6 Jun 2019

நிச்சயத்த முடிச்சிக்கலாம்!



செய்யு - 107
            வேற்குடியில் டிவியெஸ் பிப்டியை நிறுத்தி விட்டு இறங்கிய போது சுப்பு வாத்தியாரால் வண்டியின் ஸ்டேண்டைப் போட முடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கியது. காற்று நன்றாக வீசிய போதும் வியர்த்து சட்டை எங்கும் பெரும் பெரும் வட்டமாகவும், கட்டமாகவும் அதாவது சற்றேறக்குறைய அந்த வடிவத்தில்  வியர்த்து நனைந்திருந்தது. விகடு அவரை நகரச் சொல்லி விட்டு வண்டியை வாங்கி ஸ்டேண்ட் போட்டான்.
            "ல்லே... நீயி போயி இந்த வெசயத்த குமரு மாமாட்ட சொல்றியாடா? நம்மால முடியாது போலருக்கே. நிச்சயம் எழுதிப்புட்டா அது வேற மாரி சிக்கலாயிடும். சின்னம்பி வருமா? வாராதான்னு வேற புரியலியே." என்று மெலிந்த குரலில் வெளிவ்நதது சுப்பு வாத்தியாரின் குரல். இதுவரை தனக்காக எதையும் செய்யக் கேட்காத அப்பா இப்படிக் கேட்டு விட்டதால் விகடு மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனான். அவனுக்கு நிச்சயதார்த்தம் எந்தக் கதியில் போனால் என்ன எண்ணம் ஏற்பட்டு விட்டது.
            சுப்பு வாத்தியார் அங்கேயே நின்றிருக்க அவன் உள்ளே புகுந்து ஒவ்வொரு இடமாகப் போனான். ஒவ்வொரு இடத்திலும் "வாடா வாடா வெகடு!" என்று வரவேற்பு பலமாக இருந்தது. அந்த வரவேற்பை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் அவன் குட்டிப் போட முடியாத பூனையைப் போல மலங்க மலங்க நின்று நின்று நடந்து கொண்டிருந்தான். வீட்டின் முன்னே வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கட்டிலின் மேல் வேணி அத்தை உட்கார்ந்திருந்தது. கட்டிலின் மேல் கண்டபடி கிடக்கும் துணிமணிகள், சாப்பிட்டுப் போட்ட பாத்திரப் பண்டங்கள் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. பக்கத்திலேயே ரெண்டு நாற்காலிகள் போடப்பட்டு வைத்தி தாத்தாவும், சாமியாத்தாவும் உட்கார்ந்திருந்தார்கள். வைத்தி தாத்தா பட்டு வேட்டி, சட்டையில் பார்க்க படு பொசுங்கலாய் இருந்தார். இதற்கு மேலும் ஒரு மனிதர் வாழ்க்கையில் எலும்பும் தோலுமாக ஆக முடியுமா என்பது போலிருந்தது அவரது தோற்றம். சாமியாத்தா நீலவண்ணப் பட்டுப்புடவையில் உட்கார்ந்திருந்தது. விகடுவைப் பார்த்ததும், "எல்லாம் வந்தாச்சுலடா?" என்றது.
            "பெரிய மாமா எங்கே?" என்றான் விகடு.
            "என்னடெ பெரிய மனுஷம் மாரி! நாம்ம ஒன்ன கேட்டா, நீ நம்மள கேட்குறே?" என்றது சாமியாத்தா.
            இந்த விசயம் பற்றி அவர்களிடம் பேசுவதா? பேசாமல் இருப்பதா? என விகடுவுக்குக் குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், "காலேஜில்லாம் போயி படிக்கிறானுங்க! நாலு வார்த்த கேட்டா ஒரு வார்த்த பதிலு வர மாட்டேங்குது!" என்றது சாமியாத்தா சலிப்பாக.
            அங்கே அதற்கு மேல் கேட்டு எதுவும் பிரயோஜனமில்லை என்று தோன்ற, விகடு எதுவும் சொல்லாமல் நகர ஆரம்பித்தான். சாமியாத்தா, "போயி அப்படிச் சுத்திப் பாரு! எங்கியாவது நிப்பாம்!" என்றது சலிப்பாக.
            பந்தலின் தென்னண்டைப் பக்கம் ஏற்பாடாகிக் கொண்டிருந்த சாப்பாட்டின் வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.
            சமையல் நடந்து கொண்டிருந்த இடத்தில் வெங்குவையும், செய்யுவையும் பார்த்தான் விகடு. அம்மா மூலம் விசயத்தைச் சொல்லலாமா என்று தோன்றியது அவனுக்கு. ஒரு நிமிடம் அப்படியே யோசித்து நின்றவன் அம்மாவை அப்பாவிடம் அழைத்துச் செல்வதுதான் சரியானது என்று தோன்றியது. அவன் வேக வேகமாக குறுக்கே இருந்த வேலி தடுப்பைத் தூக்கிக் கொண்டு சமையல் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றான்.
