8 Jun 2019

உறவுகளின் சுவை



செய்யு - 109
            கரும்பு இனிக்கிறது. பாகற்காய் கசக்கிறது. ரெண்டுமே அதனதன் தன்மைகளில் இருக்கின்றன. உறவுகளோடு ஒப்பிடும் போதூன் கரும்பு இனியது, பாகற்காயும் இனியது என்பது புலப்படும். உறவுகள் எப்போது எந்தத் தன்மையில் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. இனிக்கின்ற உறவுகள் இனிப்பாகவே இருந்து விடுவதோ, கசக்கின்ற உறவுகள் கசப்பாகவோ நீடித்து விடுவதில்லை. மாறி மாறி அவை சுவை கொள்கின்றன. இனிப்பு கசப்பாவதும், கசப்பு இனிப்பாவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கின்றன. அதாவது கரும்பு பாகற்காய் ஆவதும், பாகற்காய் கரும்பாவது போலவும்.
            எவ்வளவுதான் இனிமையாகப் பழகினாலும், இனிமையாகப் பேசினாலும், மென்மையாக நடந்து கொண்டாலும் எப்படியோ பழக்க வழக்கத்தில் ஒரு கசப்பு பீடித்துக் கொள்கிறது. எவ்வளவுதான் பக்குவமாக இருக்கப் பார்த்தாலும் உறவுகளில் எப்படியோ ஒரு மனக்கசப்பு வந்து விடத்தான் செய்கிறது. அதற்குப் பெரிதான காரணங்கள் எதுவும் தேவை என்பதில்லை. அல்பத்தனமான காரணங்களே போதுமானதாக உள்ளது. முக்கியமான காரணங்கள் புறந்தள்ளப்பட்டு அந்த அல்பதனமான காரணங்கள் பிரதானமாகி விடுகின்றன.
            லாலு மாமாவுக்கு தன் மகள் ஓடிப் போனதை விட, அந்த நிலையில் சுப்பு வாத்தியார்  நிச்சயத்தை நடத்தித் தராமல் போனது அவர் மனதில் பெரும் மனக்கசப்பை விதைத்திருந்தது.
            யாருக்கும் நிச்சயத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்ப்பில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்ட பின் இதையெல்லாம் சரியாக விசாரிக்காமல் சுப்பு வாத்தியார் எப்படிக் காரியத்தில் இறங்கினார் என்பது பேச்சாகப் போய் விட்டது. இந்த விவகாரத்தில் தன் தலை இப்படி உருள்வதை நினைத்து சுப்பு வாத்தியாருக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது.
            விசாரிக்கப் போன ஆரம்பத்திலிருந்த நிலைமையிலிருந்து அதில் உண்டான தடைகள் அதிகபட்சம்தான்.  சரியில்லாமல் போய் முடிவில் இவ்வளவு மோசமான ஒரு முடிவுக்கு அது வரும் என்று அவர் மட்டும்தான் எப்படி கணித்திருக்க முடியும்?
            இப்படியெல்லாம் நிகழும் என்பதைக் கணித்து அதற்கேற்றபடி உஷாராக இருந்திருக்க வேண்டும் என்று குமரு மாமா கருதியது. அதைக் கணிக்கத் தவறி விட்டதாக குமரு மாமாவுக்கு சுப்பு வாத்தியாரின் மேல் கோபம் இருந்தது.
            உறவுகளோடு இணக்கமாக இருப்பது என்பது ஒரு மாபெரும் கலை. இணக்கமாக இருக்க முடியாத நிலையிலும் அதைச் சகித்துக் கொண்டு இணக்கமாக இருந்தாக வேண்டும். உறவுகளில் ஒரு நல்ல செயலை முன்னெடுக்க நினைப்பவர்களுக்கு நினைத்தபடி நிகழ்ந்து விட்டால் நல்ல பெயரும், புகழும் உண்டாகி விடும். மாறாக மாறி நடந்து விட்டால் அதற்கு உண்டான அத்தனைக் கெட்டப் பெயர்களையும் சுமக்க வேண்டியதாகி விடும். வேறு எவ்வளவோ சம்பவங்கள் ஒரு நிகழ்வுக்குக் காரணமாக இருந்தாலும், அந்த நிகழ்வு துவங்கக் காரணமாக இருந்தவர் அந்த நிகழ்வின் ஒட்டுமொத்த பின்விளைவுக்கும் பொறுப்பேற்றாக வேண்டியதாகி விடும். உறவுகளில் மனித மனங்கள் அப்படித்தான் சிந்திக்கின்றன. அவர் மட்டும் அந்தச் செயலை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ஏன் இப்படி நடக்கப் போகிறது? என்று வெகு எளிதாகச் சிந்தித்து விடுவார்கள். அதுவே ஆதாயமாக நடந்து விட்டால் அந்த ஆதாயத்துக்கான அவர்களின் பங்கை அதிகமாகவே பங்கிட்டுக் கொள்வார்கள்.
