27 Aug 2022

அக்னிபாத்துக்கு முயற்சிப்பதற்கு அரசியல்வாதியாக முயற்சிக்கலாம்!

அக்னிபாத்துக்கு முயற்சிப்பதற்கு அரசியல்வாதியாக முயற்சிக்கலாம்!

அக்னிவீரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடைவெளி ஓராண்டு. அக்னீவீரர்களின் பணிக்காலம் நான்காண்டுகள். அரசியல்வாதிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள். இன்னொரு வேறுபாடு என்னவென்றால் அக்னிவீரர்களுக்கு அது பணிக்காலம். அரசியல்வாதிகளுக்குப் பதவிக்காலம். அக்னிவீரர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் பயிற்சி உண்டு. அரசியல்வாதிகளுக்கு அது இல்லை.

எப்படிப் பார்த்தாலும் அக்னிவீரர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பணிக்காலத்திற்காகவும் பதவிக்காலத்திற்காகவும் தயாராக வேண்டும். அக்னிவீரர்கள் பணித்தேர்வுக்கு என்றால் அரசியல்வாதிகள் தேர்தலுக்கு. இரண்டிலும் தேர்வானால்தான் அவர்களுக்கு அங்கு வேலை. இல்லையென்றால் இல்லை.

அரசியல்வாதிகள் ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தாலும் அதற்குக் குறைவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உண்டு. அது நான்காண்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் அக்னிவீரர்களுக்குக் கிடையாது. அவர்களுக்கு ஒருமுறை பணப்பயன் உண்டு. அந்தப் பணப்பயனுக்கு அவர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை மாதாமாதம் ஒதுக்கித் தர வேண்டும். அரசாங்கமும் மாதாமாதம் அதே அளவு ஒரு தொகையை ஒதுக்கி முடிவில் கணக்கை முடித்து விடும்.

காலம் காலமாக ஐந்தாண்டுகள் பதவியில் இருந்து விட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்காக நாம் மட்டும் போராட அரசுப் பணியாளர்கள் மட்டும் ஹாயாக ஐம்பத்தெட்டு வரை வேலை பார்த்து விட்டுச் சம்பளம் வாங்குவதா என்ற ஓர் அரசியல்வாதியின் பொருமலில் விளைந்த திட்டம் போலத்தான் இந்தத் திட்டம் தோற்றம் தருகிறது.

அரசியல்வாதிகளுக்கு எப்படிப் பதவிக்காலம் இருக்கிறதோ அதே போலவே இனி அனைவருக்கும் பணிக்காலத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் கனவு அக்னிபாத் மூலம் பலித்து விட்டது என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

இராணுவமே இனி இப்படி என்றால் மற்ற துறைகளும் இந்த முறைக்குத்தான் மாறும். காவல் துறையில் நான்காண்டு, மூன்றாண்டு வேலை பார்த்த முன்னாள் காவலர்களை இனி வரும் காலங்களில் நாம் பார்க்க நேரிடலாம். அதே போல மூன்றாண்டுகள், நான்காண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் என்று பலரையும் பார்க்க நேரிடலாம்.

ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் என்று இருக்கின்ற சமாளிப்பு முறையைச் சட்ட ரீதியாகச் செல்லுபடியாக்கும் வகையில் அக்னிபாத் வருங்காலத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்து விடும் என்பது போலத்தான் தோன்றுகிறது.

அக்னிபாத்துக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினாலும் அதற்காக விண்ணப்பிக்கும் இளைஞர்கள் குறைந்தபாடில்லை. சில ஆயிரம் பணியிடங்களுக்கு லட்ச கணக்கில் விண்ணப்பிக்க இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியா போன்ற வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த நாட்டில் ஓராண்டு அக்னிபாத் ஒப்பந்த முறையைக் கொண்டு வந்தாலும் கோடிக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இராணுவம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அக்னிபாத் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பது நல்லதாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இராணுவம் என்றாலே இரகசியங்கள் இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ராணுவ வீரராக இருக்கும் ஒருவருக்கு ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இருக்கும் உள்ளுணர்வு நான்காண்டுகள் பணியாற்றும் வீரர்களுக்கு இருக்குமா என்ற கேள்வி இயல்பாக எழக் கூடியது.

