செய்யு - 111
ஒகையூர் வயலைப் பார்ப்பதற்காக வடவாதி பஸ்
ஸ்டேண்டைக் கடந்து டிவியெஸ் பிப்டியில் போய்க் கொண்டிருந்தார் சுப்பு வாத்தியார்.
வீட்டு வேலை நின்று கிடப்பது ஒரு வருத்தமாக இருந்தாலும், வயலைப் போய் பார்ப்பது அவருக்குக்
கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். மனிதனுக்கு கஷ்ட, நஷ்டம் வருகிறது என்பதற்காகத்தான்
ஆண்டவன் ஆடு, மாடு, வயல்களைப் படைத்ததாக அவரது கருத்து. எப்போது கஷ்டம் வந்தாலும்
வீட்டில் வளர்க்கின்ற ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொண்டு வயலைப் பார்த்து விட்டு வந்தால்
கஷ்டமெல்லாம் போய் விடும் என்பது அவரது நம்பிக்கை.
"என்ன வாத்தியாரே! இந்தப் பக்கமே
பாக்கிறதில்லே!" என்ற சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தினார். அந்தச் சத்தம் சேசம்மாவிடமிருந்து
வந்தது. வண்டியை நிறுத்துவோமா? நிறுத்தாமல் போய் விடுவோமா? என்ற குழப்பத்தில் வண்டியை
நிறுத்தி பின் இயக்கி பின் நிறுத்தினார் வாத்தியார். சேசம்மா கருவாட்டு வியாபாரத்தைப்
போட்டு விட்டு ஓடி வந்தது.
"என்ன வாத்தியாரே! வண்டியை நிறுத்துறீங்க!
அப்பொறம் போறீங்க! கருவாட்டுக்காரிக்கிட்டல்லாம் என்ன பேச்சுன்னு நினைக்குறீங்க போலருக்கு!"
என்றது சேசம்மா.
சுப்பு வாத்தியார் சமாளிக்க வேண்டிய நிலை,
"யாரோ கூப்புட்ட மாரியும் இருந்தது. கூப்புடாத மாரியும் இருந்தது. அதாங்!"
என்றார் சுப்பு வாத்தியார்.
"நமக்குத் தெரியும் வாத்தியாரே! பரவால்ல.
நீங்களாவும் வந்து கேட்க மாட்டீங்க! அதுவும் நமக்குத் தெரியும். ஒங்க மச்சினன் வீயெம்மு
இருக்குல்ல. சீக்கிரம் ஒரு பொண்ணப் பாத்து கட்டி வெச்சிடுங்க. நீங்க செஞ்சதெல்லாம்
தெரியும். ன்னா பண்றது? அது நேரம். அப்புடி இருக்குது. அந்த மாரில்லாம் நடந்தா யாரா
இருந்தாலும் மனசு ஒடஞ்சிப் போயிடும்!"
"நீங்க சொல்றது சரிதாங்! இப்போ
கல்யாணம் பண்ணி வெக்கிற மாரியா அது நடந்துகிட்டு இருக்குது?"
"ஏண்டி நீ இப்படிப் பண்ணிட்டு, அவனுக்குக்
கல்யாணம் பண்ணி வெக்க சொல்றீயாடின்னு நேரடியா கேக்க வேண்டித்தானே, வாத்தியாரே!"
"நமக்கு நேரடியாலாம் எதும் தெரியாது.
எல்லாம் சொல் கேள்விங்கத்தாம்!"
