11 Nov 2016

ஆயிரமும் ஐநூறும் செல்லாது போனால்...


ஆயிரமும் ஐநூறும் செல்லாது போனால்...
ஆயிரமும் ஐநூறும் செல்லாது என்று
அறிவித்த உடன்
அப்பாவின் சட்டைப் பையில்
கை வைப்பதை விட்டு விட்டு
ஆத்தாவின் சுருக்குப் பையில்
கை வைத்தேன்!
*****
ஐநூறு ரூபாய் பாக்கெட் மணி
வேண்டாம்
நூறு ரூபாய் பாக்கெட் மணியே
போதும்
என்று நல்ல பிள்ளையாக ஆனேன்!
*****
ஆயிரம் ஐநூறு மொய் வேண்டாம்
நூறு ரூபாய் மொய் போதும்
என்று சொன்ன
திருமண வீட்டினர்க்கு
நன்றி சொன்னேன்!
*****
வாங்கிய கடனுக்காக
அவமானப்படுத்திய நண்பர்களிடம்
அதைத் திருப்பிக் கொடுக்க
ஆயிரத்தோடும் ஐநூறோடும்
சென்ற போது,
"ஒண்ணும் அவசரமில்ல
மெதுவா திருப்பிக் கொடு மாப்பிள்ள!"
என்று சொன்னதை ரசித்தேன்!
*****
கணக்கு எழுத யோசித்துக்
காசை எடுத்து வை என்று
டீ குடித்த உடன் அதட்டும்
அண்ணாச்சி,
ஐநூறை நீட்டியதும்,
"கணக்குல எழுதிக்கிறேன்!"
என்று சொன்னதும்
"அப்படியே கணக்குல எழுதிக்கோங்க!"
என்று நாலு பஜ்ஜி
மூன்று போண்டா
இரண்டு சமோசா
எக்ஸ்ட்ரா எடுத்துக் கொண்டேன்!
*****
குட்டிப் பாப்பாவின்
உண்டியலை
ஆட்டையைப் போடும்
பாவத்திலிருந்து விடுபட்டு,
குட்டிப் பாப்பாவின்
அனுமதியோடு,
"மாமாகிட்ட சில்லரை இல்லை!"
என்று அவள் கண் முன்னே
போட்டு உடைத்து
சில்லரைகளையெல்லாம்
பொறுக்கிக் கொண்டேன்!
*****
அம்மா கொஞ்சம்
ஸ்பெஷல் என்பதால்
அவள் அனுமதிக் கேட்காமலே
கடுகு டப்பாவிலும்
சீரக டப்பாவிலும் இருந்த
பத்தையும், இருபதையும்
எடுத்துக் கொண்டேன்,
ஒருவேளை
அம்மா கண்டுபிடித்தால்
"வளர்ற புள்ளை
காலேஜ்லேர்ந்து பசியோடு
வர முடியுமா?"
என்ற சொல்வதற்கான டயலாக்கையும்
தயார் செய்து வைத்துக் கொண்டு!
*****

10 Nov 2016

கதைகளின் நம்பிக்கைகள்


புரட்சி
வெடித்தால்தான் கிடைக்கும்
பலூனில் உள்ள
காற்றுக்கு விடுதலை!
*****

நுகர்ச்சி
பூனைகளுக்குத் தெரியும்
மீன்கள் வறுபடுவதும்
குழம்பில் கறி கொதிப்பதும்
அருகில் நாம் இருப்பதும்
தொலைவில் செல்வதும்
சரியான தருணங்கள் வாய்ப்பதும்
வாய்க்காமல் போவதும்!
*****


கதைகளின் நம்பிக்கைகள்
சரிபாதிக் கதை
தெரியாத
பாட்டியொருத்தி
தைரியமாக
சொல்லிக் கொண்டு இருக்கிறாள்
பாதிக் கதையில்
எப்படியும்
குழந்தைகள் உறங்கி விடும்
என்ற நம்பிக்கையில்!
*****

திட்டம்


கிப்ட்
இந்தப் பிறந்த நாளுக்காவது சுந்தரிக்கு பர்த்டே கிப்டாக நெக்லஸ் கொடுக்க வேண்டும் என்று அடகு கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அழகேசன்.
*****

வீடு
இரண்டு வீட்டையும் பிரிக்கும் வேலியில் இருக்கும் மரமே வீடாய் இருக்கிறது பறவைக்கு.
*****

