5 Mar 2019

ஐம்பது ரூபாய்



செய்யு - 15
            அப்பா சுப்பு திட்டைப் பள்ளியில் வேலை பார்த்த வரை ஒன்றாம் வகுப்பு வாத்தியாராகத்தான் இருந்தார். மாற்றம் என்ற மாறாத தத்துவம் அவர் வாழ்வில் மாறாமல் போய் விட்டது. அவருக்கு ஓய்வு பெறும் காலத்துக்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் தலைமையாசிரியர் பதவி கிடைத்தது. தலைமையாசிரியராக ஆன பிற்பாடும் அவர் எந்த வித மாற்றத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. அவர் முதல் வகுப்பு ஆசிரியராகவே இருந்தார். அதன் ஒரு சாதகம் விகடுவுக்கு ஒன்றாம் வகுப்பு வாத்தியாரும், செய்யுவுக்கு ஒன்றாம் வகுப்பு வாத்தியாரும் அவரே. பெரும்பாலும் திட்டையில் படித்த பல பிள்ளைகளுக்கு அவரே ஒன்றாம் வகுப்பு வாத்தியார்.
            பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்பார்கள். விகடுவுக்கும் செய்யுவுக்கும் அது அப்படியே அமைந்தது.  ஆசிரியர்களைக் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பார்கள். விகடுவுக்கும் செய்யுவுக்கும் அப்பா சுப்புவே வாத்தியாராய் அமைந்ததில் முதல் ஆசிரியர், இரண்டாம் பெற்றோர் என்ற வார்த்தைகள் அடிபட்டுப் போனது.
            செய்யு படித்தக் காலத்தில் சுட்டிப்பெண். வீடு தங்காமல் பிள்ளைகளோடு விளையாடுவதில் அலாதியான ஆர்வம் அவளுக்கு. வீட்டின் கடைகுட்டிப் பிள்ளை என்பதாலும், விகடு பிறந்து ஒன்பது ஆண்டுகள் கழித்துப் பிறந்தவள் என்பதாலும் வீட்டில் அவள் மீதான பாசம் செல்லமாக ஆகி விட்டது.
            அப்பா பணத்தை வைத்துக் கொள்வதில் அவ்வளவாக அக்கறை காட்ட மாட்டார். கழற்றிப் போடும் சட்டையில் அவரது பணம் இருக்கும். அதை எடுத்து பீரோவில் கூட வைக்க மாட்டார். பலநேரங்களில் சட்டைப்பையின் வெளியே பணம் துருத்திக் கொண்டு இருப்பது குறித்த அக்கறையில்லாமல் இருப்பார். அவரின் பையில் கைவிட்டு யாரும் பணத்தை எடுத்ததுமில்லை.
            இரண்டாயிரமாவது வருடத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய அந்த காலக்கட்டத்தில் ஐம்பது ரூபாய் என்பது பெரிய காசு. நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு திருவாரூக்குப் போனால் மாதத்திற்கான மளிகை சாமான்கள் அத்தனையையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விடலாம்.
            அப்பா அதுநாள் வரை யாரையும் அப்படிக் கேட்டதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இருந்ததில்லை. முதன்முறையாக அவர் அப்படிக் கேட்கும் சூழ்நிலை உருவானது. அம்மா வெங்குவைத்தான் முதலில் கேட்டார். "பையில அம்பது ரூவா வெச்சிருந்தேன். பார்த்தியா?"
            "யாரு உங்க பையில கைவுட்டுப் பார்க்குறா அதிலேந்து காசு எடுக்கிறதுக்கு?" என்றார் அம்மா.
            அப்பாவின் பார்வை விகடுவின் பக்கமும் திரும்பியது. அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.
            "எங்கயாவது கடைகண்ணில மறந்துகிறந்து கொடுத்திருப்பீங்க. போய் விசாரிச்சுப் பாருங்க!" என்றார் காட்டமாக.
            செய்யு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
            அதற்கு மேல் அப்பா எதுவும் பேசவில்லை. சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டார். ஐம்பது ரூபாய் எங்கே போனது என்ற குழப்பம் அவர் முகத்தில் எப்போதும் எரிச்சலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக அவர் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. வலியப் போய் பேசினாலும் மெளனத்தைக் கலைக்க விரும்பாதவராக இருந்தார்.
            மூன்றாவது நாள் திட்டைப் பள்ளிக்கூடத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
            செய்யுவோடு கூடப் படிக்கும் சாரணியின் அப்பா சிவமூர்த்தி பள்ளிக்கு வந்தார். தலைமை வாத்தியார் பாடம் எடுக்கும் ஐந்தாம் வகுப்பில் நின்று கொண்டு எல்லா வாத்தியார்களையும் வரச் சொல்லுங்கள் என்றார்.
