25 May 2019

ஆளுக்கேத்த பேச்சு!



செய்யு - 95
            எல்லாரிடமும் டாம்பமாகப் பேசும் லாலு மாமா வைத்தி தாத்தாவிடம் அப்படி பம்மி, குரல் கம்மிப் பேசும். லாலு மாமாவைப் பொருத்த வரையில் அது ஆளுக்குத் தகுந்த பேச்சு பேசும் ஆள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அது அதிகாரம் செய்யும் தொனியில் வார்த்தைகளை விட்டு மிஞ்சும். மிரட்டவும் செய்யும். பொருளாதாரத்தில் வலுத்தவர்களிடம் அவ்வளவுப் பணிவாகப் பேசும். கைகள் இரண்டையும் கட்டியவாறு வலது கையை வாய்க்கு அருகில் கொண்டு வந்து அது நிற்கும் பாணியே அதன் அவையடக்கத்தையும், தன்னடக்கத்தையும் அவர்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
            குமரு மாமாவுக்காக ஈஸ்வரியைக் கேட்டு வந்து போது அதைத் தவற விட்டது லாலு மாமாவுக்கு இமாலயத் தவறாக இப்போது தோன்றியது. குமரு மாமா திடீரென வெளிநாடு போய் இப்படிச் சம்பாதிக்கும் ஒரு சூழ்நிலைச் சம்பவிக்கும் என்று லாலு மாமாவுக்குதான் எப்படித் தெரியும்? ஒரு வாய்ப்பைத் தவற விட்டது போல மறுவாய்ப்பைத் தவற விட்டு விடக் கூடாது என்பதில் லாலு மாமாவுக்கு ஓர்  உறுதி வந்து விட்டது. அதனால் இம்முறை வீயெம் மாமாவுக்காக குயிலியைக் கேட்டு பேச்சு வந்ததைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் லாலு மாமா பிடிவாதமாக இருந்தது.
            லாலு மாமாவின் இரண்டாவது பெண் குயிலி நல்ல நெடுநெடுவென்ற உயரத்துடன் ஈஸ்வரியை விட பார்வைக்குச் சிவப்பாக இருந்தது. அந்தச் சிவப்பு நிறமே அதற்கு ஒரு கர்வத்தைக் கொடுத்திருந்தது. கழுத்து நீண்டதாக, முகம் ஒரு மாதிரியாக தூக்கியதாக இருந்தது. அது செக்கச் சிவந்த அந்த நிறத்துக்கு ஒரு தோற்ற மாறுபாட்டைத் தந்து விட்டது. அதனால் ஈஸ்வரியின் அழகோடு ஒப்பிடும் போது குயிலி இரண்டாம் நிலையில் இருந்தது.
            காலேஜ் போய் படிப்பதும், அஞ்சல் வழியில் படிப்பதும் அரசாங்கப் பணிகளுக்கு ஒரே தகுதியாக இருந்தாலும், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு இரண்டும் இருவேறுபட்ட தகுதிகளாகத்தான் தெரிந்தன. அவர்கள் காலேஜில் போய் படித்து பட்டம் வாங்கியதை டிகிரி என்று நம்பினார்கள். அஞ்சல் வழியில் படித்து டிகிரி வாங்கியதை ஏதோ பொழுதுபோக்கிற்குப் படிப்பதைப் போல நினைத்துக் கொண்டிருந்தனர். இதை குயிலியைப் பெண் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வந்த ஒரு மாப்பிள்ளை கூட்டத்தார் வெளிப்படையாகவே, "எங்க வூட்டலயந்தாங்க, எல்லாரும்  குமுதம், ஆனந்த விகடன்லாம் படிக்குறோம்ங்க. அதுக்கு யாரும் டிகிரியெல்லாம் கொடுக்குறதில்லீங்க!" என்று கூறி விட்டுச் சென்றனர். இது லாலு மாமாவின் மனதில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது. குயிலி டிகிரியெல்லாம் படிப்பதைச் சொல்லித்தான் அதுக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளையப் பிடிக்க வேண்டும் என்று அது மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது.
            ஈஸ்வரிக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பெருஞ்செலவு செய்ததெல்லாம் அவ்வபோது லாலு மாமாவின் கண்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. ஏதோ முதல் கல்யாணம் அப்படி செய்தாகி விட்டது. அதுவும் நல்லதுக்குதான். அதற்காக இரண்டாவது பெண்ணின் கல்யாணத்தையும் அதே போலே செய்து பெரும்பணத்தை இழக்க வேண்டுமா என்று அது யோசிக்க ஆரம்பித்து விட்டது. அதன் விளைவாக அது மணி என்ற வீயெமுக்கே குயிலியைக் கட்டி வைத்து விட்டால் கூட போதுமென்று நினைத்து விட்டது.
            டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் லாலு மாமாவின் பையன் எப்படியும் படித்து முடித்து விட்டு வேற்குடிக்கு வரப் போவதில்லை. அவன் நிச்சயம் தஞ்சாவூர், திருச்சி என்றுதான் தங்கப் போகிறான். அப்படி அவன் தங்கி விட்டால் மணமங்கலத்தில் வாங்கிப் போட்டிருக்கும் இடம், வடவாதி கடைத்தெருவில் வாங்கிப் போட்டிருக்கும் இடம், ஓகையூரில் வாங்கிப் போட்டு வைத்திருக்கும் பல ஏக்கரா நிலம் இவைகளை எல்லாம் சமாளிப்பதற்கு வீயெம்தான் பொருத்தம் என்று லாலு மாமா கணக்கிட்டது. அதுவும் இல்லாமல் வேணி அத்தைப் பேச்சின் படி எதையும் செய்வதில்லை என்ற குறையும் இதனால் நிவர்த்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.
            லாலு மாமா மேற்படித் திட்டத்தை ஓராண்டுக்கும் மேலாக மனதுக்குள் அசை போட்டு பல விதங்களில் ஒத்திகைப் பார்த்து விட்டது. ஒத்திகைக்கான அரங்கேற்ற நாளொன்றைக் குறித்துக் கொண்டு அது தன்னுடைய எம்மெயிட்டியில் வைத்தி தாத்தாவின் வீட்டின் முன் போய் நின்றது.
            லாலு மாமா திண்ணையில் கட்டிலில் படுத்திருந்த வைத்தித் தாத்தாவை பரம பவ்வியத்துடன் வந்து பார்த்தது. திண்ணையில் கிடந்த கட்டிலில் உடல் தளர்ந்து கிடந்தது வைத்தி தாத்தா. குரலில் மட்டும் அதே கம்பீரம் இருந்தது.
            "அடடே! யார்டா இவேம்! லாலுவா? இப்பதாம் வந்து பாக்கணும்னு தோணுச்சா?" என்றது வைத்தி தாத்தா.
            "கொஞ்சம் வேல, அத்தோட ஒடம்புக்கு முடியாம போயிடுச்சுத்தான்!" என்றது லாலு மாமா.
            "ம்! கேள்விப்பட்டேம்! வண்டிலேந்து வுழுந்திட்டியாமே! நம்மால வந்து பாக்க முடியல. குமரு வந்தானா?"
            "இல்லத்தான். திட்டைலேந்து வெங்குவும், அது வூட்டுக்காரரும்தாம் வந்து பாத்தது!"
            "அதானே! நீ யார்ர வந்து பாக்குறே சொல்லு. ஒடம்பு நல்லா இருக்கிறப்ப நாலு பேர வந்து பார்த்தாதாம் ஒமக்கு ஒடம்பு நல்லாயில்லாதப்ப ஒம்ம நாலு பேரு வந்து பார்ப்பாம்!" என்றது வைத்தி தாத்தா.
