கூட்டுவதையும் குறைப்பதையும் தானே செய்து கொள்ளும் குடி
குடிப்போர் அதிகரிக்காத வண்ணம்
குடிப்போரைக் குடியே முறை வைத்துக் கொன்று கொண்டு இருக்கிறது.
குடிப்போர் எண்ணிக்கை அதிகமாகும்
போதெல்லாம் குடிப்போரைக் குடியே கொன்று தீர்க்கிறது. இப்படி எண்ணிக்கை குறையும் போதெல்லாம்
புதுக்குடிகாரர்களை ஈர்த்து முன்னை விட குடிப்போரின் எண்ணிக்கையைக் குடி அதிகம் பண்ணி
விடுகிறது.
நானறிந்து கொடூரமான குடி
மரணங்களை இதுவரை மூன்று பார்த்து விட்டேன். இந்த மூன்றும் என் கண்ணுக்குத் தெரிந்து
நடந்த நேரடியான குடி மரணங்கள். இந்த மரணங்களைத் தடுக்க நானோ, சுற்றியிருந்தவர்களோ,
உறவினர்களோ, இந்தச் சமூகமோ எதுவும் செய்ய முடியவில்லை. குடியால் மரணத்தைத் தழுவிய அந்த
மூன்று பேரும் மனம் போன போக்கில் யாருடையப் பேச்சையும் கேட்காமல் அல்லது கேட்பதாகக்
கூறி பின்பு கேட்காமல் குடித்துக் கொண்டே இருந்தார்கள்.
தாங்கள் குடிப்பதற்கு நியாயமான
காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். உழைத்துக் களைத்த அவர்ளுக்கு அல்லது
இந்தச் சமூகத்தாலும் உறவுகளாலும் மன உளைச்சல் அடைந்த அவர்களுக்கு அல்லது தங்களை மனமகிழ்வு
செய்து அவ்வபோது மீட்டுக் கொள்ள வேண்டிய அவர்களுக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பாகக் குடியைப்
பார்த்தனர்.
குடித்துக் குடித்தே இந்த
மூன்று பேரும் மரணத்தைத் தழுவப் போகிறார்கள் என்பது அவர்கள் மரணமடையப் போகின்ற சில
ஆண்டுகளுக்கு முன்பாகவே அம்மூவரையும் சுற்றியிருந்த எல்லாருக்கும் தெரிந்திருந்தது.
அவர்களுக்கும் கூட தெரிந்திருந்தது. கசாப்புக் கடையில் ஆடு கருணை மனு போட்டுக் கொண்டிருக்க
முடியாது என்பது போலத்தான் இந்த மூன்று பேரின் மரணங்களைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக்
கடைகளை மூடுங்கள் என்று யாராலும் வேண்டுகோள் விடுக்க முடியாமல் போய் விட்டது.
என் கண்ணுக்குத் தெரிந்த
பார்த்த அந்த மூன்று குடி மரணங்களைப் பெயர்களோடு இப்போது சொல்கிறேன்.
ஒன்று பக்கிரி.
இரண்டு பக்கிரியின் மகன்.
மூன்று பரசு.
இதில் கொடுமை என்னவென்றால்
மூன்று பேருமே நல்ல உழைப்பாளிகள். தேர்ந்த வேலைகாரர்கள்.
மூன்று பேருமே தங்களைக் குடிக்குக்
காவு கொடுத்தார்களா, நாங்கள்தான் காவு கொடுத்து விட்டோமா என்று இப்படியும் அப்படியுமாகக்
குழம்பிக் கலங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு ஆறுதல் என்ன இருக்கிறது?
இன்னும் நிறைய மரணங்களுக்குக்
குடியானது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வகைகளில் காரணமாக இருக்கிறது. நான் மேலே குறிப்பிடும்
மூன்று மரணங்களும் குடியால் நிகழ்ந்த அப்பட்டமான மரணங்கள். இந்த மூன்று மரணங்களுக்கும்
குடியைத் தவிர வேறு எந்தக் காரணமும் கடுகளவு கூட கிடையாது.
