பணத்தைச் சேர்ப்பதில் பின்னடைவோர் கவனத்திற்கு…
ஏன் பணம் சேர்ப்பதில்
பின்னடைவு?
ஏன் ஒருவரால் எதிர்பார்க்கும்
அளவுக்குப் பணத்தைச் சேர்க்க முடியவில்லை என்றால் பாதி வாழ்க்கையை வாழ்ந்து முடித்த
பின்புதான் அவருக்கு பணத்தின் அருமையே தெரிகிறது. பாதி வாழ்க்கை வரை பணத்தைச் சேர்ப்பதில்
கவனமற்று இருந்த ஒருவர் தன்னுடைய மீதி வாழ்க்கையில் பணத்தைச் சேர்க்க முற்படுகிறார்.
இதற்குச் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மேற்பூச்சுகளால்
மறைக்கும் தன்மை
பணத்தைக் கையாளும் முறை மற்றும்
செலவழிக்கும் முறைகளை நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அதில்
சாமர்த்தியமான பொய்கள் அல்லது பெருமை பேசும் தம்பட்டங்களே நிறைந்திருக்கின்றன. இதனை
மேற்பூச்சுகளால் வெளிப்பட வேண்டிய மற்றும் உணர வேண்டிய உண்மையை நமக்கு நாமே மறைத்துக்
கொள்ளும் தன்மை எனலாம். இவ்வித அணுகுமுறை பணத்தைப் பற்றி நேர்மறையாகப் புரிந்து கொள்வதற்கு
மிகப்பெரிய எதிரியாகும்.
பணம் குறித்த
எதிர்மறைப் பார்வை
பணம் குறித்த வேறு விதமான
மனப்பான்மையும் பலரிடம் இருக்கிறது. நேர்மையான முறையில் பெரும் பணத்தைச் சேர்க்க முடியாது
என்ற பார்வை அதில் முக்கியமானது. பெரும்பணத்தைச் சேர்த்த ஒருவர் மற்றவர்களையோ, சமூகத்தையோ,
அரசாங்கத்தையோ ஏமாற்றித்தான் அதைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது.
அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார். ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பது முக்கியமானது.
பணம் குறித்த இப்பார்வைப்
பணத்தைச் சேர்க்க முடியாத எதிர்மறைப் பார்வையினின்றோ, பெரும் பணம் படைத்தவர்களைப் பார்த்து
உண்டாகும் ஏக்கப் பெருமூச்சாலோ ஏற்படுவதாகும். இத்தகைய எதிர்மறைப் பார்வை பணம் சேர்ப்பது
குறித்தான முழுமையான ஈடுபாட்டைக் குறைத்து விடுகிறது.
தத்துவார்த்த
நிலைப்பாடுகளால் உண்டாகும் பின்னடைவு
இயல்பாகவே இந்தியச் சமூகத்தில்,
‘வரும் போது எதை எடுத்துக் கொண்டு வந்தோம், போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகப்
போகிறோம்’ என்ற பணம் குறித்த தத்துவார்த்த நிலைப்பாடும் உண்டு. இத்தகு நிலைப்பாடு பணத்தைச்
சேர்ப்பது குறித்த மனரீதியான ஒரு பின்னடைவை உண்டாக்கக் கூடியது.
மாறும் பார்வைகளைக்
கவனியுங்கள்
மேற்படி தத்துவ நிலைப்பாடுகள்
இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. பணம் சேர்ப்பது குறித்த உணர்வுநிலையை அவை இறுக்கிப்
பிடிக்கின்றன.
ஆனால் பாருங்கள் காலம் மாறிக்
கொண்டிருக்கிறது.
வரும் போது நீங்கள் எதையும்
எடுத்துக் கொண்டு வரவில்லை என்றால் உங்கள் பெற்றோர் பணம் குறித்த அசட்டைத்தனத்தோடு
இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
போகும் போது எதை எடுத்துக்
கொண்டு போகிறோம் என்று நீங்கள் இருந்து விட்டால் நீங்கள் பணம் குறித்த அசட்டைத்தனத்தோடு
இருந்து விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பாரம்பரியப்படுத்த
வேண்டிய பணச் சேமிப்புப் பழக்கம்
ஒவ்வொருவராலும் டாட்டா, பிர்லா
அளவுக்குப் பணத்தைச் சம்பாதித்துச் சேமித்து விட முடியாது என்பது வேண்டுமானாலும் உண்மையாக
இருக்கலாம். அவரவர் சந்ததிக்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்து விட்டுச் செல்லலாம்.
அது கூடுதலா, குறைவா என்ற கேள்வி இரண்டாம் பட்சம்தான். அதன் மூலம் உங்கள் சந்ததிக்குச்
சேமிப்பு என்ற பழக்கத்தை நீங்கள் பாரம்பரியப்படுத்துகிறீர்கள். சேமிப்பை உங்கள் குடும்பப்
பண்பாடாக வளர்க்கிறீர்கள். அதுதான் முக்கியம்.
