28 May 2019

சுகர் வருவதற்கான வட்டாரவியல் காரணம்



            பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸப் என்று ஆன பிறகு நியூஸ் பேப்பர் வாங்கிப் படிப்பது கொஞ்சம் குறைந்து விட்டது என்று சொல்ல முடியவில்லை. நம் தெருவையே கணக்கில் எடுத்துக் கொண்டால் நியூஸ் பேப்பர் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இது என்ன மாயம்? யார் செய்த மாயம்? என்றெல்லாம் இதில் யோசிக்க என்ன இருக்கிறது! அவ்வளவு வதந்திகளைப் பரப்பினால் வேறு என்னதான் வழியிருக்கிறது?
            விளைவு பாருங்கள்! வாட்ஸப்பில் செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால்... அது கிடக்கட்டும், நியூஸ் பேப்பரில் வந்திருக்கிறதா? என்று விவரமாகக் கேட்கிறார்கள். அட! வாட்ஸப்புக்கு நேர்ந்த கொடுமையே!
*****
            சோத்தைச் சாப்பிடாதே! சோத்தைச் சாப்பிடாதே! சுகரு வரும்னா வேற என்னத்தைச் சாப்பிடுறது?
            நாட்டுல சோறு கிடைக்காம பட்டினி கெடக்குறவங்க எத்தினி பேரு தெரியுமா?
            சோத்த கம்மியாக் சாப்பிடு, கறிகாயை அதிகமாச் சாப்புடுன்னா... நாட்டுல தக்காளி விலை என்ன தெரியுமா?
            ஏதோ அரசாங்கம் ரேஷன் கடையில இலவசமாக அரிசியைக் கொடுக்குறதால அதைச் சாப்பிடுறோம். அதே மாதிரி இலவசமாக காய்கறியையும் கொடுத்தாதாம் இனி வர்ற காலங்களில காய்கறியச் சாப்பிட முடியும் போலருக்கு.
            சோத்தைச் சாப்பிடறதாலதாம் சுகர் வருதுன்னு சொல்றத நிப்பாட்டுங்கப்பா! இது பெரிய விசயமாகி அரிசியினலாதாம் சுகர் வருதுன்னு நெனச்சிகிட்டு அரசாங்கம் அரிசி கொடுக்குறத நிறுத்திப்புட்டா என்னா பண்றது?
            சோத்தைத் திங்குறதால ஒண்ணும் சுகரு வரல. தின்னச் சோத்துக்கு ஒடம்பு வளைஞ்சு உழைக்காம இருக்குறதாலதாம் சுகரு வருது. அது மட்டுமில்லீங்க! நாட்டுல ஏகப்பட்ட பேரு பட்டினி கெடக்க, ரெண்டாளு சோத்தை அள்ளித் திங்குறவனுக்கு சுகரு வராம என்னா செய்யும்?
*****
            ஏம்ப்பா இங்ஙனே ப்ளாட் போட்டிருக்கியே? எத்தனை அடில தண்ணி வரும்னு கேட்டா... போன் பண்ணா அஞ்சே நிமிஷத்துல தண்ணி வரும்ங்றான்.
            அதாம் வாட்டர்கேன்ல தண்ணி வரும்ங்றத அப்படிச் சொல்றான்.
            அப்படியே இப்படிக்கா திரும்பி அப்படிக்கா போனீங்கனா அந்த முக்குலதாம் டாஸ்மாக்கு, சரக்குத் தண்ணிக்கு தட்டாவே ஆகாதுங்றான்.
            நாட்டுல நல்லா போடுறாங்க ப்ளாட்டு! இப்படியே போட்டுகிட்டுப் போனா அப்புறம் மனுஷனும் ஆயிடுவான் ப்ளாட்டு!
*****

27 May 2019

நேற்று போய் இன்று வா!



