7 Mar 2019

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீயெம்



செய்யு - 17
            குமரு மாமா வீடு கட்டுவதற்கு வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆரம்பித்தது. வள்ளி சித்திக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. ஒருவேளை வள்ளி சித்திக்கு மாப்பிள்ளை அமைந்தால் வீடு கட்டுவதையும், கல்யாணச் செலவையும் ஒன்றாக சமாளிக்க முடியுமா என்ற கவலை எல்லாருக்கும் இருந்தது. இந்தக் கவலை இல்லாமல் இருந்த ஒரே ஆள் மணி மாமா. வீடு கட்டுவதற்கான செலவினங்களிலும் அது கமிஷன் பார்க்க ஆரம்பித்தது.
            "சொந்த வீடு கட்டுறதுல யாராவது கமிஷன் அடிப்பானா? மானங்கெட்ட பய! யாரும் அவனுக்குப் புத்திச் சொல்லி திருத்த மாட்டீங்களா?" என்று வைத்தி தாத்தா மணி மாமாவைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.
            பாஞ்சாலம்மன் கோயிலுக்கு முன்பிருந்த கூரை வீடு இடிக்கப்பட்டு வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. தற்காலிகமாக கொல்லைப்புறத்தில் ஒரு சிறுவீடு அமைக்கப்பட்டது. தற்காலிக வீடு என்றாலும் அதற்கு ஒத்தக்கல்லில் ஐந்து அடிக்கு சிமெண்ட் சுவர் வைத்து கட்டினார்கள். பூச்சு மட்டும் பூசவில்லை. வீடு பெருஞ்சதுரமாயிருந்தது. சாமியாத்தா அந்த பூச்சுப் பூசாத சுவரில் சாய்ந்து முதுகை உரசிக் கொண்டிருக்கும். அந்தச் சுவரில் ஒலிக்கும் பல்லிச் சத்தங்களையும் சகுனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும்.
            புத்திச் சொல்லி திருத்தும் நிலையில் மணி மாமா இல்லை. அது பலருக்கும் புத்தி சொல்லிக் கொண்டிருந்தது. மணி மாமாவைச் சுற்றி ஒரு பட்டாளம் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டாளத்துக்கும் மணி மாமா செலவு செய்யாது. அந்தப் பட்டாளம்தான் மணி மாமாவுக்குச் செலவு செய்ய வேண்டும். அப்படி ஒரு வசீகரமான பேச்சு மணி மாமாவுக்கு வாய்த்திருந்தது.
            மணி மாமா டிசம்பர் சீசன் வந்தால் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலைக்குப் போகும். விகடு உட்பட குடும்பத்திலிருந்த பிள்ளைகள் எல்லாம் மாமாவின் காலில் விழுந்து பணம் வைத்துக் கொடுப்பார்கள். "மாமா இதற்காகத்தான் மாலை போடுகிறதா?" என விகடு ரொம்பவே யோசித்திருக்கிறான். தை மாத பொங்கலின் போது அது சபரிமலையில் இருக்கும். பொங்கல் முடிந்து சபரிமலையிலிருந்து வரும் போது செய்யுவுக்கு ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வரும்.
            மாமாவைப் பற்றி இன்னொன்றும் பேசிக் கொண்டார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டும் அது குடியை நிறுத்தவில்லை. "ன்னாடா மாலை போட்டுகிட்டு குடிக்கிறீயாமே?" என்று சாமியாத்தாவே இது குறித்து மணி மாமாவிடம் கேட்கும். "மாலை போட்டா குடிக்கக் கூடாதுன்னு ஒனக்கு யாரு சொன்னா? குடிச்சா ஒழுங்கு மரிவாதய குளிச்சிப்புடணும். அவ்ளோதான்!" என்ற அதற்குப் பதில் சொல்லும் மணி மாமா.
            மாமாவுக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது. கூட்டம் சேர்த்துக் கொண்டு ஜாலியாகச் சுற்ற அதற்கு வசதியாக இருந்தது. மாமா எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்காது. தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி இருக்கும். எந்தக் கட்சியிலிருந்து எப்படிக் கவனிக்கிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் அந்தக் கட்சியில் இருக்கும். ஒவ்வொரு முறை கட்சி மாறும் போதும் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு கட்சி மாறுவதுதான் அதன் வழக்கம். அப்படி ஒவ்வொரு முறை மாறும் போது டிம்மி சீட்டு, பேனா சகிதம் வீட்டுக்கு வந்து விடும். மாமா சொல்லும் பெயர்களை எல்லாம் அந்தப் டிம்மித் தாளில் எழுதித் தர வேண்டும். ஒவ்வொரு பெயராக யோசித்து யோசித்துச் சொல்லும். அது சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கு கொண்டு எழுத வேண்டும். சொல்லிவிட்டு, "அவம் பேரு வேணாம். அவம் ஏற்கனவே அங்கதான் இருக்கான். அடிச்சுபுடு!" என்று சொல்லும். அடித்துத் திருத்தி எழுதி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். முன்பு இந்த வேலையை விகடுதான் செய்வான். செய்யு நன்றாக எழுத ஆரம்பித்தப் பின் அந்த வேலையை அவள் செய்ய ஆரம்பித்தாள்.
            "எதுக்கு மாமா இப்படி அடிக்கடி பேர் எழுதிட்டுப் போறே?"  என்று செய்யு கேட்பாள்.
            "இப்போ இருக்குற கட்சியில கவனிப்பு இல்ல. அதான் கட்சி மாறப் போறேன். எத்தன பேரோட மாறப் போறங்றத காட்டுனாத்தான் கெத்து. அதுக்குத்தான் எழுதிகிட்டுப் போறேன்." என்று மாமா சொல்லும்.
            அடிக்கடி இந்தப் பட்டியல் மாற்றும் வேலை நடப்பதால் அவளுக்கு பெயர்கள் எல்லாம் அத்துப்படி ஆகியிருந்தது. சமயங்களில் சில பெயர்களை மாமா விட்டு விட்டால் கூட அந்தப் பெயரை எழுத வேண்டுமா என்று கேட்பாள் செய்யு.
            ஒரு கட்டத்தில் மாமா வந்தால் போதும், "மாமா! இப்போ நீ எந்தக் கட்சிக்கு மாறப் போறே? பேர மட்டும் சொல்லு!" என்று கேட்டுக் கொண்டு பெயர்களை வரிசையாக எழுதிக் கொடுத்து ஆரம்பித்தாள் செய்யு. அந்த அளவுக்கு இங்கேயும் அங்கேயுமாக கட்சி மாறிக் கொண்டிருந்தது மாமா.
