செய்யு - 103
வீயெம் மாமாவுக்குக் குயிலியைக் கேட்கப்
போயி அப்பா சைக்கிளைப் பறிகொடுத்தது அவரளவில் மிகப் பெரிய சகுனத்தடையாகப் பட்டது.
கேட்பதா? வேண்டாமா? என்று இரண்டு பக்கமாக யோசித்து பலவாறாக அப்பா குழம்பிக் கொண்டிருந்தது.
லாலு மாமா தானே வந்து கேட்டு விட்டதால், வைத்தி தாத்தா தரப்பிலிருந்து வரும் பதிலுக்காகக்
காத்திருந்தது.
நமது சமூகத்தில் திருமணத்தை முடிப்பதற்குள்ளான
சடங்குகள் நிறையதாம். நேரடியாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். பதில் எப்படி வருகிறது
என்பதை ஒருத்தர மாற்றி ஒருத்தரை விட்டு நூல் விட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்படி நூல் விட்டுப் பார்ப்பதில் ஒரு மாமாங்கமே ஆனாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
விட்ட நூலுக்குப் பதில் நூல் வர வேண்டும் அவர்களுக்கு. ஒரு பதில் கிடைக்கும் வரை அந்தப்
பதிலை மறைமுகமாக எப்படியெல்லாம் பெறலாம் என்று பார்ப்பார்களே தவிர, நேரடியாகப் பார்த்துக்
கேட்டு விட மாட்டார்கள். அதை ஒரு நாசுக்காகக் கையாள்வார்கள். அந்த நாசுக்கு இரண்டு
தரப்புக்குமான ஈகோவை இப்படியும் அப்படியுமாக மாற்றி மாற்றிச் சமன்செய்து கொண்டே இருக்கும்.
நேரடியாக குமரு மாமாவே பேசி விடக் கூடிய
எளிய விசயம்தான் இது. தானே சென்று கேட்டால் கல்யாணச் செலவுகள் பலவற்றைத் தானே ஏற்க
நேரிடுமோ என்ற அச்சம் அதன் உள்மனதில் இருந்தது. அந்த அச்சத்திற்காகத்தான் அது அப்பாவைப்
பயன்படுத்தியது. மேலும் நேரடியாகச் சென்று கேட்பதில் ஒரு கெளரவம் பார்ப்பார்கள். யார்
மூலமாக நூல் விடுகிறார்களோ அவர்கள் மூலமாக ஒரு நல்ல பதில் கிடைக்கும் போது கெத்தாக
போய் நின்று அடுத்தகட்ட விசயங்களைப் பேசுவார்கள். அடுத்தகட்டத்திற்கு நகரும் வரை நூல்
விடப் பயன்படுத்தியவர்களை நூலைப் போல சிக்குப் பிடித்து விடும் நிலைக்கு ஆளாக்கி விடுவார்கள்.
நூல் விட யாரை அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறார்களோ அவர்களுக்கு உலகத்தையே எழுதி
வைத்து விடுவதைப் போல பேசுவார்கள்.
அப்பாவுக்கு ஆரம்பம் சரியில்லையே என்ற
கவலை மனதைப் போட்டு அரித்தது. குமரு மாமாவும் அவ்வபோது வந்து லாலு மாமாவைக் கேட்க
வேண்டும் என்று நூல் விடச் சொல்லிக் கொண்டே இருந்தது. குமரு மாமாவுக்கும் கூட கல்யாணம்
விசயம் பேசப் போய் ரத்தம் சொட்ட சொட்ட மாணிக்கநாயகத்தைப் பார்த்ததும், சைக்கிளைப்
பறி கொடுத்ததுமான சம்பவங்கள் மனதை நெருடிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் எப்படியாவது
காரியம் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையும் அதற்கு இருந்தது.
லாலு மாமா அடிபட்டுக் கிடந்த போதுதான்
அம்மா குயிலியின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சை எடுத்தது. வைத்தித் தாத்தாவின் அந்திமக்
காலப் படுக்கையில் வைத்துதான் லாலு மாமாவும் குயிலியின் கல்யாணத்தைப் பற்றிப் பேசியது.
