3 Jun 2019

அதோ அந்த இடத்தில் ஒரு பட்டறை!



செய்யு - 104
            இனி வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்க வேண்டாம் என்ற முடிவுக்குக் குமரு மாமா வந்திருந்தது. திட்டையில் ஒரு மரம் அறுக்கும் வாள்பட்டறை இருந்தது. இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிக்கு அப்போது இழைப்புப் பட்டறை மட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் மரம் இழைக்க கூத்தாநல்லூருக்கும், கமலாபுரத்துக்கும், திருவாரூக்கும் மர ஆசாரிகள் போய்க் கொண்டிருந்தனர். ஓர் இழைப்புப் பட்டறை ஆரம்பித்தால் எல்லா மர ஆசாரிகளும் இங்குதான் வருவார்கள் என்று யோசித்தது குமரு மாமா. யோசித்ததுடன் அப்பாவிடமும் யோசனை கலந்து கொண்டது.
            "எழப்புப் பட்டறையோடு அப்படியே தச்சுப் பட்டறையும் வெச்சா ந்நல்ல ஓட்டம் ஓடும்பி! ந்நல்ல யோசனதாம்பி. அண்ணணும் தம்பியும் சேந்துகிட்டா இந்த வட்டாரத்துல ஒங்கள அசைக்க யாருமில்லம்பி!" என்ற அப்பாவுக்கு குமரு மாமாவின் யோசனைப் பிடித்துப் போய் விட்டது. அப்படி இழைப்புப் பட்டறை வைக்கும் வகையில் ஒரு தோதான இடமும் இருந்தது.
            பொன்னியம்மன் கோயிலின் பக்கத்தில் கடைத்தெருவில் வைத்தி தாத்தா ஓர் இடம் வாங்கிப் போட்டிருந்தது. அந்த இடம் திட்டையில் இடம் வாங்கி குடி வருவதற்கு முன் அப்பாவுக்கு வந்த இடம். வெம்புலிங்கம் மாவளியாரின் இடம் அது. கடைத்தெருப் பாக்கத்தில் இருந்ததால் முக்கியமான இடமாக இருந்தது.
            மாவளியார் பெரும் தோதில் இருந்தவர். வாழ்ந்து கெடும் நிலைக்கு வந்து விட்டார்.  அதற்கு மேல் வடவாதியில் இருக்க விருப்பமில்லாமல் இருப்பவைகளை விற்று விட்டு ஊர் மக்களின் பார்வை படாமல் மன்னார்குடி பக்கம் போகும் முடிவில் இருந்தார்.
            மாவளியார் வாத்தியார்களில் ஒருவரைப் பழக்கம் வைத்துக் கொண்டு அவர் மூலமாகத்தான் கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொள்வார். அப்படி வடவாதி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்த சந்திரசேகர் வாத்தியார் மூலம் கணக்கு வழக்கு எழுதி வைத்துக் கொண்டிருந்தார் மாவளியார். சந்திசேகர் வாத்தியார் டிரான்ஸ்பர் ஆகி லெட்சுமாங்கடிப் பக்கம் போனது போது அப்பாவை அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டுப் போயிருந்தார்.
            அப்பாவின் கையெழுத்து அப்படியே அச்செடுத்தது போலிருக்கும். யோசனைகளும் நிதானமாக இருக்கும். இது மாவளியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. அத்துடன் அப்பாவுக்கு பணத்தேவை ஏற்பட்ட போதெல்லாம் கைமாத்தாக பணம் கொடுத்து உதவவும் செய்தார் மாவளியார். அதை எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்து கணக்கை நேர் செய்து கொள்ளும் அப்பா. இதனால் அப்பா மேல் மாவளியாருக்கு தனிப் பிரியம் இருந்தது.
            அவர் மன்னார்குடிக்கு ஜாகையாகப் போவது என்ற முடிவுக்கு வந்ததும் தன் வசம் கடைசியாக எஞ்சியிருந்த வயல்கள், மனைகள் எல்லாவற்றையும் விற்கும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பாவை வைத்துதான் அந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். எல்லா இடங்களையும் ஏகத்துக்கும் பெரும்புள்ளியாகப் பார்த்து விற்ற அவர், பொன்னியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த மனையை மட்டும் அப்பாவை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அப்பா தயங்கியது. "ஒங்ககிட்ட பணம் இல்லேங்றது தெரியும் வாத்தியாரே! மனையைப் பேர் மாத்தி வுட்டுடுறேம். தோதுபட்டப்போ நீங்க கொடுக்கலாம்! ன்னாச் சொல்றீங்க?" என்றார் மாவளியார்.
            "அது மொறையில்லீங்க! பணத்தைக் கொடுத்ததுக்கு அப்புறந்தாம் பேர் மாத்தி வுடுவாங்க. பழக்கவழக்கங்றது வேற. கொடுக்கல் வாங்கல்ங்றது வேற. நாம்ம கொஞ்சம்‍ யோஜனப் பண்ணிக்கிறேம்!" என்றது அப்பா.
            "ன்னா வேணா யோஜனப் பண்ணிக்கிங்க. அந்த எடம் ஒங்களுக்கத்தாம். முடிவு பண்ணிட்டேம். அப்படி வாங்கிக்கலேன்னா ப்ரீயா கொடுத்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேம். இந்த முடிவுல மாத்தமில்ல பாத்துக்குங்க. நாளிக்குள்ள யோஜனப் பண்ணி நல்ல முடிவா சொல்லுங்க!" என்றார் மாவளியார்.
            அப்பா வைத்தி தாத்தாவுடன் யோசனைக் கலந்தது. "அந்த எடத்தை நமக்கு வாங்கிக் கொடுங்களேம். ஒங்ககிட்டதாம் காசிமில்ல, ஒண்ணுமில்ல. அதுக்கு ஏம் ஆசப்படுறீங்க? பின்னாடி ஒரு காலத்துல பயலுவோ ஏதோ கட கண்ணி வெச்சிப் பொழச்சுப்பாங்க பாருங்க!" என்றது வைத்தி தாத்தா. வைத்தித் தாத்தா காசுமில்லை, ஒன்றுமில்லை என்று சொன்னதில் அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தந்தாம். இருந்தாலும் மச்சான்காரர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு காரியத்தில் இறங்குவது என்று முடிவு செய்து கொண்டது.
            அப்பா மாவளியாரைப் பார்த்து விசயத்தைச் சொன்னது. மாவளியார் சிரித்துக் கொண்டே சொன்னார், "வாத்தியாரே ஒங்களுக்குன்னா சொல்லுங்க! வேற யாருக்கும் அது ஒங்க மாமனாராவே இருந்தாலும் கொடுக்குறதாயில்ல."
            மாவளியார் பிடிவாதக்காரர். ஒரு முடிவு எடுத்து விட்டால் அவரை மாற்ற முடியாது. அதனால் அந்த இடம் அப்பாவுக்கு வாங்குவது போல வாங்கி மூன்று மாதங்கள் கழித்து வைத்தி தாத்தாவின் பேருக்கு மாற்றப்பட்டது. அப்படி வந்த இடம்தான் பொன்னியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த கடைத்தெரு இடம்.
            அந்த இடத்தில் தன்னுடைய யோசனைப்படியே, ஒரு பக்கா கட்டிடம் கட்டி அதை இரண்டாகத் தடுத்து கீழண்டைப் பக்கம் இழைப்புப் பட்டறையும், மேலண்டைப் பக்கம் தச்சுப் பட்டறையும், தச்சு வேலைக்குத் தேவையான சாமான்கள் விற்கும் கடையுமாக ஆக்கியது குமரு மாமா. இதில் எல்லாவற்றிலும் அப்பாவின் யோசனையும் கலந்திருந்தது என்றாலும், அண்ணனும் தம்பியுமாக பட்டறையை நிர்வகிக்கும் யோசனையை மட்டும் புறந்தள்ளியிருந்தது குமரு மாமா. அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னது குமரு மாமா, "அது வந்துங்கத்தாம்! நாம்ம பட்டறையில இருந்துக்கிறேம். அவ்வேம் வெளிவேலையப் பாத்துக்கிடட்டும். பட்டற வேலயில அவ்வேம் தலயிட வாணாம். அவ்வேம் வெளிவேலயில நாம்ம தலயிட வாணாம். நாளிக்கு ஒண்ணா வேல பார்த்து ஒருத்தொருக்கொருத்தர் மனத்தாங்கல் வந்துப்புடப் படாதுன்னு பாக்கிறேம்!" அப்பாவுக்கு இந்த யோசனை மட்டும் பிடிக்கவில்லை என்றாலும் அதற்கு மேல் ஒன்றும் குமரு மாமாவிடம் சொல்ல முடியவில்லை.
