28 Jun 2026

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

சீரழித்த சினிமா – 26

திருடா திருடி

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், நடுத்தர தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச விழுமியங்களுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, பொறுக்கித்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் டேட்டா பேக்கில் ஏற்றிய திரைப்படம்தான் திருடா திருடி.

படிக்காமல் ஊர் சுற்றும் வால்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் திருந்தி உருப்பட வழி தேட வேண்டும், என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு பொறுக்கித் தனமான மகன் தனது போக்கிரித்தனத்துக்கு நகைச்சுவையான காரணங்களை வரிசை கட்டிக் கொண்டு, ஒரு பெண்ணை ஸ்டால்க் செய்து, அவளிடமே வம்பு வளர்த்து, கடைசியில் அவளையே காதலிக்க வைக்கலாம்" என்ற ஒரு புதுவிதமான நடுத்தர வர்க்க வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, திருடா திருடி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் ஒல்லியான, எப்போதும் கௌண்டர் கொடுத்து அராஜகம் செய்யும் போலிப் பொறுக்கி பிம்பமும், நாயகியின் முட்டாளாக்கப்படும் ஐடி ஊழியர் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டாஸ்மாக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வீட்டில் கடைக்குட்டிப் பிள்ளையாக இருந்து, எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக இருந்தால் போதும்; உங்களைக் கண்டிக்கும் அப்பனை வில்லன் என்று நினைக்கலாம். அண்ணனை அவனது பலகீனத்தைப் பயன்படுத்தி அகௌரவத்தில் சிக்க வைத்து விட்டு, அதைத் தந்தை மௌனமாக எதிர்த்தால், வீட்டை விட்டு வெளியேறிவிட்டு நான் சுயமரியாதை உள்ளவன் என்று சீன் போடலாம்.

இதை தமிழ் இளைஞன் எப்படி எடுத்துக் கொண்டான் தெரியுமா? கடைக்குட்டிப் பிள்ளையின் பொறுப்பின்மை என்பது கண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல; அது ஒரு தந்தை தன் மகனைப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தலைமுறை இடைவெளி என்று நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் வியர்வை துளிக்குக் கூட மதிப்பளிக்காமல், வெட்டி பந்தா செய்துகொண்டு ஊர் சுற்றும் பல உதவாக்கரைகள் தங்களை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள கிடைத்த ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால், திருடா திருடி படத்தில் ஒட்டுமொத்தத் திரையரங்கையுமே ஒரு குடிமகன் கூடாரமாக மாற்றி விற்றார்கள்.

படத்திற்கும் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் வரும் அந்த மன்மத ராசா பாடல், தமிழ்நாட்டு இளைஞர்களின் நரம்புகளை எப்படி முறுக்கேற்றியது என்றால், எவன் ஒருவன் நளினமில்லாமல் வெறிபிடித்தாற்போல் கை கால்களை உதறி ஆடுகிறானோ அவனே மாஸ் ஹீரோ என்று காட்டியது.

இந்த உறைபனியூட்டும் நரம்புத் தளர்ச்சி நடனத்தைத் தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாடியதன் விளைவு, இன்றுவரை தமிழ் சினிமாவில் நல்ல கதைகளோ, மெல்லிசைகளோ தோற்றுப் போய், வெறும் டாஸ்மாக் குத்துப் பாடல்களும், தலைகால் புரியாத குத்தாட்டங்களும் மட்டுமே இருந்தால் படம் ஓடிவிடும் என்ற ஒரு மிக மோசமான ரசனைச் சீரழிவைத் தமிழனிடம் இத்திரைப்படம் விதைத்தது.

மன்மத ராசா மெயின் டிஷ் என்றால், அதற்கு சைட் டிஷ் போல பொண்ணுங்க அழகாக இருக்காங்க, வண்டார்குழலி போன்ற ஆப்பாயில் அரைவேக்காட்டு ஆபாச சைட் டிஷ்களும் போனஸ் பாய்ண்டுகளைப் போலப் படத்தில் உண்டு.

அதுமட்டுமில்லாது திருடா திருடி படம் நகைச்சுவைப் பாத்திரங்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லுகளையும், திருட்டுத் தனங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது. இதெல்லாம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமப்பா என்ற விட்டேத்தி மனநிலையை மிக நேர்த்தியாக விதைத்தது.

ஓர் இளைஞனை நல்வழிப்படுத்த வேண்டிய நட்பு, பின்னணியில் ஆபாசமாகப் பாடி அசிங்கம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதையும், பொறுப்பின்மையையும், ஏமாற்று வேலைகளையும் செம காமெடி என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியையும் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது.

