்டு கிளம்பி விடும். இதனால் வடவாதிக்கு மேற்கே வியாழக்கிழமக்காரி என்ற பெயர் சேசம்மாவுக்கு.
            திங்கள், வியாழன் தவிர்த்து இரண்டு நாட்கள் இடைவெளியில் நாகப்பட்டிணம் போய் கருவாடுகளை நேரடியாக வாங்கிக் கொண்டு வந்து விடும் சேசம்மா. அது வாங்கி வந்த கருவாடுகள் அதிகபட்சமாக ரெண்டு நாட்கள் தங்கினால் அதிசயம். அந்த வேகத்தில் கருவாடுகள் விற்றுப் போகும். சேசம்மா வடவாதிக்கு வந்த போது அதுக்கு வயது முப்பத்தைந்தோ, நாற்பதோ இருக்கலாம். தனியாளாகத்தான் வடவாதிக்கு வந்தது சேசம்மா. இந்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகளில் இப்போதும் தனியாளாகத்தான் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுக்கு கிழக்காக கருவக்காட்டைக் கடந்து வயக்காட்டில் விழுந்து போனால் மேடான புறம்போக்குப் பகுதியில் அது குடிசைப் போட்டிருந்து. அந்தக் குடிசைதான் அதன் வீடு. அந்தப் பகுதியில் வேறு வீடுகள் எதுவும் இல்லாமல் சேசம்மாவின் குடிசை மட்டும் தனித்து இருந்தது. சேசம்மாவுக்கு கல்யாணம் ஆனதோ, பிள்ளைக் குட்டிகள் உண்டோ என்ற எந்தத் தகவலையும் அது யாருக்கும் சொன்னதில்லை. யாரேனும் இது குறித்து அக்கறையாக விசாரித்தால் கூட சேசம்மாவுக்குக் கோபம் வந்து விடும். "எப்படியோ எங்கேயிருந்தோ வந்தேம். அதுக்கென்ன இப்போ? உழச்சுதானே பொழக்கிறேம். ஒம் வூட்டுக் காசப் புடுங்கியா பொழக்கிறேம். வந்தா கருவாட்ட வாங்குனீயா? போவீயா? அது வுட்டுட்டு எங் கொலம் ன்னா? கொத்திரம் ன்னான்னுகிட்டு. இது யேவாரம் பண்ற எடம். யேவரம்னா நின்னு, நில்லு. இல்ல கெளம்பு. அதுக்கு மேலயும் வெவரம் வேணுமா? வூட்டுப் பக்கம் வா! அவுத்துப் போட்டே காட்டுறேம்!" என்று சொல்லும். அதற்கு மேல் யாருக்கும் பேச துணிவிருக்காது.
            சேசம்மாவிடம் சாயுங்கால நேரத்தில் கடைபரப்பி இருக்கும் போது கருவாடு வாங்கலாம். அல்லது தெரு தெருவாக விற்றுக் கொண்டு வரும் போது கருவாடு வாங்கலாம். வீடு தேடிப் போய் கருவாடு வாங்க முடியாது. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டும். சமயத்தில் பிய்ந்துப் போன தன் செருப்பைத் தூக்கிக் காட்டும். "ஏம்டா நாதாரி நாய்களா! ஒரு மனுஷி அலுத்துச் சலிச்சுப் போயி வூட்டுல கெடந்தா அந்த நேரத்திலயும் வந்து யேவாரம் பண்ணச் சொன்னா ன்னாடா பண்ணுவா? ஒங்களுக்கெல்லாம் நேரம் காலமே கெடயாதாடா? அதாங் சாயுங்காலம் ஆனா பஸ் ஸ்டாண்டு பக்கம் வந்து கெடக்குறேனே. அது பத்தாதுன்னு தெரு தெருவா ரெண்டு நாளிக்கு வந்து அலயுறேனோ. அது பத்தாதா? சதா நேரமும் ஒங்களுக்குக் கருவாடு வித்துட்டுக் கெடக்குணுமாடா பீத்த நாய்களா?" என்று சத்தம் போடும்.
            குடிசை அதற்கான இடம். அங்கு யாரும் சென்று விட முடியாது அது அனுமதிக்கும் ஆட்களைத் தவிர. ஒரு சில ஆண்கள் சேசம்மாவின் குடிசைக்கு சென்று வருவதாக ஊரில் பேச்சு உண்டு. அது பற்றி யாரேனும் கேட்டால், சேசம்மா கோஞ்சம் கூட யோசனைப் பண்ணாமல், "ஆமாண்டா நாயே! அவன நாம்ம வெச்சிருக்கேண்டா! வூடு தெறந்து வெச்சா நாலு சொறி நாயி, தெரு நாயி வந்துட்டுதான்டா போவும்! ரோட்டுல கெடக்குற நாயிக்கே கூடி கெடக்காமா இருக்க முடியுதாடா? நம்ம ன்னாடா பண்ணுவேம்?" என்று சொல்லும். ஊரில் சும்மா இருக்காமல் அதற்கும் கேள்வி கேட்பார்கள், "ஏம் நீ ஒருத்தன கல்யாணந்தாம் கட்டிக்கிறது?" என்று. சேசம்மா விடாது, "ம்! அது ஒண்ணுதாங் கொறச்சல்! நாம்ம நாயா பேயா நாகப்பட்டணத்துக்கு அலஞ்சி கருவாட சுமந்துட்டு காசி சம்பாதிப்பேம். கட்டிக்க வர்ற நாயி ஓசியில தின்னுபுட்டு, எங் காசிய வாங்கி அதுலயே தண்ணி போட்டுட்டு நம்மள போட்டு வெளுத்து வாங்கட்டும். எல்லாம் பாத்தாச்சிங்கடா போக்கத்தப் பயலுகளா! வூட்டுக்கு வர்றதா இருந்தா கொஞ்ச நஞ்ச காசியயில்ல, கேட்குற காசிய கொடுக்குறதா இருந்தாத்தாம் உள்ள வர்ற முடியும். இல்லே செருப்பு பிய்ஞ்சிப் போயிடும்!" என்று சொல்லும். மற்றபடி சேசம்மா கருவாட்டு வியாபாரத்தில் கெட்டி. இப்படி ஒரு சில விசயங்களில் அட்டாதுட்டியாகப் பேசுவதைத் தவிர்த்து சேசம்மாவைப் போல மரியாதையாகப் பேசும், பணிந்தும் நயந்தும் நடந்து கொள்ளும் ஆளை வடவாதியில் பார்க்க முடியாது. அது விற்கும் கருவாடும் ஏக்கிளாஸாக இருப்பதாக ஊரில் பேசிக் கொள்வார்கள். சேசம்மாவிடம் கருவாடு வாங்கியவர்களுக்கு பிறகு யாரிடம் வாங்கினாலும் அந்தத் திருப்தி வராது. அந்த அளவுக்கு கருவாடுகளைப் பார்த்துப் பார்த்து நாகப்பட்டிணத்திலிருந்த கொள்முதல் பண்ணிக் கொண்டு வரும். அது சேசம்மாவுக்கே உரிய வியாபார ராசி என்று ஊர் பேசியது.
            வடவாதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேசம்மா குறுக்கே வராத தெரு என்று எது இருக்கிறது? அதனால் வடவாதியைப் பற்றி எழுதும் போது சேசம்மாவை விட்டு விட்டு எப்படி எழுத முடியும்? அத்தோடு சமீப நாட்களாக வீயெம் மாமாவை சேசம்மாவின் வீட்டுப் பக்கம் பார்க்க முடிவதாக ஊருக்குள் பேச்சு எழ ஆரம்பித்தது. வைத்தி தாத்தாவோ, குமரு மாமாவே அந்தப் பேச்சுகளைப் பொருட்படுத்தவில்லை. அவர்களிடம் கேட்டதுக்கு, "அதது சுழிக்கு அதது போய்ட்டு இருக்கு!" என்பதாக பதில் சொன்னதாக பேச்சு உலவியது.
            சுப்பு வாத்தியாரால் அப்படி இருக்க முடியவில்லை. வீயெம் மாமாவை இலைமறைக் காயாக விசாரித்த போது, "என்னத்தாம் பேசுறீங்க? கெழவிட்ட எவனாது போவானா? அதுங் கருவாட்டுக் கெழவி! எவனோ கத கட்டி வுட்டா அத நம்பி நம்மள கேட்பீங்களா? அங்கலாம் போனா நம்ம குடும்ப கெளரவம் என்னாறது? ஒங்க கெளவரந்தான் என்னாவுறது?" என்றது.
            இதற்கு மேல் விசாரிப்பதற்கு கடைசி ஆள் சேசம்மாதான். சேசம்மாவை விசாரித்து அது கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தால் மானம் போய் விடும் என்ற பயம் சுப்பு வாத்தியாருக்கு இருந்தது. இதில் உண்மை தெரியாமல் என்ன செய்வது என்ற யோசனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வதந்தி வெறும் வதந்தியாக இருந்து விட்டால் எவ்வளவோ நல்லது. ஒருவேளை அது உண்மையாக இருந்து விட்டால்.. அதெல்லாம் தன்னால் நேர்ந்ததோ என்ற சந்தேகம் வேறு அவரைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அதாவது, ஒருவேளை நிச்சயம் ஒழுங்காக முடிந்து வீயெம் மாமாவுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால் இப்படி ஒரு நிலைமை உண்டாகியிருக்குமா என்று அவர் தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். அல்லது நிச்சயம் முறிந்து போனவுடன் உடனுக்குடன் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்திருந்தால் கூட இப்படி ஆகியிருக்காது என்றும் அவருக்குத் தோன்றியது. ஆனால் அதுதான் அவ்வளவு எளிதா என்ன? பெண்ணையும் கொடுத்து, நகை, சீர் சனத்திகளையும் செய்து எல்லா செலவுகளையும் பண்ணி விட்டால் அதற்கு வைத்தி தாத்தாவும், குமரு மாமாவும் ஒத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு சம்பந்தத்தை அவ்வளவு விரைவில் பிடிப்பதுதான் சாமான்யமானதா என்ன? அப்படியே கொண்டு போனாலும், "ஏற்கனவே ஒரு பொண்ண பாத்து எல்லாம் ஒழுங்கா முடிச்சாச்சி. இதுல ஒடனே அடுத்த பொண்ணா?" என்ற வைத்தி தாத்தாவோ, குமரு மாமாவோ கேள்வி கேட்காமல் அதை அத்தோடு விட்டு விடுவார்களா என்ன?
