15 Sept 2023

காம்பு கழன்று போன மண்வெட்டிகள்

காம்பு கழன்று போன மண்வெட்டிகள்

ஒரு காலத்தில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிச் செய்வதை எங்கள் கிராமத்தவர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். அடிப்படையில் அவர்கள் அப்போது கடின உடல் சார்ந்த உழைப்பாளிகளாக இருந்தனர். உடல் உழைப்பை ஒழுங்காகச் செய்தால் உடற்பயிற்சி என்பது தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

கிராமத்திலிருந்து நாங்கள் ஐந்தாறு இளைஞர்கள் காலைப்பொழுதில் ஓட்டப்பயிற்சி செய்த போது, “ஏம்டா வேலையத்த பயலுகளா, வயல்ல இறங்கி மம்புட்டியெ புடிச்சு அரை மணி நேரத்துக்கு வேலை பாத்தா பத்து மைலுக்கு ஓடுனதுக்குச் சமம்டா. வேலைக்கு வேலையும் ஆச்சு, உடம்பு பயிற்சிக்கு உடம்புப் பயிற்சியும் ஆச்சு.” என்று அவர்கள் சொன்னது இப்போதும் என் ஞாபகத்தில் ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. அவர்கள் அப்படிக் கூறியதைப் பொருட்படுத்தாமல்தான் அப்போது நாங்கள் ஓடினோம், ஓடிக் கொண்டிருந்தோம்.

இரண்டு மூன்று வருடங்கள் இப்படியோ யார் சொல்வதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் காலையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தோம். ஓடிக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் வேலை தேடி வெளிநகரங்களுக்குச் சென்று விட்ட பிறகு தனியொருவனாக ஓடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான் மட்டும் இப்போதும் ஒற்றை ஆளாகத் தனிமையில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஓட்டம் நடையாகச் சுருங்கிப் போயிருந்தது.

நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் மண்வெட்டியைப் பிடித்து வேலை செய்த அந்தக் கடின உழைப்பாளிகள் யாரையும் இப்போது பார்க்க முடியவில்லை. கடின உடல் உழைப்பால் விவசாயத்தை ஆர்வமாகச் செய்த அவர்களில் பலரைக் காணவில்லை. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் மட்டுமே மண்வெட்டிப் பிடித்து வயல் வேலையைப் பார்க்கிறார்கள். பலரும் வயலுக்கு அண்டை போடுவது கூட இல்லை. மடை திறந்து வைப்பது, அடைப்பதைக் கூட கைகளால் செய்து முடித்து விடுகிறார்கள். அவர்களின் மண்வெட்டிகள் எங்கே இருக்கின்றனவோ, எங்கே கிடக்கின்றனவோ?

மண்வெட்டி பிடித்து வேலை செய்பவர்களின் மார்புகளைப் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? மார்பு அப்படியே விரிந்து வைரம் பாய்ந்தது போல இருக்கும். “மம்புட்டிக் காம்பை பிடிச்சு வேலை பார்த்தா கொழந்தைப் பொறக்காதவனுக்கும் கொழந்தை பொறக்கும்” என்பார்கள் நைச்சியமாகச் சிரித்தபடி. அது எப்படி என்பதை ரகசியக் குரலில் சொல்லும் போது வேடிக்கையாக இருக்கும்.

நான் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அற்றை நாளில் என்னை வயலில் இறங்கி மண்வெட்டிப் பிடிக்கச் சொன்ன ஒருவர் இப்போது வயது முதிர்ந்த நிலையில் நடைபயிற்சி செய்த என்னைப் பார்த்த போது, “இன்னம் நீயி இதெ விடலையா?” என்றார். இல்லை என்பது போல நான் தலையாட்டினேன்.

“அஞ்சாறு பேர்ல நீயி ஒருத்தனாச்சும் மிச்சமா இருக்கே. மம்புட்டி பிடிச்சு வேலை செஞ்ச எங்கள்ல்ல இன்னிக்கு மம்புட்டி பிடிச்சு வேலை செய்ய ஒருத்தம் கூட மிச்சம் இல்லாம போயிட்டேம்மேய்யா.” என்று உடைந்து போய் விட்டார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எனக்குக் கண்கள் கலங்குவது புரிந்தது. அவரே தொடர்ந்து பேசினார்.

