22 Sept 2023

பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டும் வாசித்து தற்கால வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய முக்கிய நாவலாக இருக்கிறது.

‘கருக்கு’ வடிவத்தை நாவல் என்று சொல்வதை விட பெண்ணின் சுயதீனமாக வெளிப்படும் சுயசரிதை வடிவம் கொண்ட எழுத்து என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தன்னளவில் ஒரு நாவலாக முழுமை பெற்றிருப்பினும் ஒரு குறுநாவல் அளவுக்குரிய 96 பக்கங்களைக் கொண்ட எழுத்து வடிவமாக இது இருக்கிறது.

பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குக் கொண்ட நடையின் மூலம் வாசகருடன் உரையாடுவது போன்ற மொழி நடையினைப் பாமா இந்நாவல் வடிவத்தில் தேர்ந்து கொண்டுள்ளார். அவரின் கதையை அவரது வாயால் கேட்பது போன்ற வடிவத்திலேயே இந்த நாவல் நகர்கிறது.

சாதிய ஒடுக்குமுறையும் சாதிய அடையாளமும் எப்படியெல்லாம் கீழ்ச்சாதி மக்களை அலைக்கழிக்கிறது, சலனமுறச் செய்கிறது, பாதிப்படையச் செய்கிறது என்பதை லெட்சுமண் கெய்க்வாட்டின் ‘உச்சாலியா’ (பழிக்கப்பட்டவன்), லட்சுமண் மானேயின் ‘உபாரா’ (அன்னியன்) ஆகிய மராத்திய தலித் எழுத்துகளின் மூலம் வாசித்து அறிந்தவர்களுக்கு அதே போன்ற மனதைக் கனக்க செய்யும் மனோ வதையை பாமாவின் ‘கருக்கு’ உண்டாக்குகிறது.

பாமாவின் தமிழ்ப் பெண்ணெழுத்து மூலமாக தமிழ்ச் சூழலில் நிகழும் சாதிய உபாதைகளை ஓர் அனுபவக் கதையாக ‘கருக்கு’ மூலமாக வாசித்தறிய முடிகிறது.

தீண்டாமையின் வேதனையையும், சாதியத்தைப் பயன்படுத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்ளும் போக்கையும் வெகு எதார்த்தமாக நாவலில் பாமா பேசுகிறார். பிள்ளைப் பருவத்தில் அவருடைய சொந்த மண்ணில் தொடங்கி, குழந்தைமை மாறாமல் பள்ளியில் படிக்கும் காலந்தொட்டு வேலைக்குப் போன பிற்பாடும் கடவுளின் சேவைக்காகத் தன்னை ஒரு கன்னியாஸ்திரியாக அர்ப்பணித்த பின்பும் சாதியத்தால் கௌரவமில்லாமல், மனப்புழுக்கத்தோடு வாழும் வாழ்வைப் பாசாங்கற்ற மேற்பூச்சுகள் இல்லாத எழுத்துகளால் பாமா எழுதிச் செல்கிறார்.

அவரது சின்னஞ்சிறு வயதின் கிராமத்து வாழ்க்கையில் பசி, பட்டினி, பலரோடு கூடிப் பரவசமாக இருந்த நாட்கள், கிராம மக்களின் நம்பிக்கைகள், ஆரவாரங்கள், சச்சரவுகள், சண்டைகள், குற்றச்சாட்டுகள், படித்த விசயங்கள், நம்பிய தெய்வங்கள், செபித்த ஜபங்கள் எனப் பலவற்றைப் பதிவு செய்கிறார்.

எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும் உழைப்பானது உறிஞ்சப்பட்டாலும் உயிர்த்துடிப்பும் உயிரோட்டமும் நிறைந்த வாழ்க்கையுடைய கிராமத்தையும் அதே கிராமத்தில் பறையருக்கும் சக்கிலியருக்கும் கல்லறை தொடர்பாக நடக்கும் சண்டைகளையும், பறையருக்கும் பள்ளருக்கும் நடக்கும் சண்டைகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் வலிகளையும், காவலர்களின் அடக்குமுறைகளுக்குப் பயந்து ஆண்களற்று வெறிச்சோடி ஒடுங்கிப் போகும் வாழ்க்கையையும் பதிவு செய்கிறார்.

காவலர்களின் அடக்குமுறையால் ஆண்கள் ஊருக்குள் வர முடியாத சூழலில் ஒரு சாவு நிகழ்ந்து விட அந்தச் சாவிற்குச் சாதூர்யமாகக் காவலர்களின் கண்களில் படாமல் சேலையைக் கட்டிச் சம்பந்தப்பட்டவரை அழைத்து வந்து அடக்கம் செய்யும் பெண்களின் சாதூர்யத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. இப்படியாக ஒடுக்கப்பட்ட கீழ்ச்சாதிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள், சண்டைகள், உள்ளடி வேலைகள் போன்றவற்றையும் தன்னுடைய வாழ்க்கையைக் கடந்து வரும் போக்கில் பாமா எடுத்துச் சொல்கிறார்.

பாத்திரம் பண்டம் புழங்குவதில், பேருந்தில் இருக்கைகளில் அமர்வதில், கடவுளுக்காகச் சேவை செய்யும் இடங்களில், அடக்கம்செய்யும் கல்லறைகளில் என்று எல்லா இடங்களிலும் விடாமல் துரத்திக் கேவலப்படுத்திச் சாகிற வரை சீரழிக்கும் சாதிய அடையாள அடுக்குகள் குறித்தான சம்பவங்களைப் புட்டு புட்டு வைத்து எந்த விதத்தில் மேல்சாதி உயர்ந்தது, கீழ்ச்சாதி தாழ்ந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இதே நிலை பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதால் தங்களைத் தாங்களே அடிமைகளாக, அசிங்கமானவர்களாக, தீண்டத்தகாதவர்களாகக் கருதிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும் உளவியல் சிக்கலையும் பாமா எடுத்துச் சொல்கிறார்.

எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பாமாவின் தன் வரலாற்று எழுத்துகளில் பதிவாகிறார்கள். என்னதான் ஆண்கள் பொறுப்பின்றி இருந்தாலும், சண்டைகளில் ஈடுபட்டுச் சிறைகளுக்குப் போனாலும் நிர்கதியான சூழல்களிலும் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவது இந்தப் பெண்களின் புத்திசாலித்தனமும் உழைப்பும்தான் என்பதை எந்தச் சமரசமும் இன்றிப் பதிவு செய்கிறார். விடிந்ததிலிருந்து விடியல் மறைந்து அஸ்தமனம் ஆகும் வரை உழைப்புதான் இந்தப் பெண்களுக்கு. அவ்வளவு உழைப்பவர்கள் எவ்வளவு சம்பாத்தியம் பண்ணியிருக்க வேண்டும்? அந்தச் சம்பாத்தியத்தில் எவ்வளவு வளமாக வாழ்ந்திருக்க வேண்டும்? எவ்வளவுகௌரவமாக இருந்திருக்க வேண்டும்? ஆனால் அதுதான் இல்லை. அவ்வளவு வந்து சேர வேண்டிய சம்பாத்தியம், வளம், கௌரவம் அனைத்தையும் சாதியமானது காலம் காலமாக கூலி தருவோருக்கு அடிமைகளாக மாற்றி வைத்திருக்கிறது என்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களைத் கடைத்தேற்றம் செய்வதாக அமையும் மதமாற்றமும் சாதிய மாற்றத்தை அனுமதிப்பதில்லை. ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் வாங்கிக் கடவுளுக்கும் கடவுளோடு தொடர்புடைய சாமியார்களுக்கும் படைக்கச் செய்கிறதே தவிர அவர்களைத் தின்ன அனுமதிப்பதில்லை. எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் அவர்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஆளப்படுகிறார்கள் என்பதை நிகழ்சாட்சியாக நின்று பாமா சுட்டுகிறார்.

அன்பான கடவுள் முன்பும் அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். படித்த முடித்து அறியாமையை விலக்கிக் கேள்விகளை எழுப்பும் இடத்திலும் கீழ்படிதல் என்ற சொல்லாடலால் மீண்டும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். இப்படி தன் வாழ்வில் சந்தித்த அனைத்தையும் பாமா ‘கருக்கு’ நாவலில் பதிவு செய்கிறர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு தெம்பு, ஒரு வீம்பு, வாழ முடியும் என்ற நம்பிக்கை, வாழ வேண்டும் என்ற ஆசை இவைதான் தன்னை வழிநடத்திக் கொண்டிருப்பதாக நாவலை முடிக்கிறார்.

எல்லாவற்றையும் விட்டு இறுதியாக வெளியேறிய பின்னும் இவை அனைத்து குறித்தும் அர்த்தப்பாட்டோடு சிந்திக்க முடிவதே இழப்பின் வெற்றி என்பதாக தன்னுடைய எழுத்தை முன் வைக்கிறார்.

ஒரு நாவலாக இந்த ‘கருக்கு’ பாமாவை அடையாளப்படுத்துகிறது. இந்த அடையாளத்துக்காக அவர் பல அவமானங்களையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தித்து இருக்கிறார். சொந்தக் கிராமத்து மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஏசப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிறார்.

