3 Jun 2019

குழந்தைகள் படிக்கிறார்கள்!



            அட்டைப் போட்டு வைத்திருந்த புத்தகங்கள் அப்படியே இருந்தன. அம்முக்குட்டி டேப்ளேட்டில் படித்துக் கொண்டிருந்தாள்.
            பார்க்க பார்க்க அப்பாவான ஜம்புக்கு ஆற்றாமையாக இருந்தது.
            "புள்ள படிக்கிறத இப்படிப் பார்க்குறீங்களே! கண்ணு பட்டுடப் போவுது!" என்றாள் அம்மாவான ரம்யா.
            "ஏன்டா செல்லக்குட்டி! டேப்ளேட்டுல படிக்கிறதுக்கு எதுக்குடா புத்தகத்துக்கு அட்டைப் போடச் சொன்னே?" என்றான் ஜம்பு.
            "அட்டைப் போடலின்னா மிஸ் அடிப்பாங்கப்பா!" என்றாள் அம்முக்குட்டி.
            "இப்போ அட்டைப் போட்டுக் கொடுத்ததுலதாம் கொறஞ்சுப் போயிட்டீங்களாக்கும்!" என்றாள் ரம்யா.
            "படிக்காத புத்தகத்துக்கு எதுக்குடி அட்டைப் போடோணும்? நல்ல மிஸ்டா பாப்பாகுட்டி ஒங்க மிஸ். அட்டைய மிஸ் பண்ண வுட மாட்டாங்க போலருக்கு!" என்றான் ஜம்பு.
            இதைக் கேட்டு விட்டு, "யானை வாங்கிட்டு அங்குசம் வாங்க யோசிக்கிற மாரில்லா இருக்கு ஒங்க கதெ?" என்றாள் ரம்யா.
            "ஆமாண்டி! ஒவ்வொண்ணும் வெலய பாக்கிறப்போ யானை வெலை, குதிரை வெலையாத்தான் இருக்கு. அதாங் புத்தகத்த யானையின்னும், அட்டய அங்குசமுன்னும் சொல்றியா?" என்றான் ஐம்பு.
            "ஒங்ககிட்ட மனுஷன் பேச முடியுமா?" என்றபடி நகர்ந்தாள் ரம்யா.
            "ஒங்ககிட்ட மனுஷன் படிக்க முடியுமா?" என்றபடி டேப்ளேட்டில் பாடத்தைக் க்ளோஸ் செய்து விட்டு, அதில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள் அம்முக்குட்டி.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...