"வேற யார்ட்டேயும் வுட்டா புள்ள வீணாப்
போயிடுவாம். தப்புதாம். சரின்னு சொல்ல முடியாது. ஆனா வாத்தியாரே! நாம்ம கண்ட கண்டவங்கிட்டேல்லாம்
பழகுற ஆளு கெடயாது. ன்னமோ ஒரு நாளு வூட்டுக்கு வந்துச்சு. ஒரே அழுகாச்சி. எப்பூடி
இருக்கும் சொல்லுங்க? வூட்டுல கல்யாணம் கட்டி வெக்க மாட்டேங்றாங்களாம். நீங்க பொண்ணு
பாத்தாலும் அமய மாட்டேங்குதாம். நாம்ம அன்னிக்கு வுட்டுருந்தாலும் ஒங்க மச்சினன் எங்காவது
போவத்தாம் செய்யும். அதாங் நம்ம பிடிக்குள்ள வெச்சி திருத்திப்புடலாம்னு தோணுச்சி.
வேற வழியில்ல பாத்துக்குங்க. சிலதுல அப்புடித்தான் போவணும். ஒங்களுக்கு இது ஒத்து
வராதுன்னு தெரியும். ஒங்களால இத ஏத்துக்க முடியாதுன்னு தெரியும். பேசிட்டு இருக்குறப்ப
ஒங்களுக்கு தாங்க முடியாத கோவம் வரும்ணும் தெரியும். நம்மாள வாத்தியாரே எந்தப் பெரச்சனையும்
இருக்காது. இது மாரி வேற யாரப் பத்தியும் நாம்ம இது வரிக்கும் நெனச்சுக் கவலப்பட்டதில்ல.
என்னமோ இது நல்லா இருக்கணும்னு தோணுது. எதாவது பாத்துப் பண்ணுங்க. நம்மகிட்ட வந்ததுல
இது மாரி எளந்தாரி செட்டுங்க எதுவும் கெடயாது. இதுதாம் மொதலு பாருங்க!"
"நாம்ம பண்றது இருக்கட்டும்! இனுமே
அந்தப் பக்கம் வந்தா... வராதேன்னு ஒங்களால சொல்ல முடியுமா? இல்லே அப்படி வாராமத்தான்
அந்தம்பியால இருக்க முடியுமா?"
"செரியான எடம் பாத்துப் புடிச்சீங்க
பாத்தீங்களா! செய்யுறேம். ஆனா இப்போ இல்லே. நேரம் பாத்துச் செய்வேம். நம்மாள யாரும்
கெட்டதில்ல வாத்தியாரே. மீனு செத்தாலும் சேசம்மாகிட்ட வந்தா கருவாடா வித்து காசாயிடும்.
மனுஷன் கெட்டாலும் சேசம்மாகிட்ட வந்தா உருப்படியாக்கி விட்டுடுவேம். யாரயும் கெடுத்ததில்ல.
பொண்டாட்டிப் புள்ளியோட இருக்குறவங்களோடெல்லாம் நமக்குப் பழக்கம் கெடயாது. ஆனா,
பாக்க கெடுக்குற மாரித்தாம் அப்படித்தாம் தெரியும். யாரயும் ரொம்ப காலத்துக்குப் பழக்கம்
வெச்சிக்க மாட்டேம். சரி பண்ணி அனுப்பிடுவேம்!
கெட்டுப் போற நாயி எங்கே போனாலும் கெட்டுப் போயிடும். ஊருல சேசம்மான்னு ஒருத்தி
இருக்குறதாலதாம் இந்த நாயிங்க கெட்டுப் போறதா நெனச்சுக்காதீங்க. ஒங்களுக்கே தெரியும்
சேசம்மான்னா எப்புடின்னு. கண்ட கண்ட நாயெல்லாம் கிட்ட வந்துட முடியாது. நாமளா பாத்து
வுட்டத்தாம், நாயிங்க கிட்ட வரதும், எட்டப் போறதும்."
"எப்படியோ ஒங்க புண்ணியத்துல வழிக்கு
வந்தா செரித்தாம்!"
