4 Jun 2019

முளைக்கத் தொடங்கிய வீடு



செய்யு - 105
            புது வீடாக எடுத்துக் கட்டுவது என்று முடிவானவுடன் கொல்லைப் பகுதி மணலால் நிரம்பியது. ஐந்து மாட்டுவண்டிக்காரர்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை என்ற வகையில் மணலைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தனர். வெண்ணாற்றில் அப்போதே மணல் இல்லை. எல்லாம் ஓகையூர், ஊட்டியாணி வழியே ஓடிக் கொண்டிருந்த வெள்ளையாற்றின் மணல். ஒரு வண்டி மணல் அப்போது ரூபாய் நூற்றைம்பது என்று ஞாபகம்.இப்போது அதே மணல் ஆயிரத்து ஐநூறிலிருந்து இரண்டாயிரம் வரை போகிறது. தவிர மாட்டு வண்டிகளும் இப்போது இல்லை. டாட்டா ஏஸில் கொண்டு வந்து அடிக்கிறார்கள். 
            வீடு கட்ட தோதாக செங்கற்களையும் வரிசையாக ரோட்டோரத்தில் கட்டாயம் போட்டு அடுக்கி வைத்தாயிற்று. இந்தக் கிராமத்தில் இப்படித்தான் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டடால் சன்னம் சன்னமாய் இவைகளையெல்லாம் வாங்கிப் போட்டு விடுவார்கள். பக்கத்துத் தெருவில் சின்னமுத்து கோனார் கூட இப்படித்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வீட்டுக் கொல்லையில் மணல் அடித்து, செங்கற்களை வாங்கி வைத்தார். அதற்கு மேல் அவரால் முடியாமல் போய் விட்டது. கொல்லையில் கொட்டியிருந்த மணல் முழுவதும் புல்லும் செடியுமாக மண்டிக் கிடக்கின்றன. செங்கற்களிலும் பாசி படிந்து கிடக்கிறது. சின்னமுத்துக் கோனாரிடம் கேட்டால், "வாங்கி வெச்சு வீணாப் போறப் பண்டமா? அது பாட்டுக்குக் கெடக்குது. அப்போ மணலு ஒரு வண்டி முப்பது ரூவாய்க்கு அடிச்சேம். இப்போ ன்னா ரேட்டு? மறுபடியும் தேவயில்லன்னு வித்தாக் கூட லாபந்தேம்!" என்றார்.
            இந்தத் தெருவைப் பொருத்த வரையில் செய்யுவின் வீடு மூன்றாவது மாடி வீடு. முதல் மாடி வீடு வேதப்பன் அப்பா காலத்தில் போடப்பட்டது. லிண்டல் வரை நின்றிருந்த அந்த வீடு அதற்கு மேல் கூரை வீடாக வெகு காலத்துக்கு இருந்தது. அந்த வீட்டுக்கு மனைப் போடப்பட்டு பத்தாண்டுகள் கழித்து மனை போட்ட முல்லேம்பாள் ஆத்தாவும், அவரது வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி தாத்தாவும் ஒன்பது மாதங்களுக்குள் கட்டி முடித்தனர். அந்த வகையில் தெருவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட மாடி வீடு என்றால் அது இரண்டாவது மனைப் போடப்பட்டு முதலாக கட்டி முடிக்கப்பட்ட முல்லேம்பாள் ஆத்தாவின் வீடுதான். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பின்தான் வேதப்பன் தலையெடுத்து காங்கிரீட் ரூப் போட்டு வீட்டை மாடி வீடாகக் கட்டி முடித்தது. இப்படி முதல் வீடாக மனைப் போடப்பட்டு தெருவுக்கு இரண்டாவது அது கட்டி முடிக்கப்பட்டது. இப்போது மூன்றாவது வீடாக செய்யுவின் வீட்டுக்கு மனை போடப்பட்டது.