இராணுவம் என்றால் விசுவாசம் இருக்கிறது. அந்த விசுவாசத்தையும் நான்காண்டுகள் பணியாற்றி விட்டு மீண்டும் வேலையில்லாச் சுழலில் சிக்கும் ஒருவரிடம் எதிர்பார்க்க முடியுமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது.

இராணுவத்தில் நல்ல ஊதியத்தில் நல்ல பணியிடத்தில் பணியாற்றும் ஒரு சிலரே ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்கப் போய் பிடிபட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன எனும் போது நான்காண்டுகளுக்கு ஒரு முறை பணி முடித்து வெளியே வரும் பல்லாயிரக் கணக்கானோர் ராணுவ ரகசியங்களை எந்த அளவுக்குக் காப்பாற்றுவார்கள் என்ற கேள்வியும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விடை காணப்பட வேண்டியது.

நான்காண்டுகள் பணியாற்றி விட்டு வெளியே வரும் அக்னிபாத் வீரர் திருப்தியற்ற நிலையை அடைந்தால் நான்காண்டுகளில் அவர் பெற்ற ராணுவ அறிவை சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஓர் அக்னிபாத் வீரர் செயல்பட்டால் அதைத் தடுக்கும் அளவுக்கு காவல் துறையில் வலுவான தொழில்நுட்பங்களும் ஆயுதங்களும் இருக்கின்றனவா? அது போன்ற நிலையில் காவல்துறையும் அக்னிபாத் போன்ற ஒரு திட்டத்திற்கு மாறியிருந்தால் முன்னாள் சமூக விரோத அக்னிபாத் ராணுவத்தினர்களை எதிர்கொள்வது சவால் மிகுந்ததாக இருக்க் கூடும்.

நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ராணுவத்துக்குக் குறிப்பிட்ட அளவு செலவு செய்துதான் ஆக வேண்டும். ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் என்பதைச் செலவு கணக்கில் மட்டும் பார்க்க முடியாது. அது ஒரு வேலைவாய்ப்புக்குக் கொடுக்கும் நியாயமான ஊதியமும் ஆகும். ஒரு வேலைக்கான மரியாதையும் கௌரவமும் ஆகும்.

செலவைக் குறைப்பதாகக் கூறப்படும் இது போன்ற திட்டங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் வேலைவாய்ப்பு முறைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி விடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை இப்போது அனைவருக்கும் எழுந்திருக்கிறது. நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இந்தக் கவலையை அலட்சியப்படுத்தி விடாமல் கவனத்தில் கொண்டு சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அரசியல்வாதிகளின் திட்டங்களில்தான் நாட்டின் வருங்காலம் இருக்கிறது.

*****

டிரான்ஸ்பர் கௌன்சிலிங்

டிரான்ஸ்பர் கௌன்சிலிங்

சந்திரவதனாவுக்கு டிரான்ஸ்பர் கௌன்சிலிங் என்றதும் சந்தோசம் தாங்க முடியவில்லை. இதற்காக எட்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறாள். இன்னும் நான்கு ஆண்டுகள் கழிந்தால் ஒரு மாமாங்கம் ஆகி விடும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக டிரான்ஸ்பர் கௌன்சிலிங் நடக்கவில்லை. பாழாய்ப் போன கொரோனா வந்து நடக்க விடாமல் செய்து விட்டது. அதற்கு முன்பு நடந்த ஆண்டுகளில் சந்திரவதனா நேர்மையாக நடந்து கொள்வதென தீர்மானித்திருந்ததால் அவளுக்கு டிரான்ஸ்பர் ஆவதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது.

இவளும் ஒரு ஏழு லட்சம், எட்டு லட்சம் என்று யோசனை பார்க்காமல் எடுத்து வீசி இருந்தால் இந்நேரத்துக்கு சொந்த மாவட்டத்தில் உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருக்கலாம்.

