18 Sept 2023

கில்லி போலச் சொல்லியடித்துப் பணக்காரராக முடியுமா?

கில்லி போலச் சொல்லியடித்துப் பணக்காரராக முடியுமா?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.”                 (குறள், 664)

என்கிறார் திருவள்ளுவர். அனைத்து விதமான சொல் சார்ந்த செயல்களின் விளைவுகளுக்கும் பொருந்தும் அற்புதமான சூத்திரம் இந்தக் குறள்.

இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லுதல் எளிதாகத்தான் இருக்கிறது. சொல்லியபடி செய்யும் போதுதான் கடினமாகத் தெரிகிறது. மிக மிக எளிய செயலாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்வது ஒரு கட்டத்தில் எப்படியோ நின்று போய் கடினமாகி விடுகிறது.

எல்லாவற்றிற்கும் பொருந்தும் இக்குறள் அப்படியே சேமிப்பு மற்றம் முதலீட்டுச் செயல்பாடுகளுக்கும் பொருந்துகிறது.

சிறிதே பெரிதாகிறது

சேமிப்பைப் பற்றிச் சொல்லும் போது ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற சொலவத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

சிறுதுளியாகப் பெய்து கொண்டிருக்கும் எல்லா மழையும் பெருவெள்ளமாகி விடாது. மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாமல் நின்று போய் விடும் சோனை மழை இருக்கிறது. சமயங்களில் தெருவை நனைத்ததோடு நின்று போய் விடும் சிறு மழை இருக்கிறது. சிறிதளவு தெருக்களில் வழிந்தோடும் மிதமான மழை இருக்கிறது. தெருவில் ஓடி வீட்டுக்குள் எட்டிப் பார்க்கும் பெருமழையும் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் கனமழையே வெள்ளமாகப் பெருகுகிறது. தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் மழைக்கே கனமழை என்ற பெயரும் வந்து சேருகிறது. தொடர்ச்சி வாங்கித் தரும் பெயர் அது.

சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பேதங்கள்

சேமிப்பு மற்றும் முதலீடுகளில் சிறுசேமிப்பு, பெரும் சேமிப்பு, சிறு முதலீடு, பெரு முதலீடு என்றெல்லாம் பேதம் பிரிக்க வேண்டாம். தொடர்ச்சியாகச் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடு, தொடர்ச்சியற்ற சேமிப்பு மற்றும் முதலீடு என்று பேதம் பிரித்துக் கொண்டால் போதும்.

தொடர்ச்சியாகச் செய்யப்படும் சிறு சேமிப்பாக இருந்தாலும் சரி, சிறு முதலீடாக இருந்தாலும் சரி அது பெருவெள்ளமாக ஆகப் போவது நிச்சயம். தொடர்ச்சியற்ற சேமிப்புகளுக்கோ முதலீடுகளுக்கோ அப்படிப்பட்ட வாய்ப்பில்லை. தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று தொடர்ச்சி, மற்றொன்று அதைச் செய்தல். இந்த இரண்டும் ஒருங்கிணையும் போதுதான் ஒருவர் சேமிப்பு மற்றும் முதலீட்டால் லட்சாதிபதியாவதும் கோடீஸ்வரர் ஆவதும் நிச்சயமாக நிகழ்கிறது.

தொடர்ச்சியின் மாயாஜாலம்

தொடர்ச்சியாக இடைவிடாமல் பெய்யும் மழைக்குத்தான் பெருவெள்ளத்தை உண்டு பண்ணும் சக்தி இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியை மேகம் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். மழை பொழியும் திராணி இருந்தும் மேகம் பெய்வதை விட்டு விட்டால் பெருவெள்ளம் உருவாகப் போவதில்லை.