மூன்று பேரையும் மரணம் நெருங்குகிறது
என்பது தெரிந்தும் அதுவும் குடியால்தான் மரணம் நெருங்குகிறது என்பது தெரிந்தும் அவர்களால்
குடியை விட முடியாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். குடித்துக் குடித்து மரணிப்பதை
அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்களோ என்னவோ? அதாவது விஷம்தான் சாவை உண்டாக்குகிறது
என்று தெரிந்தும் அந்த விஷம் தரும் போதைக்காகச் சாவைப் புறக்கணித்தவர்கள் அவர்கள்.
அவர்கள் குடி அடிமைகள் ஆகி விட்டார்கள் என்று சொல்வதா, குடி நோயாளிகள் ஆகி விட்டார்கள்
என்று சொல்வதா என்றால் இரண்டுமே உண்மைதான்.
பக்கிரிக்கு எப்போதாவது குடிக்கும்
பழக்கம்தான் இருந்தது. அவர் எப்போது காரைக்காலுக்கு வேலைக்குப் போனாரோ அப்போதே அவரை
முழு நேர குடிகாரராகக் குடி மாற்றி விட்டது. அதற்குப் பின்பு ஊருக்கு வரும் போதெல்லாம்
சதா சர்வ காலமும் குடித்துக் கொண்டிருந்தார்.
எந்த ஊருக்கு வேலைக்குப்
போனாலும் அந்த ஊரில் டாஸ்மாக்கைக் கண்டுபிடிப்பது பக்கிரிக்குப் பரீட்சயமாகி விட்டது.
ஒவ்வோர் ஊரையும் டாஸ்மாக்கை வைத்து அடையாளம் சொல்லுக்கு அளவுக்குப் பக்கிரி மாறிப்
போனார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தண்ணீரும் மதுவும் ஒன்றாகி விட்டது. தாகத்திற்குத்
தண்ணீரைக் குடிப்பதைப் போல மதுவை அருந்தத் தொடங்கி விட்டார்.
காலையில் எழுந்ததும் டீயைக்
குடிப்பதைப் போல அவர் டாஸ்மாக் பானத்தைக் குடித்த போது பார்த்த எல்லாரும் மிரண்டு போனோம்.
தடுக்கப் போன எங்களை எல்லாம், “இதெல்லாம் என்னை என்ன பண்ணி விடும்ன்னு நெனைக்குறீங்க?
எமகாதகன் இந்தப் பக்கிரி. இதெயெல்லாம் ச்சும்மா இப்படி செரிச்சி அப்படித் துப்பிடுவேனாக்கும்.”
என்றார்.
ஒரு கட்டத்தில் மகனும் சேர்ந்து
கொள்ள பக்கிரியின் குடி வாழ்க்கை குஷியாகப் போனது. குடியால் பக்கிரி சாவதற்கு இருபது
ஆண்டுகள் பிடித்தன. அவருடைய மகனுக்கு அந்தப் பாக்கியம் இல்லை. பக்கிரி போய் சேர்ந்த
இரண்டே வருடங்களில் போய்ச் சேர்ந்தார்.
பரசு அண்ணனும் மொடாக் குடியன்
கிடையாது. ஏதோ விஷேஷம், விருந்து என்றால் கூட்டாளிகளோடும் சோக்காளிகளோடும் சேர்ந்து
குடிப்பதோடு சரி. படிப்படியாக ஒவ்வொரு இரவும் வேலை முடிந்ததும் குடிக்க ஆரம்பித்தது
பரசு அண்ணன். அப்படியே ஆரம்பித்துக் காலையில் குடிக்காமல் வேலையைப் பார்க்க முடியவில்லை
என்று குடிக்க ஆரம்பித்தது.
இரண்டு முறை கல்லீரல் கெட்டுப்
போய் மருத்துவரிடம் தூக்கிப் போனோம். புண்ணியவான் அந்த மருத்துவர். இரண்டு முறையும்,
இத்தோடு குடியை விட்டால் பிழைத்துக் கொள்வாய் என்று எச்சரித்தபடி எப்படியோ சரி செய்து
விட்டார். மூன்றாவது முறை கொண்டு போன போது கைவிரித்து விட்டார். எங்கேயோ தூக்கிக் கொண்டு
செல்லுங்கள், நான் பார்க்க முடியாது என்று முகத்தில் அடித்தாற் போல கூறி விட்டார்.