“வேலையெல்லாம் மாறிப் போச்சுடுச்சு. எல்லாம் ஏந்திரங்களா போயிடுச்சு. எனக்கே பீப்பீ வந்துபுடுச்சு. மாத்திரைப் போட்டாத்தான் ஆவேங்குது. வயப் பக்கமே வர்றதேயில்ல. எல்லாம் புள்ளைங்க ஏந்திரங்கள வெச்சேப் பாத்துக்குதுங்க. வயல்ல எறங்கி மம்புட்டிப் பிடிக்குறதெ அதுங்க அவமானம் பண்ணுறதா சொல்லுதுங்க. நமக்கு ஏம் பொல்லாப்புன்னு நீங்களே உங்க நோக்கத்துக்குப் பாத்துக்கிடுங்கன்னு விட்டுப்புட்டேன்.

“வயப் பக்கமே வர்ற பிடிக்க மாட்டேங்குது. இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்குது. காத்தாட எப்பயாச்சும் வந்து போறது. நீங்க அப்ப ஓடுனது எல்லாம் இப்பயும் மனசுல பச்சையா இருக்குதுய்யா.

“ஆயிரந்தான் இருந்தாலும் மம்புட்டியெ புடிச்சு வெட்டுனாத்தாம்யா மண்மவளுக்கு இதமா இருக்கும். யாரு கேக்குறா? மம்புட்டிப் பிடிக்குறதுக்குத்தாம் தெம்பிருக்கா இவனுங்களுக்கு? கொழந்தெ இல்லன்னு என்னவோ ஊசியெ போட்டுல்லா பெத்துக்குறானுங்க.

“எங்க ஐயன் காலத்துல நாங்கல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளைங்க. தேறுனது பன்னெண்டு. எனக்கு ஆறு புள்ளைங்க. இப்ப எல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு அதுவும் ஊசியில பெத்துக்கிட்டு வயித்தெ கிழிச்சுப் பெரசவம் பாத்துக்கிட்டு, என்னத்தெ சொல்றது? கையி காலு அசைஞ்சு உடம்புல ரத்த ஓட்டம் ஓடணும்யா. யப்பாடி நீயி மம்புட்டியெ பிடிக்காட்டியும் பரவால்ல. நடக்குறதெ விட்டுப்புடாதே.” என்றார். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் கண்களும் கலங்கி விட்டன.

“எல்லாரும் அவசர அவசரமா ஓட வேண்டிய காலத்துல கையி காலால்லேயே ஓடணும்னா முடியுமா? சக்கரத்தெ கட்டிக்கிட்டு வண்டியில்லத்தானே ஓட வேண்டியிருக்கு.” என்றேன் நான்.

“அப்படி என்னத்தெ ஓடி என்னத்தெ சாதிக்கப் போறீயோன்னு தெரியல. ஆயிரந்தான் அவசரம்னாலும் சைக்கிள்ல போய்யா. இல்லே நடந்து போய்யா. அப்படி என்னத்தெ நேரத்தெ மிச்சம் பண்ணிப்புடுவே நீ?

“ஒம்ம டுர்ரு வண்டியில திருவாரூக்கு அரை மணி நேரத்துல போவே. இப்போ சைக்கிள வுடச் சொன்னாலும் நான் முக்கா மணி நேரத்துல போவேன் தெரியுமா? நடந்து போனா ஒன்றரை மணி நேரத்துல போயிடுவேன் பாத்துக்கோ. அந்த உடம்புத்தாம் இன்னிக்கும் உதவுது.

“இன்னம் கொஞ்ச நாளு மம்புட்டிப் பிடிச்சிருந்தேன் இந்த பீப்பி கழுதெ வந்து தொலைஞ்சிருக்காது. மம்புட்டியெ தூக்கிப் போட வெச்சு ஏம் உடம்புல பீப்பியே கொண்டாந்து வெச்சுப்புட்டானுங்க. புடிக்கிற சனி யாரை விட்டுச்சு? நானும் என்னென்ன கருமத்யோ தின்னுத்தாம் பாக்குறேம். ஆனா மாத்திரையப் போட்டாத்தாம்பா இந்தச் சனி அடங்குது.

“அதெல்லாம் ஒடம்பு வளைஞ்சத்தாம்பா ஒடம்பு சொகமா இருக்கும். இல்லன்னா சொகமா இருக்கணும்ன்னு சொல்லிப்பிட்டு மாத்திரையத்தாம் கேக்கும். பேசாம தேசாந்திரமா நடந்து போய்கிட்டே இருக்கலாம்ன்னு தோணுது சில நேரத்துல. இவனுங்கள விட்டுட்டுப் போகவும் மனசு கேக்கல. மனசு வெறுத்துதாம்ப்பா போச்சு. ஒரு நாளு கௌம்பிப்புடணும். அதுக்கான மனசு வரதும் போறதுமா இருக்கு.

