10 Jun 2019

இதனால சகலருக்கும் சொல்ல வர்றது என்னான்னா...



            ஆயிரம்தான் மனுஷன் உருவாக்கி இருந்தால் என்ன? அதெல்லாம் இயற்கை உருவாக்கி வைத்த மாதிரி ஆகுமா?
            என்னமோ சிமெண்டையும், காங்கிரீட்டையும் போட்டு பஸ் ஸ்டாண்டைக் கட்டி வெச்சிருக்கான். இந்தக் கோடையில அங்க நிக்க முடியுதா?
            நம்ம ஊரு பஸ் ஸ்டாப்பு ரொம்ப காலத்துக்கு ஒரு அரச மரத்தடியாகத்தான் இருந்தது. பஸ் ஸ்டாப்புக்காக அரச மரத்த யாரும் கொண்டாந்து நடல. அது அங்கே இருந்தது. அங்க பஸ் நின்னுப் போனது. அது ஆலமரத்தடி பஸ் ஸ்டாப்பா ஆகிப் போச்சு.
            பஸ்ஸை விட்டு இறங்கினா அங்க கொஞ்சம் நின்றுட்டு வந்தாத்தான் மனசுக்கு இதமா இருக்கும். எவ்ளோ வெக்கையா இருந்தாலும் ஒரு நாளும் அந்த அரச மரம் சூட்டைக் கக்குனதில்லை. சூட்டைக் கெளப்புனதும் இல்லை.
            என்னிக்கோ விழுந்த ஒரு சின்ன விதை மரமாகி பஸ் ஸ்டாப்பா ஆகிப் போச்சு. இந்த பஸ் ஸ்டாப்பா கட்ட பைசா காசு செலவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியும் தேவையில்லை. அதுக்கு கான்ட்ராக்ட், கமிஷன்னு எதுவும் தேவையில்லை பாருங்க.
            எங்கேயாவது ஒரு பஸ் ஸ்டேண்டுல ஒரு சின்ன செடிய பாக்க முடியுதா? 'மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!'னு அரசாங்கம் சொல்லுதே! ஒரு மரத்தை அங்க நட்டு வைக்கக் கூடாதா? கொஞ்ச நஞ்சம் எடம் கூட பாக்கி இருக்கக் கூடாதுன்னு பூரா இடத்தையும் காங்கிரீட்டைப் போட்டு மொழுவி அதுல கால வைக்க முடியுதா? சூடு காலப் பொசுக்குது.
            அரசமரத்தடிங்ற பேரு இருக்குறப்பவே அதுக்கு எதுத்தாப்புல ஒரு பயணியர் நிழற்குடைங்ற பேர்ல ஒரு சின்ன கட்டடத்தைக் கட்டுனாங்க பாருங்க! ஒரு சனம் அதுல நிற்குறதில்ல. ஒரு நாயி கூட அங்கப் போயி படுத்துக்க மாட்டேங்குது. எல்லாம் ஆலமரத்தடியிலதான் வந்துப் படுத்துக்குதுங்க.
            நாங்க படிச்ச அந்தக் காலத்துல அசோகரு சாலை ஓரங்களில் மரங்களை நட்டாருன்னு பாடப் புத்தகத்துல வரும். இது என்னய்யா பெரிய சாதனை மாதிரி புத்தகத்துல போட்டு இருக்காங்கன்னு அப்போ நெனச்சது. சாலையோரத்துல விதை கெடந்தா அது பாட்டுக்கு முளைச்சி அது பாட்டுக்கு மரமா வளந்துட்டுப் போவுது. இதயெல்லாம் நட்டாருன்னு வரலாறு பாடத்துல எழுதுவாங்கன்னு நெனச்சது. ஆனா நெலைமைப் பாருங்க! ரோட்டோரம் வரிசையா அதுவா வளர்ந்திருந்த அத்தனை மரங்களையும் பொலி போட்டுட்டு ரோட்டை விரிவாக்கம் பண்ணாங்க பாருங்க! அப்போதாம் புரிஞ்சது அசோகரு நிஜமாத்தான் வரலாற்றை உருவாக்கியிருக்காருன்னு. இப்போ அசோகரு பத்தின அந்த மாதிரி பாடங்களெல்லாம் புத்தகத்துல இருக்குதோ என்னமோ! ஒருவேள அப்படி பாடங்கள் இருந்து மக்கள் மரங்களுக்காக போராட ஆரம்பிச்சிட்டாங்கன்னா அது வேற புதுத் தலவலியால்ல போயிடும் பாருங்க!
            மனுஷன் உருவாக்கிக்கிட்டே இருக்கான். ரோட்டை உருவாக்குறான். காங்கிரீட் கட்டங்களை உருவாக்குறான். இப்படில்லாம் பண்றது வெக்கைய உருவாக்குதேன்னு அதுக்கு ஏ.சி.ய உருவாக்கி வெச்சிருக்கான். மரம் என்னத்துக்கு மசுருன்னு போட்டு தள்ளிட்டே இருக்கான். அவனுக்கு எதையாவது அழிச்சி எதையாவது உருவாக்கிக்கிட்டே இருக்கணும். நல்ல வெளயாட்டுதாம் போங்க. அப்புறம் ஏன் இயற்கை மனுஷனை அழிச்சி விளையாடக் கூடாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்! அதுவும் விளையாட ஆரம்பிச்சிடுச்சி. கேட்டா பருவநிலை மாற்றம்பாங்க, பனிக்கட்டி உருகுதும்பாங்க, என்னமோ பசுமை இல்ல வாயு விளைவும்பாங்க! அதுக்கும் சேத்து எதையாவது கண்டுபிடிச்சிடலாம்பாங்க. அடே மனுஷா! நீ கண்டுபிடிக்கிறத வுடுடா! கொஞ்சம் இயற்கையோடு இயற்கையா சொகுசு இல்லாம இயற்கை தர்ற சுகத்தோடு வாழுடான்னு கத்தணும் போலருக்கு!
            ஊருல கத்துனா ஒரு மாதிரி பார்ப்பானுங்கோ! அதாங் இப்படி ப்ளாக்குல கத்திட்டு இருக்கேன்!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...