செய்யு - 16
வடவாதி வைத்தி தாத்தா வீட்டில் வள்ளி சித்திக்கு
நீண்ட நாட்களாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வள்ளி சித்திக்கு மூத்த
சித்தியான கலா சித்திக்கு இரண்டு வருடங்களுக்கு முன் கல்யாணம் நடந்து தேன்காட்டில்
வாழ்க்கைப்பட்டிருந்தது.
கலா சித்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதிலும்
வைத்தி தாத்தா அசட்டையாகத்தான் இருந்தார். அப்பாவும், குமரு மாமாவின் நண்பரான மாணிக்கநாயகமும்தான்
அலைந்து திரிந்து தேன்காட்டிலிருந்து மாப்பிள்ளையைக் கொண்டு வந்தார்கள். கல்யாண ஏற்பாடுகளில்
கூட வைத்தி தாத்தா முன்நிற்கவில்லை.
குமரு மாமாவின் நண்பரான மாணிக்கநாயகம்
பெரும் பாட்டாளி. சிவப்புன்னா சிவப்பு அப்படி ஒரு சிவப்பாய் இருப்பார். மூட்டை நெல்லை
ஒத்தை ஆளாய்த் தூக்கிக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடப்பார். வயலில் இறங்கி
விட்டால் ரெண்டு ஆள் வேலை பார்ப்பார். அப்போது உள்ளூரில் இருந்த மணி மாமாவுக்கு எதிலும்
அக்கறை இல்லாதது போல இருந்தது. மணி மாமாவுக்கு குமரு மாமா மாதிரி வெளிநாடு போக வேண்டும்
என்ற ஆசையிருந்தது. அந்த ஆசைக்காக அப்பாவின் மூலம் குமரு மாமாவுக்கு லெட்டர் போட வைத்தது.
ஒவ்வொரு வருஷமும் எப்படியாவது இந்த வருஷம் போய் விடலாம் என மணி மாமா நினைக்கும்.
குமரு மாமா அந்த ஏற்பாட்டில் இறங்கவில்லை. ஒருமுறை அப்பா இது குறித்து நெருக்கடி கொடுக்கும்
வகையில் கடிதம் எழுதிக் கேட்டார்.
"வெளிநாடு வந்து நான் படுற பாடு பத்தாதா?
இதுல அவன வேற இழுத்து விட்டுகிட்டு ஏன் தேவையில்லாத ரோதனை? வூட்டோட இருந்து அவனைக்
குடும்பத்தைப் பார்த்துக்கச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல மனை போடணும். அதுக்கு
அவன் அங்க இருந்தாத்தான் நல்லா இருக்கும்" என்று அதற்கு குமரு மாமா பதில் போட்டது.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் மணி மாமாவுக்கு
வெளிநாடு போக முடியாது என்பது உறுதியானதும் அது குடும்பத்தில் பற்று இல்லாதது போல
நடந்து கொள்ள ஆரம்பித்தது. அதனால் அது கலா சித்தி கல்யாணத்தின் போது தனக்கும் அதற்கும்
எந்த வித சம்பந்தமும் இல்லாது போல நடந்து கொண்டது. கல்யாணத்தில் மணி மாமா நடந்து
கொண்ட விதம் எல்லாருக்கும் வருத்தம் தருவதாகத்தான் இருந்தது.
மணி மாமா ஊரில் ஒரு சோக்காளிக் கூட்டத்தை
வைத்திருந்தது. சோக்காளிக் கூட்டத்தோடு ஊர் சுற்றுவது, பீடி வழிப்பது, சரக்கு அடிப்பது
என்று அதன் பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தது. கலா சித்திக் கல்யாணத்தில் அது சோக்காளிகளோட
கூட்டு சேர்ந்து கொண்டு குடித்து விட்டு கலாட்டா பண்ணியது. கறி விருந்தின் போது சோக்காளிகளோடு
உருண்டு பெரண்டது.
தேன்காட்டில் கலா சித்திக்கு மாப்பிள்ளை
பார்ப்பதற்கு முன் அப்பா எத்தனையோ முறை மணி மாமாவை மாப்பிள்ளை பார்ப்பதற்கு துணையாகக்
கூப்பிட்டு இருக்கிறார். மணி மாமா வராது. மாணிக்கநாயகத்தை அழைத்துக் கொண்டுதான் அப்பா
போனார்.
வைத்தி தாத்தாவிடம் மணி மாமாவைப் பற்றிப்
பேசினால், "அந்தப் போக்கத்த பயலைப் பத்தி எங்கிட்ட எதுவும் பேசாதீங்க!"
