செய்யு - 97
"ன்னடா இது ஒருநாளும் ல்லாத திருநாளா
இருக்குது!" என்றது அம்மா.
குமரு மாமா எதிரே நின்று கொண்டிருந்தது.
"ல்லாம் செளரியமா இருக்கீங்களா?"
என்றது குமரு மாமா.
"ஏம்டாம்பி! இப்பதாம் ஒம்ம வூட்டுக்காரி
வூட்டுக்கு அனுப்பி செளரியமா ல்லியான்னு கேட்க சொன்னதாக்கும்? நீயி வந்து பாக்காதது
ஒன்னுதாம்டாம்பி குறையா இருந்துப் போச்சுதாக்கும்!" என்றது அம்மா.
"வாங்கம்பி! பெரியம்பிய ஒண்ணும் சொல்லாதே!"
என்றது அப்பா.
"ம்ஹூம்! காரியம் ஆகணும்னா அத்தாம்னு
வந்து நிப்பாம். ல்லே அத்து வுட்டுட்டு அம்போன்னு போன்னு நிப்பாம்!" அம்மாவின்
குத்தல் அதிகமாகவே இருந்தது.
குமரு மாமா ஒன்றும் சொல்லாமல் நின்றது.
என்ன சொல்வதென்று ஒரு யோசனை அதன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிப்
பார்வையைச் சுழல விட்டது. அது பேசுவதற்கு தோதான இடம் கிடைத்து விட்டது போலிருந்தது.
விகடுவும், செய்யுவும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. போர்வையைச் சுருட்டிப் போர்த்தியபடிப்
பாயில் படுத்துக் கிடந்தனர். மணி காலை ஆறரை ஆகியிருந்தது.
"என்னத்தாம்! வூடு இப்படிக் கெடக்குது?
நீங்க பண்றது ரொம்பத் தப்புத்தாம்! புள்ளீங்க போன போக்குக்கெல்லாம் போவக் கூடாது.
பாத்தீங்களா வூடு எப்புடி ஆயிப் போச்சுத்து அத்தாம்!" என்றது குமரு மாமா.
"என்னம்பி பண்றது? பயலுக்காகப் போனது.
இப்படி ஆயிப் போச்சுது. ஓட்டு வூடா எடுத்துக் கட்டிடலாம்னு யோசன ஓடிட்டு இருக்குதும்பி!"
என்றது அப்பா.
"என்னத்தாம் இந்தக் காலத்துல போயி
ஓட்டு வீடு? மாடி வீடாவே எடுத்துக் கட்டிபுடணும்த்தாம்!"
"அவ்வளவுக்கு தம்புடி பத்தாதும்பி!"
"ரண்டு லட்சம் போதும்தாம்! அறுநூறு
ஸ்கொயர் பிட்ல வூட்டக் கட்டி முடிச்சு குடி போயிடலாம்த்தாம்!"
"ரண்டுக்கு தம்புடி எங்கப் போறதும்பி?"
"நம்ம சிங்காரவேல் கொத்தம் மகேம்
குமாரசாமி இருக்காம்! கூட கொறச்ச பாப்பாம். வூட்டு நெல, சன்னல், சென்ட்ரிங் அடிக்கிறதல்லாம்
நாம்ம பாக்கிறேம். பாத்து சிக்கனமா ஒன்றரைக்குள்ளார முடிச்சிடலாத்தாம். வூட்டக் கட்டிட்டு
உள்ள வந்துட்டா வெளிப்பூச்சல்லாம் கொஞ்சம் முன்ன பின்ன பாத்துக்கலாத்தாம்!"
"இப்போ இருக்குற நெலமயில ஒண்ணுதாம்
பொரட்டலாம். அதுக்கும் சொசைட்டி லோனு போடணும்பி. எண்பதாயிரத்துக்கு மேல கொடுக்க
மாட்டாம். அதுக்கு மேல எம்ம பி.எப். கணக்குல பார்ட் பைனல் போட்டு கொஞ்சம் எடுக்கலாம்.
அப்படி இப்பிடின்னு பாத்தாக்கக் கூட ஒண்ணேகால தாண்டாது போலருக்கேம்பி!"
