7 Mar 2019

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீயெம்



செய்யு - 17
            குமரு மாமா வீடு கட்டுவதற்கு வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆரம்பித்தது. வள்ளி சித்திக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. ஒருவேளை வள்ளி சித்திக்கு மாப்பிள்ளை அமைந்தால் வீடு கட்டுவதையும், கல்யாணச் செலவையும் ஒன்றாக சமாளிக்க முடியுமா என்ற கவலை எல்லாருக்கும் இருந்தது. இந்தக் கவலை இல்லாமல் இருந்த ஒரே ஆள் மணி மாமா. வீடு கட்டுவதற்கான செலவினங்களிலும் அது கமிஷன் பார்க்க ஆரம்பித்தது.
            "சொந்த வீடு கட்டுறதுல யாராவது கமிஷன் அடிப்பானா? மானங்கெட்ட பய! யாரும் அவனுக்குப் புத்திச் சொல்லி திருத்த மாட்டீங்களா?" என்று வைத்தி தாத்தா மணி மாமாவைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.
            பாஞ்சாலம்மன் கோயிலுக்கு முன்பிருந்த கூரை வீடு இடிக்கப்பட்டு வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. தற்காலிகமாக கொல்லைப்புறத்தில் ஒரு சிறுவீடு அமைக்கப்பட்டது. தற்காலிக வீடு என்றாலும் அதற்கு ஒத்தக்கல்லில் ஐந்து அடிக்கு சிமெண்ட் சுவர் வைத்து கட்டினார்கள். பூச்சு மட்டும் பூசவில்லை. வீடு பெருஞ்சதுரமாயிருந்தது. சாமியாத்தா அந்த பூச்சுப் பூசாத சுவரில் சாய்ந்து முதுகை உரசிக் கொண்டிருக்கும். அந்தச் சுவரில் ஒலிக்கும் பல்லிச் சத்தங்களையும் சகுனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும்.
            புத்திச் சொல்லி திருத்தும் நிலையில் மணி மாமா இல்லை. அது பலருக்கும் புத்தி சொல்லிக் கொண்டிருந்தது. மணி மாமாவைச் சுற்றி ஒரு பட்டாளம் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டாளத்துக்கும் மணி மாமா செலவு செய்யாது. அந்தப் பட்டாளம்தான் மணி மாமாவுக்குச் செலவு செய்ய வேண்டும். அப்படி ஒரு வசீகரமான பேச்சு மணி மாமாவுக்கு வாய்த்திருந்தது.
            மணி மாமா டிசம்பர் சீசன் வந்தால் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலைக்குப் போகும். விகடு உட்பட குடும்பத்திலிருந்த பிள்ளைகள் எல்லாம் மாமாவின் காலில் விழுந்து பணம் வைத்துக் கொடுப்பார்கள். "மாமா இதற்காகத்தான் மாலை போடுகிறதா?" என விகடு ரொம்பவே யோசித்திருக்கிறான். தை மாத பொங்கலின் போது அது சபரிமலையில் இருக்கும். பொங்கல் முடிந்து சபரிமலையிலிருந்து வரும் போது செய்யுவுக்கு ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வரும்.
            மாமாவைப் பற்றி இன்னொன்றும் பேசிக் கொண்டார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டும் அது குடியை நிறுத்தவில்லை. "ன்னாடா மாலை போட்டுகிட்டு குடிக்கிறீயாமே?" என்று சாமியாத்தாவே இது குறித்து மணி மாமாவிடம் கேட்கும். "மாலை போட்டா குடிக்கக் கூடாதுன்னு ஒனக்கு யாரு சொன்னா? குடிச்சா ஒழுங்கு மரிவாதய குளிச்சிப்புடணும். அவ்ளோதான்!" என்ற அதற்குப் பதில் சொல்லும் மணி மாமா.
