செய்யு - 96
வைத்தி தாத்தா தன் அந்திம நாட்களை எண்ணிக்
கொண்டிருந்தார்.
லாலு மாமா வந்து பேசி விட்டுப் போன பிறகு,
வைத்தி தாத்தாவுக்கு நடக்கின்ற சம்பவங்கள், இருக்கின்ற நிலைமைகளைப் பார்த்ததும் கண்ணை
மூடுவதற்குள் வீயெம் மாமாவின் கல்யாணத்தைப் பார்த்து விட்டுப் போய் சேர்ந்து விட வேண்டும்
என்ற உணர்வு தலைதூக்க ஆரம்பித்து விட்டது.
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல்
பல நாட்கள் அவர் படுத்தப் படுக்கையாகவே இருந்தார். வீயெம் மாமா தினம் திட்டிக் கொண்டே
அவரை வெளிக்குத் தூக்கிச் செல்வது, குளிப்பாட்டி விடுவது என்று பணிக்கைகள் செய்து கொண்டிருந்தது.
சாப்பாடு, தண்ணி போன்ற விசயங்களை சாமியாத்தா பார்த்துக் கொண்டது. வைத்தி தாத்தாவை
அருவருப்போடு பார்த்து முகம் சுளிக்கின்ற வேலையை மட்டும் மேகலா மாமி பார்த்துக் கொண்டது.
சாமியாத்தா வீட்டில் இருந்த நேரத்தை விட
அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் அதிகம் இருந்தது. தன் மூத்த மருமகள் மேகலாவால்
உண்டான முழு மனக்கசப்பில் அது புழுங்கிக் கொண்டிருந்தது. அதற்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை. தானும் விட்டு விட்டால் புருஷனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற
கவலையில் வீட்டுக்கு வருவதும், அக்கம் பக்கத்தில் பேசிக் கொண்டிருப்பதுமாக அது காலத்தை
ஓட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது தனது சின்ன மகனுக்குக் கல்யாணம் ஆகி விட்டால்
இந்த நிலை மாறி விடும் என்று அது நம்பியது.
சாமியாத்தாவின் கணக்குக் கொஞ்சம் விசித்திரமானதுதான்.
புதிதாக வரும் மருமகள் முதல் மருமகளைக் காட்டிலும் மோசமாக இருக்க மாட்டாள் என்று அது
நினைத்தது. பாஞ்சலம்மன் அப்படியெல்லாம் தன்னைக் கைவிட்டு விட மாட்டாள் என்று அது உறுதியாக
நம்பியது. ஒருவேளை முதல் மருமகளை விட இரண்டாவது மருமகள் மோசமாக அமைந்து விட்டால்...
அப்படி ஒரு சாத்தியக்கூறும் இருக்கிறதுதான். சாமியாத்தா அந்தச் சாத்தியக்கூறில் நின்று
சிந்தித்துப் பார்க்கத் தயாரில்லை. அப்படி ஏதேனும் நினைப்புத் தோன்றினால் போதும்
சொல்லாமல் கொள்ளாமல் திட்டைக்குக் கிளம்பி வந்து விடும். "ஏட்டி தங்காச்சி!
ஒம்ம வூட்டுக்காரரு சின்னவனுக்கு ஏதும் பொண்ணு பாக்குறாரா ன்னா?" என்று வந்ததும்
வராததுமாக கேட்கும்.
"பொண்ணு பாத்துட்டு வூட்டுக்கு வார்ற
மாரியா ஒம்ம புருஷம், புள்ளிக நடந்துகுதுங்க?" என்று சொல்லும் அம்மா.
"என்னாடி தங்காச்சிப் பேசுறே? அவரு
ஒம்ம அப்பா. அவேம் ஒம்ம தம்பிடி. ஏத்தோ கொஞ்சம் முன்னபின்னதாம் இருக்கும்! அஞ்சு
வெரலும் ஒண்ணாவவாடி இருக்கு? சொல்லுங்கச்சி!" என்று அழ ஆரம்பித்து விடும் சாமியாத்தா.
"அதுக்கு நீயேம் வூடு வூடா திரிஞ்சிட்டியிருக்காம்.
ஒம்ம மருமவ சத்தம் போடுறாளாம்ல. செய்தி வந்திச்சி!" என்று அம்மா விடாமல் நோண்டும்.