            தலைமை வாத்தியார் ஞானத்துக்கு நடுக்கம் கண்டு விட்டது. அதீத பயமும், அதீத முன்ஜாக்கிரதையும் கொண்ட ஞானம் வாத்தியார் முகம் வெளிறிப் போனவராய் வகுப்பில் ஒரு பையனை எழுப்பி விட்டு எல்லாரையும் அழைத்து வரச் சொன்னார்.
            ஒன்றாம் வகுப்பு வாத்தியார் அப்பா, அப்போது ரெண்டாம் வகுப்பு எடுத்த விநாயகம், மூன்றாம் வகுப்பு வாத்தியார் முருகன், நான்காம் வகுப்பு வாத்தியார் லாலு எல்லாரும் வந்தார்கள்.
            "ன்னா விசயம்?" என்று விநாயகம் வாத்தியார் ஆரம்பித்தார்.
            சிவமூர்த்தி ஐந்து ரூபாய் தாளை அப்பா முகத்தில் வீசி எறிந்தார். அது முகத்தில் பட்டு அவர் காலடியில் விழுந்தது. வாத்தியார்கள் எல்லாருக்கும் கோபம் வந்தது.
            "எதுக்குய்யா இப்படி அஞ்சு ரூவா தாளைத் தூக்கி அவர் முகத்துல வீசி எறியுறே?" முருகன் வாத்தியாருக்கு கோபம் வந்தது.
            "அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆளு நான் இல்ல!" என்றார் சிவமூர்த்தி.
            "டேய்! சிவமூர்த்தி நீ பண்றது நல்லாயில்ல. எதுக்குடா ரூவா தாள இப்படி மொகத்துக்கு நேர தூக்கி வீசுறே?" லாலு வாத்தியாரும் கேட்டார்.
            "அதாஞ் சொல்றேனே! அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆள நானில்ல!"
            ஞானம் வாத்தியாருக்குக் கொஞ்சம் துணிவு வந்தவராய், "என்னய்யா நீ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிட்டு இருக்கே? என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டுப் பேசுய்யா!" என்றார்.
            "சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யு இருக்குல்ல. அத கண்டிச்சு வெக்கச் சொல்லுங்க. அது வூட்டுலேர்ந்து பத்து ரூவாயைக் கொண்டாந்து எம் பொண்ணு சாரணிகிட்ட கொடுத்து முட்டாய் முறுக்கெல்லாம் வாங்கித் தரச் சொல்லியிருக்கு. எம் பொண்ணும் தெரியாத்தனமா அஞ்சு ரூபாய்க்கு வாங்கியாந்து கொடுத்து அதோட இளஞ்செட்டுகளோடு சேத்து தின்னுருக்குங்க. பள்ளியோடம் வுட்டு சாயங்காலம் வூட்டுக்கு வந்ததும் எம் பொண்ணு எல்லாத்தையும் சொல்லிபுட்டு. அதாங்க மொத வேலயா பள்ளியோடம் தெறந்ததும் பணத்தோட ஓடியாந்துருக்கேன்!"
            "அதுக்காய்யா இப்படி பணத்தை மூஞ்சுல வீசி எறிவே?"
            "அதாங் நான் சொன்னேன்ல. நான் அடுத்தவங்க காசிக்கு ஆசப்படுற ஆளு இல்லன்னு!"
            "இது இப்போ என்னோட கிளாஸூ பிரச்சனையா இருக்குறதால, இத கூப்புட்டு விசாரிச்சுப் புடுவோம்!" என்றார் விநாயகம் வாத்தியார்.
            ஐந்தாம் வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை விட்டு செய்யுவையும், தாரணியையும் அழைத்து வரச் சொன்னார் விநாயகம் வாத்தியார்.
            செய்யுவும், தாரணியும் துள்ளிக் குதித்து ஓடி வந்தார்கள். சிவமூர்த்தியைப் பார்த்ததும் தாரணி செய்யுவை முன்னே விட்டு பின்னே வந்து நின்றாள்.
            "செய்யு! நீ வூட்லேர்ந்து ஏதும் பணம் எடுத்து வந்தியா?" என்றார் விநாயகம் வாத்தியார்.
            செய்யு திருதிருவென்று முழித்தாள்.
            "ஏய் சாரணி! நீ செய்யுகிட்டேயிருந்து பணம் வாங்குனீயா?" சாரணியைப் பார்த்துக் கேட்டார் விநாயகம் வாத்தியார்.
            "ம்!" என்றாள் சாரணி.
            "எவ்ளோ வாங்குனே?"
            "பத்து ரூவா!"
            "பத்து இல்ல. அம்பது ரூவா!" என்று இப்போது வாயைத் திறந்தாள் செய்யு.