            மாமாவுக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது. கூட்டம் சேர்த்துக் கொண்டு ஜாலியாகச் சுற்ற அதற்கு வசதியாக இருந்தது. மாமா எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்காது. தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி இருக்கும். எந்தக் கட்சியிலிருந்து எப்படிக் கவனிக்கிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் அந்தக் கட்சியில் இருக்கும். ஒவ்வொரு முறை கட்சி மாறும் போதும் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு கட்சி மாறுவதுதான் அதன் வழக்கம். அப்படி ஒவ்வொரு முறை மாறும் போது டிம்மி சீட்டு, பேனா சகிதம் வீட்டுக்கு வந்து விடும். மாமா சொல்லும் பெயர்களை எல்லாம் அந்தப் டிம்மித் தாளில் எழுதித் தர வேண்டும். ஒவ்வொரு பெயராக யோசித்து யோசித்துச் சொல்லும். அது சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கு கொண்டு எழுத வேண்டும். சொல்லிவிட்டு, "அவம் பேரு வேணாம். அவம் ஏற்கனவே அங்கதான் இருக்கான். அடிச்சுபுடு!" என்று சொல்லும். அடித்துத் திருத்தி எழுதி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். முன்பு இந்த வேலையை விகடுதான் செய்வான். செய்யு நன்றாக எழுத ஆரம்பித்தப் பின் அந்த வேலையை அவள் செய்ய ஆரம்பித்தாள்.
            "எதுக்கு மாமா இப்படி அடிக்கடி பேர் எழுதிட்டுப் போறே?"  என்று செய்யு கேட்பாள்.
            "இப்போ இருக்குற கட்சியில கவனிப்பு இல்ல. அதான் கட்சி மாறப் போறேன். எத்தன பேரோட மாறப் போறங்றத காட்டுனாத்தான் கெத்து. அதுக்குத்தான் எழுதிகிட்டுப் போறேன்." என்று மாமா சொல்லும்.
            அடிக்கடி இந்தப் பட்டியல் மாற்றும் வேலை நடப்பதால் அவளுக்கு பெயர்கள் எல்லாம் அத்துப்படி ஆகியிருந்தது. சமயங்களில் சில பெயர்களை மாமா விட்டு விட்டால் கூட அந்தப் பெயரை எழுத வேண்டுமா என்று கேட்பாள் செய்யு.
            ஒரு கட்டத்தில் மாமா வந்தால் போதும், "மாமா! இப்போ நீ எந்தக் கட்சிக்கு மாறப் போறே? பேர மட்டும் சொல்லு!" என்று கேட்டுக் கொண்டு பெயர்களை வரிசையாக எழுதிக் கொடுத்து ஆரம்பித்தாள் செய்யு. அந்த அளவுக்கு இங்கேயும் அங்கேயுமாக கட்சி மாறிக் கொண்டிருந்தது மாமா.
            கட்சி மாறும் போதெல்லாம் மாமா ஆண்டியண்ணன் கடையில் வாங்கி வந்த பேப்பருக்கும், பேனாவுக்கும் கூட பணம் கொடுத்ததில்லை என்பது அப்பா அந்தக் கடைக்குப் போகும் போது தெரிய வரும்.
            "உம்ம மச்சான் வந்து பேப்பரு, பேனா வாங்கிட்டுப் போனாரு? இன்னும் காசு வர்ரலியே!" என்பார் ஆண்டியண்ணன்.
            "எவ்ளோ தர்ரணும்?" என்ற கேட்டு அந்தப் பணத்தை அப்பாதான் தருவார். அப்படிக் கொடுக்கும் போது, "தம்பி! சொந்த வூட்டுலேயே கமிஷம் பாக்குதாம்ல. அதுக்கெல்லாம் அரசியல்தான் சரிபட்டு வரும்!" சொல்லிவிட்டுச் சிரிப்பார் ஆண்டியண்ணன்.
            கடைத்தெருவில் மாமாவைப் பார்த்து விட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடம் கேட்கிறோம் என்று யோசிக்காது. "சோக்காளிகள்லாம் இருக்காங்க. காலயிலேந்து பச்சத் தண்ணி பல்லுல படல. எல்லாருக்கும் டீ வாங்கிக் கொடுக்கணும். ஒரு அம்பது ரூவா இருந்தா கொடுத்துட்டுப் போங்க! இல்ல கடையில டீக்குச் சொல்லிவிட்டுட்டுப் போங்க!" என்று சொல்லும்.
            இரண்டாயிரத்துக்கு முற்பட்ட அந்தக் கால கட்டங்களில் தேர்தல் நடக்கும் போது புளியோதரைப் பட்டையும், தயிர் சோறு பட்டையும் கட்சி சார்பில் வழங்குவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். இரண்டாயிரத்துக்குப் பின்பு இது அப்படியே பிரியாணியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. எது கொடுத்த போதும் செய்யுவுக்காக ஒரு பட்டையோடு வந்து மணி மாமா நிற்கும். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அரசியலில் வை. மணி என்று இருந்த மாமாவின் பெயரை ஒரு முறை டிம்மி பேப்பரில் வி.எம். என்று செய்யு எழுத அதுவே அரசியல் வட்டாரத்தில் மாமாவின் பெயரானது. வி.எம். என்பது காலப்போக்கில் வீயெம்மாகி அதுவே மாமாவின் பெயராக நிலைத்து விட்டது என்பதால் இனி மணி மாமா வீயெம் என்றே நம்மிடையும் அழைக்கப்படுவாராக.
            மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய வீயெம் செய்யுவுக்கான இன்னொரு காரியமும் செய்தார். ரம்ஜான் நோன்பு மாதங்களில் வடவாதி பள்ளிவாசலில் கொடுக்கும் நோன்பு கஞ்சியை ஒரு வாளியில் வாங்கிக் கொண்டு வந்து அந்த மாதம் முழுவதும் கொடுத்து விட்டுப் போவார்.
            "செய்யுவ நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்ப்பா!" என்று வீயெம் மாமா அடிக்கடிச் சொல்லும்.
            "போடா போக்கத்தப் பயலே! வள்ளிப் புள்ள வூட்டுல கல்யாணம் ஆகாம நிக்குறா? இவம் இப்பதான் சின்னக் கொழந்தயா இருக்குறவளுக்கு கல்யாணம் பண்ண நிக்குறான்?" என்று வீயெம் மாமா அப்படிச் சொல்லும் போது அம்மாவும் பதிலுக்குத் திட்டும்.
            இப்படியெல்லாம் பாசமாக இருந்த வீயெம் மாமாவா செய்யவுக்குக் கல்யாணம் நடந்த போது வராமல் இருந்தார் என்பதைப் பின்னாட்களில் நினைத்த போது விகடுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
            வள்ளி சித்திக்கு பாகூரிலிருந்து ஒரு வரன் வந்திருந்தது. மாணிக்கநாயகமும் அப்பாவும் போய் பார்த்து விட்டு வந்தனர். மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். மறுபடியும் மாப்பிள்ளை வெளிநாட்டுக்குப் போக வேண்டியிருந்ததால் மூணு மாசத்துக்குள் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்றார்கள். வைத்தி தாத்தா வீட்டைக் கட்டி முடித்து விட்டுப் பார்த்துக் கொள்வோம் என்றார்.
            "இப்படிப் பாத்துப் பாத்துதான் கலாவுக்குக் கல்யாணம் ஆவுறதுக்கு ரொம்ப நாளு ஆகிப் போச்சு. இப்போ வள்ளிக்கும் அது மாதிரி ஒரு நிலம வேணாம். நல்ல வரனா வருது. முடிச்சிப்புடுவோம்!" என்றார் அப்பா.
            "காசுக்கு நாம் எங்கப் போவன்?" என்றார் தாத்தா.
            "ஓகையூரு நெலத்த வித்துப்போம்!"
            "அதல்லாம் விக்க முடியாது! கல்யாணத்த அப்புறம் பாத்துப்போம். இப்போ வூட்டு வேலய முடிச்சிப்போம்!"
            "வூட்டை எப்போ வேணாலும் கட்டிக்கலாம். கல்யாணத்த காலா காலத்துல முடிச்சுப்புடணும்." மாணிக்கநாயகமும் இடையில் புகுந்து பேசியது.
            தாத்தா மசியவில்லை. "கட்டிக்கிட்டு இருக்குற வூட்டைப் பாதியில நிப்பாட்ட வுட மாட்டேன்!"
            மாணிக்கநாயகம் குமரு மாமாவுக்கு போன் போட்டு பேசியது. குமரு மாமா சொன்ன யோசனையின்படி அப்பாவும், மாணிக்கநாயகமும் பாகூருக்குப் போய் பேசி விட்டு வந்தார்கள். அதன்படி கல்யாணச் செலவைப் பார்த்து தற்போது முடித்து விடுவது என்றும், கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் நகை நட்டு சீர் வரிசைகளைச் செய்து விடுவது என்றும் முடிவானது.
            வைத்தி தாத்தா இந்த முடிவுக்கு ஒத்துக் கொண்டார்.
            வள்ளி சித்தி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
            "கல்யாணத்தோடயே நக சீரு சனத்தியெல்லாம் செஞ்சு வுட்டுடுங்க. அப்புறம் செய்ய மாட்டீங்க. ஏமாத்திப் புடுவீங்க!" என்றது சித்தி.
            இதைக் கேட்டதும் சாமியாத்தா வாயில் கையை வைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து அப்படியே உட்கார்ந்து விட்டது. சாமியாத்தா உட்கார்ந்தது உட்கார்ந்ததுதான். அப்படியே மயங்கி விட்டது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...