யாருக்கு நாற்காலி?
இந்த முறையும் ஒண்டிப்புலிக்குப்
போட்டியாக வந்து நின்றார் துரைசிங்கம். ஒண்டிப்புலியை அரசியல் பரமபதத்தில் ஏற்றி விட்டவர்
துரைசிங்கம். ஒரு கட்டத்தில் துரைசிங்கத்தை அதே பரமபதத்திலிருந்து ஒண்டிப்புலி இறக்கி
விட்டால் துரைசிங்கத்திற்குக் கோபம் வருமா? வராதா?
அந்தக் கோபம்தான் துரைசிங்கத்திற்கு.
“அவன் வந்து கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேனே. ஏன்டா இப்படி அவன் கள்ள ஆட்டம் ஆடுறான்?”
என்று பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் துரைசிங்கம்.
துரைசிங்கத்தின் கேள்விக்கு,
“அரசியல்ங்றது கேட்டு வாங்குறது இல்ல. நாமளே எடுத்துக்குறது.” என்று பதில் சொல்லிக்
கொண்டிருந்தார் ஒண்டிப்புலி.
இனியும் பொறுப்பதற்கில்லை
என்ற முடிவோடு துரைசிங்கம் ஒண்டிப்புலியின் பினாமி வீடுகளுக்கு எல்லாம் ரெய்டு நடக்கும்படி
தன்னுடைய பவரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
ரெய்டில் ஒண்டிப்புலி பயந்து
போகத்தான் வேண்டும் என்பது துரைசிங்கத்தின் கணக்கு.
ஒண்டிப்புலி பயந்ததாகத் தெரியவில்லை.
எந்தெந்த பினாமி வீடுகளில் ரெய்டு நடக்கிறதோ அந்தந்த வீடுகளுக்கு எல்லாம் டபரா டபாராவாகப்
பிரியாணியையும் குவார்ட்டர் பாட்டில்களையும் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனால் ரெய்டு
நடக்கும் வீடுகளில் எல்லாம் தொண்டர்களின் கூட்டம் கும்மு கும்முவென்று கும்மிக் கொண்டிருந்தது.
ரெய்டு நடக்கும் வீடுகளிலிருந்து
பிரியாணி வாசமும் குவார்ட்டர் வாடையும் எந்நேரமும் கமழ்ந்து கொண்டிருந்ததில் நொந்துப்
போனார் துரைசிங்கம். ரெய்டு வீடுகளின் பிரியாணி டாப் டக்கர் என்று தொண்டர்கள் முண்டியடித்ததில்
ஒரு நாள் அடக்க முடியாமல் எச்சில் ஒழுக தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு துரைசிங்கமும்
ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கிச் சுவைத்துப் பார்த்தார்.
ரெய்டு நடத்தியெல்லாம் ஒண்டிப்புலியை
அரெஸ்ட் செய்ய முடியாது என்ற உண்மை அப்போதுதான் துரைசிங்கத்திற்கு உரைத்தது. பிரியாணியின்
டேஸ்ட்டுக்கு அந்த அளவுக்கு அவர் மயங்கிப் போயிருந்தார். இந்த டேஸ்ட்டுக்கு ரெய்டு
நடத்த வந்தவர்களும் ஏன் மயங்கிப் போயிருக்கக் கூடாது என்று அவர் யோசித்தார்.
தன்னுடைய பவரைப் பயன்படுத்தி
ரெய்டை அதிகப்படுத்தினால் நாட்டில் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாவர்
என்ற உண்மையைப் புரிந்து கொண்ட துரைசிங்கம் அடுத்தகட்டமாகச் செய்யப் போவது குறித்த
யோசனையில் ஆழ்ந்தார்.
அன்றிரவு ஒண்டிப்புலியின்
ரெய்டு பிரியாணியையும் குவார்ட்டரையும் கலந்து வயிற்றில் விட்டுக் கொண்டு விடிய விடிய
யோசித்தார். அந்த வாரம் முழுவதுமே துரைசிங்கம் அப்படித்தான் நடந்து கொண்டார். யாரும்
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பிரியாணிப்
பொட்டலத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் வாங்குவது, இரவு முழுவதும் அதைத் தின்று கொண்டும்
குடித்துக் கொண்டும் யோசிப்பது என்று.
அடுத்த வாரத்தின் ஒரு நாளில்
ரெய்டு ஆபிசர்களுக்குப் பதிலாகக் காக்கிச் சட்டைகள் ஒண்டிப்புலியின் வீட்டிற்குள் நுழைந்தன.
ஒண்டிப்புலி கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டார்.
ஒண்டிப்புலி போட்ட பிரியாணியில்
ஒரு பல்லி விழுந்திருந்து வாந்தி மயக்கத்தால் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர்
இடம் பத்தாமல் இருந்தாலும் அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஒண்டிப்புலியின் பிரியாணியில்
பல்லி விழுந்த ரகசியம் ஒண்டிப்புலிக்குத் தெரியாமல் இருக்கலாம். துரைசிங்கத்திற்குத்
தெரியாமல் இருக்குமா? துரைசிங்கம் அன்று மட்டும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு
ஒண்டிப்புலியின் பிரியாணியை வாங்கப் போகவில்லை.
இந்த முறை மாவட்ட செயலாளர்
பதவி துரைசிங்கத்திற்குத்தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமோ?
*****
No comments:
Post a Comment