1 Jun 2019

விலை போட்டு வாங்கவா முடியும்?



            தேர்தல் சமயத்தில் எவ்வளவோ விசயங்களைப் பேசுகிறார்கள், அது குறித்து காரசாரமாக விவாதிக்கிறார்கள், வாக்குகளைப் பெறும் வகையில் வாக்குறுதி அறிக்கிறார்கள். அதனால்தான் அதன் பெயரே வாக்குறுதி போலும். வாக்குறுதி என்று இருந்தாலும் அது உறுதியானதா என்பது வேறு விசயம்.
            கல்வி செழித்தத் தமிழ்நாட்டின் மிக முக்கியப் பிரச்சனையே கல்விதான் இல்லையா! தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதுதான் பிரச்சனை. தனியார் கல்வி நிறுவனங்களில் அதைப் பெறுவதில் எவ்வளவு பணத்தைக் கொட்டிச் செலவழிக்க வேண்டியிருக்கிறது? அது எவ்வளவு பெரிய ஒரு கொள்ளை வியாபாராமாக மாறியிருக்கிறது! தேர்தலில் அது பற்றிய பேச்சுகள், காரசார விவாதங்கள், வாக்குறுதிகள் அதிகம் வழங்கப்பட்டதாக செய்திகள் இல்லை.
            இது குறித்துப் பேச வேண்டிய அரசியல்வாதிகளே நிறைய தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதே அது குறித்துப் பேசாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
            மாதாமாதம் வங்கிக் கணக்கில் போடுவதாக ரெண்டாயிரத்தில் ஆரம்பித்து ஆறாயிரம் வரை நீண்டு, ஸ்விஸ் பேங்கில் இருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து அக்கெளண்டில் லட்சம் லட்சமாய்ப் போடுவது வரை எவ்வளவு வாக்குறுதிகள்!
            காசு கொடுத்து அனைவரும் படிக்க முடியவில்லை என்பதற்காகத்தான் முன்னொரு காலத்தில் அரசாங்கத்திடம் இலவசக் கல்வியைக் கேட்டோம். இப்போது அதே அரசாங்கத்திடம் காசு பிடுங்கி நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை ஒழுங்குபடுத்தித் தருமாறு மன்றாடிக் கொண்டிருக்கிறோம்.
            ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வியாபாரம் செழிக்கிறது. ஆதி காலத்தில் மிளகு வியாபாரத்தில் ஆரம்பித்து இப்போதைய மீத்தேன், உடல் உறுப்புகள் வியாபாரம் வரை ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு வியாபாரம். இப்போது அந்த வியாபார பிரபலத்தைக் கல்வி நிறுவனங்கள் பிடிக்கத் தொடங்கி விட்டன.
            அப்போது ஊருக்கு ஓர் அரசாங்கப் பேருந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கிய அந்தக் காலக்கட்டத்திலிருந்து, இப்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேருந்தை விடும் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை ஒப்பு நோக்கும் போது அதன் வியத்தகு புற்றுநோய்ப் போன்ற வளர்ச்சியை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
            எஜூகேஷன் செஸ் என்று கல்விக்காக தனியாக வரி வசூலிக்கும் நாட்டில், தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்காக ஆயிரம் ஆயிரமாக, லட்சம் லட்சமாக வசூலிப்பது ஓர் ஆச்சரிய முரண் அல்லவா! இதில் அடுத்ததாக, பல பிரபலங்கள் ஐந்து ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றேன், பத்து ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றேன் என்று விளம்பரம் செய்து கொள்வது... இருக்கின்ற ஊரில் தான தர்மம் செய்து வள்ளல் என்று பெயர் எடுத்துக் கொள்வதைப் போல இருக்கின்றது.
            இந்தியாவில் வசூலாகும் வரியைக் கணக்கிட்டால் இந்தியாவைப் போன்ற இன்னும் பத்து நாடுகளுக்கு கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம் எனும் போது, இந்தியா முழுவதும் தரமாகக் கல்வியை இலவசமாகக் கொடுக்க முடியும். அதற்குதான் நாடெங்கிலும் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்கின்றன.
            நமக்கென்னவோ கல்விக்காக தனி வரியையும் செலுத்தி விட்டு, கல்விக்காக கட்டணத்தையும் செலுத்தி தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதில் எவ்வளவோ ஆர்வம்!
            அரசாங்கத்திடம் உயர்கல்வியை விலையில்லாமல் கேட்டுப் பெற வேண்டியது நம் உரிமை. அதே நேரத்தில் வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு நாட்டில் எவ்வளவோ வாய்ப்புகளும், வழிகளும் இருக்கும் போது அவர்கள் வியாபாரத்துக்காக கல்வியில் கை வைக்காமல் இருக்க வேண்டியது அவர்களின் தார்மீகம். அப்படி நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால் தாராளமாக அப்படி நடத்துபவர்கள் அரசாங்கத்தைப் போல விலையில்லாமல் அந்தக் கல்வியைக் கொடுப்பதே தர்மம் ஆகும். ஏனென்றால் கல்வி என்பது விலையில்லாதது. அதற்கு விலையில்லை எனும் போது அதை எப்படி விலை போட்டு வாங்க முடியும்?
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...