27 Nov 2020

சேர்ந்து வாழத் தயார்!

சேர்ந்து வாழத் தயார்!

செய்யு - 638

            இதுக்கு மேலயும் தொடந்தாப்புல பேசிக்கிட்டெ இருக்க மாட்டாங்க. இந்த அழைப்புல எதாச்சும் ஒரு முடிவெ பண்ணி வுட்டுப்புடுவாங்கங்ற நெனைப்புக்கு வந்தாரு சுப்பு வாத்தியாரு. ஆக இந்த நாலாவது அழைப்புக்குச் சுப்பு வாத்தியாரு கைப்புள்ளையத் தயாரு பண்ணிக்கிட்டாரு. விகடுவையும் கூப்புட்டுக்கிட்டாரு. வேற கூப்புடுறதுக்கு அவருக்கு ஆளும் இல்ல. வக்கீலக் கூப்புட்டுப் பாத்தாரு. அதுக்கு வக்கீலு, "வர்றதப் பத்தி ஒண்ணுமில்லங்கய்யா! உள்ளார அனுமதிக்க மாட்டாங்க!"ன்னாரு. "செரித்தாம் அப்பிடின்னா நாஞ்ஞ பாத்துட்டு வந்து வெசயத்தச் சொல்றேம்!"ன்னுட்டாரு. கொஞ்சம் நம்ம பக்கம் ஆளுங்க இருந்தா தேவலாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அதெப் பத்தி விகடுகிட்டெ சொல்லிக்கிட்டும் வந்தாரு. இன்ன ஒரே ஒரு ஆளு கூட இருந்தா தேவலாமுங்றது சுப்பு வாத்தியாரோட நெனைப்பு. செய்யுவோட பஞ்சாயத்துச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாருக்கு உறவுலயும் தொணையில்லாமப் போச்சு. ஊருலயும் கூட மாட தோள் கொடுக்க ஆளில்லாமப் போச்சு. தோப்புல ஒதுங்கிப் போயி நிக்குற ஒத்த மரம் கணக்கா அவரு நின்னாரு. நல்ல நேரத்துல மனுஷங்க தொணை கேக்காமலயே வந்துப்படும். கெட்ட நேரத்துல கெஞ்சிக் கூப்புட்டாலும் ஆளாளுக்குக் கழட்டிக்கப் பாப்பாங்களே தவுர தொணைக்கு நிக்க மாட்டாங்க. அப்படி கெட்ட நேரத்துல ஒவ்வொருத்தரும் கழட்டிக்கிறாப்புல சம்பவங்களும் அதுவா அமைஞ்சுப் போயிடும். அவுங்க சமுக நீதி மையத்த அடைஞ்சப்போ, நல்ல வேளையா விகடுவுக்குத் தெரிஞ்ச ரொம்ப நெருக்கமான வாத்தியாரு ஒருத்தரு வந்தாரு. அவர்ரப் பாத்துக் கையக் காட்டி, விகடு அவருகிட்டெப் போயிப் பேசுனாம்.

            கலெக்டர் ஆபீஸூக்கு ஒரு வேலையா வந்ததாவும், இன்னிக்கு ஒரு நாளு இங்கயே கெடந்தாத்தாம் அந்த வேலை ஆவும்ன்னு சொன்னாரு அந்த வாத்தியாரு. நல்லதாப் போச்சுன்னு நெனைச்ச விகடு இங்க வந்திருக்குறதுக்கான கதெயச் சொல்லி கொஞ்சம் கூட நின்னு தொணைக்குப் பேச முடியுமான்னு கேட்டதும், "ல்ல சார்! இந்த மாதிரி விசயங்கள்ல நாம்ம தலையிடுறது யில்ல. நீஞ்ஞளே பாத்துக்கிடுங்க. தப்பா நெனைச்சுக்காதீங்க சார். இதுல நம்ம பேரையும் பதிவு பண்ணாங்கன்னா வெச்சுக்கோங்க கோர்ட்டு கேஸூன்னு நம்மாள அலைஞ்சிக்கிட்டு இருக்க முடியாது!"ன்னு அவரு சொன்னதெ கேட்டு, "இதுல இப்பிடி ஒரு விசயம் இருக்குறது நமக்குத் தெரியாமப் போயிட்டுங்கய்யா! யப்பாத்தாம் யாராச்சும் கொஞ்சம் தொணையிருந்தா தேவலாம்ன்னு நெனைச்சாங்க. அந்த நெனைப்புல வந்துக் கேட்டுப்புட்டேம். நல்ல வேள இதுல அப்பிடி ஒரு பெரச்சனெ இருக்குறதெ சொன்னீங்க. எஞ்ஙப் பெரச்சனெ எஞ்ஞளோட போவட்டும். ஒஞ்ஞள வந்து சுத்த வாணாம்! ரொம்ப நல்லதுங்கய்யா! இதுல வந்த மாட்டிக்கிடாம போனீங்களேய்யா! நல்ல நேரத்து கௌம்புங்கய்யா!"ன்னு சொல்லிட்டுத் திரும்புனாம் விகடு.

            திரும்புன அவனெ தடுத்து நிறுத்தி, "ன்னா சார் பெரிய தங்காச்சி? அவ்வேம் புருஷன் வூட்டுக்கு அடிச்சித் தொரத்துங்க சார்! இப்பிடில்லாம் அலைஞ்சி நம்மாள சமாளிக்க முடியாது!"ன்னாரு அந்த வாத்தியாரு.

            விகடு ஒண்ணும் சொல்லாம நடக்க ஆரம்பிச்சாம். "ன்னா சார் ஒண்ணும் சொல்லாம் போறீயே?"ன்னாரு அந்த வாத்தியாரு.

            "சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்கய்யா! அடிச்சித் தொரத்துறதுக்காக அழைச்சாந்து வெச்சிக்கிடலங்கய்யா!"ன்னு பதிலச் சொல்லிட்டு வந்தாம் விகடு. அந்த வாத்தியாரு என்னவோ விகடுவெ அதிசயமா பாக்குறாப்புல பாத்துட்டு அந்தாண்ட நகந்து அவரு ஒரு தெசையிலப் போனாரு. வாத்தியாரு சொல்ற பாடத்தெ இந்தக் காலத்துல எவ்வேம் கேக்குறாம்ன்னு நெனைச்சிருப்பாரு போல அவரு.

            அதே நேரத்துல இந்த நாலாவது அழைப்புக்கு பாலாமணி தரப்புல வராம இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு நெனைச்சாரு சமூக நீதி மையத்துக்கு வெளியில நின்னு காத்துகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு. ஆன்னா பாலாமணி நாலாவது அழைப்புக்கு இன்னோவால ஒரு பட்டாளத்தோட வந்து எறங்குனாம். அந்தப் பட்டாளத்துல ஹைகோர்ட்டு வக்கீல்ன்னு சொன்னவரு, பழைய பரமசிவம், ராசாமணி தாத்தா, இன்னும் ரண்டு மூணு பேரு தாட்டிகமா உள்ளவங்க இருந்தாங்க. அன்னிக்கு ரண்டு வெசாரணைகள வேகமா முடிக்க வேண்டியது இருந்துச்சு வெசாரணை அதிகாரியா இருந்த அம்மாவுக்கு. அவுங்க அதெ வேகவேகமா முடிச்சிட்டு மொதல்ல பாலாமணிய வெசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதெத் தொடந்தாப்புல ராசாமணி தாத்தா, கூட வந்த ஆளுங்கள ஒவ்வொருத்தரா தனித்தனியா வெச்சி வெசாரிச்சாங்க.

            அதுக்குப் பெறவு செய்யுவக் கூப்புட்டு வெசாரிக்க ஆரம்பிச்சாங்க. அத்து முடிஞ்சதும் வெளியில வந்த அவ்வே விகடுவெப் பாத்து, "ஒங்கிட்டெ பேசணும்ன்னு உள்ளார வாரச் சொன்னாங்க!"ன்னா.

            "ஒங்கிட்டெ என்னத்தெ கேட்டாங்க?"ன்னாம் விகடு.

            "அதெ கதெதாம். மூணு தடவெ சொன்னது பத்தாதுன்னு நாலாவது தடவெயா சொல்லிட்டு வந்திருக்கேம். நீயி இப்பத்தானே மொத மொறையா வர்றே. போயிச் சொல்லு. இதெயேத்தாம் இன்னும் நாலைஞ்சு தடவெ சொல்றாப்புல இருக்கும். சொல்றப்பவே நல்லா மனப்பாடம் பண்ணி வெச்சுக்கோ!"ன்னு ஒப்புக்குச்சப்பா சொன்னா.

            விகடு உள்ளாரப் போனாம். வெசாரணை அதிகாரிக்குப் பக்கத்துல ஓரமா பாலாமணியோட வந்த வக்கீலு உக்காந்திருந்தாரு. விகடுவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு, திருநீலகண்டன் வக்கீலு சொல்றப்போ உள்ளார வக்கீல அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்னாரு, உள்ளார எப்பிடி ஒரு வக்கீலு உக்காந்திருக்காருன்னு?

            அந்த அம்மா, "ன்னா முடிவு பண்ணிருக்கீங்க? தங்காச்சிய அழைச்சிட்டுப் போவ ஒஞ்ஞ மச்சினம் தயாரா இருக்காரு. அனுப்பிச்சிடலாமா?"ன்னாங்க விகடுவப் பாத்து.

            "எந் தங்காச்சியக் காப்பாத்தி வுட்டுப்புடுங்க. அதெ எப்பிடி பண்ணுறதுன்னு புரியாமத்தாம் போலீஸ் ஸ்டேசன், வக்கீலு, இஞ்ஞன்ன அலைஞ்சிட்டு இருக்கேம். அப்பிடி அனுப்பணும்ன்னு நெனைச்சா எந் தங்காச்சியோ உசுருக்கு நாம்ம உத்திரவாதம்ன்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துப்புட்டு அனுப்பிச்சி வுடுங்க!"ன்னாம் விகடு.

            "அதல்லாம் நாம்ம பண்ண முடியாது!"ன்னாங்க அந்த அம்மா.

            "அப்பன்னா அனுப்பிச்சிடாதீங்க அம்மா! ஒஞ்ஞளுக்கு நல்லதாப் போவும். ஒஞ்ஞ புள்ளெ குட்டிங்க நல்லா இருக்கும்!"ன்னு சொல்லிட்டு வெளியில வந்தாம் விகடு. அவ்வளவுதாம் அவ்வேம் பேசுனது. அவ்வேம் அதெ சொன்னதும் சித்தெ வெளியில இருங்கன்னு அவ்வேங்கிட்ட வெளியில இருக்க சொல்லிட்டு அடுத்ததா சுப்பு வாத்தியார்ர உள்ளார கூப்புட்டாங்க. விகடுகிட்டெ கேட்ட அதெ கேள்வியத்தாம் சுப்பு வாத்தியாருகிட்டெயும், "மருமவ்வேம் மனசு மாறி பொண்ண அழைச்சிட்டுப் போவ தயாரா இருக்காரு. செஞ்ச தப்பையெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிட்டாரு. பொண்ணு அனுப்பிச்சிடலாமா? வாணாமான்னு நீஞ்ஞ ஒங்க கருத்தெச் சொல்லணும்!"ன்னு கேட்டாங்க அந்த அம்மா.

            சுப்பு வாத்தியாரு ரொம்ப தீர்க்கமா சொன்னாரு, "காரு வாங்குறதுக்குன்னு பத்து லட்சம் காசியக் கொடுத்தேம். காரு வாங்கல. அந்தக் காசிய எம் பொண்ணு பேர்ல டிபாசிட்டுலப் போடச் சொல்லுங்க. பொண்ணுக்குன்னு நூறு சவரன் நகெயெப் போட்டிருக்கேம். அதெ பொண்ணுக்குக் கொண்டாந்துப் போடச் சொல்லுங்க. அந்த நகைக்குன்னு எம் பொண்ணு பேர்ல பாங்கியில ஒரு லாக்கர்ர ஓப்பன் பண்ணச் சொல்லி அதுல அவளே வெச்சிக்கிறாப்புல ஒரு ஏற்பாட பண்ணுங்க. இதெ மொதல்ல செஞ்சிட்டு வந்தா எம் பொண்ண அனுப்ப தயாருதாம்ங்க!"ன்னு. அப்பிடிச் சொல்லிட்டு அந்தம்மா செரித்தாம் கௌம்பிச் சித்தெ வெளியில இருங்க, ஒங்க குடும்பத்துச் சார்பா யாராச்சும் வர்றதா இருந்தா உள்ளார வாரச் சொல்லுங்கன்னு சொன்னதும் வெளியில வந்தாரு.

            வெளியில வந்த சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "யப்பா! அந்த வக்கீலு பக்கத்துலத்தாம் இருந்தாரா?"ன்னு கேட்டாம் விகடு.

            "நம்மள வெசாரிக்கிறப்பவும் அந்த வக்கீலு பக்கத்துலத்தாம் இருந்தார்ண்ணா. என்னவோ நாம்ம சொல்ல சொல்ல பேப்பர் எழுதிக்கிட்டாம்! நம்மள வெசாரிக்கிறப்ப அவுங்க வக்கீலு இருக்குறப்போ, அவுங்கள வெசாரிக்கிறப்ப நம்ம வக்கீலு இருக்கணும்தானேப்பா?"ன்னா செய்யு.

            "நம்ம வக்கீலுத்தாம் உள்ளார அனுமதி கெடையாதுன்னு சொல்லிட்டாரே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவ்வேம் கெடக்காம். டூப்பு அடிப்பாம். இன்னிக்கு அவனுக்குக் கோர்ட்ல கேஸூ இருந்திருக்கும். அதெ பாத்தா நாலு காசி கெடைக்கும்ன்னு அஞ்ஞப் போயிருந்திருப்பாம்!"ன்னாரு கைப்புள்ள.

