26 Jun 2026

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

சீரழித்த சினிமா - 24

சேது

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

இரண்டாயிரமாவது ஆண்டின் விடியலுக்குச் சற்று முன்பாக, 1999 ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டைம் பாம் வைத்தது சேது திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம் செய்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" அல்லது "காதல் என்பது பரஸ்பரச் சம்மதத்துடன் மலர வேண்டிய ஒன்று" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு கல்லூரி அளவிலான லோக்கல் தாதா, பயந்து நடுங்கும் ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதும், அவளைத் தன் வன்முறைப் பிடிக்குள் வைப்பதும்தான் உன்னதமான காதல்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சேது திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்தச் சீயான் என்ற கரடுமுரடான, அதேசமயம் மனநலம் பிறழ்ந்த பிம்பமும், அபிதா குஜலாம்பாள் என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மாணவர் ஒழுக்கவியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்தால் போதும்; உங்களுக்குப் பாடப்புத்தகங்களோ, பேராசிரியர்களோ தேவையில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை மிரட்டலாம், அராஜகங்களுடன் வலம் வரலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 506 அதாவது, மிரட்டல் விடுத்தல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண் உங்களைப் பார்த்துப் பயந்து ஓடினால், அவளை நடுத்தெருவில் வைத்து மிரட்டி, அவளது பயத்தையே காதலாக மாற்ற முனைய வேண்டும். இதுதான் ஆண்மையின் கம்பீரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து முன்னேற வழியில்லாமல், சீயான் பாணியில் தாடி வளர்த்து, தங்களை ஒரு ரப் அண்ட் டப் ரவுடியாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சேது படத்தில் ஒட்டுமொத்த மனநலப் பிறழ்வையே காதலின் உன்னதக் குறியீடாக மாற்றி விற்றார்கள். ஹீரோ சேதுவுக்கு அடிதடியில் மண்டை உடைந்து, அவர் மனநலக் காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மொட்டை அடித்து அலைவார்.

இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், காதலுக்காகப் பைத்தியம் ஆயிட்டான், என்று பார்ப்பவனுக்குக் கொலையையும் வன்முறையையும் விடக் கொடூரமான ஒரு மனநோயின் மீது போலிப் புனிதத்துவத்தை வரவழைப்பார் இயக்குனர்.

இதன் விளைவுவாகக் காதல் தோல்வி அடைந்தால் நேராக மனநல மருத்துவரிடம் போவதை விடுத்து, சீயான் போலச் சங்கிலியை இழுத்துக்கொண்டு அலையத் துடிக்கும் சினிமாட்டிக் பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், மனநலம் குணமாகித் திரும்பி வரும் சேது, தன் காதலி இறந்துவிட்டதை அறிந்து, தன்னைத் தேடி வரும் மனநலக் காப்பக வாகனத்திலேயே ஏறித் திரும்பவும் பைத்தியமாகவே வாழ ஓடிவிடுவார். இதை ஏதோ காதலின் பிரிக்க முடியாத சோக பந்தம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பலவீனமான ஆணின் கோழைத்தனம். "என் காதலி இல்லை என்றால் நான் ஏன் சாதாரணமாக வாழ வேண்டும்? நான் பைத்தியமாகவே மடிவேன்" என்று ஓடுவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