            கட்சி மாறும் போதெல்லாம் மாமா ஆண்டியண்ணன் கடையில் வாங்கி வந்த பேப்பருக்கும், பேனாவுக்கும் கூட பணம் கொடுத்ததில்லை என்பது அப்பா அந்தக் கடைக்குப் போகும் போது தெரிய வரும்.
            "உம்ம மச்சான் வந்து பேப்பரு, பேனா வாங்கிட்டுப் போனாரு? இன்னும் காசு வர்ரலியே!" என்பார் ஆண்டியண்ணன்.
            "எவ்ளோ தர்ரணும்?" என்ற கேட்டு அந்தப் பணத்தை அப்பாதான் தருவார். அப்படிக் கொடுக்கும் போது, "தம்பி! சொந்த வூட்டுலேயே கமிஷம் பாக்குதாம்ல. அதுக்கெல்லாம் அரசியல்தான் சரிபட்டு வரும்!" சொல்லிவிட்டுச் சிரிப்பார் ஆண்டியண்ணன்.
            கடைத்தெருவில் மாமாவைப் பார்த்து விட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடம் கேட்கிறோம் என்று யோசிக்காது. "சோக்காளிகள்லாம் இருக்காங்க. காலயிலேந்து பச்சத் தண்ணி பல்லுல படல. எல்லாருக்கும் டீ வாங்கிக் கொடுக்கணும். ஒரு அம்பது ரூவா இருந்தா கொடுத்துட்டுப் போங்க! இல்ல கடையில டீக்குச் சொல்லிவிட்டுட்டுப் போங்க!" என்று சொல்லும்.
            இரண்டாயிரத்துக்கு முற்பட்ட அந்தக் கால கட்டங்களில் தேர்தல் நடக்கும் போது புளியோதரைப் பட்டையும், தயிர் சோறு பட்டையும் கட்சி சார்பில் வழங்குவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். இரண்டாயிரத்துக்குப் பின்பு இது அப்படியே பிரியாணியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. எது கொடுத்த போதும் செய்யுவுக்காக ஒரு பட்டையோடு வந்து மணி மாமா நிற்கும். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அரசியலில் வை. மணி என்று இருந்த மாமாவின் பெயரை ஒரு முறை டிம்மி பேப்பரில் வி.எம். என்று செய்யு எழுத அதுவே அரசியல் வட்டாரத்தில் மாமாவின் பெயரானது. வி.எம். என்பது காலப்போக்கில் வீயெம்மாகி அதுவே மாமாவின் பெயராக நிலைத்து விட்டது என்பதால் இனி மணி மாமா வீயெம் என்றே நம்மிடையும் அழைக்கப்படுவாராக.
            மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய வீயெம் செய்யுவுக்கான இன்னொரு காரியமும் செய்தார். ரம்ஜான் நோன்பு மாதங்களில் வடவாதி பள்ளிவாசலில் கொடுக்கும் நோன்பு கஞ்சியை ஒரு வாளியில் வாங்கிக் கொண்டு வந்து அந்த மாதம் முழுவதும் கொடுத்து விட்டுப் போவார்.
            "செய்யுவ நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்ப்பா!" என்று வீயெம் மாமா அடிக்கடிச் சொல்லும்.
            "போடா போக்கத்தப் பயலே! வள்ளிப் புள்ள வூட்டுல கல்யாணம் ஆகாம நிக்குறா? இவம் இப்பதான் சின்னக் கொழந்தயா இருக்குறவளுக்கு கல்யாணம் பண்ண நிக்குறான்?" என்று வீயெம் மாமா அப்படிச் சொல்லும் போது அம்மாவும் பதிலுக்குத் திட்டும்.
            இப்படியெல்லாம் பாசமாக இருந்த வீயெம் மாமாவா செய்யவுக்குக் கல்யாணம் நடந்த போது வராமல் இருந்தார் என்பதைப் பின்னாட்களில் நினைத்த போது விகடுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
            வள்ளி சித்திக்கு பாகூரிலிருந்து ஒரு வரன் வந்திருந்தது. மாணிக்கநாயகமும் அப்பாவும் போய் பார்த்து விட்டு வந்தனர். மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். மறுபடியும் மாப்பிள்ளை வெளிநாட்டுக்குப் போக வேண்டியிருந்ததால் மூணு மாசத்துக்குள் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்றார்கள். வைத்தி தாத்தா வீட்டைக் கட்டி முடித்து விட்டுப் பார்த்துக் கொள்வோம் என்றார்.
            "இப்படிப் பாத்துப் பாத்துதான் கலாவுக்குக் கல்யாணம் ஆவுறதுக்கு ரொம்ப நாளு ஆகிப் போச்சு. இப்போ வள்ளிக்கும் அது மாதிரி ஒரு நிலம வேணாம். நல்ல வரனா வருது. முடிச்சிப்புடுவோம்!" என்றார் அப்பா.
            "காசுக்கு நாம் எங்கப் போவன்?" என்றார் தாத்தா.
            "ஓகையூரு நெலத்த வித்துப்போம்!"
            "அதல்லாம் விக்க முடியாது! கல்யாணத்த அப்புறம் பாத்துப்போம். இப்போ வூட்டு வேலய முடிச்சிப்போம்!"
            "வூட்டை எப்போ வேணாலும் கட்டிக்கலாம். கல்யாணத்த காலா காலத்துல முடிச்சுப்புடணும்." மாணிக்கநாயகமும் இடையில் புகுந்து பேசியது.
            தாத்தா மசியவில்லை. "கட்டிக்கிட்டு இருக்குற வூட்டைப் பாதியில நிப்பாட்ட வுட மாட்டேன்!"
            மாணிக்கநாயகம் குமரு மாமாவுக்கு போன் போட்டு பேசியது. குமரு மாமா சொன்ன யோசனையின்படி அப்பாவும், மாணிக்கநாயகமும் பாகூருக்குப் போய் பேசி விட்டு வந்தார்கள். அதன்படி கல்யாணச் செலவைப் பார்த்து தற்போது முடித்து விடுவது என்றும், கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் நகை நட்டு சீர் வரிசைகளைச் செய்து விடுவது என்றும் முடிவானது.
            வைத்தி தாத்தா இந்த முடிவுக்கு ஒத்துக் கொண்டார்.
            வள்ளி சித்தி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
            "கல்யாணத்தோடயே நக சீரு சனத்தியெல்லாம் செஞ்சு வுட்டுடுங்க. அப்புறம் செய்ய மாட்டீங்க. ஏமாத்திப் புடுவீங்க!" என்றது சித்தி.
            இதைக் கேட்டதும் சாமியாத்தா வாயில் கையை வைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து அப்படியே உட்கார்ந்து விட்டது. சாமியாத்தா உட்கார்ந்தது உட்கார்ந்ததுதான். அப்படியே மயங்கி விட்டது.
*****