செய்யு - 97
            "ன்னடா இது ஒருநாளும் ல்லாத திருநாளா இருக்குது!" என்றது அம்மா.
            குமரு மாமா எதிரே நின்று கொண்டிருந்தது.
            "ல்லாம் செளரியமா இருக்கீங்களா?" என்றது குமரு மாமா.
            "ஏம்டாம்பி! இப்பதாம் ஒம்ம வூட்டுக்காரி வூட்டுக்கு அனுப்பி செளரியமா ல்லியான்னு கேட்க சொன்னதாக்கும்? நீயி வந்து பாக்காதது ஒன்னுதாம்டாம்பி குறையா இருந்துப் போச்சுதாக்கும்!" என்றது அம்மா.
            "வாங்கம்பி! பெரியம்பிய ஒண்ணும் சொல்லாதே!" என்றது அப்பா.
            "ம்ஹூம்! காரியம் ஆகணும்னா அத்தாம்னு வந்து நிப்பாம். ல்லே அத்து வுட்டுட்டு அம்போன்னு போன்னு நிப்பாம்!" அம்மாவின் குத்தல் அதிகமாகவே இருந்தது.
            குமரு மாமா ஒன்றும் சொல்லாமல் நின்றது. என்ன சொல்வதென்று ஒரு யோசனை அதன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டது. அது பேசுவதற்கு தோதான இடம் கிடைத்து விட்டது போலிருந்தது. விகடுவும், செய்யுவும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. போர்வையைச் சுருட்டிப் போர்த்தியபடிப் பாயில் படுத்துக் கிடந்தனர். மணி காலை ஆறரை ஆகியிருந்தது.
            "என்னத்தாம்! வூடு இப்படிக் கெடக்குது? நீங்க பண்றது ரொம்பத் தப்புத்தாம்! புள்ளீங்க போன போக்குக்கெல்லாம் போவக் கூடாது. பாத்தீங்களா வூடு எப்புடி ஆயிப் போச்சுத்து அத்தாம்!" என்றது குமரு மாமா.
            "என்னம்பி பண்றது? பயலுக்காகப் போனது. இப்படி ஆயிப் போச்சுது. ஓட்டு வூடா எடுத்துக் கட்டிடலாம்னு யோசன ஓடிட்டு இருக்குதும்பி!" என்றது அப்பா.
            "என்னத்தாம் இந்தக் காலத்துல போயி ஓட்டு வீடு? மாடி வீடாவே எடுத்துக் கட்டிபுடணும்த்தாம்!"
            "அவ்வளவுக்கு தம்புடி பத்தாதும்பி!"
            "ரண்டு லட்சம் போதும்தாம்! அறுநூறு ஸ்கொயர் பிட்ல வூட்டக் கட்டி முடிச்சு குடி போயிடலாம்த்தாம்!"
            "ரண்டுக்கு தம்புடி எங்கப் போறதும்பி?"
            "நம்ம சிங்காரவேல் கொத்தம் மகேம் குமாரசாமி இருக்காம்! கூட கொறச்ச பாப்பாம். வூட்டு நெல, சன்னல், சென்ட்ரிங் அடிக்கிறதல்லாம் நாம்ம பாக்கிறேம். பாத்து சிக்கனமா ஒன்றரைக்குள்ளார முடிச்சிடலாத்தாம். வூட்டக் கட்டிட்டு உள்ள வந்துட்டா வெளிப்பூச்சல்லாம் கொஞ்சம் முன்ன பின்ன பாத்துக்கலாத்தாம்!"
            "இப்போ இருக்குற நெலமயில ஒண்ணுதாம் பொரட்டலாம். அதுக்கும் சொசைட்டி லோனு போடணும்பி. எண்பதாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாம். அதுக்கு மேல எம்ம பி.எப். கணக்குல பார்ட் பைனல் போட்டு கொஞ்சம் எடுக்கலாம். அப்படி இப்பிடின்னு பாத்தாக்கக் கூட ஒண்ணேகால தாண்டாது போலருக்கேம்பி!"
            "நீங்க தோது பண்ணுங்கத்தாம்! பாத்துக்கலாம்த்தாம்! வூட்ட எடுத்துக் கட்டிப்புடணுத்தாம்!"
            "இந்தாருங்க! இவ்வேம் பேச்சக் கேட்டுட்டுலாம் ஆடாதீங்க! இவ்வேம் பொண்டாட்டிப் பேச்ச கேட்டுட்டு ஆடுற பயே. அவ்வே அங்க ஏதாச்சும் சொன்னாள்னா இவ்வேம் இங்க வேலயப் போட்டுட்டு ஓடிடுவாம்! வெனை நமக்குதாம்!" என்றது அம்மா.
            "ச்சும்மா இருக்கா! அவ்வே நம்ம வேலயிலல்லாம் தலயிட மாட்டா. வூட்ட முடிச்சுக் கொடுக்க வேண்டிது நம்ம பொறுப்புக்கா!" என்றது குமரு மாமா.
            "ன்னடா திடீர்னு அத்தாம், அக்கா மேல கரிசனம் வந்துக் கெடக்கு? ஊர்ல யாரு குடுமியும் ச்சும்மா ஆடாதுடாம்பி!"
            "ஒவ் வாயுதாம்க்கா எல்லாத்தியும் கெடுக்குது. வாய வெச்சிட்டு சித்த சும்மா இருக்கா! நல்ல வெசயம் பேசறப்ப முறிச்சுப் போடற மாரி!"
            "நீஞ் சொல்றதும் சரிதாம்! கடேசி வரிக்கும் இப்படியே இருந்துட்டா நல்லதுதாம்! இருக்கணுமே ஏம் உஞ்சின ஐயனாரே! இவ்வேம் தேவன்னா வருவாம். இல்லேன்னா வெரட்டுவாம். நாம்ம எந்தப் பக்கம் நம்ம புத்தியக் கொண்டு போயி வெச்சுக்கிறதோ ஏஞ் தஞ்சாரூ மாரியே!" என்றது அம்மா.
            "சொல்றேன்னு வெசனப்பட்டுக்காதக்கா! குடும்பம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தாம் இருக்கும். அதுக்காவ நீயி எனக்கு அக்கா ல்லேன்னு ஆயிடுமா? நாம்ம ஒமக்கு தம்பியில்லேன்னு ஆயிடுமா? அத்தாம்தாம் அத்தாம் இல்லேன்னு ஆயிடுமா? நாமதாம் அத்தாமுக்கு மச்சாம் ல்லேன்னு ஆயிடுமா? அப்பாரு அங்க நாள எண்ணிட்டு கெடக்குறாரு. ஒரு கடமேதாம் அவருக்குப் பாக்கி. சின்னவனுக்குக் கல்யாணம் பண்ணிப் பாத்துட்டா கொறயில்லாமப் போயிச் சேர்வாரு. அதுக்குதாம் ஓடியாந்தேம்!" என்றது குமரு மாமா.
            "அத்தேப் பேச வந்ததுக்குதாம்டா நல்ல மரியாதி பண்ணி அனுப்புனீங்க! தேவன்னா அத்தான தொட்டுப்பீங்க! தேவல்லன்னா அத்தான விட்டுப்பீங்க! ஒங்க கதெ தெரியாதுன்னா நெனச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டது அம்மா.
            "இந்தாரு நீயி போயி தம்பிக்கு டீ போட்டுக் கொண்டா?" என்றது அப்பா. அதற்கு மேல் அம்மாவைப் பேச விடுவதில் ஆகப் போவது எதுவுமில்லை என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
            "இதுக்கொண்ணும் கொறச்சலில்ல. நியாயத்தக் கேட்டா இந்தாப் போங்கறது? அந்தாப் போங்கறது? தோரணயெல்லாம் இப்பதாம் வாரும். இப்படியே நம்ம வாயக் கட்டிக் கட்டி கெடசியில வெசனப்பட்டு நிக்குறது! ல்லாம் நாம்ம வாங்கி வந்த வரம். நம்ம தலயில எழுதிருக்குற தலயெழுத்து!" என்றபடி அம்மா டீ போட உள்ளே சென்றது.
