4 Mar 2019

மணமங்கலம் பள்ளி



செய்யு - 14
            திட்டை மெயின்ரோட்டிலிருந்து நேராகச் சென்றால் கடைத்தெரு வரும். கடைத்தெருவைத் தொடர்ந்து மெயின்ரோடு ஆங்கில எழுத்து ஒய் போல இரண்டாகப் பிரியும். இடப்பக்கம் போனால் நெடுங்கரை, ஊட்டியாணி வரும். வலப்பக்கம் போனால் மணமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி வரும்.
            வடவாதிக்கு மேற்கே பழையனூர் வரை, தெற்கே குலமாணிக்கம் வரை, வடக்கே ஓகையூர் வரை மணமங்கலம் முக்கியமான ஊர். இந்தச் சுற்றுவட்டாரப் பிள்ளைகள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிப்பதென்றால் மணமங்கலம்தான் வர வேண்டும். வடவாதியிலே கூட திட்டையூரார் சர்க்கரை ஆலை இருந்த போதிலும் உயர்நிலைப் பள்ளி இல்லாமல் இருந்ததை இப்போது நினைக்கும் போதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
            மணமங்கலத்தைச் சுற்றியுள்ள பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த பெரும்பாலான பிள்ளைகள் மணமங்கலம் உயர்நிலைப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு முடித்து இருப்பார்கள். அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிக்கு இருந்த ஒரே அரசுப் பள்ளி அதுதான்.
            மணமங்கலம் பள்ளியில் நான்கு பக்கா பில்டிங்கும், ஒரு ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங்கும், கூரைக் கொட்டகைகள் இரண்டும் இருந்ததாக ஞாபகம். அப்போதைய சித்திரத்தை இப்போது இருக்கும் மணமங்கலம் பள்ளியில் பொருத்திப் பார்க்க முடியாது.
            விகடு படித்த போது பள்ளியின் நுழைவாயிலாக இருந்த பகுதி பின்பு அடைக்கப்பட்டு, எந்தப் பகுதியின் வழியாக பள்ளியில் நுழையக் கூடாது என்று மூங்கில் வேலிகளால் அடைக்கப்பட்டிருந்ததோ அந்தப் பகுதி பின் நுழைவாயிலாகி விட்டது. இது வெகு ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த மாற்றம்.
            மூங்கில் வேலியால் அடைக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் வழியாகத்தான் தாமதமாக பள்ளிக்கு வரும் பிள்ளைகள் வேலியைப் பிரித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே வருவார்கள்.
            விகடு அந்தப் பள்ளியில் படித்த வரை, அதன் பின் செய்யு அந்தப் பள்ளியில் படித்து முடிக்கும் வரை கூட பள்ளியின் மேலண்டைத் தொடக்கம்தான் நுழைவுவாயில். அது அப்படியே கீழண்டைப் பக்க நுழைவாயிலாகப் பின்னர் மாறியது.
            காலம்தான் நுழைவுவாயிலை எப்படிப் புரட்டிப் போடுகிறது. நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பாதை இப்போது நுழைவுவாயிலாகவும், நுழைய அனுமதிக்கப்பட்ட பாதை இப்போது நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அடைக்கப்பட்ட பாதையாகவும் ஆகி விட்டது.
            நான்கு பக்கா பில்டிங்களில் ஒன்று தலைமையாசிரியர் அறை. அது நுழைவுவாயிலின் பக்கத்திலே இருந்தது. தலைமையாசிரியர் அறையில் உட்கார்ந்து கொண்டே பள்ளிக்கு உள்ளே வருபவரையும், பள்ளியிலிருந்து வெளியே செல்பவரையும் பார்க்க முடியும். அநேகமாக அந்த பில்டிங்கின் படி மேல் நின்று ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்தையும் ஒரு கழுகுப் பார்வை பார்த்து விட முடியும்.
            அந்த பில்டிங்கைத் தொடர்ந்து வடக்குத் தெற்காக நீண்ட கூரைக் கொட்டகை. அந்தக் கொட்டகை நான்கு வகுப்புகளாக சுவர்களால் பிரிக்கப்பட்டிருந்து. கொட்டகையின் முதல் தடுப்பில் பத்தாம் வகுப்பின் ஒரு பிரிவு இருந்தது. இரண்டாம் தடுப்பில் எட்டாம் வகுப்பின் ஒரு பிரிவு இருந்தது. அடுத்த இரண்டு தடுப்புகளிலும் ஏழாம் வகுப்பின் இரண்டு பிரிவுகள் இருந்தன.
            கூரைக் கொட்டகையின் மேலண்டைப் பக்கம் இரண்டாவது பக்கா பில்டிங். அந்த பில்டிங் இரண்டு தடுப்புகளாக இருந்தது. ஒரு தடுப்பில் எட்டாம் வகுப்பின் இன்னொரு பிரிவும், இன்னொரு தடுப்பில் பள்ளிக்கான பண்டகசாலையும் இருந்தன.