அவருக்கு இதற்கு மேல் பரசு அண்ணனைக் காப்பாற்ற முடியாது என்பதுதெரிந்திருந்தது.
நாங்கள் பரசு அண்ணன் மீது
கோபப்படுவதற்குப் பதிலாக அந்த மருத்துவர் மேல் கோபப்பட்டோம். அவரிடம் சண்டையும் பிடித்தோம்.
அவர் மருத்துவம் செய்ய முடியாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அவர் நினைத்திருந்தால்
அப்போதும் காப்பாற்றியிருக்கலாம் எங்கள் நம்பிக்கை. நாங்கள் எங்கள் மீதும் கோபப்பட்டிருக்க
வேண்டும். இரண்டு முறை ஒரு மருத்துவர் எச்சரிக்கை தந்து காப்பாற்றி அனுப்புகிறார் என்றால்
பரசு அண்ணனைக் குடிக்காமல் வைத்திருக்க வேண்டியது எங்கள் பொறுப்புதான், எங்கள் கடமைதான்.
எங்களால் அந்தப் பொறுப்பையும் காப்பாற்ற முடியவில்லை, அந்தக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை.
முன்பெல்லாம் ஊருக்கு ஒன்று
இருந்த டாஸ்மாக்குகள் இப்போது இரண்டு, மூன்று என்று கூட இருக்கிறது. இந்த டாஸ்மாக்கிற்குப்
பரசு அண்ணனை விடாமல் காவல் காத்தால், அது யாருக்கும் தெரியாமல் இன்னொரு டாஸ்மாக்கில்
போய் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தது. அதை விட இன்னொரு வேதனையும் இதனுள் பொதிந்து
இருக்கிறது. சற்றுக் கூடுதல் விலை கொடுத்தால் டாஸ்மாக் சரக்கை நீங்கள் பெட்டிக்கடையிலும்
வாங்கலாம்.
காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர்
கைவிட்டு விட்டார் என்று விட்டு விட முடியுமா? எங்களுக்கு மனசு கேட்காமல் பரசு அண்ணனைத்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றோம். பிறகு சென்னைக்கு ஸ்டான்லிக்குக்
கொண்டு சென்றோம். எம்.எல்.ஏ., எம்.பி. என்று எல்லாரிடமிருந்தும் சிபாரிசுகளையும் கடிதங்களையும்
வாங்கிக் கொண்டு போய் எவ்வளவோ முயற்சித்தோம். கடைசியில் பரசு அண்ணனைப் பிணமாகத்தான்
தூக்கிக் கொண்டு வர முடிந்தது. சென்னையிலிருந்து பரசு அண்ணன் சடலமாக ஊர் திரும்பியது.
இப்போது ஊரிலிருந்து திருவாரூர்
செல்வதற்குள் நானறிந்து நான்கைந்து இடங்களில் டாஸ்மாக்குகளைப் பார்க்க முடிகிறது. நானறியாமல்
எத்தனை இடங்களில் டாஸ்மாக் இருக்கிறதோ? அவர்களில் யார் பக்கிரி, யார் பக்கிரியின் மகன்,
யார் பரசு அண்ணன் என்பதுதான் தெரியவில்லை. சமயங்களில் அங்கிருந்து பார்ப்பவர்கள் அனைவருமே
இந்த மூன்று பேரின் சாயல்களிலும் தெரிகிறார்கள். இந்த மூன்று பேரும் இறந்த வயது அப்படி.
பக்கிரி செத்த போது ஐம்பத்து எட்டு வயது. பக்கிரியின் மகன் இறந்த போது இருபத்து இரண்டு
வயது. பரசு அண்ணன் இறந்த போது நாற்பத்தைந்து வயது.
நம் தமிழ்ச் சமூகத்தில் டாஸ்மாக்கைத்
திறப்பது சுலபமாகவும் மூடுவது ரொம்பவே கடினமாகவும் இருக்கிறது. காசிருந்தால் யார் வேண்டுமானாலும்
டாஸ்மாக் சரக்கை வாங்கிக் குடிக்கலாம் என்ற நிலையும் இருக்கிறது.