            "நாமளும் இஞ்ஞ வர்றதுக்கு வக்கீலுக்குக் காசியக் கொடுப்பேம்!"ன்னாம் விகடு.

            "நம்மக் குடுமபத்துச் சார்பா ஒருத்தர வர்றச் சொன்னாங்க. நாம்ம ஒஞ்ஞளப் பத்தித்தாம் சொல்லிருக்கேம். சடுவா உள்ளாரப் போங்க! அதெ வுட்டுப்புட்டுப் பேசிட்டு இருக்கேம். போயிட்டு வந்த பெற்பாடு நாம்ம பேசுறதெ பேசிக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கைப்புள்ளயப் பாத்து.

            உள்ளாரப் போன கைப்புள்ள, "வக்கீலு பக்கத்துல இருந்தா நாம்ம எதுவும் சொல்ல மாட்டேம்!"ன்னு சொல்ல, உள்ளார ஓரமா நாற்காலிப் போட்டு உக்காந்திருந்த வக்கீலு வெளியில எழுந்திரிச்சி வந்தாரு. அதுக்குப் பெறவு கைப்புள்ள, பொண்ணுக்குப் போட்ருக்குற நகநெட்டு, கொடுத்திருக்குற காசிப் பணத்தெ வாங்கிக் கொடுத்துப்புட்டா பெரச்சனெ இல்லாம ஒதுங்கிக்கிறோம்ன்னு சுப்பு வாத்தியாரு பேசுனதோட அதே சாராம்சத்தெ சொல்லிட்டு வெளியில வந்தாரு.

            "நாம்ம அந்த வக்கீலு இல்லாமத்தாம் பேசிட்டு வந்தேம்!"ன்னாரு கைப்புள்ள. இப்பிடி ஒரு யோசனெ நமக்கு வரலையேன்னு நெனைச்சாம் விகடு. அந்த நேரம் பாத்து பழைய பரமசிவம் இந்தப் பக்கம் வந்தாரு. இங்க நின்னுகிட்டு இருந்த எல்லாரையும் பாத்து, "மாப்புள்ள சேந்து வாழணும்ன்னு பிரியப்படுறாரு. சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவர பிரிச்சிப் புடாதீங்க. அதுக்குத்தாம் இவ்வளவு மெனக்கெடுறாரு. பெரியவங்க நீஞ்ஞ. புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேம்! எளஞ் சோடிகளப் பிரிச்சி வெச்ச பாவம் நமக்கெதுக்கு?"ன்னாரு பரிதாபமா பேசுறவர்ரப் போல.

            "சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவேம் வூட்டுலயே வந்து அழைச்சிக்கிட வேண்டித்தானே. வூட்டுல வந்து அழைச்சிக்கிறேம்ன்னு சொல்லிட்டு வாராம இருந்துக்கிடுறது. பஞ்சாயத்தெ வெச்சி அழைச்சிக்கிறேம்ங்றது. பஞ்சாயத்துலயும் வந்து கலாட்டாவ பண்ணுறது. செரித்தாம்ன்னு ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா ஸ்டேசனுக்கும் வர்றாம ஆளுகளெ அனுப்பி வுடுறது. இப்போ இஞ்ஞ வர்றாம இருக்க முடியாதுங்ற நெலையில வந்து இஞ்ஞ வெச்சி பொண்ணு அழைச்சிக்கிறேங்றது. ன்னய்யா வெளையாட்டாப் பண்ணுதீயே? நாஞ்ஞ இனுமே வாழ வைக்குறாப்புல யில்ல. நீஞ்ஞ என்ன நெனைச்சிக்கிட்டாலும் செரித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காட்டமா.

            "நீஞ்ஞக் கோவப்படுறதுல அர்த்தம் இருக்கு. நாம்ம ல்லன்னு சொல்ல மாட்டேம். ஆன்னா பாருங்க மாப்புள்ள பையேம் இப்பத்தாம் பல வெசயங்கள நெனைச்சி வருத்தப்படுறாம். தப்புப் பண்ணிட்டதா சொல்லி அழுவுறாம். நமக்கே பாக்க பாவமா போச்சுது! ஒரு நல்ல விசயத்துக்காக எறங்கி வந்து பேசுறதுல அர்த்தமில்லங்றதால எறங்கி வந்துப் பேசுறேம்!"ன்னு ரொம்ப எறங்கி வந்துப் பேசுறாப்புல பேசுனாரு பழைய பரமசிவம்.

            "மின்னாடி என்னவோ கொடுக்குற நகெநட்டு, பணங்காசிய வாங்கிட்டு பேயாம போயிடுங்கன்ன மெரட்டுனீயே? யிப்போ எஞ்ஞயிருந்துய்யா வந்துச்சு இந்த ஞானோதயம்?"ன்னாரு கைப்புள்ள பழைய பரமசிவத்தப் பாத்து.

            "அப்போ இருந்த மனநெலங்றது வேறங்க. இப்போ இருக்குற மனநெலங்றது வேறங்க. மாப்புள்ள பையேம் மனசு மாறவே கூடாதுங்றீயளா? மனுஷன் தப்பு பண்ணுறது சகஜந்தாம். அதுலேந்து திருந்தி மனசு மாறி வர்றப்போ அதெ ஏத்துக்கிடணும். அன்னிக்கு மாப்புள்ளப் பையேம் சொன்னாப்ப நமக்கும் ஆத்திரமாத்தாம் இருந்துச்சு. அதால அன்னிக்கு அப்பிடிப் பேசுனேம். இன்னிக்கு அழுவுறப்ப பாவமால இருக்கு. மனசுன்னா எரக்கம் வேணும்ங்க. மனசுல ஈரம் வேணும்ங்க. நாம்ம ஈரமுள்ள ஆளுங்க. கோவமாத்தாம் சமயத்துலப் பேசுவேம். ஆன்னா கோவம் இருக்குற எடத்துலத்தாம் கொணம் இருக்கும்பாங்க. மனசுல பட்டதெ அப்பிடியேப் பேசிப்புடுவேம். அதெ ஒளிச்சி மறைச்சில்லாம் வெச்சிக்கிட மாட்டேம். மனசுல ஒண்ணு சொல்லுல ஒண்ணுன்னு பேச மாட்டேம். மனசுல பட்டதெத்தாம் சொல்லுல சொல்லுவேம். சொல்லுல சொல்றதெத்தாம் மனசுலயும் வெச்சிருப்பேம். வெள்ளந்தி மனுஷம்யா நாம்ம!"ன்னாரு பழைய பரமசிவம் தன்னை நியாயப்படுத்திருக்கிறாப்புல.

            "நீஞ்ஞ நெனைச்சா ஒண்ணு பேசுவீயே? நெனைக்காட்டி ஒண்ணுத்தெப் பேசுவீயே? அதெல்லாம் கேட்டுக்கிட்டு நாஞ்ஞ தலைய ஆட்டிக்கிட்டு நிக்கணும். நாளைக்கே பொண்ணு புடிக்கலன்னாலும் அழைச்சாந்துப் போனப் போண்ண திரும்பக் கொண்டாந்து விடுவீயே! நாஞ்ஞ அதுக்கும் ஒண்ணும் சொல்லாம கால்ல வுழுந்து நக்கிட்டே இருக்கணும். அதாம்யா ஒஞ்ஞ எண்ணம்? எஞ்ஞள அப்பிடியே அடிமையா வெச்சே அடிச்சுத் தொவைக்கணும்ன்னு நெனைக்குதீயே? அதுக்கு வேற ஆளப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள கொதிச்சுப் போனவரப் போல.

            "ரொம்பக் கோவத்துல இருக்கீயே! ஒஞ்ஞ கோவத்துல ஞாயமும் இருக்கு. இருந்தாலும் நாம்ம சொன்னதெ யோஜனெ பண்ணுங்க. ஒடனே மனசு மாறணும்ன்னு அவ்சியமில்ல. வூட்டுக்குப் போயி மாறுனாலும் நம்ம போனு நம்பர்ரத்தாம் கொடுத்திருக்கே. ஒரு போன அடிங்க. பொண்ண ராசகுமாரியாட்டம் வெச்சிக் கொண்டுட்டுப் போறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் கைப்புள்ளைய சாந்தம் பண்ணுறாப்புல.

            "எதுக்கு ராசகுமாரியாட்டம் கொண்டுட்டுப் போயி பாடையில எறக்குறதுக்கா?"ன்னு கைப்புள்ள கேட்க, "எல்லாரும் உள்ளார வாஞ்ஞ. அம்மா கூப்புடுதாங்க!"ன்னு அங்க வேலப் பாக்குற ஒரு ஆளு வந்து சத்தம் கொடுத்தாரு. அத்தோட அங்கப் பேசிக்கிட்டு இருந்த பேச்சு ஒரு முடிவுக்கு வந்து எல்லாரும் விசாரணை அதிகாரியோட அறைக்குள்ள ஒவ்வொருத்தரா நொழைய ஆரம்பிச்சாங்க.

*****

26 Nov 2020

ஆம்பளைங்கன்னா அப்படித்தான்!

ஆம்பளைங்கன்னா அப்படித்தான்!

செய்யு - 637

            எடந்தாம் மாறுனுச்சே தவுர நெலமே மாறல. மின்னாடி மகளிர் காவல் நிலையத்துல போயி நின்னதப் போல இப்போ சமூக நீதி மையத்துல போயி நிக்க வேண்டியதா இருந்துச்சு. ஒண்ணுலேந்து இன்னொண்ணு மாறுனுச்சே தவுர எல்லாம் அனுமாரு வாலப் போல நீண்டுகிட்டெ இருந்துச்சு. நம்ம கதெயே இன்னொருத்தரு கேட்டு அதெப் பத்தி ஒரு முடிவுக்கு வாரதுக்குள்ள அத்து இன்னொருத்தர்ர நோக்கிப் போயிடுது. திரும்ப மொதல்லேந்து மாறுன இன்னொருத்தரு நம்ம கதெயெ கேட்டு ஒரு முடிவுக்கு வாரணும். அப்படி வர்ற நேரத்துக்குள்ள அத்து இன்னொருத்தர நோக்கிப் போயிடும். இப்பிடித்தாம் இந்தச் சிக்கலு சங்கிலித் தொடர் போல போயிக்கிட்டெ இருந்துச்சு. இடியாப்ப சிக்கலுன்னு சொல்லுவாங்களே, அதோட ஆரம்பத்த எங்க பிடிச்சி அதெ அப்பிடியே தொடர்ந்துகிட்டு எங்கப் போயி முடிக்கிறது? போண்ணுங்களோட வாழ்க்கெ பெரச்சனெங்றது இதுதாம். இதெ நெனைச்சித்தாம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், கண்ணைக் குத்துனாலும் கண்ணாளன், மண்ணை அள்ளிப் போட்டாலும் மணாளன்னு வாழ்ந்துடறாங்க போல. 

            வாரத்துக்கு ஒரு மு‍றை மாவட்ட சமூக நீதி மையத்துலேந்து செய்யுவுக்கு அழைப்பு வந்துகிட்டெ இருந்துச்சு. மகளிர் காவல் நிலையத்துலப் போயிக் காத்துக் கெடந்ததெ போல ரொம்ப நேரம் வெசாரணைக்காகக் காத்துக் கெடக்க வேண்டிய அவசியம் இல்லங்றதுதான் இதுல இருந்த ஒரே செளகரியம். போனதுக்குச் சாட்சியா ஒரு கையெழுத்தப் போடச் சொல்லிட்டு ரொம்ப நேரம் பேசிட்டு அனுசரனையா சில வார்த்தைகள சொல்லிட்டு அனுப்பிடுவாங்க. இப்படி ரண்டாவது தடவெ போனப்போ திரும்பவும் செய்யுவோட கதெய மொதல்லேந்தே கேட்டாங்க வெசாரணை அதிகாரி. அவுங்க ஒரு பெண்மணி. அந்த அம்மா கூட போயிருந்த சுப்பு வாத்தியாரையும் உக்கார வெச்சி அவரு எப்பிடிப்பட்ட முடிவுல இருக்கார்றதயும் கேட்டுக்கிட்டாங்க. அவுங்க அனுபவத்துல அவுங்க கையாண்ட பல வெதமான குடும்ப விசயங்களயும் பகிர்ந்துக்கிட்டாங்க. எதிர உக்காந்து பேசுறவங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து மனசுல உள்ளதெ வெளியில சொல்றதுக்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்தாங்க.

            அவுங்ககிட்டெ பேசிட்டு வர்றப்போ கொஞ்சம் தெளிவா இருக்குறாப்புல இருக்கும். வூட்டுக்கு வந்ததும் கொழப்பமாயிடும். ஒரு முடிவுக்கு வர்றாம இருக்குற வரைக்கும் அனுசரணையும் ஆறுதலும் ரொம்ப உபயோகமாத்தாம் இருக்கும். ஒரு முடிவுக்கு வந்தப் பெறவு அந்த முடிவெ எட்டுனாத்தாம் அனுசரணையும், ஆறுதலும் உண்டாவும். அந்த வெசாரணை அதிகாரி பெரும்பாலும் சேர்ந்து வாழ்றதத்தாம் அதிகமா வலியுறுத்துனாங்க. சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "எத்தனெ காலந்தாம் ஒஞ்ஞப் பொண்ண பாசத்துல ஒஞ்ஞ கூடயே வெச்சிக்கிட முடியும்ன்னு நெனைக்குதீயே? பொண்ண இன்னொருத்தம் கையில பிடிச்சித்தாம் கொடுத்தாவணும். நல்லவனோ, கெட்டவனோ அவ்வேங் கூட வாழப் பொம்பளைங்க பழகித்தாம் ஆவணும். ஒரு ஆம்பளெ கெட்டவன்னு நெனைச்சு அவ்வேம் கூட வாழ முடியாதுன்னு இந்த நாட்டுல இருக்குற பொம்பளைங்க முடிவெடுதுதாங்கன்னா வெச்சுக்கோங்க நூத்துக்கு தொண்ணூறு பொம்பளைங்க குடும்பமே நடத்த முடியாது. நாட்டுல நூத்து ஆம்பளைக்குப் பத்துப் பேருதாம் நல்லவனா இருக்காம். பாக்கித் தொண்ணூறு பேரா இருக்குற கிரிமினல் கூடயோ, சைக்கோ கூடயோத்தாம் பொம்பளைங்க வாழ்க்கைய ஓட்டியாவ வேண்டியதிருக்கு!"ன்னாங்க.