            பொதுவாக வீடு கட்டுபவர்கள் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் போது கொல்லையின் ஓரத்தில் சிறியதாக ஒரு கொட்டகைப் போட்டுக் கொள்வார்கள். வீடு கட்டி முடிக்கும் வரை அதில்தான் குடி. ஆனால் அப்பா வீடு கட்ட ஆரம்பித்த நேரத்தில் தெருவின் முதல் மாடி வீடாகக் கட்டி முடித்த முல்லேம்பாள் ஆத்தாவின் வீட்டில் அது மட்டும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தி தாத்தா ரெண்டு வருசத்துக்கு முன் இறந்து போயிருந்தார். வீடு கட்டப் போவது தெரிந்ததும் அந்த ஆத்தாவே வந்து கேட்டது. "வேணும்னா வூட்ட கட்டி முடிக்குற வரிக்கும் நம்ம வூட்டுல இருந்துக்குங்க. வாடகப் பணம் போட்டுக் கொடுத்தீங்கன்னா செலவுக்காகும்!"
            இது நல்ல யோசனையாகப் பட்டது அப்பாவுக்கு. அப்போது பேசி முடித்து பத்து மாதங்களுக்கு நான்காயிரத்து ஐநூறு ரூபாய் வாடகையை மொத்தமாக கையில் வாங்கிக் கொண்டது முல்லேம்பாள் ஆத்தா. நல்ல பெரிய மாடி வீடு அது. அதில் திண்ணை, ஹால், சமையற்கட்டோடு சேர்த்து மூன்று ரூம்கள். முல்லேம்பாள் ஆத்தா ஒரு ரூமில் இருந்து கொண்டு, வீடு முழுவதையும் புழங்கிக் கொள்ளச் சொல்லி விட்டது. இப்படி மாடி வீட்டில் குடியேறிக் கொண்டு மாடி வீடு கட்டும் பாக்கியம் அதற்குப் பின் தெருவில் யாருக்கும் கிடைக்கவில்லை.
            வீட்டின் முன்னே செங்கல் கட்டாயங்களும், கொல்லையில் மணலும் ஏற்பாடான ஒரு மாதத்துக்குப் பின் வீட்டு வேலைகள் ஆரம்பித்தன. கிட்டதட்ட இந்தப் பகுதியின் வீடு கட்டும் விதத்தை வைத்தி தாத்தாவின் வீடு கட்டப்படும் போதே ஒரு பார்வை பார்த்ததுதான். ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் வைத்தி தாத்தா வீடு கட்டப்பட்ட போது ஒன்பதடி ஆழத்துக்குப் போடப்பட்ட போஸ்ட்டுகள் இப்போது ஆறடி ஆழத்தோடு நின்று கொண்டது அவ்வளவுதான்.
            தெருவுக்கு வெளியே வித்தியாசமாக நீட்டிக் கொண்டிருந்த வீடுதான் விகடுவின் வீடாகச் சொல்லப்பட்டு, செய்யு பிறந்ததற்குப் பின் செய்யுவின் வீடாக அடையாளப்படுத்தபட்டிருந்தது. அந்த திண்ணைப் பகுதி மட்டும் அப்படியே விடப்பட்டு வீட்டின் மற்றப் பகுதிகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. வீட்டின் மண்சுவர் இடிக்கப்பட்டு கொல்லையின் கடைசியில் கொட்டப்பட்டு மேடானது. கூரைக்கான மூங்கில்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான சாரமாக நின்றது.
            மாட்டுக் கொட்டகை மட்டும் கூரையோடு அப்படியே தூக்கப்பட்டு கொல்லையின் கடைசிக்குப் போனது. கருப்பு மாடு போட்டிருந்த அதைப் போன்ற நிறத்திலிருந்து மூக்குப் பெருத்த ப்ரிசியின் கன்று நன்றாக வளர்ந்திருந்தது. சினைபடாமல் ரொம்ப காலத்துக்கு நின்றிருந்த கருப்பின் மூத்த கன்று சினை பட்டதும் அது விற்கப்பட்டிருந்தது. வெள்ளையாக நின்றிருந்த கருப்பின் இரண்டாவது கன்றான அம்முவின் கன்றும் விற்கப்பட்டிருந்தது. அம்மு சினைப்பட்டிருந்தது. மொத்தத்தில் மூன்று மாடுகள் அப்போது நின்றிருந்தன. இந்த மூன்றையும் நடுராத்திரியில் அவ்வபோது எழுந்து வந்து பார்த்து வராவிட்டால் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ நிம்மதியான தூக்கம் வராது. எப்படியும் ராப்பொழுதில் டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் எழுந்து பார்த்து வந்து விடுவது ஒரு பழக்கமாகவே போய் விட்டது. அப்படி எழுந்து வந்து பார்க்கும் போது அந்த மாடுகள் "ம்மா..." என்று எழுப்பும் சத்தம் நள்ளிரவில் நான்கு தெருக்களைத் தாண்டிக் கேட்கும். பொதுவாக கிராமத்தில் மாடு வளர்க்கும் எல்லாருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. நள்ளிரவில் விழித்திருந்தால் இப்படி மாடு கத்தும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்னவோ ஆலைச் சங்கு ஊதுவதைப் போல மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருக்கும்.