லாலு மாமாவிடம் அது குறித்துப் பேச போன போதுதான் மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்டச்
சொட்ட நின்றதும், அப்பா சைக்கிளைப் பறிகொடுத்ததும். இப்படி நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும்
எதிர்பாரததுதான் என்றாலும் அதற்கு ஒரு கோர்வை கொடுத்து காரண காரியத் தொடர்பு கற்பித்து
மேற்கொண்டு கல்யாண விசயத்தைப் பேசுவதில் ஓர் இழுபறியை உருவாகிக் கொண்டேயிருந்தது.
அவ்வபோது வந்துப் பேசிச் செல்லும் தாடி
தாத்தாதான் இந்த இழுபறிக்கும், தாமதத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. "வாத்தியாரே!
கல்யாணங்றது ஆயிரங் காலத்துப் பயிரும்பாங்க! அத ஆரம்பிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆயிரெத்தெட்டுத்
தடைங்க வரத்தான் செய்யும். பெரியவங்க நாமதான் அதையெல்லாம் அனுசரிச்சுக் கொண்டு போவணும்.
ஒரு கல்யாணம் நடத்தி வைக்கிறது ரொம்ப பெரிய புண்ணியம் இல்லியா!" என்றது தாடி
தாத்தா.
அப்பாவுக்கும் அதுதான் சரியாகப் பட்டது.
தாடி தாத்தாவையே அழைத்துக் கொண்டு மேற்கொண்டு சொல்லி விட்டு வந்து விடலாம் என்று
தோன்றியது. இப்படி ஓர் எண்ணம் தோன்றியதுமே அப்பா தாடி தாத்தாவை டிவியெஸ் பிப்டியில்
பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு காலைக் கருக்கலில் கிளம்பி விட்டது.
எதற்காக லாலு மாமா இவ்வளவு நாட்களும் காத்திருந்தாரோ
அது குறித்துப் பேச அப்பாவும், தாடி தாத்தாவும் போனது அவருக்கு பெருமகிழ்ச்சியைத்
தந்தது. வேணி அத்தைக்கும் அது அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. வேணி அத்தையைப் பொருத்த
மட்டில் அது ஆசைப்பட்ட மாதிரி நடக்கும் முதல் குடும்ப விசயம் அதுதான். பெரும்பாலான
குடும்ப விசயங்களில் லாலு மாமாவுக்கும், வேணி அத்தைக்கும் எட்டாம் பொருத்தம்தான்.
லாலு மாமாவின் விருப்பத்தின் அடிப்படையில் வேணி அத்தைக்குப் பிடிக்காத ஓர் அதிகார தோரணையில்தான்
குடும்ப விசயங்கள் நடந்தேறும். இப்போது முதல் முறையாக வேணி அத்தைக்கும், லாலு மாமாவுக்கும்
விருப்பம் ஒத்துப் போயிருந்தது. அந்த வகையில் ரெண்டு பேரின் விருப்பமும் மனம் ஒத்துப்
போய் நடக்கும் முதல் குடும்ப விஷேசம் இதுதான்.
அப்பா போன நேரத்தில் வேணி அத்தை வெளிக்கொட்டகையில்
அதற்கெனவே போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தது. லாலு மாமா வேணி அத்தைக்கான ஸ்டூலில்
உட்கார்ந்திருந்தது. நல்ல வேளையாக குயிலியும் வீட்டுக்குள் இருந்தது. அப்பாவும், தாடி
தாத்தாவுமாக ரெண்டு பேருமாக வந்ததை வைத்து லாலு மாமா ஒருவாறாக விசயத்தை ஊகித்துக் கொண்டு
விட்டார்.
"யாராச்சும் வருவீங்கன்னு எத்தினி
நாளு வாசலப் பாத்துக் கெடந்தேம் தெரியுமா? இப்பதாம் வழி தெரிஞ்சி வந்திருக்கீங்க போல!"
என்றது லாலு மாமா.
"அததுக்கும் நேரம் காலம் வார வேணாமா?
நாம்ம நெனச்சி என்ன பண்றது? மழை பெய்யற நேரத்துலதாம் பெய்யும். கொழந்தைப் பொறக்குற
நேரத்துலதாம் பொறக்கும்!" என்றது தாடி தாத்தா.
"விசயத்தை அப்படி இப்படி நாமளும்
கேள்விப் பட்டேம்! இல்லேங்கல. இருந்தாலும் ஒங்க பக்கத்துலேந்து ஒரு நூல் வாராம நாம்ம
எதயும் பண்ண முடியாது பாருங்க!" என்றது லாலு மாமா.
