சீரழித்த சினிமா – 28
நாட்டாமை
சொம்பு ராஜ்ஜியமும் பகுத்தறிவின் பூஜ்ஜியமும்
ஆயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டின் நவம்பர் திங்களில், தமிழ்ப் பொதுப்புத்தியின்
எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நவீன ஜனநாயகச் சிந்தனைகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
நீதிமன்றக் கட்டமைப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாகப் பஞ்சர் போட்டு வெந்தப் புண்ணில் டிஞ்சர்
ஊற்றியது நாட்டாமை.
தமிழ்
சினிமா அதுவரை காட்டிய "சட்டத்தின் முன் அனைவரும் சமம், காவல் துறையும் நீதிமன்றமுமே
குற்றங்களை விசாரிக்க வேண்டும்" என்ற குறைந்தபட்ச எதார்த்த விதியை அடியோடு மாற்றி,
"ஒரு ஊரில் பெரிய நாட்டாமை இருந்தால், அவர் சட்டப் புத்தகங்களைப் படிக்கத் தேவையில்லை;
அவர் ஒரு கம்பீரமான பட்டுத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு, தவறு செய்தவன் யாராக இருந்தாலும்
என் செம்பைக் கொடு என்று உத்தரவிட்டால் போதும், ஒட்டுமொத்த ஊரே சாஷ்டாங்கமாக விழுந்து
கிடக்க வேண்டும்" என்ற ஒரு புதுவிதமான நிலப்பிரபுத்துவக் கௌரவ வக்கிர அத்துமீறலை
தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நாட்டாமை திரைப்படத்திற்கு உண்டு.
நாயகனின்
அந்த பெரிய நாட்டாமை மற்றும் சின்ன நாட்டாமை என்ற இரட்டைப் பாத்திரங்களின் வழியே கட்டியெழுப்பப்பட்ட
மீசையை முறுக்கும் போலிப் பாரம்பரிய பிம்பமும், நாயகிகளின் வெறும் குடும்பக் குத்துவிளக்கு
மற்றும் பழிவாங்கும் கருவிகளாகச் சுருக்கப்பட்ட வக்கிரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின்
மூளையை எப்படி ஒரு மரத்தடித் தீர்ப்பு மண்ணாங்கட்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச்
சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?
உங்களுக்கு
ஊரில் செல்வாக்கு இருந்தால் போதும்; உங்களுக்குச் சட்ட ஒழுங்கோ, முறையான விசாரணையோ
தேவையில்லை. ஒரு பெண் தன் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்தது என்று புகார் கூறினால்,
மருத்துவப் பரிசோதனைக்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ போகக் கூடாது. நேராக நாட்டாமையின்
வீட்டு வாசலில் வந்து நிற்க வேண்டும். அவர் ஒரு போலியான சாட்சியைப் பார்த்துவிட்டு,
"உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்" என்று தன்னிச்சையாகச் சொல்லும் தீர்ப்பைத்தான்
தெய்வீக நீதி என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.
"நாட்டாமை
தீர்ப்ப மாத்து..." என்று ஒரு ஊரே கதறினாலும், ஒருமுறை சொன்ன தீர்ப்பை மாற்ற மாட்டேன்
என்று பிடிவாதம் பிடிப்பதையே பரம்பரை கௌரவம் என்று சித்தரித்தது இத்திரைப்படம்.
தன்
தம்பியே தவறு செய்ததாகப் பொய் வழக்குப் போடப்பட்டபோது, உண்மையை ஆராயாமல் அவசரப்பட்டுத்
தீர்ப்பு வழங்கி ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு வரவழைப்பதுதான் நேர்மையான நிர்வாகம்
என்று காட்டியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த வக்கிரம்.
விளைவு?
இருபத்தியோராம்
நூற்றாண்டிலும் முறையான சட்ட அமைப்புகளை மதிக்காமல், தங்களுக்குத் தோன்றும் தனிநபர்
கருத்துக்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் பஞ்சாயத்து கூட்டி அடுத்தவர்களைத்
தீர்ப்பெழுதித் தண்டிக்கும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.