"நீங்க தோது பண்ணுங்கத்தாம்! பாத்துக்கலாம்த்தாம்!
வூட்ட எடுத்துக் கட்டிப்புடணுத்தாம்!"
"இந்தாருங்க! இவ்வேம் பேச்சக் கேட்டுட்டுலாம்
ஆடாதீங்க! இவ்வேம் பொண்டாட்டிப் பேச்ச கேட்டுட்டு ஆடுற பயே. அவ்வே அங்க ஏதாச்சும்
சொன்னாள்னா இவ்வேம் இங்க வேலயப் போட்டுட்டு ஓடிடுவாம்! வெனை நமக்குதாம்!" என்றது
அம்மா.
"ச்சும்மா இருக்கா! அவ்வே நம்ம வேலயிலல்லாம்
தலயிட மாட்டா. வூட்ட முடிச்சுக் கொடுக்க வேண்டிது நம்ம பொறுப்புக்கா!" என்றது
குமரு மாமா.
"ன்னடா திடீர்னு அத்தாம், அக்கா மேல
கரிசனம் வந்துக் கெடக்கு? ஊர்ல யாரு குடுமியும் ச்சும்மா ஆடாதுடாம்பி!"
"ஒவ் வாயுதாம்க்கா எல்லாத்தியும்
கெடுக்குது. வாய வெச்சிட்டு சித்த சும்மா இருக்கா! நல்ல வெசயம் பேசறப்ப முறிச்சுப்
போடற மாரி!"
"நீஞ் சொல்றதும் சரிதாம்! கடேசி
வரிக்கும் இப்படியே இருந்துட்டா நல்லதுதாம்! இருக்கணுமே ஏம் உஞ்சின ஐயனாரே! இவ்வேம்
தேவன்னா வருவாம். இல்லேன்னா வெரட்டுவாம். நாம்ம எந்தப் பக்கம் நம்ம புத்தியக் கொண்டு
போயி வெச்சுக்கிறதோ ஏஞ் தஞ்சாரூ மாரியே!" என்றது அம்மா.
"சொல்றேன்னு வெசனப்பட்டுக்காதக்கா!
குடும்பம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தாம் இருக்கும். அதுக்காவ நீயி எனக்கு அக்கா ல்லேன்னு
ஆயிடுமா? நாம்ம ஒமக்கு தம்பியில்லேன்னு ஆயிடுமா? அத்தாம்தாம் அத்தாம் இல்லேன்னு ஆயிடுமா?
நாமதாம் அத்தாமுக்கு மச்சாம் ல்லேன்னு ஆயிடுமா? அப்பாரு அங்க நாள எண்ணிட்டு கெடக்குறாரு.
ஒரு கடமேதாம் அவருக்குப் பாக்கி. சின்னவனுக்குக் கல்யாணம் பண்ணிப் பாத்துட்டா கொறயில்லாமப்
போயிச் சேர்வாரு. அதுக்குதாம் ஓடியாந்தேம்!" என்றது குமரு மாமா.
"அத்தேப் பேச வந்ததுக்குதாம்டா நல்ல
மரியாதி பண்ணி அனுப்புனீங்க! தேவன்னா அத்தான தொட்டுப்பீங்க! தேவல்லன்னா அத்தான விட்டுப்பீங்க!
ஒங்க கதெ தெரியாதுன்னா நெனச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டது அம்மா.
"இந்தாரு நீயி போயி தம்பிக்கு டீ
போட்டுக் கொண்டா?" என்றது அப்பா. அதற்கு மேல் அம்மாவைப் பேச விடுவதில் ஆகப்
போவது எதுவுமில்லை என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
"இதுக்கொண்ணும் கொறச்சலில்ல. நியாயத்தக்
கேட்டா இந்தாப் போங்கறது? அந்தாப் போங்கறது? தோரணயெல்லாம் இப்பதாம் வாரும். இப்படியே
நம்ம வாயக் கட்டிக் கட்டி கெடசியில வெசனப்பட்டு நிக்குறது! ல்லாம் நாம்ம வாங்கி வந்த
வரம். நம்ம தலயில எழுதிருக்குற தலயெழுத்து!" என்றபடி அம்மா டீ போட உள்ளே சென்றது.