            லாலு மாமாவுக்கு வைத்தி தாத்தா மேல் கோபம் வந்திருக்க வேண்டும். வைத்தி தாத்தா சொன்னது லாலு மாமாவை விட அவருக்கே நூறு பங்கு பொருந்தக் கூடியது. பேச்சு என்று வந்து விட்டால் எதையாவது பேசித்தானே தொலைய வேண்டியிருக்கிறது. அந்தப் பேச்சுக்காக எல்லாம் கோப்பட முடியுமா? அப்படியே கோபப்படுவது என்று முடிவெடுத்தாலும், இப்போது கோபப்பட முடியாது. இப்போது மட்டுமா? எப்போதும் வைத்தி தாத்தாவிடம் கோபப்பட்டு விட முடியாது. மனுஷன் ஒரு நிலையில் இருப்பது போல இருக்க மாட்டார். எக்குதப்பாய் கொஞ்சம் கூட யோசிக்காமல், "எழுந்திருச்சி வெளியில போடா!" என்று அடித்து விட்டு விடுவார்.
            "வெங்கு ஒரு வெசயம் சொல்லுச்சு!" என்று ஆரம்பித்தார் லாலு மாமா.
            "ரண்டு புள்ளிய பெத்துட்டா அவ்ளோ பெரிய மனுசியா ஆயிடுச்சா அது! பலே! பலே!" என்றது வைத்தி தாத்தா.
            "அத்தானுக்கு வெசயத்தைச் சொல்லலாமா?"
            "ஒங்க அக்கா வூட்டுக்காரேம்கிட்ட‍ சொல்றதுக்கு ஒமக்கென்ன?"
            "நம்ம மணி கல்யாணம் ஆவாம இருக்காம்ல. குமருக்குக் கல்யாணம் ஆயி கொழந்த குட்டி ஆயிடுச்சிப் பாருங்க!"
            "ஓ! அட்ரா சக்க! ச்சும்மா இருக்குற எலி எதுக்குக் கோவணம் கட்டிட்டு அலயணும்ங்றேம்!"
            "இன்னும் வெசயத்துக்கே வரலீங்க அத்தாம்!"
            "அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்பீங்க! நம்மகிட்ட பைசா காசி கெடயாது பாத்துக்கணும். குமருக்குப் பண்ணி வெச்சேன்னா... அவேம் பணங்காசிக் கொடுத்தாம். பண்ணி வெச்சேம்! அது மாரி இவனும் கொடுத்தா பண்ணி வைக்கிறேம்!"
            "அதில்லீங்க அத்தாம்!"
            "நமக்குத் தெரியாதா? சுத்தி வளச்சி அதைத்தாமே பேசப் போறீங்க! இந்தாரு லாலு! நீ உங்காசில கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னா வையி. நமக்கொண்ணும் வெசனம் இல்ல பாத்துக்க!"
            "நீங்களே வெசயத்துக்க வந்திட்டீங்க அத்தாம்! அதத்தாம் பேச வந்தேம். மணிய நம்ம குயிலிக்குக் கட்டி வைக்கணும்னு ஒரு யோசன. அதாம் அத்தாம்!"
            "அடடே! அட்டகாசம் போ! அப்படின்னா பண்ணிக்கோ! பண்ணி ஒம்ம வூட்டு மாப்பிள்ளயா வெச்சுக்கோ! அந்தப் பயல மொதல்ல இங்கேந்து காலி பண்ணிட்டுப் போ! ரொம்ப சந்தோஷம் நமக்கு!" என்று தன் பொக்கைவாய் குலுங்க சிரித்தார் வைத்தி தாத்தா.
            "அது சரி அத்தாம்! பொண்ணு வூட்டுக்காரேம் நாம்ம. நாம்ம என்ன செய்யணும்னு ஒரு மொறதல இருக்கு. நாம்ம என்ன பண்ணணும் சொல்லாம ன்னா பண்றது அத்தாம்!"
