7 Jun 2019

நின்று போன நிச்சயம்



செய்யு - 108
            குமரு மாமா அப்போது சாம்பல் நிற டிவியெஸ் சாம்ப் வாங்கியிருந்தது. அதில் குமரு மாமாவும், மேகலா மாமியும் வந்து இறங்கிய போது மணி பதினொன்றரைக்கு மேல் இருக்கும். மேகலா மாமியின் முகத்தில் களையே இல்லை. இதற்கெல்லாம் ஏன் வம்படியாக தன்னை அழைத்து வருகிறார்கள் என்று எரிச்சலாக இருப்பது போலிருந்தது. தவிரவும் மேகலா மாமியின் வகையறாவிலிருந்து யாரும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. வந்து இறங்கிய இவர்கள் ரெண்டு பேரையும் வரவேற்று முடிப்பதற்குள் வீயெம் மாமா தன்னுடைய பழைய டிவியெஸ் பிப்டியில் வந்து இறங்கியது.
            முருகு மாமாவும், பாக்குக்கோட்டை தாத்தாவும் குமரு மாமாவையும், வீயெம் மாமாவையும் தனியே தள்ளிக் கொண்டு போயினர். பந்தலிலிருந்து சுமார் நூறு அடி தூரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள். ஐந்து நிமிட காலம் பேசியிருப்பார்கள். வீயெம் மாமா வேக வேகமாக தென்னண்டைப் பக்கம் சமைத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தது. வெறி பிடித்ததைப் போல சமைத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் பாத்திரத்தோடு தூக்கி வீசியது. தூக்க முடியாத பாத்திரங்களை கவிழ்த்து விட்டது. வடித்துக் கொண்டிருந்த சோற்று அண்டாவை அப்படியே சாய்த்து விட்டது. கொதித்துக் கொண்டிருந்த சாம்பாருக்கும் அந்த கதியே ஏற்பட்டது. பஜ்ஜி போட்டு வைத்திருந்த அண்டா மூடி பஜ்ஜியோடு சேர்த்து பறந்து கொண்டிருந்தது. ஒரே களேபரமாகி எல்லாரும் சமைக்கும் இடத்துக்கு முன்னாடி கூடி விட்டனர். சமையல்காரர் பிரமை பிடித்தது போல பார்த்திருந்தார். என்ன இருந்தாலும், எது நடந்திருந்தாலும் ஒரு சமையல் கலைஞரின் கை வண்ணத்தையும், உழைப்பையும் இப்படியா உதாசீனப்படுத்துவது? வேற்குடி ஆட்களோ, லாலு மாமா வகையறாவைச் சேர்ந்த ஆட்களோ எதுவும் செய்யாமல் அப்படியே நின்றிருந்தனர்.
            சிப்பூர் பெரியம்மா மட்டும் ஓடிப் போய் வீயெம் மாமாவைப் பிடித்து உலுக்கி, "ஏன்டாம்பி இப்படிப் பண்றே? என்னாச்சு ஒனக்கு? எல்லாரும் பாக்கிறாங்க பாரு!" என்றது.
            "ந்நல்லா பாக்கட்டும். அதுக்குதான் பண்றேம்." என்று சொல்லி விட்டு அடுப்பில் வைப்பதற்காக வைத்திருந்த விறகுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த எல்லாவற்றையும் விளாசித் தள்ளியது.
            "எல்லே! இப்ப நிறுத்தப் போறீயா இல்லியா? சொல்லச் சொல்ல லூசு பிடிச்சவேம் மாரி பண்ணிட்டு இருக்கே! லாலு மாமா ன்னாடா நெனச்சிக்கும்?" என்று சிப்பூர் பெரியம்மா வீயெம் மாமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டது.
            "பொண்ணு ஓடிப் போச்சாம் அக்கா! தெரியுமா ஒனக்கு!" என்றது சிப்பூர் பெரியம்மா.
            "ன்னாடா சொல்றே! நாங்க வந்து கேட்டதுக்கு டவுனுக்குப் பியூட்டிப் பார்லருக்குப் பொண்ணு போயிருக்கு. கார்ல செத்த நேரத்துல வந்துடும்ணு சொன்னாங்களே! எங்களுக்கும் அதிசயமாத்தாண்டா இருந்துச்சி. நாங்க பண்ணி வுடாத அலங்காரமா? டவுனுக்குக் கார்ல போயி பியூட்டி பார்லர்ல போயி பண்றாங்கன்னு. ன்னாடா இப்படிப் பண்றாங்க!" என்று தலையில் அடித்துக் கொண்டது சிப்பூர் பெரியம்மா.
            "ன்னாடி இது ஒலகத்துல நடக்காத அதிசயமா இருக்கு!" என்றபடி வாழ்க்கப்பட்டு பெரியம்மா, சிப்பூர் பெரியப்பா மற்றும் சித்தப்பா, தேன்காடு சித்தி மற்றும் சித்தப்பா, பாகூர் சித்தி மற்றும் சித்தப்பா எல்லாரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
            வீயெம் மாமாவின் வெறி நின்றபாடில்லை. சுப்பு வாத்தியார் வந்து, "நிறுத்துங்கம்பி!" என்று சொல்லியும் அதன் வேகம் குறைந்தபாடில்லை.