*****

புற்றுநோய்க் கட்டிகள்



புதைப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் கனிகளாக
கலப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் நீராக
எரிப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் காற்றாக
அணுக்கழிவுகளைப் புதைக்காதீர்
என்று சொல்வதா
சாக்கடையைக் கலக்காதீர்
என்று சொல்வதா
பாலீதினை எரிக்காதீர்
என்று சொல்வதா
எதையெதை விதைத்தோமோ
நம்மை வந்துச் சேரும்
நின்று விடாது
தலைமுறை நோக்கிப் போகும்
புற்றைக் கட்டி
பாம்புகள் குடியேறக் கூடாதெனவா
சொல்ல முடியும்
சிவன் கழுத்து பாம்பே
ஆதிசேஷா
*****

8 Jun 2019

உறவுகளின் சுவை



செய்யு - 109
            கரும்பு இனிக்கிறது. பாகற்காய் கசக்கிறது. ரெண்டுமே அதனதன் தன்மைகளில் இருக்கின்றன. உறவுகளோடு ஒப்பிடும் போதூன் கரும்பு இனியது, பாகற்காயும் இனியது என்பது புலப்படும். உறவுகள் எப்போது எந்தத் தன்மையில் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. இனிக்கின்ற உறவுகள் இனிப்பாகவே இருந்து விடுவதோ, கசக்கின்ற உறவுகள் கசப்பாகவோ நீடித்து விடுவதில்லை. மாறி மாறி அவை சுவை கொள்கின்றன. இனிப்பு கசப்பாவதும், கசப்பு இனிப்பாவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கின்றன. அதாவது கரும்பு பாகற்காய் ஆவதும், பாகற்காய் கரும்பாவது போலவும்.
            எவ்வளவுதான் இனிமையாகப் பழகினாலும், இனிமையாகப் பேசினாலும், மென்மையாக நடந்து கொண்டாலும் எப்படியோ பழக்க வழக்கத்தில் ஒரு கசப்பு பீடித்துக் கொள்கிறது. எவ்வளவுதான் பக்குவமாக இருக்கப் பார்த்தாலும் உறவுகளில் எப்படியோ ஒரு மனக்கசப்பு வந்து விடத்தான் செய்கிறது. அதற்குப் பெரிதான காரணங்கள் எதுவும் தேவை என்பதில்லை. அல்பத்தனமான காரணங்களே போதுமானதாக உள்ளது. முக்கியமான காரணங்கள் புறந்தள்ளப்பட்டு அந்த அல்பதனமான காரணங்கள் பிரதானமாகி விடுகின்றன.
            லாலு மாமாவுக்கு தன் மகள் ஓடிப் போனதை விட, அந்த நிலையில் சுப்பு வாத்தியார்  நிச்சயத்தை நடத்தித் தராமல் போனது அவர் மனதில் பெரும் மனக்கசப்பை விதைத்திருந்தது.
            யாருக்கும் நிச்சயத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்ப்பில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்ட பின் இதையெல்லாம் சரியாக விசாரிக்காமல் சுப்பு வாத்தியார் எப்படிக் காரியத்தில் இறங்கினார் என்பது பேச்சாகப் போய் விட்டது. இந்த விவகாரத்தில் தன் தலை இப்படி உருள்வதை நினைத்து சுப்பு வாத்தியாருக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது.
            விசாரிக்கப் போன ஆரம்பத்திலிருந்த நிலைமையிலிருந்து அதில் உண்டான தடைகள் அதிகபட்சம்தான்.  சரியில்லாமல் போய் முடிவில் இவ்வளவு மோசமான ஒரு முடிவுக்கு அது வரும் என்று அவர் மட்டும்தான் எப்படி கணித்திருக்க முடியும்?
            இப்படியெல்லாம் நிகழும் என்பதைக் கணித்து அதற்கேற்றபடி உஷாராக இருந்திருக்க வேண்டும் என்று குமரு மாமா கருதியது. அதைக் கணிக்கத் தவறி விட்டதாக குமரு மாமாவுக்கு சுப்பு வாத்தியாரின் மேல் கோபம் இருந்தது.
            உறவுகளோடு இணக்கமாக இருப்பது என்பது ஒரு மாபெரும் கலை. இணக்கமாக இருக்க முடியாத நிலையிலும் அதைச் சகித்துக் கொண்டு இணக்கமாக இருந்தாக வேண்டும். உறவுகளில் ஒரு நல்ல செயலை முன்னெடுக்க நினைப்பவர்களுக்கு நினைத்தபடி நிகழ்ந்து விட்டால் நல்ல பெயரும், புகழும் உண்டாகி விடும். மாறாக மாறி நடந்து விட்டால் அதற்கு உண்டான அத்தனைக் கெட்டப் பெயர்களையும் சுமக்க வேண்டியதாகி விடும். வேறு எவ்வளவோ சம்பவங்கள் ஒரு நிகழ்வுக்குக் காரணமாக இருந்தாலும், அந்த நிகழ்வு துவங்கக் காரணமாக இருந்தவர் அந்த நிகழ்வின் ஒட்டுமொத்த பின்விளைவுக்கும் பொறுப்பேற்றாக வேண்டியதாகி விடும். உறவுகளில் மனித மனங்கள் அப்படித்தான் சிந்திக்கின்றன. அவர் மட்டும் அந்தச் செயலை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ஏன் இப்படி நடக்கப் போகிறது? என்று வெகு எளிதாகச் சிந்தித்து விடுவார்கள். அதுவே ஆதாயமாக நடந்து விட்டால் அந்த ஆதாயத்துக்கான அவர்களின் பங்கை அதிகமாகவே பங்கிட்டுக் கொள்வார்கள்.
            மனதில் எண்ணி நடக்கின்ற எல்லா காரியங்களும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செய்யப்படுகின்றன. சுப்பு வாத்தியாரைப் பொருத்த வரையில் யோசித்து யோசித்தே நீண்ட காலத்தைக் கடத்தி விடுவார். அப்படி நீண்ட காலத்தைக் கடத்தியும் பிறழ்ந்து போன நிகழ்வாக வீயெம் மாமாவின் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது. பிள்ளைகள் மேல் கொண்ட அவரது நம்பிக்கை அப்படிப்பட்டது. பிள்ளைகள் தவறு செய்வார்கள் என்பதை அவரால் நம்ப முடியாததாக இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அவர் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் குறித்து விசாரிப்பதிலும், அதில் கவனத்தில் கொள்வதிலும் அவரைப் பின்தங்கச் செய்தது.