            "சபாஷ்! அந்தப் பயல இங்கேந்து கெளப்பிட்டுப் போயிடு. அத்து போதும் போ!"
            "நீங்க இப்படிச் சொல்றதால நம்ம வூட்டு மாப்பிள்ளய நாம்ம ச்சும்மா வுட்டுட மாட்டேம்! வடவாதியில மில்லுகாரரு வூட்டுக்கு எதுத்தாப்பல வாங்கிப் போட்டுருக்கிற நெலத்துல ஒரு எழப்புப் பட்டற வெச்சிக் கொடுத்திடறேம். நீங்க ஒங்க தரப்புல சிலத செஞ்சாகணும்!"
            "ன்னா பண்ணணும் சொல்லு! பேஷா பண்ணிடப் போறேம்!"
            "குமருகிட்ட சொல்லி மணிய வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணணும். ஒரு ரண்டு பயணமாவது போயிட்டு வரட்டும். அப்பால பக்கத்துல வாங்கிப் போட்டுருக்குற மனை மணிக்குதாம்னு தெரியும். அதுல அவேம் பங்குக்கு ஒரு வூட்டக் கட்டித் தர்றணும்!"
            "சரியாப் போச்சுப் போடா லாலு! நாங் கூட ச்சும்மா நெனச்சிபுட்டேம் போ! பெரியவன்கிட்டச் சொல்லி வெளிநாடு அனுப்பிப்புடலாம். வீடெல்லாம் அவந்தேம் வெளிநாடு போயி சம்பாதிச்சுக் கட்டிக்கணும். அது நம்மால ஆகாத காரியமப்பா. இந்தாரு நீ வேணும்னாலும் கட்டிக் கொடுத்துக்கோ. அவ்வளவுதாம் நம்மால முடியும் பாத்துக்க!"
            "செரிங்க அத்தாம்! நீங்க எதுக்கும் வீட்டப் பத்தி ஒரு வார்த்த குமருகிட்ட பேசிப் பாருங்க. முடியலன்னா பரவாயில்ல. நாம்ம கேட்காம வுட்டுட்டேம்னு இருக்கக் கூடாது பாருங்க!"
            "செரி! செரி! பாப்போம் போ!"
            "அப்போ நாம்ம உத்தரவு வாங்கிக்கிறேம் அத்தாம்!" என்றது லாலு மாமா.
            "அடே! ஒரு நல்ல வெசயம் பேச வந்திட்டு ச்சும்மா போறீயே! ஏ! இவளே! இஞ்ஞ கொஞ்சம் வாயேம்!" என்றது வைத்தி தாத்தா.
            "மாமா! அத்தே வெளிக்காட்டி எங்கயோ போயிருக்கு! எங்க அத்து வூடு தங்குது? வூடு வூடா பேசுறதலாம் நிக்குது!" என்றது மேகலா மாமி. அதற்கு மேல் வைத்தி தாத்தாவின் குரல் மேலெழும்பவில்லை. குரல் அடங்கியது போலானது வைத்தி தாத்தாவுக்கு.
            "செரி! செரி! உனக்கு ஆயிரம் சோலி இருக்கும். கெளம்பு மொதல்ல!" என்றது வைத்தி தாத்தா அதுவரை இருந்த சுரத்தான குரல் மாறி, மெதுவான குரலில் லாலு மாமாவிடம்.
            எல்லாரிடமும் கம்பீரமாகப் பேசும் வைத்தி தாத்தா, மருமகள் குரல் கேட்டதும் ஏன் இப்படி பம்மிப் போனது என்று யோசித்தபடியே வெளியே வந்து எம்யெட்டியை ஸ்டார் செய்தது லாலு மாமா. அதிலிருந்து வந்த பட் பட் சத்தம் வைத்தி தாத்தாவின் குரலை விட கம்பீரமாகக் கேட்டது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...