9 Jun 2019

அதது சுழி!



செய்யு - 110
            மஞ்சள் பூசிய முகத்தோடு, தாவாங்கட்டையில் ஒரு சில முடிகளோடு கருவாடு விற்கும் சேசம்மாவுக்கு வயது எப்படியும் அறுபது இருக்கும். பார்த்தால் அறுபது என்று சொல்ல முடியாத தோற்றம் சேசம்மாவுக்கு. வயது என்னவோ நாற்பதோ, நாற்பத்தைந்தோ இருக்கலாம் எனும்படியான சுறுசுறுப்பு. சுற்றுப்பட்டு பகுதிக்கு வடவாதி முக்கியக் கடைத்தெரு. ஒரு டவுனுக்கு நிகரான அத்தனை கடைகளும் அப்போது வடவாதியில் இருந்தன. அப்படிப்பட்ட வடவாதிக்கு கருவாட்டு வியாபாரத்தின் மூலம் கிடைத்த பெருமை சேசம்மாவுக்கு உரியது. வடவாதி சேசம்மாவின் கருவாடு என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிக் கொண்டுப் போக சனங்கள் போட்டிப் போட்டது.
            வடவாதி சர்க்கரை ஆலை வடவாதியை இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கச் செய்தது. ஆலை எந்நேரமும் ஒவ்வொரு நாளும் மூன்று ஷிப்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆலைக்கு வேலைக்குப் போவோரையும், வருவோரையும் வடவாதிச் சாலையில் பார்த்துக் கொண்டிருக்கலாம். வடவாதி கடைத்தெருவில் ஒரு டீக்கடையோ, பெட்டிக்கடையோ வைத்தாலே போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல பகுதிகளில் இருந்தும் வடவாதியில் வந்து குடியேறிய மக்கள் ஏராளம். அந்த ஏராளத்தில் கருவாடு விற்கும் சேசம்மாவும் ஒருவர். பிழைப்புக்காக வந்தாலும் சேசம்மா வடவாதியில் ஒருத்தியாகி விட்டிருந்தார்.
            வடவாதிக்குக் கிழக்கே சேசம்மாவுக்கு திங்கட்கிழமக்காரி என்ற பெயர் உண்டு. வடவாதிக்கு மேற்கே வியாழக்கிழமக்காரி என்ற பெயருண்டு. வாரத்தின் திங்கள், வியாழன் தவிர்த்த ஐந்து நாட்களில் வடவாதி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் சாயுங்கால நேரத்தில் கருவாடுகளைப் பரப்பி விற்கும் சேசம்மா திங்கட் கிழமை வந்து விட்டால் வடவாதிக்குக் கிழக்கே உள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலையில் கருவாட்டுக் கூடையை வைத்துக் கொண்டு சென்றதென்றால் பத்து மைல் சுற்றளவுக்கு சுற்றி கருவாடுகளை விற்று வந்து விடும்.  இப்படித்தான் வடவாதிக்குக் கிழக்கே திங்கட்கிழமை வருவதால் திங்கட்கிழமக்காரி என்ற பெயர் சேசம்மாவுக்கு உண்டானது. அதே போல வியாழக்கிழமை என்றால் வடவாதிக்கே மேற்கே உள்ள கிராமங்களுக்கு கருவாட்டு வியாபாரத்துக்கு தெரு தெருவாக கூடையைத் தலையில் சுமந்து கொண்டு கிளம்பி விடும். இதனால் வடவாதிக்கு மேற்கே வியாழக்கிழமக்காரி என்ற பெயர் சேசம்மாவுக்கு.