            "லாலு மாமா வந்துட்டுப் போச்சுதுத்தாம்! வெசயமெல்லாம் கேள்விப் பட்டோம் அத்தாம்! பாத்து முடிச்சு வுட்டுடுங்கத்தாம். குடும்பத்த சமாளிக்கிறத கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு நாளும் நெருப்பு நிக்குற மாரி போகுது. அவனுக்கும் வயசாயிட்டே போகுது. ஒரு குடும்பம்னா ஆனா ந்நல்லா இருக்கும்த்தாம். அவனெ வெளிநாடு அனுப்புறதுக்கும் ஏற்பாடு பண்றேம்த்தாம். பணம் சம்பாதிச்சு அனுப்புனா பக்கத்துலயே வூட்டயும் கட்டிக் கொடுத்திடறேம்த்தாம். நீங்க பேசுனத்தாம் அத்தாம் இது செரிபட்டு வரும். அதாங் ஓடியாந்தேம்! பாத்து சின்னபயலுக்கும், குயிலிக்கும் கல்யாணத்த முடிச்சி வுட்டுறங்கத்தாம்!" என்றது குமரு மாமா மூச்சு விடாமல்.
            "நமக்கும் கடெம இருக்குல்லம்பி. வுட்டுட முடியுமா? ரொம்ப நாளாவே மனசுல ஓடிட்டு இருக்குற இத்தாம்பி. ஒண்ணு வூட்ட பத்தினது. இன்னொன்னு சின்னம்பி கல்யாணத்த பத்தினது. நாம்ம அங்க வாரலய தவுர ச்சும்மா இருக்கலம்பி!" என்றது அப்பா.
            "நமக்கு தெரியாததாத்தாம்! அப்படிலாம் வுட்டுப்புடற ஆளாத்தாம் நீங்க? இன்னொரு வாட்டி நீங்க போயி லாலு மாமாவ பாத்து பேசிட்டு வந்தாச்சுன்னா ஜோரா போயிடும். நம்ம பக்கத்துலேந்தும் ஒரு தபா வார்த்த சொல்லணும்லத்தாம். நாம்ம போயி பாக்கறத விட நீங்க போயி பேசுனாத்தாம் செரியா இருக்கும். மருமொவனா நீங்க வந்ததுக்கு அப்புறம் நம்ம வூட்டுக் கல்யாணத்த முன்னாடி நின்னு நடத்திட்டு வாரது நீங்கதாம். அதாஞ் சொல்றேத்தாம்!" என்றது குமரு மாமா.
            அப்பாவின் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. "அப்டியே செஞ்சு புடலாம்பி. நாம்ம ஒங்க கூட்டாளி மாணிக்கநாயகத்த அழச்சிட்டுப் போயி பேசிடறேம்பி!" என்றது அப்பா.
            "அவ்வேம் வேணாம்த்தாம்! முன்ன மாரியில்லத்தாம் அவ்வேம்! அரசியல் அது இதுன்னு எறங்கிக் கெட்டுப் போயிட்டு இருக்காம். நீங்களும் அக்காவுமே போதும்த்தாம்!" என்றது குமரு மாமா.
            "என்னம்பி இப்படிச் சொல்லிபுட்டீங்க? அரசியல்ல இருந்தா ன்னா? மரியாதில்ல அந்தம்பிய ஒங்களால கூட அடிச்சிக்க முடியாதும்பி! நம்ம வூட்டு காரியம் எல்லாத்துலயும் முன்னாடி நின்னுருக்கும்பி மாணிக்கநாயகம்! அப்படி நின்னதுல்ல அஞ்சி காசி பிரயோசனம் இருந்துருக்கும்மாம்பி அதுக்கு?"
            "அதுலாம் செரிதாத்தாம்! இல்லேங்கல. ஏத்தோ மனசுல பட்டத சொன்னேம். ஒங்க விருப்பத்தாம்த்தாம். நாங்க சின்னபுள்ளீங்க. வரமொற அவ்வளவு தெரியாதுலத்தாம்!" என்றது குமரு மாமா.
            "நாளிக்கி நாளு..." என்று அப்பா காலண்டரை எடுத்துப் பார்த்தது. "நாளு கூட நல்லாத்தாம் இருக்கும்பி. காத்தலா நேரங் கூட நல்லாத்தாம்பி இருக்கு. காத்தாலயே நாம்ம மாணிக்கநாயகத்தப் புடிச்சிக் கொண்டுட்டுப் போயிடறேம்பி!" என்றது அப்பா.
            "ரொம்ப சந்தோஷமா இருக்குத்தாம்! வுட்டுக் கொடுத்துட மாட்டீங்கன்னு தெரியும்த்தாம். நாங்க ஏத்தாச்சும் அறியாம கொள்ளாமல பேசியிருந்தாலோ, செஞ்சிருந்தாலோ மனசுல வெச்சிக்கக் கூடாதுத்தாம்!" என்றது குமரு மாமா.
            இதைக் கேட்டதும் அப்பாவுக்குக் கண்கள் கலங்கி விட்டன.
            அதற்குள் அம்மா டீயைப் போட்டுக் கொண்டு வந்தது. குமரு மாமா டீயை வாங்கிக் குடித்தது. குடித்து முடித்ததும், "நாம்ம கெளம்புறம் அத்தாம்! கெளம்புறம் அக்கா! சோலி வேற கெடக்கு!" என்றபடி வாசலுக்குச் சென்று சைக்கிளில் ஏறி ஒரு காலை ஊன்றி நின்றது.
            "அப்புறம்த்தாம் வூட்ட எடுத்துக் கட்டுறத மறந்திடாதீங்க. யோசிச்சு வையுங்க." என்றபடி பெடலை மிதித்து சைக்கிளில் நகர ஆரம்பித்தது குமரு மாமா.
            "எங்க கொக்கியப் போட்டு எப்படிக் காரியத்த முடிக்கிறாம் பாருங்க. ஒங்களுக்கு வருமா இந்தத் தெறம? ஏத்தோ நாட்டுல நல்லது நடந்தா சரித்தாம்!" என்றது அம்மா.
            "ஆம்மாம்! அது கெடக்குது போ! இந்தக் காலத்துப் புள்ளீங்க அப்படித்தாம்! ன்னத்தா பண்ணித் தொலயறது? இந்த அளவுக்காவது இருக்குதுங்களேன்னு நெனச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுத்தாம். நாளிக்கு காத்தால வெரசா கெளம்பி மாணிக்கநாயகத்தப் பிடிச்சிக் கெளப்பிட்டுப் போயி சட்டு புட்டுன்ன பேசி முடிச்சிடணும்!" என்றது அப்பா.
            "மாணிக்கநாயகம்! அவனத்தேம் பிடிச்சிட்டுப் போவணும். ராசிக்கார பயே. வந்து நின்னாப் போதும். காரியம் மின்னல் கணக்கா முடிஞ்சிடும்!" என்றது அம்மா.
            மறுநாள் கருக்கலில் மாணிக்கவிநாயகத்தைப் பிடித்து வேற்குடி லாலு மாமா வீட்டிற்குக் கிளப்பிக் கொண்டு போக அப்பா கிளம்பியது. வழக்கமாக இப்போதெல்லாம் டிவியெஸ் பிப்டியை எடுத்துச் செல்லும் அப்பா, ஏனோ சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியது.
            திட்டைக் கடைத்தெருவைத் தாண்டி நத்தம் செல்லும் சாரியில் சென்றால் நான்கு வீடுகள் தள்ளி மாணிக்கவிநாயகத்தின் வீடு.
            மாணிக்கவிநாயகத்தின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், கடைத்தெருவிலேயே மாணிக்கவிநாயகத்தைப் பார்த்த அப்பாவின் முகத்தில் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனது.
            கடைத்தெருவே கலவரமாய் இருந்தது. கூட்டம் பெருங்கூட்டம். கூட்டத்துக்கு நடுவே மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்ட சொட்ட கடைத்தெரு முக்கத்தில் தள்ளாடியபடியே நின்றது.
*****

