5 Jun 2019

சட்டப்படியான அளவு நிலம்



            செத்துப் போனா ஆறடி நிலம்தான்னு சொல்லிப் பாருங்க, யாரும் நம்புறாங்ளான்னு! எரிச்சிட்டா அதுவும் சொந்தமில்ல!
            ஆனா, இதை ரொம்ப நம்புறவங்க மாதிரிச் சொல்லிச் சொல்லி பேசிட்டு இருப்பாங்க பாருங்க! அப்படிப்பட்டவங்க ஒண்ணு இருக்க ஓர் இடம் இருந்து இன்னொரு இடத்தை வாங்கிப் போட துடிக்கிறவங்களா இருக்காங்க, அல்லது இருக்க ஏகப்பட்ட இடங்கள வாங்கிப் போட்டு, இன்னும் ஏகப்பட்டதை வாங்க முடியலேன்னு கவலையில இருக்கிறவங்களா இருக்காங்க. இருக்கிறதுக்கு ஓர் இடம் கூட இல்லாமல், எங்கெங்கோ வாழ்ந்து, எங்கெங்கோ செத்துப் போறவங்க யாரும் அதப் பத்தியெல்லாம் பேசுறதே இல்ல. அவங்களுக்கு இருக்கிறப்பவே ஓர் இடம் நிரந்தரம் இல்ல, இதுல செத்துப் போனதுக்கு அப்புறம் எங்கே இடம் இருக்கப் போவுதுன்னு நினைப்பா இருக்கும்.
            நிலம், சொத்து, பணம், பவுன் எல்லாம் மனிதனுக்கு வாழ்கின்ற வரைக்கும் பயன்படுகின்றன. செத்தப் பின் காதில் போட்டிருக்கும் கடுக்கன் முதற்கொண்டு கழற்றிப் போட்டு விட்டுதான் மண்ணில் போடுகிறார்கள். செத்தப் பின்னும் வாழ்வதைப் போல சிலர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துப் பத்துகளைப் பார்த்தால் சாவே அவங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க முடிவு பண்ணியிருப்பாங்க போல.
            சொத்துப் பத்துகளைச் சேர்த்து வைப்பதில் மனிதர்களுக்கு ஓர் ஆசை. ஆசைன்னா எப்படின்னு நீங்க தெரிஞ்சிக்கணும். உசிரை வேணும்னா எடுத்துக்குங்க, சொத்துப் பத்துகளை மட்டும் விட்டுடுங்க என்கிற மாதிரி ஆசை.
            விசயம் இதுதான்! உயிரை விட்டால்தான் ஆசை விட்டுப் போகிறது பலருக்கு. உயிரோடு இருக்கும் போதே ஆசையை அளவோடு வைத்து, அளவுக்கு மீறிய ஆசையை விட்டு விடுவது பல பேருக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் போது ஆசையை விட முடியாமல், அந்த அளவுக்கு மீறிய ஆசையால் உயிரை விட்டவர்களில் நம்ம ஊரு ஜம்புலிங்கம் ஒருத்தர்.
            ஆள் டவுனில் ஒரு ப்ளாட்டை வாங்குவதற்காக பெருந்தொகையை முன்பணமாகக் கொடுத்து விட்டார். அப்புறம் ஏனோ அந்த ப்ளாட்டை வாங்கப் பிடிக்காமல் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். "பாக்கிப் பணத்தைக் கொடுத்து விட்டு ப்ளாட்டை வாங்கிக் கொள்வதென்றால் வாங்கிக் கொள், கைக்கு வந்த காசைக் கொடுக்க முடியாது" என்று ப்ளாட்டை விற்றவர்கள் பேசியிருந்திருக்கிறார்கள்.
            நம்ம ஜம்புலிங்கமா விடுவார்? ஆட்களைக் கொண்டு போய் பஞ்சாயத்து வைத்துப் பார்த்தார். எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி தரப் பட மாட்டாது என்று நூறு ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டிருந்த வாசகத்தைக் காட்டியே ப்ளாட்டை விற்றப் பார்ட்டிகள் பஞ்சாயத்துக்குப் போனவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
            "அந்த ப்ளாட் எங் கைக்கு வந்தா நாஞ் செத்துப் போயிடுவேன்னு ஜோசியக்காரன் சொல்லிட்டாப்ல!" என்று புலம்பிக் கொண்டே இருந்தார் ஜம்புலிங்கம். இது ஜோசியக்காரர் சொன்னதா? ஜம்புலிங்கமா அடித்து விடுகிறாரா? என்ற குழப்பம் வேறு எல்லாருக்கும்.
            இப்படி ஜோசியப் புலம்பல் ஒரு பக்கம். அத்துடன் பணம் வராத ஏக்கம் வேறு. ஒரு நாள் வீட்டுக்குள் நடக்கும் போதே தடுமாறி விழுந்தார் ஜம்புலிங்கம். திருவாரூரில் மெடிக்கல் காலேஜ் இருந்தும், தஞ்சாவூரில் பிரபலமான ஆஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்தோம். ஒரு வார காலம் கோமாவில் கிடந்து அந்த ப்ளாட்டு கைக்கு வராமலே ப்ளாட் ஆகி விட்டார் ஜம்புலிங்கம்.
            "ஜம்புலிங்கமே அரோகரா! ‍ஜோதிலிங்கமே அரோகரா!" என்ற பெருத்த ஆரவாரத்தோடு சுடுகாடு போய்ச் சேர்ந்து விட்டார் ஜம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...