தமிழ் இளைஞர்களுக்கு காதல் தோல்வி அல்லது துயரம் வந்தால், அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்கக் கூடாது; உங்களை நீங்களே சித்திரவதை செய்து அழித்துக்கொள்ள வேண்டும் என்ற போலித் தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அபிதா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்குவதற்கும், அவன் பைத்தியமானவுடன் அவனுக்காக உருகி உருகி அழுது தன் உயிரையே விடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பலிகடாவாகக் காட்டப்பட்டார். அவளுக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை, குடும்பப் பாரம்பரியம் இருந்தாலும், ஹீரோவின் சீயான் பிம்பத்திற்கு முன்னால் அவள் ஒரு மண்பொம்மை போலச் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, பகுத்தறிவோ இல்லாமல், தன்னை மிரட்டிக் கடத்தும் ரவுடியாக இருந்தாலும் அவனது அன்பைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசிய விருது வாங்கும் அளவிற்கு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சேது பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனுக்குச் சீயான் என்ற நிரந்தரப் பிம்பத்தைத் தந்து, அதன் இயக்குநரை மனநலப் பிரச்சனைகளைக் கொண்டு ஹிட்டடிக்கும் பலமான இயக்குநராக கமர்ஷியல் ஏணியில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணின் சம்மதம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. "அவன் கெட்டவனா இருந்தாலும் மனசுக்குள்ள குழந்தை சார்" என்ற ஒற்றை வாதத்தைக் காட்டி, கல்லூரிப் பெண்களை மிரட்டுவதும், கடத்துவதும், மனரீதியாக வசிப்படுத்துவதும் தீவிரமான காதல் என்பதாக இங்கே புனிதப்படுத்தப்பட்டது.

மன அழுத்தம் என்பது மருத்துவப் பிரச்சினை அல்ல, அது ஓர் அழகியல் என்று மாற்றிய பெருமை சேதுவையே சாரும். “வாழ்க்கையில் உனக்கு விடிவு காலமே கிடையாது, நீ உருப்பட நினைத்தாலும் இந்தச் சமூகம் உன்னை வாழவிடாது” என்கிற அதீத எதிர்மறை எண்ணத்தை இது இளைஞர்களின் ஆழ்மனதில் விதைத்தது. தங்களுக்கு நடக்கும் சின்னச் சின்ன தோல்விகளுக்கும், தங்களைச் சேதுவாக நினைத்துக்கொண்டு சுய பரிதாபத்தில் மூழ்கும் பலவீனமான மனிதர்களை இந்தப் படம் உற்பத்தி செய்தது.

வாழ்க்கையில் ஏமாற்றம் வந்தால் மீண்டு வராதே. மீண்டும் பைத்தியமாகவே போய்விடு என்பது சேது வழங்கிய ஓர் ஆபத்தான டிப்ரசிவ் சிந்தனை. இளைஞர்களுக்கு ஒரு தோல்வியைக் கையாளும் பக்குவத்தையோ, நம்பிக்கையையோ இந்தப் படம் தரவில்லை. மாறாக, சோகத்தைக் கொண்டாடும், சுய அழிவைத் தேடும் ஒரு போக்கை உருவாக்கியது.

கதாநாயகன் என்பவன் அழகாகவோ, சுமாராகவோ இருப்பது முக்கியமல்ல; எவ்வளவு கொடூரமாகத் தன்னைத் தானே சித்திரவதை செய்துகொள்கிறான் என்பதுதான் அர்ப்பணிப்பு என்று ஒரு புது வித சித்திரவதை முயற்சியை இது துவக்கி வைத்தது.

சமூக எதிர்மறைகளையும் வக்கிரங்களையும் காட்டி, சுபமான முடிவை வைக்கவே கூடாது என்கிற ஒரு தவறான முன்மாதிரியை இது தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் மனநலத்தை ஒரு வித மனச்சோர்வு சார்ந்த கலாச்சாரத்தை நோக்கி நகர்த்திய பெருமையும் இத்திரைப்படத்துக்கு உண்டு. சேது திரைப்படம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை உடைத்தது உண்மைதான். ஆனால், அது சமூகத்தின் மனநல இலக்கணத்தையும் ரொம்பவே சிதைத்தது.

ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதுதான் உன்னதமான காதல் என்றும், மனநலம் பிறழ்ந்து சங்கிலியால் அடிபடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும், வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதே ஹீரோயிசம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சுருக்கமாகச் சொன்னால், சேது தமிழ் சினிமாவின் கபாலப் பகுதியில் விழுந்த ஒரு பலத்த அடி!

*****

No comments:

Post a Comment