7 Jun 2019

எல்லா பிரச்சனைக்கும் ஒரே வாக்கியம்!



            "எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்கிற மாதிரி ஒரு வாக்கியம் இருந்தால் சொல்லுங்கள்!" என்றான் வாதாமடக்கி.
            மருந்துகளில் சர்வரோக நிவாரணி என்று ஏதாவது இருக்கும். வாக்கியங்களிலுமா அப்படி ஏதேனும் இருக்கும்?
            ஏற்கனவே கதைகளில், 'இதுவும் கடந்து போகும்!', 'எதுவும் கடந்து போகும்!' என்கிற மாதிரியான வாக்கியங்கள் சொல்லப்பட்டிருப்பது விகடமுனிக்கு ஞாபகத்தில் வந்து போனது. அவ்வாக்கியங்களே அருமையான வாக்கியங்கள்தான். துயரத்தில் வந்து நிற்கின்றவனுக்கு 'போகும்' என்ற சொல்லோடு ஒரு வாக்கியம் சொல்வதே மகிமையானதுதான்.
            அந்த வாக்கியங்களைக் கேட்டு வாதாமடக்கியும் கடந்து போய் விட்டால் நல்லது. இதுதான் விகடமுனி முதலில் நினைத்தது. ஆனால் விகடமுனியையும் அறியாமல், "தேவைகள் குறைவு! ஆடம்பரங்கள் அதிகம்!" என்ற வாக்கியத்தைச் சொல்லும்படி ஆகி விட்டது.
            ஓர் அரசமரத்தின் கீழே ஒரு சிறு வீட்டை அமைத்துக் கொண்ட விகடமுனியின் அந்த வாக்கியம் பளாரென வாதாமடக்கியைத் தாக்கியிருக்க வேண்டும். ஆள் வெடித்துச் சிதறி விட்டான்.
            "சரிதான்! மெத்த சரி!" என்றான் வாதாமடக்கி.
            ஓர் ஆலமரத்தின் கீழோ அல்லது அரச மரத்தின் கீழே அல்லது ஒரு வேப்ப மரத்தின் கீழோ சிறு குடிலை அமைத்துக் கொள்ளும் போது ஏ.சி.யின் தேவையில்லாமல் போய் விடுகிறது.
            எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் போது வாகனங்களின் தேவையில்லாமல் போய் விடுகிறது. சுகரோ, பி.பி.யோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
            எளிமையான உணவு, உடை, எளிமையான சம்பிரதாயங்கள் அல்லது வறட்டுத்தனமான சம்பிரதாயங்களற்ற வாழ்வு என்று ஆகி விடும் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆகி விடுகிறது. முக்கியமாக யாருக்கும் பொறாமை உண்டாகாமல் போய் விடுகிறது. எளிமையாக வாழ்வதைப் பார்த்து யார் பொறமைப்பட முடியும் சொல்லுங்கள்? அப்படியே பொறாமைப்பட்டு எளிமைக்கு மாறினாலும் அதுவும் நன்மைதான்.
            வாதாமடக்கிக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்க வேண்டும். ஆடம்பரங்களால் உண்டான பிரச்சனையை அவர் புரிந்திருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பார்த்த போது பிரச்சனைகள் குறைவதைப் போலிருந்தது. அறவே விட்ட போது பிரச்சனைகளே விட்டது போலிருந்தது.
            வாதாமடக்கி கோர்ட் சூட்டுகளை விட்டு விட்டு, கார் கப்படாக்களை விட்டு விட்டு, ஆடம்பர ஏ.சி. மாளிகளை விட்டு விட்டு ரொம்ப எளிமையாக ஆகி விட்டார். அவர் இப்படி கார்பன் - டை - ஆக்ஸைடு, குளோரோ ப்ளோரோ கார்பன், சாயக் கழிவுகள் என்று உருவாகக் காரணமாகி இந்தப் பூமியையும், பிரபஞ்சத்தையும் டிஸ்டர்ப் பண்ணாததால், அவரும் டிஸ்டர்ப் இல்லாமல் ஆகி விட்டார். ஆனால் ஊர் உலகம் பேசிக் கொள்வது வேறு. அவர் இதையும் ஒரு டிரெண்டிங் ஆக்குகிறார் என்பதாகப் பேசிக் கொள்கிறது. இந்தப் பேச்சுதான் வாதாமடக்கியை இப்போது டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கிறது. நல்லவேளையாக விகடமுனி எந்தவிதத்திலும் பிரபல்யம் ஆகாமல் தப்பிப்பத்தால், டிரெண்டிங் ஆக்குவதாக இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எந்நேரமும் ஒரே ஹாயோ ஹாய்தான்.
*****

6 Jun 2019

நிச்சயத்த முடிச்சிக்கலாம்!