நம்முடைய சமூகம் எந்த அளவுக்குச் சாதியம் புரையோடிப் போன சீக்கால் எளியோர்களைப் பாதித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு பாமாவின் ‘கருக்கு’ நேரடி சாட்சியமாகவும், காலத்தின் ஆவணமாகவும் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் சாதிய வெம்மையை அறிந்து கொள்ள நினைப்பவர்கள் பாமாவின் ‘கருக்கு’ நாவலை ஒன்றுக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

நூல் வெளியீடு குறித்த விவரங்கள் :

பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018 வலைதளம் : www.thamizhbooks.com மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

*****

21 Sept 2023

உங்கள் உணவு வரலாற்றை நீங்களே எழுதுங்கள்!

உங்கள் உணவு வரலாற்றை நீங்களே எழுதுங்கள்!

நோய்கள் வராமல் இருப்பதற்கு ஒருவர் எப்படிப்பட்ட உணவுமுறையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இது குறித்துப் பிரமாதமாக ஆய்வு செய்யப்பட்டு வெளிவரும் முடிவுகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. எவ்வளவு சிறந்த ஆய்வு முடிவுகள் என்றாலும் ஒழுக்கமும் கட்டுபாடும் இல்லாமல் போனால் உங்களுக்கு உதவாமல் போய் விடும்.

என்னைக் கேட்டால் உணவுமுறையில் ஒழுக்கமும் கட்டுபாடும்தான் உயர்வான ஆய்வு முடிவுகள். இதுவரை நீங்கள் உணவு உண்ட அனுபவத்திலிருந்து எந்தெந்த உணவு வகைகள் உங்களுக்கு ஒத்துக் கொள்ளும், எந்தெந்த உணவு வகைகள் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எவ்வளவு உண்ண வேண்டும் என்ற அளவும் இதற்கு முன் ஏற்பட்ட செரிமான கோளாறுகளிலிருந்து உங்களுக்குத் தெரியும்.

உண்ணும் உணவுக்கேற்ப உடல் சார்ந்த உழைப்பு அல்லது உடல் சார்ந்த பயிற்சிகள் இருக்க வேண்டும் என்பது பொதுவான மாற்ற முடியாத விதியாகும். உங்கள் உடலின் ரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், கழிவு நீக்கம் போன்றவற்றைச் சீராக வைத்துக் கொள்ளவும் உழைப்பும் உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டையும் தவிர்த்து விட்டு தேர்ந்த ஆய்வு முறையிலான உணவு முறையைப் பின்பற்றுவது கூட உங்களுக்கு எந்தப் பயனும் தராது.

நமது தமிழ்நாட்டு உணவு முறையே முறைபடுத்தப்பட்ட வகையில்தான் இருக்கிறது. இந்த உணவையே உங்கள் பசிக்கும் உடல் உழைப்புக்கும் ஏற்ற வகையில் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் போதுமானது.

உங்கள் உணவை நீங்கள் தயாரித்துக் கொள்கிறீர்களா என்பதும் முக்கியம். உங்கள் உணவுப்பொருள் எப்படி விளைவிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.

ரசாயனத்திலேயே விளைவிக்கப்படும் உணவுப்பொருள் உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ள பெரிய அறிவியல் அறிவெல்லாம் தேவையில்லை.

உங்கள் உணவு சுகாதாரக் கேடாகவும் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது என்றால் அதுவும் ஏற்ற உணவல்ல என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அதிபுத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

எளிமையான இயற்கையான முறையில் விளைந்த உணவுப் பொருட்களை நீங்கள் அறிந்து எளிமையான முறையில் உங்கள் கண்பட நீங்களே சமைத்து உண்பதைப் போன்ற ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு வேறு என்ன இருக்கிறது?

இப்படி நீங்களே பார்த்துப் பார்த்துச் செய்து உணவைத் தயாரித்து உண்டாலும் அதன் அளவு என்பது முக்கியமானது. அதீத உணவு உள்ளீடானது அதீத நோய்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. ஆக நீங்கள் எப்படி எந்த வகையில் சுற்றி வந்தாலும் உணவு குறித்த ஒழுக்கமும் கட்டுபாடும் முக்கிய இடம் பிடிக்கிறது.

இயற்கையாக விளைவித்தது, நீங்களே சமைத்தது என்றாலும் அளவைத் தாண்டி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் நீங்கள் நோய்வாய்ப்பாடுவதை நீங்களே நினைத்தாலும் தடுத்துக் கொள்ள முடியாது.

எவ்வளவுதான் ஆரோக்கியமான சத்தான உணவு என்றாலும் உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை உண்டால் நீங்கள் நோயிலிருந்து தப்ப முடியாது. இதனால்தான் உணவைப் பொருத்த வரையில் ஒழுக்கமும் கட்டுபாடும் முதன்மையாகிறது.

இன்றைய சிற்றுண்டிக் கலாச்சாரத்திற்கும், மீதூண் உண்ணும் போக்கிற்கும் ஒழுக்கமும் கட்டுபாடும் நல்ல மருந்துகள். ரசாயன உணவாக இருந்தாலும் அளவறிந்து உண்பதால் நோய்வாய்ப்படும் போக்கு குறைவாகவே இருக்கும். இயற்கையான உணவாக இருந்தாலும் அளவை மறுதலித்தால் அது நோய்ப்பாட்டில்தான் கொண்டு போய் நிறுத்தும்.

உங்களுக்கான உணவுகளை அறிந்து கொள்ளவும் உணவு எடுத்துக் கொள்ளும் முறைகளை அறிந்து கொள்ளவும் நீங்கள் உண்ணும் உணவுகளையும் அந்த உணவுகளையும் உண்ட பின் உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் பட்டியலிட்டுக் குறித்துக் கொண்டு வாருங்கள்.

அந்தப் பட்டியல்தான் உங்களுக்கான உணவு வழிகாட்டி மற்றும் ஆலோசகர். அந்தப் பட்டியலின்படி மாற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் உங்களுக்கான சரியான உணவுப் பழக்க முறையை நீங்கள் உருவாக்கிக் கொண்டு விடலாம்.

ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதுவதைப் போல அந்த நாட்குறிப்பின் ஒரு பகுதியாக உணவுக்குறிப்பையும் எழுதி வாருங்கள். அதுதான் உங்கள் உணவின் வரலாறு.

மனிதர்கள் வரலாற்றிலிருந்தே பாடம் கற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் உண்ணும் உணவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள உங்கள் உணவு வரலாற்றை நீங்கள் பதிவு செய்து கொண்டு வருவது முக்கியமானது.

நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் நீங்கள் உண்ட உணவுப்பட்டியலே உங்களுக்கான பல மருத்துவ தரவுகளைத் தரும். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ப உங்கள் உணவு முறையை எப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவையும் தரும். பதிவு செய்து கொண்டு வருவதன் பலன் இதுதான். இந்தப் பலனால் விரைவில் உங்களுக்கு நீங்களே ஒரு மருத்துவராகி விடுவீர்கள்.

உங்கள் உணவு முறையை உங்களுக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்துக் கொள்வதுதான் உங்களுக்கான மருத்துவ முறை என்பதை உங்கள் உணவு பதிவுகளைச் செய்து வரும் போது புரிந்து கொள்வீர்கள். நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள உங்கள் உணவு வரலாற்றுப் பட்டியலை அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் எந்தெந்த உணவெல்லாம் உங்கள் உடல் நலத்தை எப்படியெல்லாம் வைத்திருந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

உங்கள் உணவையும் அதன் விளைவாக உங்கள் உடல் மாற்றங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் உண்ணும் உணவு உங்கள் கட்டுபாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள். அந்தக் கட்டுபாட்டைத்தான் ஒழுக வேண்டும் என்பதில் தெளிவு கொள்வீர்கள். இந்தக் கட்டுபாட்டையும் ஒழுக்கத்தையும் நான் உங்களுக்கான மிகச் சிறந்த உணவு முறையாக மட்டுமல்லாமல் மருத்துவ முறையாகவும் பரிந்துரைக்கிறேன்.

இப்படி ஒரு முறையைக் கையாளுவதற்காக நீங்கள் என்ன பெரிதாகச் செலவு செய்து விடப் போகிறீர்கள் ஒரு குறிப்பேட்டையும் தூவலையும் வாங்குவதைத் தவிர? இந்த முறை உங்களுக்கான மருத்துவச் செலவையும் பொருத்தமற்ற உணவுச் செலவுகளையும் அவ்வளவு மிச்சம் செய்து தரும். இந்த மிச்சம் உங்களுக்கான பணச் சம்பாத்தியம் மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கான சம்பாத்தியமாகவும் இருக்கும்.

*****

20 Sept 2023

கூட்டுவதையும் குறைப்பதையும் தானே செய்து கொள்ளும் குடி

கூட்டுவதையும் குறைப்பதையும் தானே செய்து கொள்ளும் குடி

குடிப்போர் அதிகரிக்காத வண்ணம் குடிப்போரைக் குடியே முறை வைத்துக் கொன்று கொண்டு இருக்கிறது.