சேமிப்பதற்கான மற்றும் முதலீடு செய்வதற்கான பணமிருந்தும் அதைச் செய்யாமல் விட்டு விட்டால் பணம் செலவெனும் வடிவத்திற்கு உருமாறிக் கொண்டிருக்கும். அது எப்படியோ சேமிப்பையும் முதலீட்டையும் ஒரு செலவைப் போல நினைத்துச் செய்தாலும் அந்தச் செயல் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

வழிகாட்டும் விரலே வழிகாட்டி விடாது

இப்படியிப்படிச் செய்தால் கோடீஸ்வரராகி விடலாம் என்பதற்கான கோடிக்கணக்கான முறைகள் சொல்லப்படலாம். அந்த முறைகள் சொல்லப்படுவதில் என்ன இருக்கிறது? நெருப்பு என்று சொல்வதால் சுட்டு விடுவதில்லை. நெருப்பை உருவாக்கித் தோலில் வைத்தால் சுடுகிறது. செயல் என்பது இங்கு முக்கியமாக இருக்கிறது.

வழிகாட்டும் பெயர்ப்பலகையே நீங்கள் செல்லும் இடத்துக்கு உங்களைத் தூக்கிக் கொண்டு போய் விட்டு விடாது. நீங்கள்தான் பயணிக்க வேண்டும்.

வழியைக் காட்டும் விரலே உங்களைச் செல்ல வேண்டிய இடத்துக்கு இழுத்துச் சென்று விடாது. உங்கள் கால்கள் நடந்தாக வேண்டும். வழிகாட்டுவதற்கான சொல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு காட்டிய வழியில் நடைபோடும் கால்களின் செயலும் முக்கியம்.

தொடர்ச்சியை நிலைநாட்டும் கலை

தினந்தோறும் ஒரு ரூபாய் சேமிப்பது என்பது சொல்வதற்கு எளிதானது. செய்வதற்கும் எளிதானதுதான். தொடர்ச்சியாகச் செய்வதுதான் கடினமானது. தினந்தோறும் ஒரு ரூபாய் சேமிப்பதைத் தொடர்ந்து செய்து வரும் ஒருவர் என்றாவது ஒரு நாள் அதை விட்டு விடலாம். இந்த இடம்தான் தொடர்ச்சியாகச் செய்வதனால் கிடைக்கும் பலத்தை அல்லது தொடர்ச்சியினால் உண்டாகப் போகும் மாயாஜாலத்தை உடைத்தெறிந்து விடுகிறது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் சேமித்து வந்தால் ஒரு மாதத்தில் அது முப்பது ரூபாயாகச் சேர்ந்து விடுகிறது. ஓராண்டில் முந்நூற்று அறுபத்து ஐந்தாகி விடுகிறது. பத்தாண்டுகளில் மூவாயிரத்து அறுநூற்று ஐம்பதாகி விடுகிறது. அதாவது முந்நூறு மூவாயிரமாகிறது, அறுபது அறுநூறாகிறது. ஐந்து ஐம்பதாகிறது. இதுதான் தொடர்ச்சியாகச் செய்வதில் உள்ள பலன்.

சேமிப்பு முதலீடாகும் போது நிகழும் மந்திரஜாலம்

இந்தச் சேமிப்பைத் தூக்கி அப்படியே வட்டி தரும் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் தினந்தோறும் அல்லது மாதந்தோறும் முதலீடு செய்து வந்தால் ஐந்து சதவீத தனிவட்டி என்றாலும் வட்டித்தொகை மட்டும் சுமாராக ஆயிரம் சொச்சம் ரூபாய் கிடைக்கும். தினந்தோறும் ஒரு ரூபாய் சேமித்துப் பத்தாண்டுகளில் தனிவட்டியில் சுமாராக நான்காயிரத்து எழுநூறு சொச்சம் ரூபாயைப் பெறலாம். இதுவே கூட்டு வட்டி வளர்ச்சி என்றால் ஐந்து சதவீத வட்டிக்குச் சுமாராக இன்னும் ஆயிரத்து ஐநூறு சொச்சம் ரூபாய்க்கு மேல் கூடுதலாகச் சுமாராக ஆறாயிரம் சொச்சம் ரூபாயைப் பெறலாம். இக்கணக்கீடுகள் தோராயமாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்.

நமது கணக்கீடு ஐந்து சதவீத வட்டி என்ற அளவிலேயே கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சாதாரண நிரந்தர வைப்புத்தொகைக்கே வட்டியானது ஐந்து சதவீதத்தை விட அதிகமாகவே வழங்கப்படுகிறது என்பதால் உத்தரவாதத்தோடு ஏழரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய முடியும்.