திசைச் சுற்று


திசைச் சுற்று
பிரசவத்தில் உயிர் பிழைத்த குழந்தையும்
மாரடைப்பில் மாண்டு போன தாதியும்
விபத்தில் செத்துப் போன பயணியர்களும்
உயிர் பிழைத்த ஓட்டுநரும்
மாநகர மாமழை வெள்ளத்தில் மாண்டவனும்
சுனாமிப் பேரலையில் நீந்தி வந்தவனும்
விண்வெளி ஓடத்தில் பாதுகாப்பாய் இருப்பவரும்
ஆழ்துளைக் கிணற்றில் உயிர் விட்டக் குழந்தையும்
சுரங்கத்தில் சிக்கிச் சிதிலமானத் தொழிலாளியும்
பூமியின் அடியில் ஆய்வகத்தின் விஞ்ஞானியும்
ஆப்பிரிக்காவில் பசியால் செத்தவரும்
அமெரிக்காவில் கொலஸ்ட்ராலில் மூச்சை நிறுத்தியவரும்
ஒரு திசையில் தாகத்தால் விக்கித்துச் சாகுபவரும்
எதிர் திசையில் குளிர் பானத்தால் போதை கொள்பவரும்
எப்படித்தான் இப்படியும் அப்படியும் சுற்றாமல்
ஒரே திசையில் சுற்றுகிறதோ பூமி
தலை சுற்றுகிறதே சாமி
*****

