27 Jun 2026

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

சீரழித்த சினிமா – 25

மின்னலே

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் பிப்ரவரித் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அக ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாக பை பை சொல்லி விட்டு, காதலுக்காக ஹாய் ஹாய் என எதையும் செய்யலாம் எனக் காட்டியது மின்னலே.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரியில் எதிரியாக இருந்தவன், நிஜ வாழ்க்கையில் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒருவன் தன் கல்லூரி எதிரியின் திருமணப் பெண்ணை அடைவதற்காக, அமெரிக்காவிலிருந்து வரும் அந்த எதிரியின் பெயரிலேயே ஆள்மாறாட்டம் செய்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்குள்ளேயே புகுந்து ஐந்து நாட்கள் குடும்பம் நடத்தலாம்" என்ற ஒரு புதுவிதமான மென்பொருள் வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, மின்னலே திரைப்படத்திற்கு உண்டு.

இதை ஒரு காதல் காவியம் என்று கொண்டாடுவதை விட, ஒரு தலைமுறையின் மனப்பிறழ்வுக் கையேடு என்று சொல்வதே பொருத்தமானது.

மின்னலே திரைப்படம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய ஆகச்சிறந்த சமூகவியல் பங்களிப்பு என்னவென்றால்: "ஒரு பெண்ணின் காதல் வேண்டுமென்றால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; வேறொருவராக இருந்தால் போதும்." என்பதுதான்.

நாயகனின் நளினமான, அதேசமயம் ஆபத்தான போலி ஐடி பிம்பமும், நாயகியின் ஏமாளி மற்றும் கோமாளிப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு சைபர் கிரைம் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த தகவல் தொழில்நுட்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள், ஆனால் அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தால் போதும்; நீங்கள் நேரடியாக அவளது வருங்காலக் கணவனின் பயோடேட்டாவைத் திருடிவிடலாம். அமெரிக்காவிலிருந்து வரும் அவனாக நீங்களே மாறி, அவளது வீட்டு வாசலில் போய் நிற்கலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 419 அதாவது, ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா மெட்ரோ செக்சுவல் நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண்ணை அடைவதற்காக அவளது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், அவளது நம்பிக்கையையும் ஐந்து நாட்களுக்குத் திட்டமிட்டு ஏமாற்றுவது குற்றமல்ல; அது காதலின் தீவிரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சமூக வலைத்தளங்களில் வேறு ஒருவனின் புகைப்படத்தையும் முகவரியையும் திருடி, போலி கணக்குகள் ஆரம்பித்து பெண்களை ஏமாற்றும் ஓர் ஆபத்தான கேட் பிஷிங் சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

7ஜி ரெயின்போ காலனியில் பொறுக்கித்தனமாக ஸ்டாக்கிங் செய்தார்கள் என்றால், மின்னலே படத்தில் அதை டை கட்டிய கிளாஸ் ஸ்டாக்கிங்காக மாற்றி விற்றார்கள்.

படத்தில் நாயகன் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் ஊர் சுற்றுவான். வழியில் மழையில் நனையும் நாயகியை மின்னல் ஒளியில் பார்த்ததும், அவளது தொலைபேசி எண்களைத் திருடி, அவளது தோழிகளை டேட்டா பேஸாக்கி, அவளைப் பற்றிய அத்தனை அந்தரங்கத் தகவல்களையும் ஒட்டுக் கேட்டுச் சேகரிப்பான்.

இந்த உறைபனியூட்டும் தனிமனித உரிமை மீறலை மிக அழகான காட்சி அமைப்புகளாலும், மெல்லிய பின்னணி இசையாலும் மூடி மறைத்து, அவன் காதலுக்காகத்தானே பண்றான் என்று பார்ப்பவருக்குக் கொலையாளியை விட ஆபத்தான ஒரு சைபர் குற்றவாளியின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இயக்குனர்.