என்று மூஞ்சில் அடித்தது போல பேசி விடுவார்.
மணி மாமாவை எங்களில் யாருக்கும் பிடிக்காது.
அது தலைக்குப் பின்னால் முடியை சுருள் சுருளாக வளர்த்து விட்டிருக்கும். "என்ன
மாமா இது?" பொடணியில் தலையை வைத்துக் கேட்டால், "இத்தாண்டா பங்கு வைக்கிறது!"
என்று சொல்லும். மணி மாமாவுக்கும் எங்களில் யாரையும் பிடிக்காது. இந்தப் பிடிக்காது
என்பதெல்லாம் பணம் வாங்குவதற்குப் பொருந்தாது.
மணி மாமா மாசத்துக்கு ஒருமுறை சிப்பூர்,
வாழ்க்கப்பட்டு போய் வந்து விடும். சிப்பூரில் குணவதி பெரியம்மாவும், சாந்தா சித்தியும்
வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். வாழ்க்கப்பட்டில் பேச்சி பெரியம்மா வாழ்க்கைப்பட்டிருந்தது.
மணி மாமாவைப் பிடிக்காவிட்டாலும் அதுதான் கடைக்குட்டி என்பதால் பாசத்தை விட முடியாத
பெரியம்மாக்களும், சித்தியும் தம் வீட்டு புருஷங்காரங்களுக்குத் தெரியாமல் பணத்தை ஒப்பேற்றிக்
கொடுத்து விடுவார்கள். "இது எம்ம வூட்டுப் புருஷங்காரருக்குத் தெரிஞ்சு எப்படி
ஒதைக்கப் போறாங்களோ?" என்று அவர்கள் சொல்வதை பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்த பின் வேடிக்கையாக சொல்லிக் காட்டும் மாமா.
மணி மாமாவுக்குப் பணம் கொடுத்தாக ஒரே
ஆள் அம்மாதான். மணி மாமா வீட்டுக்கு வந்தால் அம்மா, "ஏன்டா வந்தே?" என்றுதான்
கேட்கும். அப்பா திட்டுவார், "வீட்டுக்கு வந்தவங்கள இப்படியா திட்டுவே?"
என்று.
மணி மாமா முன்பெல்லாம் அடிக்கடி வராது.
செய்யு பிறந்த பிற்பாடு அது வீட்டுக்கு வர ஆரம்பித்தது. செய்யுவின் மேல் தனிப்பிரியம்
இருந்தது மாமாவுக்கு. எங்கே வெளியே போனாலும் அது செய்யுவுக்காக எதாவது வாங்கி வரும்.
தின்பண்டம், பொம்மை, வளையல், ரிப்பன், மணி என்று செய்யுவுக்காக மணி மாமா எதாவது வாங்கி
வராமல் அது வீட்டுக்கு வந்தது கிடையாது.
அம்மாவிடம் பணத்தைக் கறக்க முடியாவிட்டாலும்
மணி மாமா அப்பாவிடம் எப்படியும் பணத்தைக் கறந்து விடும். சில நேரங்களில் கைமாத்தாக
வாங்கிய பணத்தை ரோஷம் வந்து கொடுப்பது போலக் கொடுக்கும். பல நேரங்களில் அந்த ரோஷம்
காற்றில் பறந்து அதைப் பற்றி அப்படியே மறந்து விட்டது போல நடந்து கொள்ளும்.
அண்மை காலமாக கலா சித்தியின் தேன்காட்டு
வீட்டுக்குப் போய் அங்கும் பணம் வாங்க ஆரம்பித்து இருப்பதாக மணி மாமாவைப் பற்றிப்
பேசிக் கொண்டிருந்தார்கள்.
அம்மா ஒரு நாள் வெளிப்படையாகவே மணி மாமா
வந்த போது திட்டியது. "ஏன்டா இப்படி ஒவ்வொருத்தி வூட்டுக்காப் போய் இப்படி
பணத்த வாங்கி மானத்த வாங்குறே? ஒழுங்கா வேலைக்கிப் போய் சம்பாதிச்சா என்னடா?"
"நீ அவங்கிட்டச் சொல்லி விசா அனுப்பச்
சொல்லு. வெளிநாட்டுல போய் எப்படிச் சம்பாதிக்கிறேம் பாரு?" என்றது மணி மாமா.
"உள்ளூரிலயே பைசா காசு சம்பாதிக்கப்
பிரயோசனம் இல்ல. இவம் வெளிநாடு போய ஆத்த இறச்சு அள்ளப் போறாணாம்!" அம்மாவுக்குக்
கோபம் வந்தது.
"அவம் மட்டும் சம்பாதிக்கணும். நல்லா
இருக்கணும். நாம் எப்பாடு பட்டுப் போனா என்ன?"
"அவம்தான் வூடு கட்டணும்னு சொல்லிகிட்டு
இருக்கான்ல. வள்ளிக்கு வேற மாப்புள பாக்கணும். கல்யாணம் பண்ணணும். யாராவது வூட்டோட
இருந்தாதான்டா காரியம் ஆவும்!"
"யாம் நீங்கல்லாம் இல்லியா? இருந்து
அந்த சோலிய பாக்க மாட்டீங்களா? அதுக்கு நாந்தான் கிடைச்சேனா?"
"போடா போக்கத்தப் பயலே. இருக்குற
சொத்த ஊருல இருந்து பாத்துக்கிட வேணும்டா!"
"ஆமா இருக்குப் பெருசா சொத்து? அந்தக்
கெழட்டு மூதி என்னத்த வாங்கி வெச்சுருக்கிறான். ஓகையூருல உருப்புடா ரெண்டு நெலத்த வாங்கிப்
போட்டு வெச்சுருக்கான். மாயனூர்ல நாலு பள்ளம் பாத்த நெலத்த வாங்கிப் போட்டுருக்கான்.
ஒண்ணும் உருப்படாது!"
வைத்தி தாத்தாவைக் கெழட்டு மூதி என்று
மணி மாமா பேசியதும் அம்மாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
"போடா வெளியில. இனிம காசு கீசுன்னு
அவர தேடிகிட்டு வந்தீன்னா வூட்டுக்குள்ள நொழய வுட மாட்டேன் ஆமா!"
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செய்யு
மாமாவை நோக்கி ஓடினாள். மாமாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "மாமா நீ கவலப்படாதே.
நாம வேலைக்குப் போயி உனக்கு நெறயா சம்பாதிச்சுத் தார்றேன்!" என்றாள்.
"அப்படிச் சொல்லுடா எஞ் சிங்கக்குட்டி.
நீ என்னடா குட்டிப்புள்ள சம்பாதிச்சு மாமாகிட்டக் கொடுக்குறது? மாமா சம்பாதிச்சு உனக்கு
டாப் டாப்பா கொடுப்பேன்டா!" என்று சொல்லிக் கொண்டே செய்யுவைத் தூக்கிக் கொண்டு
சைக்கிளில் வைத்துக் கொண்டு போனது.
"அவள எங்கடா தூக்கிகிட்டுப் போறே?
இப்படிச் செல்லங் கொடுத்துக் கொடுத்தே கெடுத்துப்புடாதடா?"
மாமா செய்யுவைத் தூக்கிக் கொண்டு போனால்
பெட்டிக்கடையில் அவள் கேட்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து கொண்டு வந்து விடும்.
விகடுவும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு
பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தான்.
"டேய் விகடு! அவம் பின்னால போயி
அவள தூக்கிட்டு வாடா!" என்றது அம்மா.
"விகடு சைக்கிளின் பின்னால் வேகமாக
ஓடினான்.
மாமா சைக்கிளை ஒற்றைக் காலில் ஊன்றி நின்று
திரும்பிப் பார்த்தது. சைக்கிள் நின்றதும் விகடுவும் ஓட்டத்தை நிறுத்தி நின்றான். நாக்கைத்
துருத்திய மாமா, "பின்னாடி வந்தீன்னா கொன்னே புடுவேன்!" என்றது. சைக்கிள்
கேரியரில் உட்கார்ந்திருந்த செய்யு கைகொட்டிச் சிரித்தாள்.
"வந்து எங்கிட்டு ஆராய்ச்சிக் கேப்பே
இல்ல. அப்ப வெச்சுக்கிறேன்!" விகடுவின் கண்களில் கோபம் கொப்புளித்தது.
திரும்பி வந்தவன் அம்மாவிடம், "மாமா
என்னயக் கொன்னேபுடுவேம்ங்கதும்மா!" என்றான்.
"அந்த நாயீ இங்க வராமலா போயிடும்.
வரட்டும் நாம் கேட்குறேன்!" என்றது அம்மா.
"பாப்பாவும் கைகொட்டிச் சிரிக்குதும்மா!"
"வர்ரட்டும். ரெண்டயும் நாம் கேட்குறேன்!"
*****
No comments:
Post a Comment