செய்யு - 107
            வேற்குடியில் டிவியெஸ் பிப்டியை நிறுத்தி விட்டு இறங்கிய போது சுப்பு வாத்தியாரால் வண்டியின் ஸ்டேண்டைப் போட முடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கியது. காற்று நன்றாக வீசிய போதும் வியர்த்து சட்டை எங்கும் பெரும் பெரும் வட்டமாகவும், கட்டமாகவும் அதாவது சற்றேறக்குறைய அந்த வடிவத்தில்  வியர்த்து நனைந்திருந்தது. விகடு அவரை நகரச் சொல்லி விட்டு வண்டியை வாங்கி ஸ்டேண்ட் போட்டான்.
            "ல்லே... நீயி போயி இந்த வெசயத்த குமரு மாமாட்ட சொல்றியாடா? நம்மால முடியாது போலருக்கே. நிச்சயம் எழுதிப்புட்டா அது வேற மாரி சிக்கலாயிடும். சின்னம்பி வருமா? வாராதான்னு வேற புரியலியே." என்று மெலிந்த குரலில் வெளிவ்நதது சுப்பு வாத்தியாரின் குரல். இதுவரை தனக்காக எதையும் செய்யக் கேட்காத அப்பா இப்படிக் கேட்டு விட்டதால் விகடு மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனான். அவனுக்கு நிச்சயதார்த்தம் எந்தக் கதியில் போனால் என்ன எண்ணம் ஏற்பட்டு விட்டது.
            சுப்பு வாத்தியார் அங்கேயே நின்றிருக்க அவன் உள்ளே புகுந்து ஒவ்வொரு இடமாகப் போனான். ஒவ்வொரு இடத்திலும் "வாடா வாடா வெகடு!" என்று வரவேற்பு பலமாக இருந்தது. அந்த வரவேற்பை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் அவன் குட்டிப் போட முடியாத பூனையைப் போல மலங்க மலங்க நின்று நின்று நடந்து கொண்டிருந்தான். வீட்டின் முன்னே வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கட்டிலின் மேல் வேணி அத்தை உட்கார்ந்திருந்தது. கட்டிலின் மேல் கண்டபடி கிடக்கும் துணிமணிகள், சாப்பிட்டுப் போட்ட பாத்திரப் பண்டங்கள் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. பக்கத்திலேயே ரெண்டு நாற்காலிகள் போடப்பட்டு வைத்தி தாத்தாவும், சாமியாத்தாவும் உட்கார்ந்திருந்தார்கள். வைத்தி தாத்தா பட்டு வேட்டி, சட்டையில் பார்க்க படு பொசுங்கலாய் இருந்தார். இதற்கு மேலும் ஒரு மனிதர் வாழ்க்கையில் எலும்பும் தோலுமாக ஆக முடியுமா என்பது போலிருந்தது அவரது தோற்றம். சாமியாத்தா நீலவண்ணப் பட்டுப்புடவையில் உட்கார்ந்திருந்தது. விகடுவைப் பார்த்ததும், "எல்லாம் வந்தாச்சுலடா?" என்றது.
            "பெரிய மாமா எங்கே?" என்றான் விகடு.
            "என்னடெ பெரிய மனுஷம் மாரி! நாம்ம ஒன்ன கேட்டா, நீ நம்மள கேட்குறே?" என்றது சாமியாத்தா.
            இந்த விசயம் பற்றி அவர்களிடம் பேசுவதா? பேசாமல் இருப்பதா? என விகடுவுக்குக் குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், "காலேஜில்லாம் போயி படிக்கிறானுங்க! நாலு வார்த்த கேட்டா ஒரு வார்த்த பதிலு வர மாட்டேங்குது!" என்றது சாமியாத்தா சலிப்பாக.
            அங்கே அதற்கு மேல் கேட்டு எதுவும் பிரயோஜனமில்லை என்று தோன்ற, விகடு எதுவும் சொல்லாமல் நகர ஆரம்பித்தான். சாமியாத்தா, "போயி அப்படிச் சுத்திப் பாரு! எங்கியாவது நிப்பாம்!" என்றது சலிப்பாக.
            பந்தலின் தென்னண்டைப் பக்கம் ஏற்பாடாகிக் கொண்டிருந்த சாப்பாட்டின் வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.
            சமையல் நடந்து கொண்டிருந்த இடத்தில் வெங்குவையும், செய்யுவையும் பார்த்தான் விகடு. அம்மா மூலம் விசயத்தைச் சொல்லலாமா என்று தோன்றியது அவனுக்கு. ஒரு நிமிடம் அப்படியே யோசித்து நின்றவன் அம்மாவை அப்பாவிடம் அழைத்துச் செல்வதுதான் சரியானது என்று தோன்றியது. அவன் வேக வேகமாக குறுக்கே இருந்த வேலி தடுப்பைத் தூக்கிக் கொண்டு சமையல் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றான்.
            வெங்கு செய்யுவின் கையில் இரண்டு பஜ்ஜிகளைத் திணித்து அவளைத் "தின்னு தின்னு" என்று வற்புறுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் கையிலும் காப்பி தம்ப்ளர்கள் இருந்தன. செய்யுவுக்கு அந்த பஜ்ஜிகள் மேல் ஆர்வம் வராமல் இருந்திருக்க வேண்டும். அவள் காப்பியைக் குடித்து முடித்ததும் கையில் வாங்கிய பஜ்ஜியை ஏற்கனவே சுட்டுப் போட்டிருந்த பஜ்ஜிகள் மேல் போட்டு விட்டு ஓடி விட்டாள்.
            "எரும மாடு மாரி வளந்திருக்கு. ரண்டு பஜ்ஜி திங்குதா பாரு!" என்ற வெங்கு ரெண்டு பஜ்ஜியை எடுத்து விகடுவின் கையில் திணித்தது.
            "ஏம்மா செய்யு பஜ்ஜியே சாப்பிடலியா?" என்றபடி விகடு வாங்கிய பஜ்ஜியை மீண்டும் பஜ்ஜியை எடுத்த இடத்திலேயே வைத்தான்.
            "நாலு பஜ்ஜி தின்னா. இன்னும் ரண்டு தின்னேன்னு சொன்னேன். முடியாதுன்னுட்டு இப்படித் தூக்கிப் போட்டுட்டு ஓடிட்டா! ல்லே... நீ ஏம்டா கொடுத்த பஜ்ஜிய தூக்கி அஞ்ஞ போடுறே? ஓடுற பாம்ப மிதிக்குற வயசுல பத்து பாஞ்சி பஜ்ஜிய தின்னா ன்னா?" என்று வெங்கு சொன்னதும் விகடுவுக்கு தன் அம்மா வெங்குவின் மேல் கோபமாக வந்தது.
            "அப்பா வாரச் சொன்னிச்சு!" என்றான் விகடு.
            "இங்க அழச்சிட்டு வாடா! ரண்டு பஜ்ஜி திங்கலாம்!" என்றது வெங்கு.
            "அய்யோ! புரிஞ்சுக்கம்மா! வா! அப்பா வாரச் சொன்னிச்சு!" என்றான் விகடு.
            "இவ்வேம் ஒருத்தம்! ன்னான்னுச் சொல்லித் தொலயேண்டா! எப்பப் பாத்தாலும் இப்பூடி கல்லுளிமங்கன் கணக்கா இருந்தா நாம்ம ன்னாடா பண்றது?"
            "நீ ஒண்ணும் பண்ண வேண்டா. அப்பா கூப்புடுது. மொதல்ல வா!" என்று விகடு சொன்னதும், வெங்கு விகடுவோடு கிளம்பியது.
            சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டிக்குத் துணையாக காவல் நிற்பது போல நின்ற இடத்தை விட்டு அசையாமல் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தது.
            வந்ததும் வராதுமாக, "பஜ்ஜி ந்நல்லா போட்டுருக்காங்க! இஞ்ஞ எல்லாருக்கும் கொண்டாந்து கொடுக்க தாமசம் ஆகும். அப்படிக்கா வந்தீங்கன்னா ரண்டு பஜ்ஜியை தின்னுப்போட்டு காப்பித் தண்ணிய குடிச்சிட்டு வந்துடலாம்!" என்றது வெங்கு.
            "எல்லாரும் வந்துட்டாங்களா?" என்றது சுப்பு வாத்தியார்.
            "பெரியவனும் அவ்வேம் பொண்டாட்டியும் காங்கல. சின்னவன் வாரான்னா ன்னா?" என்றது வெங்கு.
            "பெரியம்பி இன்னும் வாரலியா? நாசமாப் போச்சு!" என்றது அதிர்ச்சியாக சுப்பு வாத்தியார்.
            "அவ்வேம் வாராட்டியும் ன்னா? அதாங் அப்பா, அம்மா, நீங்க, எங்க அக்காகாரிங்க, தங்கச்சிக்காரிங்க, ஒங்க வகையறா, எங்க வகையறான்னு எல்லாம் வந்தாச்சுல. நாம எழுதிடுவோம் வாங்க!" என்றது வெங்கு.
            விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தடுமாற்றமாய் இருந்தது சுப்பு வாத்தியாரின் நிலைமை. அவரின் கண்கள் விகடுவையே பார்த்துக் கொண்டிருந்தது. விகடு விசயத்தை பட்டென்று போட்டு உடைத்து விடுவான் என்ற எதிர்பார்ப்பு அவர் பார்த்த பார்வையில் இருந்தது. அவரின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்க விரும்பாமல், "ம்மா! இந்த நிச்சயம் நின்னா ன்னா ஆகும்?" என்றான் விகடு.
            "ஏம்டா ரண்டு பஜ்ஜிய திங்கப் பிடிக்கலன்னா ஒந் தங்கச்சி ஓடிப் போன மாரி ஓடிப் போயிடுறா கருமம் பிடிச்சவனே! எந்தம்பிக்கே இப்பதான் கல்யாண யோகம் கூடி வாரது. அவனெ லாலு மாமா உள்ளங்கையில வெச்சு தாங்கு தாங்கன்னு தாங்கி, உச்சந்தலையில வெச்சி ஆடும்னு நெனச்சிச் சந்தோஷமா இருக்கிறப்ப... புள்ளியாடா நீ? ஏம் வயித்துல வந்து பொறந்திருக்கீயே! விஷேசத்துல ந்நல்ல வார்த்தப் பேசணும்னு தெரியதா? இதத்தாம் காலேஜிப் போயி படிச்சுக் கிழிக்கிறீயா நீயி?" என்று பொரிந்து தள்ளியது அம்மா வெங்கு.
            வெங்கு இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, லாலு மாமா அப்பாவை நோக்கி வேகமாக ஓடி வந்தது. "செத்த இஞ்ஞ வாங்க!" என்று அப்பாவை ஓரமாகத் தள்ளிக் கொண்டு போனது லாலு மாமா. விகடுவும் அவர்களோடு சேர்ந்து நகர்ந்தான். "ஏலே வெகடு! நீயி அஞ்ஞயே நில்லு!" என்றது லாலு மாமா.
            "ல்லே... வாரட்டும் அவ்வேம்!" என்றது சுப்பு வாத்தியாரின் வாய்.
            லாலு மாமாவுக்கு விகடு வருவது பிடிக்கவில்லை. அவருக்கு அவன் வருவதைத் தடுக்கவும் வழியில்லை என்பது போல பட்டது. அவர் ஒன்றும் சொல்லாமல் நிற்க, விகடு தயங்கி நின்றான். இருவரும் பேசுவது கேட்கும் தொலைவில் அவன் நின்றிருந்தான்.
            லாலு மாமா சுப்பு வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டது. "நிச்சயத்த முடிச்சிடுவோம். மிச்சத்த அப்பொறம் பாத்துக்கிடுவோம்!" என்றது லாலு மாமா.
            "ஏலே! வெகடு! இஞ்ஞ வாடா!" என்றது சுப்பு வாத்தியார்.
            விகடு அவர்களை நெருங்கினான். "நம்ம மானமே ஒங்க கையிலதாம் இருக்குது. ராத்திரிப் பஞ்சாயத்தாப் போச்சு. ஊருகாரங்கலாம் நம்ம பக்கம்தான் நிக்குறாங்க. இப்போ நிச்சயத்த முடிச்சிட்டா கல்யாணத்துக்கு நாம்ம கேரண்டி. எப்படியும் முடிச்சிடுவேம்! நமக்கு நம்பிக்க இருக்கு!" என்று லாலு மாமா பேச ஒன்றும் புரியாமல் அருகே போன விகடுவும், அங்கேயே நின்று கொண்டிருந்த சுப்பு வாத்தியாரும் திரு திருவென முழிக்க வேண்டியதாகி விட்டது.
            எவ்வளவு நேரம்தான் முழித்துக் கொண்டிருப்பது என்று ரெண்டு பேரும் கண்களைச் சுழல விட்டுப் பார்த்ததில் வேற்குடி ஆட்களின் முகத்தில் சுரத்தே இல்லாமல் இருந்தது. தூரத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த முருகு மாமா மற்றும் பாக்குக்கோட்டை வகையறாக்கள் முகத்திலும் சுரத்தே இல்லாமல் இருந்தது. வாழ்க்கப்பட்டு பெரியம்மா, சிப்பூர் பெரியம்மா, சின்னம்மா, தேன்காடு மற்றும் பாகூர் சித்தி வகையறாக்களின் முகத்தில்தான் பூரிப்பும், சந்தோஷமும் தாண்டமாவமாடியது. அவர்கள் எல்லாருக்கும் குமரு மாமாவை விட வீயெம் மேல் இப்போது தனிபாசம் வந்திருந்தது. சுப்பு வாத்தியாரின் முகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை என்பது போன்ற நிலையில் இருந்தது அது. எந்த விதமான மனநிலையில் தன் முகத்தை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் என்ன மாதிரி தன் முகம் இருக்கும் என்று புரியாதத் தன்மையில் சுப்பு வாத்தியார் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். விகடு முகத்தில் பொங்கி வரும் உணர்ச்சிகளோடு இருந்தான். சரியாகச் சொல்வதானால் பொங்கி வரும் உணர்ச்சிகள் வெடித்து விடாமல் இருந்ததில் அவசரமான பின்னும் சிறுநீரை வெளியேற்ற முடியாத அவஸ்தையில் இருப்பவனின் முகத்தில் அவன் இருந்தான்.
*****