            பொதுவானப் புத்தியில், நிகழ்ந்து விடுகின்ற ஒரு நிகழ்வுக்கு ஆளாளுக்கு ஒரு கற்பிதத்தைச் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நிகழ்ந்து விட்ட ஓர் அசாதாரண நிகழ்வுக்கு சமாதானம் தேவை. சரியாகச் சொல்வதென்றால், தன்னால் சரியாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட செயல், இன்னொருவரால் கெட்டு விட்டது என்பதற்கேற்ப ஒரு காரணம் தேவைப்படுகிறது. நிகழ்ந்து விட்ட ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்வது எல்லா மனதுக்கும் எந்தக் காலத்தில் சாத்தியமாகும் சொல்லுங்கள்? ஒவ்வொரு மனதும் அதற்கே உரிய தன்மையில் அதை விமர்ச்சிக்கிறது. அப்படிப் பலரின் விமர்சனங்களை சுப்பு வாத்தியார் எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. எல்லாருக்கும் கோபப்பட வசதியானவராகவும் சுப்பு வாத்தியார் அமைந்துப் போனார். அதற்கும் அவர் பொருத்தமானவர். எவர் கோபப்பட்டாலும் அதற்கெதிராக கோபப்பட முடியாத ஓர் இயலாமையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
            வீயெம் மாமாவின் திருமணத்தை முடித்து விடுவதற்காகத் தூண்டில் போட்டுதான் குமரு மாமா சுப்பு வாத்தியாரின் புது வீடு கட்டும் யோசனையைத் தூண்டி விட்டு அது அஸ்திவாரத்துக்கு மேலே வளர்ந்திருந்தது. வீயெம் மாமாவின் நிச்சயம் இப்படி முடிந்துப் போனதில் வீடு கட்டும் வேலையிலிருந்து அது முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டது. அது செய்து வைத்திருந்த தாய்நிலை மட்டும் அது வேலை செய்ததன் சாட்சிமாய் சுப்பு வாத்தியாரின் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் நின்று கொண்டிருந்தது.
            வீடு லிண்டல் மட்டம் வரை வளர்ந்து விட்டால் சைன் சைடு சென்ட்ரிங் அடிப்பது, லாப்டுக்கான சென்ட்ரிங் அடிப்பது போன்ற பணிகளையும் குமரு மாமாதான் செய்தாக வேண்டும். கொஞ்ச நாள் ஆறப் போட்டுப் பார்த்தால் நிலைமை சரியாகிவிடும் என்று சுப்பு வாத்தியார் எதிர்பார்த்திருந்தது. குமரு மாமா வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்காததால் குமரு மாமாவைத் தேடிக் கொண்டு பட்டறையில் சுப்பு வாத்தியார் பார்த்தது.
            "இனுமே இந்தப் பக்கம் தலைவெச்சுப் படுக்காதீங்க அத்தாம்! எல்லாத்தையும் தெரிஞ்சி வெச்சிகிட்டு எதையும் எங்களுக்குச் சொல்லாம எங்க தலையில கட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணிருந்தீங்கல்ல!" என்றது குமரு மாமா.
            தனக்கு எந்த விசயமும் முன்கூட்டியே தெரியாது என்பதை எவ்வளவோ சுப்பு வாத்தியார் மறுத்துப் பார்த்தது. குமரு மாமா நம்பத் தயாராக இல்லை. "இதல்லாம் நீங்க லாலு மாமாவோட சேந்து போட்டத் திட்டம்! நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டீங்களா?" என்றது. அதற்கு மேல் குமரு மாமாவோடு பேசி எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது புரிந்துப் போனது சுப்பு வாத்தியாருக்கு.
            வீடு கட்டுவதற்கான வேலைகளை யாரைக் கொண்டு தொடர்ந்து செய்வது என்ற குழப்பம் சுப்பு வாத்தியாரைக் கவ்வியது. எங்கே மணல் வாங்க வேண்டும், எங்கே செங்கற்களை வாங்க வேண்டும், எங்கே கம்பிகளை வாங்க வேண்டும், எங்கே சிமெண்ட் வாங்க வேண்டும், எங்கே மரம் எடுக்க வேண்டும் என்று பலவற்றில் குமரு மாமாதான் ஆள் பிடித்து விட்டது, கடை பார்த்து விட்டது எல்லாம். குமரு மாமாவுக்காக விலையில் சல்லிசு காட்டும் கடைக்காரர்கள் தன்னிடமும் அவ்வா‍று சல்லிசு காட்டுவார்களா என்ற யோசனையும் சுப்பு வாத்தியாருக்கு இருந்தது. இவ்வளவு பொறுப்புகளையும் சுமந்து வீட்டைக் கட்டி முடிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஒவ்வொரு நாள் இரவும் அவரைப் புரண்டு புரண்டு படுக்க வைத்தது. பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டைக் கட்டி முடிப்பது போலல்லாமல் பணத்தைக் கையில் புரட்டுவதற்கு ஏற்ப வீட்டைக் கட்டுவதான இக்கட்டில் அவர் நன்றாகச் சிக்கியிருந்தார். மிகச் சரியாகச் சொல்வதென்றால், சரிந்து விழும் ஒரு சீட்டு ஒட்டுமொத்த சீட்டுகளையும் சரித்து விடுவது போல, நிகழ்ந்து விட்ட ஒரு நிகழ்வு அடுத்தடுத்த பல்வேறு நிகழ்வுகளைச் சரித்து விட்டது போலாகி விட்டது அவரது நிலை. பின்னாட்களில் இந்த நிகழ்வு பற்றி யோசித்தப் பார்த்த போது, இந்த நிகழ்வைச் சாக்காக வைத்து குமரு மாமா எவ்வளவு அழகாக கழன்று கொண்டு விட்டது என்ற கோணத்தை சுப்பு வாத்தியாரால் யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது பட்டறை ஆரம்பித்த நேரம் வேலைகள் அந்த அளவுக்கு வந்த வண்ணம் இருந்தன. இரவு பகல் பாராமல் எந்நேரமும் பட்டறையில் கிடக்க வேண்டியதாக இருந்தது குமரு மாமாவுக்கு. பட்டறையில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருந்தது. தவிர பட்டறையில் வேலை பார்க்க வந்து போகும் ஆட்களால் புதுப்புது வேலைகளும் கிடைத்துக் கொண்டிருந்தன.