"பெரியம்பிக்கு முழு சம்மதம். மாமாவப்
பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. பெரியம்பி என்ன சொல்லுதோ, அதாம் அவருக்கு. கலந்துகிட்டுப்
பேசுணோம்னா எல்லாத்தியும் முடிவு பண்ணி நிச்சயத்த வெச்சு கல்யாணத்த முடிச்சுபுடலாம்!"
என்றது அப்பா.
"நாம்ம பேச ஆரம்பிச்சே ரொம்ப நாளாயிப்
போச்சி. வளத்த வேணாம். சட்டுபுட்டன்னு காரியத்த முடிச்சிடலாம்!" என்றது லாலு
மாமா.
"அப்பாடா! அதாங் எல்லாம் ஒத்து வந்திடுச்சிப்
போலருக்கே. அப்புறம் ஏங் வெங்கு வூட்டுக்காரரே தாமசம் பண்ணணும்! சீக்கிராமவே முடிச்சிடுவேம்!"
என்றது வேணி அத்தையும்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள்
இருந்த குயிலி வேகமாக வெளியே ஓடி வந்தது. "முடிப்பீங்க! ந்நல்லா முடிப்பீங்க!
ஏம் கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட ஒரு வார்த்த கேட்க மாட்டீங்களா?" என்றது குயிலி.
"ஒனக்கென்னடி கழுத இதுல பிடிக்காம
போறதுக்கு இருக்கு?" என்றது வேணி அத்தை.
"ஆமாம்! நாம்ம கழுததாம். அதாலதான்
ஒங்க மூத்தப் பொண்ண கவர்மென்டு வேலக்காரனுக்கு கட்டிக் கொடுத்திருக்கீங்க. அவளுக்கு
மட்டும் கவர்மென்டு மாப்பிள்ள. நமக்கு மட்டும் கட்ட அடிக்கிறவனா?" என்றது வெறுப்போடு
குயிலி.
"ன்னாடி பெரிய கவர்மென்டு மாப்பிள்ள?"
என்றது வேணி அத்தை.
"நீயி கவர்மெண்ட்டு வேலயில் இருக்கிறேன்னுதான
அப்பாவே ஒன்னய கல்யாணம் பண்ணிகிச்சு. கட்டிக்கப் போற பொண்ணே கவர்மெண்டு வேலயில இருக்கணுமாம்.
ஆனால் பாரேம் பெத்தப் பொண்ணுக்கு கட்டய அடிக்கிறவம்தாம் மாப்பிள்ளயாம்! இதல்லாம் கன்றாவிய
இல்லியா? ஒங்களுக்கு ன்னா கண்ணா அவிஞ்சா போச்சு!" என்றது குயிலி.
"ந்தா... வார்த்தய அளந்துப் பேசு.
ச்சும்மா கட்ட அடிக்கிறவேம், கட்ட அடிக்கிறவேம்னு சொல்லிட்டு? நீ எந்தக் குடும்பத்துல
பொறந்த. கட்ட அடிக்கிறக் குடும்பத்துலதான. ஒங்க அப்பனுக்கு வேல கெடக்கிலேன்னா அவரும்
கட்டதாம் அடிச்சிட்டுக் கெடந்திருக்கணும்! இன்னொரு வாட்டி இது மாரி பேசுனே நாக்க இழுத்து
வெச்சி அறுத்துப் புடுவேம் பாத்துக்க!" என்றது கோபத்தோடு வேணி அத்தை.
"ம்! அறுப்பே! அறுப்பே! கட்ட அடிக்கிறவனயெல்லாம்
கட்டிட்டு நாம்ம கஷ்டப்பட முடியாது. கவர்மெண்டு மாப்பிள்ளயா இருந்தா பாருங்க. இல்லேன்னா
நாம்ம இப்படியே இருந்திடுறேம்!" என்றது பதிலுக்குப் பதில் குயிலி.
"அப்படின்னா நீயும் ஒங்க அக்கா மாரி
சுகரு வந்தவேம், பி.பி.வந்தவேன கல்யாணம் பண்ணிக்கோ! அப்பதாம் நீயும் அடங்குவே!"
என்றது வேணி அத்தை.
