26 Aug 2022

ஆசிரமவாசிகள்

ஆசிரமவாசிகள்

வயது முப்பத்தாறு ஆகியிருந்தது நந்தகுமாருக்கு. ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ராகு, எட்டாம் இடத்தில் செவ்வாய் என்று சொன்னதில் இன்று வரை கல்யாணம் கூடி வரவில்லை. அதற்காகக் கல்யாண ஆசையை விட்டு விட முடியுமா?

புதுப்பொண்டாட்டியைப் பைக்கில் அழைத்துச் செல்வது, குழந்தைகளைப் பள்ளிக் கொண்டு சென்று விடுவது என்று அனுதினமும் விதவிதமான கற்பனைகளையும் கனவுகளையும் வளர்த்தபடி இருந்தான் நந்தகுமார். என்றாவது ஒரு நாள் எல்லாருக்கும் ஆவது போலத் தனக்கும் கலியாணம் ஆகி விடும் என்ற நம்பிக்கையோடு இருந்தான்.

“முப்பது வயதுக்கு மேல் ஜாதகமாவது மண்ணாங்கட்டியாவது, நீயாக ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணத்தப் பண்ணிட்டு வாடா” என்று அப்பா ஒரு நாள் நேரடியாகவே நந்தக்குமாரிடம் சொல்லி விட்டார்.

“ஒரு பொண்ணு வந்து உனக்குச் சமைச்சிப் போடுறதைப் பார்த்தா நிம்மதியாக கண்ண மூடிடுவேன்” என்றாள் டயாலிசிஸ் கவலையோடு அம்மா.

சரிதான் பெரியோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் தானே பெரியோராகும் வரை வயதை ஓட விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா என்ற நிலையில் நந்தகுமார் காதலித்துப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான்.

நந்தக்குமாரின் நேரமோ என்னவோ எந்தப் பெண்ணை நெருங்கினாலும் அண்ணா என்று கூட சொல்லாமல் அட்வான்ஸ்டாக அங்கிள் என்று அழைத்து அவனை அடித்துத் துவைத்துக் கொடியில் காயப் போட்டார்கள்.

நந்தக்குமாரும் எவ்வளவோ செய்து பார்த்தான். தலைக்கு டை அடித்துப் பார்த்தான். பணத்தைக் கட்டி ஜிம்முக்குப் போய் பார்த்தான். பீர் குடித்துப் பார்த்தான். எதுவும் வேலைக்கு ஆக வில்லை.

இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் சாதி, மதம் தடையில்லை என்று பேப்பரில் விளம்பரமும் கொடுத்துப் பார்த்தான். அதற்கு நல்லதொரு பலனிருந்தது.

குருவானந்தா ஆசிரமத்தில் வேலை பார்ப்பதாகச் சொல்லி தேவதர்ஷினியிடமிருந்து ஓர் அழைப்பு வந்திருந்தது. அப்பாவும் அம்மாவும் சம்மதிக்க தேவதர்ஷினியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான் நந்தகுமார்.

ஒரு வருடம் எந்தச் சச்சரவும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த அவர்களின் இல்லறம் அதற்குப் பின்பு தடுமாற ஆரம்பித்தது. நந்தக்குமார் தேவதர்ஷினியை இனிமேல் ஆசிரமத்திற்கு வேலை பார்க்கப் போகக் கூடாது என்றான். அவள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இனிமேலும் ஆசிரம பணிக்குச் சென்றால் என்னை மறந்து விடு என்றான் நந்தக்குமார். அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற தேவதர்ஷினி ஒரு வாரத்திற்குள் விவாகரத்து நோட்டீயை அனுப்பினாள்.

நந்தகுமார் தேவதர்ஷினியின் காலில் விழுந்து கதறினான். தான் சந்நியாசம் வாங்கப் போவதாக தேவதர்ஷினி பிடிவாதமாக நின்றாள்.

விவாகரத்து வழக்கு ஒரு வருடம் நடந்தது. தேவதர்ஷினியை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்ட நந்தக்குமார் விவாகரத்துக்குச் சம்மதித்தான். அதற்குள் அம்மா இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இறந்துப் போனாள். அப்பா ஒரு நள்ளிரவில் மார்பு வலிக்கிறது என்று போய்ச் சேர்ந்திருந்தார்.

நந்தக்குமாருக்கு வாழ்க்கையே வெறுத்தது போலிருந்து. ஒரு பிடிப்பிற்காக தேவதர்ஷினி சந்நியாசினியாகி விட்ட ஆசிரமத்தில் இப்போது ஆசிரம கணக்கு வழக்குகளைப் பார்த்த்துக் கொண்டிருக்கும் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான் நந்தக்குமார்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...