ஏமாற்றம்
ஆபரேஷன் செய்த டாக்டர் ஏமாந்தார், பேஷண்டின் ரெண்டு கிட்னியும் இல்லாமல்!
*****

திட்டம்
கபாலியும், ஜேம்சும் கொலைத்திட்டம் தீட்டினர் ஜெயிலுக்குள் இருந்து!
*****

தண்டனை
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தலைவர் சொன்னார், "சரியான வக்கீல் வைக்காததுக்கு சரியான தண்டனை!"
*****

9 Nov 2016

கலைந்தோடும் ஓவியங்கள்


கலைந்தோடும் ஓவியங்கள்
சேறாய்
வழிந்தோடுகிறது
மழை ஓவியம்!
*****

நம்பிக்கை
நீ அழைத்திருக்க மாட்டாய்
என்று தெரிந்தும்
திரும்பிப் பார்க்கிறேன்,
அழைப்பாய் என்று
மனதுக்குள் மறைந்திருக்கும்
நம்பிக்கையை
மறுக்க முடியாமல்!
*****

கஷ்டங்கள்
குழந்தையாய் இருப்பது
கஷ்டம் என்பாய்!
மெய்தான்
எளிமையாய் இருப்பதன்
கஷ்டம் அது!
*****

தடை
செய்யப் போகும்
ஒரு உதவியை
தடுத்து விடுகிறது
நன்றி கெட்ட
ஒரு மனிதன் குறித்த
நினைவு!
*****

பழி தீர்த்தல்
கடைசியில்
எளிதாக
பழி தீர்க்க முடிகிறது
செய்ய முடிந்த உதவியைச்
செய்யாமல்!
*****

தூக்கிக் கட்டு


தூக்கிக் கட்டு
"சேலையைத் இறக்கிக் கட்டு!" என்றான் ஷார்ட் ஷர்ட் போட்டிருந்த கண்டிப்பான கணவன்.
*****

தண்ணீர்
"நூறடியில் தண்ணி கிடைக்கும்!" என்று நம்பி வாங்கிய ப்ளாட்டிலிருந்து சரியாக நூறடி தூரத்தில் இருந்தது டாஸ்மாக்!
*****

ப்ரிண்ட்
"எக்ஸ்ட்ரா நாலாயிரம் பிரிண்ட் போடு!" என்றான் திருட்டு டிவிடிக்காரன் நானூறு பிரிண்ட்களோடு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் படத்துக்கு.
*****

8 Nov 2016

வண்ணம் எடுத்தல்


வழி
வேறு வழியில்லாமல்தான்
சொல்கிறேன் என்பவர்களுக்குத்
தெரியும்
அதுவும்
ஒரு வழியென்று!
*****

வண்ணம் எடுத்தல்
ஒளி கொடுத்த
மலர்களிடமிருந்து
வண்ணம் எடுத்து
வானவில்லாக்குகிறது
வானம்!
*****

சாத்தியங்கள்
எளிதாக இருக்கிறது
திட்டி விடுவது
கஷ்டமாக இருக்கிறது
சமாதானம் செய்வது
கிளையை வெட்டுவதும்
ஒட்ட வைப்பதும் போல!
*****

வயல்/ ரியல்


மணி நேரம்
"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்!" என்று சொல்லி விட்டு, அடுத்த பேஷண்டின் நிலைமைப் பற்றிச் சொன்னார் டாக்டர், "24 மணி நேரம் கழித்துதான் எதையும் சொல்ல முடியும்!"
*****

முகம்
"டாஸ்மாக்கை மூடுங்கள்!" என தலைவரோடு குரல் எழுப்பி விட்டு, கூட்டம் முடிந்ததும் நுழைந்தான் டாஸ்மாக்கிற்கு.
*****

வயல் / ரியல்
நெல்லை நட்டு மதிப்பிழந்த வயலுக்கு, கல்லை நட்டதும் வந்தது மதிப்பு!
*****

மதிப்பு
குழாயில் ஒழுகிக் கொண்டிருந்த வரையில் வராத மதிப்பு, வந்ததது, பாட்டிலில் அடைக்கப்பட்டப் பிறகு தண்ணீருக்கு.
*****

வெயில்
வீட்டின் ஓரத்தில் இருந்த ஒற்றை மரத்தையும் வெட்டிய பின் புலம்பினான், "ஸ்! ஸ்! அப்பப்பா!" என்ன வெயில்!"
*****