"இந்தாரு ஒனக்கு சுகரு இல்லியா! பி.பி.
இல்லியா! ஒன்னய ன்னா தூக்கியா போட்ருக்கு? நல்லாத்தானே தூக்கி வெச்சிருக்கேம் கல்லுபுள்ளயாராட்டம்!"
என்றது குயிலி.
"பதிலுக்குப் பதிலு பேசுறத நிறுத்துறாளா
பாருங்க! இதெல்லாம் திருந்தாத சென்மங்க. இதுங்களுக்குலாம் நல்லதே பண்ணி வைக்க முடியாது.
கஷ்டத்த தேடிப் போயி கழுத்துல தூக்கிப் போட்டுக்குங்க! அட எங் கெரவத்தே!" என்றது
வேணி அத்தை.
"நீயி கவர்மெண்டுல வேல பாக்கிறவங்கள
கட்டிக்கணும். ஒம் மூத்த மொவளுக்குக் கவர்மெண்டுல வேல பாக்கிறவங்கள கட்டி வெக்கணும்.
ஒம் புள்ளய டாக்டருக்குப் படிக்க வெக்கணும். இந்த வூட்டுல நாம்ம மட்டுந்தானே இளிச்சவாயி.
நாம்ம மட்டும் அன்னின்னிக்குச் சம்பாதிச்சிட்டு வாரவன கட்டிட்டு அல்லாடணும்! பெத்த
தாயி மாரியா பேசுறே நீ! பெசாசு! சரியான பெசாசு நீயி! ஒம் வயித்துல வந்து பொறந்தேம்
பாரு! அட ச்சீ ஏங் கருமத்தே!" என்றது குயிலி.
"பாருங்க ன்னா வார்த்த பேசுறா?"
என்று கண்கள் கலங்கின வேணி அத்தைக்கு. தன் வீட்டின் முன் முதன் முறையாக லாலு மாமா எதுவும்
பேசாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தது.
தாடி தாத்தா அப்பாவின் தொடையைத் தட்டியது.
அது கிளம்பலாம் என்பதற்கான சமிக்ஞை. அப்பா புரிந்து கொண்டதைப் போல, "அப்பொறம்,
நாங்க கெளம்புறேம்! பெறவு பேசிப்போம்!" என்று கிளம்பியது.
"ன்னாங்க நீங்க! எப்போ வந்தாலும்
வாயி நனைக்காமலே போயிட்டு இருக்கீங்க! செத்த உக்காருங்க. நம்மால முடிஞ்சா நாமளே போயி
டீத்தண்ணி போட்டுட்டு வந்திடுவேம். ஒவ்வொண்ணுக்கும் நாம்ம இங்க இருக்குறவங்களல்ல
எதிருபார்த்து ஏமாந்து போயி கெடக்க வேண்டிருக்கு!" என்றது வேணி அத்தை.
"அதல்லாம் ஒண்ணும் வாணாம். நம்ம வூட்டுல
நமக்கு ன்னா இருக்கு. வூட்டுல கொஞ்சம் சொலி கெடக்கு. வாத்தியாரு கூப்டார்னு டபார்னு
கெளம்பி வந்திட்டேம். அங்க சொலிங்க என்ன கெதியில இருக்கோ தெரியல. சுலுவா கெளம்புனா
சோலி ஆகும்!" என்றது தாடி தாத்தா. தாடி தாத்தா அப்படிச் சொன்னதும் அப்பா கிளம்பி
வெளியே நிறுத்தியிருந்த டிவியெஸ் பிப்டிக்கு அருகில் வந்து விட்டது. தாடி தாத்தாவும்
பின்தொடர்ந்து வந்து விட்டது. அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்ய காலை உயர்த்தியது. லாலு
மாமா மெதுவாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
"அது சின்ன பொண்ணு. யோசன பண்ணாம
பேசுது. நீங்க மனசுல வெச்சுக்க வாணாம். இஞ்ஞ நடந்தத வெளில வுட்டுட வாணாம். கொஞ்சம்
கெளன்சிலிங் பண்ணோம்னா சரியாயிடும். நாம்ம பேசிக்கிறேம். நீங்க நிச்சயத்துக்கு தேதிய
பாருங்க. காரியத்த முடிச்சிட்டா எல்லாருக்கும் நல்லது!" என்றது லாலு மாமா.