ஏழு லட்சம், எட்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்றதும் நேர்மையான மோடுக்கு மாறி விட்டிருந்தாள். இரண்டு மூன்று லட்சம் என்றாலும் கூட நேர்மை தவறி கொடுக்க முயற்சித்திருப்பாள். ஏழு, எட்டு லட்சம் அவளை நேர்மையிலிருந்து இம்மி பிசக அனுமதிக்கவில்லை.

எட்டு வருஷம் காத்திருந்ததற்கு இந்த வருஷம் நல்ல காலம் பிறந்து விட்டது. எட்டு வருஷம் ஆகியிருந்தாலும் பணம் கொடுத்து டிரான்ஸ்பர் வாங்காததால் வருடத்துக்கு ஒரு லட்சம் வீதம் மிச்சம் என்று நினைத்துக் கொண்டாள்.

அதுவும் இந்த வருடம் ஆன்லைன் டிரான்ஸ்பர் கௌன்சிலிங். அதனால் எந்த இடத்தையும் காட்டாமல் மறைக்க வாய்ப்பே இல்லை. பைசா காசு செலவில்லாமல் சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கப் போவதை நினைக்க நினைக்க அவளைக் குறித்து அவளுக்கே பெருமையாக இருந்தது.

டிரான்ஸ்பர் கௌன்சிலிங் நடக்கும் இடத்தில் அரசு லட்சினையில் இருந்த ‘வாய்மையே வெல்லும்’ என்ற வாசகத்தைத் தன்னையறியாமல் இப்போதுதான் எழுத்துக் கூட்டி வாசிப்பது போலத் திரும்ப திரும்ப வாசித்து சிறு குழந்தையைப் போல மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

மகிழ்ச்சியும் ஆசை நிறைவேறப் போகிறதென்ற நினைப்பும் சேர்ந்து கொண்டு சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கப் போகிறோம் என்ற திளைப்பில் அவள் காலையில் சாப்பிடாமலே வந்திருந்தாள். காலையில் எட்டு மணிக்குத் துவங்குவதாக இருந்த கௌன்சிலிங் சர்வர் பிராப்ளம், டேட்டா பில்லிங் என மதியம் மூன்று மணிக்குத்தான் துவங்கியது.

டிரான்ஸ்பர் துவங்கியதும் இவளுடைய சொந்த மாவட்டத்துக்குத்தான் ஏகக் கிராக்கி. எல்லாரும் விழுந்தடித்து அவரவர் இடத்தைத் தேர்வு செய்து கொண்டு வந்தனர். இருபத்து மூன்று பேர் இடங்களைத் தேர்வு செய்ததும் மணி ஏழாகி விட்டது என்று மறுநாளுக்குக் கௌன்சிலிங்கைத் தள்ளி வைத்து விட்டனர்.

சந்திரவதனாவுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. சந்திரவதனாவைப் போலக் காத்திருந்தவர்களை மறுநாள் வரச் சொன்னார்கள்.

மறுநாள் சந்திரவதனா பாதி நம்பிக்கையோடும் பாதி நம்பிக்கையிழந்தும் கலந்து கொண்டாள். அன்றும் கௌன்சிலிங் துவங்க மதியம் மூன்று மணியாகி விட்டது. இரவு ஏழு மணி வரை பதினேழு பேர் டிரான்ஸ்பர் பெற்றிருந்தார்கள்.

சந்திரவதனாவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்ததால் பேருந்துக்குக் கூட காத்திராமல் ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் சென்றாள்.

பாத்ரூம் ஷவரைப் போட்டு விட்டு விடிய விடிய அழுதாள். அழுது அழுது கண்ணீர் வற்றியிருந்த அதிகாலைப் பொழுதில் விடிந்திருந்தது. கொஞ்சம் நம்பிக்கை வந்தவளாய் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததையும் அழுது வடிந்ததையும் மேக்கப்பில் கொஞ்சம் மறைத்தபடி அன்றும் கௌன்சிலிங்கிற்குப் போனாள்.