குடிப்போர் எண்ணிக்கை அதிகமாகும் போதெல்லாம் குடிப்போரைக் குடியே கொன்று தீர்க்கிறது. இப்படி எண்ணிக்கை குறையும் போதெல்லாம் புதுக்குடிகாரர்களை ஈர்த்து முன்னை விட குடிப்போரின் எண்ணிக்கையைக் குடி அதிகம் பண்ணி விடுகிறது.

நானறிந்து கொடூரமான குடி மரணங்களை இதுவரை மூன்று பார்த்து விட்டேன். இந்த மூன்றும் என் கண்ணுக்குத் தெரிந்து நடந்த நேரடியான குடி மரணங்கள். இந்த மரணங்களைத் தடுக்க நானோ, சுற்றியிருந்தவர்களோ, உறவினர்களோ, இந்தச் சமூகமோ எதுவும் செய்ய முடியவில்லை. குடியால் மரணத்தைத் தழுவிய அந்த மூன்று பேரும் மனம் போன போக்கில் யாருடையப் பேச்சையும் கேட்காமல் அல்லது கேட்பதாகக் கூறி பின்பு கேட்காமல் குடித்துக் கொண்டே இருந்தார்கள்.

தாங்கள் குடிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். உழைத்துக் களைத்த அவர்ளுக்கு அல்லது இந்தச் சமூகத்தாலும் உறவுகளாலும் மன உளைச்சல் அடைந்த அவர்களுக்கு அல்லது தங்களை மனமகிழ்வு செய்து அவ்வபோது மீட்டுக் கொள்ள வேண்டிய அவர்களுக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பாகக் குடியைப் பார்த்தனர்.

குடித்துக் குடித்தே இந்த மூன்று பேரும் மரணத்தைத் தழுவப் போகிறார்கள் என்பது அவர்கள் மரணமடையப் போகின்ற சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அம்மூவரையும் சுற்றியிருந்த எல்லாருக்கும் தெரிந்திருந்தது. அவர்களுக்கும் கூட தெரிந்திருந்தது. கசாப்புக் கடையில் ஆடு கருணை மனு போட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது போலத்தான் இந்த மூன்று பேரின் மரணங்களைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்று யாராலும் வேண்டுகோள் விடுக்க முடியாமல் போய் விட்டது.

என் கண்ணுக்குத் தெரிந்த பார்த்த அந்த மூன்று குடி மரணங்களைப் பெயர்களோடு இப்போது சொல்கிறேன்.

ஒன்று பக்கிரி.

இரண்டு பக்கிரியின் மகன்.

மூன்று பரசு.

இதில் கொடுமை என்னவென்றால் மூன்று பேருமே நல்ல உழைப்பாளிகள். தேர்ந்த வேலைகாரர்கள்.

மூன்று பேருமே தங்களைக் குடிக்குக் காவு கொடுத்தார்களா, நாங்கள்தான் காவு கொடுத்து விட்டோமா என்று இப்படியும் அப்படியுமாகக் குழம்பிக் கலங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு ஆறுதல் என்ன இருக்கிறது?

இன்னும் நிறைய மரணங்களுக்குக் குடியானது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வகைகளில் காரணமாக இருக்கிறது. நான் மேலே குறிப்பிடும் மூன்று மரணங்களும் குடியால் நிகழ்ந்த அப்பட்டமான மரணங்கள். இந்த மூன்று மரணங்களுக்கும் குடியைத் தவிர வேறு எந்தக் காரணமும் கடுகளவு கூட கிடையாது.

மூன்று பேரையும் மரணம் நெருங்குகிறது என்பது தெரிந்தும் அதுவும் குடியால்தான் மரணம் நெருங்குகிறது என்பது தெரிந்தும் அவர்களால் குடியை விட முடியாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். குடித்துக் குடித்து மரணிப்பதை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்களோ என்னவோ? அதாவது விஷம்தான் சாவை உண்டாக்குகிறது என்று தெரிந்தும் அந்த விஷம் தரும் போதைக்காகச் சாவைப் புறக்கணித்தவர்கள் அவர்கள். அவர்கள் குடி அடிமைகள் ஆகி விட்டார்கள் என்று சொல்வதா, குடி நோயாளிகள் ஆகி விட்டார்கள் என்று சொல்வதா என்றால் இரண்டுமே உண்மைதான்.

பக்கிரிக்கு எப்போதாவது குடிக்கும் பழக்கம்தான் இருந்தது. அவர் எப்போது காரைக்காலுக்கு வேலைக்குப் போனாரோ அப்போதே அவரை முழு நேர குடிகாரராகக் குடி மாற்றி விட்டது. அதற்குப் பின்பு ஊருக்கு வரும் போதெல்லாம் சதா சர்வ காலமும் குடித்துக் கொண்டிருந்தார்.

எந்த ஊருக்கு வேலைக்குப் போனாலும் அந்த ஊரில் டாஸ்மாக்கைக் கண்டுபிடிப்பது பக்கிரிக்குப் பரீட்சயமாகி விட்டது. ஒவ்வோர் ஊரையும் டாஸ்மாக்கை வைத்து அடையாளம் சொல்லுக்கு அளவுக்குப் பக்கிரி மாறிப் போனார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தண்ணீரும் மதுவும் ஒன்றாகி விட்டது. தாகத்திற்குத் தண்ணீரைக் குடிப்பதைப் போல மதுவை அருந்தத் தொடங்கி விட்டார்.

காலையில் எழுந்ததும் டீயைக் குடிப்பதைப் போல அவர் டாஸ்மாக் பானத்தைக் குடித்த போது பார்த்த எல்லாரும் மிரண்டு போனோம். தடுக்கப் போன எங்களை எல்லாம், “இதெல்லாம் என்னை என்ன பண்ணி விடும்ன்னு நெனைக்குறீங்க? எமகாதகன் இந்தப் பக்கிரி. இதெயெல்லாம் ச்சும்மா இப்படி செரிச்சி அப்படித் துப்பிடுவேனாக்கும்.” என்றார்.

ஒரு கட்டத்தில் மகனும் சேர்ந்து கொள்ள பக்கிரியின் குடி வாழ்க்கை குஷியாகப் போனது. குடியால் பக்கிரி சாவதற்கு இருபது ஆண்டுகள் பிடித்தன. அவருடைய மகனுக்கு அந்தப் பாக்கியம் இல்லை. பக்கிரி போய் சேர்ந்த இரண்டே வருடங்களில் போய்ச் சேர்ந்தார்.

பரசு அண்ணனும் மொடாக் குடியன் கிடையாது. ஏதோ விஷேஷம், விருந்து என்றால் கூட்டாளிகளோடும் சோக்காளிகளோடும் சேர்ந்து குடிப்பதோடு சரி. படிப்படியாக ஒவ்வொரு இரவும் வேலை முடிந்ததும் குடிக்க ஆரம்பித்தது பரசு அண்ணன். அப்படியே ஆரம்பித்துக் காலையில் குடிக்காமல் வேலையைப் பார்க்க முடியவில்லை என்று குடிக்க ஆரம்பித்தது.

இரண்டு முறை கல்லீரல் கெட்டுப் போய் மருத்துவரிடம் தூக்கிப் போனோம். புண்ணியவான் அந்த மருத்துவர். இரண்டு முறையும், இத்தோடு குடியை விட்டால் பிழைத்துக் கொள்வாய் என்று எச்சரித்தபடி எப்படியோ சரி செய்து விட்டார். மூன்றாவது முறை கொண்டு போன போது கைவிரித்து விட்டார். எங்கேயோ தூக்கிக் கொண்டு செல்லுங்கள், நான் பார்க்க முடியாது என்று முகத்தில் அடித்தாற் போல கூறி விட்டார். அவருக்கு இதற்கு மேல் பரசு அண்ணனைக் காப்பாற்ற முடியாது என்பதுதெரிந்திருந்தது.

நாங்கள் பரசு அண்ணன் மீது கோபப்படுவதற்குப் பதிலாக அந்த மருத்துவர் மேல் கோபப்பட்டோம். அவரிடம் சண்டையும் பிடித்தோம். அவர் மருத்துவம் செய்ய முடியாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் அப்போதும் காப்பாற்றியிருக்கலாம் எங்கள் நம்பிக்கை. நாங்கள் எங்கள் மீதும் கோபப்பட்டிருக்க வேண்டும். இரண்டு முறை ஒரு மருத்துவர் எச்சரிக்கை தந்து காப்பாற்றி அனுப்புகிறார் என்றால் பரசு அண்ணனைக் குடிக்காமல் வைத்திருக்க வேண்டியது எங்கள் பொறுப்புதான், எங்கள் கடமைதான். எங்களால் அந்தப் பொறுப்பையும் காப்பாற்ற முடியவில்லை, அந்தக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை.

முன்பெல்லாம் ஊருக்கு ஒன்று இருந்த டாஸ்மாக்குகள் இப்போது இரண்டு, மூன்று என்று கூட இருக்கிறது. இந்த டாஸ்மாக்கிற்குப் பரசு அண்ணனை விடாமல் காவல் காத்தால், அது யாருக்கும் தெரியாமல் இன்னொரு டாஸ்மாக்கில் போய் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தது. அதை விட இன்னொரு வேதனையும் இதனுள் பொதிந்து இருக்கிறது. சற்றுக் கூடுதல் விலை கொடுத்தால் டாஸ்மாக் சரக்கை நீங்கள் பெட்டிக்கடையிலும் வாங்கலாம்.

காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர் கைவிட்டு விட்டார் என்று விட்டு விட முடியுமா? எங்களுக்கு மனசு கேட்காமல் பரசு அண்ணனைத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றோம். பிறகு சென்னைக்கு ஸ்டான்லிக்குக் கொண்டு சென்றோம். எம்.எல்.ஏ., எம்.பி. என்று எல்லாரிடமிருந்தும் சிபாரிசுகளையும் கடிதங்களையும் வாங்கிக் கொண்டு போய் எவ்வளவோ முயற்சித்தோம். கடைசியில் பரசு அண்ணனைப் பிணமாகத்தான் தூக்கிக் கொண்டு வர முடிந்தது. சென்னையிலிருந்து பரசு அண்ணன் சடலமாக ஊர் திரும்பியது.

இப்போது ஊரிலிருந்து திருவாரூர் செல்வதற்குள் நானறிந்து நான்கைந்து இடங்களில் டாஸ்மாக்குகளைப் பார்க்க முடிகிறது. நானறியாமல் எத்தனை இடங்களில் டாஸ்மாக் இருக்கிறதோ? அவர்களில் யார் பக்கிரி, யார் பக்கிரியின் மகன், யார் பரசு அண்ணன் என்பதுதான் தெரியவில்லை. சமயங்களில் அங்கிருந்து பார்ப்பவர்கள் அனைவருமே இந்த மூன்று பேரின் சாயல்களிலும் தெரிகிறார்கள். இந்த மூன்று பேரும் இறந்த வயது அப்படி. பக்கிரி செத்த போது ஐம்பத்து எட்டு வயது. பக்கிரியின் மகன் இறந்த போது இருபத்து இரண்டு வயது. பரசு அண்ணன் இறந்த போது நாற்பத்தைந்து வயது.

நம் தமிழ்ச் சமூகத்தில் டாஸ்மாக்கைத் திறப்பது சுலபமாகவும் மூடுவது ரொம்பவே கடினமாகவும் இருக்கிறது. காசிருந்தால் யார் வேண்டுமானாலும் டாஸ்மாக் சரக்கை வாங்கிக் குடிக்கலாம் என்ற நிலையும் இருக்கிறது.

அன்றொரு நாள் பள்ளி மாணவி ஒருத்தி பள்ளிச் சீருடையிலேயே டாஸ்மாக் சரக்கை வாங்கிக் குடித்து விட்டு டாஸ்மாக்கிற்குச் சற்று தூரத்தில் சாலையோரத்தில் மயங்கி விழுந்து கிடந்தாள். பாவம் அவளுக்கென்ன மனக்கஷ்டமோ என்று இதை எடுத்துக் கொள்வதா? இதெல்லாம் தீர்க்கவே முடியாத சமூகக் கஷ்டம் என்று விட்டு விடுவதா? ஆண்களுக்கு உள்ள சலுகை பெண்களுக்கு இல்லையா என்று சம உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசுவதா? படித்துக் கொண்டிருக்க வேண்டிய தலைமுறை குடித்துக் கொண்டிருக்கிறது என்று வேதனைபட்டுக் கொண்டு அப்படியே விட்டு விடுவதா?

அந்த மாணவியை ஒரு முச்சக்கர வாகனத்தில் தூக்கிப் போட்டு வீடு கொண்டு சேர்த்தோம். இந்தக் காட்சியைப் பார்த்ததும் குடியால் கணவனை இழந்த அந்த மாணவியின் தாய் தலையில் அடித்துக் கொண்டு அரற்றிக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள். “கடெசியில தெய்வமும் என்னெயக் கைவிட்டுடுச்சே!” என்று அவர் அடிவயிற்றிலிருந்து சத்தமிட்டு அழுத போது பிரக்ஞையின்றி நிற்கத்தான் எங்களால் முடிந்தது. ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் வராமல் நாங்கள் சிரமப்பட்டோம்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது காவல்துறை மீளாய்வு கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்ணீரும் கம்பலையும் இந்தக் காட்சியைச் சொல்லிப் பார்த்தோம். அப்போது உயர் காவல் அதிகாரியின் கண்களில் சில சொட்டுக் கண்ணீரைப் பார்க்க முடிந்தது.

மூன்று வாரங்களுக்குள் அல்லது மூன்று மாதங்களுக்குள் என்கிற வாக்குறுதியோ அல்லது உறுதிமொழியோ மீளாய்வுக் கூட்டத்தின் முடிவில் எப்போதும் வழங்கப்பட்டாலும் இந்தக் காலக்கெடு என்பது இன்றிலிருந்து மூன்றாவது வாரமா / மாதமா அல்லது மூன்று வாரம் / மாதம் கழித்து வரும் மூன்றாவது வாரமா / மாதமா அல்லது மூன்றுக்கும் மூன்று என்று கழிந்து வந்து கொண்டே இருக்கும் மூன்றாவது வாரமா / மாதமா என்பது விடை காண முடியாத புதிர் போன்றதுதான்.

இந்த டாஸ்மாக்கை நீங்கள் எதுவும் செய்து விட முடியாது. அது பள்ளிக்கு வெகு தொலைவில் இருக்கிறது. சட்டப்படியான பாதுகாப்பு அந்த டாஸ்மாக்கிற்கு இருக்கிறது. ஆனால் மாணவர்கள் தேடிச் செல்கிறார்களே! எப்படியோ வாங்குகிறார்கள், குடிக்கிறார்கள், வீழ்ந்து கிடக்கிறார்கள்.

சில நேரங்களில் இதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களும் நடக்கின்றன. கடைசியில் பேச்சு வார்த்தையில் எல்லாம் முடிந்து போய் விடுகிறது. சில வாரங்களோ சில மாதங்களோ காணாமல் போகும் டாஸ்மாக் முன்னை விட வீரியமாக வேறு இடத்தில் முளை கொண்டு விடுகிறது.

ஒரு மரத்தை மட்டும் வெட்டுவதால் அதன் ஓராயிரம் விதைகள் அழிந்து விடுவதில்லை. இது நல்லதிற்கும் பொருந்துகிறது, டாஸ்மாக் போன்ற சங்கதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் அப்படியே பொருந்துகிறது.

*****

19 Sept 2023

பணத்தைச் சேர்ப்பதில் பின்னடைவோர் கவனத்திற்கு…

பணத்தைச் சேர்ப்பதில் பின்னடைவோர் கவனத்திற்கு…

ஏன் பணம் சேர்ப்பதில் பின்னடைவு?

ஏன் ஒருவரால் எதிர்பார்க்கும் அளவுக்குப் பணத்தைச் சேர்க்க முடியவில்லை என்றால் பாதி வாழ்க்கையை வாழ்ந்து முடித்த பின்புதான் அவருக்கு பணத்தின் அருமையே தெரிகிறது. பாதி வாழ்க்கை வரை பணத்தைச் சேர்ப்பதில் கவனமற்று இருந்த ஒருவர் தன்னுடைய மீதி வாழ்க்கையில் பணத்தைச் சேர்க்க முற்படுகிறார். இதற்குச் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மேற்பூச்சுகளால் மறைக்கும் தன்மை

பணத்தைக் கையாளும் முறை மற்றும் செலவழிக்கும் முறைகளை நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அதில் சாமர்த்தியமான பொய்கள் அல்லது பெருமை பேசும் தம்பட்டங்களே நிறைந்திருக்கின்றன. இதனை மேற்பூச்சுகளால் வெளிப்பட வேண்டிய மற்றும் உணர வேண்டிய உண்மையை நமக்கு நாமே மறைத்துக் கொள்ளும் தன்மை எனலாம். இவ்வித அணுகுமுறை பணத்தைப் பற்றி நேர்மறையாகப் புரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய எதிரியாகும்.

பணம் குறித்த எதிர்மறைப் பார்வை

பணம் குறித்த வேறு விதமான மனப்பான்மையும் பலரிடம் இருக்கிறது. நேர்மையான முறையில் பெரும் பணத்தைச் சேர்க்க முடியாது என்ற பார்வை அதில் முக்கியமானது. பெரும்பணத்தைச் சேர்த்த ஒருவர் மற்றவர்களையோ, சமூகத்தையோ, அரசாங்கத்தையோ ஏமாற்றித்தான் அதைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது. அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார். ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பது முக்கியமானது.

பணம் குறித்த இப்பார்வைப் பணத்தைச் சேர்க்க முடியாத எதிர்மறைப் பார்வையினின்றோ, பெரும் பணம் படைத்தவர்களைப் பார்த்து உண்டாகும் ஏக்கப் பெருமூச்சாலோ ஏற்படுவதாகும். இத்தகைய எதிர்மறைப் பார்வை பணம் சேர்ப்பது குறித்தான முழுமையான ஈடுபாட்டைக் குறைத்து விடுகிறது.