            செய்யுகிட்டெ பேசுறப்பயும், "ஒரு ஆம்பள தொணை பொம்பளைக்கு இந்தச் சமூகத்துல வேண்டியதா இருக்கு. இல்லன்னா ஆம்பளைங்க பொம்பளைங்களப் பத்தித் தப்பா சொல்றது இல்ல. பொம்பளைங்களே கூடி தப்பாப் பேசுறாப்புல ஒலகம் இருக்கு. சமூகத்துல ஒரு ஆம்பளையோட இருக்குறதுதாங் ஒரு பொம்பளைக்குப் பாதுகாப்பா இருக்கு. ஒரு ஆம்பள தொணையா இல்லன்னா, பாக்குற ஆம்பளைங்க எல்லாம் கண்ணு வைக்குறதும், படுக்க வான்னு கூப்புடுறதும் இந்தச் சமூகத்துல ரொம்ப சகஜமா இருக்கு. என்னத்தெ பண்ணுறது? சொசைட்டிக்குத் தகுந்தாப்புலயம் கொஞ்சம் வளைஞ்சிக் கொடுத்துதாம் வாழ வேண்டியதா இருக்கு!"ன்னு பேசுனாங்க.

            ரெண்டு அழைப்புக்கும் பாலாமணி வாராட்டியும் அவுங்க பேசுறதெல்லாம் பாலாமணிக்குச் சார்பா அவனோட சேர்ந்து வாழப் போறதப் பத்தித்தாம் அதிகமாப் பேசுனாங்க. அவுங்கப் பேசப் பேச பாலாமணிகிட்டெ காசி வாங்கிட்டுப் பேசுறாங்களோங்ற சந்தேகம் கூட வந்திடுச்சு செய்யுவுக்கு. "கட்டுனவன் கொலையே பண்ணாலும் அதெ ஏத்துக்கிட்டு கொலையுண்டுப் போறதத்தாம் பெருமயா பேசுறாங்ற எல்லா எடத்துலயும். ஆம்மா அத்தோட பெரச்சனெ முடிஞ்சிடுது. இப்போ பாத்தா பெரச்சனெ வளந்துக்கிட்டுல்லா இருக்கு!"ன்னு அதெ பத்தி விரக்தியா அந்த வெசாரணை அதிகாரிகிட்டெயே சொன்னா செய்யு.

            வெசாரணை அதிகாரி இப்பிடியே பேசிட்டு இருந்ததுல, மூணாவது தடவெ அழைப்பு வந்து அதுக்குப் போனதுல கொஞ்சம் சலிச்சிப் போனா செய்யு. வக்கீல் திருநீலகண்டன்கிட்டெ போனப் பண்ணி இன்னும் எத்தனெ தடவெ இதுக்கு அட்டென்டென்ஸப் போடணும்ன்னு கேட்டா எரிச்சலா. எல்லா வழிமுறையும் தலையச் சுத்தி மூக்கெ தொடுறாப்புல இருக்குறதா அவளுக்குள்ள ஒரு விரக்தி வந்திருந்துச்சு. இந்த ரண்டு அனுபவங்களால தானே கூட அப்பங்காரரு தொணையில்லாம சமூக நீதி மையத்துக்கு வந்துட்டுப் போயிடலாங்ற நெனைப்பு அவளுக்கு வந்துட்டு. யாரு வந்தும் எந்தக் காரியமும் நடக்கப் போறதில்லங்றப்போ ஏம் மத்தவங்களோட நேரத்தெ வீணாக்கிட்டுன்னு புலம்பிக்கிட்டுக் கெடந்தா அவ்வே.

            வழக்கமா அழைப்புக்குப் போயிட்டு வூட்டுக்கு வந்தா அடுத்த அழைப்புக்கான காயிதம் தபால்ல வந்துச் சேரும். மூணாவது தடவெ சுப்பு வாத்தியாரும் செய்யுவும் போனப்ப முன்கூட்டியே நாலாவது அழைப்புக்கு அடுத்த வாரத்துல பொதன் கெழமெ வாங்கன்னு உறுதியாச் சொன்னாங்க விசாரணை அதிகாரி. என்னடா இது இந்த மொறை வந்ததுக்குப் பேசுறதுக்கு மின்னாடியே அடுத்த மொறை வர்றதப் பத்திப் பேசுறாங்களேன்னு நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அப்படித்தாம் ஆரம்பிச்சுக்கு அந்தப் பேச்சு. அப்படி வர்றப்போ சமரசம் பேசுறதுக்கு ஏத்தாப்புல ஒங்க தரப்பு ஆளுங்களையும் அழைச்சிக்கிட்டு வாங்க. வெச்சிப் பேசுவோம்னாங்க அந்த விசாரணை அதிகாரி. ஒவ்வொரு மொறை போறப்பவும் அவுங்க ரொம்பவே கரிசனம் எடுத்துக்கிட்டு அனுசரணையாப் பேசுறாப்புல நெனைச்சிகிட்டுத்தாம் பேசுனாங்க. செய்யுவுக்கு அதெ அப்பிடி எடுத்துக்கிட முடியல. அவ்வே பாலாமணியப் பத்தின ரொம்ப மோசமான அனுபவத்தால நெறையவே மனசளவுல பாதிக்கப்பட்டிருந்தா. ஆம்பளைங்களோட சில கொணங்கள மாத்த முடியாதுன்னு அடிக்கடிச் சொன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி. அத்தோட இந்த மொறையும் குடும்ப வாழ்க்கைங்றது நாம்ம அணுகுற மொறைத்தான் சொல்லி செய்யுவ சேர்ந்து வாழத்தாம் அவுங்க அதிகமா அறிவுறுத்துனாங்க. அதுல செய்யுவுக்குக் கொஞ்சம் மனவருத்தம் உண்டாயிடுச்சு. ஆனா இந்த மூணாவது மொறை பேசப் போனது ரண்டாவது மொறைப் பேசப் போனதோட ரொம்ப நேரம் நீண்டுச்சு.

            வெசாரணை அதிகாரி பேசுனதையெல்லாம் கேட்டுகிட்டு, "நாம்ம இவ்வளவு கொடுமெய அனுபவிச்சதா சொல்லியும் நீஞ்ஞ சேந்து வாழச் சொல்றீகளே யம்மா?"ன்னா செய்யு.

            "இவ்வேம் சரியில்லன்னு இவனெ வெட்டி வுட்டுப்புட்டு இன்னொரு கலியாணத்தெ பண்ணுறேன்னு வெச்சிக்கோ, அவ்வேம் இவனெ வுட மோசமா இருந்தா என்னத்தெ பண்ணுவே?"ன்னாங்க அந்த அம்மா.

            "மறுபடியும் அந்தப் பயலப் பத்தியும் ஒஞ்ஞகிட்டெ வந்து ஞாயம் வைப்பேம்!"ன்னா செய்யு. வெசாரணை அதிகாரிச் சிரிச்சாங்க. "எஞ்ஞளுக்கு ஒன்னால எப்பயும் வேல இருந்துகிட்டெ இருக்கும் போலருக்கு. அப்பிடில்லாம் நடக்கக் கூடாது. நாம்ம ச்சம்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம். சேர்ந்து வாழ்றதுங்றது ஒம் முடிவுதாம். இருந்தாலும் சேர்ந்து வாழ்றதுக்கான அத்தனெ சாத்தியங்களப் பத்தியும் ஒங்கிட்டெ நாம்ம அழுத்தம் திருத்தமா சொல்லணுங்றதுக்காகச் சொல்றேம். நீயி சொல்ற கதெயெல்லாம் வெச்சிப் பாக்கும் போது ஒம் புருஷனெ வெசாரிக்கிறப்ப நாமளே ரொம்ப கவனமாத்தாம் இருந்தாவணும்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "பாத்தீங்களா யம்மா! நீஞ்ஞளே அவனெக் கேட்டுப்புட்டு என்ன மாதிரியான முடிவுக்கு வந்திருக்கீயே! அவ்வேம் கூடயே இருந்த குடித்தனம் நடத்துன நமக்கு எப்பிடி இருந்திருக்கும்?"ன்னா செய்யு அவுங்கள மடக்குற மாதிரி.

            வெசாரணை அதிகாரியும் விடல. அதுக்கேத்தாப்புல விளக்கத்தெ வேற வெதமா நீட்டி மொழக்குனாங்க. "இந்த மாதிரி ஆளுங்க ஒரு சில விசயங்கள்ல சுலுவா கோட்டை வுட்டுப்புடுவானுங்க. அத்து எதுன்னு கண்டுபிடிச்சேன்னா இவ்வேம் கூட வாழ்றது ரொம்ப சுலுவுன்னு சொல்ல வர்றேம். கடுகுப் போன எடத்தெ ஆராய்ச்சிப் பண்ணுறவனுக்குப் பூசணிக்காயிப் போற எடம் தெரியாதும்பாங்களே அந்த மாதிரித்தாம் இருப்பாம் இவனும். ஒண்ணும் அவசரமில்ல. இத்து வாழ்க்கைப் பிரச்சனெ. நிறுத்தி நிதானமா யோசனெ பண்ணி முடிவெடுக்கலாம். அதுக்குத்தாம் நாஞ்ஞ பெரும்பாலும் இந்த மாதிரி கேஸ்கள ரொம்ப இழுக்கப் போடுறது. இழுக்கப் போடறப்போ காலம் ஓடும். கால ஓட்டம் மனசுக்குள்ள ஒரு மாறுதல உண்டு பண்ணும். பொதுவா இந்த மாதிரி நேரத்துலத்தாம் நெறைய பேசணும். பேசுனாவே ஒரு தீர்வு கெடைச்சிடும். பேசாம இருந்தா பைத்தியந்தாம் பிடிக்கும். சரியோ தப்போ ஒங் கருத்தெ தெகிரியமா எடுத்துச் சொல்லு!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "ஒரே கதெயச் சொல்லி சொல்லி அலுத்துச் சலிச்சுப் போச்சும்மா. இதெ கதைய பஞ்சாயத்துல சொல்லிருக்கேம். மகளிர் காவல் நிலையத்துல சொல்லிருக்கேம். ஒஞ்ஞகிட்டெயும் ரண்டு மூணு மொறை சொல்லிட்டேம். எல்லாரும் பொதுவா சொல்ற கருத்துன்னா ஆம்பளைக்குத் தகுந்தாப்புல அடங்கிப் போவணுங்றதுதாம். அப்பிடிப் போவலன்னா இப்பிடில்லாம் வந்து அசிங்கப்படணுங்றதுதாம். அதெ சொன்ன மொறையில, வார்த்தைகள்ல வித்தியாசம் இருக்கலாம். சாராம்சம் இதுத்தாம். நமக்கு மட்டும் ன்னா? இப்பிடில்லாம் கட்டுனவன வுட்டுப்புட்டு வந்துக் கெடக்கணும்ன்னு தலையெழுத்தா? முடியாமத்தாம் வந்து நிக்குறேம். அத்துப் புரியாம பிடிவாதமா வந்து நிக்குறதாவே நெனைச்சி எல்லாரும் பேசுதீங்கம்மா!"ன்னா செய்யு.

            "அப்பியில்லா பொண்ணு! நீயி தப்பா புரிஞ்சிக்கிட்டெ. குடும்ப விசயங்க அப்பிடித்தாம். விட்டுக் கொடுத்துதாம் போவணும். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது. ஒன்னோட ஒரு விசயத்தால பாரு ஒன்னோட ஒட்டுமொத்தக் குடும்பமே வேற வேலயப் பாக்க முடியாம இதுக்கே அலையுறாப்புல இருக்குல்லா. அதெயெல்லாம் சேர்த்து யோசனெப் பண்ணணுங்றதெ சொல்றேம்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "அதுவும் செரித்தாம் யம்மா! அவனோட போயிருந்தா இந்நேரம் போயிச் சேந்திருப்பேம். வூட்டுலயும் நம்மள அள்ளி சுடுகாட்டுல வெச்சிப்புட்டு சாம்பல கரைச்சிப்புட்டாவது ஒரு சோலி முடிஞ்சதேன்னு நிம்மதியா இருந்திருப்பாங்க. அவ்வேம் கூட அப்பிடிப் போவவும் தெகிரியம் வர்ற மாட்டேங்குதேம்மா!"ன்னு அழுதுட்டா செய்யு. அதெ பாத்ததும் வெசாரணை அதிகாரிக்கு மனசு எறங்கிப் போச்சு.