            பக்கா கட்டிடம் கட்டுவதில் தொடங்கி, இழைப்பு மெஷின் வாங்குவது வரை அப்பா குமரு மாமாவுடன் அலையோ அலையென்று அலைந்தது. இதில் குமரு மாமாவுக்கு பரம திருப்தி.             "நீங்க மட்டுமில்லேன்னா அன்னிக்கு இந்த எடத்தையும் வாங்கியிருக்க முடியாது. வாங்குன இடத்துல இன்னிக்கு பட்டறையும் போட்டிருக்க முடியாது! அதே மாரி இந்த மணிப்பய கல்யாணத்தயும் முடிச்சிட்டீங்கன்னா ந்நல்லா இருக்கும்!" என்றது குமரு மாமா. இப்படி இடம் வாங்கி, பட்டறை வைத்துக் கொடுத்ததில் பக்கத்துணையாக அப்பா இருந்ததால், பதிலுக்குக் குமரு மாமாவுக்கும் அப்பாவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது. அப்படி உதவுவதன் மூலம் மணி மாமா எனும் வீயெம் மாமாவின் கல்யாணத்தையும் அப்பாவின் தோதில் முடித்து விட வேண்டும் என்ற கணக்கும் குமரு மாமாவுக்கு இருந்தது.
            அதற்குத் தகுந்தாற் போல் நேரமும் தோதுபட்டு வந்தது.
            ஒரு கட்டத்துக்கு மேல் இனியும் பராமரிப்புப் பணிகள் செய்து வீட்டைத் தூக்கி நிறுத்த முடியாது எனும் நிலையில் அப்பா வீடு கட்டுவது என்ற முடிவுக்கு வந்தது. மாடி வீடாகக் கட்டுவது என்பது தன் சக்திக்கு மீறிய ஒன்று என்பது அப்பாவுக்குப் புரிந்திருந்தது. எந்த அளவுக்கு வீட்டைச் சிக்கனமாகக் கட்ட முடியும் என்ற யோசனை அப்பாவின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
            வழக்கமாக மாடி வீடு கட்டிக் கொண்டிருந்தவர்கள் அப்போதெல்லாம் எண்ணூறு சதுர அடிக்கு குறையாமல் கட்டிக் கொண்டிருந்தனர். கட்டப் போகும் வீட்டை எண்ணூறு சதுர அடியிலிருந்து அறுநூறு சதுர அடியாக ஆக்கிக் கொண்டது அப்பா. குமரு மாமாவிடம் இது குறித்துச் சொன்ன போது அது அறுநூறு சதுர அடிக்கு ஒப்புக் கொள்ளவில்லை. "எண்ணூறாவே போடுங்க அத்தாம்! எப்படியும் முடிச்சிடலாம். முடிச்சுக் கொடுக்குறதுக்கு நாம்ம பொறுப்பு!" என்றது.
            "இத முடிக்கிறதே கஷ்டந்தாம்பி! கொஞ்சம் உள்ளுக்கு மட்டும் பூசிட்டு குடி போயிடலாம்னுதான்னுதாம் ஆரம்பிக்கிறேம்!" என்றது அப்பா.
            "கட்டுறது கட்டுறீங்க! வருஷா வருஷமா வூடு கட்டப் போறீங்க அத்தாம்! ஒரு தடவத்தானே! அதாஞ் சொன்னேம் அத்தாம்! எண்ணூறுக்கே போட்டுக்குவோம் அத்தாம்! பாத்துக்கலாம்!" என்றது குமரு மாமா.
            "அகலக்காலு வெக்கிறது மாரி ஆயிடும். வேணாம்பி. நமக்கு அறுநூறே பெரிசுதாம்பி. அது போதுங்றேம். ஊரு வழக்கே சிறுகக் கட்டிப் பெருக வாழ்ங்றதுதாம்பி! மனை போடுறது முக்கியமில்லே! மனையப் போட்டு கட்டி முடிச்சுபுடணும். ஆரம்பிச்சு அப்படியே வுட்டுடக் கூடாது. எத்தினி வூடுகளப் பாக்கிறேம். ஆரம்பிச்சு அஸ்திவாரம் போட்டு அப்படியே கெடக்கும். லிண்டல் வரிக்கும் வந்து அப்படியே கெடக்கு. எண்ணூறுலாம் செரிப்படாதது. அறுநூறு போதும்பி. பாத்து இதச் சிக்கனமா முடிச்சுக் கொடுங்க பாத்துப்போம்!" என்றது அப்பா.
            "அப்பொறம் ஒங்க முடிவுதாம் அத்தாம்! ரொம்ப பயப்படுறீங்க! எண்ணூறு சதுரங்கறதே சின்ன வூடுதாம். அறுநூறுங்றது ரொம்ப சின்னது. ரூம்லாம் துக்னி துக்னியா இருக்கும் பாத்துக்கோங்க. அப்பொறம் வூட்ட முடிச்சதுக்கப்பொறம் இப்படி சின்னதாப் போய்ட்டேம்பினு சொல்லப்படாது. நம்ம மேல கொற வைக்கக் கூடாது. சொல்ல வேண்டியதையெல்லாம் ஆரம்பத்துல சொல்லிடறேம்! நெதானமா யோஜிச்சு முடிவு பண்ணுங்க. இத்தையெல்லாம் போட்டுட்டு ச்சும்மா ச்சும்மா மாத்திட்டு இருக்க முடியாது!" என்றது குமரு மாமா.
            "மாத்தம்லாம் ஒண்ணுமில்லம்பி. வூடு பொட்டிக் கணக்காக சிறுசாத்தாம் இருக்கும். அது போதும்பி. அதுக்கு மேல என்னம்பி கெடக்கு? நம்ம தோதுக்குக் கட்டணுமே தவிர ஆசப்பட்ட தோதுக்கு கட்டப்படாது. சின்னதா கட்டுனாலும் கட்டி முடிச்சு குடிப் போய்ப் புடணும். நீங்கலாம் இருக்குறீங்கற தைரியத்துலதாம் இந்தக் காரியத்துல எறங்குறேம். சொசைட்டி லோனு எண்பதாயிரம், பி.எப். பார்ட் பைனலு ஒரு முப்பதோ, நாப்பதோ, மத்தபடி இருக்குற நகைகள கொஞ்சம் அடகு வெச்சிக்கணும். ஒரு ஒண்ணரைத் தேறும்பி. அதுக்குள்ள முடிச்சாகணும். அதத் தாண்டினிச்சின்னு வெச்சுக்குங்க. சமாளிக்க நம்மகிட்ட தெம்பில்ல."
            "அது போதும்த்தாம்! நீங்க வேற அறுநூறு சதுரம்தாம் சொல்றீங்க! முடிச்சிப்புடலாம்த்தாம்! அப்பொறம் லாலு மாமா மணிப்பய சம்பந்தமா ஏதாச்சும் சொன்னுச்சா? பேச்சே இல்லாம கெடக்கே?"
            "நாமளும் எதுத்தூட்டு தாடியும் முன்னாடியேப் போயிப் பார்த்தோம்பி. பொண்ணுக்கு பிடிக்கலேங்றது. நாம்மப் பேசிச் சரிப்பண்ணிப்புடறேங்றாரு ஒங்க மாமம். அதாங் ஒங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு யோஜிச்சுகிட்டே இருந்திட்டேம்."
            "பொண்ணுங்களப் போயி கேட்டா அப்படித்தாம் அத்தாம் சொல்லும். அத கணக்குல வெச்சிக்கக் கூடாது. லாலு மாமா சொன்னாச் சரிதாம். மேக்கொண்டு வேலய ஆரம்பிச்சிடலாம்த்தாம்."
            "பொண்ணு அதுவாவே வந்து சொல்லுதும்பி. அதாங் யோஜிக்கிறேம்." அப்பா தயங்கித் தயங்கிச் சொன்னது.