            "இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லியா? ஒங்களப் பத்தியும் தெரியும். இங்க இருக்குற எல்லாரப் பத்தியும் தெரியும். சங்கதிகள அவுத்து வுட்டாதாம் அடங்குவீங்க போலருக்கே!" என்று சுப்பு வாத்தியார் சொன்னதும்தான் வீயெம் மாமா அப்படியே நின்றது.
            முருகு மாமா அந்த இடத்துக்கு வந்து பேசியது. "ந்தாருங்க. நடந்தது நடந்துப் போச்சி. ராத்திரி பஞ்சாயத்து வெச்சாச்சி. எப்டியும் இன்னும் செத்த நேரத்துல பொண்ண கொண்டாந்துடுவோம். ஆளுங்கள அனுப்பிருக்கு. சின்ன வயசு. பொண்ண ஏமாத்திக் கொண்டு போயிருக்காங்க. நம்ம வூட்டுப் பொண்ணு. நாம்மதான் பாத்து பதனமா முடிவு எடுக்கணும். இழுத்தாந்து ஓடிப் போன பையனப் பிடிச்சாச்சி. அவனெ எதுத்தால இருக்குற தோப்புலதாம் கட்டிப் போட்டிருக்கோம். அவனெ அடிச்ச அடியில இப்பதாம் பொண்ண கொண்டு போயி வெச்சிருக்கிற எடத்தச் சொல்லிருக்கான். ஆளு போயாச்சி. மத்தபடி நீங்கதான் முடிவு பண்ணணும்!"
            குமரு மாமா வைத்தி தாத்தாவைக் கைத்தாங்கலாக அந்த இடத்துக்குக் கொண்டு வந்தது. வைத்தி தாத்தாவுக்கு நிற்கக் கூட திராணியில்லை. குரல் மட்டும் கம்பீரமாக வந்தது, "நம்மள மொதல்ல வூட்டுல கொண்டு போயி வுடுங்கடா! டேய் லாலு! ன்னாடா பொண்ண வளத்து வெச்சிருக்கிற நீயி! நாம்ம வந்த ஒடனே இதெல்லாம் சொல்றதுக்கு ன்னா? நாசுக்கா நிச்சயம் இல்லேன்னா கலச்சி வுட்ருக்கலாம். இப்போ ஊரு ஒலகத்த கூட்டி அசிங்கப்படற மாரி ஆச்சு. இந்தாரு நாம்ம வந்து ஒங்கிட்ட பொண்ண கொடுன்னு கேட்கல பாத்துக்க!"
            "நீங்க வந்து கேட்காம இருந்திருக்கலாம் அத்தாம்! ஒங்க மருமவன விட்டு கேட்கச் சொன்னது நீங்கதான? இன்னிக்கு எங்க வூட்டுப் பொண்ணுக்கு ஒண்ணுன்ன ஒடனே குத்திக் காட்டுறீங்களா?" என்றது முருகு மாமா.
            "எவம்டா அது! எம் பேச்சுக்கு எதிரு பேச்சு பேசறது? எங் கண்ணு முன்னாடி அம்மணாஞ்சிய நின்னப் பயலுக இப்போ பேச வந்திட்டீங்களாக்கும்! தொலச்சிப்புடுவேம் தொலச்சி. நிச்சயமும் கெடயா. ஒண்ணும் கெடயா. கெளம்புங்க எல்லாரும். எல்லாத்தியும் கெளப்பிக் கொண்டாங்கடா!" என்றது வைத்தி தாத்தா ஆவேசமாக.
            "நீங்கக் கோபப்படுறீங்க. ஆத்திரப்படறீங்க. அதுல ஒரு ஞாயம் இருக்கு. வெசயம் நம்ம குடும்பம் சந்பந்தப்பட்டது. நீங்க பெரியவங்க! கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணணும்!" என்றது பாக்குக்கோட்டை தாத்தா.
            "எல்லே எவம்டா நீயி! சாமியாரு வேஷம் போட்டுட்டு சோசியம் பாக்குறேன்னு ஊர ஏமாத்திகிட்டு. நக செய்யறேன்னு ஒறவு மொறைகள ஏமாத்திகிட்டு கெடந்த பயதான்டா நீயி! பொண்ணு ஓடிப் போனா யாரோட ஓடிப் போச்சோ அவ்வேம் கூட கட்டி வையுங்கடா. நீங்க பாட்டுக்கு கல்யாணம் கட்டி வெச்சி அத்து மறுபடியும் ஓடிப் போச்சுன்னா யாருடா ன்னா பண்றது? யோசிக்கிறானுவோ பாரு! இந்தக் கருமத்துக்குதாம் சின்ன பயலுக்கு கல்யாணமும் வேண்டா, ஒரு மண்ணும் வேணான்னு சொன்னேம். யாரு எம் பேச்சக் கேக்குறா? அப்படியே பண்ணாலும் இந்தப் பயலுகக் கூட சங்கநாத்தமே வெச்சிக்கக் கூடாது. இவனுவோ சரியில்லாதப் பயலுவோ. எல்லே! நம்ம வகையிலேந்து இந்த வகைக்கு எவனும் இனுமே பொண்ணும் எடுக்கக் கூடாது, பொண்ணும் கொடுக்கக் கூடாது. சுத்தப்பட்டு வாராது பாத்துக்கோங்க!" என்றது வைத்தி தாத்தா.