வழக்கம் போல் அன்றும் அப்படித்தான் இருந்தது. ஏழு மணிக்கு மேல் ஆட்டோ பிடித்து வழக்கம் போல ஷவரைப் போட்டு விட்டு அழுதாள். மறுநாள் விடிந்ததும் அரக்க பரக்க கௌன்சிலிங்கிற்குக் கிளம்பிச் சென்றாள்.

இப்படியே ஏழு நாட்கள் ஓடி விட்டன. ஏழாவது நாள் ஏழு மணியில் நின்று கொண்டிருந்த போது அனிச்சையாய் செல்போனை எடுத்துக் கணவனுக்கு அழைத்தாள்.

“எட்டு லட்சத்தை ரெடி பண்ணிடுங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “மேடம் உங்க டர்ன் வந்திருக்கு. வந்து கௌன்சிலிங்கில் கலந்துக்குங்க” என்றார் அலுவலக உதவியாளர்.

“வேண்டாம்ப்பா. நான் எட்டு லட்சத்தைக் கொடுத்தே பாத்துக்கிறேன்.” என்று படியிறங்கி நடக்கத் தொடங்கினாள் சந்திரவதனா.

*****

தலைவர்கள் வாழ்க!

தலைவர்கள் வாழ்க!

பொதுவாக ஒருவரைக் குறை சொல்வது ஆபத்தானது. அதுவும் தலைவர்களைக் குறை சொல்வது மிகவும் ஆபத்தானது.

தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றால் இந்த உலகில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

தலைவர்கள் விசயத்தில் குறை சொல்லும் போது மிகுந்த கவனத்தைப் பின்பற்ற வேண்டும். தலைவர்களுக்கு உங்களை விட அதிக சக்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தலைவர்கள்.

உங்கள் மீது கல்லெறிந்தால் அது ஒரு காயம் மட்டுமே. தலைவர்கள் மீது கல்லெறிந்தால் அது கலவரம். இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தலைவர் மீது நீங்கள் குற்றம் சுமத்தும் போது நீங்கள் அந்தத் தலைவருக்குச் சமமான பதவியில் இருக்க வேண்டும். அல்லது நீங்களும் ஒரு தலைவராக இருக்க வேண்டும்.

இரண்டு தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் தலைவருக்குக் கீழ் இருக்கிறீர்கள் என்றால் குறைகளைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அப்படியே குறைகளைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் மிகுந்த நாசுக்காகச் சொல்ல வேண்டும். அது நெருப்பாற்றில் நீந்துவது போல அல்லது கத்தி முனையின் மீது நடப்பது போல.

உங்கள் தலைவரிடம் உங்களுக்கான குறைகளைச் சொல்லலாம். உங்கள் தலைவர் மேல் எப்போதும் குறை சொல்லக் கூடாது.

உங்கள் தலைவரின் குறைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு தலைவரைத் தேடிக் கொள்ளுங்கள். அந்தத் தலைவரைக் குறை சொல்லும் இன்னொரு தலைவர் இருக்கத்தானே செய்வார். அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்களே ஒரு தலைவராகிக் கொள்ளுங்கள்.

தயவுசெய்து ஒரு தலைவருக்குக் கீழ் இருந்து கொண்டு உங்கள் தலைவரைக் குறை சொல்லாதீர்கள். அது உங்களுக்கு மட்டும் ஆபத்தைக் கொண்டு வருவதில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஆபத்தான வளையத்திற்குள் கொண்டு வந்து விடும்.

ஆகவேதான் சொல்கிறேன், தலைவர்கள் வாழ்க!

*****

Praise the leaders!

Praise the leaders!

Blaming someone in general is dangerous. And it is very dangerous to blame the leaders.

Are leaders beyond criticism? No one in this world is above criticism.

Leaders should exercise great power when complaining about matters. Leaders have more power than you. That is why they are leaders.

If a stone is thrown at you, it is only an injury. Stone pelting on leaders is a riot. You must understand this fact.

When you blame a leader you must be on equal footing with that leader. Or you should be a leader too.