தத்துவார்த்த நிலைப்பாடுகளால் உண்டாகும் பின்னடைவு

இயல்பாகவே இந்தியச் சமூகத்தில், ‘வரும் போது எதை எடுத்துக் கொண்டு வந்தோம், போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகப் போகிறோம்’ என்ற பணம் குறித்த தத்துவார்த்த நிலைப்பாடும் உண்டு. இத்தகு நிலைப்பாடு பணத்தைச் சேர்ப்பது குறித்த மனரீதியான ஒரு பின்னடைவை உண்டாக்கக் கூடியது.

மாறும் பார்வைகளைக் கவனியுங்கள்

மேற்படி தத்துவ நிலைப்பாடுகள் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. பணம் சேர்ப்பது குறித்த உணர்வுநிலையை அவை இறுக்கிப் பிடிக்கின்றன.

ஆனால் பாருங்கள் காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

வரும் போது நீங்கள் எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்றால் உங்கள் பெற்றோர் பணம் குறித்த அசட்டைத்தனத்தோடு இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகிறோம் என்று நீங்கள் இருந்து விட்டால் நீங்கள் பணம் குறித்த அசட்டைத்தனத்தோடு இருந்து விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பாரம்பரியப்படுத்த வேண்டிய பணச் சேமிப்புப் பழக்கம்

ஒவ்வொருவராலும் டாட்டா, பிர்லா அளவுக்குப் பணத்தைச் சம்பாதித்துச் சேமித்து விட முடியாது என்பது வேண்டுமானாலும் உண்மையாக இருக்கலாம். அவரவர் சந்ததிக்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்து விட்டுச் செல்லலாம். அது கூடுதலா, குறைவா என்ற கேள்வி இரண்டாம் பட்சம்தான். அதன் மூலம் உங்கள் சந்ததிக்குச் சேமிப்பு என்ற பழக்கத்தை நீங்கள் பாரம்பரியப்படுத்துகிறீர்கள். சேமிப்பை உங்கள் குடும்பப் பண்பாடாக வளர்க்கிறீர்கள். அதுதான் முக்கியம்.

பணம் குறித்த ஆக்கப்பூர்வ பார்வையை வளர்ப்பது

பணம் குறித்த ஆக்கப்பூர்வமான பார்வை இல்லாமல் போவதற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கிய காரணம் பணத்தை உணர்வுப்பூர்வமாக அணுகுவதாகும். இன்று உங்கள் பையில் பணமிருக்கலாம். இன்னொரு நாள் உங்கள் பையில் பணம் இல்லாமல் இருக்கலாம். இந்த இரண்டும் இரண்டு நாட்களின் இரண்டு விதமான நிலைகள். இந்த நிலைகளை நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?

பணம் உங்கள் பையில் இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் கையில் இல்லை என்று ஒரு விதமாகவும், உங்கள் கையில்தான் அது இருக்கிறது என்று வேறொரு விதமாகவும் நீங்கள் அணுகலாம்.

இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் கைகளில் இல்லை என்று அணுகினால் நீங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகுவதாகத்தான் அர்த்தம். இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றது என்று அணுகுவதே அறிவுப்பூர்வமான அணுகுமுறையாகும்.

பணத்தைப் பொருத்த வரையில் நீங்கள் அறிவுப்பூர்வமாகவே அணுக வேண்டும். சேமிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்குமானால் பணம் உங்கள் பையில் இருக்கும். செலவழிக்கும் பழக்கம் மட்டுமே உங்களிடம் இருக்குமானால் உங்கள் பையில் பணம் இருக்காது. இதுவே பணம் இருப்பதற்கும் இல்லாமல் போவதற்குமான அறிவுப்பூர்வமான அணுகுமுறையாகும்.

பொருட்களை வாங்குவதற்கான பண அணுகுமுறைகள்

உங்களுக்கு அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். உங்களுக்கு எவை அவசியம் தேவையான பொருட்கள் என்பதை உணர்வைக் கொண்டோ மனநிலையைக் கொண்டோ தீர்மானிக்காதீர்கள். இவை நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம், நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்துக்கு வருடம் மாறக் கூடியவை.

இன்று உங்களுக்குப் பிடித்தமான ஒன்று நாளைக்கே பிடித்தம் இல்லாமல் போகலாம். உணர்வும் மனோநிலையும் மாறிக் கொண்டிருப்பவை. இன்று தேவையாகவும் அவசியமாகவும் பட்டது அடுத்த நாளே தேவையற்றதாகவும் அவசியம் இல்லாததாகவும் தோன்றலாம். இதனால் நீங்கள் தேவை என்று நினைத்து தேவையற்ற பொருட்களை, அவசியம் என்று நினைத்து அவசியமற்ற பொருட்களை வாங்கிக் குவித்து விடலாம். இதனால் விரயமாவப் போவது உங்கள் பணம்தான்.

பல பொருட்களை வாங்கி விட்டு அது உங்களுக்குத் தேவையோ அவசியமோ இல்லை என்று விற்க நினைத்தால் பாதி விலைக்குக் கூட உங்களால் விற்க முடியாது. கடையை விட்டு இறங்கி விட்டால் அந்தப் பொருளின் மதிப்பு சில சதவீதங்களாவது சரிந்து விடுகிறது. அவற்றுள் சில பொருட்களை நீங்கள் அடிமாட்டு விலைக்குக் கொடுப்பதாகச் சொன்னாலும் வாங்க ஆள் இருக்க மாட்டார்கள்.

எனவே, பொருட்களை வாங்கி பணத்தைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பொருட்கள் வாங்கும் முடிவுகளை பல நாட்கள் தள்ளிப் போடுங்கள். வாரக் கணக்கில் மாதக் கணக்கில் கூட தள்ளிப் போடலாம். தள்ளிப்போடும் நாட்களில் நீங்கள் அந்தப் பொருள் உங்களுக்கு உண்மையாகவே தேவையா, இல்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள்.

பொருட்கள் வாங்குவது குறித்து ஒரு வாசகம் சொல்லப்படுவதுண்டு. அது என்னவென்றால், ‘நீங்கள அநாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தால் அவசியமான பொருளை வாங்க நினைக்கும் போது உங்கள் கையில் பணம் இல்லாமல் போய் விடும்.’ அப்படி பணம் இல்லாத நிலைக்கு ஆளாகி, ‘எல்லாம் என் நேரம்’ என்று உணர்வுவயப்பட்ட நிலையில் சிந்திக்காமல் பொருட்களை வாங்குவதற்கு முன்னே அறிவார்ந்து சிந்தித்துப் பொருட்களை வாங்குவதன் மூலமாக நீங்கள் எப்போதும் பணக் கையிருப்பு உள்ள ஆளாக இருப்பீர்கள்.

கொடுக்கல் வாங்கல்களில் கவனம்

பணத்தைக் கொடுத்து வாங்குவதில் உங்களுக்கு நிபுணத்துவம் போதவில்லை என்றால் நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பதுதான் சரியானது. பணத்தைக் கொடுத்து வாங்கிப் பணம் சம்பாதிப்பவர்கள் உங்கள் கண் எதிரே நிறைய பேர் இருக்கலாம். அவர்களைப் பார்த்தெல்லாம் நீங்கள் சூடு போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கொடுத்து வாங்குவதற்கான நெளிவு சுளிவுகளும், சாமர்த்தியங்களும் எளிதில் எல்லாருக்கும் கைகூடி விடாது. பணத்தைக் கொடுத்து வாங்குவதில் நிபுணத்துவம் உள்ள பிரபலமான நிறுவனங்களே இவ்விசயத்தில் ஆட்டம் கண்டிருக்கின்றன.

பணத்தைக் கொடுத்து வாங்குவதில் பலர் நல்ல உறவுகளை இழந்திருக்கிறார்கள், நட்புகளை இழந்திருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தமானவராக இருக்கிறார் என்பதற்காக வாங்கிய பணத்தை நீங்கள் குறிப்பிடும் காலகெடுவிற்குள் கொடுக்கும் திராணி அவருக்கு இருக்கும் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது.

பணத்தை வாங்கும் போது தேனொழுகப் பேசுபவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்கும் போது தேளைப் போலக் கொட்டி விடுவதுண்டு. இதனால் பணம் சார்ந்து மனிதர்களை நீங்கள் தவறாக மதிப்பிட்டு விடக் கூடிய நிலைகளை அடையலாம். இது உண்மையில் உங்கள் தவறே. நீங்கள் தவறாக மதிப்பிட்டு விட்டுப் பழியை யார் மேலும் போட்டு விட முடியாது. வங்கிகள் பலவும் கொடுத்த கடனை வசூலிப்பதற்குள் விழி பிதுங்கி நிற்பதை எப்போதும் கவனித்துப் பாருங்கள்.

கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்க முடியுமானால் அதைச் செய்யுங்கள். கவனமாக இருக்க முடியாது என்றால் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்காதீர்கள்.

வளர வேண்டிய பண மதிப்பை இப்படிக் கொடுக்கல் வாங்கலில் கைவிட்டவர்கள் ஏராளம் என்பதால் இதில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். 

