21 Sept 2023

உங்கள் உணவு வரலாற்றை நீங்களே எழுதுங்கள்!

உங்கள் உணவு வரலாற்றை நீங்களே எழுதுங்கள்!

நோய்கள் வராமல் இருப்பதற்கு ஒருவர் எப்படிப்பட்ட உணவுமுறையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இது குறித்துப் பிரமாதமாக ஆய்வு செய்யப்பட்டு வெளிவரும் முடிவுகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. எவ்வளவு சிறந்த ஆய்வு முடிவுகள் என்றாலும் ஒழுக்கமும் கட்டுபாடும் இல்லாமல் போனால் உங்களுக்கு உதவாமல் போய் விடும்.

என்னைக் கேட்டால் உணவுமுறையில் ஒழுக்கமும் கட்டுபாடும்தான் உயர்வான ஆய்வு முடிவுகள். இதுவரை நீங்கள் உணவு உண்ட அனுபவத்திலிருந்து எந்தெந்த உணவு வகைகள் உங்களுக்கு ஒத்துக் கொள்ளும், எந்தெந்த உணவு வகைகள் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எவ்வளவு உண்ண வேண்டும் என்ற அளவும் இதற்கு முன் ஏற்பட்ட செரிமான கோளாறுகளிலிருந்து உங்களுக்குத் தெரியும்.

உண்ணும் உணவுக்கேற்ப உடல் சார்ந்த உழைப்பு அல்லது உடல் சார்ந்த பயிற்சிகள் இருக்க வேண்டும் என்பது பொதுவான மாற்ற முடியாத விதியாகும். உங்கள் உடலின் ரத்த ஓட்டம், சுவாச ஓட்டம், கழிவு நீக்கம் போன்றவற்றைச் சீராக வைத்துக் கொள்ளவும் உழைப்பும் உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டையும் தவிர்த்து விட்டு தேர்ந்த ஆய்வு முறையிலான உணவு முறையைப் பின்பற்றுவது கூட உங்களுக்கு எந்தப் பயனும் தராது.

நமது தமிழ்நாட்டு உணவு முறையே முறைபடுத்தப்பட்ட வகையில்தான் இருக்கிறது. இந்த உணவையே உங்கள் பசிக்கும் உடல் உழைப்புக்கும் ஏற்ற வகையில் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் போதுமானது.

உங்கள் உணவை நீங்கள் தயாரித்துக் கொள்கிறீர்களா என்பதும் முக்கியம். உங்கள் உணவுப்பொருள் எப்படி விளைவிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.

ரசாயனத்திலேயே விளைவிக்கப்படும் உணவுப்பொருள் உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ள பெரிய அறிவியல் அறிவெல்லாம் தேவையில்லை.

உங்கள் உணவு சுகாதாரக் கேடாகவும் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது என்றால் அதுவும் ஏற்ற உணவல்ல என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அதிபுத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

எளிமையான இயற்கையான முறையில் விளைந்த உணவுப் பொருட்களை நீங்கள் அறிந்து எளிமையான முறையில் உங்கள் கண்பட நீங்களே சமைத்து உண்பதைப் போன்ற ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு வேறு என்ன இருக்கிறது?

இப்படி நீங்களே பார்த்துப் பார்த்துச் செய்து உணவைத் தயாரித்து உண்டாலும் அதன் அளவு என்பது முக்கியமானது. அதீத உணவு உள்ளீடானது அதீத நோய்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. ஆக நீங்கள் எப்படி எந்த வகையில் சுற்றி வந்தாலும் உணவு குறித்த ஒழுக்கமும் கட்டுபாடும் முக்கிய இடம் பிடிக்கிறது.

இயற்கையாக விளைவித்தது, நீங்களே சமைத்தது என்றாலும் அளவைத் தாண்டி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் நீங்கள் நோய்வாய்ப்பாடுவதை நீங்களே நினைத்தாலும் தடுத்துக் கொள்ள முடியாது.

எவ்வளவுதான் ஆரோக்கியமான சத்தான உணவு என்றாலும் உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை உண்டால் நீங்கள் நோயிலிருந்து தப்ப முடியாது. இதனால்தான் உணவைப் பொருத்த வரையில் ஒழுக்கமும் கட்டுபாடும் முதன்மையாகிறது.

