தலைவர்கள் வாழ்க!
பொதுவாக ஒருவரைக் குறை சொல்வது
ஆபத்தானது. அதுவும் தலைவர்களைக் குறை சொல்வது மிகவும் ஆபத்தானது.
தலைவர்கள் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டவர்களா என்றால் இந்த உலகில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.
தலைவர்கள் விசயத்தில் குறை
சொல்லும் போது மிகுந்த கவனத்தைப் பின்பற்ற வேண்டும். தலைவர்களுக்கு உங்களை விட அதிக
சக்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தலைவர்கள்.
உங்கள் மீது கல்லெறிந்தால்
அது ஒரு காயம் மட்டுமே. தலைவர்கள் மீது கல்லெறிந்தால் அது கலவரம். இந்த உண்மையை நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தலைவர் மீது நீங்கள்
குற்றம் சுமத்தும் போது நீங்கள் அந்தத் தலைவருக்குச் சமமான பதவியில் இருக்க வேண்டும்.
அல்லது நீங்களும் ஒரு தலைவராக இருக்க வேண்டும்.
இரண்டு தலைவர்கள் ஒருவரை
ஒருவர் குறை சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் தலைவருக்குக் கீழ் இருக்கிறீர்கள் என்றால்
குறைகளைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அப்படியே குறைகளைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டாலும் மிகுந்த நாசுக்காகச் சொல்ல வேண்டும். அது நெருப்பாற்றில் நீந்துவது போல
அல்லது கத்தி முனையின் மீது நடப்பது போல.
உங்கள் தலைவரிடம் உங்களுக்கான
குறைகளைச் சொல்லலாம். உங்கள் தலைவர் மேல் எப்போதும் குறை சொல்லக் கூடாது.
உங்கள் தலைவரின் குறைகளைப்
பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு தலைவரைத் தேடிக் கொள்ளுங்கள்.
அந்தத் தலைவரைக் குறை சொல்லும் இன்னொரு தலைவர் இருக்கத்தானே செய்வார். அவரைப் பிடித்துக்
கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்களே ஒரு தலைவராகிக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து ஒரு தலைவருக்குக்
கீழ் இருந்து கொண்டு உங்கள் தலைவரைக் குறை சொல்லாதீர்கள். அது உங்களுக்கு மட்டும் ஆபத்தைக்
கொண்டு வருவதில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஆபத்தான வளையத்திற்குள் கொண்டு
வந்து விடும்.
ஆகவேதான் சொல்கிறேன், தலைவர்கள்
வாழ்க!
*****
No comments:
Post a Comment