நமது பிள்ளைகளின் பிரச்சனை



            இந்த வருஷம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். மாலையில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கும், காலையில் கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்தன.
            பிள்ளைகள் இதில் குழம்பி விடக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு பொதுத் தேர்வுக்கு முன்னால் நடைபெறும் மாதிரித் தேர்வைக் கூட அப்படிதான் நடத்தியானது.
            பரீட்சைக்குப் போவதற்கு முன்னால் ஒவ்வொரு நாள் வழிபாட்டுக் கூட்டத்திலேயும் இதுதான் பேச்சு. தமிழ், இங்கிலிஷ் மதியானம், கணக்கு, அறிவியல், சமூகவியல் காலையில் என்று தலை தலையாக தலைகீழாக நின்று அடித்துச் சொல்லி ஆயிற்று.
            இது போக பரீட்சை நடந்த மையத்திலும் இங்கிலீஷ் இரண்டாம் தாள் பரீட்சை முடிந்ததும் மைக் வைத்தே கணக்குப் பரீட்சையிலிருந்து தேர்வு காலையில் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
            ஆனாலும் ஒரு பையன்... ஒரே ஒரு பையன் மட்டும் கணக்குப் பரீட்சைக்கு மதியம் போயி நின்றிருக்கிறான். பரீட்சை எழுத முடியாமல் போயி விட்டது. அவன் நேரத்தைப் பாருங்கள்! அந்த ஒரு பரீட்சையில் மட்டும் ஆப்சென்ட் ஆகி, பாக்கி எல்லா பரீட்சையிலும் நல்ல மார்க் வாங்கியிருக்கிறான்.
            "ஏன்டா இப்படி ஆயிப் போச்சு?" என்று அந்தப் பையனை அழைத்து விசாரித்தால்... தமிழுக்கும், இங்கிலீஷ்க்கும் மதியானமாக பரீட்சை எழுதி அந்த டச் அப்படியே மனசுல தங்கிப் போயி கணக்குப் பரீட்சைக்கும் அப்படியே போயிட்டேங்றான்!
            "அடெ ஏன்டா! பரீட்சையே எப்பங்றது உனக்கு மனசுல தங்கலேன்னா... உனக்கு எப்படிடா பரீட்சைக்குப் படிச்சது மனசுல தங்கும்?" என்று கேட்டால்... படிச்சதெல்லாம் நல்லாத்தான் சார் மனசுல தங்கிருந்துச்சு! அந்த டைம் அது மட்டுந்தான் சார் தங்காமப் போயிடுச்சுங்றான்.
            அந்த ஒரு பையனால் பாருங்க! ரிசல்ட் ரெண்டு பர்சன்ட் கம்மியாகி பள்ளிக்கூடம் மாவட்டத்தில் பர்சன்டேஜ் லிஸ்டில் கடைசியாக வந்து விட்டது.
            இந்தப் பிள்ளைகள் படிப்பதில்தான் விவரமாகத்தான் இருக்கின்றன. அடிப்படை விசயங்களில் ரொம்பவே கோட்டை விட்டு விடுகின்றன. நிறையப் படிப்பதால் இப்படி ஆகி விடுகிறதா? என்று வேறு யோசனையாக இருக்கிறது. டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா மாதிரி இதுவும் ஏதாவது பிரச்சனையாக இருக்குமா என்று வேறு குழப்பமாக இருக்கிறது. அமீர்கான் மாதிரி உள்ளவர்கள் படம் எடுத்தால்தான் அது பற்றித் தெரிய வரும்.
            வர்ற வருஷத்திலேர்ந்து எல்லா பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்துக்கு வர்ற சொல்லி, ஒரு வேன் வெச்சுதான் பரீட்சை சென்டருக்கு அழைச்சிட்டுப் போகணும் போலருக்கு. இதனால்தான் நிறைய தனியார் பள்ளிகள் பிள்ளைகளை வேன் வைத்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் அதே வேனிலே கொண்டு போய் வீட்டுக்கும் விட்டு விடுகின்றன. இந்தப் பிள்ளைகள் இருக்கின்ற நினைப்புக்கு வேன் இல்லாமல் போனாலும் கஷ்டந்தான். பள்ளிக்கூடத்துக்கு என்று கிளம்பி ஞாபகப் பிசகில் வேறு எங்காவது போய் திரும்பி வந்தால் நிலைமை என்னாகும் பாருங்கள்!
*****

5 Jun 2019

நிச்சயத்தை நிறுத்த முடியாதா?