            "ஏம் இப்படி நட்டநடு ராத்திரில பேயி மாரி முழிச்சிட்டு மாடுகள இப்படி கத்த வுடுறீய?" என்று கேட்டால், "பழக்கமாயிட்டுடாம்பி! மாடுக சமயத்துல கயித்தோட சிக்கிக்கிம். பக்கத்துல இருக்குற மாட்டோட கொம்பு போட்டு மாட்டிக்கும். அப்பைக்கப்ப ராமுழி முழிச்சிக் கண்ணும் கருத்துமா பாத்துக்கணும்டாம்பி! மாடுன்னா அப்படி பாத்துட்டே இருக்கணும்டாம்பி!" என்பார்கள்.
            சிங்காரவேல் கொத்தனாரின் மகன்களில் ஒருவரான ஆறுமுகவேலை மேஸ்திரியாக குமரு மாமா ஏற்பாடு செய்திருந்தது. ஆறுமுகவேல் கொத்தனாருக்கு ஒரு காது சரியாகக் கேட்காது. அது வேலை பிசகியதால் அவரது அப்பாவான சிங்காரவேல் கொத்தனாரிடம் வாங்கிய அடியால் செவிடாகிப் போயிருந்தது. ஏதாவது செய்தியைக் கேட்பதென்றால் காதில் கையை அணைத்து வைத்தபடிதான் அது கேட்கும். அதற்கு ஒரு விசயத்தைச் சொல்லி விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். "ன்னடாம்பி ஓம் நெலம இப்படி ஆயிப் போச்சேடா!" என்ற அம்மா கேட்டால், "காது சரியாக்க கேட்டா, பேச்சுப் பராக்குல வேல கொளறிடும். இதாஞ் சரி!" என்று சொல்லும் ஆறுமுகவேல். ஆறுமுகவேலுக்குக் காலைப் பொழுதில் வேலை ஒரு வேகத்தில் கிளம்பாது. மந்தக் கதியில் ஓடிக் கொண்டிருக்கும். சாயுங்காலம் நான்கு மணியானால்தான் வேலை புரியும். அடுத்து இரண்டு மணி நேரங்களுக்கு அது அசுர‍ வேகத்தில் பார்க்கும் வேலை காலையிலிருந்து நான்கு மணி வரைப் பார்க்கும் வேலைக்கும் சமானமாக இருக்கும்.
            வேலை ஆரம்பித்த பத்து நாட்களுக்குள்ளாக குழியைத் தோண்டி போஸ்ட்டை நிறுத்தி, பேஸ்மெட் வரை கொண்டு வந்து விட்டது ஆறுமுகவேல் கொத்தனார். வெள்ளையாற்றில் தட்டுபாடின்றிக் கிடைத்த மணலால், மீண்டும் மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு வரப்பட்டு, பேஸ்மெட் வரை மணல் கொட்டி தண்ணீரை நிறுத்தி பாறைக்கோல் போடப்பட்டு வேலைகள் வெகு நேர்த்தியாக நடந்து, தளத்துக்கு ஏற்றாற் போல ஒரு செங்கல்லும் போடப்பட்டது.