"செரி! அதல்லாம் பாத்துப்போம் வாத்தியாரே!
நீங்க வூட்டுப்பக்கம் வாங்க!" என்றது தாடி தாத்தா லாலு மாமாவைப் பார்த்தபடி.
"இனுமே பேசுறத்துக்கலாம் ஒண்ணுமில்ல.
நீங்க நாளப் பாருங்க. நாமளும் பாக்குறேம். கலந்துட்டு நிச்சயத்த முடிச்சு கல்யாணத்த
நடத்திர வேண்டியதுதாம். தள்ளிட்டுப் போனா ல்லாம் அப்படியே தள்ளிட்டுப் போயிடும்.
நீங்க இஞ்ஞ நடந்த பேச்சையல்லாம் கவனத்துலயே வெச்சிக்க வாணாம். பெண்ண முழு சம்மதத்தோடு
மணவறயில கொண்டாந்து நிறுத்த வேண்டியது நம்ம பொறுப்பு!" என்றது லாலு மாமா.
"செரிங்க வாத்தியாரே! இப்போ வண்டியக்
கெளம்ப வுடுங்க. எதா இருந்தாலும் பாத்து நல்ல முடிவா பண்ணிப் புடுவேம்!" என்றது
தாடி தாத்தா.
அப்பா வண்டியைக் கிளப்ப, தாடி தாத்தா ஏறி
உட்கார்ந்து கொள்ள வேற்குடியை விட்டு வண்டி வெளியே கிளம்பியது. லாலு மாமாவின் வீட்டைக்
கடந்து யாருமில்லாத தெருவினுடைய மண்ரோட்டில் போய்க் கொண்டிருந்த போது தாடி தாத்தா
அப்பாவைப் பார்த்துக் கேட்டது, "ஏம் வாத்தியாரே! பொண்ணுக்குப் பிடிக்காம கல்யாணத்த
கில்யாணத்த பண்ணி வெச்சி, அது பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிட்டுன்னு வெச்சுங்களேம்!
அந்தப் பாவம் யாரு தலயில விடியும்?"
அப்பா எந்தப் பதிலையும் சொல்லாமல் மணல்
நிறைந்த அந்த மண் சாலையில் வண்டி சறுக்கி விடாமல் ஓட்டுவதில் குறியாக இருந்து ஓட்டிச்
சென்றது.
"ன்னா வாத்தியாரே! கேட்கிறேம். பதிலே
வாரலியே!" என்றது தாடி தாத்தா.
"இந்தக் கல்யாணப் பேச்ச எடுத்தாலே
நமக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு நடக்குது. ஒரே யோசனதாம் போங்க. கொழப்பம் வேற தாங்க முடியல."
என்றது அப்பா.
"அது கெடக்குப் போங்க! நீங்களே இப்படிச்
சொல்லிட்டா ந்நல்லா வெளங்கிடும்!" என்றது தாடி தாத்தா.
"ஆமாங்! அது கெடக்குப் போங்க! ஒங்கள
வெறும் வயித்தோட அழச்சிட்டு வந்து வெறும் வயித்துட கூப்பிட்டுப் போவ முடியாது"
என்று சொல்லி விட்டு டீக்கடையின் முன் அப்பா டிவியெஸ் பிப்டியை நிறுத்தியது.
"நிறுத்த வாணாம் வாத்தியாரே! வூட்டுக்கு
வுடுங்க! வூட்டுல போயி போடச் சொல்லிக் குடிச்சிப்போம்!" என்றது தாடி தாத்தா.
"இத்த அப்டியே வுட்டுடறதாம் ந்நல்லதா
படுது நமக்கு!" என்றது அப்பா.
"அதாஞ் செரி. ஆனா அப்டிலாம் வுட்டுட
முடியுமான்னு யோஜனயாத்தாம் இருக்கு. நாளிக்கு நம்மால தகவல போகலன்னு ஆயிடப் புடாது.
ஒறவு மொறயில கொஞ்ச முன்ன பின்ன இருக்கத்தாம் செய்யும். நமக்கு ஏம் வம்பு வாத்தியாரே?
நடந்தத ஒரு எட்டுப் போயி சொல்லிட்டு வந்திடுங்க! அவங்க முடிவு பண்ணிகிடட்டும்!"
என்றது தாடி தாத்தா.
*****
No comments:
Post a Comment