நாட்டாமை
படத்தில் ஒரு பித்தளைச் செம்பு மற்றும் நாற்காலியை ஒட்டுமொத்த கிராமத்தின் கௌரவக் குறியீடாக
மாற்றி விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் பிற்போக்குத்தனத்தை, மிக வண்ணமயமான பாடல்களாலும்,
உணர்ச்சிமயமான வசனங்களாலும் மூடி மறைத்து, அவங்க பாரம்பரியத்தைக் காப்பாத்துறாங்க என்று
பார்ப்பவனை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் கமர்ஷியல் தந்திரம்.
முறையான
கல்வியையோ அல்லது விழிப்புணர்வையோ பேசாமல், பரம்பரை நாற்காலியையும், பஞ்சாயத்துச் செம்பையும்
கெத்து என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது
இந்தத் திரைப்படம்.
மற்றொரு
பக்கம் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வைத்துக் கிராமங்களில் நடக்கும் அத்தனை பாலியல்
அநாகரிகங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம். ஒரு பெண்ணை
அவமதிப்பதையும், ஒழுக்கக்கேடான விஷயங்களையும், மனிதத் தன்மையற்ற வக்கிரங்களையும், பெண்களைப்
போகப் பொருளாக நடத்துவதையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு
மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்த நாட்டாமை சாம்ராஜ்ஜியம்.
இத்திரைப்படத்திலும்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம்,
நாட்டாமையின் பட்டு வேட்டியை மடித்து வைப்பதற்கும், அவருக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்
கொண்டு நிற்பதற்கும், கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் செவக்கும்
என்று பாட்டு பாடவும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகவே காட்டப்பட்டது. இன்னொரு
நாயகியின் கதாபாத்திரம், வில்லன் குடும்பத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாகி, தன்மானத்தையும்
கௌரவத்தையும் நாட்டாமையின் தீர்ப்பின் மூலம் மட்டுமே மீட்டெடுக்க வேண்டிய ஒரு சுயசார்பற்ற
பலிகடாவாகச் சுருக்கப்பட்டது.
பெண்
என்பவள் தனக்கென ஒரு தனித்துவமான சிந்தனையோ, காவல் துறையை அணுகும் தைரியமோ இல்லாமல்,
நாட்டாமையின் வீட்டு ஆண்கள் எடுக்கும் முடிவுகளின் நிழலில் மட்டுமே வாழ வேண்டும் என்ற
கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் மகா வெற்றி என்ற
லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.
நாட்டாமை
பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் சுப்ரீம் ஸ்டார் பிம்பத்திற்கு ஒரு கிராமியப்
பிரம்மாண்டத்தைத் தந்து, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் என்ற நாற்காலியில் அமர வைத்திருக்கலாம்.
ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
படத்தில்
நாட்டாமை என்பவர் ஒரு மனிதர் அல்ல; அவர் ஒரு நடமாடும் தர்மதேவதை. அவர் தும்மினால் அது
நியாயம், அவர் சொம்பைத் தூக்கிக் கொண்டு போனால் அது தர்மம். "நாட்டாமை தீர்ப்ப
மாத்து" என்று யாராவது சொன்னால், உடனே வானமே இடிந்து விழுந்துவிடும் என்கிற ரேஞ்சுக்கு
ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
நிஜ
வாழ்க்கையிலும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைவரோ, சாதிப் பெரியவரோ, அல்லது குடும்பத்து
ஆணோ என்ன செய்தாலும் அது நியாயம்தான் என்கிற ஒரு குருட்டுத்தனமான அடிமை மனோபாவம் தொடர
நாட்டாமை வழிவகுத்தது. மொத்தத்தில் சட்டம், நீதிமன்றம், ஆதாரங்கள் எல்லாவற்றையும் விட
"பெரியவர் வாக்கு" முக்கியம் என்கிற காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு புனிதத்தன்மை
ஊட்டியது நாட்டாமை.
ஒரு
நாட்டாமைக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, கையில் ஒரு பித்தளைச் செம்பு இருக்க வேண்டும்.