பழி சுமக்கும் பாவப் பட்டவைகள்



பழி சுமக்கும் பாவப் பட்டவைகள்
இன்னும் தோட்டாக்கள்
இன்னும் குண்டுகள்
இன்னும் வெடிப்புகள்
இன்னும் சிதறல்கள்
குழந்தைகள் இறக்கட்டும்
முதியவர்கள் பிறக்கட்டும்
வீசிச் செல்லுங்கள்
பாவம் அவைகள்தான்
என்ன‍ செய்யும்
அணுகுண்டுகளுக்கு
தெரிந்தது அதுதான்
*****

ஒரு சொல் இரு வார்த்தை
ஒரு வாய் சாப்பிடு என்றால்
டயட் கன்ட்ரோல்
மிட் நைட் பார்ட்டிக்கு என்றால்
போடுவார்
என்ரோல்
*****

26 May 2019

ஆளுக்கு ஒரு & ஒரே கணக்கு!



செய்யு - 96
            வைத்தி தாத்தா தன் அந்திம நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
            லாலு மாமா வந்து பேசி விட்டுப் போன பிறகு, வைத்தி தாத்தாவுக்கு நடக்கின்ற சம்பவங்கள், இருக்கின்ற நிலைமைகளைப் பார்த்ததும் கண்ணை மூடுவதற்குள் வீயெம் மாமாவின் கல்யாணத்தைப் பார்த்து விட்டுப் போய் சேர்ந்து விட வேண்டும் என்ற உணர்வு தலைதூக்க ஆரம்பித்து விட்டது.
            படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் பல நாட்கள் அவர் படுத்தப் படுக்கையாகவே இருந்தார். வீயெம் மாமா தினம் திட்டிக் கொண்டே அவரை வெளிக்குத் தூக்கிச் செல்வது, குளிப்பாட்டி விடுவது என்று பணிக்கைகள் செய்து கொண்டிருந்தது. சாப்பாடு, தண்ணி போன்ற விசயங்களை சாமியாத்தா பார்த்துக் கொண்டது. வைத்தி தாத்தாவை அருவருப்போடு பார்த்து முகம் சுளிக்கின்ற வேலையை மட்டும் மேகலா மாமி பார்த்துக் கொண்டது.
            சாமியாத்தா வீட்டில் இருந்த நேரத்தை விட அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் அதிகம் இருந்தது. தன் மூத்த மருமகள் மேகலாவால் உண்டான முழு மனக்கசப்பில் அது புழுங்கிக் கொண்டிருந்தது. அதற்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. தானும் விட்டு விட்டால் புருஷனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலையில் வீட்டுக்கு வருவதும், அக்கம் பக்கத்தில் பேசிக் கொண்டிருப்பதுமாக அது காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது தனது சின்ன மகனுக்குக் கல்யாணம் ஆகி விட்டால் இந்த நிலை மாறி விடும் என்று அது நம்பியது.
            சாமியாத்தாவின் கணக்குக் கொஞ்சம் விசித்திரமானதுதான். புதிதாக வரும் மருமகள் முதல் மருமகளைக் காட்டிலும் மோசமாக இருக்க மாட்டாள் என்று அது நினைத்தது. பாஞ்சலம்மன் அப்படியெல்லாம் தன்னைக் கைவிட்டு விட மாட்டாள் என்று அது உறுதியாக நம்பியது. ஒருவேளை முதல் மருமகளை விட இரண்டாவது மருமகள் மோசமாக அமைந்து விட்டால்... அப்படி ஒரு சாத்தியக்கூறும் இருக்கிறதுதான். சாமியாத்தா அந்தச் சாத்தியக்கூறில் நின்று சிந்தித்துப் பார்க்கத் தயாரில்லை. அப்படி ஏதேனும் நினைப்புத் தோன்றினால் போதும் சொல்லாமல் கொள்ளாமல் திட்டைக்குக் கிளம்பி வந்து விடும். "ஏட்டி தங்காச்சி! ஒம்ம வூட்டுக்காரரு சின்னவனுக்கு ஏதும் பொண்ணு பாக்குறாரா ன்னா?" என்று வந்ததும் வராததுமாக கேட்கும்.
            "பொண்ணு பாத்துட்டு வூட்டுக்கு வார்ற மாரியா ஒம்ம புருஷம், புள்ளிக நடந்துகுதுங்க?" என்று சொல்லும் அம்மா.
            "என்னாடி தங்காச்சிப் பேசுறே? அவரு ஒம்ம அப்பா. அவேம் ஒம்ம தம்பிடி. ஏத்தோ கொஞ்சம் முன்னபின்னதாம் இருக்கும்! அஞ்சு வெரலும் ஒண்ணாவவாடி இருக்கு? சொல்லுங்கச்சி!" என்று அழ ஆரம்பித்து விடும் சாமியாத்தா.
            "அதுக்கு நீயேம் வூடு வூடா திரிஞ்சிட்டியிருக்காம். ஒம்ம மருமவ சத்தம் போடுறாளாம்ல. செய்தி வந்திச்சி!" என்று அம்மா விடாமல் நோண்டும்.
            "வூடு தீப்பிடிச்சுதுன்னு வெளிக்கு ஓடியாந்தா, அங்கொருத்தி மண்ணெண்ண கேன ஊத்தி கொளுத்தியுட தயாரா நிக்குளாங்ற கதெயால்ல இருக்கு நீ நம்மள போட்டு படுத்துற கதெ!"
            "கடசீல நல்ல பேராச்சுப் பாரு நமக்கு! கொளுத்தி வுடுறேன்னு சொல்லிபுட்டீல்ல!"
            "நீயி ஒருத்திதாம் அந்த கெழத்துகிட்ட கொஞ்சம் எடுத்தெறிஞ்சி பேசுற ஆளு. நீயி அந்தாண்ட பேசிட்டு இந்தாண்ட வந்தீன்னா கொஞ்சம் யோஜனப் பண்ணுவாரு ஒங்கப்பம்!"
            "வாங்கிக் கட்டிக்குறதெல்லாம் நாம்ம வாங்கிக் கெட்டிக்கணும். வாங்கி ரொப்பிக்கிறதெல்லாம் நீங்க வாங்கி நொப்பிக்கணும். சும்மா இருக்கிறவேம் வேலயத்த கதிக்கு பூனைக்குட்டியப் போட்டு செரச்சிட்டு இருப்பாங்ற கதெய இருக்கு நம்ம கதெ!" பேசிக் கொண்டே லோட்டா நிறைய டீயையோ, காபியையோ அம்மா போட்டு வைக்கும். குடிக்கும் வரை ஒன்றும் பேசாமல் இருந்து விட்டு, குடித்து முடித்ததும் ரோஷத்தோடு கிளம்பி விடும் சாமியாத்தா.