செய்யு - 106
            இந்த வட்டாரப் பகுதியில் நிச்சயதார்த்தம் என்பதை 'சின்ன கல்யாணம்' என்பார்கள். ஒரு கல்யாணத்துக்கு உரிய அத்தனை தடபுடல்களும், ஆடம்பரங்களும் நிச்சயதார்த்தத்தில் உண்டு. வசதி படைத்தவர்கள் நிச்சயதார்த்தத்தையே கல்யாணம் போல பத்திரிகை அடித்து கல்யாண மண்டத்தில் செய்வது உண்டு. வசதி குறைந்தவர்கள் முன்பே பேசி நிச்சயத்துக் கொண்டு கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக செய்வதும் உண்டு. பொதுவான வழக்காக நிச்சயதார்த்தத்தைப் பெண் வீட்டு தரப்பில் செய்து, கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டு தரப்பில் செய்வதுண்டு. எல்லாம் இப்படி உண்டு உண்டு என்று சொல்வதற்குக் காரணம், சில நேரங்களில் இது மாறி நடப்பதும் உண்டு. வசதியான பெண் தரப்பு என்றால் நிச்சயதார்த்தம், கல்யாணம் இரண்டையும் பெண் வீட்டிலேயே செய்து விடுவதும் உண்டு. காலப்போக்கில் இவைகளில் இன்னும் நிறைய மாறுதல்கள் ஏற்படக் கூடும். அது வேறு இருக்கிறது.
             லாலு மாமா வலுத்த கையாக இருந்ததால் வீயெம் மாமாவுக்கும் குயிலிக்குமான நிச்சயதார்த்தம், கல்யாணம் இரண்டையும் தானே செய்து விடுவதாக சொல்லி விட்டது. தவிரவும் முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்த்து அலைந்ததைப் போல ரெண்டாவது பெண்ணுக்கு அலையவில்லை என்ற சந்தோஷம் வேறு அதற்கு. அதைத் தன் பேரதிர்ஷ்டம் என்று வேறு அது நினைத்துக் கொண்டது. ஆனால் தலைவிதி என்ற ஒன்று இருக்கிறது என்பதை லாலு மாமா தன் பிற்காலங்களில் புரிந்து கொள்ளக் கூடும். இப்படி நிச்சயம், கல்யாணம் ரெண்டையும் தானே செய்வதற்குப் பதிலாக அது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் அது எதிர்பார்த்தது என்னவென்றால்... வீயெம் மாமாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதும், குமரு வீடு கட்டியிருக்கும் இடத்தின் பக்கத்து மனையில் வீயெம் மாமாவுக்கு வீடு கட்டித் தந்து விட வேண்டும் என்பதுதான் என்பதையெல்லாம் நாம் முன்பே கேட்டதுதான்.
            நிச்சயதார்த்தம் வேற்குடியில் இருந்த லாலு மாமாவின் வீட்டில் ஏற்பாடு தடபுடலாக ஏற்பாடு ஆகியிருந்தது. நிச்சயதார்த்ததுக்காக பத்திரிகை அடித்து மண்டபத்தில் வைக்கவில்லையே தவிர மற்றபடி ஒரு கல்யாணத்துக்கு நிகரான ஏற்பாடுகளைச் செய்திருந்தது லாலு மாமா. மேளதாள ஏற்பாடுகள், வாடகைக்குப் பாத்திரப் பண்டங்கள் எடுத்து சமையல்காரர் வைத்து சமையல். வீட்டுக்கு முன்பு பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது. பந்தலில் அவ்வளவு அலங்காரங்கள். பந்தலில் எப்படியும் இருநூறு பேருக்கு மேல் உட்காரலாம் எனும்படியான பந்தல். அது ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக்கூடக் கட்டத்திலேயே சாப்பாடு பரிமாறும் வகையில் மேசை, பெஞ்சுகளை ஏற்பாடு செய்திருந்தது. பதினொரு மணி வாக்கில் மூகூர்த்த ஓலையை எழுதி முடிப்பது எனவும், எழுதி முடித்தவுடன் பனிரெண்டு மணி வாக்கில் மதிய சாப்பாடு சாப்பிடுவது எனவும் திட்டம்.
            இங்கே திட்டையில் பேஸ்மெட் வரை வீடு கட்டப்பட்டு மேற்கொண்டு சுவர் எழும்பிக் கொண்டிருந்ததால் தினம் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றுவது பெரும் வேலையாக இருந்தது. காலையிலும், மாலையிலும் அடி பைப்பிலிருந்து இரண்டு குடங்களில் தண்ணீர் அடித்து இரண்டு குடங்களையும் இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு சுப்பு வாத்தியாருக்கு தண்ணீர் ஊற்றி ஊற்றி மாய்ந்து போக வேண்டியிருந்தது. இதுவரை சுப்பு வாத்தியாரை 'அப்பா' என்று எழுதி வந்ததை இந்த இடத்திலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. 'அம்மா' என்று எழுதி வந்ததை வெங்கு என்று மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. படிப்பவர்களுக்கு இது ஒரு சுயசரிதைத் தன்மையைத் தருவதால் இப்படி ஒரு மாற்றம். அதுவும் இல்லாமல் இப்போது வரும் டி.வி. சீரியல்களில் இவருக்குப் பதில் அவர், அவருக்காக இவர் என்று மாற்றிக் கொள்ளும் காலகட்டத்துக்கு நாம் வந்து விட்டதால், நம்முடைய எழுதுகையிலும் அப்படி ஒரு மாற்றத்தைச் செய்து கொள்வது யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காது என்று நினைக்கிறேன். இந்த வகை கலாச்சார ஆள் மாறாட்ட மாற்றம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரை வரை ஊடுருவி நீங்கள் சாமி2 திரைப்படத்தில் திரிஷாவையே ஐஸ்வர்யாவாக மாற்றியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். நாம் அந்த வகை ஆள்மாறாட்ட கலாச்சாரத்துக்குள் நுழையாமல் உறவுமுறையில் அழைத்து வந்ததைப் பெயராக மாற்றிக் கொள்கிறோம் அவ்வளவுதானே. தவிரவும் அப்பா என்பதையே ஒரு பெயராகக் கொண்டு அப்பா என்ற சுப்பு வாத்தியார், அம்மா என்ற வெங்கு என்று நீங்கள் கொண்டாலும் சரிதான். இதைப் படிப்பதே ஒரு வகை கஷ்டம் என்றாலும், தொடர்ந்து படிப்பவர்களுக்கு நான் இது மாதிரி வேறு கஷ்டத்தைத் தந்து விடக் கூடாது என்பதற்காக இதை இவ்வளவாக சொல்ல வேண்டியதாகி விட்டது. நிறைய வேறு இதை எழுதித் தள்ளி விட்டதால் முன்பு எழுதியவற்றில் எல்லாம் போய் 'அப்பா' என்பதை சுப்பு வாத்தியார் என்றும், அம்மா என்பதை 'வெங்கு' என்று திருத்துவதும் கஷ்ட காரியங்கள். அதனால் இந்தக் கூடுதல் விளக்கத்தை நீங்கள் வேறு வழியில்லாமலாவது பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
            நாம் விசயத்திற்கு வந்து விடுவோம். நிச்சயதார்த்த அன்று தண்ணீர் ஊற்றி முடிப்பதற்குள் 9 மணிக்கு மேலாகி விட்டது. தண்ணீர் ஊற்றுவதற்கு ஆள் போட்டால் அது வேறு கூடுதல் செலவாகி விடும் என்பதால் சுப்பு வாத்தியார் பிற ஆட்களுக்கு அந்தப் பணியை ஒதுக்கவில்லை. தண்ணீரை ஊற்றி முடித்த பின் காலை சாப்பாட்டை முடித்து விட்டு சுப்பு வாத்தியார் வெங்குவையும், செய்யுவையும் டிவியெஸ் பிப்டியில் வேற்குடிக்குக் கொண்டு போய் விட்டு ஆயிற்று. திரும்பி வந்து விகடுவைப் பின்னால் உட்கார அழைத்துக் கொண்டு போவதாக ஏற்பாடு.