"லாலு மாமா வந்துட்டுப் போச்சுதுத்தாம்!
வெசயமெல்லாம் கேள்விப் பட்டோம் அத்தாம்! பாத்து முடிச்சு வுட்டுடுங்கத்தாம். குடும்பத்த
சமாளிக்கிறத கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு நாளும் நெருப்பு நிக்குற மாரி போகுது. அவனுக்கும்
வயசாயிட்டே போகுது. ஒரு குடும்பம்னா ஆனா ந்நல்லா இருக்கும்த்தாம். அவனெ வெளிநாடு அனுப்புறதுக்கும்
ஏற்பாடு பண்றேம்த்தாம். பணம் சம்பாதிச்சு அனுப்புனா பக்கத்துலயே வூட்டயும் கட்டிக்
கொடுத்திடறேம்த்தாம். நீங்க பேசுனத்தாம் அத்தாம் இது செரிபட்டு வரும். அதாங் ஓடியாந்தேம்!
பாத்து சின்னபயலுக்கும், குயிலிக்கும் கல்யாணத்த முடிச்சி வுட்டுறங்கத்தாம்!"
என்றது குமரு மாமா மூச்சு விடாமல்.
"நமக்கும் கடெம இருக்குல்லம்பி. வுட்டுட
முடியுமா? ரொம்ப நாளாவே மனசுல ஓடிட்டு இருக்குற இத்தாம்பி. ஒண்ணு வூட்ட பத்தினது.
இன்னொன்னு சின்னம்பி கல்யாணத்த பத்தினது. நாம்ம அங்க வாரலய தவுர ச்சும்மா இருக்கலம்பி!"
என்றது அப்பா.
"நமக்கு தெரியாததாத்தாம்! அப்படிலாம்
வுட்டுப்புடற ஆளாத்தாம் நீங்க? இன்னொரு வாட்டி நீங்க போயி லாலு மாமாவ பாத்து பேசிட்டு
வந்தாச்சுன்னா ஜோரா போயிடும். நம்ம பக்கத்துலேந்தும் ஒரு தபா வார்த்த சொல்லணும்லத்தாம்.
நாம்ம போயி பாக்கறத விட நீங்க போயி பேசுனாத்தாம் செரியா இருக்கும். மருமொவனா நீங்க
வந்ததுக்கு அப்புறம் நம்ம வூட்டுக் கல்யாணத்த முன்னாடி நின்னு நடத்திட்டு வாரது நீங்கதாம்.
அதாஞ் சொல்றேத்தாம்!" என்றது குமரு மாமா.
அப்பாவின் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு
வந்து உட்கார்ந்து கொண்டது. "அப்டியே செஞ்சு புடலாம்பி. நாம்ம ஒங்க கூட்டாளி
மாணிக்கநாயகத்த அழச்சிட்டுப் போயி பேசிடறேம்பி!" என்றது அப்பா.
"அவ்வேம் வேணாம்த்தாம்! முன்ன மாரியில்லத்தாம்
அவ்வேம்! அரசியல் அது இதுன்னு எறங்கிக் கெட்டுப் போயிட்டு இருக்காம். நீங்களும் அக்காவுமே
போதும்த்தாம்!" என்றது குமரு மாமா.
"என்னம்பி இப்படிச் சொல்லிபுட்டீங்க?
அரசியல்ல இருந்தா ன்னா? மரியாதில்ல அந்தம்பிய ஒங்களால கூட அடிச்சிக்க முடியாதும்பி!
நம்ம வூட்டு காரியம் எல்லாத்துலயும் முன்னாடி நின்னுருக்கும்பி மாணிக்கநாயகம்! அப்படி
நின்னதுல்ல அஞ்சி காசி பிரயோசனம் இருந்துருக்கும்மாம்பி அதுக்கு?"
"அதுலாம் செரிதாத்தாம்! இல்லேங்கல.
ஏத்தோ மனசுல பட்டத சொன்னேம். ஒங்க விருப்பத்தாம்த்தாம். நாங்க சின்னபுள்ளீங்க. வரமொற
அவ்வளவு தெரியாதுலத்தாம்!" என்றது குமரு மாமா.