"ச்சும்மா புண்ணியம் அது இதுன்னு
பேசி நக்கல் பண்ண வாண்டாம் வாத்தியாரே! வழிக்கு வராம எங்கப் போறது? வழிக்கு வரலன்னா
இதே பஸ் ஸ்டேண்டுல நிப்பாட்டிச் செருப்பக் கழட்டி அடிப்பேம்! வயசு அப்படி! காலா காலத்துல
கல்யாணம் முடிஞ்சிருந்தா இப்படிலாம் ஆயிருக்குமா? செரி அத வுடுங்க. அது நம்ம பெரச்சன.
நாம்ம சரி பண்ணி வுட்டுடுவேம். நீங்க நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க.
எல்லாம் சரியா போயிடும் பாத்துக்குங்க! செரி நீங்க அவசரமா எங்கோ போயிட்டு இருந்தீங்க.
ஒங்கள நிப்பாட்டி ரொம்ப நேரம் பேசிட்டேம். பாருங்க நம்ம யேவாரம் அப்டியே கெடக்குது!
ஒங்கள மாரியா மாசம் வந்தா காசி வரதுக்கு? அன்னனிக்கு யேவாரத்தப் பாத்துதான காசி. கெளம்புங்க.
கெளம்புங்க." என்றது சேசம்மா.
சுப்பு வாத்தியார் வண்டியைக் கிளப்பிக்
கொண்டு ஓகையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். வீயெம் மாமாவுக்கு குயிலியைப்
பேசுவதற்கு முன்னே அவர் கருக்கங்குடியில் ஒரு பெண்ணையும், பூந்தாழங்குடியில் ஒரு பெண்ணையும்
வீயெம்முக்காக விசாரித்து வைத்திருந்தார் அவர்.
கருக்கங்குடியில் பார்த்திருந்த பெண்ணை
கருப்பாகவும், குண்டாகவும் இருப்பதாகப் போட்டாவை மட்டும் பார்த்தே நிராகரித்தது வீயெம்
மாமா. சுப்பு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இருந்தது. வீயெம் மாமா அப்படியொன்றும் நிறம்
கிடையாது. அதுவே சற்றேறக்குறைய கருப்பு என்று அந்த அளவுக்குத் தெரியாத கருப்புதான்.
வீயெம் மாமா சொன்னபடி அந்தப் பெண்ணும் அந்த அளவுக்குக் குண்டு கிடையாது. சற்றே பூசினாற்
போன்ற உடம்பு. அதை சுப்பு வாத்தியார் எடுத்துச் சொன்ன போது, "இப்பவே இன்ன கதிக்கு
இருக்குன்னா... கல்யாணம் ஆனப் பெறவு என்ன கதிக்குப் போகும்னு பாத்துக்குங்க அத்தாம்!
இது நமக்குச் சரிபெட்டு வராது!" என்று சொல்லி விட்டது வீயெம் மாமா. அதற்கு மேல்
சுப்பு வாத்தியாருக்கு வீயெம்மை வலியுறுத்த முடியாமல் போய் விட்டது. அந்தச் சம்பந்தம்
முடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது சுப்பு வாத்தியாரின் நினைப்பு. பெண்
வீட்டில் சுமாரான வசதிதான் என்றாலும் அவ்வளவு நல்ல குடும்பத்திலிருந்து அப்படி ஒரு
பெண் கிடைப்பது அபூர்வம் என்றும் நினைத்தார் சுப்பு வாத்தியார். அந்த அபூர்வம் நிகழாமல்
போய் விட்டது.
பூந்தாழங்குடியில் பார்த்தப் பெண் வீயெம்
சொன்ன அத்தனை லட்சணங்கள் பொருந்தியதாகவும் இருந்தது. ஆனாலும் வீயெம்முக்குப் பிடிக்கவில்லை.