            திங்கள், வியாழன் தவிர்த்து இரண்டு நாட்கள் இடைவெளியில் நாகப்பட்டிணம் போய் கருவாடுகளை நேரடியாக வாங்கிக் கொண்டு வந்து விடும் சேசம்மா. அது வாங்கி வந்த கருவாடுகள் அதிகபட்சமாக ரெண்டு நாட்கள் தங்கினால் அதிசயம். அந்த வேகத்தில் கருவாடுகள் விற்றுப் போகும். சேசம்மா வடவாதிக்கு வந்த போது அதுக்கு வயது முப்பத்தைந்தோ, நாற்பதோ இருக்கலாம். தனியாளாகத்தான் வடவாதிக்கு வந்தது சேசம்மா. இந்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகளில் இப்போதும் தனியாளாகத்தான் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுக்கு கிழக்காக கருவக்காட்டைக் கடந்து வயக்காட்டில் விழுந்து போனால் மேடான புறம்போக்குப் பகுதியில் அது குடிசைப் போட்டிருந்து. அந்தக் குடிசைதான் அதன் வீடு. அந்தப் பகுதியில் வேறு வீடுகள் எதுவும் இல்லாமல் சேசம்மாவின் குடிசை மட்டும் தனித்து இருந்தது. சேசம்மாவுக்கு கல்யாணம் ஆனதோ, பிள்ளைக் குட்டிகள் உண்டோ என்ற எந்தத் தகவலையும் அது யாருக்கும் சொன்னதில்லை. யாரேனும் இது குறித்து அக்கறையாக விசாரித்தால் கூட சேசம்மாவுக்குக் கோபம் வந்து விடும். "எப்படியோ எங்கேயிருந்தோ வந்தேம். அதுக்கென்ன இப்போ? உழச்சுதானே பொழக்கிறேம். ஒம் வூட்டுக் காசப் புடுங்கியா பொழக்கிறேம். வந்தா கருவாட்ட வாங்குனீயா? போவீயா? அது வுட்டுட்டு எங் கொலம் ன்னா? கொத்திரம் ன்னான்னுகிட்டு. இது யேவாரம் பண்ற எடம். யேவரம்னா நின்னு, நில்லு. இல்ல கெளம்பு. அதுக்கு மேலயும் வெவரம் வேணுமா? வூட்டுப் பக்கம் வா! அவுத்துப் போட்டே காட்டுறேம்!" என்று சொல்லும். அதற்கு மேல் யாருக்கும் பேச துணிவிருக்காது.
            சேசம்மாவிடம் சாயுங்கால நேரத்தில் கடைபரப்பி இருக்கும் போது கருவாடு வாங்கலாம். அல்லது தெரு தெருவாக விற்றுக் கொண்டு வரும் போது கருவாடு வாங்கலாம். வீடு தேடிப் போய் கருவாடு வாங்க முடியாது. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டும். சமயத்தில் பிய்ந்துப் போன தன் செருப்பைத் தூக்கிக் காட்டும். "ஏம்டா நாதாரி நாய்களா! ஒரு மனுஷி அலுத்துச் சலிச்சுப் போயி வூட்டுல கெடந்தா அந்த நேரத்திலயும் வந்து யேவாரம் பண்ணச் சொன்னா ன்னாடா பண்ணுவா? ஒங்களுக்கெல்லாம் நேரம் காலமே கெடயாதாடா? அதாங் சாயுங்காலம் ஆனா பஸ் ஸ்டாண்டு பக்கம் வந்து கெடக்குறேனே. அது பத்தாதுன்னு தெரு தெருவா ரெண்டு நாளிக்கு வந்து அலயுறேனோ. அது பத்தாதா? சதா நேரமும் ஒங்களுக்குக் கருவாடு வித்துட்டுக் கெடக்குணுமாடா பீத்த நாய்களா?" என்று சத்தம் போடும்.
            குடிசை அதற்கான இடம். அங்கு யாரும் சென்று விட முடியாது அது அனுமதிக்கும் ஆட்களைத் தவிர. ஒரு சில ஆண்கள் சேசம்மாவின் குடிசைக்கு சென்று வருவதாக ஊரில் பேச்சு உண்டு. அது பற்றி யாரேனும் கேட்டால், சேசம்மா கோஞ்சம் கூட யோசனைப் பண்ணாமல், "ஆமாண்டா நாயே! அவன நாம்ம வெச்சிருக்கேண்டா! வூடு தெறந்து வெச்சா நாலு சொறி நாயி, தெரு நாயி வந்துட்டுதான்டா போவும்! ரோட்டுல கெடக்குற நாயிக்கே கூடி கெடக்காமா இருக்க முடியுதாடா? நம்ம ன்னாடா பண்ணுவேம்?" என்று சொல்லும். ஊரில் சும்மா இருக்காமல் அதற்கும் கேள்வி கேட்பார்கள், "ஏம் நீ ஒருத்தன கல்யாணந்தாம் கட்டிக்கிறது?" என்று. சேசம்மா விடாது, "ம்! அது ஒண்ணுதாங் கொறச்சல்! நாம்ம நாயா பேயா நாகப்பட்டணத்துக்கு அலஞ்சி கருவாட சுமந்துட்டு காசி சம்பாதிப்பேம். கட்டிக்க வர்ற நாயி ஓசியில தின்னுபுட்டு, எங் காசிய வாங்கி அதுலயே தண்ணி போட்டுட்டு நம்மள போட்டு வெளுத்து வாங்கட்டும். எல்லாம் பாத்தாச்சிங்கடா போக்கத்தப் பயலுகளா! வூட்டுக்கு வர்றதா இருந்தா கொஞ்ச நஞ்ச காசியயில்ல, கேட்குற காசிய கொடுக்குறதா இருந்தாத்தாம் உள்ள வர்ற முடியும். இல்லே செருப்பு பிய்ஞ்சிப் போயிடும்!" என்று சொல்லும். மற்றபடி சேசம்மா கருவாட்டு வியாபாரத்தில் கெட்டி. இப்படி ஒரு சில விசயங்களில் அட்டாதுட்டியாகப் பேசுவதைத் தவிர்த்து சேசம்மாவைப் போல மரியாதையாகப் பேசும், பணிந்தும் நயந்தும் நடந்து கொள்ளும் ஆளை வடவாதியில் பார்க்க முடியாது. அது விற்கும் கருவாடும் ஏக்கிளாஸாக இருப்பதாக ஊரில் பேசிக் கொள்வார்கள். சேசம்மாவிடம் கருவாடு வாங்கியவர்களுக்கு பிறகு யாரிடம் வாங்கினாலும் அந்தத் திருப்தி வராது. அந்த அளவுக்கு கருவாடுகளைப் பார்த்துப் பார்த்து நாகப்பட்டிணத்திலிருந்த கொள்முதல் பண்ணிக் கொண்டு வரும். அது சேசம்மாவுக்கே உரிய வியாபார ராசி என்று ஊர் பேசியது.
            வடவாதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேசம்மா குறுக்கே வராத தெரு என்று எது இருக்கிறது? அதனால் வடவாதியைப் பற்றி எழுதும் போது சேசம்மாவை விட்டு விட்டு எப்படி எழுத முடியும்? அத்தோடு சமீப நாட்களாக வீயெம் மாமாவை சேசம்மாவின் வீட்டுப் பக்கம் பார்க்க முடிவதாக ஊருக்குள் பேச்சு எழ ஆரம்பித்தது. வைத்தி தாத்தாவோ, குமரு மாமாவே அந்தப் பேச்சுகளைப் பொருட்படுத்தவில்லை. அவர்களிடம் கேட்டதுக்கு, "அதது சுழிக்கு அதது போய்ட்டு இருக்கு!" என்பதாக பதில் சொன்னதாக பேச்சு உலவியது.
            சுப்பு வாத்தியாரால் அப்படி இருக்க முடியவில்லை. வீயெம் மாமாவை இலைமறைக் காயாக விசாரித்த போது, "என்னத்தாம் பேசுறீங்க? கெழவிட்ட எவனாது போவானா? அதுங் கருவாட்டுக் கெழவி! எவனோ கத கட்டி வுட்டா அத நம்பி நம்மள கேட்பீங்களா? அங்கலாம் போனா நம்ம குடும்ப கெளரவம் என்னாறது? ஒங்க கெளவரந்தான் என்னாவுறது?" என்றது.
            இதற்கு மேல் விசாரிப்பதற்கு கடைசி ஆள் சேசம்மாதான். சேசம்மாவை விசாரித்து அது கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தால் மானம் போய் விடும் என்ற பயம் சுப்பு வாத்தியாருக்கு இருந்தது. இதில் உண்மை தெரியாமல் என்ன செய்வது என்ற யோசனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வதந்தி வெறும் வதந்தியாக இருந்து விட்டால் எவ்வளவோ நல்லது. ஒருவேளை அது உண்மையாக இருந்து விட்டால்.. அதெல்லாம் தன்னால் நேர்ந்ததோ என்ற சந்தேகம் வேறு அவரைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அதாவது, ஒருவேளை நிச்சயம் ஒழுங்காக முடிந்து வீயெம் மாமாவுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால் இப்படி ஒரு நிலைமை உண்டாகியிருக்குமா என்று அவர் தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். அல்லது நிச்சயம் முறிந்து போனவுடன் உடனுக்குடன் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்திருந்தால் கூட இப்படி ஆகியிருக்காது என்றும் அவருக்குத் தோன்றியது. ஆனால் அதுதான் அவ்வளவு எளிதா என்ன? பெண்ணையும் கொடுத்து, நகை, சீர் சனத்திகளையும் செய்து எல்லா செலவுகளையும் பண்ணி விட்டால் அதற்கு வைத்தி தாத்தாவும், குமரு மாமாவும் ஒத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு சம்பந்தத்தை அவ்வளவு விரைவில் பிடிப்பதுதான் சாமான்யமானதா என்ன? அப்படியே கொண்டு போனாலும், "ஏற்கனவே ஒரு பொண்ண பாத்து எல்லாம் ஒழுங்கா முடிச்சாச்சி. இதுல ஒடனே அடுத்த பொண்ணா?" என்ற வைத்தி தாத்தாவோ, குமரு மாமாவோ கேள்வி கேட்காமல் அதை அத்தோடு விட்டு விடுவார்களா என்ன?
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...