செய்யு - 106
இந்த வட்டாரப் பகுதியில் நிச்சயதார்த்தம்
என்பதை 'சின்ன கல்யாணம்' என்பார்கள். ஒரு கல்யாணத்துக்கு உரிய அத்தனை தடபுடல்களும்,
ஆடம்பரங்களும் நிச்சயதார்த்தத்தில் உண்டு. வசதி படைத்தவர்கள் நிச்சயதார்த்தத்தையே கல்யாணம்
போல பத்திரிகை அடித்து கல்யாண மண்டத்தில் செய்வது உண்டு. வசதி குறைந்தவர்கள் முன்பே
பேசி நிச்சயத்துக் கொண்டு கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக
செய்வதும் உண்டு. பொதுவான வழக்காக நிச்சயதார்த்தத்தைப் பெண் வீட்டு தரப்பில் செய்து,
கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டு தரப்பில் செய்வதுண்டு. எல்லாம் இப்படி உண்டு உண்டு என்று
சொல்வதற்குக் காரணம், சில நேரங்களில் இது மாறி நடப்பதும் உண்டு. வசதியான பெண் தரப்பு
என்றால் நிச்சயதார்த்தம், கல்யாணம் இரண்டையும் பெண் வீட்டிலேயே செய்து விடுவதும் உண்டு.
காலப்போக்கில் இவைகளில் இன்னும் நிறைய மாறுதல்கள் ஏற்படக் கூடும். அது வேறு இருக்கிறது.
லாலு மாமா வலுத்த கையாக இருந்ததால் வீயெம் மாமாவுக்கும்
குயிலிக்குமான நிச்சயதார்த்தம், கல்யாணம் இரண்டையும் தானே செய்து விடுவதாக சொல்லி
விட்டது. தவிரவும் முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்த்து அலைந்ததைப் போல ரெண்டாவது
பெண்ணுக்கு அலையவில்லை என்ற சந்தோஷம் வேறு அதற்கு. அதைத் தன் பேரதிர்ஷ்டம் என்று வேறு
அது நினைத்துக் கொண்டது. ஆனால் தலைவிதி என்ற ஒன்று இருக்கிறது என்பதை லாலு மாமா தன்
பிற்காலங்களில் புரிந்து கொள்ளக் கூடும். இப்படி நிச்சயம், கல்யாணம் ரெண்டையும் தானே
செய்வதற்குப் பதிலாக அது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் அது எதிர்பார்த்தது என்னவென்றால்...
வீயெம் மாமாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதும், குமரு வீடு கட்டியிருக்கும்
இடத்தின் பக்கத்து மனையில் வீயெம் மாமாவுக்கு வீடு கட்டித் தந்து விட வேண்டும் என்பதுதான்
என்பதையெல்லாம் நாம் முன்பே கேட்டதுதான்.
நிச்சயதார்த்தம் வேற்குடியில் இருந்த லாலு
மாமாவின் வீட்டில் ஏற்பாடு தடபுடலாக ஏற்பாடு ஆகியிருந்தது. நிச்சயதார்த்ததுக்காக பத்திரிகை
அடித்து மண்டபத்தில் வைக்கவில்லையே தவிர மற்றபடி ஒரு கல்யாணத்துக்கு நிகரான ஏற்பாடுகளைச்
செய்திருந்தது லாலு மாமா. மேளதாள ஏற்பாடுகள், வாடகைக்குப் பாத்திரப் பண்டங்கள் எடுத்து
சமையல்காரர் வைத்து சமையல். வீட்டுக்கு முன்பு பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது.
பந்தலில் அவ்வளவு அலங்காரங்கள். பந்தலில் எப்படியும் இருநூறு பேருக்கு மேல் உட்காரலாம்
எனும்படியான பந்தல். அது ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக்கூடக் கட்டத்திலேயே சாப்பாடு
பரிமாறும் வகையில் மேசை, பெஞ்சுகளை ஏற்பாடு செய்திருந்தது. பதினொரு மணி வாக்கில் மூகூர்த்த
ஓலையை எழுதி முடிப்பது எனவும், எழுதி முடித்தவுடன் பனிரெண்டு மணி வாக்கில் மதிய சாப்பாடு
சாப்பிடுவது எனவும் திட்டம்.
