27 Jun 2026

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

கே.பாக்கியராஜ் ஈரோடு வெள்ளங்கோவிலில் கிருஷ்ணசாமி நாயுடு - அமராவதி தம்பதிக்கு மகனாகப் பிறக்கும்போதே, தனக்கான திரைக்கதையை அவரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

இல்லையெனில், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, கிழக்கே போகும் ரயில்பெட்டியில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் முகம் காட்டி, சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதி, சட்டென்று புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகன் ஆனது எப்படிச் சாத்தியம்?

அன்றைய தமிழ் சினிமா நாயகர்கள் மீசையை முறுக்கிக் கொண்டும், தொடையைத் தட்டிக்கொண்டும் அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவரோ, அடுத்த வீட்டு வாலிபனின் அப்பாவித்தனத்தையும், கள்ளமில்லாத அல்லது கள்ளத்தனம் நிறைந்த புன்னகையையும் மூலதனமாக்கினார்.

ஊமைகளின் மொழியைப் பேச முற்பட்ட ஒரு கை ஓசை இவரைத் தயாரிப்பாளராக்கியது. ஆனால், பேசத் தெரிந்த உலகம் இவரை இயக்குநராகக் கொண்டாடியது.

பாக்கியராஜ் இயக்கிய படங்கள் வெறும் கதைகள் அல்ல; அவை மனித பலவீனங்களின் மீதான நையாண்டிகள்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு எனத் தொடர்ந்த அவரது படங்கள், குடும்ப அமைப்பின் போலித்தனங்களை மிக நாசூக்காகக் கேலி செய்தன.

இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

குருநாதர் பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த ஒரு கைதியின் டைரி கமல் ஹாசனின் இரட்டை வேடத்தால் ஜொலித்தது. ஆனால், அதன் இந்திப் பதிப்பான ஆக்ரி ராஸ்தா மூலம் அமிதாப் பச்சனையும் ராஜேஷ் கன்னாவையும் இயக்கிய பெருமை பாக்கியராஜுக்குக் கிடைத்தது.

இவரது கதைகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற மகுடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தன.

திரைப்படம் பத்தாதென்று பாக்யா வார இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பேனாவைப் பிடித்தார். 'வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம்', 'நீங்க நெனச்சா சாதிக்கலாம்' எனப் புத்தகங்கள் எழுதினார். தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பாராட்டுகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர் பாதியில் விட்டுச் சென்ற ‘அண்ணா நீ என் தெய்வம்’ காட்சிகளை வைத்து, புதுத் திரைக்கதை எழுதி ‘அவசர போலீஸ் 100’ என்று வெளியிட்டாரே, அதுதான் பாக்கியராஜின் உச்சக்கட்ட புத்திசாலித்தனம்.

எம்.ஜி.ஆரே இவரைத் தன் ‘கலையுலக வாரிசு’ என்றார். அதன் விளைவோ என்னவோ, 1989இல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ தொடங்கி அரசியலிலும் குதித்தார். பின்னர் திமுகவிலும் சில காலம் மின்னி மறைந்தார்.

பாக்கியராஜின் திரைக்கதையைப் போலவே அவரது வாழ்க்கைத் திரைக்கதையும் சுவாரசியமான காதல்களையும், சோகங்களையும் கொண்டது.

உதவி இயக்குநராக இருந்தபோது காதலித்து, 1981இல் மணந்த மனைவி பிரவீணா. ஆனால், மஞ்சள் காமாலை என்ற வில்லன் 1983இல் அவரைப் பறித்துக்கொண்டது.

டார்லிங் டார்லிங் பட நாயகியான பூர்ணிமாவை மறுபடி காதலித்து மணந்தார். மகள் சரண்யாவை பாரிஜாதம் மூலம் அறிமுகப்படுத்தினார். மகன் சாந்தனு சக்கரக்கட்டி மூலம் அறிமுகமாகி இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கால ஓட்டத்தில், கதாநாயகன் அந்தஸ்திலிருந்து உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன் என குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். இவர் கடைசியாக இயக்கி நடித்தது சித்து பிளஸ் 2.

பார்த்திபன், பாண்டியராஜன் போன்ற சுட்டித்தனமான இயக்குநர்களைத் தமிழ் சினிமாவிற்குத் தந்ததே இவரது ஆகச்சிறந்த பங்களிப்பு.

சினிமாக்களில் எத்தனையோ ட்விஸ்ட்களை எழுதிய திரைக்கதை மன்னனின் நிஜ வாழ்க்கை கிளைமாக்ஸ் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில்தான் கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்குச் சென்று சென்னை திரும்பியிருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில், இன்று காலை வழக்கம் போல மார்னிங் வாக் சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்கு திடீர் நெஞ்சுவலி.

மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட். கடும் மாரடைப்பு. டாக்டர்கள் போராடினார்கள்.

ஆனால், பாக்கியராஜின் லைப் ஸ்கிரீன்பிளே அங்கே முடிவுக்கு வந்தது. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இவருடைய குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து சரியாக 17 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் சீடனும் கிளம்பிவிட்டார். குருவும் சீடனும் மேலேயும் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கான டிஸ்கஷனைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ?

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைக்கதை மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி!

*****

No comments:

Post a Comment