27 Aug 2022

டிரான்ஸ்பர் கௌன்சிலிங்

டிரான்ஸ்பர் கௌன்சிலிங்

சந்திரவதனாவுக்கு டிரான்ஸ்பர் கௌன்சிலிங் என்றதும் சந்தோசம் தாங்க முடியவில்லை. இதற்காக எட்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறாள். இன்னும் நான்கு ஆண்டுகள் கழிந்தால் ஒரு மாமாங்கம் ஆகி விடும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக டிரான்ஸ்பர் கௌன்சிலிங் நடக்கவில்லை. பாழாய்ப் போன கொரோனா வந்து நடக்க விடாமல் செய்து விட்டது. அதற்கு முன்பு நடந்த ஆண்டுகளில் சந்திரவதனா நேர்மையாக நடந்து கொள்வதென தீர்மானித்திருந்ததால் அவளுக்கு டிரான்ஸ்பர் ஆவதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது.

இவளும் ஒரு ஏழு லட்சம், எட்டு லட்சம் என்று யோசனை பார்க்காமல் எடுத்து வீசி இருந்தால் இந்நேரத்துக்கு சொந்த மாவட்டத்தில் உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருக்கலாம்.

ஏழு லட்சம், எட்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்றதும் நேர்மையான மோடுக்கு மாறி விட்டிருந்தாள். இரண்டு மூன்று லட்சம் என்றாலும் கூட நேர்மை தவறி கொடுக்க முயற்சித்திருப்பாள். ஏழு, எட்டு லட்சம் அவளை நேர்மையிலிருந்து இம்மி பிசக அனுமதிக்கவில்லை.

எட்டு வருஷம் காத்திருந்ததற்கு இந்த வருஷம் நல்ல காலம் பிறந்து விட்டது. எட்டு வருஷம் ஆகியிருந்தாலும் பணம் கொடுத்து டிரான்ஸ்பர் வாங்காததால் வருடத்துக்கு ஒரு லட்சம் வீதம் மிச்சம் என்று நினைத்துக் கொண்டாள்.

அதுவும் இந்த வருடம் ஆன்லைன் டிரான்ஸ்பர் கௌன்சிலிங். அதனால் எந்த இடத்தையும் காட்டாமல் மறைக்க வாய்ப்பே இல்லை. பைசா காசு செலவில்லாமல் சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கப் போவதை நினைக்க நினைக்க அவளைக் குறித்து அவளுக்கே பெருமையாக இருந்தது.

டிரான்ஸ்பர் கௌன்சிலிங் நடக்கும் இடத்தில் அரசு லட்சினையில் இருந்த ‘வாய்மையே வெல்லும்’ என்ற வாசகத்தைத் தன்னையறியாமல் இப்போதுதான் எழுத்துக் கூட்டி வாசிப்பது போலத் திரும்ப திரும்ப வாசித்து சிறு குழந்தையைப் போல மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

மகிழ்ச்சியும் ஆசை நிறைவேறப் போகிறதென்ற நினைப்பும் சேர்ந்து கொண்டு சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கப் போகிறோம் என்ற திளைப்பில் அவள் காலையில் சாப்பிடாமலே வந்திருந்தாள். காலையில் எட்டு மணிக்குத் துவங்குவதாக இருந்த கௌன்சிலிங் சர்வர் பிராப்ளம், டேட்டா பில்லிங் என மதியம் மூன்று மணிக்குத்தான் துவங்கியது.

டிரான்ஸ்பர் துவங்கியதும் இவளுடைய சொந்த மாவட்டத்துக்குத்தான் ஏகக் கிராக்கி. எல்லாரும் விழுந்தடித்து அவரவர் இடத்தைத் தேர்வு செய்து கொண்டு வந்தனர். இருபத்து மூன்று பேர் இடங்களைத் தேர்வு செய்ததும் மணி ஏழாகி விட்டது என்று மறுநாளுக்குக் கௌன்சிலிங்கைத் தள்ளி வைத்து விட்டனர்.

சந்திரவதனாவுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. சந்திரவதனாவைப் போலக் காத்திருந்தவர்களை மறுநாள் வரச் சொன்னார்கள்.

மறுநாள் சந்திரவதனா பாதி நம்பிக்கையோடும் பாதி நம்பிக்கையிழந்தும் கலந்து கொண்டாள். அன்றும் கௌன்சிலிங் துவங்க மதியம் மூன்று மணியாகி விட்டது. இரவு ஏழு மணி வரை பதினேழு பேர் டிரான்ஸ்பர் பெற்றிருந்தார்கள்.

சந்திரவதனாவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்ததால் பேருந்துக்குக் கூட காத்திராமல் ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் சென்றாள்.

பாத்ரூம் ஷவரைப் போட்டு விட்டு விடிய விடிய அழுதாள். அழுது அழுது கண்ணீர் வற்றியிருந்த அதிகாலைப் பொழுதில் விடிந்திருந்தது. கொஞ்சம் நம்பிக்கை வந்தவளாய் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததையும் அழுது வடிந்ததையும் மேக்கப்பில் கொஞ்சம் மறைத்தபடி அன்றும் கௌன்சிலிங்கிற்குப் போனாள்.

வழக்கம் போல் அன்றும் அப்படித்தான் இருந்தது. ஏழு மணிக்கு மேல் ஆட்டோ பிடித்து வழக்கம் போல ஷவரைப் போட்டு விட்டு அழுதாள். மறுநாள் விடிந்ததும் அரக்க பரக்க கௌன்சிலிங்கிற்குக் கிளம்பிச் சென்றாள்.

இப்படியே ஏழு நாட்கள் ஓடி விட்டன. ஏழாவது நாள் ஏழு மணியில் நின்று கொண்டிருந்த போது அனிச்சையாய் செல்போனை எடுத்துக் கணவனுக்கு அழைத்தாள்.

“எட்டு லட்சத்தை ரெடி பண்ணிடுங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “மேடம் உங்க டர்ன் வந்திருக்கு. வந்து கௌன்சிலிங்கில் கலந்துக்குங்க” என்றார் அலுவலக உதவியாளர்.

“வேண்டாம்ப்பா. நான் எட்டு லட்சத்தைக் கொடுத்தே பாத்துக்கிறேன்.” என்று படியிறங்கி நடக்கத் தொடங்கினாள் சந்திரவதனா.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...