இங்கே திட்டையில் பேஸ்மெட் வரை வீடு கட்டப்பட்டு
மேற்கொண்டு சுவர் எழும்பிக் கொண்டிருந்ததால் தினம் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றுவது
பெரும் வேலையாக இருந்தது. காலையிலும், மாலையிலும் அடி பைப்பிலிருந்து இரண்டு குடங்களில்
தண்ணீர் அடித்து இரண்டு குடங்களையும் இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு சுப்பு வாத்தியாருக்கு
தண்ணீர் ஊற்றி ஊற்றி மாய்ந்து போக வேண்டியிருந்தது. இதுவரை சுப்பு வாத்தியாரை 'அப்பா'
என்று எழுதி வந்ததை இந்த இடத்திலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. 'அம்மா'
என்று எழுதி வந்ததை வெங்கு என்று மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. படிப்பவர்களுக்கு
இது ஒரு சுயசரிதைத் தன்மையைத் தருவதால் இப்படி ஒரு மாற்றம். அதுவும் இல்லாமல் இப்போது
வரும் டி.வி. சீரியல்களில் இவருக்குப் பதில் அவர், அவருக்காக இவர் என்று மாற்றிக் கொள்ளும்
காலகட்டத்துக்கு நாம் வந்து விட்டதால், நம்முடைய எழுதுகையிலும் அப்படி ஒரு மாற்றத்தைச்
செய்து கொள்வது யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காது என்று நினைக்கிறேன். இந்த வகை
கலாச்சார ஆள் மாறாட்ட மாற்றம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரை வரை ஊடுருவி நீங்கள்
சாமி2 திரைப்படத்தில் திரிஷாவையே ஐஸ்வர்யாவாக மாற்றியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
நாம் அந்த வகை ஆள்மாறாட்ட கலாச்சாரத்துக்குள் நுழையாமல் உறவுமுறையில் அழைத்து வந்ததைப்
பெயராக மாற்றிக் கொள்கிறோம் அவ்வளவுதானே. தவிரவும் அப்பா என்பதையே ஒரு பெயராகக் கொண்டு
அப்பா என்ற சுப்பு வாத்தியார், அம்மா என்ற வெங்கு என்று நீங்கள் கொண்டாலும் சரிதான்.
இதைப் படிப்பதே ஒரு வகை கஷ்டம் என்றாலும், தொடர்ந்து படிப்பவர்களுக்கு நான் இது மாதிரி
வேறு கஷ்டத்தைத் தந்து விடக் கூடாது என்பதற்காக இதை இவ்வளவாக சொல்ல வேண்டியதாகி விட்டது.
நிறைய வேறு இதை எழுதித் தள்ளி விட்டதால் முன்பு எழுதியவற்றில் எல்லாம் போய் 'அப்பா'
என்பதை சுப்பு வாத்தியார் என்றும், அம்மா என்பதை 'வெங்கு' என்று திருத்துவதும் கஷ்ட
காரியங்கள். அதனால் இந்தக் கூடுதல் விளக்கத்தை நீங்கள் வேறு வழியில்லாமலாவது பொறுத்துக்
கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நாம் விசயத்திற்கு வந்து விடுவோம். நிச்சயதார்த்த
அன்று தண்ணீர் ஊற்றி முடிப்பதற்குள் 9 மணிக்கு மேலாகி விட்டது. தண்ணீர் ஊற்றுவதற்கு
ஆள் போட்டால் அது வேறு கூடுதல் செலவாகி விடும் என்பதால் சுப்பு வாத்தியார் பிற ஆட்களுக்கு
அந்தப் பணியை ஒதுக்கவில்லை. தண்ணீரை ஊற்றி முடித்த பின் காலை சாப்பாட்டை முடித்து விட்டு
சுப்பு வாத்தியார் வெங்குவையும், செய்யுவையும் டிவியெஸ் பிப்டியில் வேற்குடிக்குக்
கொண்டு போய் விட்டு ஆயிற்று. திரும்பி வந்து விகடுவைப் பின்னால் உட்கார அழைத்துக்
கொண்டு போவதாக ஏற்பாடு.
சுப்பு வாத்தியார் திரும்பி வந்த போது
மணி அநேகமாக பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வீயெம் மாமா அவசர அவசரமாக பழைய டிவியெஸ்
பிப்டி ஒன்றில் சுப்பு வாத்தியார் வாடகைக்குக் குடியிருந்த முல்லேம்பாள் வீட்டுக்கு
முன் வந்தது.
"வாங்கம்பி! நீங்கலாம் மொத ஆளா போயி
நிக்காம இங்க வந்த நிக்குறீங்களே?" என்றது சுப்பு வாத்தியார்.