            மேற்கொண்டு சில முறைகள் கேட்டுப் பார்த்தால் குமரு மாமாவின் மனநிலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்த்து அப்படியும் சுப்பு வாத்தியார் செய்து பார்த்ததற்கும் எந்தப் பலனும் இல்லாமல் போனது. காணாத விரோதியைக் கண்டது போல குமரு மாமா சுப்பு வாத்தியாரைப் பார்க்க ஆரம்பித்தது. சுப்பு வாத்தியாருக்கு சென்ட்ரிங் அடிப்பதற்கும், கதவு போடுவதற்கும் புது ஆசாரியைத் தேட வேண்டிய நிலையாகி விட்டது. ஒரு கதவு மூடினால் ஒரு ஜன்னல் திறக்கும் என்பார்களே! இங்கே சுவரில் வைத்து திறந்து கிடக்கும் நிலை, ஜன்னல்களுக்கு யாரைக் கொண்டு கதவைச் செய்து வைத்து மூடுவது என்ற கேள்வி துளைத்தெடுக்க சுப்பு வாத்தியார் ஆசாரிகளைத் தேடிக் கொண்டிருந்தார். அது அவ்வளவு சாமான்யமானதாக இல்லை. ஏற்கனவே ஓர் ஆசாரி செய்த வேலையில் இன்னோர் ஆசாரி கை வைக்க ரொம்பவே யோசித்தார்கள். தவிரவும் குமரு மாமாவே வந்து சொன்னால் தொடர்ந்து வேலை பார்க்கத் தயார் என்று வந்து பார்த்த ஆசாரிகள் சொல்லி விட்டுப் போனார்கள். அந்த அளவுக்கு வடவாதியில் குமரு மாமாவின் பட்டறை சுற்று வட்டாரத்தின் முக்கிய கேந்திரியமாக மாறியிருந்தது. குமரு மாமாவால் பல உப வேலைகள் பல ஆசாரிகளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. அதனால் குமரு மாமாவைப் பகைத்துக் கொள்ள எந்த ஆசாரிப் பெருமக்களும் விரும்பவில்லை. சுப்பு வாத்தியாருக்கு இனி மீண்டும் ஒரு முறை குமரு மாமாவின் முன் போய் நிற்பதற்கு பெரெரிச்சலாக இருந்தது.
*****

எதிர்ப்பில் காட்டும் ஆர்வம் ஏன் வளர்ப்பதில் இல்லை?



            எதிர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை வளர்ப்பதில் இந்தச் சமூகம் காட்டுவதில்லை. எதிர்ப்பதில் ஒரு கிளர்ச்சி இருக்கிறது. வளர்ப்பதில் என்ன கிளர்ச்சி இருக்கிறது?
            அப்படி என்ன வளரவில்லை என்று கேட்டால் அதுவும் சரிதான். இந்த அளவுக்கு வளர்ந்ததே போதுமென்று கூட இந்தச் சமூகம் இருந்திருக்கலாம்.
            இந்த வருடம் பொதுத்தேர்வு முடிவுகளை எடுத்துப் பாருங்கள். தமிழில் தேக்கமடைந்தவர்களின் விழுக்காடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. காலப் போக்கில் தமிழ் படிப்பது கடினமாகி அந்தப் பாடத்தையே எடுத்து விடுங்கள் என்று கூட இந்தத் தமிழ்ச் சமூகம் கூப்பாடு போடலாம்.
            பெரிய எதிர்ப்புகள் ஏதுமில்லாமல் ஆங்கில வழிக் கல்வி அரசுப் பள்ளிகள் வரை வந்த போது இந்தச் சமூகம் பெரிதாக எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. ரொம்ப ஆர்வமாகவே பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்தார்கள். அந்த அளவுக்கு வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் முன்னிறுத்தி பிறமொழி வழிக்கல்வி இங்கு பேசப்படுகிறது. வேலைவாய்ப்பையோ, பொருளாதாரத்தையோ உருவாக்க முடியாத அளவுக்கு தமிழ்நாடு அவ்வளவா வறண்டு கிடக்கிறது?
            தமிழ்நாட்டின் வளம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதுதான். அதை முறைப்படுத்துவதிலும், ஒழுங்குப்படுத்துதிலும் ஓர் அக்கறையின்மை காணப்படுகிறது. இந்த முறையின்மை, ஒழுங்கின்மை, அக்கறையின்மைதான் நம் சமூகத்தின் பிரச்சனை.
            சாதிகளாய்ப் பிரிந்து கொண்டு அடித்துக் கொள்வதில் காட்டும் அக்கறை ஒன்றுபட்டு உயர வேண்டும் எனும் போது எப்படி அக்கறையின்மையாக ஆகி விடுகிறது என்பது ஓர் ஆச்சரியம்தான்.