            "ஒண்ணும் யோஜிக்க வாணாம். பொண்ணப் பெத்தவரு ன்னா சொல்றாரோ அதாங் அத்தாம் முடிவு. ஒங்ககிட்ட வழவழ கொழகொழன்னு இத்தாம் அத்தாம் பிடிக்க மாட்டேங்குது. சட்டுபுட்டுனு ஒரு வெசயத்தப் போட்டு முடிக்க மாட்டீங்க. ச்சும்மா ஜவ்வு மிட்டாயி மாரி யோஜிச்சு யோஜிச்சு நாலு நாள்ல முடியுற காரியத்த நாலு மாசமா ஆக்கிப் புடுவீங்க! இதுக்கு மேல ஒங்கள வெச்சுப் பேசக் கூடாது. நாம்ம எறங்கி நாமளே பேசி காரியத்த ன்னா வேகத்துல முடிக்கிறேம் பாருங்கத்தாம்!"
            "தம்பிட்ட ஒரு வார்த்த கேட்டீங்களாம்பி!"
            "அவங்கிட்ட ன்னா கேக்குறது? கட்டுடா தாலின்னா கட்டணும். கட்டிக்க தாலியன்னா அந்தப் பொண்ணு கட்டிக்கணும். அதுங்களப் போயி யோஜனக் கேட்டா அப்படி இப்படின்னு, இப்படி அப்படின்னு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிட்டேதாம் இருக்கும். கல்யாணம் ஆயிப் போச்சுன்னா செரியா போயிடும்!" என்றது குமரு மாமா.
            "மாமாட்டேயும் கலந்துட்டு ந்நல்லா யோஜிச்சுக்குங்கம்பி!" என்றது அப்பா மறுபடியும் தயங்கித் தயங்கி.
*****

குழந்தைகள் படிக்கிறார்கள்!



            அட்டைப் போட்டு வைத்திருந்த புத்தகங்கள் அப்படியே இருந்தன. அம்முக்குட்டி டேப்ளேட்டில் படித்துக் கொண்டிருந்தாள்.
            பார்க்க பார்க்க அப்பாவான ஜம்புக்கு ஆற்றாமையாக இருந்தது.
            "புள்ள படிக்கிறத இப்படிப் பார்க்குறீங்களே! கண்ணு பட்டுடப் போவுது!" என்றாள் அம்மாவான ரம்யா.
            "ஏன்டா செல்லக்குட்டி! டேப்ளேட்டுல படிக்கிறதுக்கு எதுக்குடா புத்தகத்துக்கு அட்டைப் போடச் சொன்னே?" என்றான் ஜம்பு.
            "அட்டைப் போடலின்னா மிஸ் அடிப்பாங்கப்பா!" என்றாள் அம்முக்குட்டி.
            "இப்போ அட்டைப் போட்டுக் கொடுத்ததுலதாம் கொறஞ்சுப் போயிட்டீங்களாக்கும்!" என்றாள் ரம்யா.
            "படிக்காத புத்தகத்துக்கு எதுக்குடி அட்டைப் போடோணும்? நல்ல மிஸ்டா பாப்பாகுட்டி ஒங்க மிஸ். அட்டைய மிஸ் பண்ண வுட மாட்டாங்க போலருக்கு!" என்றான் ஜம்பு.
            இதைக் கேட்டு விட்டு, "யானை வாங்கிட்டு அங்குசம் வாங்க யோசிக்கிற மாரில்லா இருக்கு ஒங்க கதெ?" என்றாள் ரம்யா.
            "ஆமாண்டி! ஒவ்வொண்ணும் வெலய பாக்கிறப்போ யானை வெலை, குதிரை வெலையாத்தான் இருக்கு. அதாங் புத்தகத்த யானையின்னும், அட்டய அங்குசமுன்னும் சொல்றியா?" என்றான் ஐம்பு.
            "ஒங்ககிட்ட மனுஷன் பேச முடியுமா?" என்றபடி நகர்ந்தாள் ரம்யா.
            "ஒங்ககிட்ட மனுஷன் படிக்க முடியுமா?" என்றபடி டேப்ளேட்டில் பாடத்தைக் க்ளோஸ் செய்து விட்டு, அதில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள் அம்முக்குட்டி.
*****

2 Jun 2019

கட்ட அடிக்கிறவன கட்டிக்க முடியா!



செய்யு - 103
            வீயெம் மாமாவுக்குக் குயிலியைக் கேட்கப் போயி அப்பா சைக்கிளைப் பறிகொடுத்தது அவரளவில் மிகப் பெரிய சகுனத்தடையாகப் பட்டது. கேட்பதா? வேண்டாமா? என்று இரண்டு பக்கமாக யோசித்து பலவாறாக அப்பா குழம்பிக் கொண்டிருந்தது. லாலு மாமா தானே வந்து கேட்டு விட்டதால், வைத்தி தாத்தா தரப்பிலிருந்து வரும் பதிலுக்காகக் காத்திருந்தது.
            நமது சமூகத்தில் திருமணத்தை முடிப்பதற்குள்ளான சடங்குகள் நிறையதாம். நேரடியாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். பதில் எப்படி வருகிறது என்பதை ஒருத்தர மாற்றி ஒருத்தரை விட்டு நூல் விட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி நூல் விட்டுப் பார்ப்பதில் ஒரு மாமாங்கமே ஆனாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். விட்ட நூலுக்குப் பதில் நூல் வர வேண்டும் அவர்களுக்கு. ஒரு பதில் கிடைக்கும் வரை அந்தப் பதிலை மறைமுகமாக எப்படியெல்லாம் பெறலாம் என்று பார்ப்பார்களே தவிர, நேரடியாகப் பார்த்துக் கேட்டு விட மாட்டார்கள். அதை ஒரு நாசுக்காகக் கையாள்வார்கள். அந்த நாசுக்கு இரண்டு தரப்புக்குமான ஈகோவை இப்படியும் அப்படியுமாக மாற்றி மாற்றிச் சமன்செய்து கொண்டே இருக்கும்.
            நேரடியாக குமரு மாமாவே பேசி விடக் கூடிய எளிய விசயம்தான் இது. தானே சென்று கேட்டால் கல்யாணச் செலவுகள் பலவற்றைத் தானே ஏற்க நேரிடுமோ என்ற அச்சம் அதன் உள்மனதில் இருந்தது. அந்த அச்சத்திற்காகத்தான் அது அப்பாவைப் பயன்படுத்தியது. மேலும் நேரடியாகச் சென்று கேட்பதில் ஒரு கெளரவம் பார்ப்பார்கள். யார் மூலமாக நூல் விடுகிறார்களோ அவர்கள் மூலமாக ஒரு நல்ல பதில் கிடைக்கும் போது கெத்தாக போய் நின்று அடுத்தகட்ட விசயங்களைப் பேசுவார்கள். அடுத்தகட்டத்திற்கு நகரும் வரை நூல் விடப் பயன்படுத்தியவர்களை நூலைப் போல சிக்குப் பிடித்து விடும் நிலைக்கு ஆளாக்கி விடுவார்கள். நூல் விட யாரை அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறார்களோ அவர்களுக்கு உலகத்தையே எழுதி வைத்து விடுவதைப் போல பேசுவார்கள்.
            அப்பாவுக்கு ஆரம்பம் சரியில்லையே என்ற கவலை மனதைப் போட்டு அரித்தது. குமரு மாமாவும் அவ்வபோது வந்து லாலு மாமாவைக் கேட்க வேண்டும் என்று நூல் விடச் சொல்லிக் கொண்டே இருந்தது. குமரு மாமாவுக்கும் கூட கல்யாணம் விசயம் பேசப் போய் ரத்தம் சொட்ட சொட்ட மாணிக்கநாயகத்தைப் பார்த்ததும், சைக்கிளைப் பறி கொடுத்ததுமான சம்பவங்கள் மனதை நெருடிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் எப்படியாவது காரியம் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையும் அதற்கு இருந்தது.
            லாலு மாமா அடிபட்டுக் கிடந்த போதுதான் அம்மா குயிலியின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சை எடுத்தது. வைத்தித் தாத்தாவின் அந்திமக் காலப் படுக்கையில் வைத்துதான் லாலு மாமாவும் குயிலியின் கல்யாணத்தைப் பற்றிப் பேசியது. லாலு மாமாவிடம் அது குறித்துப் பேச போன போதுதான் மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்டச் சொட்ட நின்றதும், அப்பா சைக்கிளைப் பறிகொடுத்ததும். இப்படி நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாரததுதான் என்றாலும் அதற்கு ஒரு கோர்வை கொடுத்து காரண காரியத் தொடர்பு கற்பித்து மேற்கொண்டு கல்யாண விசயத்தைப் பேசுவதில் ஓர் இழுபறியை உருவாகிக் கொண்டேயிருந்தது.
