6 Jun 2019

நமது பிள்ளைகளின் பிரச்சனை



            இந்த வருஷம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். மாலையில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கும், காலையில் கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்தன.
            பிள்ளைகள் இதில் குழம்பி விடக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு பொதுத் தேர்வுக்கு முன்னால் நடைபெறும் மாதிரித் தேர்வைக் கூட அப்படிதான் நடத்தியானது.
            பரீட்சைக்குப் போவதற்கு முன்னால் ஒவ்வொரு நாள் வழிபாட்டுக் கூட்டத்திலேயும் இதுதான் பேச்சு. தமிழ், இங்கிலிஷ் மதியானம், கணக்கு, அறிவியல், சமூகவியல் காலையில் என்று தலை தலையாக தலைகீழாக நின்று அடித்துச் சொல்லி ஆயிற்று.
            இது போக பரீட்சை நடந்த மையத்திலும் இங்கிலீஷ் இரண்டாம் தாள் பரீட்சை முடிந்ததும் மைக் வைத்தே கணக்குப் பரீட்சையிலிருந்து தேர்வு காலையில் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
            ஆனாலும் ஒரு பையன்... ஒரே ஒரு பையன் மட்டும் கணக்குப் பரீட்சைக்கு மதியம் போயி நின்றிருக்கிறான். பரீட்சை எழுத முடியாமல் போயி விட்டது. அவன் நேரத்தைப் பாருங்கள்! அந்த ஒரு பரீட்சையில் மட்டும் ஆப்சென்ட் ஆகி, பாக்கி எல்லா பரீட்சையிலும் நல்ல மார்க் வாங்கியிருக்கிறான்.
            "ஏன்டா இப்படி ஆயிப் போச்சு?" என்று அந்தப் பையனை அழைத்து விசாரித்தால்... தமிழுக்கும், இங்கிலீஷ்க்கும் மதியானமாக பரீட்சை எழுதி அந்த டச் அப்படியே மனசுல தங்கிப் போயி கணக்குப் பரீட்சைக்கும் அப்படியே போயிட்டேங்றான்!
            "அடெ ஏன்டா! பரீட்சையே எப்பங்றது உனக்கு மனசுல தங்கலேன்னா... உனக்கு எப்படிடா பரீட்சைக்குப் படிச்சது மனசுல தங்கும்?" என்று கேட்டால்... படிச்சதெல்லாம் நல்லாத்தான் சார் மனசுல தங்கிருந்துச்சு! அந்த டைம் அது மட்டுந்தான் சார் தங்காமப் போயிடுச்சுங்றான்.
            அந்த ஒரு பையனால் பாருங்க! ரிசல்ட் ரெண்டு பர்சன்ட் கம்மியாகி பள்ளிக்கூடம் மாவட்டத்தில் பர்சன்டேஜ் லிஸ்டில் கடைசியாக வந்து விட்டது.
            இந்தப் பிள்ளைகள் படிப்பதில்தான் விவரமாகத்தான் இருக்கின்றன. அடிப்படை விசயங்களில் ரொம்பவே கோட்டை விட்டு விடுகின்றன. நிறையப் படிப்பதால் இப்படி ஆகி விடுகிறதா? என்று வேறு யோசனையாக இருக்கிறது. டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா மாதிரி இதுவும் ஏதாவது பிரச்சனையாக இருக்குமா என்று வேறு குழப்பமாக இருக்கிறது. அமீர்கான் மாதிரி உள்ளவர்கள் படம் எடுத்தால்தான் அது பற்றித் தெரிய வரும்.
            வர்ற வருஷத்திலேர்ந்து எல்லா பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்துக்கு வர்ற சொல்லி, ஒரு வேன் வெச்சுதான் பரீட்சை சென்டருக்கு அழைச்சிட்டுப் போகணும் போலருக்கு. இதனால்தான் நிறைய தனியார் பள்ளிகள் பிள்ளைகளை வேன் வைத்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் அதே வேனிலே கொண்டு போய் வீட்டுக்கும் விட்டு விடுகின்றன. இந்தப் பிள்ளைகள் இருக்கின்ற நினைப்புக்கு வேன் இல்லாமல் போனாலும் கஷ்டந்தான். பள்ளிக்கூடத்துக்கு என்று கிளம்பி ஞாபகப் பிசகில் வேறு எங்காவது போய் திரும்பி வந்தால் நிலைமை என்னாகும் பாருங்கள்!
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...