கேள்விகளால் எந்நேரமும் வேள்வி செய்யுங்கள்

செலவினம் மற்றும் பொருட்கள் வாங்குதல் என வரும் போது பணத்தைத் தொடர்புபடுத்திப் பல கேள்விகளை எழுப்புங்கள். உதாரணத்திற்கு, வாங்கும் இந்தப் பொருளால் வருங்காலத்தில் பணம் வரும் வாய்ப்புகள் உள்ளனவா? இந்தப் பொருளைப் பராமரிக்க அதிகப் பணம் செலவிட வேண்டியிருக்குமா? இந்தப் பொருள் வாங்கச் செலவழிக்காமல் அதாவது அந்தப் பொருள் இல்லாமல் கூட என்னால் இருக்க முடியுமா? – இப்படி கேள்விகளை எழுப்பிப் பாருங்கள். எல்லா கேள்விகளுக்கும் பாரபட்சமற்ற நியாயமான பதிலைக் கண்டடையுங்கள். பணச் சேமிப்பில் பின்னடையாமல் இழுத்துப் பிடிப்பதற்கு நீங்கள் கண்டடையும் நியாயமான காரணங்களே உங்களுக்கு உதவும் மற்றும் துணை நிற்கும்.

இவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்வதானால்…

பணம் குறித்த உங்களது சரியான பார்வை, சரியான மனநிலை, சரியான நிலைப்பாடு, சரியான ஆர்வம், சரியான கருத்தாக்கம், சரியான அணுகுமுறை, சரியான கொடுக்கல் வாங்கல் முறைகள், சரியான பணம் சார்ந்த பழக்க வழக்கங்கள் என அனைத்தும் சரியான ஒரு நிலையை அடைந்து விட்டால் பணம் சார்ந்து நீங்கள் பின்னடைய வாய்ப்பே இல்லை.

*****

18 Sept 2023

கில்லி போலச் சொல்லியடித்துப் பணக்காரராக முடியுமா?

கில்லி போலச் சொல்லியடித்துப் பணக்காரராக முடியுமா?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.”                 (குறள், 664)

என்கிறார் திருவள்ளுவர். அனைத்து விதமான சொல் சார்ந்த செயல்களின் விளைவுகளுக்கும் பொருந்தும் அற்புதமான சூத்திரம் இந்தக் குறள்.

இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லுதல் எளிதாகத்தான் இருக்கிறது. சொல்லியபடி செய்யும் போதுதான் கடினமாகத் தெரிகிறது. மிக மிக எளிய செயலாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்வது ஒரு கட்டத்தில் எப்படியோ நின்று போய் கடினமாகி விடுகிறது.

எல்லாவற்றிற்கும் பொருந்தும் இக்குறள் அப்படியே சேமிப்பு மற்றம் முதலீட்டுச் செயல்பாடுகளுக்கும் பொருந்துகிறது.

சிறிதே பெரிதாகிறது

சேமிப்பைப் பற்றிச் சொல்லும் போது ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற சொலவத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

சிறுதுளியாகப் பெய்து கொண்டிருக்கும் எல்லா மழையும் பெருவெள்ளமாகி விடாது. மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாமல் நின்று போய் விடும் சோனை மழை இருக்கிறது. சமயங்களில் தெருவை நனைத்ததோடு நின்று போய் விடும் சிறு மழை இருக்கிறது. சிறிதளவு தெருக்களில் வழிந்தோடும் மிதமான மழை இருக்கிறது. தெருவில் ஓடி வீட்டுக்குள் எட்டிப் பார்க்கும் பெருமழையும் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் கனமழையே வெள்ளமாகப் பெருகுகிறது. தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் மழைக்கே கனமழை என்ற பெயரும் வந்து சேருகிறது. தொடர்ச்சி வாங்கித் தரும் பெயர் அது.

சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பேதங்கள்

சேமிப்பு மற்றும் முதலீடுகளில் சிறுசேமிப்பு, பெரும் சேமிப்பு, சிறு முதலீடு, பெரு முதலீடு என்றெல்லாம் பேதம் பிரிக்க வேண்டாம். தொடர்ச்சியாகச் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடு, தொடர்ச்சியற்ற சேமிப்பு மற்றும் முதலீடு என்று பேதம் பிரித்துக் கொண்டால் போதும்.

தொடர்ச்சியாகச் செய்யப்படும் சிறு சேமிப்பாக இருந்தாலும் சரி, சிறு முதலீடாக இருந்தாலும் சரி அது பெருவெள்ளமாக ஆகப் போவது நிச்சயம். தொடர்ச்சியற்ற சேமிப்புகளுக்கோ முதலீடுகளுக்கோ அப்படிப்பட்ட வாய்ப்பில்லை. தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று தொடர்ச்சி, மற்றொன்று அதைச் செய்தல். இந்த இரண்டும் ஒருங்கிணையும் போதுதான் ஒருவர் சேமிப்பு மற்றும் முதலீட்டால் லட்சாதிபதியாவதும் கோடீஸ்வரர் ஆவதும் நிச்சயமாக நிகழ்கிறது.

தொடர்ச்சியின் மாயாஜாலம்

தொடர்ச்சியாக இடைவிடாமல் பெய்யும் மழைக்குத்தான் பெருவெள்ளத்தை உண்டு பண்ணும் சக்தி இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியை மேகம் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். மழை பொழியும் திராணி இருந்தும் மேகம் பெய்வதை விட்டு விட்டால் பெருவெள்ளம் உருவாகப் போவதில்லை.

சேமிப்பதற்கான மற்றும் முதலீடு செய்வதற்கான பணமிருந்தும் அதைச் செய்யாமல் விட்டு விட்டால் பணம் செலவெனும் வடிவத்திற்கு உருமாறிக் கொண்டிருக்கும். அது எப்படியோ சேமிப்பையும் முதலீட்டையும் ஒரு செலவைப் போல நினைத்துச் செய்தாலும் அந்தச் செயல் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

வழிகாட்டும் விரலே வழிகாட்டி விடாது

இப்படியிப்படிச் செய்தால் கோடீஸ்வரராகி விடலாம் என்பதற்கான கோடிக்கணக்கான முறைகள் சொல்லப்படலாம். அந்த முறைகள் சொல்லப்படுவதில் என்ன இருக்கிறது? நெருப்பு என்று சொல்வதால் சுட்டு விடுவதில்லை. நெருப்பை உருவாக்கித் தோலில் வைத்தால் சுடுகிறது. செயல் என்பது இங்கு முக்கியமாக இருக்கிறது.

வழிகாட்டும் பெயர்ப்பலகையே நீங்கள் செல்லும் இடத்துக்கு உங்களைத் தூக்கிக் கொண்டு போய் விட்டு விடாது. நீங்கள்தான் பயணிக்க வேண்டும்.

வழியைக் காட்டும் விரலே உங்களைச் செல்ல வேண்டிய இடத்துக்கு இழுத்துச் சென்று விடாது. உங்கள் கால்கள் நடந்தாக வேண்டும். வழிகாட்டுவதற்கான சொல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு காட்டிய வழியில் நடைபோடும் கால்களின் செயலும் முக்கியம்.

தொடர்ச்சியை நிலைநாட்டும் கலை

தினந்தோறும் ஒரு ரூபாய் சேமிப்பது என்பது சொல்வதற்கு எளிதானது. செய்வதற்கும் எளிதானதுதான். தொடர்ச்சியாகச் செய்வதுதான் கடினமானது. தினந்தோறும் ஒரு ரூபாய் சேமிப்பதைத் தொடர்ந்து செய்து வரும் ஒருவர் என்றாவது ஒரு நாள் அதை விட்டு விடலாம். இந்த இடம்தான் தொடர்ச்சியாகச் செய்வதனால் கிடைக்கும் பலத்தை அல்லது தொடர்ச்சியினால் உண்டாகப் போகும் மாயாஜாலத்தை உடைத்தெறிந்து விடுகிறது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் சேமித்து வந்தால் ஒரு மாதத்தில் அது முப்பது ரூபாயாகச் சேர்ந்து விடுகிறது. ஓராண்டில் முந்நூற்று அறுபத்து ஐந்தாகி விடுகிறது. பத்தாண்டுகளில் மூவாயிரத்து அறுநூற்று ஐம்பதாகி விடுகிறது. அதாவது முந்நூறு மூவாயிரமாகிறது, அறுபது அறுநூறாகிறது. ஐந்து ஐம்பதாகிறது. இதுதான் தொடர்ச்சியாகச் செய்வதில் உள்ள பலன்.

சேமிப்பு முதலீடாகும் போது நிகழும் மந்திரஜாலம்

இந்தச் சேமிப்பைத் தூக்கி அப்படியே வட்டி தரும் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் தினந்தோறும் அல்லது மாதந்தோறும் முதலீடு செய்து வந்தால் ஐந்து சதவீத தனிவட்டி என்றாலும் வட்டித்தொகை மட்டும் சுமாராக ஆயிரம் சொச்சம் ரூபாய் கிடைக்கும். தினந்தோறும் ஒரு ரூபாய் சேமித்துப் பத்தாண்டுகளில் தனிவட்டியில் சுமாராக நான்காயிரத்து எழுநூறு சொச்சம் ரூபாயைப் பெறலாம். இதுவே கூட்டு வட்டி வளர்ச்சி என்றால் ஐந்து சதவீத வட்டிக்குச் சுமாராக இன்னும் ஆயிரத்து ஐநூறு சொச்சம் ரூபாய்க்கு மேல் கூடுதலாகச் சுமாராக ஆறாயிரம் சொச்சம் ரூபாயைப் பெறலாம். இக்கணக்கீடுகள் தோராயமாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்.