            அவ்வபோது வந்துப் பேசிச் செல்லும் தாடி தாத்தாதான் இந்த இழுபறிக்கும், தாமதத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. "வாத்தியாரே! கல்யாணங்றது ஆயிரங் காலத்துப் பயிரும்பாங்க! அத ஆரம்பிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆயிரெத்தெட்டுத் தடைங்க வரத்தான் செய்யும். பெரியவங்க நாமதான் அதையெல்லாம் அனுசரிச்சுக் கொண்டு போவணும். ஒரு கல்யாணம் நடத்தி வைக்கிறது ரொம்ப பெரிய புண்ணியம் இல்லியா!" என்றது தாடி தாத்தா.
            அப்பாவுக்கும் அதுதான் சரியாகப் பட்டது. தாடி தாத்தாவையே அழைத்துக் கொண்டு மேற்கொண்டு சொல்லி விட்டு வந்து விடலாம் என்று தோன்றியது. இப்படி ஓர் எண்ணம் தோன்றியதுமே அப்பா தாடி தாத்தாவை டிவியெஸ் பிப்டியில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு காலைக் கருக்கலில் கிளம்பி விட்டது.
            எதற்காக லாலு மாமா இவ்வளவு நாட்களும் காத்திருந்தாரோ அது குறித்துப் பேச அப்பாவும், தாடி தாத்தாவும் போனது அவருக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது. வேணி அத்தைக்கும் அது அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. வேணி அத்தையைப் பொருத்த மட்டில் அது ஆசைப்பட்ட மாதிரி நடக்கும் முதல் குடும்ப விசயம் அதுதான். பெரும்பாலான குடும்ப விசயங்களில் லாலு மாமாவுக்கும், வேணி அத்தைக்கும் எட்டாம் பொருத்தம்தான். லாலு மாமாவின் விருப்பத்தின் அடிப்படையில் வேணி அத்தைக்குப் பிடிக்காத ஓர் அதிகார தோரணையில்தான் குடும்ப விசயங்கள் நடந்தேறும். இப்போது முதல் முறையாக வேணி அத்தைக்கும், லாலு மாமாவுக்கும் விருப்பம் ஒத்துப் போயிருந்தது. அந்த வகையில் ரெண்டு பேரின் விருப்பமும் மனம் ஒத்துப் போய் நடக்கும் முதல் குடும்ப விஷேசம் இதுதான்.
            அப்பா போன நேரத்தில் வேணி அத்தை வெளிக்கொட்டகையில் அதற்கெனவே போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தது. லாலு மாமா வேணி அத்தைக்கான ஸ்டூலில் உட்கார்ந்திருந்தது. நல்ல வேளையாக குயிலியும் வீட்டுக்குள் இருந்தது. அப்பாவும், தாடி தாத்தாவுமாக ரெண்டு பேருமாக வந்ததை வைத்து லாலு மாமா ஒருவாறாக விசயத்தை ஊகித்துக் கொண்டு விட்டார்.
            "யாராச்சும் வருவீங்கன்னு எத்தினி நாளு வாசலப் பாத்துக் கெடந்தேம் தெரியுமா? இப்பதாம் வழி தெரிஞ்சி வந்திருக்கீங்க போல!" என்றது லாலு மாமா.
            "அததுக்கும் நேரம் காலம் வார வேணாமா? நாம்ம நெனச்சி என்ன பண்றது? மழை பெய்யற நேரத்துலதாம் பெய்யும். கொழந்தைப் பொறக்குற நேரத்துலதாம் பொறக்கும்!" என்றது தாடி தாத்தா.
            "விசயத்தை அப்படி இப்படி நாமளும் கேள்விப் பட்டேம்! இல்லேங்கல. இருந்தாலும் ஒங்க பக்கத்துலேந்து ஒரு நூல் வாராம நாம்ம எதயும் பண்ண முடியாது பாருங்க!" என்றது லாலு மாமா.
            "பெரியம்பிக்கு முழு சம்மதம். மாமாவப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. பெரியம்பி என்ன சொல்லுதோ, அதாம் அவருக்கு. கலந்துகிட்டுப் பேசுணோம்னா எல்லாத்தியும் முடிவு பண்ணி நிச்சயத்த வெச்சு கல்யாணத்த முடிச்சுபுடலாம்!" என்றது அப்பா.
            "நாம்ம பேச ஆரம்பிச்சே ரொம்ப நாளாயிப் போச்சி. வளத்த வேணாம். சட்டுபுட்டன்னு காரியத்த முடிச்சிடலாம்!" என்றது லாலு மாமா.
            "அப்பாடா! அதாங் எல்லாம் ஒத்து வந்திடுச்சிப் போலருக்கே. அப்புறம் ஏங் வெங்கு வூட்டுக்காரரே தாமசம் பண்ணணும்! சீக்கிராமவே முடிச்சிடுவேம்!" என்றது வேணி அத்தையும்.
            இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் இருந்த குயிலி வேகமாக வெளியே ஓடி வந்தது. "முடிப்பீங்க! ந்நல்லா முடிப்பீங்க! ஏம் கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட ஒரு வார்த்த கேட்க மாட்டீங்களா?" என்றது குயிலி.
            "ஒனக்கென்னடி கழுத இதுல பிடிக்காம போறதுக்கு இருக்கு?" என்றது வேணி அத்தை.
            "ஆமாம்! நாம்ம கழுததாம். அதாலதான் ஒங்க மூத்தப் பொண்ண கவர்மென்டு வேலக்காரனுக்கு கட்டிக் கொடுத்திருக்கீங்க. அவளுக்கு மட்டும் கவர்மென்டு மாப்பிள்ள. நமக்கு மட்டும் கட்ட அடிக்கிறவனா?" என்றது வெறுப்போடு குயிலி.
            "ன்னாடி பெரிய கவர்மென்டு மாப்பிள்ள?" என்றது வேணி அத்தை.
            "நீயி கவர்மெண்ட்டு வேலயில் இருக்கிறேன்னுதான அப்பாவே ஒன்னய கல்யாணம் பண்ணிகிச்சு. கட்டிக்கப் போற பொண்ணே கவர்மெண்டு வேலயில இருக்கணுமாம். ஆனால் பாரேம் பெத்தப் பொண்ணுக்கு கட்டய அடிக்கிறவம்தாம் மாப்பிள்ளயாம்! இதல்லாம் கன்றாவிய இல்லியா? ஒங்களுக்கு ன்னா கண்ணா அவிஞ்சா போச்சு!" என்றது குயிலி.
            "ந்தா... வார்த்தய அளந்துப் பேசு. ச்சும்மா கட்ட அடிக்கிறவேம், கட்ட அடிக்கிறவேம்னு சொல்லிட்டு? நீ எந்தக் குடும்பத்துல பொறந்த. கட்ட அடிக்கிறக் குடும்பத்துலதான. ஒங்க அப்பனுக்கு வேல கெடக்கிலேன்னா அவரும் கட்டதாம் அடிச்சிட்டுக் கெடந்திருக்கணும்! இன்னொரு வாட்டி இது மாரி பேசுனே நாக்க இழுத்து வெச்சி அறுத்துப் புடுவேம் பாத்துக்க!" என்றது கோபத்தோடு வேணி அத்தை.
            "ம்! அறுப்பே! அறுப்பே! கட்ட அடிக்கிறவனயெல்லாம் கட்டிட்டு நாம்ம கஷ்டப்பட முடியாது. கவர்மெண்டு மாப்பிள்ளயா இருந்தா பாருங்க. இல்லேன்னா நாம்ம இப்படியே இருந்திடுறேம்!" என்றது பதிலுக்குப் பதில் குயிலி.
            "அப்படின்னா நீயும் ஒங்க அக்கா மாரி சுகரு வந்தவேம், பி.பி.வந்தவேன கல்யாணம் பண்ணிக்கோ! அப்பதாம் நீயும் அடங்குவே!" என்றது வேணி அத்தை.
            "இந்தாரு ஒனக்கு சுகரு இல்லியா! பி.பி. இல்லியா! ஒன்னய ன்னா தூக்கியா போட்ருக்கு? நல்லாத்தானே தூக்கி வெச்சிருக்கேம் கல்லுபுள்ளயாராட்டம்!" என்றது குயிலி.