பணம் குறித்த
ஆக்கப்பூர்வ பார்வையை வளர்ப்பது
பணம் குறித்த ஆக்கப்பூர்வமான
பார்வை இல்லாமல் போவதற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கிய காரணம் பணத்தை உணர்வுப்பூர்வமாக
அணுகுவதாகும். இன்று உங்கள் பையில் பணமிருக்கலாம். இன்னொரு நாள் உங்கள் பையில் பணம்
இல்லாமல் இருக்கலாம். இந்த இரண்டும் இரண்டு நாட்களின் இரண்டு விதமான நிலைகள். இந்த
நிலைகளை நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?
பணம் உங்கள் பையில் இருப்பதும்
இல்லாமல் போவதும் உங்கள் கையில் இல்லை என்று ஒரு விதமாகவும், உங்கள் கையில்தான் அது
இருக்கிறது என்று வேறொரு விதமாகவும் நீங்கள் அணுகலாம்.
இருப்பதும் இல்லாமல் போவதும்
உங்கள் கைகளில் இல்லை என்று அணுகினால் நீங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகுவதாகத்தான் அர்த்தம்.
இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றது என்று அணுகுவதே அறிவுப்பூர்வமான
அணுகுமுறையாகும்.
பணத்தைப் பொருத்த வரையில்
நீங்கள் அறிவுப்பூர்வமாகவே அணுக வேண்டும். சேமிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்குமானால்
பணம் உங்கள் பையில் இருக்கும். செலவழிக்கும் பழக்கம் மட்டுமே உங்களிடம் இருக்குமானால்
உங்கள் பையில் பணம் இருக்காது. இதுவே பணம் இருப்பதற்கும் இல்லாமல் போவதற்குமான அறிவுப்பூர்வமான
அணுகுமுறையாகும்.
பொருட்களை வாங்குவதற்கான
பண அணுகுமுறைகள்
உங்களுக்கு அவசியம் தேவையான
பொருட்களை மட்டுமே வாங்குங்கள். உங்களுக்கு எவை அவசியம் தேவையான பொருட்கள் என்பதை உணர்வைக்
கொண்டோ மனநிலையைக் கொண்டோ தீர்மானிக்காதீர்கள். இவை நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம்,
நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்துக்கு வருடம் மாறக் கூடியவை.
இன்று உங்களுக்குப் பிடித்தமான
ஒன்று நாளைக்கே பிடித்தம் இல்லாமல் போகலாம். உணர்வும் மனோநிலையும் மாறிக் கொண்டிருப்பவை.
இன்று தேவையாகவும் அவசியமாகவும் பட்டது அடுத்த நாளே தேவையற்றதாகவும் அவசியம் இல்லாததாகவும்
தோன்றலாம். இதனால் நீங்கள் தேவை என்று நினைத்து தேவையற்ற பொருட்களை, அவசியம் என்று
நினைத்து அவசியமற்ற பொருட்களை வாங்கிக் குவித்து விடலாம். இதனால் விரயமாவப் போவது உங்கள்
பணம்தான்.
பல பொருட்களை வாங்கி விட்டு
அது உங்களுக்குத் தேவையோ அவசியமோ இல்லை என்று விற்க நினைத்தால் பாதி விலைக்குக் கூட
உங்களால் விற்க முடியாது. கடையை விட்டு இறங்கி விட்டால் அந்தப் பொருளின் மதிப்பு சில
சதவீதங்களாவது சரிந்து விடுகிறது. அவற்றுள் சில பொருட்களை நீங்கள் அடிமாட்டு விலைக்குக்
கொடுப்பதாகச் சொன்னாலும் வாங்க ஆள் இருக்க மாட்டார்கள்.
எனவே, பொருட்களை வாங்கி பணத்தைக்
கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பொருட்கள் வாங்கும் முடிவுகளை பல நாட்கள் தள்ளிப் போடுங்கள்.
வாரக் கணக்கில் மாதக் கணக்கில் கூட தள்ளிப் போடலாம். தள்ளிப்போடும் நாட்களில் நீங்கள்
அந்தப் பொருள் உங்களுக்கு உண்மையாகவே தேவையா, இல்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள்.
பொருட்கள் வாங்குவது குறித்து
ஒரு வாசகம் சொல்லப்படுவதுண்டு. அது என்னவென்றால், ‘நீங்கள அநாவசியப் பொருட்களை வாங்கிக்
குவித்துக் கொண்டிருந்தால் அவசியமான பொருளை வாங்க நினைக்கும் போது உங்கள் கையில் பணம்
இல்லாமல் போய் விடும்.’ அப்படி பணம் இல்லாத நிலைக்கு ஆளாகி, ‘எல்லாம் என் நேரம்’ என்று
உணர்வுவயப்பட்ட நிலையில் சிந்திக்காமல் பொருட்களை வாங்குவதற்கு முன்னே அறிவார்ந்து
சிந்தித்துப் பொருட்களை வாங்குவதன் மூலமாக நீங்கள் எப்போதும் பணக் கையிருப்பு உள்ள
ஆளாக இருப்பீர்கள்.