            சுப்பு வாத்தியார் திரும்பி வந்த போது மணி அநேகமாக பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வீயெம் மாமா அவசர அவசரமாக பழைய டிவியெஸ் பிப்டி ஒன்றில் சுப்பு வாத்தியார் வாடகைக்குக் குடியிருந்த முல்லேம்பாள் வீட்டுக்கு முன் வந்தது.
            "வாங்கம்பி! நீங்கலாம் மொத ஆளா போயி நிக்காம இங்க வந்த நிக்குறீங்களே?" என்றது சுப்பு வாத்தியார்.
            "நாம்ம வரல்லதான்!" என்றது வீயெம் மாமா.
            "அது ஒரு பழக்கம்தாம்பி! இப்போதாம் எல்லாம் மாறிடுச்சே! நீங்க வாரதால ஒண்ணும் தப்பில்ல!"
            "அந்த வரலங்றத சொல்லல அத்தாம்! நமக்கு இதுல இஷ்டமில்லங்றது சொல்ல வாரேம்!"
            "இந்த நிச்சயம் பிடிக்கலீயா?"
            "அதாங் அத்தாம்!"
            சுப்பு வாத்தியாருக்கு அதிர்ச்சியாய்ப் போய் விட்டது. சுப்பு வாத்தியாரை விதி வளைத்துக் கட்டி விளையாடிய காலம் அது. "அத இப்போ வந்துச் சொன்னா எப்பூடி? அதுவுங் எங்கிட்டாச் சொன்னா எப்பூடீ? பெரியம்பிகிட்ட சொன்னீங்களாம்பி?" என்று அந்த அதிர்ச்சியை வார்த்தைகளாய்த் துப்ப வேண்டியதாகி விட்டது சுப்பு வாத்தியாருக்கு.
            "இல்லத்தான்!" என்றது வீயெம் மாமா ஓர் அசால்ட்டான தொனியோடு.
            "என்னாம்பி! இப்படி இருந்தா ன்னா பண்றது? இப்போ போயி நிச்சயம் வேணாம்னு சொன்னா அசிங்கமாப்பூடாது! ஊருல இருக்குறவங்க, சொந்தக்காரச் சனங்க எல்லாம் சேந்து ஒதைக்காம விட மாட்டாங்க பாருங்க! அங்க என்னென்ன ஏற்பாடுக ஆயிட்டு இருக்குத் தெரியுமா? ஒங்க அண்ணம்கிட்ட மொதல்லயே சொல்லலாமில்லே!"
            "அவேம்கிட்ட மனுஷம் பேச முடியா! இப்போவே அவனுக்கும் அவ்வேம் பொண்டாட்டிக்கும் சண்டெ. அது வர மாட்டேங்குது. இவ்வேம் வரணும்னு ஒரே அடம்! எப்படிச் சொல்றது சொல்லுங்க அத்தாம்!"
            "இன்னும் நிச்சயம் எழுதுறதுக்கு ஒரு மணி நேரம் கூட இல்லே. இப்படி திடுதிப்புன்னா... இத்தே போயி நாஞ் சொன்னா... நம்மள உண்டு இல்லேன்னு பண்ணிட மாட்டாங்களா? ஏற்கனவே லாலு வாத்தியாரு நம்மள வைக்கிறது இல்லேன்னு இருக்காரு!"
            "அதெல்லாம் தெரியாதுத்தாம்! நீங்கதாம் பேசி நிப்பாட்டணும்! முடியுமா முடியாதான்னு பட்டுன்னு சொல்லுங்க!"
            "மொதல்ல வாங்க! நீங்க வந்துச் சொல்லாம நாம் போயிச் சென்னா நம்ம மேல எல்லாருக்கும் வேகம் வரும். நீங்க வாரதுதான் நல்லது. நீங்க வந்து சொல்றதுதாம் மொற. அதுவுமில்லாம நாம போயிச் சொன்னா ஒங்களுக்கு விருப்பம் இருக்குங்ற மாரியும், நாம்ம புகுந்து கலச்சி வுடற மாரியும் ஆயிடும். இதல்லாம் சின்னப் புள்ளிங்க வெளயாட்டு இல்ல. நெனச்சா வையுங்க... நெனக்காட்டி வெக்காதீங்கன்னு சொல்றததுக்கு. ஒங்களுக்குத் தெரிஞ்சுதான எல்லாத்தியும் பேசி முடிச்சாங்க. ஏம் அப்பவே சொல்ல வேண்டிதானே! பொண்ணோட பாவத்த வாங்கி வயித்துல கட்டிக்காதீங்கம்பி!"           
            "சொன்னா புரிஞ்சுக்குங்க அத்தாம்! ஒவ்வொன்னித்தியும் வெளக்கமா சொல்லிட்டு இருக்க முடியா. ஒரு குறிப்பதாம் சொல்ல முடியும்! வாத்தியாரா இருக்கீங்க! இதக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்றீங்க!"
            "ஒங்க மனசுல நெனக்கிறத நாம்ம எப்படிம்பி குறிப்பால புரிஞ்சிக்க முடியும். மொகம், ஒடம்புங்றதுலதான் குறிப்ப புடிக்கலாம். மனசுல இருக்குற குறிப்ப படிக்க நாம்ம ன்னா வெத்தலயில மையி போட்டுப் பாக்குற சாமியாரா ன்னா?"
            "அது ரொம்ப ராங்கி பிடிச்ச பொம்பளன்னு நம்ம கூட்டாளிங்க சொல்றாங்க. அதுவும் ல்லாம பழக்கவழக்க சரியில்லன்னும் பேசிக்கிறாங்க. நாம்ம கட்டிட்டு அழுவ முடியாது பாருங்க!"
            விகடு அவர்கள் இருவரும் பேசுவதை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மெதுவாக, "நீங்களும், மாமாவும்னா வேற்குடி போயிக்கிறீங்களா?" என்றான்.
            "நீ ன்னாடா இப்போ நேரம் கெட்ட நேரத்துல ஒளறிக் கொட்டுறே! இவ்வேம் ஒருத்தம்!" என்றபடி சுப்பு வாத்தியார் பெருமூச்சு விட்டபடி வீட்டின் முல்லேம்பாள் வீட்டின் முன் அப்படியே தரையில் பச்சக் என்று உட்கார வேண்டியதாகி விட்டது. திண்ணையின் வடக்குப் பார்த்த ஓரத்தில் கிடந்த பெஞ்ச் தன் மேல் உட்காரவில்லையே என்று ஏக்கமாகப் பார்த்தது. வெள்ளை வேட்டி அழுக்காகும் என்ற பிரக்ஞையில்லாமல் சுப்பு வாத்தியார் இப்படி உட்காருவதை விகடு இப்போதுதான் முதன் முதலில் பார்க்கிறான்.
            "ஏற்கனவே எல்லாருக்கும் ஆகாம போயிட்டு இருக்கேம். இதுல இது வேறயா?" என்றது அப்பா சன்னமாக தனக்கு மட்டும் கேட்கும் குரலில்.
            "செரி! நீங்க கெளம்புங்கத்தாம்!" என்றது வீயெம் மாமா.
            வீயெம் மாமா இப்படிச் சொன்னதும், தடுமாறி விழுந்தவன் பொசுக்கென்று எழுவதைப் போல எழுந்து சுப்பு வாத்தியார், "என்னம்பி! நிச்சயத்துக்கு சம்மதா?" என்றது.
            "நாம்ம வாரேம் போங்க!" என்றது வீயெம் மாமா.
            "வந்தா சீக்கிரமா நேரத்துக்கு வாரணும். இல்லேன்னா வாராம இருக்கணும்! யோசிச்சு முடிவு பண்ண வெசயத்தை யோசிக்காம பட்டு பட்டுன்னு மாத்தி மாத்தி முடிவு பண்ணப்புடாது. அதுவும் இல்லாம இது பொண்ணு சம்பந்தப்பட்ட வெசயம். ஒரு பொண்ணு வயிறெரிஞ்சா அந்த ஆம்பள உருப்பட மாட்டாம்!"
            "தெரியும்த்தாம்! ச்சும்மா நொய்நொய்னுகிட்டு. கெளம்புங்கத்தாம்!" என்றது வீயெம் மாமா கடுப்போடு.
            இந்தக் கடுப்பான பதில் சுப்பு வாத்தியாரின் மனதில் மீண்டும் திகிலை உண்டாக்கி விட்டது. கிளம்பவும் முடியாமலும், கிளம்பாமல் இருக்கவும் முடியாமலும் ஒரு குழப்பமான மனநிலையில் சுப்பு வாத்தியார் விகடுவை வண்டியின் பின்னால் உட்கார வைத்து டிவியெஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்தது.
            ஒரு பிரளயம் நடக்கப் போவது போன்ற பேரச்சம் மனதில் உண்டானது சுப்பு வாத்தியாருக்கு. எதற்கு தானும், தன் வீட்டுக்காரியும் இந்த விசயத்தில் சம்பந்தப்பட்டு முதன் முதலாக வீயெம்முக்காக குயிலியைக் கேட்டுத் தொலைத்தோம் என்று நொந்தபடியே வேற்குடியை நோக்கி சுப்பு வாத்தியாரின் டிவியெஸ் பிப்டியின் சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன.
*****