            "பதிலுக்குப் பதிலு பேசுறத நிறுத்துறாளா பாருங்க! இதெல்லாம் திருந்தாத சென்மங்க. இதுங்களுக்குலாம் நல்லதே பண்ணி வைக்க முடியாது. கஷ்டத்த தேடிப் போயி கழுத்துல தூக்கிப் போட்டுக்குங்க! அட எங் கெரவத்தே!" என்றது வேணி அத்தை.
            "நீயி கவர்மெண்டுல வேல பாக்கிறவங்கள கட்டிக்கணும். ஒம் மூத்த மொவளுக்குக் கவர்மெண்டுல வேல பாக்கிறவங்கள கட்டி வெக்கணும். ஒம் புள்ளய டாக்டருக்குப் படிக்க வெக்கணும். இந்த வூட்டுல நாம்ம மட்டுந்தானே இளிச்சவாயி. நாம்ம மட்டும் அன்னின்னிக்குச் சம்பாதிச்சிட்டு வாரவன கட்டிட்டு அல்லாடணும்! பெத்த தாயி மாரியா பேசுறே நீ! பெசாசு! சரியான பெசாசு நீயி! ஒம் வயித்துல வந்து பொறந்தேம் பாரு! அட ச்சீ ஏங் கருமத்தே!" என்றது குயிலி.
            "பாருங்க ன்னா வார்த்த பேசுறா?" என்று கண்கள் கலங்கின வேணி அத்தைக்கு. தன் வீட்டின் முன் முதன் முறையாக லாலு மாமா எதுவும் பேசாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தது.
            தாடி தாத்தா அப்பாவின் தொடையைத் தட்டியது. அது கிளம்பலாம் என்பதற்கான சமிக்ஞை. அப்பா புரிந்து கொண்டதைப் போல, "அப்பொறம், நாங்க கெளம்புறேம்! பெறவு பேசிப்போம்!" என்று கிளம்பியது.
            "ன்னாங்க நீங்க! எப்போ வந்தாலும் வாயி நனைக்காமலே போயிட்டு இருக்கீங்க! செத்த உக்காருங்க. நம்மால முடிஞ்சா நாமளே போயி டீத்தண்ணி போட்டுட்டு வந்திடுவேம். ஒவ்வொண்ணுக்கும் நாம்ம இங்க இருக்குறவங்களல்ல எதிருபார்த்து ஏமாந்து போயி கெடக்க வேண்டிருக்கு!" என்றது வேணி அத்தை.
            "அதல்லாம் ஒண்ணும் வாணாம். நம்ம வூட்டுல நமக்கு ன்னா இருக்கு. வூட்டுல கொஞ்சம் சொலி கெடக்கு. வாத்தியாரு கூப்டார்னு டபார்னு கெளம்பி வந்திட்டேம். அங்க சொலிங்க என்ன கெதியில இருக்கோ தெரியல. சுலுவா கெளம்புனா சோலி ஆகும்!" என்றது தாடி தாத்தா. தாடி தாத்தா அப்படிச் சொன்னதும் அப்பா கிளம்பி வெளியே நிறுத்தியிருந்த டிவியெஸ் பிப்டிக்கு அருகில் வந்து விட்டது. தாடி தாத்தாவும் பின்தொடர்ந்து வந்து விட்டது. அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்ய காலை உயர்த்தியது. லாலு மாமா மெதுவாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
            "அது சின்ன பொண்ணு. யோசன பண்ணாம பேசுது. நீங்க மனசுல வெச்சுக்க வாணாம். இஞ்ஞ நடந்தத வெளில வுட்டுட வாணாம். கொஞ்சம் கெளன்சிலிங் பண்ணோம்னா சரியாயிடும். நாம்ம பேசிக்கிறேம். நீங்க நிச்சயத்துக்கு தேதிய பாருங்க. காரியத்த முடிச்சிட்டா எல்லாருக்கும் நல்லது!" என்றது லாலு மாமா.
            "செரி! அதல்லாம் பாத்துப்போம் வாத்தியாரே! நீங்க வூட்டுப்பக்கம் வாங்க!" என்றது தாடி தாத்தா லாலு மாமாவைப் பார்த்தபடி.
            "இனுமே பேசுறத்துக்கலாம் ஒண்ணுமில்ல. நீங்க நாளப் பாருங்க. நாமளும் பாக்குறேம். கலந்துட்டு நிச்சயத்த முடிச்சு கல்யாணத்த நடத்திர வேண்டியதுதாம். தள்ளிட்டுப் போனா ல்லாம் அப்படியே தள்ளிட்டுப் போயிடும். நீங்க இஞ்ஞ நடந்த பேச்சையல்லாம் கவனத்துலயே வெச்சிக்க வாணாம். பெண்ண முழு சம்மதத்தோடு மணவறயில கொண்டாந்து நிறுத்த வேண்டியது நம்ம பொறுப்பு!" என்றது லாலு மாமா.
            "செரிங்க வாத்தியாரே! இப்போ வண்டியக் கெளம்ப வுடுங்க. எதா இருந்தாலும் பாத்து நல்ல முடிவா பண்ணிப் புடுவேம்!" என்றது தாடி தாத்தா.
            அப்பா வண்டியைக் கிளப்ப, தாடி தாத்தா ஏறி உட்கார்ந்து கொள்ள வேற்குடியை விட்டு வண்டி வெளியே கிளம்பியது. லாலு மாமாவின் வீட்டைக் கடந்து யாருமில்லாத தெருவினுடைய மண்ரோட்டில் போய்க் கொண்டிருந்த போது தாடி தாத்தா அப்பாவைப் பார்த்துக் கேட்டது, "ஏம் வாத்தியாரே! பொண்ணுக்குப் பிடிக்காம கல்யாணத்த கில்யாணத்த பண்ணி வெச்சி, அது பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிட்டுன்னு வெச்சுங்களேம்! அந்தப் பாவம் யாரு தலயில விடியும்?"
            அப்பா எந்தப் பதிலையும் சொல்லாமல் மணல் நிறைந்த அந்த மண் சாலையில் வண்டி சறுக்கி விடாமல் ஓட்டுவதில் குறியாக இருந்து ஓட்டிச் சென்றது.
            "ன்னா வாத்தியாரே! கேட்கிறேம். பதிலே வாரலியே!" என்றது தாடி தாத்தா.
            "இந்தக் கல்யாணப் பேச்ச எடுத்தாலே நமக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு நடக்குது. ஒரே யோசனதாம் போங்க. கொழப்பம் வேற தாங்க முடியல." என்றது அப்பா.
            "அது கெடக்குப் போங்க! நீங்களே இப்படிச் சொல்லிட்டா ந்நல்லா வெளங்கிடும்!" என்றது தாடி தாத்தா.
            "ஆமாங்! அது கெடக்குப் போங்க! ஒங்கள வெறும் வயித்தோட அழச்சிட்டு வந்து வெறும் வயித்துட கூப்பிட்டுப் போவ முடியாது" என்று சொல்லி விட்டு டீக்கடையின் முன் அப்பா டிவியெஸ் பிப்டியை நிறுத்தியது.
            "நிறுத்த வாணாம் வாத்தியாரே! வூட்டுக்கு வுடுங்க! வூட்டுல போயி போடச் சொல்லிக் குடிச்சிப்போம்!" என்றது தாடி தாத்தா.
            "இத்த அப்டியே வுட்டுடறதாம் ந்நல்லதா படுது நமக்கு!" என்றது அப்பா.
            "அதாஞ் செரி. ஆனா அப்டிலாம் வுட்டுட முடியுமான்னு யோஜனயாத்தாம் இருக்கு. நாளிக்கு நம்மால தகவல போகலன்னு ஆயிடப் புடாது. ஒறவு மொறயில கொஞ்ச முன்ன பின்ன இருக்கத்தாம் செய்யும். நமக்கு ஏம் வம்பு வாத்தியாரே? நடந்தத ஒரு எட்டுப் போயி சொல்லிட்டு வந்திடுங்க! அவங்க முடிவு பண்ணிகிடட்டும்!" என்றது தாடி தாத்தா.
*****

டபுள் டமாக்கா ஸ்வீட் பார்ட்டி



            எல்லா நாளும் வாக்கு எண்ணும் நாளாகவே இருந்தால் எப்படி இருக்கும்? எந்நேரமும் ஒரே பரபரப்பா இருக்கும். அத்தோடு டாஸ்மாக்கும் மூடிக் கிடக்கும்.
*****
            காலம் கடத்துவதை நிறுத்துவோம். சோம்பலுக்கானக் காரணத்தைக் கண்டறிவோம். சோம்பலுக்கான காரணம் சோம்பல்தான். காரணம் கண்டுபிடிப்பது சோம்பலுக்கான மற்றுமொரு காரணம் கற்பித்தலாகி விடுகிறது.
*****
            ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்து இருக்கின்ற டிரைவரே வியர்வை தாங்கவில்லை என்று சட்டைப் பட்டனைக் கழற்றி விட்டுக் கொள்கிறார் எனும் போது, பேருந்தின் நடுவே கூட்டத்தின் மத்தியில் சிக்கியிருக்கும் நம் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! சட்டையையே கழற்றி வீச வேண்டியதுதான்!
*****
            தியானம் பண்ணுகின்ற போதுதான் எழுந்து நின்ற காட்டுக் கத்தலாக கத்த வேண்டும் போலிருக்கிறது என்ற நம் நண்பன் கிருஷ்ண லிங்கேஷ், இதைத் தவிர்க்க வழி இருக்கிறதா? எனக் கேட்க...
            வழியா இல்லை உலகில் என்று,
            நீ செத்தால் உனக்கு நீயே எப்படி மெளன அஞ்சலி செலுத்துவாயோ அப்படி நினைத்துக் கொண்டு உட்கார் என்று சொன்னதும்,
            ஆள் கப் சிப்!
            சாவுன்னதும் மனுஷன் பயந்து அப்படியே அமைதி ஆகிடறான். அதுவும் அவன் செத்ததுக்கு அவனே மெளன அஞ்சலி செலுத்துவது என்றால்...
*****
            இந்தி தெரிந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால்... இந்தித் தெரிந்த வடநாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஏன் பிழைப்புத் தேடி வருகிறார்கள்?! ஏனென்றால் பிழைப்பு வாதத்தை விட உழைப்பு வாதமே சோறு போடும் என்று எல்லாருக்கும் தெரியும்.
*****
            ஒரே நேரத்தில் ரெண்டு விதமாக ஸ்வீட் கொடுக்க தமிழர்களால் மட்டுமே முடியும். ஒரு கையில் ஜிலேபி. இன்னொரு கையில் அல்வா. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடில்லாமல் தமிழர்கள் கொடுத்து இருக்கிறார்களே டபுள் டமாக்கா ஸ்வீட் எடு கொண்டாடு தேர்தல் முடிவுகள்!
*****

1 Jun 2019

ஆயுள் கைதியான சைக்கிளின் அஸ்தி



102. செய்யு
            மீண்டும் மீண்டும் பல்வேறு வகைகளில் சைக்கிளை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது அப்பா. அதில் ரகுநாதனையே அழைத்துக் கொண்டு செல்வது என்ற முடிவோடு அப்பாவும், விநாயகம் வாத்தியாரும் ரகுநாதனைப் போய் பார்த்தனர். ரகுநாதன் அப்பாவுடனும், விநாயகம் வாத்தியாருடனும் உடனடியாக ஸ்டேஷனுக்குக் கிளம்பியது. ஸ்டேசனுக்கு வந்ததும், "வாத்தியாரே! நீங்க ரண்டு பேரும் அப்டி வெளியில நில்லுங்க. உள்ள வர வாணாம். பாத்து பேசிட்டு வந்திர்ரேம்!" என்று சொல்லி உள்ளே போனது.
            அப்பாவும், விநாயகம் வாத்தியாரும் ஸ்டேஷனுக்கு எதிரே ரோட்டின் எதிர்புறம் இருந்த மாமர நிழலில் நின்று கொண்டிருந்தனர். மாமரம் அந்த வெண்ணாற்கரையில் செழித்து வளர்ந்திருந்தது. ஸ்டேஷனுக்கு ஒரு கிராமமே வந்தாலும் நிழல் தர தயாராக இருந்தது. மாங்காய்கள் சரம் சரமாக காய்த்துத் தொங்கின. அந்தப் பக்கமாய்ச் செல்லும் பிள்ளைகள் ஸ்டேஷனை ஒரு எட்டுப் பார்த்து விட்டு மாங்காய்களைப் பார்த்து கல் விடுவார்கள். மாங்காயைக் கரையில் உதிரச் செய்து விட்டு கல் வெண்ணாற்றில் போய் விழுந்து விடும். ஸ்டேஷனில் உள்ளே இருந்து போலீஸ் யாரேனும் பார்த்து விட்டால், "எவம்டா அது?" என்று ஒரு சத்தம் விட்டால் போதும். கல்லெறிந்த பிள்ளைகள் வந்த சுவடு தெரியாமல் மாயாஜால மந்திரப் படங்களில் பொசுக்கென்று மறைந்து விடுவதைப் போல மறைந்து விடுவார்கள். நொடி நேரத்தில் கண்ணிலிருந்து காணாமல் போய் விடுவார்கள்.
            வெண்ணாற்றில் தண்ணீர் ஓடுவது நின்றிருந்தது. தண்ணீர் ஓடுவது நின்றிருந்தாலும் அதில் தண்ணீர் தேங்கியிருந்தது. தேங்கியருந்த தண்ணீரில் கல் விழும் தொப்பென்ற சத்தம் நிமிஷ நேரத்தில் தோன்றி நிமிஷ நேரத்தில் மறையும் அற்புதம் போலிருந்தது.
            விநாயகம் வாத்தியாருக்கும், அப்பாவுக்கும் அந்த மாமரத்து நிழல் இதமாக இருந்தது. விநாயகம் வாத்தியார் உள்ளே ஒரு பார்வைப் பார்த்து விட்டு, மின்னல் வேகத்தில் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்து வீசி விட்டு கைகளைத் தட்டிக் கொண்டார். ஸ்டேஷன் உள்ளே ரகுநாதன் கையை ஆட்டி, சத்தமாகப் பேசுவது தெரிந்தது. விநாயகம் வாத்தியார் எறிந்த கல் எந்த மாங்காயையும் அடிக்காமல் தொப்பென்று வெண்ணாற்றில் விழுந்து அலைஅலையாய் வட்டங்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. அப்பாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. "யாராவது பாத்தா ன்னா சார் நெனச்சிப்பாங்க?" என்றது அப்பா.
            "எங்க பாக்குறது? அந்த வேகத்துலல வேல பாத்துருக்கேன். கல்ல எடுத்ததும் கண்ணுல படாது, எறிஞ்சதும் கண்ணுல படாது. உள்ளார ரகுநாதம் பேசுற பேச்சப் பார்த்த ஸ்டேஷன்ல நிக்குற அத்தன வண்டியயும் அள்ளிப் போட்டுட்டுப் போயிடலாம் போலருக்கே!" என்று சொல்லியபடிச் சிரித்தார் விநாயகம் வாத்தியார். ஆக, எப்படியும் சைக்கிள் கிடைத்து விடும் நம்பிக்கை அப்பாவுக்கும், விநாயகம் வாத்தியாருக்கும் வந்தது.
            ஸ்டேஷனில் பேசி விட்டு வெளியில் மாமரத்து அடிக்கு வந்த ரகுநாதன், "வாத்தியாரே! செல்லையங் கடை ஒடைச்ச கேஸ்ல அந்த சைக்கிளையும் சேத்து இருக்காங்களாம். யாரோட சைக்கிள்னு தெரியலங்ற மாரிதான் இப்போ கேஸ் இருக்காம். இப்போ போயி சைக்கிளு நம்மோடதுன்னு சொன்னா அந்த கேஸ்ல நாமாளும் உள்ள வர்ற மாரி இருக்குமாம். அதாங் கொஞ்ச நாளிக்கு கமுக்கமா இருங்க. ஒரு மாசம் ஆவட்டும் பாக்கலாங்றாங்க. கொஞ்சம் பொறுத்தே எடுத்துப்போமே!" என்றது.
            "சைக்கிளு கெடச்சாப் போதும்! எப்போ கெடச்சா ன்னா? அதப் பாத்தீங்கன்னா... சைக்கிளு அரதப் பழசுதாம். ஆனாலும் அந்தச் சைக்கிளு சுப்பு வாத்தியாரு மொத மொதல்லா சம்பாதிச்சு வாங்குனது. அதாங் வுட மனசில்ல. ன்னா ஒரு இத்துப் போன சைக்கிளுக்காக ஒங்கள இத்துப் போட்டுக் கொண்டாந்துட்டோம்னு நெனக்க வாணாம்!" என்று விநாயகம் வாத்தியார் சொன்னதும், ரகுநாதன் அவரின் வாயைப் பொத்தியது.