            "ந்தா எங்க கெளம்புறே? இருந்து ரண்டு வாயி சாப்பிட்டுப் போம்மா!" என்று சொல்லும் அம்மா.
            "அடிப் போடி! நாம்ம அங்க ஆக்கி வெச்ச சோறு, ரண்டு ஊரு திங்கும்!" என்றபடி சாமியாத்தா விடுவிடுவென்று கிளம்பும்.
            "ஒனக்கும் இப்படியொரு மருமவ வாரலன்னா நீயி அடக்க மாட்டே போ!" என்று அம்மா சொல்ல, "ம்ஹூம்!" என்று முகத்தைச் சுளித்தபடியே நடையைக் கட்டும் சாமியாத்தா.
            பெரும்பாலும் அது நடையைக் கட்டும் நேரத்தில் அதன் கண்ணுக்கு எதிரில் வந்து விடுவாள் செய்யு.
            "எப்டித்தா இத்துனோண்டு இருந்துட்டு இப்படி குண்டு குண்டுன்னு நடந்து வந்து குண்டு குண்டுன்னு நடந்துட்டுப் போறே?" என்பாள் செய்யு.
            "ஒம் மவளுக்கு இருக்குற கொழுப்பப் பாத்தியாடி யாங்கச்சி!" என்று சிரித்துக் கொள்ளும் சாமியாத்தா. அத்தோடு விடாது செய்யுவின் முகத்தை கையால் வாரி அணைத்து நெட்டி முறித்துப் போடும். அத்துடன், "நீயாவது போற எடத்துல மாமியார்காரிக்கு வஞ்சன யில்லாம ஆக்கிப் போடு. நல்லபடியா வெச்சுக்க!" என்று செய்யுவைப் பார்த்துச் சொல்லும்.
            "ஏம்த்தா! கொஞ்ச நா பொறேம். நாமளே மருமவளா வந்து ஒமக்குச் சோறாக்கிப் போடுறேம்!" என்று சொல்லும் செய்யு.
            "யய்யோ யம்மாடி! அவ்ளோ காலம் ஒம்ம பெரிய மாமம் பொண்டாட்டிட்ட மொத்துப்பட நம்மால ஆகாதுடி ஆயா! நம்பள கொன்னோ புடுவா! சட்டுபுட்டுன்னு ஒம்ம சின்ன மாமனுக்கு ஒரு பொண்ண பாத்து முடிச்சாகணும்டியோவ் மாமியாகாரியே!" என்று செய்யுவைப் பார்த்துச் சொல்லும் சாமியாத்தா.
            "ஏம்த்தா! ஒமக்கு மாமியார்காரி இல்லேல்லே?" என்பாள் செய்யு.
            "கல்யாணம் கட்டி முடிச்சவுடனேதாம் ஒங்க தாத்தம்தாம் இஞ்ஞ கொண்டாந்துட்டாரே. திருத்துறபூண்டில அவ்ளோ கூட்டம் அங்க. நிக்க எடம்கெடயாது."
            "அதாங்! அங்க மாமியாவோட இருந்திருந்தா நல்லா போட்டு கொடும பண்ணியிருப்பேத்தா நீ!" என்று செய்யு சொல்வதைக் கேட்டதும் சாமியாத்தா விழுந்து விழுந்து சிரிக்கும்.
            "ஏட்டி! அது ஒரு காலம்டி. மாமியான்னா மகாராணி மாரி. அவுக பேச்சுக்கு மறுவார்த்தி கெடயாது. இப்போ இருக்குங்களே. இதுக மாரியா? மாமியாவப் பாத்தா அப்படியே நடுங்கிட்டுதாம் நிப்பேம் பாத்துக்க!" என்று சாமியாத்தா சொல்வதைக் கேட்டதும், "பாத்தா அப்படி நின்னா மாரியே தெரியலயே!" என்பாள் செய்யு.
            "அடிப்போடி நம்ம மாமியாக்காரி! மாமியாக்காரி! மாமியாக்காரியோட இல்லாத கொறய தீக்கறுதுக்குன்னே வந்து பொறந்திருப்பா போலருக்கே!" என்று சொல்லி விட்டு மீண்டும் வடவாதிக்கு ஓடுவதில் சாமியாத்தாவுக்கு ஒரு வாஞ்சை இருந்தது.
            அண்மையில் இப்போது லாலு மாமா வந்து பேசி விட்டுப் போனது சாமியாத்தாவுக்குக் கொஞ்சம் மனதுக்குத் தெம்பாக இருந்தது. பேச்சு பேச்சாக நின்று விடுமோ என்ற பயம்தான் அதைத் திட்டையை நோக்கி அடிக்கடி வர வைத்துக் கொண்டிருந்தது.  எப்படியாவது திரியைக் கொளுத்தி விட்டு, தூண்டி விட்டு கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்பதில் அது குறியாக இருந்தது. சாமியாத்தாவுக்குத் தெரியும், அம்மா அப்படிப் பேசினாலும் காரியத்தில் கண்ணாய் இருந்து முடித்துக் கொடுத்து விடும் என்று. இருந்தாலும் தன் பங்குக்குத் தான் செய்ய வேண்டிய கடமையை விட்டு விடக் கூடாது என்பதற்காக இப்படி அவ்வபோது வந்து ஒரு சத்தம் கொடுத்து விட்டுப் போகும். அத்தோடு மட்டுமில்லாமல் செய்யுவை வந்துப் பார்த்து கட்டிப் பிடித்துக் கொஞ்சி விட்டுப் போவதில் அதுக்கு ஓர் அலாதியான திருப்தி இருந்தது.
            குமரு மாமாவுக்கு லாலு மாமா வந்து பேசி விட்டுப் போன சங்கதி தெரிய வந்ததும் அதுக்கு அது நல்ல யோசனையாகவே பட்டது. அதை விட முக்கியமாக வீயெம் மாமாவுக்குக் கல்யாணத்தைப் பண்ணி விட்டு அதைச் சீக்கிரம் வெளிக்கு அனுப்பி அப்படியே வைத்தி தாத்தாவையும், சாமியாத்தாவையும் வீயெம் மாமாவிடம் தள்ளி விட வேண்டும் என்ற கணக்கும் அதற்கு இருந்தது.
            வீட்டை விட்டு வீயெம் மாமாவைக் கிளப்பி விடத் தோதாக வந்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதென்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த பின் குமரு மாமா, தன் வீராப்பையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு அப்பாவைப் பார்க்க வந்தது.
*****