            பேஸ்மெட் முடிந்ததும் குமரு மாமாவே தாய்நிலையைத் தயார் செய்து தூக்கிக் கொண்டு வைத்தது. மரவேலைக்காக அப்போது இருபதாயிரம் ரூபாய்க்கு திருவாரூர் மரவாடியில் மலேசியன் வேங்கை மரத்தை எடுத்து அறுக்கப்பட்டது. புது வீட்டுக்குத் தேவையான அனைத்து நிலை, சன்னல், கதவுகளுக்கான அத்தனைச் சட்டங்களும், பலகைகளும், எடுத்து அறுத்து அந்த மரத்திலேயே எவ்வித பழுதும் இல்லாமல் கிடைத்தன. இப்படி மரம் எடுத்து அறுப்பதில் ஒரு கஷ்டம் மற்றும் நஷ்டம் என்னவென்றால் மரம் பழுதில்லாமல் அமைய வேண்டும் என்பதுதான். அப்படிப் பழுதில்லாமல் அமைந்து விட்டால் நல்ல லாபம்தான். ஒரு வேளை மரத்துக்கு வெளியே தெரியாமல், ஆனால் உள்ளே குடைவாகவோ, பூச்சியரித்தோ இருந்தால் அது வாங்கியவரின் தலையில் விடிந்து விடும். இதற்குக் கட்டுபட்டுதான் மரம் அறுக்க வேண்டும். இதற்கு யோசனை பண்ணிக் கொண்டே பலர் மரத்தை எடுத்து அறுக்காமல் நேரடியாக சட்டங்களாகவும், பலகைகளாகவும் வாங்கி விடுவர். சட்டங்களையும், பலகைகளையும் அப்படி நேரடியாக வாங்கும் போது அது பெருந்தொகையை முழுங்கி விடும்.
            இருக்கின்ற காசில் வீட்டைக் கட்டி முடித்து விட வேண்டும் என்ற கங்கணத்தில் இருந்த அப்பாவும், குமரு மாமாவும் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று மரத்தை எடுத்து அறுப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர். நல்லவேளையாக எடுத்து அறுத்த மரத்தில் எந்த வித பழுதும் இல்லாமல் மொத்த வீட்டுக்கும் தேவையான அனைத்து மரச்சாமான்களுக்கும் இருபதாயிரத்தில் எடுத்து அறுத்த அந்த வேங்கை மரத் துண்டே போதுமானதாக இருந்தது.
            அப்போது வீடு கட்டும் போது நிலை, சன்னல் இவைகளை வைத்துச் சுவரை எழுப்பிக் கட்டுவதே வழக்கமாக இருந்தது. அத்துடன் நிலை, சன்னல்களில் வெண்டிலேசனும் உண்டு. அந்த முறைப்படி அந்தத் தெருவில் அப்படி வீடு கட்டிய கடைசி வீடாக செய்யுவின் வீடுதான் இருந்தது. அதற்குப் பின் எதிரே வீடு கட்டிய கண்ணாயிரம், பக்கத்தில் வீடு கட்டிய அய்யாவு உட்பட எல்லாரும் சுவரையெல்லாம் எழுப்பி பூச்சு வேலைக்கு முன்பாகத்தான் நிலை, சன்னல்களை வைத்துக் கட்டினார்கள். நிலை, சன்னல்களில் யாரும் வெண்டிலேசன்கள் வைக்கவில்லை. தாய்நிலையைத் தவிர மற்ற நிலைகளில் நிலைப்படி வைக்கும் வழக்கமும் மாறியிருந்தது.
            வீட்டின் நிலையைத் தூக்கி வைத்த பின் வித்தியாசமான பல நிகழ்வுகள் நிகழ ஆரம்பித்தன. ‍"அந்த நெல தூக்கி வெச்ச நேரம்..." என்ற ஆரம்பித்து இப்போதும் அந்த நிகழ்ச்சிகளை அம்மா சிரித்துக் கொண்டே ஒரு வித வேதனையோடு சொல்லிக் கொண்டிருக்கும்.
            அந்த நிலை தூக்கி வைத்த எட்டாவது நாளில்தான் வீயெம் மாமாவுக்கும், குயிலிக்கும் நிச்சயதார்த்தம் நடப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குமரு மாமா நேரடியாக காரியத்தில் இறங்கியது. அது தன்னிசையாகச் செயல்பட ஆரம்பித்தது. அது தானே லாலு மாமாவிடம் பேசி நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாட்டைச் செய்து வந்திருந்தது. இது லாலு மாமாவுக்கும் ரொம்ப வசதியாகப் போனது. அத்துடன் ரொம்ப பெருமையாக, "ஒங்க வூட்டு நெலய தூக்கி வெச்ச நேரத்திலதான் அத்தாம் தம்பியோட நிச்சயதார்த்தம் நடக்கணும்னு இருந்திருக்கு! அந்தப் பயலோட கல்யாணத்தை முடிச்சி, ஒங்க வூட்டைக் கட்டி முடிச்சிட்டா நம்மோட முக்கியமான கடமெ முடியுதுத்தாம்!" என்றது குமரு மாமா.
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...