            மனதில் எண்ணி நடக்கின்ற எல்லா காரியங்களும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செய்யப்படுகின்றன. சுப்பு வாத்தியாரைப் பொருத்த வரையில் யோசித்து யோசித்தே நீண்ட காலத்தைக் கடத்தி விடுவார். அப்படி நீண்ட காலத்தைக் கடத்தியும் பிறழ்ந்து போன நிகழ்வாக வீயெம் மாமாவின் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது. பிள்ளைகள் மேல் கொண்ட அவரது நம்பிக்கை அப்படிப்பட்டது. பிள்ளைகள் தவறு செய்வார்கள் என்பதை அவரால் நம்ப முடியாததாக இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அவர் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் குறித்து விசாரிப்பதிலும், அதில் கவனத்தில் கொள்வதிலும் அவரைப் பின்தங்கச் செய்தது.
            பொதுவானப் புத்தியில், நிகழ்ந்து விடுகின்ற ஒரு நிகழ்வுக்கு ஆளாளுக்கு ஒரு கற்பிதத்தைச் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நிகழ்ந்து விட்ட ஓர் அசாதாரண நிகழ்வுக்கு சமாதானம் தேவை. சரியாகச் சொல்வதென்றால், தன்னால் சரியாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட செயல், இன்னொருவரால் கெட்டு விட்டது என்பதற்கேற்ப ஒரு காரணம் தேவைப்படுகிறது. நிகழ்ந்து விட்ட ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்வது எல்லா மனதுக்கும் எந்தக் காலத்தில் சாத்தியமாகும் சொல்லுங்கள்? ஒவ்வொரு மனதும் அதற்கே உரிய தன்மையில் அதை விமர்ச்சிக்கிறது. அப்படிப் பலரின் விமர்சனங்களை சுப்பு வாத்தியார் எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. எல்லாருக்கும் கோபப்பட வசதியானவராகவும் சுப்பு வாத்தியார் அமைந்துப் போனார். அதற்கும் அவர் பொருத்தமானவர். எவர் கோபப்பட்டாலும் அதற்கெதிராக கோபப்பட முடியாத ஓர் இயலாமையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
            வீயெம் மாமாவின் திருமணத்தை முடித்து விடுவதற்காகத் தூண்டில் போட்டுதான் குமரு மாமா சுப்பு வாத்தியாரின் புது வீடு கட்டும் யோசனையைத் தூண்டி விட்டு அது அஸ்திவாரத்துக்கு மேலே வளர்ந்திருந்தது. வீயெம் மாமாவின் நிச்சயம் இப்படி முடிந்துப் போனதில் வீடு கட்டும் வேலையிலிருந்து அது முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டது. அது செய்து வைத்திருந்த தாய்நிலை மட்டும் அது வேலை செய்ததன் சாட்சிமாய் சுப்பு வாத்தியாரின் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் நின்று கொண்டிருந்தது.
            வீடு லிண்டல் மட்டம் வரை வளர்ந்து விட்டால் சைன் சைடு சென்ட்ரிங் அடிப்பது, லாப்டுக்கான சென்ட்ரிங் அடிப்பது போன்ற பணிகளையும் குமரு மாமாதான் செய்தாக வேண்டும். கொஞ்ச நாள் ஆறப் போட்டுப் பார்த்தால் நிலைமை சரியாகிவிடும் என்று சுப்பு வாத்தியார் எதிர்பார்த்திருந்தது. குமரு மாமா வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்காததால் குமரு மாமாவைத் தேடிக் கொண்டு பட்டறையில் சுப்பு வாத்தியார் பார்த்தது.
            "இனுமே இந்தப் பக்கம் தலைவெச்சுப் படுக்காதீங்க அத்தாம்! எல்லாத்தையும் தெரிஞ்சி வெச்சிகிட்டு எதையும் எங்களுக்குச் சொல்லாம எங்க தலையில கட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணிருந்தீங்கல்ல!" என்றது குமரு மாமா.
            தனக்கு எந்த விசயமும் முன்கூட்டியே தெரியாது என்பதை எவ்வளவோ சுப்பு வாத்தியார் மறுத்துப் பார்த்தது. குமரு மாமா நம்பத் தயாராக இல்லை. "இதல்லாம் நீங்க லாலு மாமாவோட சேந்து போட்டத் திட்டம்! நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டீங்களா?" என்றது. அதற்கு மேல் குமரு மாமாவோடு பேசி எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது புரிந்துப் போனது சுப்பு வாத்தியாருக்கு.