            "ன்னா பொண்ணும்மா நீயி? ஒம் மனசுல அப்பிடித்தாம் தோணுதுன்னா அதுக்கு நாஞ்ஞ குறுக்க நிக்க மாட்டேம். இந்த மாதிரி விசயங்கள எப்பிடி அணுகணும், பேசணும்ன்னு எஞ்ஞளுக்குச் சொல்லியிருக்காங்களோ அதுப்படி பேசுறதுதாம். அதுல கொஞ்சம் அனுபவத்தோடயும் பேசுறது அவ்வளவுதாம். இப்பிடிப் பெரச்சனைகளோட வர்ற நெறைய பேத்துக்கு செகண்ட் லைப்பும் சரியா அமையாமப் போயி, அப்பவே கொஞ்சம் அழுத்திப் பேசி வுட்டிருந்தீங்கன்னா இப்பிடி ஒரு நெல வந்திருக்காதுன்னு இஞ்ஞ வந்து நின்னவங்களும் இருந்திருக்காங்க. அவுங்கள மனசுல வெச்சிக்கிட்டுப் பேசுனதுதாம். மித்தபடி ஒன்னோட மனச காயப்படுத்தணுங்றதுக்காகவோ, ஒன்னோட முடிவு தப்புங்றதுக்காகவோ சொல்ல வாரல! ஒம் முடிவு எதுவா இருந்தாலும் அதெ எடுக்க ஒனக்கு சுதந்திரமும் உரிமெயும் இருக்கு. அப்பிடி எடுக்குற ஒம் முடிவால எதிர்காலம் எப்பிடில்லாம் போவலாங்ற அனுமானத்தெ நாஞ்ஞ ஒனக்குச் சொல்ல வேண்டிய கடமெயும் எஞ்ஞளுக்கு இருக்கு. பொதுவா புருஷன் பொண்டாட்டி ரண்டு பேத்தையும் பிரிச்சி வைக்க யாருக்கும் மனசு வாராது பாத்துக்கோ. அப்பிடிப் பிரிச்சு வைக்குறது பாவங்கற மாதிரிக்கி நம்மட மனசுல ஒரு கருத்து இருக்கு. அந்தக் கருத்துக்குத் தகுந்தபடியும் நாம்ம பேசியிருக்கலாம்லா. நீயி நம்மளோட மனநெலையிலேந்தும் கொஞ்சம் பாக்கணும்ன்னு ஒங்கிட்டெ சொல்லிருக்கேம்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            செய்யு பேசாமலயே உக்காந்திருந்தா.

            "நாம்ம ஒன்னோட மனசெ ஹர்ட் பண்ணிருக்கிறதா நெனைச்சா ஐயாம் சாரி!"ன்னாங்க அந்த அம்மா.

            "அப்பிடில்லாம் இல்லம்மா! பழசெ நெனைக்குறப்பவே கோவம் கோவமா வருதும்மா. அதெயேத்தாம் ஒவ்வொரு எடத்துலயும் ஞாபவம் பண்ணிச் சொல்லச் சொல்லுதீயே! அவனெ தொலைச்சிக் கட்டிட்டுத் தலைய முழுவிட்டுப் போயித் தொலைஞ்சா தேவலாம்ன்னு இருக்கு. எஞ்ஞ யப்பாவும், யண்ணனும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணங்காசி, நகெநட்டு, சீரு சனத்தி எல்லாம் அவ்வேங்கிட்டெ இருக்கு. அதெ மட்டும் அவ்வேங்கிட்டெயிருந்து வாங்கிக் கொடுத்துப்புட்டா எங் கடெம முடிஞ்சிடும். பெறவு நாம்ம பாட்டுக்கு நமக்குத் தோணுற மாதிரி போயிட்டே இருப்பேம்!"ன்னா செய்யு.

            "அதுக்கு நாஞ்ஞ கேரண்டி. அதெப் பத்தி நீயி கவலையே பட வாணாம். நீயி நெக்ஸ்ட் ஹியரிங் மட்டும் கட்டாயமா வா! வர்றப்போ ஒன்னோட நலம்விரும்பிக சில பேத்தையும் அழைச்சிக்கிட்டு வா!"ன்னாங்க அந்த அம்மா.

            "நமக்கென்ன யம்மா! நீஞ்ஞப் போடுற ஒவ்வொரு காயிதத்துக்கும் வந்துட்டுதானே இருக்கேம். அவுங்க தரப்புலேந்து வந்தாத்தானே பேச முடியும். நாம்ம பாட்டுக்கு நெறைய பேர்ர அழைச்சி வந்து இந்த மூணு தடவெயும் ஒண்ணும் காரியம் ஆவாம திரும்பிப் போனாப்புல அடுத்த தடவெயும் போனா நல்லாவா இருக்கும்?"ன்னா செய்யு.

            "இந்தத் தடவெ அப்பிடி நடக்காது. ஒம் புருஷனுக்குப் போன போட்டுப் பேசிட்டேம். அதுக்கும் அவ்வேம் வரலன்னா சமூக நலத்துறை சார்பா அவ்வேம் மேல வன்கொடுமை தடுப்புச் சட்டத்துல வழக்கப் போட்டுடுறதா இருக்கேம். அதெயும் அவ்வேங்கிட்ட சொல்லியாச்சு. அதால எப்பிடி இருந்தாலும் அவ்வேம் வந்துததாம் ஆவணும். வராம இருக்குறது அவனுக்குத்தாம் ஆபத்து. இந்த மூணு தடவெ வந்ததுப் பெரிசில்ல. நாலாவது தடவெ வாரதுதாம் பெரிசு. தவறாம வந்துப்புடு!"ன்னாங்க அந்த அதிகாரி. சுப்பு வாத்தியாரையும் கூப்புட்டு தவறாம அடுத்த மொறை உங்க சார்பா பேசுறதுக்கு முக்கியமான ஆளுங்கள அழைச்சிட்டு வாங்கன்னும் கூடிப் பேசி நல்ல ஒரு முடிவுக்கு வருவோம்ன்னும் சொன்னாங்க.

            பேசிட்டு வெளியில வர்றப்போ சுப்பு வாத்தியாருக்குத் தெரிஞ்ச ஓய்வூதியரு சங்க தலைவரு ஒருத்தரு அந்தப் பக்கமா போனாரு. சுப்பு வாத்தியார்ரப் பாத்ததும் அடையாளம் தெரிஞ்சிக்கிட்டுச் சிரிச்சாரு அந்த ஆளு. சுப்பு வாத்தியாரு ஓடிப் போயி அவருக்கு அந்த எடத்துல எல்லாம் நல்லா அறிமுகம் இருக்கும்ன்னு அவருகிட்டெ தன்னோட நெலமையையும் கதெயையும் சொல்லி, "கொஞ்சம் அவுங்ககிட்டெ சொல்லி சீக்கிரம் முடிக்க ஏற்பாட்ட பண்ணி வுடணும்!"ன்னு கேட்டுக்கிட்டாரு.

            அதுக்கு அந்த ஆளு, "அவுங்க சரியாத்தாம் செய்வாங்க. பிராசஸ்படி போவாங்க. ரொம்ப கரெக்டா பேசுவாங்க. கவலெபடுறதுக்கு ஒண்ணும் இல்ல. கொஞ்சம் அலைச்சலப் பாக்க வாணாம். முடிவ கரக்ட்டா எடுத்துக் கொடுப்பாங்க. நமக்கு கலக்ட்ரேட்ல மேல கொஞ்சம் வேல இருக்கு. பெறவு பேசுவோம்! நீஞ்ஞப் பாருங்க!"ன்னு அவசர அவசரம பட்டும் படாம பேசுனதப் போல பேசிக்கிட்டுப் போயிட்டே இருந்தாரு. அத்து சரி நம்ம சார்பா பேசுறதுக்கு ஒலகத்துல யாருமே இல்லங்றப்போ இவரு மட்டும் எப்பிடிப் பேசுவாருன்னு நெனைச்சிக்கிட்டு, வக்கீல அப்பிடியே பக்கத்துல இருந்த கோர்ட்டுல பாத்துட்டு சேதியச் சொல்லிட்டு அங்கேயிருந்து கெளம்பி வந்தாரு சுப்பு வாத்தியாரு. வக்கீல் வழக்கம் போல பாத்துக்கிடலாம், போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு.

            ரெண்டு மூணு மாசம் ஒரே விசயத்துக்காக அலைஞ்சி காரியம் ஒண்ணும் ஆவ மாட்டேங்குதுன்னு நெனைக்குறப்போ மனசு கொஞ்சம் தளந்துதாம் போவுது. அத்தோட ஒரு விசயத்தெ திரும்ப திரும்ப பேசுறப்போ நாம்ம எடுத்த முடிவு தப்போங்ற எண்ணமும் வந்துப் போவுது. அப்பிடித்தாம் இருந்துச்சு சுப்பு வாத்தியாரோட மனநெலை அப்போ. மனசுல ரொம்ப தெகிரியம் இருந்தா அந்தப் பயெ என்ன பண்ணாலும் பரவாயில்லன்னு பேசாம கூட உக்காந்திருக்கலாம். அவ்ளோ தெகிரியம் எப்பவும் மனசுல இருக்கணுமே. ஒரு நேரத்துல இருக்குற தெகிரியம், இன்னொரு நேரத்துல இருக்காது. மனசு அப்பிடித்தாம் இருக்குது. அதெ நெனைச்சித்தாம் நடக்கறதுக்குத் தகுந்தாப்புல எல்லாம் போவ வேண்டியதா இருக்குன்னு நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

*****

25 Nov 2020

பொறுத்திருந்து பார்!

பொறுத்திருந்து பார்!

செய்யு - 636

            இன்னோவா போனதுக்குப் பெறவும் அந்த எடத்தெ வுட்டு நகர செய்யுவுக்கு விருப்பமில்ல. அப்பிடியே பித்துப் பிடிச்சாப்புல நின்னா. நிரம்பவே அவனுங்ககிட்டெ தெகிரியமா பேசிருந்தாலும் இப்போ அந்த தெகிரியம் இல்ல. சோந்தாப்புல இருந்தா. அவ்வே எந்த அளவுக்குப் புகாரா அனுப்பிச்சி எதாச்சும் நடந்துடும்ங்ற நம்பிக்கையோட வந்தாளோ, அந்த அளவுக்கு நம்பிக்கை வடிஞ்சி இப்போ நின்னா. அவ்வே தளந்திருந்ததப் பாத்து, "செரித்தாம் வுடு! அவ்வேம் பக்கம் முப்பத்தாயிரத்தெ சிலவு பண்ணித்தாம் இதெ சாதிக்க முடிஞ்சிருக்கு. அவ்வேம் கையிகாசி முப்பத்தாயிரம் அழிஞ்சிருக்குன்னு நெனைச்சிச் சந்தோஷப்பட்டுக்கோ!"ன்னாரு கைப்புள்ள அவள ஆறுதல் பண்ணுறாப்புல.

            "இதுக்குந்தாம் அவனுங்களே பதிலச் சொல்லிப்புட்டானுவோ. அவனுங்க சொன்னதெ மாத்திக் கேள்விய உண்டு பண்ணுறீயளா? அத்து அவ்வேம் காசில்ல! நம்ம காசித்தாம்! அதெ எடுத்துதாங் சிலவெ பண்ணிருப்பாம்! இனுமெ கொடுக்கப் போற காசியில அதெ கழிச்சித்தாம் சொல்லுவாம்ன்னு அவனுங்களேத்தாம் சொல்றாம் பாருங்களேம்!"ன்னா செய்யு அவரு ஆறுதல் பண்ணுறது புடிக்காம.

            "ஏதோ நம்மால முடிஞ்சதெ செஞ்சிட்டெம்! எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் வுட்ட வழி. அதுக்கு மேல அடுத்தா சமூக நீதி மையத்துலப் பாப்பேம்! முடியலன்னா கோர்ட்டுக்குப் போயிடுவேம்! யிப்போ நமக்கு பசி கூட ல்ல. கட்டிட்டு வந்த சாப்பாடு அப்பிடியே இருக்கட்டும். வூட்டுக்குப் போயி சூடா சாப்பாட்டச் சாப்புடுவேம். இன்னிக்கு சூடான சாப்பாடு வூட்டுலன்னு எழுதிருக்கு நமக்கு! அதெ நெனைச்சும் சந்தோஷப்பட்டுக்கோ!"ன்னாரு கைப்புள்ள வுடாம செய்யுவ ஆறுதல் பண்ணுறாப்புல.

            "அதல்லாம் முடியாது. இப்போ நாம்ம வக்கீலப் பாத்துப் பேசிட்டுத்தாம் வருவேம்!"ன்னா செய்யு பிடிவாதமா.

            "அது வேறயா? அவனெப் பாக்கப் போனா மிச்சப்பட்ட பொழுது கரைஞ்சாப்புலத்தாம். போன்ல சொல்லிட்டுப் போயிட்டே இருப்பமே?"ன்னாரு கைப்புள்ள அவளோட பிடிவாதத்துக்கு ஒரு பதிலச் சொல்றாப்புல.

            "வந்தது வந்தாச்சு. மேக்கொண்டு அவரு என்னத்தெ செய்யப் போறாங்குற கேள்வி நமக்குள்ள இருக்கு? அவரு யோசனப்படி ஒண்ணு பண்ணி இப்பிடி நிக்குது! அடுத்ததா பண்ணி எப்பிடி நிக்கும்ங்றதெ அவரு வாயாலேயே கேட்டுக்கிடணுமா இல்லியா?"ன்னா செய்யு தன்னோட மனத்தாங்கல கொட்டித் தீர்க்குறாப்புல. வக்கீலப் ஒடனே பாத்தாவணும்ன்னு அவ்வே ரொம்ப பிடிவாதமாவே நின்னா. அதுக்கு மேல என்னத்தெ பண்டறதுன்னு கைப்புள்ள வக்கீலுக்குப் போன அடிச்சி வெவரத்தச் சொல்லி, "பாப்பா பாக்கணுங்குது!"ன்னாரு.