ஒரு பெண்ணின் சுதந்திரத்தை நளினமாகப் பறிப்பதை ரொமான்ஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பாலினக் கண்ணியத்தின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவுதான் இன்ஸ்டாகிராமில் பெண்களின் கணக்குகளை ஸ்டால்க் செய்வதை ஏதோ ஒரு உன்னதக் கலையாக நினைத்துக் கொண்டு அதை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டதெல்லாம்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், உண்மை தெரிந்து நாயகன் ஓடி ஒளிந்த பிறகு, உண்மையான அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், அவனைக் கல்யாணம் செய்யாமல், தன்னை ஏமாற்றிய போலி நாயகனைத் தேடித்தான் நாயகி ஓடுவாள் என்பதுதான்.

விமான நிலையத்தில் வைத்து அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகனே தன் காதலைத் தியாகம் செய்து, தன் அடையாளத்தைத் திருடியவனிடமே அந்த நாயகியை ஒப்படைப்பார்.

இது பார்ப்பதற்கு காதலின் உன்னதமான தியாகம் போலத் தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஓர் ஏமாளி ஆணின் தற்காப்பு வாதம். "என்னை ஏமாற்றினாலும் பரவாயில்லை, அவன் அழகாகப் பாடினால், டான்ஸ் ஆடினால் அவன் பின்னால் போவதே பெண்ணின் இயல்பு" என்ற ஒரு விசித்திரமான பொதுப்புத்தியை இது சமூகத்தில் விதைத்தது.

நேர்மையாக வாழும் மனிதர்களை விட, ஏமாற்று வேலைகள் செய்து கெத்து காட்டும் ஆண்களுக்கே சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற போலி அறநெறியை இது மிக நுணுக்கமாக இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

அனைத்துக் கமர்ஷியல் திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் போலிப் புன்னகையைப் பார்த்து ஏமாறுவதற்கும், பாடல்களுக்குக் கிளாமராகப் போஸ் கொடுப்பதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டது. நாயகிக்கு என்று தனியாக ஒரு படிப்பு, குடும்பப் பின்னணி இருந்தாலும், அவளைச் சுற்றி அரங்கேறும் இத்தனை பெரிய ஆள்மாறாட்டச் சதியைக் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத ஒரு அழகு முட்டாளாகவே அவள் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, உண்மை எது, பொய் எது என்று ஆராயும் திறனோ இல்லாமல், தன் அடையாளத்தை விற்றுத் தன்னை ஏமாற்றும் ஒருவனாக இருந்தாலும், அவன் மேடி என்ற பிம்பத்துடன் இருந்தால் அவனிடம் சரணடைந்துவிட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மின்னலே என்பது ஓர் ஆபத்தான வைரஸ். அது மியூசிக் என்ற அழகான கோட்டிங் கொடுக்கப்பட்டு, விஷுவல்ஸ் என்ற அழகான பேக்கிங் பண்ணப்பட்டு விற்கப்பட்ட ஒரு கரப்டெட் வெர்ஷன். மக்கள் அதை ரொமாண்டிக் க்ளாசிக் என்று நினைத்து மெண்டல் சிஸ்டத்திற்குள் ஏற்றிக் கொண்டார்கள். ஆனால், அது ஒரு பக்கா மால்வேர்.

மின்னலே பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை சாக்லேட் பாய் பிம்பத்தில் ஏற்றி, அதன் இசையமைப்பாளரை இசையுலகின் மின்னலாக மாற்றி, அதன் இயக்குநருக்கு அறிமுகப் படத்திலேயே ஹிட் அடிக்க உதவியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக, அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணை அடைவதற்காக யாருடைய அடையாளத்தையும் திருடலாம், அதுதான் காதல் என்றும், வசீகரா என்று பாடினால் அத்தனை ஏமாற்று வேலைகளையும் மன்னித்துவிடலாம் என்றும், அடுத்தவனுக்கு நிச்சயகிக்கப்பட்ட பெண்ணைத் தூக்குவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆள்மாறாட்டச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment