செய்யு - 104
இனி வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்க
வேண்டாம் என்ற முடிவுக்குக் குமரு மாமா வந்திருந்தது. திட்டையில் ஒரு மரம் அறுக்கும்
வாள்பட்டறை இருந்தது. இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிக்கு அப்போது இழைப்புப் பட்டறை மட்டும்
இல்லாமல் இருந்தது. இதனால் மரம் இழைக்க கூத்தாநல்லூருக்கும், கமலாபுரத்துக்கும், திருவாரூக்கும்
மர ஆசாரிகள் போய்க் கொண்டிருந்தனர். ஓர் இழைப்புப் பட்டறை ஆரம்பித்தால் எல்லா மர
ஆசாரிகளும் இங்குதான் வருவார்கள் என்று யோசித்தது குமரு மாமா. யோசித்ததுடன் அப்பாவிடமும்
யோசனை கலந்து கொண்டது.
"எழப்புப் பட்டறையோடு அப்படியே தச்சுப்
பட்டறையும் வெச்சா ந்நல்ல ஓட்டம் ஓடும்பி! ந்நல்ல யோசனதாம்பி. அண்ணணும் தம்பியும்
சேந்துகிட்டா இந்த வட்டாரத்துல ஒங்கள அசைக்க யாருமில்லம்பி!" என்ற அப்பாவுக்கு
குமரு மாமாவின் யோசனைப் பிடித்துப் போய் விட்டது. அப்படி இழைப்புப் பட்டறை வைக்கும்
வகையில் ஒரு தோதான இடமும் இருந்தது.
பொன்னியம்மன் கோயிலின் பக்கத்தில் கடைத்தெருவில்
வைத்தி தாத்தா ஓர் இடம் வாங்கிப் போட்டிருந்தது. அந்த இடம் திட்டையில் இடம் வாங்கி
குடி வருவதற்கு முன் அப்பாவுக்கு வந்த இடம். வெம்புலிங்கம் மாவளியாரின் இடம் அது. கடைத்தெருப்
பாக்கத்தில் இருந்ததால் முக்கியமான இடமாக இருந்தது.
மாவளியார் பெரும் தோதில் இருந்தவர். வாழ்ந்து
கெடும் நிலைக்கு வந்து விட்டார். அதற்கு மேல்
வடவாதியில் இருக்க விருப்பமில்லாமல் இருப்பவைகளை விற்று விட்டு ஊர் மக்களின் பார்வை
படாமல் மன்னார்குடி பக்கம் போகும் முடிவில் இருந்தார்.
மாவளியார் வாத்தியார்களில் ஒருவரைப் பழக்கம்
வைத்துக் கொண்டு அவர் மூலமாகத்தான் கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொள்வார். அப்படி
வடவாதி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்த சந்திரசேகர் வாத்தியார் மூலம் கணக்கு வழக்கு
எழுதி வைத்துக் கொண்டிருந்தார் மாவளியார். சந்திசேகர் வாத்தியார் டிரான்ஸ்பர் ஆகி
லெட்சுமாங்கடிப் பக்கம் போனது போது அப்பாவை அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டுப் போயிருந்தார்.
அப்பாவின் கையெழுத்து அப்படியே அச்செடுத்தது
போலிருக்கும். யோசனைகளும் நிதானமாக இருக்கும். இது மாவளியாருக்கு ரொம்பவே பிடித்துப்
போய் விட்டது. அத்துடன் அப்பாவுக்கு பணத்தேவை ஏற்பட்ட போதெல்லாம் கைமாத்தாக பணம்
கொடுத்து உதவவும் செய்தார் மாவளியார். அதை எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் கொடுத்து கணக்கை நேர் செய்து கொள்ளும் அப்பா. இதனால் அப்பா மேல் மாவளியாருக்கு
தனிப் பிரியம் இருந்தது.
அவர் மன்னார்குடிக்கு ஜாகையாகப் போவது
என்ற முடிவுக்கு வந்ததும் தன் வசம் கடைசியாக எஞ்சியிருந்த வயல்கள், மனைகள் எல்லாவற்றையும்
விற்கும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பாவை வைத்துதான் அந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
எல்லா இடங்களையும் ஏகத்துக்கும் பெரும்புள்ளியாகப் பார்த்து விற்ற அவர், பொன்னியம்மன்
கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த மனையை மட்டும் அப்பாவை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டார். அப்பா தயங்கியது. "ஒங்ககிட்ட பணம் இல்லேங்றது தெரியும் வாத்தியாரே!
மனையைப் பேர் மாத்தி வுட்டுடுறேம். தோதுபட்டப்போ நீங்க கொடுக்கலாம்! ன்னாச் சொல்றீங்க?"
என்றார் மாவளியார்.
"அது மொறையில்லீங்க! பணத்தைக் கொடுத்ததுக்கு
அப்புறந்தாம் பேர் மாத்தி வுடுவாங்க. பழக்கவழக்கங்றது வேற. கொடுக்கல் வாங்கல்ங்றது
வேற. நாம்ம கொஞ்சம் யோஜனப் பண்ணிக்கிறேம்!" என்றது அப்பா.
"ன்னா வேணா யோஜனப் பண்ணிக்கிங்க.
அந்த எடம் ஒங்களுக்கத்தாம். முடிவு பண்ணிட்டேம். அப்படி வாங்கிக்கலேன்னா ப்ரீயா கொடுத்துடறதுன்னு
முடிவு பண்ணிட்டேம். இந்த முடிவுல மாத்தமில்ல பாத்துக்குங்க. நாளிக்குள்ள யோஜனப் பண்ணி
நல்ல முடிவா சொல்லுங்க!" என்றார் மாவளியார்.
அப்பா வைத்தி தாத்தாவுடன் யோசனைக் கலந்தது.
"அந்த எடத்தை நமக்கு வாங்கிக் கொடுங்களேம். ஒங்ககிட்டதாம் காசிமில்ல, ஒண்ணுமில்ல.
அதுக்கு ஏம் ஆசப்படுறீங்க? பின்னாடி ஒரு காலத்துல பயலுவோ ஏதோ கட கண்ணி வெச்சிப் பொழச்சுப்பாங்க
பாருங்க!" என்றது வைத்தி தாத்தா. வைத்தித் தாத்தா காசுமில்லை, ஒன்றுமில்லை என்று
சொன்னதில் அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தந்தாம். இருந்தாலும் மச்சான்காரர்களுக்காக வரிந்து
கட்டிக் கொண்டு காரியத்தில் இறங்குவது என்று முடிவு செய்து கொண்டது.
அப்பா மாவளியாரைப் பார்த்து விசயத்தைச்
சொன்னது. மாவளியார் சிரித்துக் கொண்டே சொன்னார், "வாத்தியாரே ஒங்களுக்குன்னா
சொல்லுங்க! வேற யாருக்கும் அது ஒங்க மாமனாராவே இருந்தாலும் கொடுக்குறதாயில்ல."
மாவளியார் பிடிவாதக்காரர். ஒரு முடிவு
எடுத்து விட்டால் அவரை மாற்ற முடியாது. அதனால் அந்த இடம் அப்பாவுக்கு வாங்குவது போல
வாங்கி மூன்று மாதங்கள் கழித்து வைத்தி தாத்தாவின் பேருக்கு மாற்றப்பட்டது. அப்படி
வந்த இடம்தான் பொன்னியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த கடைத்தெரு இடம்.
அந்த இடத்தில் தன்னுடைய யோசனைப்படியே,
ஒரு பக்கா கட்டிடம் கட்டி அதை இரண்டாகத் தடுத்து கீழண்டைப் பக்கம் இழைப்புப் பட்டறையும்,
மேலண்டைப் பக்கம் தச்சுப் பட்டறையும், தச்சு வேலைக்குத் தேவையான சாமான்கள் விற்கும்
கடையுமாக ஆக்கியது குமரு மாமா. இதில் எல்லாவற்றிலும் அப்பாவின் யோசனையும் கலந்திருந்தது
என்றாலும், அண்ணனும் தம்பியுமாக பட்டறையை நிர்வகிக்கும் யோசனையை மட்டும் புறந்தள்ளியிருந்தது
குமரு மாமா. அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னது குமரு மாமா, "அது வந்துங்கத்தாம்!
நாம்ம பட்டறையில இருந்துக்கிறேம். அவ்வேம் வெளிவேலையப் பாத்துக்கிடட்டும். பட்டற வேலயில
அவ்வேம் தலயிட வாணாம். அவ்வேம் வெளிவேலயில நாம்ம தலயிட வாணாம். நாளிக்கு ஒண்ணா வேல
பார்த்து ஒருத்தொருக்கொருத்தர் மனத்தாங்கல் வந்துப்புடப் படாதுன்னு பாக்கிறேம்!"
அப்பாவுக்கு இந்த யோசனை மட்டும் பிடிக்கவில்லை என்றாலும் அதற்கு மேல் ஒன்றும் குமரு
மாமாவிடம் சொல்ல முடியவில்லை.
பக்கா கட்டிடம் கட்டுவதில் தொடங்கி, இழைப்பு
மெஷின் வாங்குவது வரை அப்பா குமரு மாமாவுடன் அலையோ அலையென்று அலைந்தது. இதில் குமரு
மாமாவுக்கு பரம திருப்தி. "நீங்க
மட்டுமில்லேன்னா அன்னிக்கு இந்த எடத்தையும் வாங்கியிருக்க முடியாது. வாங்குன இடத்துல
இன்னிக்கு பட்டறையும் போட்டிருக்க முடியாது! அதே மாரி இந்த மணிப்பய கல்யாணத்தயும்
முடிச்சிட்டீங்கன்னா ந்நல்லா இருக்கும்!" என்றது குமரு மாமா. இப்படி இடம் வாங்கி,
பட்டறை வைத்துக் கொடுத்ததில் பக்கத்துணையாக அப்பா இருந்ததால், பதிலுக்குக் குமரு மாமாவுக்கும்
அப்பாவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.
அப்படி உதவுவதன் மூலம் மணி மாமா எனும் வீயெம் மாமாவின் கல்யாணத்தையும் அப்பாவின் தோதில்
முடித்து விட வேண்டும் என்ற கணக்கும் குமரு மாமாவுக்கு இருந்தது.
அதற்குத் தகுந்தாற் போல் நேரமும் தோதுபட்டு
வந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் இனியும் பராமரிப்புப்
பணிகள் செய்து வீட்டைத் தூக்கி நிறுத்த முடியாது எனும் நிலையில் அப்பா வீடு கட்டுவது
என்ற முடிவுக்கு வந்தது. மாடி வீடாகக் கட்டுவது என்பது தன் சக்திக்கு மீறிய ஒன்று என்பது
அப்பாவுக்குப் புரிந்திருந்தது. எந்த அளவுக்கு வீட்டைச் சிக்கனமாகக் கட்ட முடியும்
என்ற யோசனை அப்பாவின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
வழக்கமாக மாடி வீடு கட்டிக் கொண்டிருந்தவர்கள்
அப்போதெல்லாம் எண்ணூறு சதுர அடிக்கு குறையாமல் கட்டிக் கொண்டிருந்தனர். கட்டப் போகும்
வீட்டை எண்ணூறு சதுர அடியிலிருந்து அறுநூறு சதுர அடியாக ஆக்கிக் கொண்டது அப்பா. குமரு
மாமாவிடம் இது குறித்துச் சொன்ன போது அது அறுநூறு சதுர அடிக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
"எண்ணூறாவே போடுங்க அத்தாம்! எப்படியும் முடிச்சிடலாம். முடிச்சுக் கொடுக்குறதுக்கு
நாம்ம பொறுப்பு!" என்றது.
"இத முடிக்கிறதே கஷ்டந்தாம்பி! கொஞ்சம்
உள்ளுக்கு மட்டும் பூசிட்டு குடி போயிடலாம்னுதான்னுதாம் ஆரம்பிக்கிறேம்!" என்றது
அப்பா.
"கட்டுறது கட்டுறீங்க! வருஷா வருஷமா
வூடு கட்டப் போறீங்க அத்தாம்! ஒரு தடவத்தானே! அதாஞ் சொன்னேம் அத்தாம்! எண்ணூறுக்கே
போட்டுக்குவோம் அத்தாம்! பாத்துக்கலாம்!" என்றது குமரு மாமா.
"அகலக்காலு வெக்கிறது மாரி ஆயிடும்.
வேணாம்பி. நமக்கு அறுநூறே பெரிசுதாம்பி. அது போதுங்றேம். ஊரு வழக்கே சிறுகக் கட்டிப்
பெருக வாழ்ங்றதுதாம்பி! மனை போடுறது முக்கியமில்லே! மனையப் போட்டு கட்டி முடிச்சுபுடணும்.
ஆரம்பிச்சு அப்படியே வுட்டுடக் கூடாது. எத்தினி வூடுகளப் பாக்கிறேம். ஆரம்பிச்சு அஸ்திவாரம்
போட்டு அப்படியே கெடக்கும். லிண்டல் வரிக்கும் வந்து அப்படியே கெடக்கு. எண்ணூறுலாம்
செரிப்படாதது. அறுநூறு போதும்பி. பாத்து இதச் சிக்கனமா முடிச்சுக் கொடுங்க பாத்துப்போம்!"
என்றது அப்பா.
"அப்பொறம் ஒங்க முடிவுதாம் அத்தாம்!
ரொம்ப பயப்படுறீங்க! எண்ணூறு சதுரங்கறதே சின்ன வூடுதாம். அறுநூறுங்றது ரொம்ப சின்னது.
ரூம்லாம் துக்னி துக்னியா இருக்கும் பாத்துக்கோங்க. அப்பொறம் வூட்ட முடிச்சதுக்கப்பொறம்
இப்படி சின்னதாப் போய்ட்டேம்பினு சொல்லப்படாது. நம்ம மேல கொற வைக்கக் கூடாது. சொல்ல
வேண்டியதையெல்லாம் ஆரம்பத்துல சொல்லிடறேம்! நெதானமா யோஜிச்சு முடிவு பண்ணுங்க. இத்தையெல்லாம்
போட்டுட்டு ச்சும்மா ச்சும்மா மாத்திட்டு இருக்க முடியாது!" என்றது குமரு மாமா.
"மாத்தம்லாம் ஒண்ணுமில்லம்பி. வூடு
பொட்டிக் கணக்காக சிறுசாத்தாம் இருக்கும். அது போதும்பி. அதுக்கு மேல என்னம்பி கெடக்கு?
நம்ம தோதுக்குக் கட்டணுமே தவிர ஆசப்பட்ட தோதுக்கு கட்டப்படாது. சின்னதா கட்டுனாலும்
கட்டி முடிச்சு குடிப் போய்ப் புடணும். நீங்கலாம் இருக்குறீங்கற தைரியத்துலதாம் இந்தக்
காரியத்துல எறங்குறேம். சொசைட்டி லோனு எண்பதாயிரம், பி.எப். பார்ட் பைனலு ஒரு முப்பதோ,
நாப்பதோ, மத்தபடி இருக்குற நகைகள கொஞ்சம் அடகு வெச்சிக்கணும். ஒரு ஒண்ணரைத் தேறும்பி.
அதுக்குள்ள முடிச்சாகணும். அதத் தாண்டினிச்சின்னு வெச்சுக்குங்க. சமாளிக்க நம்மகிட்ட
தெம்பில்ல."
"அது போதும்த்தாம்! நீங்க வேற அறுநூறு
சதுரம்தாம் சொல்றீங்க! முடிச்சிப்புடலாம்த்தாம்! அப்பொறம் லாலு மாமா மணிப்பய சம்பந்தமா
ஏதாச்சும் சொன்னுச்சா? பேச்சே இல்லாம கெடக்கே?"
"நாமளும் எதுத்தூட்டு தாடியும் முன்னாடியேப்
போயிப் பார்த்தோம்பி. பொண்ணுக்கு பிடிக்கலேங்றது. நாம்மப் பேசிச் சரிப்பண்ணிப்புடறேங்றாரு
ஒங்க மாமம். அதாங் ஒங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு யோஜிச்சுகிட்டே இருந்திட்டேம்."
"பொண்ணுங்களப் போயி கேட்டா அப்படித்தாம்
அத்தாம் சொல்லும். அத கணக்குல வெச்சிக்கக் கூடாது. லாலு மாமா சொன்னாச் சரிதாம். மேக்கொண்டு
வேலய ஆரம்பிச்சிடலாம்த்தாம்."
"பொண்ணு அதுவாவே வந்து சொல்லுதும்பி.
அதாங் யோஜிக்கிறேம்." அப்பா தயங்கித் தயங்கிச் சொன்னது.
"ஒண்ணும் யோஜிக்க வாணாம். பொண்ணப்
பெத்தவரு ன்னா சொல்றாரோ அதாங் அத்தாம் முடிவு. ஒங்ககிட்ட வழவழ கொழகொழன்னு இத்தாம்
அத்தாம் பிடிக்க மாட்டேங்குது. சட்டுபுட்டுனு ஒரு வெசயத்தப் போட்டு முடிக்க மாட்டீங்க.
ச்சும்மா ஜவ்வு மிட்டாயி மாரி யோஜிச்சு யோஜிச்சு நாலு நாள்ல முடியுற காரியத்த நாலு
மாசமா ஆக்கிப் புடுவீங்க! இதுக்கு மேல ஒங்கள வெச்சுப் பேசக் கூடாது. நாம்ம எறங்கி நாமளே
பேசி காரியத்த ன்னா வேகத்துல முடிக்கிறேம் பாருங்கத்தாம்!"
"தம்பிட்ட ஒரு வார்த்த கேட்டீங்களாம்பி!"
"அவங்கிட்ட ன்னா கேக்குறது? கட்டுடா
தாலின்னா கட்டணும். கட்டிக்க தாலியன்னா அந்தப் பொண்ணு கட்டிக்கணும். அதுங்களப் போயி
யோஜனக் கேட்டா அப்படி இப்படின்னு, இப்படி அப்படின்னு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிட்டேதாம்
இருக்கும். கல்யாணம் ஆயிப் போச்சுன்னா செரியா போயிடும்!" என்றது குமரு மாமா.
"மாமாட்டேயும் கலந்துட்டு ந்நல்லா
யோஜிச்சுக்குங்கம்பி!" என்றது அப்பா மறுபடியும் தயங்கித் தயங்கி.
*****
No comments:
Post a Comment