            "ஒண்ணும் பெரச்சனெ யில்ல. நமக்கும் கோர்ட்டு முடிஞ்சிடுச்சு. அஞ்ஞயே இருங்க. நாம்ம இருவது நிமிஷத்துல வந்துப்புடுறேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் போன்ல எல்லாரும் ஆச்சரியப்படுறாப்புல. வக்கீலு வர்றதுக்கு இருவது நிமிஷம் இருக்குறதால அவரு வர்றதுக்குள்ள கொண்டாந்த மத்தியானச் சாப்பாட்ட உக்காந்து சாப்புட்டுப் புடலாம்ன்னு தோணுச்சு. ஆன்னா யாருக்கும் சாப்புடுற மனநெலையே யில்ல. பழைய பரமசிவம் பாட்டுக்கு பேசிட்டுப் போயிட்டாரு. அவரோட பேச்சு அவரு போனதுக்கு அப்புறமும் பல வெதமா மனசுல எதிரொலிச்சிக்கிட்டெ இருந்துச்சு எல்லாத்துக்கும். அவரு பேசுனது ஒரு மொறைதாம். இப்போ மனசுக்குள்ள எதிரொலிச்சிக்கிட்டு இருக்குறது பல மொறையா இருந்துச்சு.

            வழக்கத்தெ போல இருவது நிமிஷத்துல வர்றதா சொன்ன வக்கீலு ஒரு மணி நேரம் கழிச்சித்தாம் டிவியெஸ் ஸ்டார்சிட்டி பைக்குல வந்தாரு. அவரு வர்ற வரைக்கும் நடந்ததெப் பத்தியே சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடு, செய்யுன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு கோணத்துலப் பேசிட்டு இருந்தாங்க. வக்கீல் திருநீலகண்டன் வந்ததும் வாரதுதுமா ரொம்ப வேகப்பாட்டோட எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இன்ஸ்பெக்டர் அம்மா மின்னடிப் போயி நின்னாரு. அப்பிடியே அவுங்களப் பாத்து ஒரு கும்புட்டப் போட்டாரு. இன்ஸ்பெக்டர் அம்மாவும் வக்கீல் திருநீலகண்டனப் பாத்தாங்க. பதிலுக்குச் சிரிச்சாப்புல கும்புட்டப் போட்டாங்க. இந்தக் கும்புடுகளுக்கு ஏதோ உள்ளார்த்தம் இருக்குறாப்புல அவுங்க பேச ஆரம்பிச்சாங்க.

            "எப்பா தெய்வமே! திருநீலகண்டா! ஏற்கனவே மொரட்டுத்தனமா மெரட்டுனதா ரண்டு கேஸூ நம்ம மேல கோர்ட்டுல ஓடிட்டு இருக்கு. இந்தப் பயெ வேற நாம்ம பேசுனதெ ரிகார்ட் பண்ணி வெச்சிக்கிட்டு எவிடென்ஸோட மெரட்டிட்டு இருக்காம். போறப் போக்க பாத்தா ரண்டு கேஸூ மூணு கேஸா ஆயிடும் போலருக்கு. இத்து எத்தாச்சும் கேஸானுச்சுப் பாரு. நீந்தாம் எடுத்து நடத்துறாப்புல இருக்கு. அதுக்குப் பைசா காசி தர்ற மாட்டேம். நம்மளோட புரோமோஷன் ஆனவெ ஆர்குடி இன்ஸ்பெக்டரு இருக்காளே! அவ்வே இப்போ சர்க்கிள் இன்ஸ்பெக்டர்ரா புரோமோஷன் ஆயிட்டா சங்கதித் தெரியும்ல. நாம்ம இன்னம் இப்பிடியே இருக்கேம் கேஸ்ல மாட்டிக்கிட்டு. அந்த ரண்டு கேஸையும் சீக்கிரமா விடுவிச்சு வுட்டு, இந்த மூணாவது கேஸூ வாராம இருந்தா அடுத்த லிஸ்ட்லயாவது நம்ம பேரு வந்துடும். ல்லன்னா இதுக்கு ஒரு கேஸ்ஸப் போட்டுத்தாம் நாம்ம புரோமோஷன் வாங்கணும்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா வக்கீலப் பாத்து.

            "சொல்லுங்க ஒரு கேஸ்ஸ பேஷா போட்டு வுட்டுப்புடுவேம்!"ன்னாரு திருநீலகண்டன் ஒரு வெடிச்சிரிப்பப் போட்டுக்கிட்டு.

            "ஒனக்கென்னய்யா திருநீலகண்டா! நீயிப் பாட்டுக்கு கேஸ்ஸப் போட்டு வுட்டு புரமோஷன வாங்கிக் கொடுத்துப்புடுவே. மேல இருக்குறவங்ககிட்டெ வேல பாக்கணுமே. மித்த டிபார்ட்மண்ட் மாதிரின்னு நெனைச்சுக்கிட்டீயா? கோர்ட்டுக்குப் போயி புரோமஷன் வாங்குன்னா டார்ச்சர் பண்ணுற டிபார்ட்மெண்ட் இத்து. மேல இருக்குறவங்களா மனசு வெச்சிப் பண்ணணும். அதுக்கு மொதல்ல ரண்டு கேஸையும் இல்லாம அடி. அதெச் சொல்லித்தாம்யா மேல இருக்குறவங்க நம்மள அமுக்கி வைக்குறாங்க. அத்து மட்டும் இல்லன்னா வெச்சுக்கோ அவுங்கிகிட்டெ சண்டெ போட்டே புரோமஷனெ வாங்கிடுவேம்! அந்த ஒண்ணாலத்தாம் நாமளே யோசிக்க வேண்டிக் கெடக்கு. டிபார்ட்மண்ட் ப்ரசீஜர்ன்னு ஒண்ணு இருக்குல்லா. அதெ நாமளே மதிக்கிலன்னா எப்பூடி?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா தன்னோட நெருக்கடிய சொல்லுறாப்புல.

            "அதெ வுட்டுத் தள்ளுங்க. போகுற போக்குல ன்னா பண்ணுறேம் பாருங்கோ! இப்போ இந்தப் பொண்ணுக்கு ஒரு வழியச் சொல்லுங்கோ!"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவக் காட்டி.

            "எம் திருநீலகண்டமே! நாமளே ஒங்கிட்டெ ஒரு வழியக் காட்டி வுடுங்றேம். நீயி நம்மகிட்டெ வழிய கேக்குறே? ஏம் போட்டு ஸ்டேசன், சோஷியல் வெல்பேர்ன்னு அலைய வுடுறே? ஸ்ட்ரைட்டா டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்ஸ ஒண்ணப் போட்டு வுடு. போட்டு அதுல நம்மளயும் ஒரு சாட்சியா இழுத்து வுடு. கோர்ட்டுல வந்து சொல்றேம். அவனையெல்லாம் பக்கவா பண்ணி இழுத்து வுட்டுத்தாம் வழிக்கு வருவாம்? நம்ம மெரட்டல்லாம் அவ்வேங்கிட்டெ செல்லாது பாத்துட்டேம். நாமளும் டாக்கடர்ரா இருக்கானே! நெறையப் படிச்சவனா இருப்பாம்! பயந்துடுவாம்ன்னு நெனைச்சேம். கட்டக் கடெசீயா நாம்ம பயந்து நிக்குறதுதாம் மிச்சம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா மேசைய சலிப்பா ஒரு தட்டு தட்டிக்கிட்டு.

            அதுக்கு மேல இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ பேசுறது அர்த்தமில்லன்னு நெனைச்சாரோ என்னவோ, "மிக்க நன்றிகள் ஆய்வாளர் அம்மாவுக்கு. விரைவில் சரக ஆய்வாளர் ஆகப் போகும் அம்மாவுக்கு வாழ்த்துகள். இப்போ கெளம்புகிறேன். விரைவில் அடுத்த வழக்கில் சந்திக்கிறேன்!"ன்னு சொல்லி எல்லாரையும் கெளப்பிக்கிட்டு வெளியில வந்தாரு திருநீலகண்டன். கெளம்புறப்ப சுப்பு வாத்தியாரு சகிதம் எல்லாரும் அம்மாவுக்கு கும்புட போட மறக்கல.

            வெளியில வந்த திருநீலகண்டன், "சாப்பாட்டு நேரமாச்சா? ஒஞ்ஞள வேற காத்திருக்கச் சொல்லிப்புட்டேன்னா. அதெ நெனைப்புலயே வந்துப்புட்டேம். இப்பப் பாருங்கோ பசி வயித்தெ கிள்ளி எடுக்குது. எதாச்சும் வவுத்துலப் போட்டாத்தாம் யோசனைய எடுத்து வெளியில தள்ளுவேம்ங்குது மூளை!"ன்னாரு திருநீலகண்டன் ஒரு நமுட்டுச் சிரிப்ப சிரிச்சுக்கிட்டு.

            "நாஞ்ஞ கட்டுச்சோத்தோட வந்தாச்சு. நீஞ்ஞ வேணுன்னா வூட்டுலப் போயிச் சாப்புட்டு வாஞ்ஞ! ஒஞ்ஞளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது!"ன்னாரு கைப்புள்ளயும் நமுட்டுச் சிரிப்போட.

            "ஏம் வூட்டுக்குப் போயிட்டு? அதுக்கு ஒரு அரை மணி நேரம் ஆவும். கட்டுச் சோத்த அவுத்து ஒரு கட்ட நம்மகிட்டெ கொடுங்க. மிச்சத்தெ நீஞ்ஞச் சாப்புடுங்க!"ன்னாரு திருநீலகண்டன் பட்டுன்னு வேற மேக்கொண்டு யோசிக்க விரும்பாதவர்ரப் போல.

            "அதெல்லாம் வாணாம். கட்டுச்சோறு பாட்டுக்கு கட்டுனபடியே இருக்கட்டும். ஓட்டல்ல போயி நல்ல வெதமாவேச் சாப்புடுவோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அடுத்துக் காரியத்துல எறங்குறாப்புல. கைப்புள்ள அதுக்கு ஒரு வெத்துச் சிரிப்பு சிரிச்சதோட சரி. மேக்கொண்டு ஒண்ணும் சொல்லாம நின்னாரு.

            அதாஞ் சரின்னு எல்லாருமா வண்டியக் கெளப்பிக்கிட்டு ஒடம்போக்கி ஆத்தாங்கரை பக்கத்துல இருக்குற ஓட்டல் வாசன்ல சாப்புடுறதுன்னு கெளம்பி வந்தாங்க. எல்லாருமே முழுச்சாப்பாடு சாப்புடுறதுன்னு முடிவாயி உக்காந்து சாப்புட ஆரம்பிச்சாங்க. சாப்பாட்ட சாப்புட்டுக்கிட்டெ வக்கீலு பேசிட்டே இருந்தாரு. சாப்பாடு பாட்டுக்குச் சாப்பாடு உள்ளார போயிட்டு இருந்துச்சு, பேச்சுப் பாட்டுக்குப் பேச்சு வெளியில வந்துக்கிட்டெ இருந்துச்சு.

            "நம்ம சர்வீஸ்ல இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரப் பயல பாத்ததில்லம்மா! பெரச்சனைய முடிச்சிட்டுப் போடான்னா அவ்வேம் பாட்டுக்கு வளத்துக்கிட்டுப் போறாம்! தேவையில்லாமப் போயி முன்ஜாமீன் எடுக்குறாம். நம்மகிட்டெ வந்து பேசிருந்தான்னா நம்ம ஆபீஸ்ல அழகா ஒரு சிட்டிங்கப் போட்டு முடிச்சிருப்பேம். பயெ நெருங்கவே மாட்டேங்றானே? சரியான வீம்புக்கார பயெ! இவனோடல்லாம் எப்பிடி குப்பெ கொட்டுனீயோ?"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவப் பாத்து.

            "அவ்வேம் ன்னா ஹைகோர்ட் லெவல்லப் போயிட்டு இருக்காம். நீஞ்ஞப் பாட்டுக்கு இன்னம் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் லெவல்லயே யோஜிச்சிக்கிட்டு இருந்தா எப்பூடி?"ன்னாரு கைப்புள்ள வக்கீல நிமுண்டி விடுறாப்புல.

            "எந்த கேஸா இருந்தாலும் இங்கயிருந்துதாம் மேல போயாவணும். ஹைகோர்ட்டுல டேரக்டா பண்ணிட முடியமாங்றேம்? ன்னா பெரிய ஹைகோர்ட்டு வக்கீலு? அஞ்ஞப் போயிப் பாத்தீங்கன்னத்தாம் தெரியும். ஆயிரத்தெட்டு கேஸ்ஸூ கெடைக்காம அஞ்ஞயந்தாம் ஆளாளுக்குக் கெடக்குறாம். அதுல ஒருத்தனெ பிடிச்சாந்திருப்பாம் போல. பயெ நல்லாவே உதாரு வுடுறான். நானுந்தாம் ஹை கோர்ட்டுலப் போயி வாதாடுவேம்! இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? நாம்ம போயி ஹைகோர்ட்ல வாதாடுறதுங்றது வேற. ஹைகோர்ட்டுல இருக்குறவேம் இஞ்ஞ எறங்கி வந்து வாதாடுறதுங்றது வேற. இப்போ ஒங்களுக்கு விசயம் புரிஞ்சிதோ?"ன்னாரு திருநீலகண்டன் கைப்புள்ளைய அசமடக்குறாப்புல.

            "மத்தியானச் சாப்பாட்டுக்கு எஞ்ஞ தலையில தொப்பியப் போட்டுக்கிட்டு இந்த மாதிரியெல்லாம் பேசக் கூடாது!"ன்னாரு கைப்புள்ளயும் வக்கீல அசட்டுத்தனமா மடக்குறாப்புல.

