7 Jun 2019

எல்லா பிரச்சனைக்கும் ஒரே வாக்கியம்!



            "எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்கிற மாதிரி ஒரு வாக்கியம் இருந்தால் சொல்லுங்கள்!" என்றான் வாதாமடக்கி.
            மருந்துகளில் சர்வரோக நிவாரணி என்று ஏதாவது இருக்கும். வாக்கியங்களிலுமா அப்படி ஏதேனும் இருக்கும்?
            ஏற்கனவே கதைகளில், 'இதுவும் கடந்து போகும்!', 'எதுவும் கடந்து போகும்!' என்கிற மாதிரியான வாக்கியங்கள் சொல்லப்பட்டிருப்பது விகடமுனிக்கு ஞாபகத்தில் வந்து போனது. அவ்வாக்கியங்களே அருமையான வாக்கியங்கள்தான். துயரத்தில் வந்து நிற்கின்றவனுக்கு 'போகும்' என்ற சொல்லோடு ஒரு வாக்கியம் சொல்வதே மகிமையானதுதான்.
            அந்த வாக்கியங்களைக் கேட்டு வாதாமடக்கியும் கடந்து போய் விட்டால் நல்லது. இதுதான் விகடமுனி முதலில் நினைத்தது. ஆனால் விகடமுனியையும் அறியாமல், "தேவைகள் குறைவு! ஆடம்பரங்கள் அதிகம்!" என்ற வாக்கியத்தைச் சொல்லும்படி ஆகி விட்டது.
            ஓர் அரசமரத்தின் கீழே ஒரு சிறு வீட்டை அமைத்துக் கொண்ட விகடமுனியின் அந்த வாக்கியம் பளாரென வாதாமடக்கியைத் தாக்கியிருக்க வேண்டும். ஆள் வெடித்துச் சிதறி விட்டான்.
            "சரிதான்! மெத்த சரி!" என்றான் வாதாமடக்கி.
            ஓர் ஆலமரத்தின் கீழோ அல்லது அரச மரத்தின் கீழே அல்லது ஒரு வேப்ப மரத்தின் கீழோ சிறு குடிலை அமைத்துக் கொள்ளும் போது ஏ.சி.யின் தேவையில்லாமல் போய் விடுகிறது.
            எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் போது வாகனங்களின் தேவையில்லாமல் போய் விடுகிறது. சுகரோ, பி.பி.யோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
            எளிமையான உணவு, உடை, எளிமையான சம்பிரதாயங்கள் அல்லது வறட்டுத்தனமான சம்பிரதாயங்களற்ற வாழ்வு என்று ஆகி விடும் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆகி விடுகிறது. முக்கியமாக யாருக்கும் பொறாமை உண்டாகாமல் போய் விடுகிறது. எளிமையாக வாழ்வதைப் பார்த்து யார் பொறமைப்பட முடியும் சொல்லுங்கள்? அப்படியே பொறாமைப்பட்டு எளிமைக்கு மாறினாலும் அதுவும் நன்மைதான்.
            வாதாமடக்கிக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்க வேண்டும். ஆடம்பரங்களால் உண்டான பிரச்சனையை அவர் புரிந்திருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பார்த்த போது பிரச்சனைகள் குறைவதைப் போலிருந்தது. அறவே விட்ட போது பிரச்சனைகளே விட்டது போலிருந்தது.
            வாதாமடக்கி கோர்ட் சூட்டுகளை விட்டு விட்டு, கார் கப்படாக்களை விட்டு விட்டு, ஆடம்பர ஏ.சி. மாளிகளை விட்டு விட்டு ரொம்ப எளிமையாக ஆகி விட்டார். அவர் இப்படி கார்பன் - டை - ஆக்ஸைடு, குளோரோ ப்ளோரோ கார்பன், சாயக் கழிவுகள் என்று உருவாகக் காரணமாகி இந்தப் பூமியையும், பிரபஞ்சத்தையும் டிஸ்டர்ப் பண்ணாததால், அவரும் டிஸ்டர்ப் இல்லாமல் ஆகி விட்டார். ஆனால் ஊர் உலகம் பேசிக் கொள்வது வேறு. அவர் இதையும் ஒரு டிரெண்டிங் ஆக்குகிறார் என்பதாகப் பேசிக் கொள்கிறது. இந்தப் பேச்சுதான் வாதாமடக்கியை இப்போது டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கிறது. நல்லவேளையாக விகடமுனி எந்தவிதத்திலும் பிரபல்யம் ஆகாமல் தப்பிப்பத்தால், டிரெண்டிங் ஆக்குவதாக இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எந்நேரமும் ஒரே ஹாயோ ஹாய்தான்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...