எதிர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை வளர்ப்பதில்
இந்தச் சமூகம் காட்டுவதில்லை. எதிர்ப்பதில் ஒரு கிளர்ச்சி இருக்கிறது. வளர்ப்பதில்
என்ன கிளர்ச்சி இருக்கிறது?
அப்படி என்ன வளரவில்லை என்று கேட்டால்
அதுவும் சரிதான். இந்த அளவுக்கு வளர்ந்ததே போதுமென்று கூட இந்தச் சமூகம் இருந்திருக்கலாம்.
இந்த வருடம் பொதுத்தேர்வு முடிவுகளை எடுத்துப்
பாருங்கள். தமிழில் தேக்கமடைந்தவர்களின் விழுக்காடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. காலப்
போக்கில் தமிழ் படிப்பது கடினமாகி அந்தப் பாடத்தையே எடுத்து விடுங்கள் என்று கூட இந்தத்
தமிழ்ச் சமூகம் கூப்பாடு போடலாம்.
பெரிய எதிர்ப்புகள் ஏதுமில்லாமல் ஆங்கில
வழிக் கல்வி அரசுப் பள்ளிகள் வரை வந்த போது இந்தச் சமூகம் பெரிதாக எதிர்ப்பு எதையும்
காட்டவில்லை. ரொம்ப ஆர்வமாகவே பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்தார்கள். அந்த அளவுக்கு
வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் முன்னிறுத்தி பிறமொழி வழிக்கல்வி இங்கு பேசப்படுகிறது.
வேலைவாய்ப்பையோ, பொருளாதாரத்தையோ உருவாக்க முடியாத அளவுக்கு தமிழ்நாடு அவ்வளவா வறண்டு
கிடக்கிறது?
தமிழ்நாட்டின் வளம் தமிழ்நாட்டுக்குப்
போதுமானதுதான். அதை முறைப்படுத்துவதிலும், ஒழுங்குப்படுத்துதிலும் ஓர் அக்கறையின்மை
காணப்படுகிறது. இந்த முறையின்மை, ஒழுங்கின்மை, அக்கறையின்மைதான் நம் சமூகத்தின் பிரச்சனை.
சாதிகளாய்ப் பிரிந்து கொண்டு அடித்துக்
கொள்வதில் காட்டும் அக்கறை ஒன்றுபட்டு உயர வேண்டும் எனும் போது எப்படி அக்கறையின்மையாக
ஆகி விடுகிறது என்பது ஓர் ஆச்சரியம்தான்.
இந்தத் தமிழ்நாட்டில்தானே என்னென்னமோ
மொழி பேசுகிறவர்கள் வந்துப் பிழைக்கிறார்கள், வேலை பார்க்கிறார்கள். தமிழைப் பேசிக்
கொண்டு தமிழர்கள் பர்மாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சென்று பிழைக்கவில்லையா?
பிழைப்புவாதத்துக்கும், வேலை பார்த்து சம்பாதிப்பதற்கான வாதத்துக்கும் அடிப்படை சாமர்த்தியம்தான்.
பிறமொழியால் அந்தச் சமார்த்தியத்தைப் பெறுவதை விட தாய்மொழியின் மூலம் அந்தச் சாமர்த்தியத்தை
எளிதாகப் பெற்று விட முடியும். உலகெங்கும் உள்ள சாமர்த்தியசாலிகளைக் கணக்கெடுத்துப்
பார்த்தால் அவர்களின் சிந்தனை தாய்மொழி வழியே இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு தாய்மொழி மூலமாக தேவைக்கேற்ப
இன்னொரு மொழியை இணைத்துக் கொண்டிருப்பார்களே தவிர, பிறமொழிக்கு ஏற்ப தாய்மொழியைப்
புறந்தள்ளியிருக்க மாட்டார்கள்.
இந்தச் சமூகம் தாய்மொழியிலும் தெளிவில்லாமல்,
வேலை வாய்ப்புக்காக கற்பதாகச் சொல்லும் பிறமொழியிலும் முழுமையில்லாமல் அரைவேக்காட்டான
நிலையில் தவிக்கிறது. இந்த அரைவேக்காட்டான நிலையோடு அது சிந்தித்துச் சொல்வதைத்தான்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தமிழ்மொழியின் அருமை புரியாது, அதை வளர்த்தெடுக்காமல்
பிறமொழி மீது காட்டும் இச்சமூகத்தின் எதிர்ப்பு என்பது மிகவும் பலவீனமானதுதான். பலமாகப்
புகுத்தினால் நீட் தேர்வைப் போன்று அது இச்சமூகத்தில் வேரூன்றி விடும். அதே நேரத்தில்
தன் தாய் மொழியின் அருமை அறிந்து, அதை வளர்த்தெடுத்து அதன் வாயிலாக பிறமொழித் திணிப்பை
எதிர்க்கும் சமூகத்தில்தான் தாய்மொழி காக்கப்படும். அதன் வளமான சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படும்.
*****
No comments:
Post a Comment