தேர்தல் முடிவுகளும் தவித்த வாய்க்கு மீத்தேன் குடித்தலும்



            2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொருத்த வரையில் தமிழ்நாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் வித்தியாசமானா தேர்தல் முடிவுகள்தான். இந்தியா முழுவதும் ஒரு திசையில் வாக்களித்திருக்க, தமிழ்நாடு மட்டும் தனித்த திசையில் வாக்களித்திருக்கிறது. தனது வித்தியாச எதிர்ப்பை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியாகவும், தனது வித்தியாச ஆதரவை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு மாதிரியாகவும் பதிவு செய்திருக்கிறது. இதைத்தான் நாமக்கல் கவிஞர்,
            தமிழன் என்றோர் இனமுண்டு
                        தனியே அவர்க்கொரு குணமுண்டு
            என்று பாடியிருக்கிறார் போலும். ஆனாலும் இப்படி ஒரு தனியான குணமா நம் தமிழருக்கு என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
*****
            இருக்கின்ற தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. புதிதாக தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்காமல் இருந்தால் போதாதா?
            குளம், குட்டையெல்லாம் தூர்த்தாயிற்று. மழைநீர்ச் சேகரிப்பு என்ற பெயரில் செய்து வைத்த பிளாஸ்டிக் குழாய்கள் எல்லாம் பல்லை இளித்துக் கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக தெறிக்க விடலாமா? என்கிற ரீதியில் தெறித்தக் கிடக்கின்றன.
            கஜா புயலுக்குப் பின் மழை மேகத்தைக் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக இருக்கிறது நிலைமை.
            மக்கள் தண்ணீருக்காக அல்லாடித்தான் போகிறது. சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் போல் ராவும், பகலும் வண்டியில் கலர், கலர் குடங்களைக் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கின்ற மக்களைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது.
            இப்படியே விட்டால் கூட இந்தத் தண்ணீர் பஞ்சத்தைச் சமாளித்துக் கொண்டு எப்படியோ இந்தச் சனம் உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்த விடும். சரியாகச் சொல்வதென்றால் இந்தத் தண்ணீர் பஞ்சத்தைச் சமாளிக்க யாரும் எதுவும் செய்யா விட்டாலும் கூட மக்கள் சமாளித்துக் கொள்ளும்.
            ஆனால்...
            இந்தத் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல்...
            இருக்கின்ற தண்ணீரையும் ஹைட்ரோ கார்பனுக்கான குழாய்களைப் போட்டு உறிஞ்சினால்...
            பாவம் இந்த மக்கள் என்ன செய்யும்?
            தங்கள் உயிரை உறிஞ்சுவதைப் பரிதாபமாய்ப் பார்த்து நின்று உயிரை விடுவதைத் தவிர பாவம் இந்த மக்களுக்கு என்ன தெரியும்?
            தவித்த வாய்க்குத் தண்ணீர்த் தராத கர்நாடக்காரனை விட, தவித்த வாய்க்கு ஏதோ கொஞ்சம் எஞ்சியிருக்கும் தண்ணீரையும் ஹைட்ரோ கார்பன் குழாய்களைப் போட்டு உறிஞ்ச வைக்க துணை நிற்கும் தமிழ்நாட்டுக்காரன் மோசம்தான் இல்லையா!
            அடப் பாவி மக்கா! ஹைட்ரோ கார்பனைக் குழாய் போட்டு உறிஞ்சி எடுத்து தவித்த வாய்க்கு மீத்தேனையா குடிக்க முடியும்?
*****

25 May 2019

ஆளுக்கேத்த பேச்சு!