6 Mar 2019

புருஷங்காரங்க அறியாத பணம்



செய்யு - 16
            வடவாதி வைத்தி தாத்தா வீட்டில் வள்ளி சித்திக்கு நீண்ட நாட்களாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வள்ளி சித்திக்கு மூத்த சித்தியான கலா சித்திக்கு இரண்டு வருடங்களுக்கு முன் கல்யாணம் நடந்து தேன்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்தது.
            கலா சித்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதிலும் வைத்தி தாத்தா அசட்டையாகத்தான் இருந்தார். அப்பாவும், குமரு மாமாவின் நண்பரான மாணிக்கநாயகமும்தான் அலைந்து திரிந்து தேன்காட்டிலிருந்து மாப்பிள்ளையைக் கொண்டு வந்தார்கள். கல்யாண ஏற்பாடுகளில் கூட வைத்தி தாத்தா முன்நிற்கவில்லை.
            குமரு மாமாவின் நண்பரான மாணிக்கநாயகம் பெரும் பாட்டாளி. சிவப்புன்னா சிவப்பு அப்படி ஒரு சிவப்பாய் இருப்பார். மூட்டை நெல்லை ஒத்தை ஆளாய்த் தூக்கிக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடப்பார். வயலில் இறங்கி விட்டால் ரெண்டு ஆள் வேலை பார்ப்பார். அப்போது உள்ளூரில் இருந்த மணி மாமாவுக்கு எதிலும் அக்கறை இல்லாதது போல இருந்தது. மணி மாமாவுக்கு குமரு மாமா மாதிரி வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசையிருந்தது. அந்த ஆசைக்காக அப்பாவின் மூலம் குமரு மாமாவுக்கு லெட்டர் போட வைத்தது. ஒவ்வொரு வருஷமும் எப்படியாவது இந்த வருஷம் போய் விடலாம் என மணி மாமா நினைக்கும். குமரு மாமா அந்த ஏற்பாட்டில் இறங்கவில்லை. ஒருமுறை அப்பா இது குறித்து நெருக்கடி கொடுக்கும் வகையில் கடிதம் எழுதிக் கேட்டார்.
            "வெளிநாடு வந்து நான் படுற பாடு பத்தாதா? இதுல அவன வேற இழுத்து விட்டுகிட்டு ஏன் தேவையில்லாத ரோதனை? வூட்டோட இருந்து அவனைக் குடும்பத்தைப் பார்த்துக்கச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல மனை போடணும். அதுக்கு அவன் அங்க இருந்தாத்தான் நல்லா இருக்கும்" என்று அதற்கு குமரு மாமா பதில் போட்டது.
            இப்போது இருக்கும் சூழ்நிலையில் மணி மாமாவுக்கு வெளிநாடு போக முடியாது என்பது உறுதியானதும் அது குடும்பத்தில் பற்று இல்லாதது போல நடந்து கொள்ள ஆரம்பித்தது. அதனால் அது கலா சித்தி கல்யாணத்தின் போது தனக்கும் அதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாது போல நடந்து கொண்டது. கல்யாணத்தில் மணி மாமா நடந்து கொண்ட விதம் எல்லாருக்கும் வருத்தம் தருவதாகத்தான் இருந்தது.
            மணி மாமா ஊரில் ஒரு சோக்காளிக் கூட்டத்தை வைத்திருந்தது. சோக்காளிக் கூட்டத்தோடு ஊர் சுற்றுவது, பீடி வழிப்பது, சரக்கு அடிப்பது என்று அதன் பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தது. கலா சித்திக் கல்யாணத்தில் அது சோக்காளிகளோட கூட்டு சேர்ந்து கொண்டு குடித்து விட்டு கலாட்டா பண்ணியது. கறி விருந்தின் போது சோக்காளிகளோடு உருண்டு பெரண்டது.
            தேன்காட்டில் கலா சித்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கு முன் அப்பா எத்தனையோ முறை மணி மாமாவை மாப்பிள்ளை பார்ப்பதற்கு துணையாகக் கூப்பிட்டு இருக்கிறார். மணி மாமா வராது. மாணிக்கநாயகத்தை அழைத்துக் கொண்டுதான் அப்பா போனார்.
            வைத்தி தாத்தாவிடம் மணி மாமாவைப் பற்றிப் பேசினால், "அந்தப் போக்கத்த பயலைப் பத்தி எங்கிட்ட எதுவும் பேசாதீங்க!" என்று மூஞ்சில் அடித்தது போல பேசி விடுவார்.
            மணி மாமாவை எங்களில் யாருக்கும் பிடிக்காது. அது தலைக்குப் பின்னால் முடியை சுருள் சுருளாக வளர்த்து விட்டிருக்கும். "என்ன மாமா இது?" பொடணியில் தலையை வைத்துக் கேட்டால், "இத்தாண்டா பங்கு வைக்கிறது!" என்று சொல்லும். மணி மாமாவுக்கும் எங்களில் யாரையும் பிடிக்காது. இந்தப் பிடிக்காது என்பதெல்லாம் பணம் வாங்குவதற்குப் பொருந்தாது.
            மணி மாமா மாசத்துக்கு ஒருமுறை சிப்பூர், வாழ்க்கப்பட்டு போய் வந்து விடும். சிப்பூரில் குணவதி பெரியம்மாவும், சாந்தா சித்தியும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். வாழ்க்கப்பட்டில் பேச்சி பெரியம்மா வாழ்க்கைப்பட்டிருந்தது. மணி மாமாவைப் பிடிக்காவிட்டாலும் அதுதான் கடைக்குட்டி என்பதால் பாசத்தை விட முடியாத பெரியம்மாக்களும், சித்தியும் தம் வீட்டு புருஷங்காரங்களுக்குத் தெரியாமல் பணத்தை ஒப்பேற்றிக் கொடுத்து விடுவார்கள். "இது எம்ம வூட்டுப் புருஷங்காரருக்குத் தெரிஞ்சு எப்படி ஒதைக்கப் போறாங்களோ?" என்று அவர்கள் சொல்வதை பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பின் வேடிக்கையாக சொல்லிக் காட்டும் மாமா.
            மணி மாமாவுக்குப் பணம் கொடுத்தாக ஒரே ஆள் அம்மாதான். மணி மாமா வீட்டுக்கு வந்தால் அம்மா, "ஏன்டா வந்தே?" என்றுதான் கேட்கும். அப்பா திட்டுவார், "வீட்டுக்கு வந்தவங்கள இப்படியா திட்டுவே?" என்று.