சட்டப்படியான அளவு நிலம்



            செத்துப் போனா ஆறடி நிலம்தான்னு சொல்லிப் பாருங்க, யாரும் நம்புறாங்ளான்னு! எரிச்சிட்டா அதுவும் சொந்தமில்ல!
            ஆனா, இதை ரொம்ப நம்புறவங்க மாதிரிச் சொல்லிச் சொல்லி பேசிட்டு இருப்பாங்க பாருங்க! அப்படிப்பட்டவங்க ஒண்ணு இருக்க ஓர் இடம் இருந்து இன்னொரு இடத்தை வாங்கிப் போட துடிக்கிறவங்களா இருக்காங்க, அல்லது இருக்க ஏகப்பட்ட இடங்கள வாங்கிப் போட்டு, இன்னும் ஏகப்பட்டதை வாங்க முடியலேன்னு கவலையில இருக்கிறவங்களா இருக்காங்க. இருக்கிறதுக்கு ஓர் இடம் கூட இல்லாமல், எங்கெங்கோ வாழ்ந்து, எங்கெங்கோ செத்துப் போறவங்க யாரும் அதப் பத்தியெல்லாம் பேசுறதே இல்ல. அவங்களுக்கு இருக்கிறப்பவே ஓர் இடம் நிரந்தரம் இல்ல, இதுல செத்துப் போனதுக்கு அப்புறம் எங்கே இடம் இருக்கப் போவுதுன்னு நினைப்பா இருக்கும்.
            நிலம், சொத்து, பணம், பவுன் எல்லாம் மனிதனுக்கு வாழ்கின்ற வரைக்கும் பயன்படுகின்றன. செத்தப் பின் காதில் போட்டிருக்கும் கடுக்கன் முதற்கொண்டு கழற்றிப் போட்டு விட்டுதான் மண்ணில் போடுகிறார்கள். செத்தப் பின்னும் வாழ்வதைப் போல சிலர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துப் பத்துகளைப் பார்த்தால் சாவே அவங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க முடிவு பண்ணியிருப்பாங்க போல.
            சொத்துப் பத்துகளைச் சேர்த்து வைப்பதில் மனிதர்களுக்கு ஓர் ஆசை. ஆசைன்னா எப்படின்னு நீங்க தெரிஞ்சிக்கணும். உசிரை வேணும்னா எடுத்துக்குங்க, சொத்துப் பத்துகளை மட்டும் விட்டுடுங்க என்கிற மாதிரி ஆசை.
            விசயம் இதுதான்! உயிரை விட்டால்தான் ஆசை விட்டுப் போகிறது பலருக்கு. உயிரோடு இருக்கும் போதே ஆசையை அளவோடு வைத்து, அளவுக்கு மீறிய ஆசையை விட்டு விடுவது பல பேருக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் போது ஆசையை விட முடியாமல், அந்த அளவுக்கு மீறிய ஆசையால் உயிரை விட்டவர்களில் நம்ம ஊரு ஜம்புலிங்கம் ஒருத்தர்.
            ஆள் டவுனில் ஒரு ப்ளாட்டை வாங்குவதற்காக பெருந்தொகையை முன்பணமாகக் கொடுத்து விட்டார். அப்புறம் ஏனோ அந்த ப்ளாட்டை வாங்கப் பிடிக்காமல் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். "பாக்கிப் பணத்தைக் கொடுத்து விட்டு ப்ளாட்டை வாங்கிக் கொள்வதென்றால் வாங்கிக் கொள், கைக்கு வந்த காசைக் கொடுக்க முடியாது" என்று ப்ளாட்டை விற்றவர்கள் பேசியிருந்திருக்கிறார்கள்.
            நம்ம ஜம்புலிங்கமா விடுவார்? ஆட்களைக் கொண்டு போய் பஞ்சாயத்து வைத்துப் பார்த்தார். எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி தரப் பட மாட்டாது என்று நூறு ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டிருந்த வாசகத்தைக் காட்டியே ப்ளாட்டை விற்றப் பார்ட்டிகள் பஞ்சாயத்துக்குப் போனவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
            "அந்த ப்ளாட் எங் கைக்கு வந்தா நாஞ் செத்துப் போயிடுவேன்னு ஜோசியக்காரன் சொல்லிட்டாப்ல!" என்று புலம்பிக் கொண்டே இருந்தார் ஜம்புலிங்கம். இது ஜோசியக்காரர் சொன்னதா? ஜம்புலிங்கமா அடித்து விடுகிறாரா? என்ற குழப்பம் வேறு எல்லாருக்கும்.
            இப்படி ஜோசியப் புலம்பல் ஒரு பக்கம். அத்துடன் பணம் வராத ஏக்கம் வேறு. ஒரு நாள் வீட்டுக்குள் நடக்கும் போதே தடுமாறி விழுந்தார் ஜம்புலிங்கம். திருவாரூரில் மெடிக்கல் காலேஜ் இருந்தும், தஞ்சாவூரில் பிரபலமான ஆஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்தோம். ஒரு வார காலம் கோமாவில் கிடந்து அந்த ப்ளாட்டு கைக்கு வராமலே ப்ளாட் ஆகி விட்டார் ஜம்புலிங்கம்.
            "ஜம்புலிங்கமே அரோகரா! ‍ஜோதிலிங்கமே அரோகரா!" என்ற பெருத்த ஆரவாரத்தோடு சுடுகாடு போய்ச் சேர்ந்து விட்டார் ஜம்புலிங்கம்.
*****