செய்யு - 95
            எல்லாரிடமும் டாம்பமாகப் பேசும் லாலு மாமா வைத்தி தாத்தாவிடம் அப்படி பம்மி, குரல் கம்மிப் பேசும். லாலு மாமாவைப் பொருத்த வரையில் அது ஆளுக்குத் தகுந்த பேச்சு பேசும் ஆள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அது அதிகாரம் செய்யும் தொனியில் வார்த்தைகளை விட்டு மிஞ்சும். மிரட்டவும் செய்யும். பொருளாதாரத்தில் வலுத்தவர்களிடம் அவ்வளவுப் பணிவாகப் பேசும். கைகள் இரண்டையும் கட்டியவாறு வலது கையை வாய்க்கு அருகில் கொண்டு வந்து அது நிற்கும் பாணியே அதன் அவையடக்கத்தையும், தன்னடக்கத்தையும் அவர்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
            குமரு மாமாவுக்காக ஈஸ்வரியைக் கேட்டு வந்து போது அதைத் தவற விட்டது லாலு மாமாவுக்கு இமாலயத் தவறாக இப்போது தோன்றியது. குமரு மாமா திடீரென வெளிநாடு போய் இப்படிச் சம்பாதிக்கும் ஒரு சூழ்நிலைச் சம்பவிக்கும் என்று லாலு மாமாவுக்குதான் எப்படித் தெரியும்? ஒரு வாய்ப்பைத் தவற விட்டது போல மறுவாய்ப்பைத் தவற விட்டு விடக் கூடாது என்பதில் லாலு மாமாவுக்கு ஓர்  உறுதி வந்து விட்டது. அதனால் இம்முறை வீயெம் மாமாவுக்காக குயிலியைக் கேட்டு பேச்சு வந்ததைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் லாலு மாமா பிடிவாதமாக இருந்தது.
            லாலு மாமாவின் இரண்டாவது பெண் குயிலி நல்ல நெடுநெடுவென்ற உயரத்துடன் ஈஸ்வரியை விட பார்வைக்குச் சிவப்பாக இருந்தது. அந்தச் சிவப்பு நிறமே அதற்கு ஒரு கர்வத்தைக் கொடுத்திருந்தது. கழுத்து நீண்டதாக, முகம் ஒரு மாதிரியாக தூக்கியதாக இருந்தது. அது செக்கச் சிவந்த அந்த நிறத்துக்கு ஒரு தோற்ற மாறுபாட்டைத் தந்து விட்டது. அதனால் ஈஸ்வரியின் அழகோடு ஒப்பிடும் போது குயிலி இரண்டாம் நிலையில் இருந்தது.
            காலேஜ் போய் படிப்பதும், அஞ்சல் வழியில் படிப்பதும் அரசாங்கப் பணிகளுக்கு ஒரே தகுதியாக இருந்தாலும், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு இரண்டும் இருவேறுபட்ட தகுதிகளாகத்தான் தெரிந்தன. அவர்கள் காலேஜில் போய் படித்து பட்டம் வாங்கியதை டிகிரி என்று நம்பினார்கள். அஞ்சல் வழியில் படித்து டிகிரி வாங்கியதை ஏதோ பொழுதுபோக்கிற்குப் படிப்பதைப் போல நினைத்துக் கொண்டிருந்தனர். இதை குயிலியைப் பெண் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வந்த ஒரு மாப்பிள்ளை கூட்டத்தார் வெளிப்படையாகவே, "எங்க வூட்டலயந்தாங்க, எல்லாரும்  குமுதம், ஆனந்த விகடன்லாம் படிக்குறோம்ங்க. அதுக்கு யாரும் டிகிரியெல்லாம் கொடுக்குறதில்லீங்க!" என்று கூறி விட்டுச் சென்றனர். இது லாலு மாமாவின் மனதில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது. குயிலி டிகிரியெல்லாம் படிப்பதைச் சொல்லித்தான் அதுக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளையப் பிடிக்க வேண்டும் என்று அது மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது.
            ஈஸ்வரிக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பெருஞ்செலவு செய்ததெல்லாம் அவ்வபோது லாலு மாமாவின் கண்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. ஏதோ முதல் கல்யாணம் அப்படி செய்தாகி விட்டது. அதுவும் நல்லதுக்குதான். அதற்காக இரண்டாவது பெண்ணின் கல்யாணத்தையும் அதே போலே செய்து பெரும்பணத்தை இழக்க வேண்டுமா என்று அது யோசிக்க ஆரம்பித்து விட்டது. அதன் விளைவாக அது மணி என்ற வீயெமுக்கே குயிலியைக் கட்டி வைத்து விட்டால் கூட போதுமென்று நினைத்து விட்டது.
            டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் லாலு மாமாவின் பையன் எப்படியும் படித்து முடித்து விட்டு வேற்குடிக்கு வரப் போவதில்லை. அவன் நிச்சயம் தஞ்சாவூர், திருச்சி என்றுதான் தங்கப் போகிறான். அப்படி அவன் தங்கி விட்டால் மணமங்கலத்தில் வாங்கிப் போட்டிருக்கும் இடம், வடவாதி கடைத்தெருவில் வாங்கிப் போட்டிருக்கும் இடம், ஓகையூரில் வாங்கிப் போட்டு வைத்திருக்கும் பல ஏக்கரா நிலம் இவைகளை எல்லாம் சமாளிப்பதற்கு வீயெம்தான் பொருத்தம் என்று லாலு மாமா கணக்கிட்டது. அதுவும் இல்லாமல் வேணி அத்தைப் பேச்சின் படி எதையும் செய்வதில்லை என்ற குறையும் இதனால் நிவர்த்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.
            லாலு மாமா மேற்படித் திட்டத்தை ஓராண்டுக்கும் மேலாக மனதுக்குள் அசை போட்டு பல விதங்களில் ஒத்திகைப் பார்த்து விட்டது. ஒத்திகைக்கான அரங்கேற்ற நாளொன்றைக் குறித்துக் கொண்டு அது தன்னுடைய எம்மெயிட்டியில் வைத்தி தாத்தாவின் வீட்டின் முன் போய் நின்றது.
            லாலு மாமா திண்ணையில் கட்டிலில் படுத்திருந்த வைத்தித் தாத்தாவை பரம பவ்வியத்துடன் வந்து பார்த்தது. திண்ணையில் கிடந்த கட்டிலில் உடல் தளர்ந்து கிடந்தது வைத்தி தாத்தா. குரலில் மட்டும் அதே கம்பீரம் இருந்தது.
            "அடடே! யார்டா இவேம்! லாலுவா? இப்பதாம் வந்து பாக்கணும்னு தோணுச்சா?" என்றது வைத்தி தாத்தா.
            "கொஞ்சம் வேல, அத்தோட ஒடம்புக்கு முடியாம போயிடுச்சுத்தான்!" என்றது லாலு மாமா.
            "ம்! கேள்விப்பட்டேம்! வண்டிலேந்து வுழுந்திட்டியாமே! நம்மால வந்து பாக்க முடியல. குமரு வந்தானா?"
            "இல்லத்தான். திட்டைலேந்து வெங்குவும், அது வூட்டுக்காரரும்தாம் வந்து பாத்தது!"