            அதைத் தொடர்ந்து இருந்த ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங்கில் இரண்டு தடுப்புகள். இரண்டிலும் ஒன்பதாம் வகுப்பின் இரண்டு பிரிவுகள் இருந்தன.
            அஸ்பெஸ்டாஸ் பில்டிங்கிற்கு சற்றேறக்குறைய நேர் எதிராக கூரைக் கொட்டகையும், மூன்றாவது பக்கா பில்டிங்கும் இருந்தன. கூரைக் கொட்டகையில் பத்தாம் வகுப்பின் இன்னொரு பிரிவு இருந்தது. மூன்றாவது பக்கா பில்டிங்கில்  இருந்த இரண்டு தடுப்புகளில் ஆறாம் வகுப்பின் இரண்டு பிரிவுகளும் இருந்தன. விகடு ஆறாம் வகுப்பு படித்தது அந்த பக்கா பில்டிங்கின் இரண்டாவது தடுப்பில் இருந்த வகுப்பறையில்.
            மூன்றாவது பக்கா பில்டிங் முடியும் இடத்திற்கு நேர் எதிராக நான்காவது பக்கா பில்டிங் இருந்தது. பக்கா பில்டிங்கில் பெரிய பில்டிங் அதுதான். அதில்தான் பள்ளியின் ஆய்வகம் இருந்தது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புக்கான அறிவியல் வகுப்புகள் அந்த பில்டிங்கில் நடக்கும். மற்ற வகுப்புகளுக்கு வருடத்தில் ஒரு நாள் அந்த ஆய்வகத்தில் ஒரு வகுப்பு நடக்கும். அப்போது காட்டப்படும் எலும்பு கூட்டையும், சாடியில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பாம்புகளையும் பற்றியே வருடம் முழுக்க பிள்ளைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் பிள்ளைகள் ஆய்வகத்தில் நடக்கும் அந்த வகுப்புக்கான நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
            ஆய்வகத்தைத் தொடர்ந்து விளையாட்டு மைதானம். பெரிய மைதானம்தான். மைதானம் முழுவதும் மணல். விளையாட்டு மைதானத்தைத் தொடர்ந்து கழிவறை. ஆண் பிள்ளைகளுக்கானக் கழிவறை வடவண்டைப் பக்கமும், பெண் பிள்ளைகளுக்கான கழிவறை அதற்கு சற்று முன்னதாகவே தென்னண்டைப் பக்கமாகவும் இருந்தது. அந்தக் கழிவறையை அநேகமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தவர்கள்தான் உள்ளே போய் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற பிள்ளைகள் வெளியிலேயே நின்று ஒண்ணுக்கு அடித்து விட்டு ஓடி விடுவார்கள். மலம் கழிப்பது என்றால் கழிவறையைக் கடந்து செல்லும் கருவக் காட்டுக்குள் ஓடி விடுவார்கள்.
            திட்டையிலிருந்து மணமங்கலம் மூன்று கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். திட்டையிலிருந்த மணமங்கலம் செல்வதற்குள் இரண்டு ஆபத்தான இஸட் வடிவான வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். அதிசயமாக அந்த இரண்டு வளைவுகளுமே சொல்லி வைத்தாற் போல ஒரே மாதிரியாக பெரும் பள்ளங்கள் கொண்டதாகவும், கப்பிப் பெயர்ந்ததாகவும் இருக்கும்.
            மணமங்கலம் உயர்நிலைப் பள்ளிக்குப் பெரும்பாலான பிள்ளைகள் நடந்துதான் செல்வார்கள். சைக்கிளில் வரும் பிள்ளைகள் எண்ணிக்கையில் குறைவு. கிழக்கேயிருந்து மேற்கே மணமங்கலத்துக்கு செல்லும் எல்லாரும் அந்த ஆபத்தான வளைவைக் கடந்துதான் சென்றாக வேண்டும், திரும்பியாக வேண்டும். அது ஆபத்தான வளைவு என்ற பயம் மணமங்கலம் பள்ளிக்குச் செல்லும் எல்லா பிள்ளைகளுக்கும் ஆரம்ப கால கட்டத்தில் பெற்றோர்களா ஊட்டப்பட்டு இருக்கும். அதன் பிறகு அந்த வளைவைக் கடந்து செல்வது ஒரு சாகசமான மகிழ்ச்சியாக மாறி, கடைசியில் அது பழக்கப்பட்ட ஒன்றாக ஆகி விடும்.
            செய்யுவைத் திட்டைப் பள்ளியில் சேர்த்த போது விகடு மணமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திட்டைப் பள்ளி அப்போது வரை ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியாகத்தான் இருந்தது. 
            செய்யு அப்பாவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவள் அப்பாவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள் என்றால் அப்பா வாங்கிய புது சைக்கிளில் போய்க் கொண்டிருந்தாள். அதுவரை மணமங்கலத்திற்கு நடந்து சென்று படித்துக் கொண்டிருந்த விகடுவுக்கு அப்பாவின் பழைய சைக்கிள் ஒன்பதாம் வகுப்பில் கிடைத்தது. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து அவன் மணமங்கலத்திற்கு நடந்துதான் சென்று கொண்டிருந்தான்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...