            "வசதியான குடும்பத்துல பொறந்ததால நமக்கு ஏதும் தெரியாதுன்னு நெனச்சிட்டீங்களா? சைக்கிளு பழசா இருக்கலாம். அதானே இத்தனி நாளுக்கும் தொணயா வந்து போயிட்டு கெடந்திருக்கு. ஒரு மாசம். ஒரே ஒரு மாசம் பொறுத்துங்க. சேதாரம் ல்லாம சைக்கிள எடுத்துடுவோம். ஸ்டேஷன்லயும் சொல்லிருக்கேம், சைக்கிள் பத்திரமுன்னு! பாத்துக்கலாம் வாங்க வாத்தியாரே! ஸ்டேஷனே நம்ம ஸ்டேஷன்தாம் வாங்க! அவங்களுக்குன்னு சில வரைமொற இருக்குல்ல. மனசுல எதயும் வெச்சிக்காம வாங்க பாத்துப்போம்!" என்று ஸ்டேஷனிலிருந்து இருவரையும் வழியனுப்பி வைத்து விட்டு மறுபடியும் ஸ்டேஷனுக்குள் போனது ரகுநாதன்.
            ரகுநாதன் சொன்னபடி ஒரு மாதம் ஆன பின்னும் சைக்கிள் கைக்கு வந்த பாடில்லை. எங்கெங்கோ சுமந்து சென்ற சைக்கிளின் நினைவுகைளைச் சுமந்தபடி சைக்கிளை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற கவலையோடு நடமாடிக் கொண்டிருந்தது அப்பா. ஒரு மாதம் கழித்து மறுபடியும் ரகுநாதனை அழைத்து வந்து கேட்ட போதும் இன்னும் ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுமாறு ஸ்டேஷனில் சொல்ல, அப்பாவுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. மாதங்கள் உருண்டோடியதே தவிர சைக்கிள் ஸ்டேஷனை விட்டு நகர மறுத்தது. அது சைக்கிளோடு சைக்கிளாக ஸ்டேஷனின் போர்டிகோவின் மேல் கிடந்தது. ஸ்டேஷனின் போர்டிகோவில் சுமராக நாற்பது ஐம்பது சைக்கிள்களுக்கு மேல் ஒன்றன் மேல் ஒன்றாகக் கிடந்தது.
            மறுபடியும் மறுபடியும் சைக்கிளுக்காக ரகுநாதனை அழைத்து வந்து கேட்பதற்கு அப்பாவுக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பின் சைக்கிளுக்காக மீண்டும் ரகுநாதனைப் போய் பார்க்கவில்லை.
            கடைசி முயற்சியாக மாணிக்கவிநாயகத்தையும் அழைத்து வந்து ஒரு வார்த்தைக் கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது அப்பாவுக்கு. இப்படி ஒரு யோசனை சைக்கிள் ஸ்டேஷனுக்குப் போய் ஆறு மாதங்களுக்குப் பின் உண்டானது. இது சம்பந்தமாக மாணிக்கவிநாயகத்தைப் போய் பார்த்து, நடந்ததையெல்லாம் சொன்னதும், "என்னத்தாம்! இதென்ன பிரமாதம்! அப்பயே சொல்லியிருக்கக் கூடாது. சுலுவா செத்த நேரத்துல ப்பூங்ற நேரத்துல முடிய வேண்டிய வேல. ச்சும்மா ரகுநாதம் மாரிலாம் ஒங்கள ஸ்டேசனுக்கு வெளில வெச்சிட்டுலாம் உள்ள போயி பேச மாட்டேம். ஒங்கள உள்ளார அழச்சிட்டுப் போயே ஸ்டேசனுக்குள்ள போயி எப்படிப் பேசுறேம் பாருங்க!" என்றது மாணிக்கவிநாயகம். எப்படியும் சைக்கிள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இப்போதுதான் மறுபடியும் அப்பாவுக்கு துளிர் விட்டது.
            தொடர்ந்த மாணிக்கவிநாயகமே பேசியது, "பஞ்சாயத்து நடக்குறப்ப ஒரு வார்த்தை விட்டுருந்தீங்கன்னா புது சைக்கிளாவே வாங்கி உட்ருக்கச் சொல்லலாம்!"
            "அதெலாம் வேணாம்பி! ஞாயமில்ல. நம்ம சைக்கிளு நம்ம கையிக்கு வந்தா போதும். நமக்கு எதுக்கும்பி இன்னொருத்தரு காசி?" என்றது அப்பா.
            "நீங்க வூட்டுக்குப் போங்க. செத்த நேரமாவட்டும். நாமளே வூட்டுக்கு வந்து ஒங்கள வண்டில அழச்சிட்டுப் போயி பேசிட்டு வந்திருவேம்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            சொன்னபடி அப்பாவை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு உள்ளே போய் பேசியது மாணிக்கவிநாயகம். சப் இன்ஸ்பெக்டரே நேரடியாகப் பேசியது. "கொடுக்குறப் பத்தி ஒண்ணுமில்ல. ஒங்க குரூப்லயும் சில வண்டிக இங்க கெடக்கு. ரகுநாதம் குரூப்லயும் சில வண்டிக கெடக்கு. ஒங்க குரூப் ஆளுக வண்டிய மட்டும் கொடுத்தா ரகுநாதன் குரூப் என்ன நெனச்சிக்கும்? நம்ம நெலமயிலேந்து நீங்களே யோசித்துப் பாருங்களேம்!"
            "நாம்ம பாத்துக்குறம் சார்! அதல்லாம் ஒங்களுக்கு எந்தப் பெரச்சினயும் வராது. நாம்மளே ரகுநாதம்கிட்டே சொல்லிக்கிறேம் சார்! இந்த ஒரு சைக்கிள மட்டும் வுட்டீங்கன்னா போதும்! சைக்கிளும் ஒண்ணும் புதுசில்ல. பழசுதாம் சார்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "வாங்குற வரிக்கும் எதுயாச்சும் சொல்றது? அப்புறம் பெரச்சினன்னா நம்மள மண்டயப் பிய்ச்சிக்க வுட்றது! இப்பதாம் ஒங்க ரண்டு குரூப்புக்கும் இத்துகிட்டுப் போயி நேராயிருக்கு. மறுபடியும் இத்த காரணமாக வெச்சி ஒங்க ரண்டு குரூப்பும் அடிச்சிகிட்டா எங்க தலயில்ல உருளும்!" என்றது போலீஸ்.
            "ஒங்களுக்கு எந்தப் பெரச்சின வந்தாலும் நாம்ம பொறுப்பு!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "நீங்க ன்னா ஜட்ஜாய்யா? ஒங்களுக்குள்ள எந்தப் பெரச்சின வந்தாலும் நாங்கதாய்யா பொறுப்புங்றீங்க?" என்ற சொல்லி விட்டுச் சிரித்தது போலீஸ்.
            "நீங்க நெனச்சா பண்ணலாம் சார்! பாத்துக் கொஞ்சம் பண்ணி வுடுங்க சார்! ம்... ம்..." என்று போலீஸைப் பார்த்துக் கண்ணடித்தது மாணிக்கவிநாயகம்.
            "இன்ஸ்பெக்டரு இல்ல. எத்தா இருந்தாலும் அவரக் கேட்டுட்டுதாம் சொல்ல முடியும்!" என்றது போலீஸ்.
            "நாம்ம பேசிக்கிறேம் சார்! நமக்குத் தெரிஞ்சவங்கதாம் சார்!"
            "இப்படி எல்லாரும் இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிஞ்சவங்கதாம்னு சொல்லிட்டு வந்தா என்னா பண்றது?"
            "ன்னா சார்! ஒரு பழய சைக்கிளுக்கு இம்மாம் கணக்குப் போடுறீங்கோ!"
            "செரி! பழய சைக்கிள்னு ஒங்களுக்குக் கொடுத்திடறேம்னோ வெச்சிக்குங்களேம். ஒங்கள மாரி இப்படி ஒவ்வொருத்தரும் ஆளு அழச்சிட்டு வந்துட்டே இருந்தா... நாங்க ன்னா பண்றது? எல்லாத்தியும் தூக்கிக் கொடுத்துட்டு கடைசீல ஸ்டேஷனயும் தூக்கிக் கொடுத்துற வேண்டியதுதாங்!"