            "சாப்பாடு ன்னா பெரிய சாப்பாடு? நாமளே சாப்பாட்டுக்குக் காசியக் கொடுக்குறேம் போங்க! ஸ்டேசன் கோர்ட்டுன்னு வந்தப் பெறவு இதெ நெனைச்சில்லாம் பயப்படக் கூடாது. மோதிப் பாக்கணும். ரண்டுல ஒண்ணுத்தாம் இனுமே? என்னா நாம்ம சொல்றது?"ன்னாரு திருநீலகண்டன் ரண்டுல ஒண்ணுத்தெ பாக்குறாப்புல.

            "யிப்போ அடுத்து என்னத்தாம் பண்ணுறது? அதெ நெனைச்சே பயமா இருக்கு! அதாங் ஒஞ்ஞளப் பாத்துட்டுத்தாம் போவேம்ன்னு நாம்ம நின்னது!"ன்னா செய்யு படபடப்புத் தாளாம.

            "அதுக்கும் சில வழிமொறைகள வெச்சிருக்காமலா இருப்பேம்! கவலப்படாதே பொண்ணு! இப்போ நல்லா சாப்புடு. அப்பத்தாம் ஒடம்புல தெம்பு வரும். ஒடம்புல தெம்பு வந்தாத்தாம் மனசுல தெம்பு வரும்!"ன்னாரு திருநீலகண்டன் அவளெ சாந்தப்படுத்துறாப்புல.

            "அதாங் ன்னா வழிமொறைன்னு கேக்கறேம்?"ன்னா செய்யு.

            "மொதல்ல பயப்படக் கூடாது. நம்ம பயந்தாம் அவனுங்களோட தைரியம். நாம்ம தைரியமா இருந்தா அதெப் பாத்துட்டு அவனுங்க பயந்துட்டு இருப்பானுங்க. பயப்படமா அவனுங்க எப்பப் பேசுனாலும் கண்ண உருட்டி தெரட்டி நல்லா முழிச்சிக்கிட்டு, மொறைச்சிக்கிட்டுப் பேசணும் இப்பிடி! இதெ பாத்தாலே பயம் வருதா எப்பிடி?"ன்னு தன்னோட கண்ண உருட்டி மெரட்டிக் காம்பிச்சாரு திருநீலகண்டன்.

            "நாம்ம ஒண்ணு கேட்டா நீஞ்ஞ ஒண்ணு சொல்லுதீயே! நாம்ம பயப்படல்லாம் யில்ல. அடுத்ததா ன்னா பண்ணப் போறீங்கன்னு சொன்னா அதுக்கு அவ்வேம் ன்னா பண்ணுவான்னு யோஜிக்குறதுக்குத்தாம் கேக்குறேம்!"ன்னா செய்யு உசாரா கேக்குறாப்புல.

            "ஓ! அடுத்த வக்கீலா ஆவப் போறீங்க அப்பிடித்தானே? ஆக அத மட்டும் சொல்ல மாட்டேம். எல்லாம் சஸ்பென்ஸ்தான். சோஷியல் வெல்பேர்ல ஒரு ஹியரிங்கதான போயிருக்கு. இன்னும் ரண்டு போவட்டும். நாம்ம யாருன்னு காட்டுறேம்! அப்போ தெரியட்டும் எல்லாம்!"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவப் பாத்து.

            "இப்பவே காட்டுனா என்னாவாம்?"ன்னா செய்யு என்ன நடக்கும்ங்ற தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல.

            "நேரம் வரும் போது ஒனக்கே புரியும்!"ன்னாரு திருநீலகண்டன் அவளுக்கு சட்டுன்னு ஒரு பதிலச் சொல்றாப்புல.

            "இன்ஸ்பெக்டர் அம்மா டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போடலாம்ன்னு சொன்னாங்களேய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலப் பாத்து.

            "அதெல்லாம் அவ்ளோ அவசரப்பட்டுப் போட்டுட்டா அதுக்கு மதிப்பே இருக்காது. சப்புன்னு போயிடும். அதுக்கு முன்னாடி வேற ஒண்ண போடணும். அவசரப்படாதீங்க சார்! ஆட்டமே இப்பத்தாம் ஆரம்பிச்சிருக்கு. நிதானமா நின்னு ரசிச்சுப் பாருங்க!"ன்னாரு திருநீலகண்டன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "அப்போ இதுவரைக்கும் நடந்ததெல்லாம்?"ன்னா செய்யு வக்கீலப் பாத்து.

            "அதெல்லாம் சின்னபுள்ள வெளையாட்டு. அதெ மறந்துபுடணும். அடுத்து ஆடப் போற ஆட்டத்துல அவனே செத்துப் போனாலும் போவாம். இல்ல அவுங்க குடும்பத்துல ஒருத்தன் செத்துப் போவாம். ஆள காலி பண்ணுற ராசிய ஆண்டவன் எப்பவும் நமக்குக் கொடுத்திருக்காம். நாம்ம வக்கீல் நோட்டீஸ் அனுப்புனதுக்கு வெஷம் குடிச்ச ஆளுங்கல்லாம் இருக்கு! நமக்கு திருநீலகண்டன்னு பேரு வெச்சிருக்குக் கூடாது. எமதர்மன்னு பேரு வெச்சிருக்கணும். அதையும் பாக்கத்தானே போறீங்க!"ன்னு அவரு சொல்லவும், அவரு சாப்புட்டு முடிக்கவும் சரியா இருந்துச்சு. சாப்புட்டு முடிச்சதும் ஒரு ஏப்பத்தெ வுட்டாரு திருநீலகண்டன். "இப்பிடித்தாம் அந்தப் பயலுகளயும் விழுங்கி ஏப்பத்தெ விடப் போறேம்!"ன்னாரு வுடாம திருநீலகண்டன்.

            "எதையோ செஞ்சா செரி!"ன்னாரு கைப்புள்ள இப்போ அலட்சியமா.

            "என்னாங்க இத்து? எம் மேல கொலப்பாவம் விழப் போவுதுங்ற பயமே இல்லாம பேசுறீங்க? அந்த நீலகண்டனப் போல விசத்த வுழுங்குறவேம் இல்ல இந்த திருநீலகண்டன்.  விசத்த மத்தவங்கள விழுங்குறாப்புல பண்ணுறவேம் இந்த திருநீலகண்டன். கூடிய சீக்கிரமெ ஒரு உசுரு இந்த மண்ண வுட்டுப் போறதுக்குக் காரணமா இருக்கப் போறாம் இந்த திருநீலகண்டன். அந்தப் கொலை பாவத்துக்கான பூசை புனஸ்கார பரிகாரங்களையெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க போங்க!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு திருநீலகண்டன். அந்தச் சிரிப்புல அவர்ரப் பாக்குறதுக்கு அச்சு அசல் சினிமா படத்துல வர்ற வில்லனப் போலவே இருந்தாரு.

*****

24 Nov 2020

மிகவும் நேசிக்கப்பட வேண்டிய நூற்றாண்டு

மிகவும் நேசிக்கப்பட வேண்டிய நூற்றாண்டு

இந்த நூற்றாண்டை மிகவும் நேசிக்கிறேன்

காடுகளைத் தின்று விட்டார்கள்

மலைகளை நொறுக்குத் தீனியாக்கி விட்டார்கள்

கடலை குடித்து விட்டார்கள்

பிரியாணிக்காக பிள்ளைகளைக் கொல்லும்

பெண் பிறந்திருக்கிறாள்

குழந்தைகளை மோகித்துக் கொல்லும்

ஆண் பிறந்திருக்கிறான்

காசுக்கு உறுப்புகளை விற்க முடிகிறது

மலட்டு விதையில் முளை தெரிகிறது

சுற்றுவதைப் பொழுதுபோக்கெனச் செய்கிறது பூமி

நாம்தான் நிறைய கவலைப்படுகிறோம்

இந்த நூற்றாண்டை ரசிக்கத் தெரியாமல்

ஆகவே

இந்த நூற்றாண்டை மிகவும் நேசிப்பதாகுக

*****

இத்தோட முடிச்சிக்கலாமா?

இத்தோட முடிச்சிக்கலாமா?

செய்யு - 635

            வெள்ளிக் கெழம மகளிர் காவல் நிலையத்துல வர்ற சொன்னாங்கன்னா, வியாழக் கெழம சமூக நீதி மையத்துல வர்றச் சொல்லியிருந்தாங்க. அதுக்கு இடையில வக்கீல் திருநீலகண்டன் போன் பண்ணி பாலாமணி திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துல முன்ஜாமீன் பெட்டிஷன் போட்டிருக்கிறதா சொன்னாரு. எந்த ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் இல்லாம எப்பிடி முன்ஜாமீன் கொடுக்குறதுன்னு ஜட்ஜ் கேட்குறதாவும் சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு. ஒவ்வொரு நாளும் அந்த பெட்டிஷன் தொடர்பா கோர்ட்டுல நடக்குறதெ போன் பண்ணிச் சொல்லிக்கிட்டெ இருந்தாரு.

            புதன் கெழம ராத்திரி போன் பண்ணப்போ பாலாமணிக்கு வியாழக் கெழமெ அல்லது வெள்ளிக் கெழமெ முன்ஜாமீன் கெடைச்சிடும்ன்னும் அதுக்குப் பெறவு பாலாமணிய அரெஸ்ட் பண்ணணும்ன்னு நெனைச்சாலும் முடியாதுன்னும் சொன்னாரு வக்கீல். ச்சும்மா மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்மா சொன்ன ஒரு மெரட்டலுக்கே பாலாமணி அன்ன பயம் பயந்துகிட்டு ஹை கோர்ட்லேந்து வக்கீல கொண்டாந்து வெச்சி முப்பதாயிரம் வரைக்கும் சிலவெ பண்ணிட்டு இருக்குறதாவும் வக்கீல் சொன்னாரு. பாலாமணி ஒரு வாரமா திருவாரூர்லத்தாம் தங்கி இருக்கிறதாவும் பெரிய கூட்டத்தெயே தன் பின்னாடி வெச்சிக்கிட்டு அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருக்குறதாவும் வக்கீல் சொன்னாரு. ஆள போட்டோவுல பாத்ததெ வுட, இப்போ நேர்ல பாக்குறதுக்கு நல்ல பாக்குறதுக்கு யானைக்குட்டி போல பொத பொதன்னு போயிட்டதாவும் சொன்னாரு. ஆக பாலாமணி மகளிர் காவல் நிலையத்துக்கு வர்றாம டேக்கா காட்டுனாலும் உள்ளுக்குள்ள பயந்துக்கிட்டு அந்தப் பயத்தெ வெளியில காட்டிக்கிடாம அதுக்கு என்னத்தெ செய்யணுமோ அதெ யாரும் அறியாதபடிக்குக் செஞ்சிக்கிட்டுத்தாம் இருக்காங்றது சுப்பு வாத்தியாருக்கு ருதுவாச்சு. நாம்ம செய்யுறதுக்கு எதுவும் நடக்கலங்றது நெனைக்க வேண்டியதில்ல, ஏதோ நடந்துகிட்டுத்தாம் இருக்கு, அத்து நமக்கு முழுசா நமக்குத் தெரியலங்ற ஒரு திருப்தி அவரு மனசுக்குள்ள உண்டாச்சு.

            வியாழக் கெழம சமூக நீதி மைய விசாரணைக்குச் சுப்பு வாத்தியாரும் செய்யு மட்டுந்தாம் போனாங்க. ஏற்கனவே மகளிர் காவல் நிலையத்துல எல்லாரும் போயி தேவையில்லாம காத்துக் கெடந்த அனுபவத்தெ நெனைச்சி, போலீஸ் ஸ்டேசனுக்கே வர்றாதப் பயெ சமரச மையத்துக்கு என்னத்தெ வந்துக் கிழிக்கப் போறாங்ற அலட்சியத்தோடத்தாம் போனாங்க. அவுங்க நெனைச்சது தப்புல்லங்கிற மாதிரிக்கி பாக்குக்கோட்டையிலேந்து யாரும் வாரல. கலெக்டர் ஆபீஸூல தரை தளத்துல இருந்த சமூக நீதி மையத்துல மகளிர் காவல் நிலையத்தப் போல ரொம்ப கூட்டமில்ல. ரெண்டு மூணு கேஸூங்கத்தாம் இருந்துச்சு. அதெ வெசாரிச்சி முடிச்சிட்டு செய்யுவக் கூப்புட்டு வெச்சி அவ்வே கதைய கேட்டுப்புட்டு, எதிர் தரப்பு வர்லங்றதால ஒரு மணி நேரத்துக்குள்ள அனுப்பி வெச்சிட்டாங்க. ரொம்ப நேரம்லாம் அவுங்க காக்க வைக்கல. சுப்பு வாத்தியாரும், செய்யுவும் அது முடிஞ்சதும் கோர்ட்டுக்குப் போயி வக்கீலைப் பாத்து சேதியச் சொல்லிட்டு வூடு வந்துச் சேந்தாங்க. மறுநாளு வெள்ளிக் கெழம மகளிர் காவல் நிலையத்துல நிச்சயம் இந்த தடவையாவது எதாச்சும் நிச்சயம் விசாரணை இருக்குங்றதால பழையபடியே சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடு, செய்யுன்னு நாலு பேருமா சேந்துப் போனாங்க.

            நாலாவது தடவே போனப்பவும் மகளிர் காவல் நிலையத்துல கூட்டத்துக்கு எந்தக் கொறைவும் இல்ல. அவ்வளவு கூட்டத்துலயும் வெளியில வந்த போலீஸ்கார அம்மா ஒண்ணு, "செய்யு தரப்புல யாரு வந்திருந்தாலும் உள்ளார வாங்க!"ன்னாங்க போன கொஞ்ச நேரத்துல.

            "இன்னிக்கு நேரடியா வெசாரணைத்தாம். இன்னிக்கு எல்லாம் முடிஞ்சிடும். இத்தனெ நாளு காத்திருந்ததுக்கு இன்னிக்குத்தாம் பலன் கெடைக்கப் போவுது!"ன்னு ஆவலாதியா எல்லாரையும் உள்ளார அழைச்சிக்கிட்டுப் போனாரு கைப்புள்ள.