"வூடு தீப்பிடிச்சுதுன்னு வெளிக்கு
ஓடியாந்தா, அங்கொருத்தி மண்ணெண்ண கேன ஊத்தி கொளுத்தியுட தயாரா நிக்குளாங்ற கதெயால்ல
இருக்கு நீ நம்மள போட்டு படுத்துற கதெ!"
"கடசீல நல்ல பேராச்சுப் பாரு நமக்கு!
கொளுத்தி வுடுறேன்னு சொல்லிபுட்டீல்ல!"
"நீயி ஒருத்திதாம் அந்த கெழத்துகிட்ட
கொஞ்சம் எடுத்தெறிஞ்சி பேசுற ஆளு. நீயி அந்தாண்ட பேசிட்டு இந்தாண்ட வந்தீன்னா கொஞ்சம்
யோஜனப் பண்ணுவாரு ஒங்கப்பம்!"
"வாங்கிக் கட்டிக்குறதெல்லாம் நாம்ம
வாங்கிக் கெட்டிக்கணும். வாங்கி ரொப்பிக்கிறதெல்லாம் நீங்க வாங்கி நொப்பிக்கணும்.
சும்மா இருக்கிறவேம் வேலயத்த கதிக்கு பூனைக்குட்டியப் போட்டு செரச்சிட்டு இருப்பாங்ற
கதெய இருக்கு நம்ம கதெ!" பேசிக் கொண்டே லோட்டா நிறைய டீயையோ, காபியையோ அம்மா
போட்டு வைக்கும். குடிக்கும் வரை ஒன்றும் பேசாமல் இருந்து விட்டு, குடித்து முடித்ததும்
ரோஷத்தோடு கிளம்பி விடும் சாமியாத்தா.
"ந்தா எங்க கெளம்புறே? இருந்து ரண்டு
வாயி சாப்பிட்டுப் போம்மா!" என்று சொல்லும் அம்மா.
"அடிப் போடி! நாம்ம அங்க ஆக்கி வெச்ச
சோறு, ரண்டு ஊரு திங்கும்!" என்றபடி சாமியாத்தா விடுவிடுவென்று கிளம்பும்.
"ஒனக்கும் இப்படியொரு மருமவ வாரலன்னா
நீயி அடக்க மாட்டே போ!" என்று அம்மா சொல்ல, "ம்ஹூம்!" என்று முகத்தைச்
சுளித்தபடியே நடையைக் கட்டும் சாமியாத்தா.
பெரும்பாலும் அது நடையைக் கட்டும் நேரத்தில்
அதன் கண்ணுக்கு எதிரில் வந்து விடுவாள் செய்யு.
"எப்டித்தா இத்துனோண்டு இருந்துட்டு
இப்படி குண்டு குண்டுன்னு நடந்து வந்து குண்டு குண்டுன்னு நடந்துட்டுப் போறே?"
என்பாள் செய்யு.
"ஒம் மவளுக்கு இருக்குற கொழுப்பப்
பாத்தியாடி யாங்கச்சி!" என்று சிரித்துக் கொள்ளும் சாமியாத்தா. அத்தோடு விடாது
செய்யுவின் முகத்தை கையால் வாரி அணைத்து நெட்டி முறித்துப் போடும். அத்துடன்,
"நீயாவது போற எடத்துல மாமியார்காரிக்கு வஞ்சன யில்லாம ஆக்கிப் போடு. நல்லபடியா
வெச்சுக்க!" என்று செய்யுவைப் பார்த்துச் சொல்லும்.
"ஏம்த்தா! கொஞ்ச நா பொறேம். நாமளே
மருமவளா வந்து ஒமக்குச் சோறாக்கிப் போடுறேம்!" என்று சொல்லும் செய்யு.
"யய்யோ யம்மாடி! அவ்ளோ காலம் ஒம்ம
பெரிய மாமம் பொண்டாட்டிட்ட மொத்துப்பட நம்மால ஆகாதுடி ஆயா! நம்பள கொன்னோ புடுவா!
சட்டுபுட்டுன்னு ஒம்ம சின்ன மாமனுக்கு ஒரு பொண்ண பாத்து முடிச்சாகணும்டியோவ் மாமியாகாரியே!"