இன்றைய சிற்றுண்டிக் கலாச்சாரத்திற்கும், மீதூண் உண்ணும் போக்கிற்கும் ஒழுக்கமும் கட்டுபாடும் நல்ல மருந்துகள். ரசாயன உணவாக இருந்தாலும் அளவறிந்து உண்பதால் நோய்வாய்ப்படும் போக்கு குறைவாகவே இருக்கும். இயற்கையான உணவாக இருந்தாலும் அளவை மறுதலித்தால் அது நோய்ப்பாட்டில்தான் கொண்டு போய் நிறுத்தும்.

உங்களுக்கான உணவுகளை அறிந்து கொள்ளவும் உணவு எடுத்துக் கொள்ளும் முறைகளை அறிந்து கொள்ளவும் நீங்கள் உண்ணும் உணவுகளையும் அந்த உணவுகளையும் உண்ட பின் உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் பட்டியலிட்டுக் குறித்துக் கொண்டு வாருங்கள்.

அந்தப் பட்டியல்தான் உங்களுக்கான உணவு வழிகாட்டி மற்றும் ஆலோசகர். அந்தப் பட்டியலின்படி மாற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் உங்களுக்கான சரியான உணவுப் பழக்க முறையை நீங்கள் உருவாக்கிக் கொண்டு விடலாம்.

ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதுவதைப் போல அந்த நாட்குறிப்பின் ஒரு பகுதியாக உணவுக்குறிப்பையும் எழுதி வாருங்கள். அதுதான் உங்கள் உணவின் வரலாறு.

மனிதர்கள் வரலாற்றிலிருந்தே பாடம் கற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் உண்ணும் உணவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள உங்கள் உணவு வரலாற்றை நீங்கள் பதிவு செய்து கொண்டு வருவது முக்கியமானது.

நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் நீங்கள் உண்ட உணவுப்பட்டியலே உங்களுக்கான பல மருத்துவ தரவுகளைத் தரும். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ப உங்கள் உணவு முறையை எப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவையும் தரும். பதிவு செய்து கொண்டு வருவதன் பலன் இதுதான். இந்தப் பலனால் விரைவில் உங்களுக்கு நீங்களே ஒரு மருத்துவராகி விடுவீர்கள்.

உங்கள் உணவு முறையை உங்களுக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்துக் கொள்வதுதான் உங்களுக்கான மருத்துவ முறை என்பதை உங்கள் உணவு பதிவுகளைச் செய்து வரும் போது புரிந்து கொள்வீர்கள். நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள உங்கள் உணவு வரலாற்றுப் பட்டியலை அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் எந்தெந்த உணவெல்லாம் உங்கள் உடல் நலத்தை எப்படியெல்லாம் வைத்திருந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

உங்கள் உணவையும் அதன் விளைவாக உங்கள் உடல் மாற்றங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் உண்ணும் உணவு உங்கள் கட்டுபாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள். அந்தக் கட்டுபாட்டைத்தான் ஒழுக வேண்டும் என்பதில் தெளிவு கொள்வீர்கள். இந்தக் கட்டுபாட்டையும் ஒழுக்கத்தையும் நான் உங்களுக்கான மிகச் சிறந்த உணவு முறையாக மட்டுமல்லாமல் மருத்துவ முறையாகவும் பரிந்துரைக்கிறேன்.

இப்படி ஒரு முறையைக் கையாளுவதற்காக நீங்கள் என்ன பெரிதாகச் செலவு செய்து விடப் போகிறீர்கள் ஒரு குறிப்பேட்டையும் தூவலையும் வாங்குவதைத் தவிர? இந்த முறை உங்களுக்கான மருத்துவச் செலவையும் பொருத்தமற்ற உணவுச் செலவுகளையும் அவ்வளவு மிச்சம் செய்து தரும். இந்த மிச்சம் உங்களுக்கான பணச் சம்பாத்தியம் மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கான சம்பாத்தியமாகவும் இருக்கும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...