            இந்தத் தமிழ்நாட்டில்தானே என்னென்னமோ மொழி பேசுகிறவர்கள் வந்துப் பிழைக்கிறார்கள், வேலை பார்க்கிறார்கள். தமிழைப் பேசிக் கொண்டு தமிழர்கள் பர்மாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சென்று பிழைக்கவில்லையா? பிழைப்புவாதத்துக்கும், வேலை பார்த்து சம்பாதிப்பதற்கான வாதத்துக்கும் அடிப்படை சாமர்த்தியம்தான். பிறமொழியால் அந்தச் சமார்த்தியத்தைப் பெறுவதை விட தாய்மொழியின் மூலம் அந்தச் சாமர்த்தியத்தை எளிதாகப் பெற்று விட முடியும். உலகெங்கும் உள்ள சாமர்த்தியசாலிகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர்களின் சிந்தனை தாய்மொழி வழியே இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு தாய்மொழி மூலமாக தேவைக்கேற்ப இன்னொரு மொழியை இணைத்துக் கொண்டிருப்பார்களே தவிர, பிறமொழிக்கு ஏற்ப தாய்மொழியைப் புறந்தள்ளியிருக்க மாட்டார்கள்.
            இந்தச் சமூகம் தாய்மொழியிலும் தெளிவில்லாமல், வேலை வாய்ப்புக்காக கற்பதாகச் சொல்லும் பிறமொழியிலும் முழுமையில்லாமல் அரைவேக்காட்டான நிலையில் தவிக்கிறது. இந்த அரைவேக்காட்டான நிலையோடு அது சிந்தித்துச் சொல்வதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
            தமிழ்மொழியின் அருமை புரியாது, அதை வளர்த்தெடுக்காமல் பிறமொழி மீது காட்டும் இச்சமூகத்தின் எதிர்ப்பு என்பது மிகவும் பலவீனமானதுதான். பலமாகப் புகுத்தினால் நீட் தேர்வைப் போன்று அது இச்சமூகத்தில் வேரூன்றி விடும். அதே நேரத்தில் தன் தாய் மொழியின் அருமை அறிந்து, அதை வளர்த்தெடுத்து அதன் வாயிலாக பிறமொழித் திணிப்பை எதிர்க்கும் சமூகத்தில்தான் தாய்மொழி காக்கப்படும். அதன் வளமான சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படும்.
*****

7 Jun 2019

நின்று போன நிச்சயம்



செய்யு - 108
            குமரு மாமா அப்போது சாம்பல் நிற டிவியெஸ் சாம்ப் வாங்கியிருந்தது. அதில் குமரு மாமாவும், மேகலா மாமியும் வந்து இறங்கிய போது மணி பதினொன்றரைக்கு மேல் இருக்கும். மேகலா மாமியின் முகத்தில் களையே இல்லை. இதற்கெல்லாம் ஏன் வம்படியாக தன்னை அழைத்து வருகிறார்கள் என்று எரிச்சலாக இருப்பது போலிருந்தது. தவிரவும் மேகலா மாமியின் வகையறாவிலிருந்து யாரும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. வந்து இறங்கிய இவர்கள் ரெண்டு பேரையும் வரவேற்று முடிப்பதற்குள் வீயெம் மாமா தன்னுடைய பழைய டிவியெஸ் பிப்டியில் வந்து இறங்கியது.
            முருகு மாமாவும், பாக்குக்கோட்டை தாத்தாவும் குமரு மாமாவையும், வீயெம் மாமாவையும் தனியே தள்ளிக் கொண்டு போயினர். பந்தலிலிருந்து சுமார் நூறு அடி தூரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள். ஐந்து நிமிட காலம் பேசியிருப்பார்கள். வீயெம் மாமா வேக வேகமாக தென்னண்டைப் பக்கம் சமைத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தது. வெறி பிடித்ததைப் போல சமைத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் பாத்திரத்தோடு தூக்கி வீசியது. தூக்க முடியாத பாத்திரங்களை கவிழ்த்து விட்டது. வடித்துக் கொண்டிருந்த சோற்று அண்டாவை அப்படியே சாய்த்து விட்டது. கொதித்துக் கொண்டிருந்த சாம்பாருக்கும் அந்த கதியே ஏற்பட்டது. பஜ்ஜி போட்டு வைத்திருந்த அண்டா மூடி பஜ்ஜியோடு சேர்த்து பறந்து கொண்டிருந்தது. ஒரே களேபரமாகி எல்லாரும் சமைக்கும் இடத்துக்கு முன்னாடி கூடி விட்டனர். சமையல்காரர் பிரமை பிடித்தது போல பார்த்திருந்தார். என்ன இருந்தாலும், எது நடந்திருந்தாலும் ஒரு சமையல் கலைஞரின் கை வண்ணத்தையும், உழைப்பையும் இப்படியா உதாசீனப்படுத்துவது? வேற்குடி ஆட்களோ, லாலு மாமா வகையறாவைச் சேர்ந்த ஆட்களோ எதுவும் செய்யாமல் அப்படியே நின்றிருந்தனர்.
            சிப்பூர் பெரியம்மா மட்டும் ஓடிப் போய் வீயெம் மாமாவைப் பிடித்து உலுக்கி, "ஏன்டாம்பி இப்படிப் பண்றே? என்னாச்சு ஒனக்கு? எல்லாரும் பாக்கிறாங்க பாரு!" என்றது.
            "ந்நல்லா பாக்கட்டும். அதுக்குதான் பண்றேம்." என்று சொல்லி விட்டு அடுப்பில் வைப்பதற்காக வைத்திருந்த விறகுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த எல்லாவற்றையும் விளாசித் தள்ளியது.
            "எல்லே! இப்ப நிறுத்தப் போறீயா இல்லியா? சொல்லச் சொல்ல லூசு பிடிச்சவேம் மாரி பண்ணிட்டு இருக்கே! லாலு மாமா ன்னாடா நெனச்சிக்கும்?" என்று சிப்பூர் பெரியம்மா வீயெம் மாமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டது.