            "உனக்கு ஏது அம்பது ரூவா?" மிரட்டலாக பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார் விநாயகம் வாத்தியார்.
            "அப்பா பையிலேர்ந்து எடுத்தேன்!" என்றாள் செய்யு.
            "இது என்னய்யா பொண்ணு அம்பது ரூவாங்கறது. நீ என்னான்னா அஞ்சு ரூவாய மூஞ்சுல வீசி எறிஞ்சுபுட்டு அடுத்தவங்க காசிக்கு நான் ஆசபட மாட்டேங்றீயேய்யா?" என்றார் தலைமை வாத்தியார் ஞானம்.
            "ந்நல்லா கேட்குறீங்க பாருங்க ஒரு கேள்வி. பணத்த வாங்கிகிட்டு அப்படியே செலவு பண்ணிடடு ஒண்ணுஞ் சொல்லாம போகாம ஞாயமா கொண்டாந்தம் பாருங்க. அதுக்கு இப்படியும் கேட்பீங்க. இன்னும் கேப்பீங்க!" என்றார் சிவமூர்த்தி.
            "கொஞ்சம் இருங்க சார். இத முழுசா விசாரிச்சுப்புடுவோம்!" என்ற விநாயகம் வாத்தியார் செய்யுவைப் பார்தது, "நீ எதுக்கு அப்பா பையில கைய வுட்டு பணத்தை எடுத்தாந்தே?"
            "வாங்கித் திங்க?" என்றாள் செய்யு தயங்கியபடியே.
            "வாங்கித் திங்குறதுக்கு ஒனக்கு அம்பது ரூவா கேட்குதா? இப்போ அந்த சாரணி பொண்ணு பத்து ரூவான்னு சொல்லுதே! சரியாச் சொல்லு! பத்து ரூவாவா? அம்பது ரூவாவா?"
            "அம்பது ரூவாத்தான் சார். அம்பது ரூவா இருந்தா ஒரு மாசத்துக்கு வாங்கித் திங்கலாம்னு அதுதான் சொன்னுச்சு. ரெண்டு நாளா முட்டாய் சாமானெல்லாம் வாங்கியாந்துச்சு. இன்னிக்குத்தான் வாங்கியாரல." செய்யு அழ ஆரம்பித்து விட்டாள்.
            "அது பணம் கொண்டாந்து கொடுத்தா நீ வாங்கிடுவியா? வாத்தியாருங்கிட்ட சொல்ல மாட்டியா?" என்று லாலு வாத்தியார் சாரணியை அடிக்கப் பாய்ந்தார்.
            அப்பா தடுத்து நிறுத்தினார். அவருக்கு நிலைமை தீவிரமாவது தெரிந்தது. இந்தப் பிரச்சனையை வளர்க்க அவர் விரும்பவில்லை. கீழே கிடந்த ஐந்து ரூபாய் தாளை எடுத்து சிவமூர்த்தியின் சட்டைப் பையில் திணித்தார். எதுவும் சொல்லாமல் ஐந்தாம் வகுப்பிலிருந்து வெளியே போனார்.
            "சுப்பு வாத்தியாரு இத வளர்க்க வேணாம்னு நினைக்குறார் போலருக்கு. அதான் ஒண்ணுஞ் சொல்லாம குன்றிப் போய் போயிட்டார். இத்த இத்தோடு வுட்டுடுவோம். இதுகள கொஞ்சம் கண்டிச்சு வுட்டுருவோம்!"
            "ஏய் செய்யு! இது மாதிரி இனிமே செஞ்சேன்னு வெச்சுக்க அப்புறம் இருக்கு? ந்தா சாரணி! இனுமே நீ யாராவது பணங்காசு கொடுத்தாங்கன்னு வாங்குனே! அப்புறம் வெச்சுக்கிறேன் ஒன்ன!" என்று விநாயகம் வாத்தியார் மிரட்டினார்.
            "விடுத்தான் மாதிரி இருந்துகிட்டு ன்னா வேல பார்த்துருக்கிற நீ! சாயங்காலம் வூட்டக்கு வர்றேன். வந்து வெச்சுக்கிறேன் கச்சேரிய!" என்றார் செய்யுவைப் பார்த்து லாலு வாத்தியார்.
            அதைக் கேட்டதும் செய்யு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
            "யோவ் சிவமூர்த்தி! ஒனக்கு வாத்தியாருங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்ங்ற மொற தெரியுதா? எல்லாரும் கிளாஸுக்குக் கிளம்புங்க. ன்னா புள்ளங்க இதுங்க. இதுங்களயும் அளச்சிகுட்டுக் கிளம்புங்க! ந்தா பொண்ணுங்களா இனிம இது மாதுரி பெரச்சனையல்லாம் வரக் கூடாது!"  முருகன் வாத்தியார் எல்லாரையும் கலைத்து விட்டார்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...