            இன்ஸ்பெக்டர் அம்மா தொடந்தாப்புல போன அடிச்சிக்கிட்டே இருந்தாங்க. "ஒம் புருஷனுக்குத்தாம் அடிக்கிறேம். எடுக்கவே மாட்டேங்றாம்! செரியான ஜகதலபிரதாபனா இருப்பாம் போலருக்கு. அன்னிக்கு நாம்ம போன்ல பேசுனதெ அப்பிடியே ரிகார்ட் பண்ணி நம்ம மேல புகார் கொடுத்திருக்காம் டியெஸ் ஆபீஸ்ல. இவனெ மாதிரி கிரிமினல் பயல நாம்ம பாத்ததில்ல. நாம்ம என்ன பண்ணிட்டேம்? புருஷன் பொண்டாட்டிப் பெரச்சனெ. அதெ பேசித் தீக்கலாம் வாடான்னு கூப்புட்டது ஒரு தப்பா? அந்தப் பயெ வர்றாம இருந்தவாசித்தாம் அப்பிடிப் பேச வேண்டியதா போயிடுச்சு. பாத்தும்மா அந்தப் பயெகிட்ட எச்சரிக்கையா இருந்துக்கோ. அவ்வேம் இந்த மாதிரி செஞ்சதால அவனெப் பத்தி எல்லா விசயத்தையும் நோட்டம் வுட்டுட்டுத்தாம் இருக்கேம். பயெ இஞ்ஞ டவுன்லத்தாம் இருக்காம். இன்னிக்கு வந்திடுவான்னுத்தாம் போன அடிக்கிறேம். எடுக்க மாட்டேங்றாம். அதாம் மொத இதாவே ஒன்னோடத எடுத்துப்புடுவேம்ன்னு வாரச் சொன்னேம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா கொஞ்சம் லேசா பதற்றப்பட்டதப் போல. அவுங்க பத்து மொறைக்கு மேல அடிச்சதுக்குப் பெறவு பாலாமணி போன எடுத்து, "ஏம் மேடம் அடிக்கடிப் போனப் பண்ணி டார்ச்சர் பண்ணுறீங்க? முக்கியமான கேஸ்ஸப் பாத்துட்டு இருக்கேம். வந்துக்கிட்டுத்தாம் இருக்கேம். போன வையுங்க!"ன்னு அலட்சியமா சொல்லி போனைக் கட் பண்ணிட்டாம்.

            இன்ஸ்பெக்டர் அம்மா செய்யுவப் பாத்து, "சித்தெ வெளியில வெயிட் பண்ணுங்க. அந்தப் பயெ வந்துப்புடட்டும். வெசாரணைய வெச்சிப்போம்!"ன்னு சொல்லி வெளியில அனுப்பி வெச்சாங்க. வெளியில வந்து அதெ பழைய வேப்ப மரத்தடியில நின்னப்போ செய்யு சொன்னா, "அவ்வேம் வர மாட்டாம்ப்பா! அவனையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. பிராடாவே பொறந்து பிராடவே வளந்தவேம். எந்த ஓட்டையிலப் பூந்து எப்பிடி வெளியில வாரணுங்றது அவனுக்குத் தெரியும்!"ன்னா மனசெ விட்டுப்புட்டவளப் போல. சுத்தமா மனோபலத்தை இழந்துட்ட ஒருத்தி இன்ன அளவுக்கு ஈடுகொடுத்து இப்படி இந்த அளவுக்கு வர்றதே பெரிசுங்ற மாதிரிக்கு அவளெ தெம்பு பண்ணுறாப்புல, "இப்பிடி அவ்சரப்பட்ட எப்பூடி? பொறு! இன்னிக்கு அவ்வேம் வந்துத்தாம் ஆவணும். நாக்கெ புடுங்கிகிறாப்புல நாலு கேள்வியக் கேளு. நீயி கேக்காட்டியும் போலீஸ்கார அம்மா கேட்டுப்புடுவாங்க! போதுமா?"ன்னாரு கைப்புள்ள.

            ஸ்டேசனுக்கு வெளியில டீ விக்குறவரு மும்மரமா யேவாரத்துல இருந்தாரு. சனங்க அது பாட்டுக்குப் புண்ணியத் தலத்துக்கு வர்றாப்புல வந்துகிட்டெ இருந்துச்சுங்க. வந்ததும் வாராதுமா ஸ்டேசனப் பாக்குறதுக்கு மின்னாடி டீ விக்குறவர்ரப் பாத்து டீத்தண்ணிய வாங்கி ஊத்துனுச்சுங்க. ஊத்திக்கிட்டெ, "இஞ்ங வர்றதுல இத்து ஒண்ணுத்தாம் உருப்படியா நடக்குது. நம்மால ஒருத்தரு சம்பாதிக்கிறாரு. நாலு வூட்டுல இப்பிடிச் சண்டெ நடந்தா இவரு காட்டுலத்தாம் மழெ!"ன்னு சொல்லிக்கிட்டெ சிரிச்சுக்கிட்டெ காசியக் கொடுத்துச்சுங்க. டீ விக்கற ஆளும் ஒண்ணும் சொல்லாம சிரிக்கிச்சிட்டெ கொடுத்த காசிய வாங்கி சைக்கிள் ஹேண்டில்பார்ல மாட்டியிருந்த சின்ன துணிப்பையிக்குள்ளப் போட்டுக்கிட்டாரு.

            ப்ளாஸ்க்ல டீத்தண்ணியப் போட்டுக் கொண்டிருந்தாலும் சுப்பு வாத்தியாரும் டீ விக்குறவர்ர கூப்புட்டு ஆளுக்கு ஒரு சுக்கு டீய வாங்கிக் கொடுத்தாரு. அதெ வாங்கிட்டு, "இதென்ன அதிசயமா இருக்கு? கொண்டாந்த டீத்தண்ணியக் குடிக்கிறது வுட்டுப்புட்டு, காசிக் கொடுத்து வாங்கிக்கிட்டு? ஆத்துல தண்ணி ஓடிட்டு இருக்குறப்போ ஏம் ஊத்த நோண்டிக் குடிக்கணும்?"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ.

            "ஒரு ஒழைப்பாளிக்கு ஒதவுனதா இருக்கட்டுமே!"ன்னு சொல்லிட்டுச் சிரிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            "புண்ணியமான வேலத்தாம்யா ஒமக்கு. வவுத்தெரிச்சலோட வர்றவங்களுக்கு வவுத்துப் பசிய ஆத்துறே!"ன்னாரு கைப்புள்ள டீ விக்கற ஆளப் பாத்து. அதெ கேட்டதும், "பீடி இருக்குது. வாணுமா?"ன்னாரு அந்த ஆளு.

            "நம்மளப் பாத்தா பீடி வலிக்குற ஆளு மாதிரி தெரியுதா?"ன்னாரு கைப்புள்ள முன்மண்டெயத் தடவிக்கிட்டு.

            "இந்தக் காலத்துல யாருங்க பீடி வலிக்காம இருக்காக. டீய வுட பீடி யேவாரந்தாம் அதிகம்! அதாங் பீடியும் வெச்சிருக்கேம் யேவாரத்துக்கு!"ன்னு சொல்லிக்கிட்டு டீ விக்குற ஆளு அடுத்த யேவாரத்தப் பாக்கப் போனாரு.

            பன்னெண்டு மணி வாக்குல ஸ்டேசன் மின்னாடி இன்னோவா காரு ஒண்ணு வந்து நின்னுச்சு. அதெ உத்துப் பாத்த விகடுவுக்குக் கலியாண நாளு அன்னிக்கு வந்த அதெ காருதான்னு புரிஞ்சது. அதெப் பாத்ததும், "பாக்குக்கோட்ட சனங்க வந்துட்டாங்க போல!"ன்னு ஸ்டேசனுக்கு உள்ளார கெளம்ப தயாரானாம். கைப்புள்ள விகடுவோட கையப் பிடிச்சி அமத்துனாரு. "போலீஸ்காரவுக வந்து கூப்ட்டு வுடட்டும். அப்ப போனத்தாம் கெளரவம். இல்லன்னா இதுக்காக வந்து வந்துக் காத்துக் கெடக்குறதா அசிங்கமா நெனைச்சிப்புடுவானுவோ அந்தப் பயலுவோ!"ன்னாரு கைப்புள்ள.

            இன்னோவாலேந்து ஒரு கருப்பு கோர்ட்டு போட்டிருந்த வக்கீலும், பழைய பரமசிவம்ன்னு ரண்டு பேருதாம் எறங்குனாங்க. வேற யாரும் அதுக்குள்ள இருக்குறாப்புலயும் தெரியல. மின்னாடி டிரைவரு மட்டுந்தாம் இருந்தாரு கதவெத் தொறக்காம.

            உள்ளாரப் போனவங்க அஞ்சு நிமிஷத்துல சட்டுன்னு வெளியில வந்தாங்க. அவுங்க வெளியில வந்ததும் ஸ்டேஷனுக்கு வெளியில வந்து, "செய்யு தரப்புல இருக்குறவங்க உள்ளார வாங்க. இன்ஸ்பெக்டர் அம்மா கூப்புடுறாங்க!"ன்னு சத்தம் போட்டாங்க போலீஸ்கார அம்மா ஒண்ணு.

            உள்ளாரப் போனதும் இன்ஸ்பெக்டர் அம்மா ஒதட்டப் பிதுக்குனாங்க. "தப்பிச்சிட்டாம் மாப்ளே! முன்ஜாமீன் வாங்கிருக்காம். நீஞ்ஞ சோஷியல் வெல்பேர்லயும் காயிதம் கொடுத்திருக்கியளா?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.

            ஆமாங்ற மாதிரிக்கி எல்லாரும் தலையாட்டுனதப் பாத்து, "ரொம்ப பெரமாதமா வெல பண்ணிருக்காம். வக்கீல வுட்டு இந்த வெசயத்த சோஷியல் வெல்பேர்லயே மேக்கொண்டு டீல் பண்ணிக்கிறதாவும், எனக்கும் எம் பொண்டாட்டிக்கும் எந்தப் பெரச்சனெ இல்லன்னும், நாம்மதாம் பெரச்சனைய உருவாக்கிட்டு இருக்குறதாவும், அவனெ நாம்ம மெரட்டுறதாவும், அதால இங்க அவனுக்கு ஞாயம் கெடைக்காதுன்னும், சோஷியல் வெல்பேர் மூலமாவே சமரசம் பண்ணிக்கிறதாவும் காயிதத்துல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அனுப்பிருக்காம். அதால மேக்கொண்டு இதுல எதுவும் பண்ண முடியாத நெலமெ. நீஞ்ஞ சோஷியல் வெல்பேர்க்குப் போங்க. ஒத்து வாரலன்னா அவுங்களே கோர்ட்ல கேஸப் போட்டு வுட்டுப்புடுவாங்க. கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சத்தாம் அந்தப் பெய சரிபட்டு வருவாம்! ஒஞ்ஞள நாம்ம கைவுட்டுப்புட்டதா நெனைக்காதீயே. கோர்ட்டுல எதாச்சும் வெசாரணைன்னு வந்தா நம்மளயுந்தாம் கூப்புடுவாங்க. அப்போ வெச்சிக்கிறேம் மாப்புள்ளைக்கு பட்டாச! பாத்துக்கிடலாம் அச்சப்படாம போங்க. அவ்வேம் தலைக்கு மேல கத்தித் தொங்கிட்டு இருக்குறது நெசம். எப்போ அந்தக் கத்தி அந்து விழுங்றதுதாம் யிப்போ தெரியல. அவனுக்கு கன்பார்ம் பனிஷ்மெண்ட் இருக்கு. பயப்படாம போங்க!"ன்னு சொல்லி வெளியில அனுப்பி வெச்சாங்க. சுப்பு வாத்தியாருலேந்து விகடு, கைப்புள்ள, செய்யு வரைக்கும் எல்லாரும் மேக்கொண்டு என்ன பேசுறது, என்ன செய்யுறதுன்னு புரியாம அவுங்கள கையெடுத்துக் கும்புட்டுட்டு வெளியில வந்தாங்க.

            வெளியில இன்னோவா காரு அந்தாண்ட இந்தாண்ட நகராம அங்கேயே கெடந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே வக்கீலும், பழைய பரமசிவமும் நின்னுகிட்டு இருந்தாங்க. வெளியில வர்ற சுப்பு வாத்தியார்ரப் பாத்துட்டு ரண்டு பேருமே பக்கத்துல வேப்பமரத்தடிய நோக்கி வந்தாங்க.