            வெங்கு செய்யுவின் கையில் இரண்டு பஜ்ஜிகளைத் திணித்து அவளைத் "தின்னு தின்னு" என்று வற்புறுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் கையிலும் காப்பி தம்ப்ளர்கள் இருந்தன. செய்யுவுக்கு அந்த பஜ்ஜிகள் மேல் ஆர்வம் வராமல் இருந்திருக்க வேண்டும். அவள் காப்பியைக் குடித்து முடித்ததும் கையில் வாங்கிய பஜ்ஜியை ஏற்கனவே சுட்டுப் போட்டிருந்த பஜ்ஜிகள் மேல் போட்டு விட்டு ஓடி விட்டாள்.
            "எரும மாடு மாரி வளந்திருக்கு. ரண்டு பஜ்ஜி திங்குதா பாரு!" என்ற வெங்கு ரெண்டு பஜ்ஜியை எடுத்து விகடுவின் கையில் திணித்தது.
            "ஏம்மா செய்யு பஜ்ஜியே சாப்பிடலியா?" என்றபடி விகடு வாங்கிய பஜ்ஜியை மீண்டும் பஜ்ஜியை எடுத்த இடத்திலேயே வைத்தான்.
            "நாலு பஜ்ஜி தின்னா. இன்னும் ரண்டு தின்னேன்னு சொன்னேன். முடியாதுன்னுட்டு இப்படித் தூக்கிப் போட்டுட்டு ஓடிட்டா! ல்லே... நீ ஏம்டா கொடுத்த பஜ்ஜிய தூக்கி அஞ்ஞ போடுறே? ஓடுற பாம்ப மிதிக்குற வயசுல பத்து பாஞ்சி பஜ்ஜிய தின்னா ன்னா?" என்று வெங்கு சொன்னதும் விகடுவுக்கு தன் அம்மா வெங்குவின் மேல் கோபமாக வந்தது.
            "அப்பா வாரச் சொன்னிச்சு!" என்றான் விகடு.
            "இங்க அழச்சிட்டு வாடா! ரண்டு பஜ்ஜி திங்கலாம்!" என்றது வெங்கு.
            "அய்யோ! புரிஞ்சுக்கம்மா! வா! அப்பா வாரச் சொன்னிச்சு!" என்றான் விகடு.
            "இவ்வேம் ஒருத்தம்! ன்னான்னுச் சொல்லித் தொலயேண்டா! எப்பப் பாத்தாலும் இப்பூடி கல்லுளிமங்கன் கணக்கா இருந்தா நாம்ம ன்னாடா பண்றது?"
            "நீ ஒண்ணும் பண்ண வேண்டா. அப்பா கூப்புடுது. மொதல்ல வா!" என்று விகடு சொன்னதும், வெங்கு விகடுவோடு கிளம்பியது.
            சுப்பு வாத்தியார் டிவியெஸ் பிப்டிக்குத் துணையாக காவல் நிற்பது போல நின்ற இடத்தை விட்டு அசையாமல் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தது.
            வந்ததும் வராதுமாக, "பஜ்ஜி ந்நல்லா போட்டுருக்காங்க! இஞ்ஞ எல்லாருக்கும் கொண்டாந்து கொடுக்க தாமசம் ஆகும். அப்படிக்கா வந்தீங்கன்னா ரண்டு பஜ்ஜியை தின்னுப்போட்டு காப்பித் தண்ணிய குடிச்சிட்டு வந்துடலாம்!" என்றது வெங்கு.
            "எல்லாரும் வந்துட்டாங்களா?" என்றது சுப்பு வாத்தியார்.
            "பெரியவனும் அவ்வேம் பொண்டாட்டியும் காங்கல. சின்னவன் வாரான்னா ன்னா?" என்றது வெங்கு.
            "பெரியம்பி இன்னும் வாரலியா? நாசமாப் போச்சு!" என்றது அதிர்ச்சியாக சுப்பு வாத்தியார்.
            "அவ்வேம் வாராட்டியும் ன்னா? அதாங் அப்பா, அம்மா, நீங்க, எங்க அக்காகாரிங்க, தங்கச்சிக்காரிங்க, ஒங்க வகையறா, எங்க வகையறான்னு எல்லாம் வந்தாச்சுல. நாம எழுதிடுவோம் வாங்க!" என்றது வெங்கு.
            விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தடுமாற்றமாய் இருந்தது சுப்பு வாத்தியாரின் நிலைமை. அவரின் கண்கள் விகடுவையே பார்த்துக் கொண்டிருந்தது. விகடு விசயத்தை பட்டென்று போட்டு உடைத்து விடுவான் என்ற எதிர்பார்ப்பு அவர் பார்த்த பார்வையில் இருந்தது. அவரின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்க விரும்பாமல், "ம்மா! இந்த நிச்சயம் நின்னா ன்னா ஆகும்?" என்றான் விகடு.