            "யோசனப் பண்ணுங்க! ஒங்களதாம் நம்பி வந்திருக்கிறேம்! நம்பிக்க இருக்கு எங்களுக்கு!" என்று மாணிக்கவிநாயகம் சொல்ல, போலீஸ் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒரு பைலை எடுத்துப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பித்தது. அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது மாணிக்கவிநாயகத்துக்குப் புரிந்தது. கையெடுத்துக் கும்பிட்டு, "அப்புறம் வணக்கம் சார்! வாரோம் சார்!" என்றபடி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது மாணிக்கவிநாயகம்.
            "ஒன்றியத்த வுட்டு, மாவட்டத்த வுட்டு போனு அடிக்கச் சொன்னதாம் சரிபட்டு வரும்! நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க அத்தாம்! சைக்கிளு வூடு வந்து சேர்றது நம்ம பொறுப்பு. சமயம் பாத்துத் தூக்கிடுவேம் வாங்க!" என்று நம்பிக்கை தந்தபடி அப்பாவை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனது மாணிக்கநாயகம்.
            மாணிக்கவிநாயகம் கிளம்பும் முன், "சைக்கிளு பத்திரமா இருக்குமாம்பி?" என்றது அப்பா.
            "நம்ம சைக்கிளயே ஸ்டேசன்லேந்து நம்மாள தூக்க முடியலன்னா பாத்துக்குங்க. வேற எவேம் வந்து ஸ்டேஷன்ல கைய வைப்பாம் பாத்துக்குங்க. நாம்ம இன்னிக்குப் போன நேரம் சரியில்ல அத்தாம். இன்ஸ்பெக்டரு இருந்தாருன்னா இன்னிக்கு எப்படியும் காரியம் ஆயிருக்கும். முடிச்சிடுவோம் வாங்க!" என்றபடி கிளம்பியது மாணிக்கவிநாயகம்.
            அதற்குப் பின் சில முறைகள் மாணிக்கவிநாயகத்தைப் போய் பார்த்தது அப்பா. மாணிக்கவிநாயகம் அப்பாவுடன் கிளம்பி ஸ்டேஷனுக்கு வர முடியாத அளவுக்கு அதன் அரசியல் எதிர்காலம் பிஸியாக ஆரம்பித்திருந்தது.
            அதற்கு மேல் சைக்கிள் பற்றி ரகுநாதனிடமோ, மாணிக்கவிநாயகத்திடமோ பேசுவதற்கு கூச்சமாக இருப்பதாக அப்பா குறிப்பிட்டது.
            "செரி! போனா போவுது வுடுங்க! இன்னும் கொஞ்ச நாள்ல அதுவே காயலாங் கடையில போடுற மாரித்தாம் இருந்தது. அதுக்கு முன்னாடியே முந்திகிட்டு அது ஸ்டேஷனுக்குப் போயிக் கெடக்குது!" என்றது அம்மா.
            ஸ்டேஷனுக்குப் போன சைக்கிள் அங்கேயே அதன் போர்ட்டிகோவில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. எந்த தவறும் செய்யாத அந்த சைக்கிள், ஓர் ஆயுள்தண்டனைக் கைதி போல ஸ்டேஷன் போர்டிகோவில் மேல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் கிடந்து இத்துப் போய் தன் உயிரை விட்டது. பழைய இரும்புக் கடைக்குக் கூட போக முடியாத தன் கையறு நிலையை அது தன் அந்திமக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும். இறந்து போன அதன் அஸ்தி ஸ்டேஷனின் போர்ட்டிகோவில் துருக்களாய் இன்னும் கிடக்கக் கூடும்.
*****

விலை போட்டு வாங்கவா முடியும்?



            தேர்தல் சமயத்தில் எவ்வளவோ விசயங்களைப் பேசுகிறார்கள், அது குறித்து காரசாரமாக விவாதிக்கிறார்கள், வாக்குகளைப் பெறும் வகையில் வாக்குறுதி அறிக்கிறார்கள். அதனால்தான் அதன் பெயரே வாக்குறுதி போலும். வாக்குறுதி என்று இருந்தாலும் அது உறுதியானதா என்பது வேறு விசயம்.
            கல்வி செழித்தத் தமிழ்நாட்டின் மிக முக்கியப் பிரச்சனையே கல்விதான் இல்லையா! தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதுதான் பிரச்சனை. தனியார் கல்வி நிறுவனங்களில் அதைப் பெறுவதில் எவ்வளவு பணத்தைக் கொட்டிச் செலவழிக்க வேண்டியிருக்கிறது? அது எவ்வளவு பெரிய ஒரு கொள்ளை வியாபாராமாக மாறியிருக்கிறது! தேர்தலில் அது பற்றிய பேச்சுகள், காரசார விவாதங்கள், வாக்குறுதிகள் அதிகம் வழங்கப்பட்டதாக செய்திகள் இல்லை.
            இது குறித்துப் பேச வேண்டிய அரசியல்வாதிகளே நிறைய தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதே அது குறித்துப் பேசாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
            மாதாமாதம் வங்கிக் கணக்கில் போடுவதாக ரெண்டாயிரத்தில் ஆரம்பித்து ஆறாயிரம் வரை நீண்டு, ஸ்விஸ் பேங்கில் இருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து அக்கெளண்டில் லட்சம் லட்சமாய்ப் போடுவது வரை எவ்வளவு வாக்குறுதிகள்!
            காசு கொடுத்து அனைவரும் படிக்க முடியவில்லை என்பதற்காகத்தான் முன்னொரு காலத்தில் அரசாங்கத்திடம் இலவசக் கல்வியைக் கேட்டோம். இப்போது அதே அரசாங்கத்திடம் காசு பிடுங்கி நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை ஒழுங்குபடுத்தித் தருமாறு மன்றாடிக் கொண்டிருக்கிறோம்.
            ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வியாபாரம் செழிக்கிறது. ஆதி காலத்தில் மிளகு வியாபாரத்தில் ஆரம்பித்து இப்போதைய மீத்தேன், உடல் உறுப்புகள் வியாபாரம் வரை ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு வியாபாரம். இப்போது அந்த வியாபார பிரபலத்தைக் கல்வி நிறுவனங்கள் பிடிக்கத் தொடங்கி விட்டன.
            அப்போது ஊருக்கு ஓர் அரசாங்கப் பேருந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கிய அந்தக் காலக்கட்டத்திலிருந்து, இப்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேருந்தை விடும் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை ஒப்பு நோக்கும் போது அதன் வியத்தகு புற்றுநோய்ப் போன்ற வளர்ச்சியை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
            எஜூகேஷன் செஸ் என்று கல்விக்காக தனியாக வரி வசூலிக்கும் நாட்டில், தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்காக ஆயிரம் ஆயிரமாக, லட்சம் லட்சமாக வசூலிப்பது ஓர் ஆச்சரிய முரண் அல்லவா! இதில் அடுத்ததாக, பல பிரபலங்கள் ஐந்து ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றேன், பத்து ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றேன் என்று விளம்பரம் செய்து கொள்வது... இருக்கின்ற ஊரில் தான தர்மம் செய்து வள்ளல் என்று பெயர் எடுத்துக் கொள்வதைப் போல இருக்கின்றது.
            இந்தியாவில் வசூலாகும் வரியைக் கணக்கிட்டால் இந்தியாவைப் போன்ற இன்னும் பத்து நாடுகளுக்கு கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம் எனும் போது, இந்தியா முழுவதும் தரமாகக் கல்வியை இலவசமாகக் கொடுக்க முடியும். அதற்குதான் நாடெங்கிலும் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்கின்றன.
            நமக்கென்னவோ கல்விக்காக தனி வரியையும் செலுத்தி விட்டு, கல்விக்காக கட்டணத்தையும் செலுத்தி தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதில் எவ்வளவோ ஆர்வம்!
            அரசாங்கத்திடம் உயர்கல்வியை விலையில்லாமல் கேட்டுப் பெற வேண்டியது நம் உரிமை. அதே நேரத்தில் வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு நாட்டில் எவ்வளவோ வாய்ப்புகளும், வழிகளும் இருக்கும் போது அவர்கள் வியாபாரத்துக்காக கல்வியில் கை வைக்காமல் இருக்க வேண்டியது அவர்களின் தார்மீகம். அப்படி நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால் தாராளமாக அப்படி நடத்துபவர்கள் அரசாங்கத்தைப் போல விலையில்லாமல் அந்தக் கல்வியைக் கொடுப்பதே தர்மம் ஆகும். ஏனென்றால் கல்வி என்பது விலையில்லாதது. அதற்கு விலையில்லை எனும் போது அதை எப்படி விலை போட்டு வாங்க முடியும்?
*****