            மணி மாமா முன்பெல்லாம் அடிக்கடி வராது. செய்யு பிறந்த பிற்பாடு அது வீட்டுக்கு வர ஆரம்பித்தது. செய்யுவின் மேல் தனிப்பிரியம் இருந்தது மாமாவுக்கு. எங்கே வெளியே போனாலும் அது செய்யுவுக்காக எதாவது வாங்கி வரும். தின்பண்டம், பொம்மை, வளையல், ரிப்பன், மணி என்று செய்யுவுக்காக மணி மாமா எதாவது வாங்கி வராமல் அது வீட்டுக்கு வந்தது கிடையாது.
            அம்மாவிடம் பணத்தைக் கறக்க முடியாவிட்டாலும் மணி மாமா அப்பாவிடம் எப்படியும் பணத்தைக் கறந்து விடும். சில நேரங்களில் கைமாத்தாக வாங்கிய பணத்தை ரோஷம் வந்து கொடுப்பது போலக் கொடுக்கும். பல நேரங்களில் அந்த ரோஷம் காற்றில் பறந்து அதைப் பற்றி அப்படியே மறந்து விட்டது போல நடந்து கொள்ளும்.
            அண்மை காலமாக கலா சித்தியின் தேன்காட்டு வீட்டுக்குப் போய் அங்கும் பணம் வாங்க ஆரம்பித்து இருப்பதாக மணி மாமாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
            அம்மா ஒரு நாள் வெளிப்படையாகவே மணி மாமா வந்த போது திட்டியது. "ஏன்டா இப்படி ஒவ்வொருத்தி வூட்டுக்காப் போய் இப்படி பணத்த வாங்கி மானத்த வாங்குறே? ஒழுங்கா வேலைக்கிப் போய் சம்பாதிச்சா என்னடா?"
            "நீ அவங்கிட்டச் சொல்லி விசா அனுப்பச் சொல்லு. வெளிநாட்டுல போய் எப்படிச் சம்பாதிக்கிறேம் பாரு?" என்றது மணி மாமா.
            "உள்ளூரிலயே பைசா காசு சம்பாதிக்கப் பிரயோசனம் இல்ல. இவம் வெளிநாடு போய ஆத்த இறச்சு அள்ளப் போறாணாம்!" அம்மாவுக்குக் கோபம் வந்தது.
            "அவம் மட்டும் சம்பாதிக்கணும். நல்லா இருக்கணும். நாம் எப்பாடு பட்டுப் போனா என்ன?"
            "அவம்தான் வூடு கட்டணும்னு சொல்லிகிட்டு இருக்கான்ல. வள்ளிக்கு வேற மாப்புள பாக்கணும். கல்யாணம் பண்ணணும். யாராவது வூட்டோட இருந்தாதான்டா காரியம் ஆவும்!"
            "யாம் நீங்கல்லாம் இல்லியா? இருந்து அந்த சோலிய பாக்க மாட்டீங்களா? அதுக்கு நாந்தான் கிடைச்சேனா?"
            "போடா போக்கத்தப் பயலே. இருக்குற சொத்த ஊருல இருந்து பாத்துக்கிட வேணும்டா!"
            "ஆமா இருக்குப் பெருசா சொத்து? அந்தக் கெழட்டு மூதி என்னத்த வாங்கி வெச்சுருக்கிறான். ஓகையூருல உருப்புடா ரெண்டு நெலத்த வாங்கிப் போட்டு வெச்சுருக்கான். மாயனூர்ல நாலு பள்ளம் பாத்த நெலத்த வாங்கிப் போட்டுருக்கான். ஒண்ணும் உருப்படாது!"
            வைத்தி தாத்தாவைக் கெழட்டு மூதி என்று மணி மாமா பேசியதும் அம்மாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
            "போடா வெளியில. இனிம காசு கீசுன்னு அவர தேடிகிட்டு வந்தீன்னா வூட்டுக்குள்ள நொழய வுட மாட்டேன் ஆமா!"
            இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செய்யு மாமாவை நோக்கி ஓடினாள். மாமாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "மாமா நீ கவலப்படாதே. நாம‍ வேலைக்குப் போயி உனக்கு நெறயா சம்பாதிச்சுத் தார்றேன்!" என்றாள்.
            "அப்படிச் சொல்லுடா எஞ் சிங்கக்குட்டி. நீ என்னடா குட்டிப்புள்ள சம்பாதிச்சு மாமாகிட்டக் கொடுக்குறது? மாமா சம்பாதிச்சு உனக்கு டாப் டாப்பா கொடுப்பேன்டா!" என்று சொல்லிக் கொண்டே செய்யுவைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் வைத்துக் கொண்டு போனது.
            "அவள எங்கடா தூக்கிகிட்டுப் போறே? இப்படிச் செல்லங் கொடுத்துக் கொடுத்தே கெடுத்துப்புடாதடா?"
            மாமா செய்யுவைத் தூக்கிக் கொண்டு போனால் பெட்டிக்கடையில் அவள் கேட்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து கொண்டு வந்து விடும்.
            விகடுவும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தான்.
            "டேய் விகடு! அவம் பின்னால போயி அவள தூக்கிட்டு வாடா!" என்றது அம்மா.
            "விகடு சைக்கிளின் பின்னால் வேகமாக ஓடினான்.
            மாமா சைக்கிளை ஒற்றைக் காலில் ஊன்றி நின்று திரும்பிப் பார்த்தது. சைக்கிள் நின்றதும் விகடுவும் ஓட்டத்தை நிறுத்தி நின்றான். நாக்கைத் துருத்திய மாமா, "பின்னாடி வந்தீன்னா கொன்னே புடுவேன்!" என்றது. சைக்கிள் கேரியரில் உட்கார்ந்திருந்த செய்யு கைகொட்டிச் சிரித்தாள்.
            "வந்து எங்கிட்டு ஆராய்ச்சிக் கேப்பே இல்ல. அப்ப வெச்சுக்கிறேன்!" விகடுவின் கண்களில் கோபம் கொப்புளித்தது.
            திரும்பி வந்தவன் அம்மாவிடம், "மாமா என்னயக் கொன்னேபுடுவேம்ங்கதும்மா!" என்றான்.
            "அந்த நாயீ இங்க வராமலா போயிடும். வரட்டும் நாம் கேட்குறேன்!" என்றது அம்மா.
            "பாப்பாவும் கைகொட்டிச் சிரிக்குதும்மா!"
            "வர்ரட்டும். ரெண்டயும் நாம் கேட்குறேன்!"
*****