            "பொண்ணு ஓடிப் போச்சாம் அக்கா! தெரியுமா ஒனக்கு!" என்றது சிப்பூர் பெரியம்மா.
            "ன்னாடா சொல்றே! நாங்க வந்து கேட்டதுக்கு டவுனுக்குப் பியூட்டிப் பார்லருக்குப் பொண்ணு போயிருக்கு. கார்ல செத்த நேரத்துல வந்துடும்ணு சொன்னாங்களே! எங்களுக்கும் அதிசயமாத்தாண்டா இருந்துச்சி. நாங்க பண்ணி வுடாத அலங்காரமா? டவுனுக்குக் கார்ல போயி பியூட்டி பார்லர்ல போயி பண்றாங்கன்னு. ன்னாடா இப்படிப் பண்றாங்க!" என்று தலையில் அடித்துக் கொண்டது சிப்பூர் பெரியம்மா.
            "ன்னாடி இது ஒலகத்துல நடக்காத அதிசயமா இருக்கு!" என்றபடி வாழ்க்கப்பட்டு பெரியம்மா, சிப்பூர் பெரியப்பா மற்றும் சித்தப்பா, தேன்காடு சித்தி மற்றும் சித்தப்பா, பாகூர் சித்தி மற்றும் சித்தப்பா எல்லாரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
            வீயெம் மாமாவின் வெறி நின்றபாடில்லை. சுப்பு வாத்தியார் வந்து, "நிறுத்துங்கம்பி!" என்று சொல்லியும் அதன் வேகம் குறைந்தபாடில்லை.
            "இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லியா? ஒங்களப் பத்தியும் தெரியும். இங்க இருக்குற எல்லாரப் பத்தியும் தெரியும். சங்கதிகள அவுத்து வுட்டாதாம் அடங்குவீங்க போலருக்கே!" என்று சுப்பு வாத்தியார் சொன்னதும்தான் வீயெம் மாமா அப்படியே நின்றது.
            முருகு மாமா அந்த இடத்துக்கு வந்து பேசியது. "ந்தாருங்க. நடந்தது நடந்துப் போச்சி. ராத்திரி பஞ்சாயத்து வெச்சாச்சி. எப்டியும் இன்னும் செத்த நேரத்துல பொண்ண கொண்டாந்துடுவோம். ஆளுங்கள அனுப்பிருக்கு. சின்ன வயசு. பொண்ண ஏமாத்திக் கொண்டு போயிருக்காங்க. நம்ம வூட்டுப் பொண்ணு. நாம்மதான் பாத்து பதனமா முடிவு எடுக்கணும். இழுத்தாந்து ஓடிப் போன பையனப் பிடிச்சாச்சி. அவனெ எதுத்தால இருக்குற தோப்புலதாம் கட்டிப் போட்டிருக்கோம். அவனெ அடிச்ச அடியில இப்பதாம் பொண்ண கொண்டு போயி வெச்சிருக்கிற எடத்தச் சொல்லிருக்கான். ஆளு போயாச்சி. மத்தபடி நீங்கதான் முடிவு பண்ணணும்!"
            குமரு மாமா வைத்தி தாத்தாவைக் கைத்தாங்கலாக அந்த இடத்துக்குக் கொண்டு வந்தது. வைத்தி தாத்தாவுக்கு நிற்கக் கூட திராணியில்லை. குரல் மட்டும் கம்பீரமாக வந்தது, "நம்மள மொதல்ல வூட்டுல கொண்டு போயி வுடுங்கடா! டேய் லாலு! ன்னாடா பொண்ண வளத்து வெச்சிருக்கிற நீயி! நாம்ம வந்த ஒடனே இதெல்லாம் சொல்றதுக்கு ன்னா? நாசுக்கா நிச்சயம் இல்லேன்னா கலச்சி வுட்ருக்கலாம். இப்போ ஊரு ஒலகத்த கூட்டி அசிங்கப்படற மாரி ஆச்சு. இந்தாரு நாம்ம வந்து ஒங்கிட்ட பொண்ண கொடுன்னு கேட்கல பாத்துக்க!"
            "நீங்க வந்து கேட்காம இருந்திருக்கலாம் அத்தாம்! ஒங்க மருமவன விட்டு கேட்கச் சொன்னது நீங்கதான? இன்னிக்கு எங்க வூட்டுப் பொண்ணுக்கு ஒண்ணுன்ன ஒடனே குத்திக் காட்டுறீங்களா?" என்றது முருகு மாமா.
            "எவம்டா அது! எம் பேச்சுக்கு எதிரு பேச்சு பேசறது? எங் கண்ணு முன்னாடி அம்மணாஞ்சிய நின்னப் பயலுக இப்போ பேச வந்திட்டீங்களாக்கும்! தொலச்சிப்புடுவேம் தொலச்சி. நிச்சயமும் கெடயா. ஒண்ணும் கெடயா. கெளம்புங்க எல்லாரும். எல்லாத்தியும் கெளப்பிக் கொண்டாங்கடா!" என்றது வைத்தி தாத்தா ஆவேசமாக.
            "நீங்கக் கோபப்படுறீங்க. ஆத்திரப்படறீங்க. அதுல ஒரு ஞாயம் இருக்கு. வெசயம் நம்ம குடும்பம் சந்பந்தப்பட்டது. நீங்க பெரியவங்க! கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணணும்!" என்றது பாக்குக்கோட்டை தாத்தா.