நமது கணக்கீடு ஐந்து சதவீத வட்டி என்ற அளவிலேயே கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சாதாரண நிரந்தர வைப்புத்தொகைக்கே வட்டியானது ஐந்து சதவீதத்தை விட அதிகமாகவே வழங்கப்படுகிறது என்பதால் உத்தரவாதத்தோடு ஏழரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய முடியும்.

தொடர்ச்சி எனும் மந்திரத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துங்கள்

அன்றாடம் சம்பாதிப்பவர்களும் மாத ஊதியக்காரர்களும் தொடர்ச்சியாகச் செய்தால்தான் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்களைக் கண்ணாரக் காண முடியும். இதைச் சொல்வது எளிது, கண்ணாரக் காண்பதென்றால் தொடர்ச்சியான இடைவிடாத சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயல்பாடு நடந்திருக்க வேண்டும். சொல்வதால் மட்டுமே சாதித்து விட முடியாது.

மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கிப் போடுவதைக் கூட நீங்கள் தொடர்ச்சியாக ஆயுள் முழுவதும் செய்தால் உங்களின் பண மதிப்பை அது அதிகரித்து விடும். இதில் உள்ள பிரச்சனை மாதா மாதம் தங்கம் ஒரு கிராமை வாங்கிப் போட வேண்டும் என்பதுதான். ஒரு மாதம் தவறினாலும் அடுத்த மாதம் இரண்டு கிராமாகவாவது சேர்த்து வாங்கிப் போட்டு இடைவிடாமல் அந்தச் செயலைச் செய்து விட வேண்டும். இந்தத் தொடர்ச்சி எனும் மந்திரத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது அது மந்திரம் போன்ற விளைவுகளை உருவாக்குவதை நீங்கள் நேரடியாக அனுபவித்து உணர்வீர்கள்.

ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளாக…

‘ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட வில்லை’ என்பார்கள். உண்மைதான். ஒவ்வொரு நாளாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது.

‘எந்த ஒரு பயணமும் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பிக்கிறது’ என்பார்கள். உண்மைதான். எடுத்து வைத்த முதல் அடியிலேயோ சில அடிகளிலோ நின்று விட்டாலோ அது பயணமாகாது. ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அது பயணமாகிறது.

சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பணக்காரராவதற்கும் மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் அப்படியே பொருந்தும். ஏதோ ஒரு நாளில் சேமிப்போ, முதலீடோ நின்று விடுமானால் அது ஒருவரைப் பணக்காரராக்காது. ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அது ஒருவரைப் பணக்காரராக்குகிறது. ஆக தொடர்ச்சியான சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயல்பாடுதான் ஒருவரைப் பணக்காரராக்குகிறது.

நிச்சயம் சாதிக்கும் நீண்ட கால நீடித்த செயல்பாடுகள்

ஒரு மாற்றத்தை மனித முயற்சியால் நிகழ்த்த வேண்டுமானால் அதற்கு நீண்ட காலம் நீடித்த செயல்பாடு தேவைப்படுகிறது. நீண்ட காலம் நீடிக்கும் செயல்பாடு நிச்சய வெற்றியைத் தரும் என்பதால் குறுகிய காலத்தில் சாதிப்பதற்கான எந்த வழிகளையும் நான் பரிந்துரைக்க இயலாது. அது போன்ற முறைகள் ஒருவருக்குச் செல்லுபடியாகும், இன்னொருவருக்குச் செல்லுபடியாகாது. மேலும் அதற்கு நிறைய சாமர்த்தியங்கள், நெளிவு சுளிவுகள் தேவைப்படும்.

நீடித்த நீண்ட காலச் செயல்பாட்டுக்கு எந்த விதமான சாமர்த்தியமோ நெளிவு சுளிவுகளோ தேவையில்லை. தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்குச் செய்யும் பழக்கவழக்கமாக்கிக் கொள்ளும் ஒழுக்கம் மட்டுமே போதுமானது. இந்த ஒழுக்கத்தை விடாமல் ஒருவர் தொடர்ந்தால் நினைத்தைச் சாதிக்கலாம். அதுவும் சர்வ நிச்சயமாகச் சாதிப்பதை உறுதியாகச் சொல்லாம்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்”                (குறள், 131)

என்று திருவள்ளுவர் சொல்வதற்குக் காரணம் அதுதான். அப்படி ஓர் ஒழுக்கம் உங்களிடம் உருவாகி விட்டால் பணக்காரர் ஆவது மட்டுமல்லாது நீங்கள் சாதிக்க நினைக்கும் எந்த ஒன்றிலும் கில்லிப் போலச் சொல்லியடித்துச் சாதித்துக் காட்ட முடியும்.

*****

15 Sept 2023

காம்பு கழன்று போன மண்வெட்டிகள்

காம்பு கழன்று போன மண்வெட்டிகள்

ஒரு காலத்தில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிச் செய்வதை எங்கள் கிராமத்தவர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். அடிப்படையில் அவர்கள் அப்போது கடின உடல் சார்ந்த உழைப்பாளிகளாக இருந்தனர். உடல் உழைப்பை ஒழுங்காகச் செய்தால் உடற்பயிற்சி என்பது தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

கிராமத்திலிருந்து நாங்கள் ஐந்தாறு இளைஞர்கள் காலைப்பொழுதில் ஓட்டப்பயிற்சி செய்த போது, “ஏம்டா வேலையத்த பயலுகளா, வயல்ல இறங்கி மம்புட்டியெ புடிச்சு அரை மணி நேரத்துக்கு வேலை பாத்தா பத்து மைலுக்கு ஓடுனதுக்குச் சமம்டா. வேலைக்கு வேலையும் ஆச்சு, உடம்பு பயிற்சிக்கு உடம்புப் பயிற்சியும் ஆச்சு.” என்று அவர்கள் சொன்னது இப்போதும் என் ஞாபகத்தில் ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. அவர்கள் அப்படிக் கூறியதைப் பொருட்படுத்தாமல்தான் அப்போது நாங்கள் ஓடினோம், ஓடிக் கொண்டிருந்தோம்.

இரண்டு மூன்று வருடங்கள் இப்படியோ யார் சொல்வதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் காலையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தோம். ஓடிக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் வேலை தேடி வெளிநகரங்களுக்குச் சென்று விட்ட பிறகு தனியொருவனாக ஓடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான் மட்டும் இப்போதும் ஒற்றை ஆளாகத் தனிமையில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஓட்டம் நடையாகச் சுருங்கிப் போயிருந்தது.

நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் மண்வெட்டியைப் பிடித்து வேலை செய்த அந்தக் கடின உழைப்பாளிகள் யாரையும் இப்போது பார்க்க முடியவில்லை. கடின உடல் உழைப்பால் விவசாயத்தை ஆர்வமாகச் செய்த அவர்களில் பலரைக் காணவில்லை. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் மட்டுமே மண்வெட்டிப் பிடித்து வயல் வேலையைப் பார்க்கிறார்கள். பலரும் வயலுக்கு அண்டை போடுவது கூட இல்லை. மடை திறந்து வைப்பது, அடைப்பதைக் கூட கைகளால் செய்து முடித்து விடுகிறார்கள். அவர்களின் மண்வெட்டிகள் எங்கே இருக்கின்றனவோ, எங்கே கிடக்கின்றனவோ?

மண்வெட்டி பிடித்து வேலை செய்பவர்களின் மார்புகளைப் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? மார்பு அப்படியே விரிந்து வைரம் பாய்ந்தது போல இருக்கும். “மம்புட்டிக் காம்பை பிடிச்சு வேலை பார்த்தா கொழந்தைப் பொறக்காதவனுக்கும் கொழந்தை பொறக்கும்” என்பார்கள் நைச்சியமாகச் சிரித்தபடி. அது எப்படி என்பதை ரகசியக் குரலில் சொல்லும் போது வேடிக்கையாக இருக்கும்.

நான் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அற்றை நாளில் என்னை வயலில் இறங்கி மண்வெட்டிப் பிடிக்கச் சொன்ன ஒருவர் இப்போது வயது முதிர்ந்த நிலையில் நடைபயிற்சி செய்த என்னைப் பார்த்த போது, “இன்னம் நீயி இதெ விடலையா?” என்றார். இல்லை என்பது போல நான் தலையாட்டினேன்.

“அஞ்சாறு பேர்ல நீயி ஒருத்தனாச்சும் மிச்சமா இருக்கே. மம்புட்டி பிடிச்சு வேலை செஞ்ச எங்கள்ல்ல இன்னிக்கு மம்புட்டி பிடிச்சு வேலை செய்ய ஒருத்தம் கூட மிச்சம் இல்லாம போயிட்டேம்மேய்யா.” என்று உடைந்து போய் விட்டார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எனக்குக் கண்கள் கலங்குவது புரிந்தது. அவரே தொடர்ந்து பேசினார்.