காலப்பெருவெளிக் கவிதைகள்


காலப் பெருவெளி
அனாதையாய்க் கொட்டிக் கிடக்கிறது காலம்
காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்
இருந்தக் காலத்திற்கு அதனால் வருத்தம் இருக்காது
கடிகாரங்கள் அளக்காத காலம் இருந்திருக்கிறது
கால இயந்திரம் கண்டுபிடிப்பது குறித்தும்
காலத்திற்கு ஆட்சேபனை இருக்காது
கொட்டிக் கிடக்கும் இலைகள்
பறந்து சென்றால் என்ன
பக்கத்தில் இருந்தால் என்ன
மரத்துக்கு என்ன கவலை
மைக்ரோ செகண்ட் துல்லியமாய் அளந்தாலும்
கொட்டிக் கொண்டிருக்கும் காலத்திற்கு என்ன
வற்றி விடவாப் போகிறது
அனாதியாய் விரிந்து கிடக்கிறது
அனாதையாய்க் கொட்டிக் கிடக்கும் காலம்
*****

5 Mar 2019

ஐம்பது ரூபாய்



செய்யு - 15
            அப்பா சுப்பு திட்டைப் பள்ளியில் வேலை பார்த்த வரை ஒன்றாம் வகுப்பு வாத்தியாராகத்தான் இருந்தார். மாற்றம் என்ற மாறாத தத்துவம் அவர் வாழ்வில் மாறாமல் போய் விட்டது. அவருக்கு ஓய்வு பெறும் காலத்துக்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் தலைமையாசிரியர் பதவி கிடைத்தது. தலைமையாசிரியராக ஆன பிற்பாடும் அவர் எந்த வித மாற்றத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. அவர் முதல் வகுப்பு ஆசிரியராகவே இருந்தார். அதன் ஒரு சாதகம் விகடுவுக்கு ஒன்றாம் வகுப்பு வாத்தியாரும், செய்யுவுக்கு ஒன்றாம் வகுப்பு வாத்தியாரும் அவரே. பெரும்பாலும் திட்டையில் படித்த பல பிள்ளைகளுக்கு அவரே ஒன்றாம் வகுப்பு வாத்தியார்.
            பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்பார்கள். விகடுவுக்கும் செய்யுவுக்கும் அது அப்படியே அமைந்தது.  ஆசிரியர்களைக் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பார்கள். விகடுவுக்கும் செய்யுவுக்கும் அப்பா சுப்புவே வாத்தியாராய் அமைந்ததில் முதல் ஆசிரியர், இரண்டாம் பெற்றோர் என்ற வார்த்தைகள் அடிபட்டுப் போனது.
            செய்யு படித்தக் காலத்தில் சுட்டிப்பெண். வீடு தங்காமல் பிள்ளைகளோடு விளையாடுவதில் அலாதியான ஆர்வம் அவளுக்கு. வீட்டின் கடைகுட்டிப் பிள்ளை என்பதாலும், விகடு பிறந்து ஒன்பது ஆண்டுகள் கழித்துப் பிறந்தவள் என்பதாலும் வீட்டில் அவள் மீதான பாசம் செல்லமாக ஆகி விட்டது.
            அப்பா பணத்தை வைத்துக் கொள்வதில் அவ்வளவாக அக்கறை காட்ட மாட்டார். கழற்றிப் போடும் சட்டையில் அவரது பணம் இருக்கும். அதை எடுத்து பீரோவில் கூட வைக்க மாட்டார். பலநேரங்களில் சட்டைப்பையின் வெளியே பணம் துருத்திக் கொண்டு இருப்பது குறித்த அக்கறையில்லாமல் இருப்பார். அவரின் பையில் கைவிட்டு யாரும் பணத்தை எடுத்ததுமில்லை.
            இரண்டாயிரமாவது வருடத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய அந்த காலக்கட்டத்தில் ஐம்பது ரூபாய் என்பது பெரிய காசு. நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு திருவாரூக்குப் போனால் மாதத்திற்கான மளிகை சாமான்கள் அத்தனையையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விடலாம்.
            அப்பா அதுநாள் வரை யாரையும் அப்படிக் கேட்டதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இருந்ததில்லை. முதன்முறையாக அவர் அப்படிக் கேட்கும் சூழ்நிலை உருவானது. அம்மா வெங்குவைத்தான் முதலில் கேட்டார். "பையில அம்பது ரூவா வெச்சிருந்தேன். பார்த்தியா?"
            "யாரு உங்க பையில கைவுட்டுப் பார்க்குறா அதிலேந்து காசு எடுக்கிறதுக்கு?" என்றார் அம்மா.
            அப்பாவின் பார்வை விகடுவின் பக்கமும் திரும்பியது. அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.
            "எங்கயாவது கடைகண்ணில மறந்துகிறந்து கொடுத்திருப்பீங்க. போய் விசாரிச்சுப் பாருங்க!" என்றார் காட்டமாக.
            செய்யு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
            அதற்கு மேல் அப்பா எதுவும் பேசவில்லை. சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டார். ஐம்பது ரூபாய் எங்கே போனது என்ற குழப்பம் அவர் முகத்தில் எப்போதும் எரிச்சலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக அவர் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. வலியப் போய் பேசினாலும் மெளனத்தைக் கலைக்க விரும்பாதவராக இருந்தார்.
            மூன்றாவது நாள் திட்டைப் பள்ளிக்கூடத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
            செய்யுவோடு கூடப் படிக்கும் சாரணியின் அப்பா சிவமூர்த்தி பள்ளிக்கு வந்தார். தலைமை வாத்தியார் பாடம் எடுக்கும் ஐந்தாம் வகுப்பில் நின்று கொண்டு எல்லா வாத்தியார்களையும் வரச் சொல்லுங்கள் என்றார்.
            தலைமை வாத்தியார் ஞானத்துக்கு நடுக்கம் கண்டு விட்டது. அதீத பயமும், அதீத முன்ஜாக்கிரதையும் கொண்ட ஞானம் வாத்தியார் முகம் வெளிறிப் போனவராய் வகுப்பில் ஒரு பையனை எழுப்பி விட்டு எல்லாரையும் அழைத்து வரச் சொன்னார்.
            ஒன்றாம் வகுப்பு வாத்தியார் அப்பா, அப்போது ரெண்டாம் வகுப்பு எடுத்த விநாயகம், மூன்றாம் வகுப்பு வாத்தியார் முருகன், நான்காம் வகுப்பு வாத்தியார் லாலு எல்லாரும் வந்தார்கள்.
            "ன்னா விசயம்?" என்று விநாயகம் வாத்தியார் ஆரம்பித்தார்.
            சிவமூர்த்தி ஐந்து ரூபாய் தாளை அப்பா முகத்தில் வீசி எறிந்தார். அது முகத்தில் பட்டு அவர் காலடியில் விழுந்தது. வாத்தியார்கள் எல்லாருக்கும் கோபம் வந்தது.
            "எதுக்குய்யா இப்படி அஞ்சு ரூவா தாளைத் தூக்கி அவர் முகத்துல வீசி எறியுறே?" முருகன் வாத்தியாருக்கு கோபம் வந்தது.
            "அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆளு நான் இல்ல!" என்றார் சிவமூர்த்தி.