அந்தச் செம்பை வைத்துக்கொண்டு அவர் போடும் தீர்ப்புகள் எல்லாமே, சட்டம் ஒழுங்கைத் தவுடுபொடியாக்கும்
ரகம். ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தியவனுக்கு, அவளையே கட்டி வைக்கச் சொல்வது, ஆதாரமே இல்லாமல்
ஒருவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்று அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
இதைத்தான்
நாம் இன்றுவரை வாட்ஸ்அப் பஞ்சாயத்துகளிலும், சமூக ஊடகக் கொலைகளிலும் நாம் பார்த்துக்
கொண்டிருக்கிறோம். எவ்வித விசாரணையும் இன்றி, ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி, அவரைச்
சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் காட்டுமிராண்டித்தனமான உத்திக்கு ராக்கெட் லாஞ்சிங்
செய்ததே இந்தத் திரைப்படம்தான்.
நிலப்பிரபுத்துவ
வலிமையும் சாதிப் பெருமையும் உடைய ஒருவரே நீதிபதி, அவரே போலீஸ், அவரே தண்டனை வழங்குபவர்
என்ற பியூடல் மனநிலையை நியாயப்படுத்திய இத்திரைப்படம்தான் சட்டம் தன் கடமையைச் செய்யும்
என்பதை விட, ஒரு நல்ல நாட்டாமை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்ற அடிமைத்தனம்
மீண்டும் துளிர்விட உதவியது.
நாட்டாமை
என்பது, ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய முற்போக்குச்
சிந்தனைகளுக்கு நேர் எதிரானது. அது, சாதியப் பெருமையையும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும்,
ஆண் மைய வாதத்தையும் சென்டிமென்ட் என்கிற சர்க்கரைப் பாகில் முக்கித் தந்த ஒரு கலப்பட
பண்டமாகத் தமிழனின் மன ஆரோக்கியத்தைச் சீரழித்தது.
நாட்டாமை
என்பது ஒரு பொறுப்பு என்பதைத் தாண்டி, அது ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார ஆதிக்கத்தின்
அடையாளமாக்கி அதைத் இத்திரைப்படம் அசாத்தியமான மாஸ் மசாலாவுடன் க்ளாமரைஸ் செய்ததில்,
படித்த இளைஞன் கூட தியேட்டரை விட்டு வெளியே வந்த போது, தன் ஊரிலும் இப்படி ஒரு நாட்டாமைத்தனம்
வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினான். இப்படியாக முற்போக்கு சிந்தனைகளை அப்படியே ஐம்பது
ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற பெருமை இந்தத் திரைக்கதைக்கு உண்டு.
படத்தில்
நாட்டாமை தவறுதலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டோம் என்று தெரிந்ததும், நெஞ்சு வெடித்து இறந்துவிடுவார்.
இது ஏதோ மாபெரும் தியாகம் போலவும், குற்ற உணர்ச்சியின் உச்சக்கட்டப் புனித வடிவம் போலவும்
காட்டப்பட்டது. தவறு செய்துவிட்டால் அதைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதோ, திருத்திக்கொள்வதோ
முக்கியமல்ல; உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுவதே கௌரவம் என்கிற ஒரு விபரீதமான உளவியலை
இது இளைஞர்கள் மத்தியில் விதைத்தது.
கற்பு,
பழிவாங்குதல் என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலேயே பெண்களைச் சித்தரித்த இத்திரைப்படம்
தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு கமர்ஷியல் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூக
உளவியல் ரீதியாக அது கற்பித்தது முற்போக்கோ, பகுத்தறிவோ அல்ல. மாறாக., "ஒருவன்
பெரிய ஆள் என்றால், அவன் சொல்வதே சட்டம்; அவன் வைப்பதே தீர்ப்பு" என்கிற பாசிச
சிந்தனையின் சினிமாட்டிக் வடிவத்தையே வலிமையாகத் தமிழர்களின் மண்டையில் தேவையில்லாத
ஆணியாக அடித்தது.
சட்டத்தை
மதிக்காமல் பஞ்சாயத்து மரத்தடியில் தீர்ப்பு வழங்குவதுதான் ஊர்ப்பெருமை என்றும், பெண்ணின்
பிறவிப் பயனே ஆண்களின் கௌரவத்தைக் காப்பதும், அந்தக் கௌரவத்துக்குப் பலிகடா ஆவதும்தான்
என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற பஞ்சாயத்துச் சமூகமாகத் தமிழர்களை
மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!
*****

No comments:
Post a Comment