            "ஏம்டா ரண்டு பஜ்ஜிய திங்கப் பிடிக்கலன்னா ஒந் தங்கச்சி ஓடிப் போன மாரி ஓடிப் போயிடுறா கருமம் பிடிச்சவனே! எந்தம்பிக்கே இப்பதான் கல்யாண யோகம் கூடி வாரது. அவனெ லாலு மாமா உள்ளங்கையில வெச்சு தாங்கு தாங்கன்னு தாங்கி, உச்சந்தலையில வெச்சி ஆடும்னு நெனச்சிச் சந்தோஷமா இருக்கிறப்ப... புள்ளியாடா நீ? ஏம் வயித்துல வந்து பொறந்திருக்கீயே! விஷேசத்துல ந்நல்ல வார்த்தப் பேசணும்னு தெரியதா? இதத்தாம் காலேஜிப் போயி படிச்சுக் கிழிக்கிறீயா நீயி?" என்று பொரிந்து தள்ளியது அம்மா வெங்கு.
            வெங்கு இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, லாலு மாமா அப்பாவை நோக்கி வேகமாக ஓடி வந்தது. "செத்த இஞ்ஞ வாங்க!" என்று அப்பாவை ஓரமாகத் தள்ளிக் கொண்டு போனது லாலு மாமா. விகடுவும் அவர்களோடு சேர்ந்து நகர்ந்தான். "ஏலே வெகடு! நீயி அஞ்ஞயே நில்லு!" என்றது லாலு மாமா.
            "ல்லே... வாரட்டும் அவ்வேம்!" என்றது சுப்பு வாத்தியாரின் வாய்.
            லாலு மாமாவுக்கு விகடு வருவது பிடிக்கவில்லை. அவருக்கு அவன் வருவதைத் தடுக்கவும் வழியில்லை என்பது போல பட்டது. அவர் ஒன்றும் சொல்லாமல் நிற்க, விகடு தயங்கி நின்றான். இருவரும் பேசுவது கேட்கும் தொலைவில் அவன் நின்றிருந்தான்.
            லாலு மாமா சுப்பு வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டது. "நிச்சயத்த முடிச்சிடுவோம். மிச்சத்த அப்பொறம் பாத்துக்கிடுவோம்!" என்றது லாலு மாமா.
            "ஏலே! வெகடு! இஞ்ஞ வாடா!" என்றது சுப்பு வாத்தியார்.
            விகடு அவர்களை நெருங்கினான். "நம்ம மானமே ஒங்க கையிலதாம் இருக்குது. ராத்திரிப் பஞ்சாயத்தாப் போச்சு. ஊருகாரங்கலாம் நம்ம பக்கம்தான் நிக்குறாங்க. இப்போ நிச்சயத்த முடிச்சிட்டா கல்யாணத்துக்கு நாம்ம கேரண்டி. எப்படியும் முடிச்சிடுவேம்! நமக்கு நம்பிக்க இருக்கு!" என்று லாலு மாமா பேச ஒன்றும் புரியாமல் அருகே போன விகடுவும், அங்கேயே நின்று கொண்டிருந்த சுப்பு வாத்தியாரும் திரு திருவென முழிக்க வேண்டியதாகி விட்டது.
            எவ்வளவு நேரம்தான் முழித்துக் கொண்டிருப்பது என்று ரெண்டு பேரும் கண்களைச் சுழல விட்டுப் பார்த்ததில் வேற்குடி ஆட்களின் முகத்தில் சுரத்தே இல்லாமல் இருந்தது. தூரத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த முருகு மாமா மற்றும் பாக்குக்கோட்டை வகையறாக்கள் முகத்திலும் சுரத்தே இல்லாமல் இருந்தது. வாழ்க்கப்பட்டு பெரியம்மா, சிப்பூர் பெரியம்மா, சின்னம்மா, தேன்காடு மற்றும் பாகூர் சித்தி வகையறாக்களின் முகத்தில்தான் பூரிப்பும், சந்தோஷமும் தாண்டமாவமாடியது. அவர்கள் எல்லாருக்கும் குமரு மாமாவை விட வீயெம் மேல் இப்போது தனிபாசம் வந்திருந்தது. சுப்பு வாத்தியாரின் முகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை என்பது போன்ற நிலையில் இருந்தது அது. எந்த விதமான மனநிலையில் தன் முகத்தை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் என்ன மாதிரி தன் முகம் இருக்கும் என்று புரியாதத் தன்மையில் சுப்பு வாத்தியார் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். விகடு முகத்தில் பொங்கி வரும் உணர்ச்சிகளோடு இருந்தான். சரியாகச் சொல்வதானால் பொங்கி வரும் உணர்ச்சிகள் வெடித்து விடாமல் இருந்ததில் அவசரமான பின்னும் சிறுநீரை வெளியேற்ற முடியாத அவஸ்தையில் இருப்பவனின் முகத்தில் அவன் இருந்தான்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...