            "டேய்! சிவமூர்த்தி நீ பண்றது நல்லாயில்ல. எதுக்குடா ரூவா தாள இப்படி மொகத்துக்கு நேர தூக்கி வீசுறே?" லாலு வாத்தியாரும் கேட்டார்.
            "அதாஞ் சொல்றேனே! அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆள நானில்ல!"
            ஞானம் வாத்தியாருக்குக் கொஞ்சம் துணிவு வந்தவராய், "என்னய்யா நீ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிட்டு இருக்கே? என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டுப் பேசுய்யா!" என்றார்.
            "சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யு இருக்குல்ல. அத கண்டிச்சு வெக்கச் சொல்லுங்க. அது வூட்டுலேர்ந்து பத்து ரூவாயைக் கொண்டாந்து எம் பொண்ணு சாரணிகிட்ட கொடுத்து முட்டாய் முறுக்கெல்லாம் வாங்கித் தரச் சொல்லியிருக்கு. எம் பொண்ணும் தெரியாத்தனமா அஞ்சு ரூபாய்க்கு வாங்கியாந்து கொடுத்து அதோட இளஞ்செட்டுகளோடு சேத்து தின்னுருக்குங்க. பள்ளியோடம் வுட்டு சாயங்காலம் வூட்டுக்கு வந்ததும் எம் பொண்ணு எல்லாத்தையும் சொல்லிபுட்டு. அதாங்க மொத வேலயா பள்ளியோடம் தெறந்ததும் பணத்தோட ஓடியாந்துருக்கேன்!"
            "அதுக்காய்யா இப்படி பணத்தை மூஞ்சுல வீசி எறிவே?"
            "அதாங் நான் சொன்னேன்ல. நான் அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆளு இல்லன்னு!"
            "இது இப்போ என்னோட கிளாஸூ பிரச்சனையா இருக்குறதால, இத கூப்புட்டு விசாரிச்சுப் புடுவோம்!" என்றார் விநாயகம் வாத்தியார்.
            ஐந்தாம் வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை விட்டு செய்யுவையும், தாரணியையும் அழைத்து வரச் சொன்னார் விநாயகம் வாத்தியார்.
            செய்யுவும், தாரணியும் துள்ளிக் குதித்து ஓடி வந்தார்கள். சிவமூர்த்தியைப் பார்த்ததும் தாரணி செய்யுவை முன்னே விட்டு பின்னே வந்து நின்றாள்.
            "செய்யு! நீ வூட்லேர்ந்து ஏதும் பணம் எடுத்து வந்தியா?" என்றார் விநாயகம் வாத்தியார்.
            செய்யு திருதிருவென்று முழித்தாள்.
            "ஏய் சாரணி! நீ செய்யுகிட்டேயிருந்து பணம் வாங்குனீயா?" சாரணியைப் பார்த்துக் கேட்டார் விநாயகம் வாத்தியார்.
            "ம்!" என்றாள் சாரணி.
            "எவ்ளோ வாங்குனே?"
            "பத்து ரூவா!"
            "பத்து இல்ல. அம்பது ரூவா!" என்று இப்போது வாயைத் திறந்தாள் செய்யு.
            "உனக்கு ஏது அம்பது ரூவா?" மிரட்டலாக பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார் விநாயகம் வாத்தியார்.
            "அப்பா பையிலேர்ந்து எடுத்தேன்!" என்றாள் செய்யு.
            "இது என்னய்யா பொண்ணு அம்பது ரூவாங்கறது. நீ என்னான்னா அஞ்சு ரூவாய மூஞ்சுல வீசி எறிஞ்சுபுட்டு அடுத்தவங்க காசிக்கு நான் ஆசபட மாட்டேங்றீயேய்யா?" என்றார் தலைமை வாத்தியார் ஞானம்.
            "ந்நல்லா கேட்குறீங்க பாருங்க ஒரு கேள்வி. பணத்த வாங்கிகிட்டு அப்படியே செலவு பண்ணிடடு ஒண்ணுஞ் சொல்லாம போகாம ஞாயமா கொண்டாந்தம் பாருங்க. அதுக்கு இப்படியும் கேட்பீங்க. இன்னும் கேப்பீங்க!" என்றார் சிவமூர்த்தி.
            "கொஞ்சம் இருங்க சார். இத முழுசா விசாரிச்சுப்புடுவோம்!" என்ற விநாயகம் வாத்தியார் செய்யுவைப் பார்தது, "நீ எதுக்கு அப்பா பையில கைய வுட்டு பணத்தை எடுத்தாந்தே?"
            "வாங்கித் திங்க?" என்றாள் செய்யு தயங்கியபடியே.
            "வாங்கித் திங்குறதுக்கு ஒனக்கு அம்பது ரூவா கேட்குதா? இப்போ அந்த சாரணி பொண்ணு பத்து ரூவான்னு சொல்லுதே! சரியாச் சொல்லு! பத்து ரூவாவா? அம்பது ரூவாவா?"
            "அம்பது ரூவாத்தான் சார். அம்பது ரூவா இருந்தா ஒரு மாசத்துக்கு வாங்கித் திங்கலாம்னு அதுதான் சொன்னுச்சு. ரெண்டு நாளா முட்டாய் சாமானெல்லாம் வாங்கியாந்துச்சு. இன்னிக்குத்தான் வாங்கியாரல." செய்யு அழ ஆரம்பித்து விட்டாள்.
            "அது பணம் கொண்டாந்து கொடுத்தா நீ வாங்கிடுவியா? வாத்தியாருங்கிட்ட சொல்ல மாட்டியா?" என்று லாலு வாத்தியார் சாரணியை அடிக்கப் பாய்ந்தார்.
            அப்பா தடுத்து நிறுத்தினார். அவருக்கு நிலைமை தீவிரமாவது தெரிந்தது. இந்தப் பிரச்சனையை வளர்க்க அவர் விரும்பவில்லை. கீழே கிடந்த ஐந்து ரூபாய் தாளை எடுத்து சிவமூர்த்தியின் சட்டைப் பையில் திணித்தார். எதுவும் சொல்லாமல் ஐந்தாம் வகுப்பிலிருந்து வெளியே போனார்.
            "சுப்பு வாத்தியாரு இத வளர்க்க வேணாம்னு நினைக்குறார் போலருக்கு. அதான் ஒண்ணுஞ் சொல்லாம குன்றிப் போய் போயிட்டார். இத்த இத்தோடு வுட்டுடுவோம். இதுகள கொஞ்சம் கண்டிச்சு வுட்டுருவோம்!"
            "ஏய் செய்யு! இது மாதிரி இனிமே செஞ்சேன்னு வெச்சுக்க அப்புறம் இருக்கு? ந்தா சாரணி! இனுமே நீ யாராவது பணங்காசு கொடுத்தாங்கன்னு வாங்குனே! அப்புறம் வெச்சுக்கிறேன் ஒன்ன!" என்று விநாயகம் வாத்தியார் மிரட்டினார்.
            "விடுத்தான் மாதிரி இருந்துகிட்டு ன்னா வேல பார்த்துருக்கிற நீ! சாயங்காலம் வூட்டக்கு வர்றேன். வந்து வெச்சுக்கிறேன் கச்சேரிய!" என்றார் செய்யுவைப் பார்த்து லாலு வாத்தியார்.
            அதைக் கேட்டதும் செய்யு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
            "யோவ் சிவமூர்த்தி! ஒனக்கு வாத்தியாருங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்ங்ற மொற தெரியுதா? எல்லாரும் கிளாஸுக்குக் கிளம்புங்க. ன்னா புள்ளங்க இதுங்க. இதுங்களயும் அளச்சிகுட்டுக் கிளம்புங்க! ந்தா பொண்ணுங்களா இனிம இது மாதுரி பெரச்சனையல்லாம் வரக் கூடாது!"  முருகன் வாத்தியார் எல்லாரையும் கலைத்து விட்டார்.
*****