என்று செய்யுவைப் பார்த்துச் சொல்லும் சாமியாத்தா.
"ஏம்த்தா! ஒமக்கு மாமியார்காரி இல்லேல்லே?"
என்பாள் செய்யு.
"கல்யாணம் கட்டி முடிச்சவுடனேதாம்
ஒங்க தாத்தம்தாம் இஞ்ஞ கொண்டாந்துட்டாரே. திருத்துறபூண்டில அவ்ளோ கூட்டம் அங்க. நிக்க
எடம்கெடயாது."
"அதாங்! அங்க மாமியாவோட இருந்திருந்தா
நல்லா போட்டு கொடும பண்ணியிருப்பேத்தா நீ!" என்று செய்யு சொல்வதைக் கேட்டதும்
சாமியாத்தா விழுந்து விழுந்து சிரிக்கும்.
"ஏட்டி! அது ஒரு காலம்டி. மாமியான்னா
மகாராணி மாரி. அவுக பேச்சுக்கு மறுவார்த்தி கெடயாது. இப்போ இருக்குங்களே. இதுக மாரியா?
மாமியாவப் பாத்தா அப்படியே நடுங்கிட்டுதாம் நிப்பேம் பாத்துக்க!" என்று சாமியாத்தா
சொல்வதைக் கேட்டதும், "பாத்தா அப்படி நின்னா மாரியே தெரியலயே!" என்பாள்
செய்யு.
"அடிப்போடி நம்ம மாமியாக்காரி! மாமியாக்காரி!
மாமியாக்காரியோட இல்லாத கொறய தீக்கறுதுக்குன்னே வந்து பொறந்திருப்பா போலருக்கே!"
என்று சொல்லி விட்டு மீண்டும் வடவாதிக்கு ஓடுவதில் சாமியாத்தாவுக்கு ஒரு வாஞ்சை இருந்தது.
அண்மையில் இப்போது லாலு மாமா வந்து பேசி
விட்டுப் போனது சாமியாத்தாவுக்குக் கொஞ்சம் மனதுக்குத் தெம்பாக இருந்தது. பேச்சு
பேச்சாக நின்று விடுமோ என்ற பயம்தான் அதைத் திட்டையை நோக்கி அடிக்கடி வர வைத்துக்
கொண்டிருந்தது. எப்படியாவது திரியைக் கொளுத்தி
விட்டு, தூண்டி விட்டு கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்பதில் அது குறியாக இருந்தது.
சாமியாத்தாவுக்குத் தெரியும், அம்மா அப்படிப் பேசினாலும் காரியத்தில் கண்ணாய் இருந்து
முடித்துக் கொடுத்து விடும் என்று. இருந்தாலும் தன் பங்குக்குத் தான் செய்ய வேண்டிய
கடமையை விட்டு விடக் கூடாது என்பதற்காக இப்படி அவ்வபோது வந்து ஒரு சத்தம் கொடுத்து
விட்டுப் போகும். அத்தோடு மட்டுமில்லாமல் செய்யுவை வந்துப் பார்த்து கட்டிப் பிடித்துக்
கொஞ்சி விட்டுப் போவதில் அதுக்கு ஓர் அலாதியான திருப்தி இருந்தது.
குமரு மாமாவுக்கு லாலு மாமா வந்து பேசி
விட்டுப் போன சங்கதி தெரிய வந்ததும் அதுக்கு அது நல்ல யோசனையாகவே பட்டது. அதை விட
முக்கியமாக வீயெம் மாமாவுக்குக் கல்யாணத்தைப் பண்ணி விட்டு அதைச் சீக்கிரம் வெளிக்கு
அனுப்பி அப்படியே வைத்தி தாத்தாவையும், சாமியாத்தாவையும் வீயெம் மாமாவிடம் தள்ளி விட
வேண்டும் என்ற கணக்கும் அதற்கு இருந்தது.
வீட்டை விட்டு வீயெம் மாமாவைக் கிளப்பி
விடத் தோதாக வந்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதென்ற தீர்க்கமான முடிவுக்கு
வந்த பின் குமரு மாமா, தன் வீராப்பையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு அப்பாவைப் பார்க்க
வந்தது.
*****
No comments:
Post a Comment