“வேலையெல்லாம் மாறிப் போச்சுடுச்சு. எல்லாம் ஏந்திரங்களா போயிடுச்சு. எனக்கே பீப்பீ வந்துபுடுச்சு. மாத்திரைப் போட்டாத்தான் ஆவேங்குது. வயப் பக்கமே வர்றதேயில்ல. எல்லாம் புள்ளைங்க ஏந்திரங்கள வெச்சேப் பாத்துக்குதுங்க. வயல்ல எறங்கி மம்புட்டிப் பிடிக்குறதெ அதுங்க அவமானம் பண்ணுறதா சொல்லுதுங்க. நமக்கு ஏம் பொல்லாப்புன்னு நீங்களே உங்க நோக்கத்துக்குப் பாத்துக்கிடுங்கன்னு விட்டுப்புட்டேன்.

“வயப் பக்கமே வர்ற பிடிக்க மாட்டேங்குது. இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்குது. காத்தாட எப்பயாச்சும் வந்து போறது. நீங்க அப்ப ஓடுனது எல்லாம் இப்பயும் மனசுல பச்சையா இருக்குதுய்யா.

“ஆயிரந்தான் இருந்தாலும் மம்புட்டியெ புடிச்சு வெட்டுனாத்தாம்யா மண்மவளுக்கு இதமா இருக்கும். யாரு கேக்குறா? மம்புட்டிப் பிடிக்குறதுக்குத்தாம் தெம்பிருக்கா இவனுங்களுக்கு? கொழந்தெ இல்லன்னு என்னவோ ஊசியெ போட்டுல்லா பெத்துக்குறானுங்க.

“எங்க ஐயன் காலத்துல நாங்கல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளைங்க. தேறுனது பன்னெண்டு. எனக்கு ஆறு புள்ளைங்க. இப்ப எல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு அதுவும் ஊசியில பெத்துக்கிட்டு வயித்தெ கிழிச்சுப் பெரசவம் பாத்துக்கிட்டு, என்னத்தெ சொல்றது? கையி காலு அசைஞ்சு உடம்புல ரத்த ஓட்டம் ஓடணும்யா. யப்பாடி நீயி மம்புட்டியெ பிடிக்காட்டியும் பரவால்ல. நடக்குறதெ விட்டுப்புடாதே.” என்றார். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் கண்களும் கலங்கி விட்டன.

“எல்லாரும் அவசர அவசரமா ஓட வேண்டிய காலத்துல கையி காலால்லேயே ஓடணும்னா முடியுமா? சக்கரத்தெ கட்டிக்கிட்டு வண்டியில்லத்தானே ஓட வேண்டியிருக்கு.” என்றேன் நான்.

“அப்படி என்னத்தெ ஓடி என்னத்தெ சாதிக்கப் போறீயோன்னு தெரியல. ஆயிரந்தான் அவசரம்னாலும் சைக்கிள்ல போய்யா. இல்லே நடந்து போய்யா. அப்படி என்னத்தெ நேரத்தெ மிச்சம் பண்ணிப்புடுவே நீ?

“ஒம்ம டுர்ரு வண்டியில திருவாரூக்கு அரை மணி நேரத்துல போவே. இப்போ சைக்கிள வுடச் சொன்னாலும் நான் முக்கா மணி நேரத்துல போவேன் தெரியுமா? நடந்து போனா ஒன்றரை மணி நேரத்துல போயிடுவேன் பாத்துக்கோ. அந்த உடம்புத்தாம் இன்னிக்கும் உதவுது.

“இன்னம் கொஞ்ச நாளு மம்புட்டிப் பிடிச்சிருந்தேன் இந்த பீப்பி கழுதெ வந்து தொலைஞ்சிருக்காது. மம்புட்டியெ தூக்கிப் போட வெச்சு ஏம் உடம்புல பீப்பியே கொண்டாந்து வெச்சுப்புட்டானுங்க. புடிக்கிற சனி யாரை விட்டுச்சு? நானும் என்னென்ன கருமத்யோ தின்னுத்தாம் பாக்குறேம். ஆனா மாத்திரையப் போட்டாத்தாம்பா இந்தச் சனி அடங்குது.

“அதெல்லாம் ஒடம்பு வளைஞ்சத்தாம்பா ஒடம்பு சொகமா இருக்கும். இல்லன்னா சொகமா இருக்கணும்ன்னு சொல்லிப்பிட்டு மாத்திரையத்தாம் கேக்கும். பேசாம தேசாந்திரமா நடந்து போய்கிட்டே இருக்கலாம்ன்னு தோணுது சில நேரத்துல. இவனுங்கள விட்டுட்டுப் போகவும் மனசு கேக்கல. மனசு வெறுத்துதாம்ப்பா போச்சு. ஒரு நாளு கௌம்பிப்புடணும். அதுக்கான மனசு வரதும் போறதுமா இருக்கு.

“இந்த ஊரே விட்டுப்புட்டுப் போறது எப்படிச் சொல்லு? ஆயிரந்தான் சொல்லு, இந்த ஊரெ விடவா காசி பெரிசு, ராமேச்சுரம் பெரிசு? இப்படியே இருந்துப்புடலாம்ன்னு அப்படியும் தோணுது.

“ஆனா பாரு, போயி ஒரு நடெ அதையும் பாத்துப்புடணும்ன்னு சில சமயமும் தோணுது. ஒரே குழப்பந்தாம் போ. இப்படியே அல்லாடிக்கிட்டே இருக்கேன். எப்பவாச்சும் ஊருல நாம்ம காணாமா போயிட்டதா பேச்சு வந்தா நீயே புரிஞ்சுக்கோ அப்படிப் போயிட்டேன்னு. ஆன்னா யாருக்கும் தகவலெச் சொல்லிப்பிடாதே. வந்துப் புடிச்சிட்டு வந்துப்புடுவானுவோ. நாமளே அலைபாய்ஞ்சு இப்படியா அப்படியான்னு போயிருப்பேம். இவனுவோ வந்து பிடிச்சா கடெசி வாய்ப்பும் போச்சு பாரு.” என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.

“இப்போதான் மொகத்துல சிரிப்பே பாக்க முடியுது.” என்றேன் நான்.

“தொலைஞ்சுப் போயிடணும்ப்பா இவனுங்கள விட்டு, இந்த மனுஷப் பயலுகள விட்டுப்பிட்டு. அதுதாம் சந்தோஷம் கடெசிக் காலத்துல. ஒரு வாயி நல்ல வெதமாச் சாப்புட முடியல தெரியுமா? என்னவோ செத்த சவெத்த சோறா தின்னுறாப்புல இருக்கு. நெல்ல புழுக்கி ஆவாட்டி காய வெச்சு கண்ணுல படுறாப்புல அரிசியாக்கிச் சாப்பிட்டாத்தாம்யா சாப்பிட்ட மாரி இருக்கு. இவனுக என்னான்னா கடையில விக்குதுன்னு வாங்கியாந்து ஆக்கிப் போடுறானுங்க. அதெ திங்க முடியுதா சொல்லு?

“பெறவு ஏன் இவனுவோ வயலெ வெச்சு வெள்ளாம பாக்குறானுவோன்னு கேக்குறேன்? இன்ஷ்யூரன்சும் நெவாரணமும் வருமான்னு வெள்ளாம பாக்குறானுவோ. வௌங்குமா வெவசாயம்? நடந்துகிட்டெ இருந்த ஒன்னயெ வேற நிப்பாட்டி வெச்சு பொலம்பித் தள்ளிப்புட்டேன். மனசுல ஏதும் வெச்சிக்காம நடந்து போயிட்டுத் திரும்பு. இப்படி எப்பவாச்சும் நடந்து திரும்புனாத்தான் மனசு சித்தெ அடங்குது நமக்கும். வரட்டா?” என்று கிளம்பினார்.

முன்னோக்கி நடந்து வந்து வந்தப் பாதையில் பின்னோக்கி நடந்து செல்லும் அவரைப் பார்க்கையில் காம்பு கழன்ற மண்வெட்டிப் போல இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் மண்வெட்டியின் காம்பு கழன்றால் உடனே அதிகாலையிலலேயே கொல்லு பட்டறைக்குக் கொண்டு போய் சரி பண்ணி விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். கொல்லுப் பட்டறையில் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். அது கொல்லு வேலை கொழுத்த லாபம் என்று சொல்லப்பட்ட காலம்.

இப்போது மண்வெட்டிகளின் பயன்பாடு எவ்வளவு குறைந்து விட்டது? அதுவும் மண்வெட்டியின் காம்பு கழன்று விட்டால் அப்படியே போட்டு விடுகிறார்கள். அதைப் போய் யார் தூக்கிக் கொண்டு வைத்தியம் பார்ப்பது என்று நினைக்கிறார்கள். அப்படியே எங்கேயோ ஓர் ஓரத்தில் கிடந்து துரு பிடித்து அந்த மண்வெட்டியின் இலையும் வீணாகிவிடுகிறது.

காலத்தின் ஓட்டத்தில் உழவர்களின் கையில் இருந்த ஏர் கழன்றதைப் போலத்தான் மண்வெட்டியும் கழன்று கொண்டு விட்டது. மண்வெட்டி பிடித்த அந்தக் காலக் கிழவர்களும் காம்பு கழன்ற மண்வெட்டிகள் போலாகி விட்டனர் என்றே நினைக்கிறேன்.

*****