"நாம்ம வரல்லதான்!" என்றது வீயெம்
மாமா.
"அது ஒரு பழக்கம்தாம்பி! இப்போதாம்
எல்லாம் மாறிடுச்சே! நீங்க வாரதால ஒண்ணும் தப்பில்ல!"
"அந்த வரலங்றத சொல்லல அத்தாம்! நமக்கு
இதுல இஷ்டமில்லங்றது சொல்ல வாரேம்!"
"இந்த நிச்சயம் பிடிக்கலீயா?"
"அதாங் அத்தாம்!"
சுப்பு வாத்தியாருக்கு அதிர்ச்சியாய்ப்
போய் விட்டது. சுப்பு வாத்தியாரை விதி வளைத்துக் கட்டி விளையாடிய காலம் அது.
"அத இப்போ வந்துச் சொன்னா எப்பூடி? அதுவுங் எங்கிட்டாச் சொன்னா எப்பூடீ? பெரியம்பிகிட்ட
சொன்னீங்களாம்பி?" என்று அந்த அதிர்ச்சியை வார்த்தைகளாய்த் துப்ப வேண்டியதாகி
விட்டது சுப்பு வாத்தியாருக்கு.
"இல்லத்தான்!" என்றது வீயெம்
மாமா ஓர் அசால்ட்டான தொனியோடு.
"என்னாம்பி! இப்படி இருந்தா ன்னா
பண்றது? இப்போ போயி நிச்சயம் வேணாம்னு சொன்னா அசிங்கமாப்பூடாது! ஊருல இருக்குறவங்க,
சொந்தக்காரச் சனங்க எல்லாம் சேந்து ஒதைக்காம விட மாட்டாங்க பாருங்க! அங்க என்னென்ன
ஏற்பாடுக ஆயிட்டு இருக்குத் தெரியுமா? ஒங்க அண்ணம்கிட்ட மொதல்லயே சொல்லலாமில்லே!"
"அவேம்கிட்ட மனுஷம் பேச முடியா! இப்போவே
அவனுக்கும் அவ்வேம் பொண்டாட்டிக்கும் சண்டெ. அது வர மாட்டேங்குது. இவ்வேம் வரணும்னு
ஒரே அடம்! எப்படிச் சொல்றது சொல்லுங்க அத்தாம்!"
"இன்னும் நிச்சயம் எழுதுறதுக்கு ஒரு
மணி நேரம் கூட இல்லே. இப்படி திடுதிப்புன்னா... இத்தே போயி நாஞ் சொன்னா... நம்மள
உண்டு இல்லேன்னு பண்ணிட மாட்டாங்களா? ஏற்கனவே லாலு வாத்தியாரு நம்மள வைக்கிறது இல்லேன்னு
இருக்காரு!"
"அதெல்லாம் தெரியாதுத்தாம்! நீங்கதாம்
பேசி நிப்பாட்டணும்! முடியுமா முடியாதான்னு பட்டுன்னு சொல்லுங்க!"
"மொதல்ல வாங்க! நீங்க வந்துச் சொல்லாம
நாம் போயிச் சென்னா நம்ம மேல எல்லாருக்கும் வேகம் வரும். நீங்க வாரதுதான் நல்லது.
நீங்க வந்து சொல்றதுதாம் மொற. அதுவுமில்லாம நாம போயிச் சொன்னா ஒங்களுக்கு விருப்பம்
இருக்குங்ற மாரியும், நாம்ம புகுந்து கலச்சி வுடற மாரியும் ஆயிடும். இதல்லாம் சின்னப்
புள்ளிங்க வெளயாட்டு இல்ல. நெனச்சா வையுங்க... நெனக்காட்டி வெக்காதீங்கன்னு சொல்றததுக்கு.
ஒங்களுக்குத் தெரிஞ்சுதான எல்லாத்தியும் பேசி முடிச்சாங்க. ஏம் அப்பவே சொல்ல வேண்டிதானே!
பொண்ணோட பாவத்த வாங்கி வயித்துல கட்டிக்காதீங்கம்பி!"
"சொன்னா புரிஞ்சுக்குங்க அத்தாம்!
ஒவ்வொன்னித்தியும் வெளக்கமா சொல்லிட்டு இருக்க முடியா. ஒரு குறிப்பதாம் சொல்ல முடியும்!
வாத்தியாரா இருக்கீங்க! இதக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்றீங்க!"