            "ஏம் தம்பிகள அப்படிலாம் சொல்லாதீங்க. அவன்களே கலங்கிப் போயி நிக்குறாம்ங்க. அவ்வேம் பொண்ணு பண்ணதுக்கு அவ்வேம் ன்னா பண்ணுவாம்?" என்றது சாமியாத்தா.
            "ந்தாரு ஒன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்தப்பவே அவனுகள பத்தி நமக்குத் தெரியும். அதாங் அவனுகள எங்க வெக்கணுமோ அங்க வெச்சிருந்தேம். இவ்ளோ காலத்துல ஒழுங்கயாயிருப்பாம்னு பாத்தா... ம்ஹூம்... நாயி வால யாரு நிமித்த முடியும்! ஏம்டா நம்மள இங்க நிக்க வெச்சு பேச வுட்டுட்டு இருக்கீங்க. மொதல்ல வூட்டுக்குக் கொண்டு போங்கடா நம்மள!" என்றது வைத்தி தாத்தா.
            வைத்தி தாத்தா பேச ஆரம்பித்ததும் ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறுவது போலிருந்தது. சுப்பு வாத்தியாரும், விகடுவும் செய்வது அறியாமல் அப்படியே நின்றிருந்தார்கள். நிச்சயத்துக்கு வந்திருந்த பள்ளிக்கூடத்து ஆசிரியர்களும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றிருந்தார்கள். அவர்களிடம் போய் லாலு மாமா சுப்பு வாத்தியாரைச் சுட்டிக் காட்டிச் சொன்னது, "இவரு நெனச்சிருந்தா பேசிச் சரிப்பண்ணலாமுங்க. அப்படியே நின்னுட்டு இருக்காரு பாருங்க. பொண்ணுக்கு நிச்சயம் ஆகுதுன்னு இழுத்துட்டுப் போனவேம் ஒண்ணும் பண்ணலேங்க. அவ்வேம் பொண்ண பாதுகாப்பா கொண்டு போயி வேற ஒரு எடத்துல வெச்சிட்டு தனியாத்தாம் இருந்திருக்காம். பிடிச்சாந்தாச்சி அவனே. பொண்ண கொண்டார வேண்டியதுதாம் பாக்கி." என்று லாலு மாமா பேசியதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
            வைத்தி தாத்தாவை கைத்தாங்கலாக அழைத்து வந்த குமரு மாமாவும் சுப்பு வாத்தியாரை நெருங்கியதும், "எல்லாம் ஒங்களால வந்தது அத்தாம்! ஒங்களுக்கு ஏம் இந்த தேவயில்லாத வேல. இப்ப அசிங்கப்பட்டு நிக்குறது யாரு? நீங்க பண்றதலாம் சரியில்லத்தாம்! இது மாரி வேலயில ல்லாம் இனுமெ தலயிடற வேல வெச்சுக்காதீங்க!" என்றது.
            நிச்சயித்தப் பெண் ஓடிப் போனதுக்கும், நிச்சயம் நிற்பதற்கும், இது எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னுடைய தலையை உருட்டுவதற்கும் தான் என்ன செய்ய முடியும் என்பது போன்ற பரிதாபகரமான தோற்றத்துக்கு சுப்பு வாத்தியாரின் முகம் மாறியிருந்தது. சுப்பு வாத்தியார் விகடுவைப் பார்த்து, "ஏலே! போயி அம்மாவையும் தங்காச்சியையும் வரச் சொல்லு. நாம் அழச்சிட்டுப் போயிட்டு இருக்கேம். நீயி இஞ்ஞ நிக்காதே. நம்ம சித்தி, பெரிம்மா வூட்டுல உள்ளவங்கள அழச்சிட்டு அப்படியே வந்து வேற்குடி பாலத்துகிட்டு நில்லு. நாம்ம அவங்களக் கொண்டு போயி விட்டுட்டு வந்துடறேம்." என்று கிளம்ப ஆயத்தமானது.
            வேற்குடி கிராம முக்கியஸ்தர்களும் அவர்களுக்குள் கூடி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். முக்கியஸ்தர்களில் ஒருவர் எல்லாரையும் பொதுவாகப் பார்த்து, "முடிவுங்றது ஒங்க ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது. அத்து எந்த முடிவுன்னாலும் அத்தெ நாங்க ஏத்துக்கிறோம். கிராமம் அதுக்கு ன்னா பண்ணணும்னு எதிர்பார்க்கிறீங்களோ அதெ நாங்க செஞ்சு வுட்டுடுறோம்!" என்றார்.
            நிச்சயத்துக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து போக ஆரம்பித்தனர்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...