            "அழகா முடிச்சித் தர்றேம்ன்னு சொன்னேம். காசி பணத்தையும் கூட கொறைச்சலு ஏத்தோ பேசி வாங்கத் தர்றேம்ன்னுத்தான சொன்னேம். ஏம்ய்யா கொடுக்குறதெ வாங்கிட்டு அசிங்கப்படாம போயிடுன்னு சொல்லியும் இப்பிடி ஸ்டேசன்ல வந்தா புகார்ர கொடுக்குதீயே? யிப்ப என்னவாச்சு? மாப்புள்ள ஸ்டேசனுக்கே வர்றாம கதையெ முடிச்சிட்டாரு. இதுல என்னத்தெ கண்டீரு? சொன்ன மாதிரி செஞ்சேமா இல்லியா? இப்பிடி முடிக்கிறதுக்கு இதுல மட்டுமில்ல வேற எதுவா இருந்தாலும் செரித்தாம் எஞ்ஞளுக்கு ஓராயிரம் வெசயம்ங்க தெரியும். அதுலப் பாரும்யா! எஞ்ஞ மாப்புள ஸ்டேசன்ல காலடியில கூட எடுத்து வைக்கல. பொண்ண போட்டு இப்பூடி ஸ்டேசன் ஸ்டேசனா இழுத்துக்கிட்டு அசிங்கப்படுறீயேய்யா! நீயெல்லாம் படிச்ச வாத்தியா? முட்டா கூதியா? கேக்குறேம். படிச்சிப் படிச்சிக் கிளிப்புள்ளைக்குச் சொல்றாப்புல சொல்றேம் கேக்குணுமா இல்லியா? நீயே யிப்பிடி மரமண்டையா இருந்தா ஒங்கிட்டெ பாடம் படிச்ச குஞ்சு குலுவானுங்க படிச்சிக் கிழிச்சி வெளங்கியிருக்கும். சுத்தமா ஒண்ணும் புரியாத தொன்னையா இருக்கியேய்யா! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. கொடுக்குற காசியில முப்பதாயிரத்தெ கொறைச்சிக்கிட்டு வாங்கிட்டுப் போறதுன்னா சொல்லு. ஒடனே முடிச்சி வுடுறேம். அதுல பாருய்யா! ஏம் முப்பதாயிரம் கொறையுதுன்னா இஞ்ஞ வர்றாம இருக்குறதுக்கு அவ்ளோ காசி சிலவாயிருக்கு. அதால அந்தக் காசிய கழிச்சிக்கிட்டு மிச்சத்தத்தாம் தர்றாப்புல இருக்கு. யில்ல நாம்ம வேற மொறையிலத்தாம் பாப்பேம்ன்னா பாத்துக்கோ. சிலவழிஞ்சிப் போவப் போறது எஞ்ஞகிட்டெ இருக்குற ஒங் காசித்தாம். ஒங்காசிய வெச்சே நீயி பண்ணுற ஒவ்வொரு வேலைக்கும் காசிய அழிப்போம். எஞ்ஞளுக்கு ன்னா கைநட்டம் ஆயிடப் போவுது? அடுத்ததா சோஷியல் வெல்பேர்ரா? போ! தாராளமா போ! அஞ்ஞயும் இப்பிடித்தாம் நடக்கும். ஒரு மசுரையும் புடுங்க முடியாது. கவர்மெண்ட்ல இதெயல்லாம் ச்சும்மா ஒரு பேருக்கு வெச்சிருக்காம். பெறவு இதெல்லாம் இல்லன்னா வக்கீலுக்கும், போலீசுக்கும், சமரச மையத்துல இருக்குறவங்களுக்கும் ன்னா வேல இருக்குச் சொல்லு? இதுல உள்ளவங்கல்லாம் சம்பாதிக்க வேணும் இல்லியா? அத்துப் புரியாம கிறுக்குப் பய புள்ளெ போல நடந்துக்கிறீயேய்யா! ன்னா ரண்டுல ஒண்ணுத்தெ சொல்லு! முடிச்சிக்கிடலாமா? தொடந்துக்கிடலாமா?"ன்னாரு பழைய பரமசிவம் மெரட்டுறாப்புல.

            "நல்ல குடும்பத்துலப் பொறந்துட்டு இங்க வந்து நிக்குறதே அசிங்கம். இதுக்கும் மேல சமரச மையம், கோர்ட்டுன்னுப் போயி நிக்காதீங்க. கூண்டுல ஒரு பொண்ண ஏத்துனா பச்சைப் பச்சையாத்தாம் கேள்வியக் கேப்போம்! நாண்டுகிட்டுச் சாவுறாப்புல ஆயிடும். ஏற்கனவெ பொண்ணு ஒரு சூசைட் அட்டம்ப்ட் பண்ணிருக்குல்ல. இன்னொரு அட்டெம்ப்ட்டுக்குப் போவாதுங்றதுக்கு எந்த நிச்சயம் இல்ல. அதுவும் கூண்டுல ஏத்துனா தொங்காதுங்றதுக்கு எந்த உத்திரவாதமும் கெடையாது!"ன்னாரு கூட வந்த வக்கீலும் சுப்பு வாத்தியார்ரப் பாத்து மெரட்டுற தொனியில.

            "எப்பிடித் தோது? காசியும் போயி, உசுரும் போயி தேவையா அதெல்லாம்?"ன்னாரு பழைய பரமசிவம் தொடந்தாப்புல ஒத்து ஊதுறாப்புல.

            சுப்பு வாத்தியாரு என்ன பேசுறதுன்னுப் புரியாம நின்னுகிட்டு இருந்தாரு.

            "வாலில்லாத பட்டமும், ஓட்டையில்லாத சட்டமும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படல. தெறமையான வக்கீலால கொலைகாரனையும் விடுவிச்சிட முடியும். அப்பாவியையும் கொலைகாரனா மாத்தி உள்ளார தள்ளிட முடியும். இதுக்குன்னே விடிய விடிய தூங்காம யோஜிச்சுக்கிட்டு இருப்பேம்யா பாத்துக்குங்க!"ன்னாரு கூட நின்ன வக்கீலு ஓங்கிப் போட்டுத் தாக்குறாப்புல.

            சுப்பு வாத்தியாருக்கு அவுங்க சொல்றதெ கேக்க கேக்க நடுக்கமாத்தாம் இருந்துச்சு. இதுவரைக்கும் வந்ததே போதுமான்னு கூட ஒரு நிமிஷம் பட்டுன்னு நெனைச்சாரு. கைப்புள்ளையும் பாக்குறதுக்குக் கொஞ்சம் தயங்குனாப்புலத்தாம் தெரிஞ்சாரு. பொண்ணப் பெத்தவரோட மனசு புரியாம நாம்ம பாட்டுக்கு வார்த்தைய விட்டுப்புடக் கூடாதுங்ற தவிப்புல அவரு இருந்தாரு. விகடுவுக்கும் வெசாரிக்காம கூட இப்பிடி அனுப்புவாங்கன்னு கொஞ்சம் கூட நெனைப்புத் தோணல. சொல்லியடிக்குறாப்புல பாலாமணி பண்ண இந்த ஏற்பாட்டைப் பாக்க மலைப்பாத்தாம் இருந்துச்சு.

            "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. ஒத்துக்கிட்டா இத்தோட முடிச்சிக்கிடலாம். இல்லன்னா கோர்ட்லத்தாம் பாக்குறாப்புல ஆயிடும்!"ன்னாரு பழைய பரமசிவம் சுப்பு வாத்தியாருக்கு ரண்டு ஆப்ஷன்களக் கொடுக்குறாப்புல.

            "கோர்ட்ல பாத்துக்கிடறோம்!"ன்னா பட்டுன்னு செய்யு. அந்தப் பதிலெ சுப்பு வாத்தியாரு கூட எதிர்பாக்கல. அதெ கேட்டதும், சுப்பு வாத்தியாரு ஒவ்வொரு வார்த்தையா கோத்துச் சொன்னாரு, "ன்னா ஆனாலும் செரித்தாம். இப்பிடியாச்சும் அந்தப் பயெ நம்மகிட்ட கறந்த காசிய செலவழிச்சி தீக்கட்டும். மொத்தத்துல நம்ம காசி நம்ம கைக்கும் வந்தாலும் பரவாயில்ல. இப்பிடி இந்த வழியில செலவழிஞ்சிப் போனாலும் பரவாயில்ல!"ன்னாரு கொஞ்சம் கூட பிசிறடிக்காம.

            ரொம்பச் சாதாரணமான பதிலுதாம் அத்து. ஆன்னா அந்தப் பதிலு அவுங்க ரண்டுப் பேத்தையும் மெரண்டுப் போறாப்புல செஞ்சது. இருந்தாலும் அந்த மெரட்சிய வெளியிலக் காட்டிக்கிடாம, "அப்போ ஆட்டத்தெ ஆடிப் பாக்கணும்ன்னு ஆசப்படுறீங்க? நல்லதாப் போச்சு. ரொம்ப நாளைக்குப் பெறவு நாமளும் இந்த அளவுக்குக் களத்தெ பாத்து நாளாச்சு. அப்போ அடுத்ததா சந்திப்போம்! கையில இருக்குற காசிப் பணம் பத்தாது. நெறைய தோது பண்ணிக்கிடுங்க! காசி ச்சும்மா தண்ணியா செலவாவும்!"ன்னாரு பழைய பரமசிவம் ஒரு நக்கல் சிரிப்புச் சிரிச்சிக்கிட்டு.

            சுப்பு வாத்தியாரோட இந்தப் பதிலுக்குப் பெறவு கைப்புள்ள தெகிரியமாயிட்டாரு. "என்னவோ காசியக் கொடுத்து ஒதவுறாப்புல பேசிட்டு நிக்குறே? நீயே ஒரு எடுப்புதானே. பையிதூக்கின்னா பையத் தூக்கிட்டுப் போயிகிட்டே நிக்கணும். இப்பிடி நின்னு ஆட்டிக்கிட்டு இருக்கக் கூடாது. தலெ இருக்குறப்ப ஏம் வாலு ஆடுதுன்னா வால ஒட்ட நறுக்கமா வுடுறதுதாம். அதாங் வால ஒட்ட நறுக்கி வுட்டாப்புல பதிலு கெடைச்சுச்சுல்லா. பெறவென்ன கெளம்புறது?"ன்னாரு கைப்புள்ளயும் பதிலுக்கு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.

            "இவரு யாரு தெரியுமா? ஹைகோர்ட்லேந்து கொண்டாந்திருக்கேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பக்கத்துல நின்னுகிட்டு இருந்த வக்கீலப் பாத்து.

            "சுப்ரீம் கோர்ட்டுலேந்து வாணும்ன்னாலும் வக்கீலக் கொண்டா. அதுக்கு ஒன்னய யாரும் தடெ போட முடியாது. அதெப் போல எஞ்ஞ நோக்கத்துக்கு நாஞ்ஞ வாழ்றதுக்கும் யாரும் தடெ போட முடியாது. இப்பிடி உருட்டி மெரட்டி பயமுறுத்திக் காரியம் சாதிக்க நெனைக்குறதுல்லாம் வாணாம். ஏற்கனவே எவ்வளவு பயப்படணுமோ அவ்ளோ பயந்தாச்சு! பயந்தவம் மெரண்டா நாடு தாங்காது!"ன்னாம் விகடு.

            "இதென்னடா பயந்தவேம் மெரண்டா நாடு தாங்காதுன்னு புதுக்கதெயா இருக்கு. நல்லாவே ஆளாளுக்குப் பேசுதீங்க. இதெல்லாம் பேச்சுக்குத்தாம் நல்லாருக்கும். நடைமொறைக்கு ஒதவாது. நாம்ம நடைமொறையச் சொன்னேம். போயிச் சொவத்துல மோதிக்கிட்டுத்தாம் நிப்பேம்ன்னா நில்லுங்க. சொவத்துக்கென்ன அதுல நஷ்டம்? ஒஞ்ஞ டவுனுக்கே வந்து ஒஞ்ஞ டவுன்லயே இருந்துக்கிட்டு ஸ்டேசனுக்கு வர்றாம இருக்க எம்மாம் தில்லு இருக்கணும்ன்னு நெனைச்சிப் பாக்கணும். யிப்போ மாப்புள்ள டவுனுக்குள்ளுத்தாம் இருக்காரு. ஒஞ்ஞளால என்ன பண்ண முடியுது? இதெ நீஞ்ஞ இந்த மாதிரிக்கு ஒரு நெலமெ ஆயி பாக்குக்கோட்டெயில் நின்னீங்கன்னா வெச்சுக்குங்க பாத்த எடத்துலயே ரத்த ஆறே நாஞ்ஞ ஓட விட்டிருப்பேம். ச்சும்மா வாய்ச்சவடாலு வுட்டா போச்சா? நாம்ம சொல்றதெ நெனைக்கத் தெரியாத மாங்கா மடையனுங்ககிட்டெ பேசிப் புண்ணியமில்ல! கௌம்புவோம் வக்கீல் சார்ரே!"ன்னாரு பழைய பரமசிவம் பயங்கர தெனாவெட்டா.

            "போ! போ! மொதல்ல கெளம்பு கெளம்பு! ஒம்மட ஆளு நாக்கெ தொங்கப் போட்டுக் காத்திக்கிட்டுக் கெடப்பாம். அவ்வேம் தூக்கிப் போடுற எச்ச எலும்பப் பொறுக்கிக்கிட்டு பாக்குக்கோட்டைப் போயி சேர்ற வழியப் பாரு! எஞ்ஞளால யிப்போ எதுவும் முடியாம இருக்கலாம். எஞ்ஞளால என்ன முடியுங்றதெ வரக் கூடிய காலங்கள்ல காட்டுறோம்!"ன்னாரு கைப்புள்ளயும் தெனாவெட்ட வுடாம.

            "ஒண்ணும் இல்லன்னா ஒஞ்ஞளுக்குப் பேச்சக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லடா!"ன்னு எளக்காரமா சொல்லிக்கிட்டெ இன்னோவாவுல ஏறப் போனாரு பழைய பரமசிவம். கூடவே வக்கீலும் போனாரு. அவுங்கப் போகப் போக, "இதெல்லாம் ஒரு பொழைப்புன்னு வந்துப்புட்டானுங்க. சேர்றானுவோ பாருங்க ஆளுங்க அவனுக்குன்னு? பெறவு எப்பிடி அந்தப் பயலுக்கு புத்தி வரும்? பிச்சை எடுக்குதாம் பெருமாளு, அதெயும் புடுங்குதாம் அனுமாருன்னு ஆளுகளும்,‍ மொகரைகளும்!"ன்னாரு கைப்புள்ள கார்ல ஏறுனவங்களோட காதுலு போயி நல்லா வுழுறாப்புல.

*****