குடும்பத்தில் அந்த பெண் மூத்தப் பெண்ணாக இருந்தது. அந்தப் பெண்ணுக்குப் பிறகு இரண்டு
பெண்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தன. தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு அந்த
வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போனால் மற்ற ரெண்டு பெண்களைக் கட்டிக் கொடுக்க வேண்டிய
பொறுப்பு தன் தலையில் விழுந்து விடும் என்று சொல்லி அந்தச் சம்பந்தத்தையும் தட்டிக்
கழித்தது வீயெம் மாமா. இதிலும் சுப்பு வாத்தியாருக்குத் தாங்க முடியாத எரிச்சல். அவர்
நேரடியாகவே வீயெம்மைக் கேட்டார், "ஏம்பி இவ்ளோ கணக்குப் பாக்குறீங்களே! ஒங்க
அக்காக்களையெல்லாம் இது மாரி யாராது பாத்திருந்தா ஒருத்தருக்காவது கல்யாணம் ஆகியிருக்குமா?
அதுவுங் வாழ்க்கப்பட்டுக்காரர் ஒங்க அக்காவக் கல்யாணம் பண்ணப்ப அஞ்சு பொண்ணுங்க. அப்போ
நீங்கலாம் டவுசர் போட்டுட்டு திரிஞ்சீங்க!"
"அதல்லாம் ஒரு காலம் அத்தாம்! ஏதோ
பொண்ண கொடுத்தாப் போதும்னு கல்யாணம் பண்ணிட்டுப் போன காலம்! இப்போலாம் அப்படியா?
ஏதோ அந்த காலங்கறதால நீங்கப் பண்ணீங்க! இந்தக் காலத்துலன்னா நீங்க பண்ணுவீங்களா?"
என்றது வீயெம்.
"அப்பிடிலாம் பேசாதீங்கம்பி! நாங்க
ன்னா நூறு வருஷத்துக்கு முன்னாடியா கல்யாணம் பண்ணுனோம்? இதுவும் ஒங்க காலம்தான். அப்போறம்,
எல்லா காலத்திலயும் அது கஷ்டந்தாம். எங்களுக்கு குடும்பம் நல்ல குடும்பமா, பொண்ணு
குணமா இருந்தா போதும்னு தொணிச்சி. அவ்வளவுதாம்."
"ஒங்கக் காலத்துக் கதயெல்லாம் இப்போ
பேசாதீங்கத்தாம்! காலம் எவ்ளோ மாறிட்டுப் போகுது. இந்த நிமிஷங்றது ஒரு காலம். அடுத்த
நிமிஷங்றதே வேற காலம்தான் பாத்துக்கோங்க. இந்தக் காலத்துல போயி மூணு பொண்ண பெத்து
வெச்சிருக்கானுவோளே! அறிவிருக்கா முட்டாப் பயலுங்க! அந்த வூட்டுல போயி பொண்ணு பாத்துட்டு
வந்து இவ்ளோ பிலாக்கணம் பாடுறீங்களே அத்தாம்!" என்று சொன்னதும் சுப்பு வாத்தியாருக்கு
வருத்தமாகப் போய் விட்டது.
ஒருவேளை பெண் பார்க்க அழைத்துப் போயிருந்தால்
வீயெம் மனது மாறியிருக்குமா என்று கூட சுப்பு வாத்தியார் யோசித்துப் பார்த்திருக்கிறார்.
ஆனால் வேண்டாம் இந்த சம்பந்தம் என்று கட்டிக் கொள்ளப் போகிற வீயெம்மே சொன்ன பிறகு
மேற்கொண்டு அதில் என்ன முயற்சி செய்ய முடியும் என்று அப்போது தேடி வந்த அந்த சம்பந்தங்களை
அப்படியே விட்டு விட்டார் சுப்பு வாத்தியார்.
பின்னர் லாலு மாமாவின் மகள் குயிலியைப்
பேசி அது நடந்து முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நிச்சயத்தின் போது
ஓடிய குயிலியின் திருமணமும், நல்ல குடும்பத்திலிருந்து வந்த இரண்டு சம்பந்தங்களை விட்ட
வீயெம்மின் திருமணமும் பிற்காலத்தில் நடந்த போது வேடிக்கையாகத்தான் இருந்தன.
*****
No comments:
Post a Comment