ஐ சி யு கவிதைகள்


அவசர சிகிச்சை ஒத்தி வைக்கப்பட்டவர்கள்
நீளம் குறைந்த சட்டைக்காக
கையை வெட்டிக் கொண்டனர்
பின் நீளமான சட்டைக்காக
சட்டையை வெட்டிக் கொண்டனர்
மாறி மாறி கையையும் சட்டையும்
வெட்டிக் கொண்டே போயினர்
எழுதுவற்கு கைகள் இல்லை என்று
வெளியேற்றப்பட்ட நீட் தேர்வுவாசிகளானப் பின்
இருந்த இரண்டு கைகளை
இழந்திருக்க வேண்டாமோ என யோசித்தவர்கள்
செய்த மேல் முறையீட்டுக் காகிதங்களை
இறுகக் கட்டிய தூக்குக் கயிற்றால்
நம்பிக்கையோடு இருந்தனர்
கட்டவிழ்ந்த காகிதங்கள் பறக்கத் தொடங்கிய போது
அதைப் பொறுக்கப் போய் விபத்துக்குள்ளானவர்கள்
அவசர மேல் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள்
அவரவர் மாநிலத்துக்குச் சென்று விட்ட
நீட் தேர்வு மருத்துவர்களுக்காக
*****

4 Mar 2019

மணமங்கலம் பள்ளி



செய்யு - 14
            திட்டை மெயின்ரோட்டிலிருந்து நேராகச் சென்றால் கடைத்தெரு வரும். கடைத்தெருவைத் தொடர்ந்து மெயின்ரோடு ஆங்கில எழுத்து ஒய் போல இரண்டாகப் பிரியும். இடப்பக்கம் போனால் நெடுங்கரை, ஊட்டியாணி வரும். வலப்பக்கம் போனால் மணமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி வரும்.
            வடவாதிக்கு மேற்கே பழையனூர் வரை, தெற்கே குலமாணிக்கம் வரை, வடக்கே ஓகையூர் வரை மணமங்கலம் முக்கியமான ஊர். இந்தச் சுற்றுவட்டாரப் பிள்ளைகள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிப்பதென்றால் மணமங்கலம்தான் வர வேண்டும். வடவாதியிலே கூட திட்டையூரார் சர்க்கரை ஆலை இருந்த போதிலும் உயர்நிலைப் பள்ளி இல்லாமல் இருந்ததை இப்போது நினைக்கும் போதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
            மணமங்கலத்தைச் சுற்றியுள்ள பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த பெரும்பாலான பிள்ளைகள் மணமங்கலம் உயர்நிலைப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு முடித்து இருப்பார்கள். அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிக்கு இருந்த ஒரே அரசுப் பள்ளி அதுதான்.
            மணமங்கலம் பள்ளியில் நான்கு பக்கா பில்டிங்கும், ஒரு ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங்கும், கூரைக் கொட்டகைகள் இரண்டும் இருந்ததாக ஞாபகம். அப்போதைய சித்திரத்தை இப்போது இருக்கும் மணமங்கலம் பள்ளியில் பொருத்திப் பார்க்க முடியாது.
            விகடு படித்த போது பள்ளியின் நுழைவாயிலாக இருந்த பகுதி பின்பு அடைக்கப்பட்டு, எந்தப் பகுதியின் வழியாக பள்ளியில் நுழையக் கூடாது என்று மூங்கில் வேலிகளால் அடைக்கப்பட்டிருந்ததோ அந்தப் பகுதி பின் நுழைவாயிலாகி விட்டது. இது வெகு ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த மாற்றம்.
            மூங்கில் வேலியால் அடைக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் வழியாகத்தான் தாமதமாக பள்ளிக்கு வரும் பிள்ளைகள் வேலியைப் பிரித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே வருவார்கள்.
            விகடு அந்தப் பள்ளியில் படித்த வரை, அதன் பின் செய்யு அந்தப் பள்ளியில் படித்து முடிக்கும் வரை கூட பள்ளியின் மேலண்டைத் தொடக்கம்தான் நுழைவுவாயில். அது அப்படியே கீழண்டைப் பக்க நுழைவாயிலாகப் பின்னர் மாறியது.
            காலம்தான் நுழைவுவாயிலை எப்படிப் புரட்டிப் போடுகிறது. நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பாதை இப்போது நுழைவுவாயிலாகவும், நுழைய அனுமதிக்கப்பட்ட பாதை இப்போது நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அடைக்கப்பட்ட பாதையாகவும் ஆகி விட்டது.
            நான்கு பக்கா பில்டிங்களில் ஒன்று தலைமையாசிரியர் அறை. அது நுழைவுவாயிலின் பக்கத்திலே இருந்தது. தலைமையாசிரியர் அறையில் உட்கார்ந்து கொண்டே பள்ளிக்கு உள்ளே வருபவரையும், பள்ளியிலிருந்து வெளியே செல்பவரையும் பார்க்க முடியும். அநேகமாக அந்த பில்டிங்கின் படி மேல் நின்று ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்தையும் ஒரு கழுகுப் பார்வை பார்த்து விட முடியும்.
            அந்த பில்டிங்கைத் தொடர்ந்து வடக்குத் தெற்காக நீண்ட கூரைக் கொட்டகை. அந்தக் கொட்டகை நான்கு வகுப்புகளாக சுவர்களால் பிரிக்கப்பட்டிருந்து. கொட்டகையின் முதல் தடுப்பில் பத்தாம் வகுப்பின் ஒரு பிரிவு இருந்தது. இரண்டாம் தடுப்பில் எட்டாம் வகுப்பின் ஒரு பிரிவு இருந்தது. அடுத்த இரண்டு தடுப்புகளிலும் ஏழாம் வகுப்பின் இரண்டு பிரிவுகள் இருந்தன.
            கூரைக் கொட்டகையின் மேலண்டைப் பக்கம் இரண்டாவது பக்கா பில்டிங். அந்த பில்டிங் இரண்டு தடுப்புகளாக இருந்தது. ஒரு தடுப்பில் எட்டாம் வகுப்பின் இன்னொரு பிரிவும், இன்னொரு தடுப்பில் பள்ளிக்கான பண்டகசாலையும் இருந்தன.
            அதைத் தொடர்ந்து இருந்த ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங்கில் இரண்டு தடுப்புகள். இரண்டிலும் ஒன்பதாம் வகுப்பின் இரண்டு பிரிவுகள் இருந்தன.
            அஸ்பெஸ்டாஸ் பில்டிங்கிற்கு சற்றேறக்குறைய நேர் எதிராக கூரைக் கொட்டகையும், மூன்றாவது பக்கா பில்டிங்கும் இருந்தன. கூரைக் கொட்டகையில் பத்தாம் வகுப்பின் இன்னொரு பிரிவு இருந்தது. மூன்றாவது பக்கா பில்டிங்கில்  இருந்த இரண்டு தடுப்புகளில் ஆறாம் வகுப்பின் இரண்டு பிரிவுகளும் இருந்தன. விகடு ஆறாம் வகுப்பு படித்தது அந்த பக்கா பில்டிங்கின் இரண்டாவது தடுப்பில் இருந்த வகுப்பறையில்.
            மூன்றாவது பக்கா பில்டிங் முடியும் இடத்திற்கு நேர் எதிராக நான்காவது பக்கா பில்டிங் இருந்தது. பக்கா பில்டிங்கில் பெரிய பில்டிங் அதுதான். அதில்தான் பள்ளியின் ஆய்வகம் இருந்தது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புக்கான அறிவியல் வகுப்புகள் அந்த பில்டிங்கில் நடக்கும். மற்ற வகுப்புகளுக்கு வருடத்தில் ஒரு நாள் அந்த ஆய்வகத்தில் ஒரு வகுப்பு நடக்கும். அப்போது காட்டப்படும் எலும்பு கூட்டையும், சாடியில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பாம்புகளையும் பற்றியே வருடம் முழுக்க பிள்ளைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் பிள்ளைகள் ஆய்வகத்தில் நடக்கும் அந்த வகுப்புக்கான நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
            ஆய்வகத்தைத் தொடர்ந்து விளையாட்டு மைதானம். பெரிய மைதானம்தான். மைதானம் முழுவதும் மணல். விளையாட்டு மைதானத்தைத் தொடர்ந்து கழிவறை. ஆண் பிள்ளைகளுக்கானக் கழிவறை வடவண்டைப் பக்கமும், பெண் பிள்ளைகளுக்கான கழிவறை அதற்கு சற்று முன்னதாகவே தென்னண்டைப் பக்கமாகவும் இருந்தது. அந்தக் கழிவறையை அநேகமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள்தான் உள்ளே போய் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற பிள்ளைகள் வெளியிலேயே நின்று ஒண்ணுக்கு அடித்து விட்டு ஓடி விடுவார்கள். மலம் கழிப்பது என்றால் கழிவறையைக் கடந்து செல்லும் கருவக் காட்டுக்குள் ஓடி விடுவார்கள்.
            திட்டையிலிருந்து மணமங்கலம் மூன்று கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். திட்டையிலிருந்த மணமங்கலம் செல்வதற்குள் இரண்டு ஆபத்தான இஸட் வடிவான வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். அதிசயமாக அந்த இரண்டு வளைவுகளுமே சொல்லி வைத்தாற் போல ஒரே மாதிரியாக பெரும் பள்ளங்கள் கொண்டதாகவும், கப்பிப் பெயர்ந்ததாகவும் இருக்கும்.
            மணமங்கலம் உயர்நிலைப் பள்ளிக்குப் பெரும்பாலான பிள்ளைகள் நடந்துதான் செல்வார்கள். சைக்கிளில் வரும் பிள்ளைகள் எண்ணிக்கையில் குறைவு. கிழக்கேயிருந்து மேற்கே மணமங்கலத்துக்கு செல்லும் எல்லாரும் அந்த ஆபத்தான வளைவைக் கடந்துதான் சென்றாக வேண்டும், திரும்பியாக வேண்டும். அது ஆபத்தான வளைவு என்ற பயம் மணமங்கலம் பள்ளிக்குச் செல்லும் எல்லா பிள்ளைகளுக்கும் ஆரம்ப கால கட்டத்தில் பெற்றோர்களா ஊட்டப்பட்டு இருக்கும். அதன் பிறகு அந்த வளைவைக் கடந்து செல்வது ஒரு சாகசமான மகிழ்ச்சியாக மாறி, கடைசியில் அது பழக்கப்பட்ட ஒன்றாக ஆகி விடும்.
            செய்யுவைத் திட்டைப் பள்ளியில் சேர்த்த போது விகடு மணமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திட்டைப் பள்ளி அப்போது வரை ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியாகத்தான் இருந்தது. 
            செய்யு அப்பாவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவள் அப்பாவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள் என்றால் அப்பா வாங்கிய புது சைக்கிளில் போய்க் கொண்டிருந்தாள். அதுவரை மணமங்கலத்திற்கு நடந்து சென்று படித்துக் கொண்டிருந்த விகடுவுக்கு அப்பாவின் பழைய சைக்கிள் ஒன்பதாம் வகுப்பில் கிடைத்தது. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து அவன் மணமங்கலத்திற்கு நடந்துதான் சென்று கொண்டிருந்தான்.
*****