            "எல்லே எவம்டா நீயி! சாமியாரு வேஷம் போட்டுட்டு சோசியம் பாக்குறேன்னு ஊர ஏமாத்திகிட்டு. நக செய்யறேன்னு ஒறவு மொறைகள ஏமாத்திகிட்டு கெடந்த பயதான்டா நீயி! பொண்ணு ஓடிப் போனா யாரோட ஓடிப் போச்சோ அவ்வேம் கூட கட்டி வையுங்கடா. நீங்க பாட்டுக்கு கல்யாணம் கட்டி வெச்சி அத்து மறுபடியும் ஓடிப் போச்சுன்னா யாருடா ன்னா பண்றது? யோசிக்கிறானுவோ பாரு! இந்தக் கருமத்துக்குதாம் சின்ன பயலுக்கு கல்யாணமும் வேண்டா, ஒரு மண்ணும் வேணான்னு சொன்னேம். யாரு எம் பேச்சக் கேக்குறா? அப்படியே பண்ணாலும் இந்தப் பயலுகக் கூட சங்கநாத்தமே வெச்சிக்கக் கூடாது. இவனுவோ சரியில்லாதப் பயலுவோ. எல்லே! நம்ம வகையிலேந்து இந்த வகைக்கு எவனும் இனுமே பொண்ணும் எடுக்கக் கூடாது, பொண்ணும் கொடுக்கக் கூடாது. சுத்தப்பட்டு வாராது பாத்துக்கோங்க!" என்றது வைத்தி தாத்தா.
            "ஏம் தம்பிகள அப்படிலாம் சொல்லாதீங்க. அவன்களே கலங்கிப் போயி நிக்குறாம்ங்க. அவ்வேம் பொண்ணு பண்ணதுக்கு அவ்வேம் ன்னா பண்ணுவாம்?" என்றது சாமியாத்தா.
            "ந்தாரு ஒன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்தப்பவே அவனுகள பத்தி நமக்குத் தெரியும். அதாங் அவனுகள எங்க வெக்கணுமோ அங்க வெச்சிருந்தேம். இவ்ளோ காலத்துல ஒழுங்கயாயிருப்பாம்னு பாத்தா... ம்ஹூம்... நாயி வால யாரு நிமித்த முடியும்! ஏம்டா நம்மள இங்க நிக்க வெச்சு பேச வுட்டுட்டு இருக்கீங்க. மொதல்ல வூட்டுக்குக் கொண்டு போங்கடா நம்மள!" என்றது வைத்தி தாத்தா.
            வைத்தி தாத்தா பேச ஆரம்பித்ததும் ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறுவது போலிருந்தது. சுப்பு வாத்தியாரும், விகடுவும் செய்வது அறியாமல் அப்படியே நின்றிருந்தார்கள். நிச்சயத்துக்கு வந்திருந்த பள்ளிக்கூடத்து ஆசிரியர்களும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றிருந்தார்கள். அவர்களிடம் போய் லாலு மாமா சுப்பு வாத்தியாரைச் சுட்டிக் காட்டிச் சொன்னது, "இவரு நெனச்சிருந்தா பேசிச் சரிப்பண்ணலாமுங்க. அப்படியே நின்னுட்டு இருக்காரு பாருங்க. பொண்ணுக்கு நிச்சயம் ஆகுதுன்னு இழுத்துட்டுப் போனவேம் ஒண்ணும் பண்ணலேங்க. அவ்வேம் பொண்ண பாதுகாப்பா கொண்டு போயி வேற ஒரு எடத்துல வெச்சிட்டு தனியாத்தாம் இருந்திருக்காம். பிடிச்சாந்தாச்சி அவனே. பொண்ண கொண்டார வேண்டியதுதாம் பாக்கி." என்று லாலு மாமா பேசியதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
            வைத்தி தாத்தாவை கைத்தாங்கலாக அழைத்து வந்த குமரு மாமாவும் சுப்பு வாத்தியாரை நெருங்கியதும், "எல்லாம் ஒங்களால வந்தது அத்தாம்! ஒங்களுக்கு ஏம் இந்த தேவயில்லாத வேல. இப்ப அசிங்கப்பட்டு நிக்குறது யாரு? நீங்க பண்றதலாம் சரியில்லத்தாம்! இது மாரி வேலயில ல்லாம் இனுமெ தலயிடற வேல வெச்சுக்காதீங்க!" என்றது.
            நிச்சயித்தப் பெண் ஓடிப் போனதுக்கும், நிச்சயம் நிற்பதற்கும், இது எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னுடைய தலையை உருட்டுவதற்கும் தான் என்ன செய்ய முடியும் என்பது போன்ற பரிதாபகரமான தோற்றத்துக்கு சுப்பு வாத்தியாரின் முகம் மாறியிருந்தது. சுப்பு வாத்தியார் விகடுவைப் பார்த்து, "ஏலே! போயி அம்மாவையும் தங்காச்சியையும் வரச் சொல்லு. நாம் அழச்சிட்டுப் போயிட்டு இருக்கேம். நீயி இஞ்ஞ நிக்காதே. நம்ம சித்தி, பெரிம்மா வூட்டுல உள்ளவங்கள அழச்சிட்டு அப்படியே வந்து வேற்குடி பாலத்துகிட்டு நில்லு. நாம்ம அவங்களக் கொண்டு போயி விட்டுட்டு வந்துடறேம்." என்று கிளம்ப ஆயத்தமானது.
            வேற்குடி கிராம முக்கியஸ்தர்களும் அவர்களுக்குள் கூடி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். முக்கியஸ்தர்களில் ஒருவர் எல்லாரையும் பொதுவாகப் பார்த்து, "முடிவுங்றது ஒங்க ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது. அத்து எந்த முடிவுன்னாலும் அத்தெ நாங்க ஏத்துக்கிறோம். கிராமம் அதுக்கு ன்னா பண்ணணும்னு எதிர்பார்க்கிறீங்களோ அதெ நாங்க செஞ்சு வுட்டுடுறோம்!" என்றார்.
            நிச்சயத்துக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து போக ஆரம்பித்தனர்.
*****