கொடுக்கல் வாங்கல்களில்
கவனம்
பணத்தைக் கொடுத்து வாங்குவதில்
உங்களுக்கு நிபுணத்துவம் போதவில்லை என்றால் நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பதுதான் சரியானது.
பணத்தைக் கொடுத்து வாங்கிப் பணம் சம்பாதிப்பவர்கள் உங்கள் கண் எதிரே நிறைய பேர் இருக்கலாம்.
அவர்களைப் பார்த்தெல்லாம் நீங்கள் சூடு போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கொடுத்து வாங்குவதற்கான நெளிவு
சுளிவுகளும், சாமர்த்தியங்களும் எளிதில் எல்லாருக்கும் கைகூடி விடாது. பணத்தைக் கொடுத்து
வாங்குவதில் நிபுணத்துவம் உள்ள பிரபலமான நிறுவனங்களே இவ்விசயத்தில் ஆட்டம் கண்டிருக்கின்றன.
பணத்தைக் கொடுத்து வாங்குவதில்
பலர் நல்ல உறவுகளை இழந்திருக்கிறார்கள், நட்புகளை இழந்திருக்கிறார்கள். உங்களுக்குப்
பிடித்தமானவராக இருக்கிறார் என்பதற்காக வாங்கிய பணத்தை நீங்கள் குறிப்பிடும் காலகெடுவிற்குள்
கொடுக்கும் திராணி அவருக்கு இருக்கும் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது.
பணத்தை வாங்கும் போது தேனொழுகப்
பேசுபவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்கும் போது தேளைப் போலக் கொட்டி விடுவதுண்டு.
இதனால் பணம் சார்ந்து மனிதர்களை நீங்கள் தவறாக மதிப்பிட்டு விடக் கூடிய நிலைகளை அடையலாம்.
இது உண்மையில் உங்கள் தவறே. நீங்கள் தவறாக மதிப்பிட்டு விட்டுப் பழியை யார் மேலும்
போட்டு விட முடியாது. வங்கிகள் பலவும் கொடுத்த கடனை வசூலிப்பதற்குள் விழி பிதுங்கி
நிற்பதை எப்போதும் கவனித்துப் பாருங்கள்.
கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக
இருக்க முடியுமானால் அதைச் செய்யுங்கள். கவனமாக இருக்க முடியாது என்றால் அந்தப் பக்கமே
தலைவைத்துப் படுக்காதீர்கள்.
வளர வேண்டிய பண மதிப்பை இப்படிக்
கொடுக்கல் வாங்கலில் கைவிட்டவர்கள் ஏராளம் என்பதால் இதில் நீங்கள் மிகுந்த கவனத்தோடு
இருக்க வேண்டும்.
கேள்விகளால்
எந்நேரமும் வேள்வி செய்யுங்கள்
செலவினம் மற்றும் பொருட்கள்
வாங்குதல் என வரும் போது பணத்தைத் தொடர்புபடுத்திப் பல கேள்விகளை எழுப்புங்கள். உதாரணத்திற்கு,
வாங்கும் இந்தப் பொருளால் வருங்காலத்தில் பணம் வரும் வாய்ப்புகள் உள்ளனவா? இந்தப் பொருளைப்
பராமரிக்க அதிகப் பணம் செலவிட வேண்டியிருக்குமா? இந்தப் பொருள் வாங்கச் செலவழிக்காமல்
அதாவது அந்தப் பொருள் இல்லாமல் கூட என்னால் இருக்க முடியுமா? – இப்படி கேள்விகளை எழுப்பிப்
பாருங்கள். எல்லா கேள்விகளுக்கும் பாரபட்சமற்ற நியாயமான பதிலைக் கண்டடையுங்கள். பணச்
சேமிப்பில் பின்னடையாமல் இழுத்துப் பிடிப்பதற்கு நீங்கள் கண்டடையும் நியாயமான காரணங்களே
உங்களுக்கு உதவும் மற்றும் துணை நிற்கும்.
இவற்றையெல்லாம்
தொகுத்துச் சொல்வதானால்…
பணம் குறித்த உங்களது சரியான
பார்வை, சரியான மனநிலை, சரியான நிலைப்பாடு, சரியான ஆர்வம், சரியான கருத்தாக்கம், சரியான
அணுகுமுறை, சரியான கொடுக்கல் வாங்கல் முறைகள், சரியான பணம் சார்ந்த பழக்க வழக்கங்கள்
என அனைத்தும் சரியான ஒரு நிலையை அடைந்து விட்டால் பணம் சார்ந்து நீங்கள் பின்னடைய வாய்ப்பே
இல்லை.
*****
No comments:
Post a Comment