தொடர்ச்சி எனும் மந்திரத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துங்கள்

அன்றாடம் சம்பாதிப்பவர்களும் மாத ஊதியக்காரர்களும் தொடர்ச்சியாகச் செய்தால்தான் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்களைக் கண்ணாரக் காண முடியும். இதைச் சொல்வது எளிது, கண்ணாரக் காண்பதென்றால் தொடர்ச்சியான இடைவிடாத சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயல்பாடு நடந்திருக்க வேண்டும். சொல்வதால் மட்டுமே சாதித்து விட முடியாது.

மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கிப் போடுவதைக் கூட நீங்கள் தொடர்ச்சியாக ஆயுள் முழுவதும் செய்தால் உங்களின் பண மதிப்பை அது அதிகரித்து விடும். இதில் உள்ள பிரச்சனை மாதா மாதம் தங்கம் ஒரு கிராமை வாங்கிப் போட வேண்டும் என்பதுதான். ஒரு மாதம் தவறினாலும் அடுத்த மாதம் இரண்டு கிராமாகவாவது சேர்த்து வாங்கிப் போட்டு இடைவிடாமல் அந்தச் செயலைச் செய்து விட வேண்டும். இந்தத் தொடர்ச்சி எனும் மந்திரத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது அது மந்திரம் போன்ற விளைவுகளை உருவாக்குவதை நீங்கள் நேரடியாக அனுபவித்து உணர்வீர்கள்.

ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளாக…

‘ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட வில்லை’ என்பார்கள். உண்மைதான். ஒவ்வொரு நாளாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது.

‘எந்த ஒரு பயணமும் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பிக்கிறது’ என்பார்கள். உண்மைதான். எடுத்து வைத்த முதல் அடியிலேயோ சில அடிகளிலோ நின்று விட்டாலோ அது பயணமாகாது. ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அது பயணமாகிறது.

சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பணக்காரராவதற்கும் மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் அப்படியே பொருந்தும். ஏதோ ஒரு நாளில் சேமிப்போ, முதலீடோ நின்று விடுமானால் அது ஒருவரைப் பணக்காரராக்காது. ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அது ஒருவரைப் பணக்காரராக்குகிறது. ஆக தொடர்ச்சியான சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயல்பாடுதான் ஒருவரைப் பணக்காரராக்குகிறது.

நிச்சயம் சாதிக்கும் நீண்ட கால நீடித்த செயல்பாடுகள்

ஒரு மாற்றத்தை மனித முயற்சியால் நிகழ்த்த வேண்டுமானால் அதற்கு நீண்ட காலம் நீடித்த செயல்பாடு தேவைப்படுகிறது. நீண்ட காலம் நீடிக்கும் செயல்பாடு நிச்சய வெற்றியைத் தரும் என்பதால் குறுகிய காலத்தில் சாதிப்பதற்கான எந்த வழிகளையும் நான் பரிந்துரைக்க இயலாது. அது போன்ற முறைகள் ஒருவருக்குச் செல்லுபடியாகும், இன்னொருவருக்குச் செல்லுபடியாகாது. மேலும் அதற்கு நிறைய சாமர்த்தியங்கள், நெளிவு சுளிவுகள் தேவைப்படும்.

நீடித்த நீண்ட காலச் செயல்பாட்டுக்கு எந்த விதமான சாமர்த்தியமோ நெளிவு சுளிவுகளோ தேவையில்லை. தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்குச் செய்யும் பழக்கவழக்கமாக்கிக் கொள்ளும் ஒழுக்கம் மட்டுமே போதுமானது. இந்த ஒழுக்கத்தை விடாமல் ஒருவர் தொடர்ந்தால் நினைத்தைச் சாதிக்கலாம். அதுவும் சர்வ நிச்சயமாகச் சாதிப்பதை உறுதியாகச் சொல்லாம்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்”                (குறள், 131)

என்று திருவள்ளுவர் சொல்வதற்குக் காரணம் அதுதான். அப்படி ஓர் ஒழுக்கம் உங்களிடம் உருவாகி விட்டால் பணக்காரர் ஆவது மட்டுமல்லாது நீங்கள் சாதிக்க நினைக்கும் எந்த ஒன்றிலும் கில்லிப் போலச் சொல்லியடித்துச் சாதித்துக் காட்ட முடியும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...