அன்றொரு நாள் பள்ளி மாணவி
ஒருத்தி பள்ளிச் சீருடையிலேயே டாஸ்மாக் சரக்கை வாங்கிக் குடித்து விட்டு டாஸ்மாக்கிற்குச்
சற்று தூரத்தில் சாலையோரத்தில் மயங்கி விழுந்து கிடந்தாள். பாவம் அவளுக்கென்ன மனக்கஷ்டமோ
என்று இதை எடுத்துக் கொள்வதா? இதெல்லாம் தீர்க்கவே முடியாத சமூகக் கஷ்டம் என்று விட்டு
விடுவதா? ஆண்களுக்கு உள்ள சலுகை பெண்களுக்கு இல்லையா என்று சம உரிமையை விட்டுக் கொடுக்காமல்
பேசுவதா? படித்துக் கொண்டிருக்க வேண்டிய தலைமுறை குடித்துக் கொண்டிருக்கிறது என்று
வேதனைபட்டுக் கொண்டு அப்படியே விட்டு விடுவதா?
அந்த மாணவியை ஒரு முச்சக்கர
வாகனத்தில் தூக்கிப் போட்டு வீடு கொண்டு சேர்த்தோம். இந்தக் காட்சியைப் பார்த்ததும்
குடியால் கணவனை இழந்த அந்த மாணவியின் தாய் தலையில் அடித்துக் கொண்டு அரற்றிக் கொண்டு
அழுது கொண்டே இருந்தாள். “கடெசியில தெய்வமும் என்னெயக் கைவிட்டுடுச்சே!” என்று அவர்
அடிவயிற்றிலிருந்து சத்தமிட்டு அழுத போது பிரக்ஞையின்றி நிற்கத்தான் எங்களால் முடிந்தது.
ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் வராமல் நாங்கள் சிரமப்பட்டோம்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்
போது காவல்துறை மீளாய்வு கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
சார்பில் கண்ணீரும் கம்பலையும் இந்தக் காட்சியைச் சொல்லிப் பார்த்தோம். அப்போது உயர்
காவல் அதிகாரியின் கண்களில் சில சொட்டுக் கண்ணீரைப் பார்க்க முடிந்தது.
மூன்று வாரங்களுக்குள் அல்லது
மூன்று மாதங்களுக்குள் என்கிற வாக்குறுதியோ அல்லது உறுதிமொழியோ மீளாய்வுக் கூட்டத்தின்
முடிவில் எப்போதும் வழங்கப்பட்டாலும் இந்தக் காலக்கெடு என்பது இன்றிலிருந்து மூன்றாவது
வாரமா / மாதமா அல்லது மூன்று வாரம் / மாதம் கழித்து வரும் மூன்றாவது வாரமா / மாதமா
அல்லது மூன்றுக்கும் மூன்று என்று கழிந்து வந்து கொண்டே இருக்கும் மூன்றாவது வாரமா
/ மாதமா என்பது விடை காண முடியாத புதிர் போன்றதுதான்.
இந்த டாஸ்மாக்கை நீங்கள்
எதுவும் செய்து விட முடியாது. அது பள்ளிக்கு வெகு தொலைவில் இருக்கிறது. சட்டப்படியான
பாதுகாப்பு அந்த டாஸ்மாக்கிற்கு இருக்கிறது. ஆனால் மாணவர்கள் தேடிச் செல்கிறார்களே!
எப்படியோ வாங்குகிறார்கள், குடிக்கிறார்கள், வீழ்ந்து கிடக்கிறார்கள்.
சில நேரங்களில் இதற்கு எதிராகக்
கடுமையான போராட்டங்களும் நடக்கின்றன. கடைசியில் பேச்சு வார்த்தையில் எல்லாம் முடிந்து
போய் விடுகிறது. சில வாரங்களோ சில மாதங்களோ காணாமல் போகும் டாஸ்மாக் முன்னை விட வீரியமாக
வேறு இடத்தில் முளை கொண்டு விடுகிறது.
ஒரு மரத்தை மட்டும் வெட்டுவதால்
அதன் ஓராயிரம் விதைகள் அழிந்து விடுவதில்லை. இது நல்லதிற்கும் பொருந்துகிறது, டாஸ்மாக்
போன்ற சங்கதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் அப்படியே பொருந்துகிறது.
*****
No comments:
Post a Comment