"நாளிக்கி நாளு..." என்று அப்பா
காலண்டரை எடுத்துப் பார்த்தது. "நாளு கூட நல்லாத்தாம் இருக்கும்பி. காத்தலா நேரங்
கூட நல்லாத்தாம்பி இருக்கு. காத்தாலயே நாம்ம மாணிக்கநாயகத்தப் புடிச்சிக் கொண்டுட்டுப்
போயிடறேம்பி!" என்றது அப்பா.
"ரொம்ப சந்தோஷமா இருக்குத்தாம்!
வுட்டுக் கொடுத்துட மாட்டீங்கன்னு தெரியும்த்தாம். நாங்க ஏத்தாச்சும் அறியாம கொள்ளாமல
பேசியிருந்தாலோ, செஞ்சிருந்தாலோ மனசுல வெச்சிக்கக் கூடாதுத்தாம்!" என்றது குமரு
மாமா.
இதைக் கேட்டதும் அப்பாவுக்குக் கண்கள்
கலங்கி விட்டன.
அதற்குள் அம்மா டீயைப் போட்டுக் கொண்டு
வந்தது. குமரு மாமா டீயை வாங்கிக் குடித்தது. குடித்து முடித்ததும், "நாம்ம கெளம்புறம்
அத்தாம்! கெளம்புறம் அக்கா! சோலி வேற கெடக்கு!" என்றபடி வாசலுக்குச் சென்று சைக்கிளில்
ஏறி ஒரு காலை ஊன்றி நின்றது.
"அப்புறம்த்தாம் வூட்ட எடுத்துக்
கட்டுறத மறந்திடாதீங்க. யோசிச்சு வையுங்க." என்றபடி பெடலை மிதித்து சைக்கிளில்
நகர ஆரம்பித்தது குமரு மாமா.
"எங்க கொக்கியப் போட்டு எப்படிக்
காரியத்த முடிக்கிறாம் பாருங்க. ஒங்களுக்கு வருமா இந்தத் தெறம? ஏத்தோ நாட்டுல நல்லது
நடந்தா சரித்தாம்!" என்றது அம்மா.
"ஆம்மாம்! அது கெடக்குது போ! இந்தக்
காலத்துப் புள்ளீங்க அப்படித்தாம்! ன்னத்தா பண்ணித் தொலயறது? இந்த அளவுக்காவது இருக்குதுங்களேன்னு
நெனச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுத்தாம். நாளிக்கு காத்தால வெரசா கெளம்பி மாணிக்கநாயகத்தப்
பிடிச்சிக் கெளப்பிட்டுப் போயி சட்டு புட்டுன்ன பேசி முடிச்சிடணும்!" என்றது
அப்பா.
"மாணிக்கநாயகம்! அவனத்தேம் பிடிச்சிட்டுப்
போவணும். ராசிக்கார பயே. வந்து நின்னாப் போதும். காரியம் மின்னல் கணக்கா முடிஞ்சிடும்!"
என்றது அம்மா.
மறுநாள் கருக்கலில் மாணிக்கவிநாயகத்தைப்
பிடித்து வேற்குடி லாலு மாமா வீட்டிற்குக் கிளப்பிக் கொண்டு போக அப்பா கிளம்பியது.
வழக்கமாக இப்போதெல்லாம் டிவியெஸ் பிப்டியை எடுத்துச் செல்லும் அப்பா, ஏனோ சைக்கிளை
எடுத்துக் கொண்டு கிளம்பியது.
திட்டைக் கடைத்தெருவைத் தாண்டி நத்தம்
செல்லும் சாரியில் சென்றால் நான்கு வீடுகள் தள்ளி மாணிக்கவிநாயகத்தின் வீடு.
மாணிக்கவிநாயகத்தின் வீட்டிற்குச் செல்ல
வேண்டிய அவசியமில்லாமல், கடைத்தெருவிலேயே மாணிக்கவிநாயகத்தைப் பார்த்த அப்பாவின் முகத்தில்
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனது.
கடைத்தெருவே கலவரமாய் இருந்தது. கூட்டம்
பெருங்கூட்டம். கூட்டத்துக்கு நடுவே மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்ட சொட்ட கடைத்தெரு
முக்கத்தில் தள்ளாடியபடியே நின்றது.
*****
No comments:
Post a Comment