நடக்க ஆசைப்படுபவர்கள்
மாலை நேரங்களில் நடைபயிற்சி
செய்வது எனது வழக்கங்களில் ஒன்று. பலருக்கும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய வேண்டும்
என்ற ஆசை இருக்கிறது. அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று என்னிடம் சொல்லி தங்களது
ஆற்றாமையைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக நேரம் இல்லை என்று
அவர்கள் சொல்வது வடிகட்டின பொய் என்று எனக்குத் தெரியும். அவர்களுக்கு அதில் துளி கூட
ஆர்வம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.
மாலை நேரத்தில் நடப்பதை விட
சுவாரசியமான விசயங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.
பிறகேன் அவர்கள் என்னைப்
பார்க்கும் போது அப்படிச் சொல்கிறார்கள் என்றால் அது ஒரு வகையான உணர்வு. அந்த நேரத்தில்
மட்டும் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னைப் பார்த்ததும் துளிர் விட்டிருக்கலாம். ஆனால்
நடக்க வேண்டுமே? அது ஒரு குற்ற உணர்வை உருவாக்கியிருக்கலாம்.
நேரமில்லை என்று சொல்வது
அருமையான சாக்குப்போக்கு ஆகும். நான் அந்த சாக்குப்போக்கை மறுப்பதில்லை. அவர்களின்
சாக்குப்போக்கை மறுப்பது என்பது அவர்களின் ஆறுதலைக் குழைப்பது போன்றது.
அவர்களில் ஒரு சிலர் மாலையில்
நடப்பதை விட காலையில் நடப்பது அதிக பலனைத் தரும் என்று அறிவுரை தந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் நீங்கள் காலையில் நடக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறேன்.
அதற்கெல்லாம் எங்கே நேரம்
இருக்கிறது என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள். அறிவுரை சொல்பவர்கள் அதைப் பின்பற்ற
வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அப்போது புரிந்து கொள்வேன்.
*****
No comments:
Post a Comment