27 Aug 2022

அக்னிபாத்துக்கு முயற்சிப்பதற்கு அரசியல்வாதியாக முயற்சிக்கலாம்!

அக்னிபாத்துக்கு முயற்சிப்பதற்கு அரசியல்வாதியாக முயற்சிக்கலாம்!

அக்னிவீரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடைவெளி ஓராண்டு. அக்னீவீரர்களின் பணிக்காலம் நான்காண்டுகள். அரசியல்வாதிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள். இன்னொரு வேறுபாடு என்னவென்றால் அக்னிவீரர்களுக்கு அது பணிக்காலம். அரசியல்வாதிகளுக்குப் பதவிக்காலம். அக்னிவீரர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் பயிற்சி உண்டு. அரசியல்வாதிகளுக்கு அது இல்லை.

எப்படிப் பார்த்தாலும் அக்னிவீரர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பணிக்காலத்திற்காகவும் பதவிக்காலத்திற்காகவும் தயாராக வேண்டும். அக்னிவீரர்கள் பணித்தேர்வுக்கு என்றால் அரசியல்வாதிகள் தேர்தலுக்கு. இரண்டிலும் தேர்வானால்தான் அவர்களுக்கு அங்கு வேலை. இல்லையென்றால் இல்லை.

அரசியல்வாதிகள் ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தாலும் அதற்குக் குறைவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உண்டு. அது நான்காண்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் அக்னிவீரர்களுக்குக் கிடையாது. அவர்களுக்கு ஒருமுறை பணப்பயன் உண்டு. அந்தப் பணப்பயனுக்கு அவர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை மாதாமாதம் ஒதுக்கித் தர வேண்டும். அரசாங்கமும் மாதாமாதம் அதே அளவு ஒரு தொகையை ஒதுக்கி முடிவில் கணக்கை முடித்து விடும்.

காலம் காலமாக ஐந்தாண்டுகள் பதவியில் இருந்து விட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்காக நாம் மட்டும் போராட அரசுப் பணியாளர்கள் மட்டும் ஹாயாக ஐம்பத்தெட்டு வரை வேலை பார்த்து விட்டுச் சம்பளம் வாங்குவதா என்ற ஓர் அரசியல்வாதியின் பொருமலில் விளைந்த திட்டம் போலத்தான் இந்தத் திட்டம் தோற்றம் தருகிறது.

அரசியல்வாதிகளுக்கு எப்படிப் பதவிக்காலம் இருக்கிறதோ அதே போலவே இனி அனைவருக்கும் பணிக்காலத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் கனவு அக்னிபாத் மூலம் பலித்து விட்டது என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

இராணுவமே இனி இப்படி என்றால் மற்ற துறைகளும் இந்த முறைக்குத்தான் மாறும். காவல் துறையில் நான்காண்டு, மூன்றாண்டு வேலை பார்த்த முன்னாள் காவலர்களை இனி வரும் காலங்களில் நாம் பார்க்க நேரிடலாம். அதே போல மூன்றாண்டுகள், நான்காண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் என்று பலரையும் பார்க்க நேரிடலாம்.

ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் என்று இருக்கின்ற சமாளிப்பு முறையைச் சட்ட ரீதியாகச் செல்லுபடியாக்கும் வகையில் அக்னிபாத் வருங்காலத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்து விடும் என்பது போலத்தான் தோன்றுகிறது.

அக்னிபாத்துக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினாலும் அதற்காக விண்ணப்பிக்கும் இளைஞர்கள் குறைந்தபாடில்லை. சில ஆயிரம் பணியிடங்களுக்கு லட்ச கணக்கில் விண்ணப்பிக்க இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியா போன்ற வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த நாட்டில் ஓராண்டு அக்னிபாத் ஒப்பந்த முறையைக் கொண்டு வந்தாலும் கோடிக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இராணுவம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அக்னிபாத் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பது நல்லதாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இராணுவம் என்றாலே இரகசியங்கள் இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ராணுவ வீரராக இருக்கும் ஒருவருக்கு ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இருக்கும் உள்ளுணர்வு நான்காண்டுகள் பணியாற்றும் வீரர்களுக்கு இருக்குமா என்ற கேள்வி இயல்பாக எழக் கூடியது.

இராணுவம் என்றால் விசுவாசம் இருக்கிறது. அந்த விசுவாசத்தையும் நான்காண்டுகள் பணியாற்றி விட்டு மீண்டும் வேலையில்லாச் சுழலில் சிக்கும் ஒருவரிடம் எதிர்பார்க்க முடியுமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது.

இராணுவத்தில் நல்ல ஊதியத்தில் நல்ல பணியிடத்தில் பணியாற்றும் ஒரு சிலரே ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்கப் போய் பிடிபட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன எனும் போது நான்காண்டுகளுக்கு ஒரு முறை பணி முடித்து வெளியே வரும் பல்லாயிரக் கணக்கானோர் ராணுவ ரகசியங்களை எந்த அளவுக்குக் காப்பாற்றுவார்கள் என்ற கேள்வியும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விடை காணப்பட வேண்டியது.

நான்காண்டுகள் பணியாற்றி விட்டு வெளியே வரும் அக்னிபாத் வீரர் திருப்தியற்ற நிலையை அடைந்தால் நான்காண்டுகளில் அவர் பெற்ற ராணுவ அறிவை சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஓர் அக்னிபாத் வீரர் செயல்பட்டால் அதைத் தடுக்கும் அளவுக்கு காவல் துறையில் வலுவான தொழில்நுட்பங்களும் ஆயுதங்களும் இருக்கின்றனவா? அது போன்ற நிலையில் காவல்துறையும் அக்னிபாத் போன்ற ஒரு திட்டத்திற்கு மாறியிருந்தால் முன்னாள் சமூக விரோத அக்னிபாத் ராணுவத்தினர்களை எதிர்கொள்வது சவால் மிகுந்ததாக இருக்க் கூடும்.

நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ராணுவத்துக்குக் குறிப்பிட்ட அளவு செலவு செய்துதான் ஆக வேண்டும். ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் என்பதைச் செலவு கணக்கில் மட்டும் பார்க்க முடியாது. அது ஒரு வேலைவாய்ப்புக்குக் கொடுக்கும் நியாயமான ஊதியமும் ஆகும். ஒரு வேலைக்கான மரியாதையும் கௌரவமும் ஆகும்.

செலவைக் குறைப்பதாகக் கூறப்படும் இது போன்ற திட்டங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் வேலைவாய்ப்பு முறைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி விடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை இப்போது அனைவருக்கும் எழுந்திருக்கிறது. நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இந்தக் கவலையை அலட்சியப்படுத்தி விடாமல் கவனத்தில் கொண்டு சரியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அரசியல்வாதிகளின் திட்டங்களில்தான் நாட்டின் வருங்காலம் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...