"ஒங்க மனசுல நெனக்கிறத நாம்ம எப்படிம்பி
குறிப்பால புரிஞ்சிக்க முடியும். மொகம், ஒடம்புங்றதுலதான் குறிப்ப புடிக்கலாம். மனசுல
இருக்குற குறிப்ப படிக்க நாம்ம ன்னா வெத்தலயில மையி போட்டுப் பாக்குற சாமியாரா ன்னா?"
"அது ரொம்ப ராங்கி பிடிச்ச பொம்பளன்னு
நம்ம கூட்டாளிங்க சொல்றாங்க. அதுவும் ல்லாம பழக்கவழக்க சரியில்லன்னும் பேசிக்கிறாங்க.
நாம்ம கட்டிட்டு அழுவ முடியாது பாருங்க!"
விகடு அவர்கள் இருவரும் பேசுவதை மாற்றி
மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மெதுவாக, "நீங்களும், மாமாவும்னா வேற்குடி
போயிக்கிறீங்களா?" என்றான்.
"நீ ன்னாடா இப்போ நேரம் கெட்ட நேரத்துல
ஒளறிக் கொட்டுறே! இவ்வேம் ஒருத்தம்!" என்றபடி சுப்பு வாத்தியார் பெருமூச்சு விட்டபடி
வீட்டின் முல்லேம்பாள் வீட்டின் முன் அப்படியே தரையில் பச்சக் என்று உட்கார வேண்டியதாகி
விட்டது. திண்ணையின் வடக்குப் பார்த்த ஓரத்தில் கிடந்த பெஞ்ச் தன் மேல் உட்காரவில்லையே
என்று ஏக்கமாகப் பார்த்தது. வெள்ளை வேட்டி அழுக்காகும் என்ற பிரக்ஞையில்லாமல் சுப்பு
வாத்தியார் இப்படி உட்காருவதை விகடு இப்போதுதான் முதன் முதலில் பார்க்கிறான்.
"ஏற்கனவே எல்லாருக்கும் ஆகாம போயிட்டு
இருக்கேம். இதுல இது வேறயா?" என்றது அப்பா சன்னமாக தனக்கு மட்டும் கேட்கும் குரலில்.
"செரி! நீங்க கெளம்புங்கத்தாம்!"
என்றது வீயெம் மாமா.
வீயெம் மாமா இப்படிச் சொன்னதும், தடுமாறி
விழுந்தவன் பொசுக்கென்று எழுவதைப் போல எழுந்து சுப்பு வாத்தியார், "என்னம்பி!
நிச்சயத்துக்கு சம்மதா?" என்றது.
"நாம்ம வாரேம் போங்க!" என்றது
வீயெம் மாமா.
"வந்தா சீக்கிரமா நேரத்துக்கு வாரணும்.
இல்லேன்னா வாராம இருக்கணும்! யோசிச்சு முடிவு பண்ண வெசயத்தை யோசிக்காம பட்டு பட்டுன்னு
மாத்தி மாத்தி முடிவு பண்ணப்புடாது. அதுவும் இல்லாம இது பொண்ணு சம்பந்தப்பட்ட வெசயம்.
ஒரு பொண்ணு வயிறெரிஞ்சா அந்த ஆம்பள உருப்பட மாட்டாம்!"
"தெரியும்த்தாம்! ச்சும்மா நொய்நொய்னுகிட்டு.
கெளம்புங்கத்தாம்!" என்றது வீயெம் மாமா கடுப்போடு.
இந்தக் கடுப்பான பதில் சுப்பு வாத்தியாரின்
மனதில் மீண்டும் திகிலை உண்டாக்கி விட்டது. கிளம்பவும் முடியாமலும், கிளம்பாமல் இருக்கவும்
முடியாமலும் ஒரு குழப்பமான மனநிலையில் சுப்பு வாத்தியார் விகடுவை வண்டியின் பின்னால்
உட்கார வைத்து டிவியெஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்தது.
ஒரு பிரளயம் நடக்கப் போவது போன்ற பேரச்சம்
மனதில் உண்டானது சுப்பு வாத்தியாருக்கு. எதற்கு தானும், தன் வீட்டுக்காரியும் இந்த
விசயத்தில் சம்பந்தப்பட்டு முதன் முதலாக வீயெம்முக்காக குயிலியைக் கேட்டுத் தொலைத்தோம்
என்று நொந்தபடியே வேற்குடியை நோக்கி சுப்பு வாத்தியாரின் டிவியெஸ் பிப்டியின் சக்கரங்கள்
சுழன்று கொண்டிருந்தன.
*****
No comments:
Post a Comment