            "அதானே! நீ யார்ர வந்து பாக்குறே சொல்லு. ஒடம்பு நல்லா இருக்கிறப்ப நாலு பேர வந்து பார்த்தாதாம் ஒமக்கு ஒடம்பு நல்லாயில்லாதப்ப ஒம்ம நாலு பேரு வந்து பார்ப்பாம்!" என்றது வைத்தி தாத்தா.
            லாலு மாமாவுக்கு வைத்தி தாத்தா மேல் கோபம் வந்திருக்க வேண்டும். வைத்தி தாத்தா சொன்னது லாலு மாமாவை விட அவருக்கே நூறு பங்கு பொருந்தக் கூடியது. பேச்சு என்று வந்து விட்டால் எதையாவது பேசித்தானே தொலைய வேண்டியிருக்கிறது. அந்தப் பேச்சுக்காக எல்லாம் கோப்பட முடியுமா? அப்படியே கோபப்படுவது என்று முடிவெடுத்தாலும், இப்போது கோபப்பட முடியாது. இப்போது மட்டுமா? எப்போதும் வைத்தி தாத்தாவிடம் கோபப்பட்டு விட முடியாது. மனுஷன் ஒரு நிலையில் இருப்பது போல இருக்க மாட்டார். எக்குதப்பாய் கொஞ்சம் கூட யோசிக்காமல், "எழுந்திருச்சி வெளியில போடா!" என்று அடித்து விட்டு விடுவார்.
            "வெங்கு ஒரு வெசயம் சொல்லுச்சு!" என்று ஆரம்பித்தார் லாலு மாமா.
            "ரண்டு புள்ளிய பெத்துட்டா அவ்ளோ பெரிய மனுசியா ஆயிடுச்சா அது! பலே! பலே!" என்றது வைத்தி தாத்தா.
            "அத்தானுக்கு வெசயத்தைச் சொல்லலாமா?"
            "ஒங்க அக்கா வூட்டுக்காரேம்கிட்ட‍ சொல்றதுக்கு ஒமக்கென்ன?"
            "நம்ம மணி கல்யாணம் ஆவாம இருக்காம்ல. குமருக்குக் கல்யாணம் ஆயி கொழந்த குட்டி ஆயிடுச்சிப் பாருங்க!"
            "ஓ! அட்ரா சக்க! ச்சும்மா இருக்குற எலி எதுக்குக் கோவணம் கட்டிட்டு அலயணும்ங்றேம்!"
            "இன்னும் வெசயத்துக்கே வரலீங்க அத்தாம்!"
            "அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்பீங்க! நம்மகிட்ட பைசா காசி கெடயாது பாத்துக்கணும். குமருக்குப் பண்ணி வெச்சேன்னா... அவேம் பணங்காசிக் கொடுத்தாம். பண்ணி வெச்சேம்! அது மாரி இவனும் கொடுத்தா பண்ணி வைக்கிறேம்!"
            "அதில்லீங்க அத்தாம்!"
            "நமக்குத் தெரியாதா? சுத்தி வளச்சி அதைத்தாமே பேசப் போறீங்க! இந்தாரு லாலு! நீ உங்காசில கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னா வையி. நமக்கொண்ணும் வெசனம் இல்ல பாத்துக்க!"
            "நீங்களே வெசயத்துக்க வந்திட்டீங்க அத்தாம்! அதத்தாம் பேச வந்தேம். மணிய நம்ம குயிலிக்குக் கட்டி வைக்கணும்னு ஒரு யோசன. அதாம் அத்தாம்!"
            "அடடே! அட்டகாசம் போ! அப்படின்னா பண்ணிக்கோ! பண்ணி ஒம்ம வூட்டு மாப்பிள்ளயா வெச்சுக்கோ! அந்தப் பயல மொதல்ல இங்கேந்து காலி பண்ணிட்டுப் போ! ரொம்ப சந்தோஷம் நமக்கு!" என்று தன் பொக்கைவாய் குலுங்க சிரித்தார் வைத்தி தாத்தா.
            "அது சரி அத்தாம்! பொண்ணு வூட்டுக்காரேம் நாம்ம. நாம்ம என்ன செய்யணும்னு ஒரு மொறதல இருக்கு. நாம்ம என்ன பண்ணணும் சொல்லாம ன்னா பண்றது அத்தாம்!"
            "சபாஷ்! அந்தப் பயல இங்கேந்து கெளப்பிட்டுப் போயிடு. அத்து போதும் போ!"
            "நீங்க இப்படிச் சொல்றதால நம்ம வூட்டு மாப்பிள்ளய நாம்ம ச்சும்மா வுட்டுட மாட்டேம்! வடவாதியில மில்லுகாரரு வூட்டுக்கு எதுத்தாப்பல வாங்கிப் போட்டுருக்கிற நெலத்துல ஒரு எழப்புப் பட்டற வெச்சிக் கொடுத்திடறேம். நீங்க ஒங்க தரப்புல சிலத செஞ்சாகணும்!"
            "ன்னா பண்ணணும் சொல்லு! பேஷா பண்ணிடப் போறேம்!"
            "குமருகிட்ட சொல்லி மணிய வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணணும். ஒரு ரண்டு பயணமாவது போயிட்டு வரட்டும். அப்பால பக்கத்துல வாங்கிப் போட்டுருக்குற மனை மணிக்குதாம்னு தெரியும். அதுல அவேம் பங்குக்கு ஒரு வூட்டக் கட்டித் தர்றணும்!"
            "சரியாப் போச்சுப் போடா லாலு! நாங் கூட ச்சும்மா நெனச்சிபுட்டேம் போ! பெரியவன்கிட்டச் சொல்லி வெளிநாடு அனுப்பிப்புடலாம். வீடெல்லாம் அவந்தேம் வெளிநாடு போயி சம்பாதிச்சுக் கட்டிக்கணும். அது நம்மால ஆகாத காரியமப்பா. இந்தாரு நீ வேணும்னாலும் கட்டிக் கொடுத்துக்கோ. அவ்வளவுதாம் நம்மால முடியும் பாத்துக்க!"
            "செரிங்க அத்தாம்! நீங்க எதுக்கும் வீட்டப் பத்தி ஒரு வார்த்த குமருகிட்ட பேசிப் பாருங்க. முடியலன்னா பரவாயில்ல. நாம்ம கேட்காம வுட்டுட்டேம்னு இருக்கக் கூடாது பாருங்க!"
            "செரி! செரி! பாப்போம் போ!"
            "அப்போ நாம்ம உத்தரவு வாங்கிக்கிறேம் அத்தாம்!" என்றது லாலு மாமா.
            "அடே! ஒரு நல்ல வெசயம் பேச வந்திட்டு ச்சும்மா போறீயே! ஏ! இவளே! இஞ்ஞ கொஞ்சம் வாயேம்!" என்றது வைத்தி தாத்தா.
            "மாமா! அத்தே வெளிக்காட்டி எங்கயோ போயிருக்கு! எங்க அத்து வூடு தங்குது? வூடு வூடா பேசுறதலாம் நிக்குது!" என்றது மேகலா மாமி. அதற்கு மேல் வைத்தி தாத்தாவின் குரல் மேலெழும்பவில்லை. குரல் அடங்கியது போலானது வைத்தி தாத்தாவுக்கு.
            "செரி! செரி! உனக்கு ஆயிரம் சோலி இருக்கும். கெளம்பு மொதல்ல!" என்றது வைத்தி தாத்தா அதுவரை இருந்த சுரத்தான குரல் மாறி, மெதுவான குரலில் லாலு மாமாவிடம்.
            எல்லாரிடமும் கம்பீரமாகப் பேசும் வைத்தி தாத்தா, மருமகள் குரல் கேட்டதும் ஏன் இப்படி பம்மிப் போனது என்று யோசித்தபடியே வெளியே வந்து எம்யெட்டியை ஸ்டார் செய்தது லாலு மாமா. அதிலிருந்து வந்த பட் பட் சத்தம் வைத்தி தாத்தாவின் குரலை விட கம்பீரமாகக் கேட்டது.
*****