4 Jun 2019

முளைக்கத் தொடங்கிய வீடு



செய்யு - 105
            புது வீடாக எடுத்துக் கட்டுவது என்று முடிவானவுடன் கொல்லைப் பகுதி மணலால் நிரம்பியது. ஐந்து மாட்டுவண்டிக்காரர்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை என்ற வகையில் மணலைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தனர். வெண்ணாற்றில் அப்போதே மணல் இல்லை. எல்லாம் ஓகையூர், ஊட்டியாணி வழியே ஓடிக் கொண்டிருந்த வெள்ளையாற்றின் மணல். ஒரு வண்டி மணல் அப்போது ரூபாய் நூற்றைம்பது என்று ஞாபகம்.இப்போது அதே மணல் ஆயிரத்து ஐநூறிலிருந்து இரண்டாயிரம் வரை போகிறது. தவிர மாட்டு வண்டிகளும் இப்போது இல்லை. டாட்டா ஏஸில் கொண்டு வந்து அடிக்கிறார்கள். 
            வீடு கட்ட தோதாக செங்கற்களையும் வரிசையாக ரோட்டோரத்தில் கட்டாயம் போட்டு அடுக்கி வைத்தாயிற்று. இந்தக் கிராமத்தில் இப்படித்தான் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டடால் சன்னம் சன்னமாய் இவைகளையெல்லாம் வாங்கிப் போட்டு விடுவார்கள். பக்கத்துத் தெருவில் சின்னமுத்து கோனார் கூட இப்படித்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வீட்டுக் கொல்லையில் மணல் அடித்து, செங்கற்களை வாங்கி வைத்தார். அதற்கு மேல் அவரால் முடியாமல் போய் விட்டது. கொல்லையில் கொட்டியிருந்த மணல் முழுவதும் புல்லும் செடியுமாக மண்டிக் கிடக்கின்றன. செங்கற்களிலும் பாசி படிந்து கிடக்கிறது. சின்னமுத்துக் கோனாரிடம் கேட்டால், "வாங்கி வெச்சு வீணாப் போறப் பண்டமா? அது பாட்டுக்குக் கெடக்குது. அப்போ மணலு ஒரு வண்டி முப்பது ரூவாய்க்கு அடிச்சேம். இப்போ ன்னா ரேட்டு? மறுபடியும் தேவயில்லன்னு வித்தாக் கூட லாபந்தேம்!" என்றார்.
            இந்தத் தெருவைப் பொருத்த வரையில் செய்யுவின் வீடு மூன்றாவது மாடி வீடு. முதல் மாடி வீடு வேதப்பன் அப்பா காலத்தில் போடப்பட்டது. லிண்டல் வரை நின்றிருந்த அந்த வீடு அதற்கு மேல் கூரை வீடாக வெகு காலத்துக்கு இருந்தது. அந்த வீட்டுக்கு மனைப் போடப்பட்டு பத்தாண்டுகள் கழித்து மனை போட்ட முல்லேம்பாள் ஆத்தாவும், அவரது வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி தாத்தாவும் ஒன்பது மாதங்களுக்குள் கட்டி முடித்தனர். அந்த வகையில் தெருவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட மாடி வீடு என்றால் அது இரண்டாவது மனைப் போடப்பட்டு முதலாக கட்டி முடிக்கப்பட்ட முல்லேம்பாள் ஆத்தாவின் வீடுதான். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பின்தான் வேதப்பன் தலையெடுத்து காங்கிரீட் ரூப் போட்டு வீட்டை மாடி வீடாகக் கட்டி முடித்தது. இப்படி முதல் வீடாக மனைப் போடப்பட்டு தெருவுக்கு இரண்டாவது அது கட்டி முடிக்கப்பட்டது. இப்போது மூன்றாவது வீடாக செய்யுவின் வீட்டுக்கு மனை போடப்பட்டது.
            பொதுவாக வீடு கட்டுபவர்கள் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் போது கொல்லையின் ஓரத்தில் சிறியதாக ஒரு கொட்டகைப் போட்டுக் கொள்வார்கள். வீடு கட்டி முடிக்கும் வரை அதில்தான் குடி. ஆனால் அப்பா வீடு கட்ட ஆரம்பித்த நேரத்தில் தெருவின் முதல் மாடி வீடாகக் கட்டி முடித்த முல்லேம்பாள் ஆத்தாவின் வீட்டில் அது மட்டும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தி தாத்தா ரெண்டு வருசத்துக்கு முன் இறந்து போயிருந்தார். வீடு கட்டப் போவது தெரிந்ததும் அந்த ஆத்தாவே வந்து கேட்டது. "வேணும்னா வூட்ட கட்டி முடிக்குற வரிக்கும் நம்ம வூட்டுல இருந்துக்குங்க. வாடகப் பணம் போட்டுக் கொடுத்தீங்கன்னா செலவுக்காகும்!"
            இது நல்ல யோசனையாகப் பட்டது அப்பாவுக்கு. அப்போது பேசி முடித்து பத்து மாதங்களுக்கு நான்காயிரத்து ஐநூறு ரூபாய் வாடகையை மொத்தமாக கையில் வாங்கிக் கொண்டது முல்லேம்பாள் ஆத்தா. நல்ல பெரிய மாடி வீடு அது. அதில் திண்ணை, ஹால், சமையற்கட்டோடு சேர்த்து மூன்று ரூம்கள். முல்லேம்பாள் ஆத்தா ஒரு ரூமில் இருந்து கொண்டு, வீடு முழுவதையும் புழங்கிக் கொள்ளச் சொல்லி விட்டது. இப்படி மாடி வீட்டில் குடியேறிக் கொண்டு மாடி வீடு கட்டும் பாக்கியம் அதற்குப் பின் தெருவில் யாருக்கும் கிடைக்கவில்லை.
            வீட்டின் முன்னே செங்கல் கட்டாயங்களும், கொல்லையில் மணலும் ஏற்பாடான ஒரு மாதத்துக்குப் பின் வீட்டு வேலைகள் ஆரம்பித்தன. கிட்டதட்ட இந்தப் பகுதியின் வீடு கட்டும் விதத்தை வைத்தி தாத்தாவின் வீடு கட்டப்படும் போதே ஒரு பார்வை பார்த்ததுதான். ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் வைத்தி தாத்தா வீடு கட்டப்பட்ட போது ஒன்பதடி ஆழத்துக்குப் போடப்பட்ட போஸ்ட்டுகள் இப்போது ஆறடி ஆழத்தோடு நின்று கொண்டது அவ்வளவுதான்.
            தெருவுக்கு வெளியே வித்தியாசமாக நீட்டிக் கொண்டிருந்த வீடுதான் விகடுவின் வீடாகச் சொல்லப்பட்டு, செய்யு பிறந்ததற்குப் பின் செய்யுவின் வீடாக அடையாளப்படுத்தபட்டிருந்தது. அந்த திண்ணைப் பகுதி மட்டும் அப்படியே விடப்பட்டு வீட்டின் மற்றப் பகுதிகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. வீட்டின் மண்சுவர் இடிக்கப்பட்டு கொல்லையின் கடைசியில் கொட்டப்பட்டு மேடானது. கூரைக்கான மூங்கில்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான சாரமாக நின்றது.
            மாட்டுக் கொட்டகை மட்டும் கூரையோடு அப்படியே தூக்கப்பட்டு கொல்லையின் கடைசிக்குப் போனது. கருப்பு மாடு போட்டிருந்த அதைப் போன்ற நிறத்திலிருந்து மூக்குப் பெருத்த ப்ரிசியின் கன்று நன்றாக வளர்ந்திருந்தது. சினைபடாமல் ரொம்ப காலத்துக்கு நின்றிருந்த கருப்பின் மூத்த கன்று சினை பட்டதும் அது விற்கப்பட்டிருந்தது. வெள்ளையாக நின்றிருந்த கருப்பின் இரண்டாவது கன்றான அம்முவின் கன்றும் விற்கப்பட்டிருந்தது. அம்மு சினைப்பட்டிருந்தது. மொத்தத்தில் மூன்று மாடுகள் அப்போது நின்றிருந்தன. இந்த மூன்றையும் நடுராத்திரியில் அவ்வபோது எழுந்து வந்து பார்த்து வராவிட்டால் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ நிம்மதியான தூக்கம் வராது. எப்படியும் ராப்பொழுதில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் எழுந்து பார்த்து வந்து விடுவது ஒரு பழக்கமாகவே போய் விட்டது. அப்படி எழுந்து வந்து பார்க்கும் போது அந்த மாடுகள் "ம்மா..." என்று எழுப்பும் சத்தம் நள்ளிரவில் நான்கு தெருக்களைத் தாண்டிக் கேட்கும். பொதுவாக கிராமத்தில் மாடு வளர்க்கும் எல்லாருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. நள்ளிரவில் விழித்திருந்தால் இப்படி மாடு கத்தும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்னவோ ஆலைச் சங்கு ஊதுவதைப் போல மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருக்கும்.
            "ஏம் இப்படி நட்டநடு ராத்திரில பேயி மாரி முழிச்சிட்டு மாடுகள இப்படி கத்த வுடுறீய?" என்று கேட்டால், "பழக்கமாயிட்டுடாம்பி! மாடுக சமயத்துல கயித்தோட சிக்கிக்கிம். பக்கத்துல இருக்குற மாட்டோட கொம்பு போட்டு மாட்டிக்கும். அப்பைக்கப்ப ராமுழி முழிச்சிக் கண்ணும் கருத்துமா பாத்துக்கணும்டாம்பி! மாடுன்னா அப்படி பாத்துட்டே இருக்கணும்டாம்பி!" என்பார்கள்.
            சிங்காரவேல் கொத்தனாரின் மகன்களில் ஒருவரான ஆறுமுகவேலை மேஸ்திரியாக குமரு மாமா ஏற்பாடு செய்திருந்தது. ஆறுமுகவேல் கொத்தனாருக்கு ஒரு காது சரியாகக் கேட்காது. அது வேலை பிசகியதால் அவரது அப்பாவான சிங்காரவேல் கொத்தனாரிடம் வாங்கிய அடியால் செவிடாகிப் போயிருந்தது. ஏதாவது செய்தியைக் கேட்பதென்றால் காதில் கையை அணைத்து வைத்தபடிதான் அது கேட்கும். அதற்கு ஒரு விசயத்தைச் சொல்லி விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். "ன்னடாம்பி ஓம் நெலம இப்படி ஆயிப் போச்சேடா!" என்ற அம்மா கேட்டால், "காது சரியாக்க கேட்டா, பேச்சுப் பராக்குல வேல கொளறிடும். இதாஞ் சரி!" என்று சொல்லும் ஆறுமுகவேல். ஆறுமுகவேலுக்குக் காலைப் பொழுதில் வேலை ஒரு வேகத்தில் கிளம்பாது. மந்தக் கதியில் ஓடிக் கொண்டிருக்கும். சாயுங்காலம் நான்கு மணியானால்தான் வேலை புரியும். அடுத்து இரண்டு மணி நேரங்களுக்கு அது அசுர‍ வேகத்தில் பார்க்கும் வேலை காலையிலிருந்து நான்கு மணி வரைப் பார்க்கும் வேலைக்கும் சமானமாக இருக்கும்.
            வேலை ஆரம்பித்த பத்து நாட்களுக்குள்ளாக குழியைத் தோண்டி போஸ்ட்டை நிறுத்தி, பேஸ்மெட் வரை கொண்டு வந்து விட்டது ஆறுமுகவேல் கொத்தனார். வெள்ளையாற்றில் தட்டுபாடின்றிக் கிடைத்த மணலால், மீண்டும் மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு வரப்பட்டு, பேஸ்மெட் வரை மணல் கொட்டி தண்ணீரை நிறுத்தி பாறைக்கோல் போடப்பட்டு வேலைகள் வெகு நேர்த்தியாக நடந்து, தளத்துக்கு ஏற்றாற் போல ஒரு செங்கல்லும் போடப்பட்டது.
            பேஸ்மெட் முடிந்ததும் குமரு மாமாவே தாய்நிலையைத் தயார் செய்து தூக்கிக் கொண்டு வைத்தது. மரவேலைக்காக அப்போது இருபதாயிரம் ரூபாய்க்கு திருவாரூர் மரவாடியில் மலேசியன் வேங்கை மரத்தை எடுத்து அறுக்கப்பட்டது. புது வீட்டுக்குத் தேவையான அனைத்து நிலை, சன்னல், கதவுகளுக்கான அத்தனைச் சட்டங்களும், பலகைகளும், எடுத்து அறுத்து அந்த மரத்திலேயே எவ்வித பழுதும் இல்லாமல் கிடைத்தன. இப்படி மரம் எடுத்து அறுப்பதில் ஒரு கஷ்டம் மற்றும் நஷ்டம் என்னவென்றால் மரம் பழுதில்லாமல் அமைய வேண்டும் என்பதுதான். அப்படிப் பழுதில்லாமல் அமைந்து விட்டால் நல்ல லாபம்தான். ஒரு வேளை மரத்துக்கு வெளியே தெரியாமல், ஆனால் உள்ளே குடைவாகவோ, பூச்சியரித்தோ இருந்தால் அது வாங்கியவரின் தலையில் விடிந்து விடும். இதற்குக் கட்டுபட்டுதான் மரம் அறுக்க வேண்டும். இதற்கு யோசனை பண்ணிக் கொண்டே பலர் மரத்தை எடுத்து அறுக்காமல் நேரடியாக சட்டங்களாகவும், பலகைகளாகவும் வாங்கி விடுவர். சட்டங்களையும், பலகைகளையும் அப்படி நேரடியாக வாங்கும் போது அது பெருந்தொகையை முழுங்கி விடும்.
            இருக்கின்ற காசில் வீட்டைக் கட்டி முடித்து விட வேண்டும் என்ற கங்கணத்தில் இருந்த அப்பாவும், குமரு மாமாவும் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று மரத்தை எடுத்து அறுப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர். நல்லவேளையாக எடுத்து அறுத்த மரத்தில் எந்த வித பழுதும் இல்லாமல் மொத்த வீட்டுக்கும் தேவையான அனைத்து மரச்சாமான்களுக்கும் இருபதாயிரத்தில் எடுத்து அறுத்த அந்த வேங்கை மரத் துண்டே போதுமானதாக இருந்தது.
            அப்போது வீடு கட்டும் போது நிலை, சன்னல் இவைகளை வைத்துச் சுவரை எழுப்பிக் கட்டுவதே வழக்கமாக இருந்தது. அத்துடன் நிலை, சன்னல்களில் வெண்டிலேசனும் உண்டு. அந்த முறைப்படி அந்தத் தெருவில் அப்படி வீடு கட்டிய கடைசி வீடாக செய்யுவின் வீடுதான் இருந்தது. அதற்குப் பின் எதிரே வீடு கட்டிய கண்ணாயிரம், பக்கத்தில் வீடு கட்டிய அய்யாவு உட்பட எல்லாரும் சுவரையெல்லாம் எழுப்பி பூச்சு வேலைக்கு முன்பாகத்தான் நிலை, சன்னல்களை வைத்துக் கட்டினார்கள். நிலை, சன்னல்களில் யாரும் வெண்டிலேசன்கள் வைக்கவில்லை. தாய்நிலையைத் தவிர மற்ற நிலைகளில் நிலைப்படி வைக்கும் வழக்கமும் மாறியிருந்தது.
            வீட்டின் நிலையைத் தூக்கி வைத்த பின் வித்தியாசமான பல நிகழ்வுகள் நிகழ ஆரம்பித்தன. ‍"அந்த நெல தூக்கி வெச்ச நேரம்..." என்ற ஆரம்பித்து இப்போதும் அந்த நிகழ்ச்சிகளை அம்மா சிரித்துக் கொண்டே ஒரு வித வேதனையோடு சொல்லிக் கொண்டிருக்கும்.
            அந்த நிலை தூக்கி வைத்த எட்டாவது நாளில்தான் வீயெம் மாமாவுக்கும், குயிலிக்கும் நிச்சயதார்த்தம் நடப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குமரு மாமா நேரடியாக காரியத்தில் இறங்கியது. அது தன்னிசையாகச் செயல்பட ஆரம்பித்தது. அது தானே லாலு மாமாவிடம் பேசி நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாட்டைச் செய்து வந்திருந்தது. இது லாலு மாமாவுக்கும் ரொம்ப வசதியாகப் போனது. அத்துடன் ரொம்ப பெருமையாக, "ஒங்க வூட்டு நெலய தூக்கி வெச்ச நேரத்திலதான் அத்தாம் தம்பியோட நிச்சயதார்த்தம் நடக்கணும்னு இருந்திருக்கு! அந்தப் பயலோட கல்யாணத்தை முடிச்சி, ஒங்க வூட்டைக் கட்டி முடிச்சிட்டா நம்மோட முக்கியமான கடமெ முடியுதுத்தாம்!" என்றது குமரு மாமா.
*****