            வீடு கட்டுவதற்கான வேலைகளை யாரைக் கொண்டு தொடர்ந்து செய்வது என்ற குழப்பம் சுப்பு வாத்தியாரைக் கவ்வியது. எங்கே மணல் வாங்க வேண்டும், எங்கே செங்கற்களை வாங்க வேண்டும், எங்கே கம்பிகளை வாங்க வேண்டும், எங்கே சிமெண்ட் வாங்க வேண்டும், எங்கே மரம் எடுக்க வேண்டும் என்று பலவற்றில் குமரு மாமாதான் ஆள் பிடித்து விட்டது, கடை பார்த்து விட்டது எல்லாம். குமரு மாமாவுக்காக விலையில் சல்லிசு காட்டும் கடைக்காரர்கள் தன்னிடமும் அவ்வா‍று சல்லிசு காட்டுவார்களா என்ற யோசனையும் சுப்பு வாத்தியாருக்கு இருந்தது. இவ்வளவு பொறுப்புகளையும் சுமந்து வீட்டைக் கட்டி முடிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஒவ்வொரு நாள் இரவும் அவரைப் புரண்டு புரண்டு படுக்க வைத்தது. பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டைக் கட்டி முடிப்பது போலல்லாமல் பணத்தைக் கையில் புரட்டுவதற்கு ஏற்ப வீட்டைக் கட்டுவதான இக்கட்டில் அவர் நன்றாகச் சிக்கியிருந்தார். மிகச் சரியாகச் சொல்வதென்றால், சரிந்து விழும் ஒரு சீட்டு ஒட்டுமொத்த சீட்டுகளையும் சரித்து விடுவது போல, நிகழ்ந்து விட்ட ஒரு நிகழ்வு அடுத்தடுத்த பல்வேறு நிகழ்வுகளைச் சரித்து விட்டது போலாகி விட்டது அவரது நிலை. பின்னாட்களில் இந்த நிகழ்வு பற்றி யோசித்தப் பார்த்த போது, இந்த நிகழ்வைச் சாக்காக வைத்து குமரு மாமா எவ்வளவு அழகாக கழன்று கொண்டு விட்டது என்ற கோணத்தை சுப்பு வாத்தியாரால் யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது பட்டறை ஆரம்பித்த நேரம் வேலைகள் அந்த அளவுக்கு வந்த வண்ணம் இருந்தன. இரவு பகல் பாராமல் எந்நேரமும் பட்டறையில் கிடக்க வேண்டியதாக இருந்தது குமரு மாமாவுக்கு. பட்டறையில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருந்தது. தவிர பட்டறையில் வேலை பார்க்க வந்து போகும் ஆட்களால் புதுப்புது வேலைகளும் கிடைத்துக் கொண்டிருந்தன.
            மேற்கொண்டு சில முறைகள் கேட்டுப் பார்த்தால் குமரு மாமாவின் மனநிலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்த்து அப்படியும் சுப்பு வாத்தியார் செய்து பார்த்ததற்கும் எந்தப் பலனும் இல்லாமல் போனது. காணாத விரோதியைக் கண்டது போல குமரு மாமா சுப்பு வாத்தியாரைப் பார்க்க ஆரம்பித்தது. சுப்பு வாத்தியாருக்கு சென்ட்ரிங் அடிப்பதற்கும், கதவு போடுவதற்கும் புது ஆசாரியைத் தேட வேண்டிய நிலையாகி விட்டது. ஒரு கதவு மூடினால் ஒரு ஜன்னல் திறக்கும் என்பார்களே! இங்கே சுவரில் வைத்து திறந்து கிடக்கும் நிலை, ஜன்னல்களுக்கு யாரைக் கொண்டு கதவைச் செய்து வைத்து மூடுவது என்ற கேள்வி துளைத்தெடுக்க சுப்பு வாத்தியார் ஆசாரிகளைத் தேடிக் கொண்டிருந்தார். அது அவ்வளவு சாமான்யமானதாக இல்லை. ஏற்கனவே ஓர் ஆசாரி செய்த வேலையில் இன்னோர் ஆசாரி கை வைக்க ரொம்பவே யோசித்தார்கள். தவிரவும் குமரு மாமாவே வந்து சொன்னால் தொடர்ந்து வேலை பார்க்கத் தயார் என்று வந்து பார்த்த ஆசாரிகள் சொல்லி விட்டுப் போனார்கள். அந்த அளவுக்கு வடவாதியில் குமரு மாமாவின் பட்டறை சுற்று வட்டாரத்தின் முக்கிய கேந்திரியமாக மாறியிருந்தது. குமரு மாமாவால் பல உப வேலைகள் பல ஆசாரிகளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. அதனால் குமரு மாமாவைப் பகைத்துக் கொள்ள எந்த ஆசாரிப் பெருமக்களும் விரும்பவில்லை. சுப்பு வாத்தியாருக்கு இனி மீண்டும் ஒரு முறை குமரு மாமாவின் முன் போய் நிற்பதற்கு பெரெரிச்சலாக இருந்தது.
*****

2 comments:

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...