26 May 2019

தேர்தல் முடிவுகளும் தவித்த வாய்க்கு மீத்தேன் குடித்தலும்



            2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொருத்த வரையில் தமிழ்நாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் வித்தியாசமானா தேர்தல் முடிவுகள்தான். இந்தியா முழுவதும் ஒரு திசையில் வாக்களித்திருக்க, தமிழ்நாடு மட்டும் தனித்த திசையில் வாக்களித்திருக்கிறது. தனது வித்தியாச எதிர்ப்பை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியாகவும், தனது வித்தியாச ஆதரவை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு மாதிரியாகவும் பதிவு செய்திருக்கிறது. இதைத்தான் நாமக்கல் கவிஞர்,
            தமிழன் என்றோர் இனமுண்டு
                        தனியே அவர்க்கொரு குணமுண்டு
            என்று பாடியிருக்கிறார் போலும். ஆனாலும் இப்படி ஒரு தனியான குணமா நம் தமிழருக்கு என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
*****
            இருக்கின்ற தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. புதிதாக தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்காமல் இருந்தால் போதாதா?
            குளம், குட்டையெல்லாம் தூர்த்தாயிற்று. மழைநீர்ச் சேகரிப்பு என்ற பெயரில் செய்து வைத்த பிளாஸ்டிக் குழாய்கள் எல்லாம் பல்லை இளித்துக் கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக தெறிக்க விடலாமா? என்கிற ரீதியில் தெறித்தக் கிடக்கின்றன.
            கஜா புயலுக்குப் பின் மழை மேகத்தைக் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக இருக்கிறது நிலைமை.
            மக்கள் தண்ணீருக்காக அல்லாடித்தான் போகிறது. சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் போல் ராவும், பகலும் வண்டியில் கலர், கலர் குடங்களைக் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கின்ற மக்களைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது.
            இப்படியே விட்டால் கூட இந்தத் தண்ணீர் பஞ்சத்தைச் சமாளித்துக் கொண்டு எப்படியோ இந்தச் சனம் உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்த விடும். சரியாகச் சொல்வதென்றால் இந்தத் தண்ணீர் பஞ்சத்தைச் சமாளிக்க யாரும் எதுவும் செய்யா விட்டாலும் கூட மக்கள் சமாளித்துக் கொள்ளும்.
            ஆனால்...
            இந்தத் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல்...
            இருக்கின்ற தண்ணீரையும் ஹைட்ரோ கார்பனுக்கான குழாய்களைப் போட்டு உறிஞ்சினால்...
            பாவம் இந்த மக்கள் என்ன செய்யும்?
            தங்கள் உயிரை உறிஞ்சுவதைப் பரிதாபமாய்ப் பார்த்து நின்று உயிரை விடுவதைத் தவிர பாவம் இந்த மக்களுக்கு என்ன தெரியும்?
            தவித்த வாய்க்குத் தண்ணீர்த் தராத கர்நாடக்காரனை விட, தவித்த வாய்க்கு ஏதோ கொஞ்சம் எஞ்சியிருக்கும் தண்ணீரையும் ஹைட்ரோ கார்பன் குழாய்களைப் போட்டு உறிஞ்ச வைக்க துணை நிற்கும் தமிழ்நாட்டுக்காரன் மோசம்தான் இல்லையா!
            அடப் பாவி மக்கா! ஹைட்ரோ கார்பனைக் குழாய் போட்டு உறிஞ்சி எடுத்து தவித்த வாய்க்கு மீத்தேனையா குடிக்க முடியும்?
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...