அலைந்து திரியும் ஆடு மாடுகள்!



            நம்ம மேல வெயிலுக்கு மட்டும்தான் இரக்கம் போல. பாரபட்சம் இல்லாம எறங்கி அடிக்கிது. மழைக்குக் கொஞ்சம் கூட இரக்கமில்ல. என்ன கோபத்துல எந்த ஊருல போயி அநாதியா பெஞ்சிட்டு இருக்கோ!
            இப்பிடி ஊரு காஞ்சுப் போயி கெடந்தா ஆடு, மாடுக என்ன பண்ணும்? இப்போ நம்ம ஊருல பழக்கம் பாருங்க! யாரும் ஆட்டையோ, மாட்டையோ கட்டுறதில்ல. எல்லாம் அது பாட்டுக்கு ராத்திரி முச்சூடும் தெருவ சுத்திட்டே நிக்குதுங்க. இது மாரி டவுன்ல மாடுக சுத்திப் பாத்ததுதான். இப்போ கிராமத்துலயும் டவுனப் பாத்து கத்துகிட்டாங்க போலருக்கு.
            முன்னாடி இது மாரி கோயிலு மாடும், அய்யனாருக்கு நேந்து விட்ட ஆடுக மட்டுந்தாம் அலயும். ஆனால் இப்போ எல்லா ஆடு, மாடுகளும் கோயிலுக்கு நேந்து விட்டக் கணக்கா அலயுதுங்க. இதுல மாடுங்க இருக்கே, அதுங்க வேலி கொஞ்சம் சாஞ்சிருந்தா போதும் வேலி மேல ஏறி வந்து ஏதோ கொஞ்சம் நஞ்சம் பச்சையா தெரியுற செடிகளயும் தின்னு வெச்சுபுட்டு சாணிய போட்டுட்டுப் போயிடுதுங்க.
            ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த கிருட்டி இப்போ இருந்தா இந்த மாரி சம்பவங்க நடக்குமுங்களா சொல்லுங்க. அப்படியே குந்துனாப்புல உக்காந்துட்டே யாருக்கும் தெரியாமல் கொட்டில்ல புகுந்து கிருட்டி  அப்படியே ஆடு, மாடுகள தூக்கி வித்துட்டுப் போயிடுவாப்ல. இப்போ இது மாரி ஆடு, மாடுக திரியுதுன்னு தெரிஞ்சா கிருட்டிக்கு ரொம்ப கொண்டாட்டாமா போயிருக்கும்.
            இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரியாமல கிருட்டி மாரடைப்புல செத்துப் போவாப்லன்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க!
            ஊருல இருக்குற ஆடு, மாடுகள தன்னோடது மாரி நெனச்சிக்கிட்டு இந்த கிருட்டிப் பய வித்துட்டு இருக்கிறானேன்னு, இந்த ஊருக்காரகத்தான் அப்போ கிருட்டிய பிடிச்சு போலீஸ் ஸ்டேசன்ல போட்டு திருச்சி ஜெயிலுக்கு போற மாரி பண்ணிட்டாங்க. அதுல மனசொடிஞ்சுப் போன கிருட்டிதான் விடுதலையாயி வந்த கொஞ்ச நாள்ல மனசு திருந்திப் போயி மாரடைப்புல போயிச் சேந்துட்டாப்புல.
            இப்போ இந்த ஊரு மக்க பேசிக்கிற பேச்சு இருக்கே, "அந்தக் கிருட்டிப்பய இருந்தாத்தாம் இந்த ஊரு பய மக்களோட ஆடு, மாடுக அடங்கும்!" அப்பிடின்னு பேசிட்டு திரியுதுங்க!
*****