“இந்த ஊரே விட்டுப்புட்டுப் போறது எப்படிச் சொல்லு? ஆயிரந்தான் சொல்லு, இந்த ஊரெ விடவா காசி பெரிசு, ராமேச்சுரம் பெரிசு? இப்படியே இருந்துப்புடலாம்ன்னு அப்படியும் தோணுது.

“ஆனா பாரு, போயி ஒரு நடெ அதையும் பாத்துப்புடணும்ன்னு சில சமயமும் தோணுது. ஒரே குழப்பந்தாம் போ. இப்படியே அல்லாடிக்கிட்டே இருக்கேன். எப்பவாச்சும் ஊருல நாம்ம காணாமா போயிட்டதா பேச்சு வந்தா நீயே புரிஞ்சுக்கோ அப்படிப் போயிட்டேன்னு. ஆன்னா யாருக்கும் தகவலெச் சொல்லிப்பிடாதே. வந்துப் புடிச்சிட்டு வந்துப்புடுவானுவோ. நாமளே அலைபாய்ஞ்சு இப்படியா அப்படியான்னு போயிருப்பேம். இவனுவோ வந்து பிடிச்சா கடெசி வாய்ப்பும் போச்சு பாரு.” என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.

“இப்போதான் மொகத்துல சிரிப்பே பாக்க முடியுது.” என்றேன் நான்.

“தொலைஞ்சுப் போயிடணும்ப்பா இவனுங்கள விட்டு, இந்த மனுஷப் பயலுகள விட்டுப்பிட்டு. அதுதாம் சந்தோஷம் கடெசிக் காலத்துல. ஒரு வாயி நல்ல வெதமாச் சாப்புட முடியல தெரியுமா? என்னவோ செத்த சவெத்த சோறா தின்னுறாப்புல இருக்கு. நெல்ல புழுக்கி ஆவாட்டி காய வெச்சு கண்ணுல படுறாப்புல அரிசியாக்கிச் சாப்பிட்டாத்தாம்யா சாப்பிட்ட மாரி இருக்கு. இவனுக என்னான்னா கடையில விக்குதுன்னு வாங்கியாந்து ஆக்கிப் போடுறானுங்க. அதெ திங்க முடியுதா சொல்லு?

“பெறவு ஏன் இவனுவோ வயலெ வெச்சு வெள்ளாம பாக்குறானுவோன்னு கேக்குறேன்? இன்ஷ்யூரன்சும் நெவாரணமும் வருமான்னு வெள்ளாம பாக்குறானுவோ. வௌங்குமா வெவசாயம்? நடந்துகிட்டெ இருந்த ஒன்னயெ வேற நிப்பாட்டி வெச்சு பொலம்பித் தள்ளிப்புட்டேன். மனசுல ஏதும் வெச்சிக்காம நடந்து போயிட்டுத் திரும்பு. இப்படி எப்பவாச்சும் நடந்து திரும்புனாத்தான் மனசு சித்தெ அடங்குது நமக்கும். வரட்டா?” என்று கிளம்பினார்.

முன்னோக்கி நடந்து வந்து வந்தப் பாதையில் பின்னோக்கி நடந்து செல்லும் அவரைப் பார்க்கையில் காம்பு கழன்ற மண்வெட்டிப் போல இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் மண்வெட்டியின் காம்பு கழன்றால் உடனே அதிகாலையிலலேயே கொல்லு பட்டறைக்குக் கொண்டு போய் சரி பண்ணி விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். கொல்லுப் பட்டறையில் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். அது கொல்லு வேலை கொழுத்த லாபம் என்று சொல்லப்பட்ட காலம்.

இப்போது மண்வெட்டிகளின் பயன்பாடு எவ்வளவு குறைந்து விட்டது? அதுவும் மண்வெட்டியின் காம்பு கழன்று விட்டால் அப்படியே போட்டு விடுகிறார்கள். அதைப் போய் யார் தூக்கிக் கொண்டு வைத்தியம் பார்ப்பது என்று நினைக்கிறார்கள். அப்படியே எங்கேயோ ஓர் ஓரத்தில் கிடந்து துரு பிடித்து அந்த மண்வெட்டியின் இலையும் வீணாகிவிடுகிறது.

காலத்தின் ஓட்டத்தில் உழவர்களின் கையில் இருந்த ஏர் கழன்றதைப் போலத்தான் மண்வெட்டியும் கழன்று கொண்டு விட்டது. மண்வெட்டி பிடித்த அந்தக் காலக் கிழவர்களும் காம்பு கழன்ற மண்வெட்டிகள் போலாகி விட்டனர் என்றே நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...