Two leaders can blame each other. If you are under the leader it is better not to complain. Even if you feel compelled to complain, you should say it in best method and careful words. It's also like swimming in fire or walking on a knife edge.

You can express your grievances to your boss. Never blame your boss.

If you can't stand your boss's faults, find another boss. If there is another leader who criticizes that leader, he will do it. Hold him. Otherwise, make yourself a leader.

Please don't criticize your leader under him. It doesn't just bring danger to you. It will also bring people around you into a dangerous loop.

That's why I say, praise the leaders!

*****

26 Aug 2022

யாருக்கு நாற்காலி?

யாருக்கு நாற்காலி?

இந்த முறையும் ஒண்டிப்புலிக்குப் போட்டியாக வந்து நின்றார் துரைசிங்கம். ஒண்டிப்புலியை அரசியல் பரமபதத்தில் ஏற்றி விட்டவர் துரைசிங்கம். ஒரு கட்டத்தில் துரைசிங்கத்தை அதே பரமபதத்திலிருந்து ஒண்டிப்புலி இறக்கி விட்டால் துரைசிங்கத்திற்குக் கோபம் வருமா? வராதா?

அந்தக் கோபம்தான் துரைசிங்கத்திற்கு. “அவன் வந்து கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேனே. ஏன்டா இப்படி அவன் கள்ள ஆட்டம் ஆடுறான்?” என்று பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் துரைசிங்கம்.

துரைசிங்கத்தின் கேள்விக்கு, “அரசியல்ங்றது கேட்டு வாங்குறது இல்ல. நாமளே எடுத்துக்குறது.” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஒண்டிப்புலி.

இனியும் பொறுப்பதற்கில்லை என்ற முடிவோடு துரைசிங்கம் ஒண்டிப்புலியின் பினாமி வீடுகளுக்கு எல்லாம் ரெய்டு நடக்கும்படி தன்னுடைய பவரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

ரெய்டில் ஒண்டிப்புலி பயந்து போகத்தான் வேண்டும் என்பது துரைசிங்கத்தின் கணக்கு.

ஒண்டிப்புலி பயந்ததாகத் தெரியவில்லை. எந்தெந்த பினாமி வீடுகளில் ரெய்டு நடக்கிறதோ அந்தந்த வீடுகளுக்கு எல்லாம் டபரா டபாராவாகப் பிரியாணியையும் குவார்ட்டர் பாட்டில்களையும் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனால் ரெய்டு நடக்கும் வீடுகளில் எல்லாம் தொண்டர்களின் கூட்டம் கும்மு கும்முவென்று கும்மிக் கொண்டிருந்தது.

ரெய்டு நடக்கும் வீடுகளிலிருந்து பிரியாணி வாசமும் குவார்ட்டர் வாடையும் எந்நேரமும் கமழ்ந்து கொண்டிருந்ததில் நொந்துப் போனார் துரைசிங்கம். ரெய்டு வீடுகளின் பிரியாணி டாப் டக்கர் என்று தொண்டர்கள் முண்டியடித்ததில் ஒரு நாள் அடக்க முடியாமல் எச்சில் ஒழுக தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு துரைசிங்கமும் ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கிச் சுவைத்துப் பார்த்தார்.

ரெய்டு நடத்தியெல்லாம் ஒண்டிப்புலியை அரெஸ்ட் செய்ய முடியாது என்ற உண்மை அப்போதுதான் துரைசிங்கத்திற்கு உரைத்தது. பிரியாணியின் டேஸ்ட்டுக்கு அந்த அளவுக்கு அவர் மயங்கிப் போயிருந்தார். இந்த டேஸ்ட்டுக்கு ரெய்டு நடத்த வந்தவர்களும் ஏன் மயங்கிப் போயிருக்கக் கூடாது என்று அவர் யோசித்தார்.

தன்னுடைய பவரைப் பயன்படுத்தி ரெய்டை அதிகப்படுத்தினால் நாட்டில் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்ட துரைசிங்கம் அடுத்தகட்டமாகச் செய்யப் போவது குறித்த யோசனையில் ஆழ்ந்தார்.