நாயகியின் கதாபாத்திரமானது இப்படத்தில் படித்துப் பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தற்சார்பு உடைய பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அவருக்கும் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. தன்னைத் துரத்தித் துரத்திக் கொடுமைப்படுத்தும், வேலைவெட்டியற்ற ஒரு லோக்கல் பொறுக்கியின் மீது அவளுக்கு எப்போது காதல் வரும் என்றே அவளுக்கும் தெரியாது படத்தைப் பார்க்கும் நமக்கும் புரியாது.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோ, கண்ணியமான வாழ்க்கையோ வாழத் தகுதியற்றவள்; அவள் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் வேலையில் இருந்தாலும், கடைசியில் வீட்டில் உருப்படாத ஒரு சோம்பேறிப் பொறுக்கியை லவ் பண்ணி அவனைத் துரத்துவதே அவளது பிறவிப் பயன் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் கமர்ஷியல் ஹிட் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

திருடா திருடி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை நடுத்தர வர்க்கப் பொறுக்கிகளின் ரோல் மாடல் பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

இப்படத்தின் ஆகப்பெரும் சமூகச் சீரழிவு, அதன் பாடல்கள்தான். குறிப்பாக, அந்த ஒரு குறிப்பிட்ட பாடலான மன்மத ராசா. அதுவரை நடனம் என்றால் ஒரு நளினம் இருக்க வேண்டும் என்று நம்பியிருந்த பரதநாட்டிய தேசத்தில், "யார் அதிகமாக உடம்பை முறித்துக் கொள்கிறார்களோ, அவர்களே சிறந்த நடனக் கலைஞர்" என்றொரு புதிய உளவியல் நோய் பரவியது. கல்யாண வீடு, திருவிழா, காதுகுத்து என எங்கு பார்த்தாலும், தங்களின் இடுப்பு எலும்புகள் முறிவதைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்களின் கண்கள் குத்தப்படுவதைப் பற்றியோ கவலைப்படாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே கைகளை முன்னும் பின்னும் ஆட்டி பித்து பிடித்தாற்போல் ஆடத் தொடங்கியது.

இசை என்பது ஆன்மாவை அமைதிப்படுத்த வேண்டும் என்பார்கள். ஆனால், 'மன்மத ராசா' ஆன்மாவை உலுக்கி, மூளையின் செல்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

சுருக்கமாகச் சொன்னால், 'திருடா திருடி' என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் ரசனைத் தரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட ஒரு மோசமான ‘மின்னல் தாக்குதல்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு, "நானும் இப்படித்தான் சுத்துவேன், ஆனா எனக்கும் ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா" என்று நம்பிக் கொண்டிருக்கும் முப்பது, நாற்பது வயது இளைஞர்கள் இன்றும் நம்மிடையே உலா வருவதுதான் இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய ஆகப்பெரும் உளவியல் சீரழிவின் நேரடி சாட்சி.

பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது, அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் வற்புறுத்துவது போன்ற ஸ்டாக்கிங் முறையை இந்தப் படம் மிகச் சாதாரணமாகக் காட்டியது. பெண்ணின் இல்லை என்ற வார்த்தைக்குப் பின்னால் ஆமாம் என்பது இருக்கிறது என்ற தவறான உளவியல் புரிதலை இது பல இளைஞர்களின் மனதில் விதைத்தது.

ஒரு சுமாரான கதை, கொஞ்சம் ஆபாசம், அதீத வன்முறையான நடனம், பொறுப்பற்ற நாயகன் என இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, அதற்கு கமர்ஷியல் ஹிட் என்று லேபிள் ஒட்டியதன் விளைவாகக் கமர்ஷியல் தமிழ் சினிமா படு லோக்கல், தரை லோக்கல் என்கிற லெவலுக்குத் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதைக் கமர்ஷியல் ஹிட்டிற்கான பார்முலாவாகப் பார்த்தது.

பெற்றோரை எதிர்த்து அவர்களை நக்கலடிப்பதுதான் வாலிபத்தின் இயல்பு என்றும், மன்மத ராசா என்றும், பொண்ணுங்க அழகா இருக்காங்க என்றும், வண்டார்குழலி என்றும் வெறித்தனமாக ஆடினால் அத்தனை பொறுக்கித்தனங்களையும் ரசிக்கலாம் என்றும், வேலைவெட்டியின்றித் திரிந்து பெண்களைத் துரத்துவதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டாஸ்மாக் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment