1 Jun 2019

ஆயுள் கைதியான சைக்கிளின் அஸ்தி



102. செய்யு
            மீண்டும் மீண்டும் பல்வேறு வகைகளில் சைக்கிளை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது அப்பா. அதில் ரகுநாதனையே அழைத்துக் கொண்டு செல்வது என்ற முடிவோடு அப்பாவும், விநாயகம் வாத்தியாரும் ரகுநாதனைப் போய் பார்த்தனர். ரகுநாதன் அப்பாவுடனும், விநாயகம் வாத்தியாருடனும் உடனடியாக ஸ்டேஷனுக்குக் கிளம்பியது. ஸ்டேசனுக்கு வந்ததும், "வாத்தியாரே! நீங்க ரண்டு பேரும் அப்டி வெளியில நில்லுங்க. உள்ள வர வாணாம். பாத்து பேசிட்டு வந்திர்ரேம்!" என்று சொல்லி உள்ளே போனது.
            அப்பாவும், விநாயகம் வாத்தியாரும் ஸ்டேஷனுக்கு எதிரே ரோட்டின் எதிர்புறம் இருந்த மாமர நிழலில் நின்று கொண்டிருந்தனர். மாமரம் அந்த வெண்ணாற்கரையில் செழித்து வளர்ந்திருந்தது. ஸ்டேஷனுக்கு ஒரு கிராமமே வந்தாலும் நிழல் தர தயாராக இருந்தது. மாங்காய்கள் சரம் சரமாக காய்த்துத் தொங்கின. அந்தப் பக்கமாய்ச் செல்லும் பிள்ளைகள் ஸ்டேஷனை ஒரு எட்டுப் பார்த்து விட்டு மாங்காய்களைப் பார்த்து கல் விடுவார்கள். மாங்காயைக் கரையில் உதிரச் செய்து விட்டு கல் வெண்ணாற்றில் போய் விழுந்து விடும். ஸ்டேஷனில் உள்ளே இருந்து போலீஸ் யாரேனும் பார்த்து விட்டால், "எவம்டா அது?" என்று ஒரு சத்தம் விட்டால் போதும். கல்லெறிந்த பிள்ளைகள் வந்த சுவடு தெரியாமல் மாயாஜால மந்திரப் படங்களில் பொசுக்கென்று மறைந்து விடுவதைப் போல மறைந்து விடுவார்கள். நொடி நேரத்தில் கண்ணிலிருந்து காணாமல் போய் விடுவார்கள்.
            வெண்ணாற்றில் தண்ணீர் ஓடுவது நின்றிருந்தது. தண்ணீர் ஓடுவது நின்றிருந்தாலும் அதில் தண்ணீர் தேங்கியிருந்தது. தேங்கியருந்த தண்ணீரில் கல் விழும் தொப்பென்ற சத்தம் நிமிஷ நேரத்தில் தோன்றி நிமிஷ நேரத்தில் மறையும் அற்புதம் போலிருந்தது.
            விநாயகம் வாத்தியாருக்கும், அப்பாவுக்கும் அந்த மாமரத்து நிழல் இதமாக இருந்தது. விநாயகம் வாத்தியார் உள்ளே ஒரு பார்வைப் பார்த்து விட்டு, மின்னல் வேகத்தில் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்து வீசி விட்டு கைகளைத் தட்டிக் கொண்டார். ஸ்டேஷன் உள்ளே ரகுநாதன் கையை ஆட்டி, சத்தமாகப் பேசுவது தெரிந்தது. விநாயகம் வாத்தியார் எறிந்த கல் எந்த மாங்காயையும் அடிக்காமல் தொப்பென்று வெண்ணாற்றில் விழுந்து அலைஅலையாய் வட்டங்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. அப்பாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. "யாராவது பாத்தா ன்னா சார் நெனச்சிப்பாங்க?" என்றது அப்பா.
            "எங்க பாக்குறது? அந்த வேகத்துலல வேல பாத்துருக்கேன். கல்ல எடுத்ததும் கண்ணுல படாது, எறிஞ்சதும் கண்ணுல படாது. உள்ளார ரகுநாதம் பேசுற பேச்சப் பார்த்த ஸ்டேஷன்ல நிக்குற அத்தன வண்டியயும் அள்ளிப் போட்டுட்டுப் போயிடலாம் போலருக்கே!" என்று சொல்லியபடிச் சிரித்தார் விநாயகம் வாத்தியார். ஆக, எப்படியும் சைக்கிள் கிடைத்து விடும் நம்பிக்கை அப்பாவுக்கும், விநாயகம் வாத்தியாருக்கும் வந்தது.
            ஸ்டேஷனில் பேசி விட்டு வெளியில் மாமரத்து அடிக்கு வந்த ரகுநாதன், "வாத்தியாரே! செல்லையங் கடை ஒடைச்ச கேஸ்ல அந்த சைக்கிளையும் சேத்து இருக்காங்களாம். யாரோட சைக்கிள்னு தெரியலங்ற மாரிதான் இப்போ கேஸ் இருக்காம். இப்போ போயி சைக்கிளு நம்மோடதுன்னு சொன்னா அந்த கேஸ்ல நாமாளும் உள்ள வர்ற மாரி இருக்குமாம். அதாங் கொஞ்ச நாளிக்கு கமுக்கமா இருங்க. ஒரு மாசம் ஆவட்டும் பாக்கலாங்றாங்க. கொஞ்சம் பொறுத்தே எடுத்துப்போமே!" என்றது.
            "சைக்கிளு கெடச்சாப் போதும்! எப்போ கெடச்சா ன்னா? அதப் பாத்தீங்கன்னா... சைக்கிளு அரதப் பழசுதாம். ஆனாலும் அந்தச் சைக்கிளு சுப்பு வாத்தியாரு மொத மொதல்லா சம்பாதிச்சு வாங்குனது. அதாங் வுட மனசில்ல. ன்னா ஒரு இத்துப் போன சைக்கிளுக்காக ஒங்கள இத்துப் போட்டுக் கொண்டாந்துட்டோம்னு நெனக்க வாணாம்!" என்று விநாயகம் வாத்தியார் சொன்னதும், ரகுநாதன் அவரின் வாயைப் பொத்தியது.
            "வசதியான குடும்பத்துல பொறந்ததால நமக்கு ஏதும் தெரியாதுன்னு நெனச்சிட்டீங்களா? சைக்கிளு பழசா இருக்கலாம். அதானே இத்தனி நாளுக்கும் தொணயா வந்து போயிட்டு கெடந்திருக்கு. ஒரு மாசம். ஒரே ஒரு மாசம் பொறுத்துங்க. சேதாரம் ல்லாம சைக்கிள எடுத்துடுவோம். ஸ்டேஷன்லயும் சொல்லிருக்கேம், சைக்கிள் பத்திரமுன்னு! பாத்துக்கலாம் வாங்க வாத்தியாரே! ஸ்டேஷனே நம்ம ஸ்டேஷன்தாம் வாங்க! அவங்களுக்குன்னு சில வரைமொற இருக்குல்ல. மனசுல எதயும் வெச்சிக்காம வாங்க பாத்துப்போம்!" என்று ஸ்டேஷனிலிருந்து இருவரையும் வழியனுப்பி வைத்து விட்டு மறுபடியும் ஸ்டேஷனுக்குள் போனது ரகுநாதன்.
            ரகுநாதன் சொன்னபடி ஒரு மாதம் ஆன பின்னும் சைக்கிள் கைக்கு வந்த பாடில்லை. எங்கெங்கோ சுமந்து சென்ற சைக்கிளின் நினைவுகைளைச் சுமந்தபடி சைக்கிளை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற கவலையோடு நடமாடிக் கொண்டிருந்தது அப்பா. ஒரு மாதம் கழித்து மறுபடியும் ரகுநாதனை அழைத்து வந்து கேட்ட போதும் இன்னும் ஒரு மாதம் பொறுத்துக் கொள்ளுமாறு ஸ்டேஷனில் சொல்ல, அப்பாவுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. மாதங்கள் உருண்டோடியதே தவிர சைக்கிள் ஸ்டேஷனை விட்டு நகர மறுத்தது. அது சைக்கிளோடு சைக்கிளாக ஸ்டேஷனின் போர்டிகோவின் மேல் கிடந்தது. ஸ்டேஷனின் போர்டிகோவில் சுமராக நாற்பது ஐம்பது சைக்கிள்களுக்கு மேல் ஒன்றன் மேல் ஒன்றாகக் கிடந்தது.
            மறுபடியும் மறுபடியும் சைக்கிளுக்காக ரகுநாதனை அழைத்து வந்து கேட்பதற்கு அப்பாவுக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பின் சைக்கிளுக்காக மீண்டும் ரகுநாதனைப் போய் பார்க்கவில்லை.
            கடைசி முயற்சியாக மாணிக்கவிநாயகத்தையும் அழைத்து வந்து ஒரு வார்த்தைக் கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றியது அப்பாவுக்கு. இப்படி ஒரு யோசனை சைக்கிள் ஸ்டேஷனுக்குப் போய் ஆறு மாதங்களுக்குப் பின் உண்டானது. இது சம்பந்தமாக மாணிக்கவிநாயகத்தைப் போய் பார்த்து, நடந்ததையெல்லாம் சொன்னதும், "என்னத்தாம்! இதென்ன பிரமாதம்! அப்பயே சொல்லியிருக்கக் கூடாது. சுலுவா செத்த நேரத்துல ப்பூங்ற நேரத்துல முடிய வேண்டிய வேல. ச்சும்மா ரகுநாதம் மாரிலாம் ஒங்கள ஸ்டேசனுக்கு வெளில வெச்சிட்டுலாம் உள்ள போயி பேச மாட்டேம். ஒங்கள உள்ளார அழச்சிட்டுப் போயே ஸ்டேசனுக்குள்ள போயி எப்படிப் பேசுறேம் பாருங்க!" என்றது மாணிக்கவிநாயகம். எப்படியும் சைக்கிள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இப்போதுதான் மறுபடியும் அப்பாவுக்கு துளிர் விட்டது.
            தொடர்ந்த மாணிக்கவிநாயகமே பேசியது, "பஞ்சாயத்து நடக்குறப்ப ஒரு வார்த்தை விட்டுருந்தீங்கன்னா புது சைக்கிளாவே வாங்கி உட்ருக்கச் சொல்லலாம்!"
            "அதெலாம் வேணாம்பி! ஞாயமில்ல. நம்ம சைக்கிளு நம்ம கையிக்கு வந்தா போதும். நமக்கு எதுக்கும்பி இன்னொருத்தரு காசி?" என்றது அப்பா.
            "நீங்க வூட்டுக்குப் போங்க. செத்த நேரமாவட்டும். நாமளே வூட்டுக்கு வந்து ஒங்கள வண்டில அழச்சிட்டுப் போயி பேசிட்டு வந்திருவேம்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            சொன்னபடி அப்பாவை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு உள்ளே போய் பேசியது மாணிக்கவிநாயகம். சப் இன்ஸ்பெக்டரே நேரடியாகப் பேசியது. "கொடுக்குறப் பத்தி ஒண்ணுமில்ல. ஒங்க குரூப்லயும் சில வண்டிக இங்க கெடக்கு. ரகுநாதம் குரூப்லயும் சில வண்டிக கெடக்கு. ஒங்க குரூப் ஆளுக வண்டிய மட்டும் கொடுத்தா ரகுநாதன் குரூப் என்ன நெனச்சிக்கும்? நம்ம நெலமயிலேந்து நீங்களே யோசித்துப் பாருங்களேம்!"
            "நாம்ம பாத்துக்குறம் சார்! அதல்லாம் ஒங்களுக்கு எந்தப் பெரச்சினயும் வராது. நாம்மளே ரகுநாதம்கிட்டே சொல்லிக்கிறேம் சார்! இந்த ஒரு சைக்கிள மட்டும் வுட்டீங்கன்னா போதும்! சைக்கிளும் ஒண்ணும் புதுசில்ல. பழசுதாம் சார்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "வாங்குற வரிக்கும் எதுயாச்சும் சொல்றது? அப்புறம் பெரச்சினன்னா நம்மள மண்டயப் பிய்ச்சிக்க வுட்றது! இப்பதாம் ஒங்க ரண்டு குரூப்புக்கும் இத்துகிட்டுப் போயி நேராயிருக்கு. மறுபடியும் இத்த காரணமாக வெச்சி ஒங்க ரண்டு குரூப்பும் அடிச்சிகிட்டா எங்க தலயில்ல உருளும்!" என்றது போலீஸ்.
            "ஒங்களுக்கு எந்தப் பெரச்சின வந்தாலும் நாம்ம பொறுப்பு!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "நீங்க ன்னா ஜட்ஜாய்யா? ஒங்களுக்குள்ள எந்தப் பெரச்சின வந்தாலும் நாங்கதாய்யா பொறுப்புங்றீங்க?" என்ற சொல்லி விட்டுச் சிரித்தது போலீஸ்.
            "நீங்க நெனச்சா பண்ணலாம் சார்! பாத்துக் கொஞ்சம் பண்ணி வுடுங்க சார்! ம்... ம்..." என்று போலீஸைப் பார்த்துக் கண்ணடித்தது மாணிக்கவிநாயகம்.
            "இன்ஸ்பெக்டரு இல்ல. எத்தா இருந்தாலும் அவரக் கேட்டுட்டுதாம் சொல்ல முடியும்!" என்றது போலீஸ்.
            "நாம்ம பேசிக்கிறேம் சார்! நமக்குத் தெரிஞ்சவங்கதாம் சார்!"
            "இப்படி எல்லாரும் இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிஞ்சவங்கதாம்னு சொல்லிட்டு வந்தா என்னா பண்றது?"
            "ன்னா சார்! ஒரு பழய சைக்கிளுக்கு இம்மாம் கணக்குப் போடுறீங்கோ!"
            "செரி! பழய சைக்கிள்னு ஒங்களுக்குக் கொடுத்திடறேம்னோ வெச்சிக்குங்களேம். ஒங்கள மாரி இப்படி ஒவ்வொருத்தரும் ஆளு அழச்சிட்டு வந்துட்டே இருந்தா... நாங்க ன்னா பண்றது? எல்லாத்தியும் தூக்கிக் கொடுத்துட்டு கடைசீல ஸ்டேஷனயும் தூக்கிக் கொடுத்துற வேண்டியதுதாங்!"
            "யோசனப் பண்ணுங்க! ஒங்களதாம் நம்பி வந்திருக்கிறேம்! நம்பிக்க இருக்கு எங்களுக்கு!" என்று மாணிக்கவிநாயகம் சொல்ல, போலீஸ் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒரு பைலை எடுத்துப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பித்தது. அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது மாணிக்கவிநாயகத்துக்குப் புரிந்தது. கையெடுத்துக் கும்பிட்டு, "அப்புறம் வணக்கம் சார்! வாரோம் சார்!" என்றபடி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது மாணிக்கவிநாயகம்.
            "ஒன்றியத்த வுட்டு, மாவட்டத்த வுட்டு போனு அடிக்கச் சொன்னதாம் சரிபட்டு வரும்! நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க அத்தாம்! சைக்கிளு வூடு வந்து சேர்றது நம்ம பொறுப்பு. சமயம் பாத்துத் தூக்கிடுவேம் வாங்க!" என்று நம்பிக்கை தந்தபடி அப்பாவை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனது மாணிக்கநாயகம்.
            மாணிக்கவிநாயகம் கிளம்பும் முன், "சைக்கிளு பத்திரமா இருக்குமாம்பி?" என்றது அப்பா.
            "நம்ம சைக்கிளயே ஸ்டேசன்லேந்து நம்மாள தூக்க முடியலன்னா பாத்துக்குங்க. வேற எவேம் வந்து ஸ்டேஷன்ல கைய வைப்பாம் பாத்துக்குங்க. நாம்ம இன்னிக்குப் போன நேரம் சரியில்ல அத்தாம். இன்ஸ்பெக்டரு இருந்தாருன்னா இன்னிக்கு எப்படியும் காரியம் ஆயிருக்கும். முடிச்சிடுவோம் வாங்க!" என்றபடி கிளம்பியது மாணிக்கவிநாயகம்.
            அதற்குப் பின் சில முறைகள் மாணிக்கவிநாயகத்தைப் போய் பார்த்தது அப்பா. மாணிக்கவிநாயகம் அப்பாவுடன் கிளம்பி ஸ்டேஷனுக்கு வர முடியாத அளவுக்கு அதன் அரசியல் எதிர்காலம் பிஸியாக ஆரம்பித்திருந்தது.
            அதற்கு மேல் சைக்கிள் பற்றி ரகுநாதனிடமோ, மாணிக்கவிநாயகத்திடமோ பேசுவதற்கு கூச்சமாக இருப்பதாக அப்பா குறிப்பிட்டது.
            "செரி! போனா போவுது வுடுங்க! இன்னும் கொஞ்ச நாள்ல அதுவே காயலாங் கடையில போடுற மாரித்தாம் இருந்தது. அதுக்கு முன்னாடியே முந்திகிட்டு அது ஸ்டேஷனுக்குப் போயிக் கெடக்குது!" என்றது அம்மா.
            ஸ்டேஷனுக்குப் போன சைக்கிள் அங்கேயே அதன் போர்ட்டிகோவில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. எந்த தவறும் செய்யாத அந்த சைக்கிள், ஓர் ஆயுள்தண்டனைக் கைதி போல ஸ்டேஷன் போர்டிகோவில் மேல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் கிடந்து இத்துப் போய் தன் உயிரை விட்டது. பழைய இரும்புக் கடைக்குக் கூட போக முடியாத தன் கையறு நிலையை அது தன் அந்திமக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும். இறந்து போன அதன் அஸ்தி ஸ்டேஷனின் போர்ட்டிகோவில் துருக்களாய் இன்னும் கிடக்கக் கூடும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...