அன்றிரவு ஒண்டிப்புலியின் ரெய்டு பிரியாணியையும் குவார்ட்டரையும் கலந்து வயிற்றில் விட்டுக் கொண்டு விடிய விடிய யோசித்தார். அந்த வாரம் முழுவதுமே துரைசிங்கம் அப்படித்தான் நடந்து கொண்டார். யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பிரியாணிப் பொட்டலத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் வாங்குவது, இரவு முழுவதும் அதைத் தின்று கொண்டும் குடித்துக் கொண்டும் யோசிப்பது என்று.

அடுத்த வாரத்தின் ஒரு நாளில் ரெய்டு ஆபிசர்களுக்குப் பதிலாகக் காக்கிச் சட்டைகள் ஒண்டிப்புலியின் வீட்டிற்குள் நுழைந்தன. ஒண்டிப்புலி கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டார்.

ஒண்டிப்புலி போட்ட பிரியாணியில் ஒரு பல்லி விழுந்திருந்து வாந்தி மயக்கத்தால் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர் இடம் பத்தாமல் இருந்தாலும் அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஒண்டிப்புலியின் பிரியாணியில் பல்லி விழுந்த ரகசியம் ஒண்டிப்புலிக்குத் தெரியாமல் இருக்கலாம். துரைசிங்கத்திற்குத் தெரியாமல் இருக்குமா? துரைசிங்கம் அன்று மட்டும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒண்டிப்புலியின் பிரியாணியை வாங்கப் போகவில்லை.

இந்த முறை மாவட்ட செயலாளர் பதவி துரைசிங்கத்திற்குத்தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமோ?

*****

ஆசிரமவாசிகள்

ஆசிரமவாசிகள்

வயது முப்பத்தாறு ஆகியிருந்தது நந்தகுமாருக்கு. ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ராகு, எட்டாம் இடத்தில் செவ்வாய் என்று சொன்னதில் இன்று வரை கல்யாணம் கூடி வரவில்லை. அதற்காகக் கல்யாண ஆசையை விட்டு விட முடியுமா?

புதுப்பொண்டாட்டியைப் பைக்கில் அழைத்துச் செல்வது, குழந்தைகளைப் பள்ளிக் கொண்டு சென்று விடுவது என்று அனுதினமும் விதவிதமான கற்பனைகளையும் கனவுகளையும் வளர்த்தபடி இருந்தான் நந்தகுமார். என்றாவது ஒரு நாள் எல்லாருக்கும் ஆவது போலத் தனக்கும் கலியாணம் ஆகி விடும் என்ற நம்பிக்கையோடு இருந்தான்.

“முப்பது வயதுக்கு மேல் ஜாதகமாவது மண்ணாங்கட்டியாவது, நீயாக ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணத்தப் பண்ணிட்டு வாடா” என்று அப்பா ஒரு நாள் நேரடியாகவே நந்தக்குமாரிடம் சொல்லி விட்டார்.

“ஒரு பொண்ணு வந்து உனக்குச் சமைச்சிப் போடுறதைப் பார்த்தா நிம்மதியாக கண்ண மூடிடுவேன்” என்றாள் டயாலிசிஸ் கவலையோடு அம்மா.

சரிதான் பெரியோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் தானே பெரியோராகும் வரை வயதை ஓட விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா என்ற நிலையில் நந்தகுமார் காதலித்துப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான்.

நந்தக்குமாரின் நேரமோ என்னவோ எந்தப் பெண்ணை நெருங்கினாலும் அண்ணா என்று கூட சொல்லாமல் அட்வான்ஸ்டாக அங்கிள் என்று அழைத்து அவனை அடித்துத் துவைத்துக் கொடியில் காயப் போட்டார்கள்.

நந்தக்குமாரும் எவ்வளவோ செய்து பார்த்தான். தலைக்கு டை அடித்துப் பார்த்தான். பணத்தைக் கட்டி ஜிம்முக்குப் போய் பார்த்தான். பீர் குடித்துப் பார்த்தான். எதுவும் வேலைக்கு ஆக வில்லை.

இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் சாதி, மதம் தடையில்லை என்று பேப்பரில் விளம்பரமும் கொடுத்துப் பார்த்தான். அதற்கு நல்லதொரு பலனிருந்தது.

குருவானந்தா ஆசிரமத்தில் வேலை பார்ப்பதாகச் சொல்லி தேவதர்ஷினியிடமிருந்து ஓர் அழைப்பு வந்திருந்தது. அப்பாவும் அம்மாவும் சம்மதிக்க தேவதர்ஷினியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான் நந்தகுமார்.

ஒரு வருடம் எந்தச் சச்சரவும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த அவர்களின் இல்லறம் அதற்குப் பின்பு தடுமாற ஆரம்பித்தது. நந்தக்குமார் தேவதர்ஷினியை இனிமேல் ஆசிரமத்திற்கு வேலை பார்க்கப் போகக் கூடாது என்றான். அவள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இனிமேலும் ஆசிரம பணிக்குச் சென்றால் என்னை மறந்து விடு என்றான் நந்தக்குமார். அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற தேவதர்ஷினி ஒரு வாரத்திற்குள் விவாகரத்து நோட்டீயை அனுப்பினாள்.

நந்தகுமார் தேவதர்ஷினியின் காலில் விழுந்து கதறினான். தான் சந்நியாசம் வாங்கப் போவதாக தேவதர்ஷினி பிடிவாதமாக நின்றாள்.

விவாகரத்து வழக்கு ஒரு வருடம் நடந்தது. தேவதர்ஷினியை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்ட நந்தக்குமார் விவாகரத்துக்குச் சம்மதித்தான். அதற்குள் அம்மா இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இறந்துப் போனாள். அப்பா ஒரு நள்ளிரவில் மார்பு வலிக்கிறது என்று போய்ச் சேர்ந்திருந்தார்.

நந்தக்குமாருக்கு வாழ்க்கையே வெறுத்தது போலிருந்து. ஒரு பிடிப்பிற்காக தேவதர்ஷினி சந்நியாசினியாகி விட்ட ஆசிரமத்தில் இப்போது ஆசிரம கணக்கு வழக்குகளைப் பார்த்த்துக் கொண்டிருக்கும் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான் நந்தக்குமார்.

*****

25 Aug 2022

நடக்க ஆசைப்படுபவர்கள்

நடக்க ஆசைப்படுபவர்கள்

மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வது எனது வழக்கங்களில் ஒன்று. பலருக்கும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று என்னிடம் சொல்லி தங்களது ஆற்றாமையைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக நேரம் இல்லை என்று அவர்கள் சொல்வது வடிகட்டின பொய் என்று எனக்குத் தெரியும். அவர்களுக்கு அதில் துளி கூட ஆர்வம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

மாலை நேரத்தில் நடப்பதை விட சுவாரசியமான விசயங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.

பிறகேன் அவர்கள் என்னைப் பார்க்கும் போது அப்படிச் சொல்கிறார்கள் என்றால் அது ஒரு வகையான உணர்வு. அந்த நேரத்தில் மட்டும் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னைப் பார்த்ததும் துளிர் விட்டிருக்கலாம். ஆனால் நடக்க வேண்டுமே? அது ஒரு குற்ற உணர்வை உருவாக்கியிருக்கலாம்.

நேரமில்லை என்று சொல்வது அருமையான சாக்குப்போக்கு ஆகும். நான் அந்த சாக்குப்போக்கை மறுப்பதில்லை. அவர்களின் சாக்குப்போக்கை மறுப்பது என்பது அவர்களின் ஆறுதலைக் குழைப்பது போன்றது.

அவர்களில் ஒரு சிலர் மாலையில் நடப்பதை விட காலையில் நடப்பது அதிக பலனைத் தரும் என்று அறிவுரை தந்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் காலையில் நடக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறேன்.

அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள். அறிவுரை சொல்பவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அப்போது புரிந்து கொள்வேன்.

*****